Thursday, July 28, 2011

தா.கி-யைக் கொன்றோம் என்று எழுதியது எஸ்ஸார் கோபியா?

நில மோசடி விவகாரங்களில் சிக்கி, கைது​கள், ரெய்டுகள் நடக்கும் நேரத்​தில், கடிதப் புயல் ஒன்று மதுரை தி.மு.க-வைப் புரட்டி எடுக்கிறது. தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கடிதம் இப்போது போலீஸ் கையில்!
 'நான் என் உயிருக்கும் மேலாக நினைத்துக்கொண்டு இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கு தம்பி 'எஸ்ஸார்’ கோபி எழுதிக்கொள்ளும் உள்ளத்தின் வெளிப்​பாடு’ என்று நயமாக ஆரம்பிக்கும் அந்தக் கடிதம் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அழகிரிக்காக கோபியும் அவரது குடும்பத்​தாரும் செய்த தியாகங்களை(!) சொல்லும் அந்தக் கடிதத்தில், தா.கிருட்டிணன் கொலை வழக்கு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்தும் எழுதப்பட்டுஇருக்கிறது.
'தங்களை (அழகிரி) கட்சியைவிட்டு நீக்கிய நேரத்தில் என்னுடைய ஏரியாவில்தான் முதன் முதலில் பஸ்ஸை எரித்தோம். சீனிவேல் (முன்னாள் அ.தி.மு.க.) எம்.எல்.ஏ. அலுவலகத்தை எரித்தது, அக்கினிராஜ் (முன்னாள் தி.மு.க. எம்.பி.) வீட்டில் காரை எரித்தது, பி.டி.ஆர். அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்தது எல்லாம் நீங்கள் சொல்லி நாங்கள் செய்தது. கடைசியாக தா.கி. கொலை!
இந்த வழக்கில் நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் ஆனால், அதுபற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியாது என இப்போது நினைக்கிறேன். எதெற்கெடுத்தாலும் நண்பர் (பொட்டு) சுரேஷ், 'உங்கள் குடும்பத்துக்கு ஒரு பதவி கொடுத்தாகிவிட்டது. உங்கள் கோட்டா ஓவர்.’ என்கிறார். அப்படிப் பார்த்தால், தளபதி தங்கைக்கு நகராட்சித் தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. ஸீட்; தோற்றதும் மாவட்டச் செயலாளர் பதவி. கவுஸ் பாஷாவுக்கு துணை மேயராக இருக்கும்போதே, ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ. பதவி. இவர்கள் எல்லாம் உங்களுக்காக அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்கள்? யாரோ ஒருத்தரை திருமங்கலத்தில் (இடைத் தேர்தலில்) நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்? இன்று காலை (16.12.08) உங்கள் வீட்டுக்கு வந்தேன். நீங்கள் இருந்துகொண்டே, 'இல்லை’ என்று சொல்லிவிட்டீர்கள். நான் பதவி கேட்கும்போதெல்லாம் தட்டிக் கழிக்கிறீர்கள்..
- இப்படிப் போகும் அந்தக் கடிதத்தின் முடிவில் 'இனிமேல் நிம்மதியாக என் மனைவி குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். மனதில் பட்டதை எழுதிவிட்டேன். நான் எழுதியதில் ஏதா​வது அண்ணன் மனம் புண்படும்படி இருந்தால், என்னை மன்னித்துவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்​கொள்கிறேன். அன்புடன் உங்கள் நலம் விரும்பும்’ என்று முடிந்து அடியில் எஸ்ஸார் கோபியின் கையெ​ழுத்தும் இருக்கிறது.
கடிதம், திருமங்கலம் இடைத்தேர்தல் சமயத்தில் எழுதப்பட்டதுபோல் செல்கிறது. அப்போது திருமங்கலம் தொகுதியைத் தனக்காகக் கேட்டு அழகிரி​யிடம் போராடினார் கோபி. ஆனால், பொட்டு சுரேஷ் உள்ளே புகுந்து, தன் கூட்டாளியான தாய் மூகாம்பிகை சேதுராமனின் உறவினரான லதா அதியமானை திடீர் வேட்பாளர் ஆக்கினார். அதில் இருந்தே கட்சியில் பட்டும்படாமல் இருந்த கோபி, சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டார். ஆனால், அந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டார்கள்.
அண்மையில் அட்டாக், பொட்டு, எஸ்ஸார், தளபதி என அத்தனை பேர் மீதும் வழக்குகள் வரிசை கட்டின. இதில் மற்றவர்களுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபிக்கு மட்டும் 'ஜூலை 26-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது’ என முன் ஜாமீன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் எஸ்ஸாரின் கடிதம் பரபரப்பைப் பற்றவைத்து இருக்கிறது. கடந்த 20-ம் தேதி எஸ்ஸார் வீடுகளில் நடந்த ரெய்டுகளுக்கு பிறகே இந்தக் கடிதம் லீக் ஆகி இருப்பதால், எஸ்ஸார் வீட்டில் இருந்துதான் கடிதம் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது மீடியாக்களின் யூகம். ஆனால், இது குறித்து நம்மிடம் பேசிய எஸ்ஸாரின் வக்கீல் ராமச்சந்திரன், ''ரெய்டின்போது எடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வி.ஏ.ஓ. முன்னிலையில் பட்டியல் இட்டுக் கொடுத்து இருக்கிறது போலீஸ். அந்த லிஸ்ட்டில் இந்தக் கடிதம் இல்லை. இப்போது ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இப்படி ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறது போலீஸ். இது உண்மையான கடிதம்தானா என்பதைத் தடய அறிவியல் சோதனை நடத்திக் கண்டுபிடிக்க வேண்டும்!'' என்கிறார். ''பொட்டு சுரேஷின் வீட்டில் இருந்து இதைக் கைப்பற்றி இருக்கலாம்...'' என்று மதுரை தி.மு.க-வினர் சொல்​கிறார்கள்.
இந்தக் கடிதத்தின் உண்மைத்​தன்மையை அறிய எஸ்ஸார் கோபியின் அண்ணன் மருதுவை நாம் தொடர்புகொண்டோம். ''இன்னிக்கு நாங்க நல்ல நிலையில் இருக்கோம்னா, அதுக்குக் கார​ணமே அழகிரி அண்ணன்தான். இப்படி ஒரு கடிதத்தை என் தம்பி நிச்சயமா எழுதி இருக்க மாட்டான். அண்ணன் எங்க மேல்வெச்சு இருக்கிற நல்ல அபிப்பிராயத்தைக் கெடுக்குறதுக்காக, இந்த டுபாக்கூர் கடிதத்தை வெளியிட்டு இருக்காங்க. இதுக்கு எங்க ஆட்களே உடந்தையா இருந்து இருக்காங்க...'' என்றார்.
கோபியைத் தங்கள் வசம் வைத்துக்​கொண்டு அழகிரிக்கு டார்ச்சர் கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் அழகாகக் காய் நகர்த்துகிறார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எஸ்ஸார் கோபியை போனில் தொடர்புகொண்டோம்.
''அண்ணனோட (அழகிரி) பொதுக் குழுவுக்கு வந்திருக்கேண்ணே...'' என்று கூலாக ஆரம்பித்தவர், ''அழகிரி அண்ணனோட உதவி இல்லைன்னா, இன்னிக்கி நாங்க நல்லா இருந்திருக்க மாட்டோம். நேர்மையான அதிகாரிகள்னு சொல்றாங்களே... நமக்குப் பிரச்னை இருக்காதுனு நெனச்சேன். ஆனா, போலீஸ் நடந்துக்குற விதம் சரி இல்லை. ரெய்டுங்கிற பேர்ல எங்க வீட்டுக் குழந்தைகளைக்கூட எட்டு மணி நேரமா வீட்டுக்கு வெளியில் நிறுத்திவெச்சாங்க. சாவியைக் கேட்டாலே, குடுத்து இருப்பாங்க. ஆனா, அதை விட்டுட்டு பீரோவை உடைச்சு இருக்காங்க. எல்லாத்துக்கும் நாங்க வருமான வரி கட்டி முறையா வெச்சிருக்கோம்.
எங்களை எதுலயும் சிக்கவைக்க முடியலைன்னதும், போலியா ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்காங்க. என் மீது எந்த வழக்கும் இல்லாதபோது, இதை எல்லாம் நாங்கதான் செஞ்சோம்னு எவிடென்ஸுக்கு எழுதி வெப்போமோ? அழகிரி அண்ணன்கிட்ட ஏதாச்சும் கேக்குறதா இருந்தா, நான் நேராவே கேட்டுட்டுப் போறேன்; எதுக்கு லெட்டர் போட்டுக் கேக்கணும்? கட்சியில் வாய்ப்பு கேட்குறது இயல்புதான். வாய்ப்புக் கிடைக்காதபோது, வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக கட்சியைக் காட்டிக் குடுத்துட்டு ஓடிருவாங்களா? என்னையும் அழகிரி அண்ணனையும் பிரிக்கிறதுக்கு போலீஸை வெச்சு அ.தி.மு.க. நெருக்கடி குடுக்குது. இதைவிடக் கொடுமைகளை எல்லாம் அனுபவிச்ச எங்களுக்கு, இது சாதாரணம். 'கடிதத்தை நான் எழுதலை’னு அழகிரி அண்ணன்கிட்ட சொன்னேன். அவரும் 'சரி விடுப்பா’னு சொல்லிட்டார்...'' என்றவரிடம்,
''கடிதத்தின் அடியில் இருக்கும் கையெழுத்து உங்களுடையது மாதிரித்தானே தெரியுது..?'' என்று கேட்டதற்கு, ''கையெழுத்து என்னது மாதிரித்தான் இருக்கு. போலிக் கையெழுத்து போட்டு இருக்கணும்; இல்லாட்டி வேற எதுலயாவது இருந்த என்னோட கையெழுத்தை வெட்டி இதில் சேர்த்து இருக்கணும். நாங்கள் அண்ணனை நெருங்கிடக் கூடாதுன்னு ஒரு சிலர் நினைக்கிறாங்க. எங்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்கக் கூடாதுனு நினைக்கிற அவங்களேகூட இந்த சதிக்கு உடந்தையா இருந்து இருப்பாங்களோனு சந்தேகம். யார் என்ன செஞ்சாலும், எங்களுக்கும் அழகிரி அண்ணனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு வராது; வரவும் விட மாட்டோம்!'' என்று அழுத்தம் கொடுத்தார்.
இந்தக் கடிதம் எங்கே இருந்து எடுக்கப்பட்டது என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. விசாரணை தொடர்கிறது. கடிதத்தைப்போல இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் வெளியில் வரலாம்...'' என்று சூசகமாகச் சொன்னார்கள்.
அழகிரி வட்டத்தில் எஸ்ஸார் பிரதர்ஸ் அதி​காரத் தோரணையுடன் திரிவது மதுரை புள்ளி ஒருவருக்குப் பிடிக்கவில்லை. எஸ்ஸார் பிரதர்ஸைத் தட்டிவைப்பதற்காக தி.மு.க-வில் தனக்கு விசுவாசமான மூன்று முக்குலத்துச் சிங்கங்களை கொம்பு சீவினார் அவர். இது தெரிந்து எஸ்ஸார் பிரதர்ஸ் அலர்ட்டாகி ஒதுங்கினார்கள். தேர்தல் பிரசாரத்தின்போதே மதுரை அரசியல் தாதாக்கள் சிலர் தங்களைக் காத்துக்கொள்வதற்காக அ.தி.மு.க-வுக்குத் தூது அனுப்பினார்கள். ஒரு சிலர், 'அப்ரூவராக மாறவும் தயார்...’ என்று பதறினார்கள். இவர்களில் முக்கியமான மூன்று நபர்களை மட்டும் தேர்தல் பிரசாரத்துக்காக ஜெயலலிதா திருச்சி வந்திருந்தபோது, சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. அந்த நேரத்தில், 'உங்களுக்கு தி.மு.க-வில் என்ன பிரச்னை? எதற்காகக் கட்சி மாறுகிறீர்கள்? என்று அ.தி.மு.க. தரப்பில் விலாவாரியாக விசாரணை நடத்தினர். அப்படியாவது அடைக்கலம் கொடுப்பார்களா என்ற ஆசையில் மதுரை தாதாக்கள் நங்கூரம் மாதிரி நாலு 'பிட்’டைப் போட்டனர். அவை அனைத்தையும் அப்போது வீடியோ எடுத்துவைத்தது அ.தி.மு.க. டீம். எஸ்ஸார் கடிதத்தைத் தொடர்ந்து அந்த வீடியோ ஸ்டேட்மென்ட்களும் விரைவில் ரிலீஸ் ஆகலாம்.
'ஒப்பனையும் கற்பனையும் கலைந்துவிடும்... இறுதியில் உண்மையும் உழைப்புமே வெற்றி பெறும்.’ - எஸ்ஸார் கோபி இந்த ஆண்டு அனைவருக்கும் வழங்கிய காலண்டரில் இருக்கும் வாசகங்கள் இவை! யாரை நினைத்து இந்த வாசகங்களைப் போட்டாரோ... தெரியவில்லை. மதுரை தி.மு.க-வில் ஒப்பனையும் கற்பனையும் கலையும் நேரம் இப்போது!
- குள.சண்முகசுந்தரம், டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Source - Vikatan Magazine
தா.கி-யைக் கொன்றோம் என்று எழுதியது எஸ்ஸார் கோபியா?


அழகிரியை விழுங்கும் அ.தி.மு.க. அதிரடிகள்

No comments:

Post a Comment