Sunday, August 28, 2011

அண்ணா குழுவுக்கு வெற்றி: வலுவான லோக்பாலுக்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நீறைவேற்றம்!


அண்ணா குழுவுக்கு வெற்றி: வலுவான லோக்பாலுக்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நீறைவேற்றம்!
புதுடெல்லி, ஆக.27,2011
அண்ணா ஹஜாரே குழுவின் 3 அம்ச கோரிக்கைகளை லோக்பால் மசோதாவில் உள்ளடக்குவது தொடர்பான தீர்மானம் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது, நடப்பு கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கு அரசை ஒப்புக்கொள்ள வைத்தது தொடங்கி, ஊழலுக்கு எதிராக போராடி வரும் அண்ணா ஹஜாரே குழுவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடந்த இன்றைய விவாதத்தின்போது காங்கிரஸ், பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே லோக்பால் மசோதாவில் இணைக்கப்படவுள்ள ஹஜாரே குழுவின் 3 அம்சங்களுக்கு ஆதரவு தெரிவித்தன.
முற்பகல் 11 மணி தொடங்கி நடைபெற்ற விரிவான விவாதத்துக்கு, இரவு 7.30 மணியளவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்துப் பேசினார். பின்பு அவர், லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.

குரல் வாக்கெடுப்பு இல்லை...

முதலில் மாநிலங்களவையிலும், பின்னர் மக்களவையிலும் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரணாப் முகர்ஜியின் பதிலுரைக்கு பிறகு மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபாநாயகர் மீரா குமார்.

குரல் வாக்கெடுப்பு நடைபெறாததால், தீர்மானம் நிறைவேறியதா இல்லையா என்பது குறித்து குழப்பம் எழுந்தது. பின்பு, இந்தத் தீர்மானம், குரல் வாக்கெடுப்பின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக ஏற்கப்பட்டது.

உண்ணாவிரதத்தை முடிக்கிறார் அண்ணா!

இதன் தொடர்ச்சியாக, அண்ணா ஹஜாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவுள்ளார்.

ராம்லீலா மைதானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவலின்படி, அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரதத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முடித்துக்கொள்வார்.

இதனிடையே, இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் தீர்மான நகலை விலாஸ்ராவ் தேஷ்முக் மாலை 6 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹஜாரேவிடம் நேரில் சென்று அளித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளவுள்ள அண்ணா ஹஜாரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். கடந்த 12 நாட்களில் அவரது உடல் எடையில் 7.5 கிலோ குறைந்தது.

அரசின் சம்மதம்...

முன்னதாக, அண்ணா ஹஜாரே 12-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில், லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விரிவான விவாதம் நடைபெற்றது.

இரு அவைகளிலும் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், "அண்ணா ஹஜாரே எழுப்பியுள்ள பிரச்னை மிக முக்கியமானது. மிகவும் உண்மையானது. நமது ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியது. நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இது மிக மிக முக்கியமான கால கட்டம்," என்றார்.

அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கியது முதல் அரசு அதற்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விவரித்தவர், "இப்பிரச்னை கையை விட்டு நழுவி, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதனை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து இந்த நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும்.

லோக்பால் சட்டத்துக்குள் மத்திய அரசு ஊழியர்களை கொண்டு வரலாமா? மாநிலங்களிலும் லோக் அயூக்தா அமைப்புகளை ஏற்படுத்தலாமா? லோக்பால் அமைப்புக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை கொடுக்கலாமா? ஆகியவை குறித்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜன் லோக்பால் மசோதா உட்பட மற்ற லோக்பால் மசோதாக்களையும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதனை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற நிலைக்குழுவை கேட்டுக் கொள்ளவும் அரசு தயாராகி இருக்கிறது.

சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பணி. அந்தப் பணியை எங்களிடம் அண்ணா ஹஜாரே குழுவினர் விட்டு விட வேண்டும். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டியது எங்கள் கடமை. அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்," என்றார் பிரணாப் முகர்ஜி.

சுஷ்மா ஆதரவும் திடீர் திருப்பமும்...

இந்த விவாத்தில் பிஜேபியில் நிலைப்பாடு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர். பிரதமரும் லோக்பால் விசாரணை வரம்புக்கு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அண்ணா ஹஜாரே குழுவின் ஜன் லோக்பால் மசோதாவில் உள்ள மூன்று அம்சங்களை ஆதரிப்பதாக தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், இதுதொடர்பாக குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினார்.

பிஜேபியின் வலியுறுத்தலைத் தொடர்ந்தே, வெறும் விவாதத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர், இந்த குரல் வாக்கெடுப்பும் இன்றி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது, வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுவதைக் காட்டிலும் சிறந்த அம்சமாக கருதப்படுகிறது.

ஹஜாரே குழு வலியுறுத்திய 3 முக்கிய அம்சங்கள்..

* கீழ்மட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ஊழல்வாதி என கண்டறியப்பட்ட அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவதுடன், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்பாலுக்கு இணையான, தன்னிச்சையான அதிகாரங்களுடன் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.

* அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் ஒவ்வொரு வேலையையும் செய்துதர காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்குள் வேலையை முடிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதுதொடர்பான விவரம் குடிமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மகத்தான வெற்றி...

லோக்பால் மசோதாவை வலுவானதாக்குவதற்காக, மேற்குறிப்பிட்ட மூன்று முக்கிய அம்சங்களை இணைத்துக்கொள்வதற்கு அறப் போராட்டம் மூலம் வழிவகுத்திருப்பது, அண்ணா ஹஜாரேவின் உண்ணாவிரதம், அவரது குழுவின் போராட்டம் மற்றும் மக்களின் பேராதரவு ஆகியவற்றுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகக் கருதப்படுகிறது.

இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள அண்ணா ஹஜாரேவின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Source - Viktan Magazine