Thursday, September 8, 2011

மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!


மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!
- கே.கே.மகேஷ்,படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
''யெய்யா... நாஞ் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கய்யா!''- என்று 1961 முதல் முழங்கி வரும் சாலமன் பாப்பையாவுக்கு இது பட்டிமன்ற மேடைகளில் 50-வது ஆண்டு. அதற்கான பாராட்டு விழா, அகவை 75 நிறைவு விழா, 'பட்டிமன்றமும் பாப் பையாவும்’  நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா மதுரையில். வாழ்த்த வந்தவர்களால் ராஜா முத்தையா மன்றமே நிரம்பி வழிய, பேச்சாளர்களே பின் வாசல் வழியேதான் உள்ளே வந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், பாப்பையாவுக்கு 'பட்டிமன்ற பாரதி’ என்ற விருதை வழங்கினார். 'தமிழர்கள் வாழும் 152 நாடுகளில் புகழ் பெற்று விளங்குபவர் பாப்பையா. எப்படி உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு அப்பீல் கிடையாதோ, அதேபோல பாப்பையாவின் பட்டிமன்றத் தீர்ப்புக்கும் அப்பீலே கிடையாது. இந்த அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விழாக்களில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், இன்றுபோல் ஒரு கூட்டத்தைக் கண்டது இல்லை!' என்று புகழ்ந்து மகிழ்ந்தார்.
பாப்பையாவின் சுய வரலாறோடு இணைந்து தமிழக பட்டிமன்ற வரலாற்றையும் சொல்லும் 'பட்டிமன்றமும் பாப்பையாவும்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட தொழில் அதிபர் குவைத் ராஜா, பாப்பையாவுக்கு 'உலகத் தமிழ் ஞானி’ என்ற பட்டத்தையும் வழங் கினார். பாப்பையாவோடு நெருங்கிப் பழகிய பேச்சாளர்கள், உடன் பணியாற் றிய பேராசிரியர்கள், பயின்ற மாணவர்கள், பல்துறை நிபுணர்கள், அவருடைய குடும் பத்தினர் பாப்பையாவைப்பற்றிக் கருத்துக் களைப் பகிர்ந்துகொண்ட 20 நிமிடக் குறும்படம், விழாவின் ஹைலைட். ஏற்புரை நல்கிய பாப்பையா, ''கல்யாண மாலை மோகனும், மீரா நாகராஜனும் பட்டிமன்றத்துக்கு என்று தேதி வாங்கிவிட்டு, இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். முன்பு எல்லாம் பேச்சு உலகத்தில் பண்டித நடைதான் எடுபடும். எனவே, நானும் இலக்கணப் பிழை இல்லாதபடிக்குப் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால், அது பாமரர்களுக்குப் போய்ச் சேரலை என்பதை பின்னர்தான் புரிந்துகொண்டேன். பாமரர்களுக்குப் போய்ச் சேராத வரை இந்தப் பேச்சால் பயன் இல்லை என்று அரங்குகளில் இருந்த தமிழை வீதிக்குக் கொண்டுவந்தேன். அதைச் சில பண்டிதர்கள் எதிர்த்தாலும் பாமரர்கள் அமோக ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த மரியாதைதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது. தொடர்ந்து பயணிக்கவைக்கிறது. தமிழோடு வளர்ந்த நகரம் மதுரை. இந்த மதுரையை மிகவும் நேசிக்கிறேன். மதுரையில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். நான் இத்தனை உயரத்துக்கு வந்ததற்கு இந்த நகரும், சாமானியர்களின் ஆதரவும், மீனாட்சியின் அருளும்தான் காரணம்!'' என்று நெக்குருகினார்.
பாப்பையா இருக்கும் இடத்தில் பட்டி மன்றம் இல்லாமலா? விழாவின் ஒரு பகுதியாக 'தமிழர்கள் பல நாடுகளுக்குச் சென்றதனால், இழந்தது அதிகமா... பெற்றது அதிகமா?’ என்ற பட்டிமன்றம் நடைபெற்றது.  ''வெளிநாடு செல்வதால், தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழக்கிறார்கள். மொழியை இழக்கிறார்கள். குடும்ப உறவுகளை இழக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்த் தமிழ்நாடு அந்தத் தமிழர்களை இழக்கிறது. பணம், பொருள் என்று தனிமனிதனாக வேண்டுமானால், பெற்றது அதிகமாக இருக்கலாம். குடும்பமாக, சமூகமாக இழந்ததுதான் அதிகம்!'' என்று அசத்தல் தீர்ப்பு வழங்கினார் பாப்பையா
பிரமாதம்ய்ய்ய்ய்யா!
- என் விகடன் மதுரை

Sunday, September 4, 2011

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

கண்ணுக்குக் கண்ணாக...!
'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்பார்கள். நேருக்கு நேர் கண்கூடாகப் பார்த்தால்கூட, அது பொய்யாகிவிடலாம். அதாவது, கண்கள் ஒன்றைப் பார்க்க, புத்தி வேறொரு விதமாக யோசிக்கலாம். பார்த்த விஷயத்தை வேறொரு விதமாக நம் மூளையானது யோசித்தால், அது பொய்யாகத்தானே முடியும்! உண்மை எப்படித் தெரியும்? உண்மையை எவ்விதம் உணரமுடியும்?
இவை ஒரு பக்கம் இருக்க... நம் கண்களேகூட, நம்மைப் பல தருணங்களில் ஏமாற்றிவிடுகின்றன, அல்லவா?!
'டேய்... நெடுநெடு உசரமும் சுருட்டைத் தலையுமா, கொஞ்சம் கூன் போட்டாப்ல, கால் அகட்டி நிப்பியே... அது மாதிரியே நேத்து ஒருத்தர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்ல நிக்கிறதைப் பாத்தேன்டா! சத்தியமா நீன்னே நினைச்சுட்டேன். அடடா... பார்த்து எத்தனை வருஷமாச்சுன்னு, விறுவிறுன்னு உன் பின்னாடி நைஸா வந்து, உன் முதுகுல சர்ப்ரைஸா பொளேர்னு ஒரு போடு போடலாம்னு பக்கத்துல வந்தா... ப்ச்... அது நீயில்ல! நல்லவேளை... அந்த ஆசாமி முதுகுல அடிக்கலை. தப்பிச்சேன்டா சாமி!’ என்று நண்பர்களுக்குள்ளான இந்த உரையாடல், கிட்டத்தட்ட எல்லாரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமாக நிகழ்ந்திருக்கும். ஆக, நம் கண்ணே நம்மைச் சில தருணங்களில் ஏமாற்றிவிடுகிறதல்லவா?!
உயரத்தையும் சுருட்டை முடியையும் பார்த்து நம் நண்பனைப் போல் இருக்கிறானே என்று நினைப்பது ஒரு பக்கம்... வேலை முடிந்து, நம் வீடு இருக்கிற பகுதிக்குச் செல்கிற பேருந்து இதுதான் என்று பேருந்து எண்ணை உற்றுப் பார்த்துவிட்டு, ஆனால் வேறு பஸ்ஸில் ஏறிவிடுகிற தருணங்களும் சிலருக்கு நடக்கத்தானே செய்கிறது?!
பிடித்த நடிகர் அல்லது இயக்குநரின் திரைப் படத்தைப் பார்ப்பதற்காக, வேகவேகமாக விழுந்தடித்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்று, மிச்ச சில்லறையைக்கூடச் சரிபார்க்காமல் அவசர அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு, 'படம் போட்டுப் பத்து நிமிஷமாச்சு’ என்ற தகவலைக் காதில் வாங்கியபடி, டிக்கெட்டைக் காண்பித்துவிட்டு அரங்கத்தினுள் சென்றதும் என்ன செய்கிறோம்? ஒரு நிமிடம் நின்று நிதானித்து, இருட்டுக்கும் கண்களுக்குமான பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, எந்த வரிசை, எந்த நாற்காலி என்று மெள்ளப் பார்த்துவிட்டுத்தான் நடப்போம். ஒரு சிலர், திரையில் படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அரக்கப்பரக்க ஓடி, திரை வெளிச்சத்தால் கண்கள் கூச, இருட்டில் தட்டுத் தடுமாறி, தன் இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் நாலு பேரின் காலையாவது மிதித்து... கிட்டத்தட்ட அங்கே ஒரு அமர்க்களத்தை உண்டுபண்ணிவிடுவார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்குப் படிப்பது குறைந்து, பார்ப்பது அதிகரித்துவிட்டது. கடந்த பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, நம் வீட்டின் நடுக்கூடத்தில் ஒய்யாரமாக உட்காருவதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு இடம் ஒதுக்கித் தந்திருக்கிறோம். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றைத் தட்டைப் பார்த்துச் சாப்பிடுகிறவர்களைவிட, டி.வி. பெட்டியைப் பார்த்தபடி சாப்பிடுகிறவர்கள் அதிகரித்துவிட்டனர். போதாக்குறைக்கு, டி.வி. நிகழ்ச்சியின்போது முக்கியமான விருந்தாளி வந்துவிட்டால்கூட நாம் அசருவதில்லை. என்றைக்கோ ஒருநாள் வருகிற அந்த மனிதருக்குத் தரவேண்டிய மரியாதையை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, எப்போதும் நம்முடனேயே இருக்கின்ற தொலைக்காட்சிப் பெட்டிக்கே முதல் மரியாதையை வழங்குகிறோம்.
அடுத்ததாக, 15, 20 வருடங்களுக்கு முன்பெல்லாம், அலுவலகங்களில், ஊழியர்களின் மேஜைகளில் கட்டுக்கட்டாகக் காகிதங்களும் கோப்புகளும் செங்கற்களை அடுக்கி வைத்திருப்பதுபோல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, அந்த அறை முழுக்கப் பரண்களிலும் தரைகளிலும் இண்டு இடுக்குகளிலும் பல வருடத்துக் கோப்புகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட, அந்த அறை முழுவதும் கோப்புகளின் வாசனை குடிகொண்டிருப்பதால், அந்த நெடியில் நம்முடைய மூக்கும் சுவாசமும் ரொம்பவே பாதிக்கப்படும். 'டஸ்ட் அலர்ஜி’யால் அவதிப்பட்ட அன்பர்கள் பலர், பிற்பாடு மனவளக்கலைப் பயிற்சிக்கு வந்து, மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு, அதிலிருந்து நிவாரணம் அடைந்திருக்கின்றனர்.
சமீப வருடங்களாக, அலுவகத்தில்  பேப்பர் கட்டுகளும் கோப்புகளும் இல்லை. அந்தக் காகிதங்களில் உள்ள குறிப்புகளையெல்லாம் சின்னப் பெட்டிக்குள் பதிவு செய்துகொண்டாகிவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு நிகரான அளவுக்கு, வீட்டுக்கு வீடு அதிகரித்துவிட்ட அந்தப் பெட்டியின் பெயர்... கம்ப்யூட்டர்.
கம்ப்யூட்டர் வந்ததில் இருந்து அலுவலகக் கோப்புகள், தூசிகள், அலர்ஜிகள், ஆஸ்துமா ஆகிய பிரச்னைகளில் இருந்து ஓரளவுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்பது உண்மைதான்! ஆனால், கத்தி போச்சு வாலு வந்தது என்கிற கதையாக, கம்ப்யூட்டர் வந்துவிட்டதைச் சொல்லிப் புலம்புகிற அன்பர்களையும் அறிவேன். காகிதங்களும் கோப்புகளின் தூசியும், மூக்கையும் மூச்சையும் துளைத்து தும்மிக்கொண்டே இருக்கச் செய்தன என்றால், தொலைக்காட்சிப் பெட்டிகளும் கம்ப்யூட்டர் பெட்டிகளும் நம் கண்களை ஏகத்துக்கும் கசக்கத்தான் செய்கின்றன.
ஆம்... கண்களுக்கான சில முக்கியமான பயிற்சிகள் குறித்துத்தான் சொல்லப் போகிறேன்.
'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பார்கள். கண்கள் இருந்தால்தான், ஓவியங்களை ரசிக்கவோ, வரையவோ முடியும். ஓர் ஊரில் இருந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்கும், அந்த ஊரின் செழிப்பையும் சிறப்பையும் பார்த்து அறிந்து, உணர்ந்து சிலிர்ப்பதற்கும், கண்களின் ஒளியில் எந்தச் சேதாரமும் இல்லாதபடி பார்த்துக்கொள்ளுதல் அவசியம்!
நான் முன்பே சொன்னது போல, நம் உடலின் எல்லாப் பாகங்களையும் 'கண்ணைப் போல பாதுகாக்க வேண்டும்’ என்பது அவசியம். அப்படியிருக்க... கண்களை எந்த அளவுக்குக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்று யோசியுங்கள்.
கண்ணுக்கு அதிகம் வேலை கொடுப்பதே வேலையாகிவிட்ட இந்த உலகில், கொஞ்சம் கண்களுக்கு பயிற்சிகளும் கொடுப்போமே! அந்தப் பயிற்சிகள், கண்களின் அயர்ச்சியைப் போக்குவதோடு, பல்வேறு கண் உபாதை களில் இருந்தும் காக்கும் என்பது உறுதி!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தாய்ப்பால் - உணர்ச்சிகரமான ஓர் உண்மைக் கதை

தாய்ப்பால்

உணர்ச்சிகரமான ஓர் உண்மைக் கதை
ஜி.பிரபு
'தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை’ என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல... பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக... ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!

திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட... கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!
ஏழு மாதக் குழந்தை ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி  அமர்ந்திருந்த நீதிமேரி, ''தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.
என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், 'பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்'னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க'' என்றார் கண்கள் கலங்கியபடி.
அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷிடம் பேசினோம். ''நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே... நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து 'செப்டிமீசியா ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.
குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்... ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்... 'தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்'ங்கற முடிவுக்கு வந்தோம்.
வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா... வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல... இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்ன டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது...
''இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்’னுதான் சொல்லணும். 'தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!'னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''
படங்கள்: வீ.சிவக்குமார்

உங்கள் குழந்தை எந்த வகை இன் டெலிஜென்ட் ?

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தை எந்த வகை இன் டெலிஜென்ட் ?
 சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
ஒரு குழந்தைக்கு முறையாகவும் முழுமையாகவும் கொடுக்கப்படும் கல்வி... தலைமுறை தாண்டியும் நிலைத்து நிற்கும் பெரும் சொத்து! அதனால்தான் குழந்தைகளின் படிப்பு பற்றியும், அறிவுக்கூர்மை பற்றியும் அதிகமாக உங்களிடம் வலியுறுத்துகிறேன்.
உங்கள் குழந்தையின் ரேங்க் கார்டில் இருக்கும் மார்க்கை வைத்து... அவன் சராசரி மாணவன், சராசரிக்கும் குறைவான மாணவன், சராசரிக்கும் மேலான மாணவன் என்று கண்டுபிடித்து விடலாம். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அதில் சராசரி மாணவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். சராசரிக்கு குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 5-10 சதவிகிதம்தான் இருக்கும்.
டீச்சர், போர்டில் கணக்கு எழுதிப்போட்டு சொல்லித் தருவதற்கு முன்பே, வகுப்பில் ஏதாவது ஒரு மாணவி அதன் விடையை தன்னுடைய நோட்டில் எழுதி வைத்திருப்பாள். விரைவில் கணக்கை எழுதி முடித்துவிட்டாள் என்பதற்காக, அருகில் இருக்கும் மாணவனைச் சீண்டுவாள், கதை பேசுவாள். இந்த ரகத்தினர்... சராசரிக்கும் மேலான மாணவர்கள். 'சூப்பர் இன்டெலிஜென்ட்' என்கிற அளவில் இருக்கும் இவர்களைக் கவனமாகக் கையாள்வது அவசியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர்களுடைய அறிவுக்கூர்மைக்கு ஏற்ப அதிக படிப்பு மற்றும் வேலைகளைத் தர வேண்டும். பாடம் சம்பந்தமான அதிகத் தகவல்களைத் திரட்டி வரச்சொல்ல வேண்டும். அதாவது, அவர்கள் வேகத்துக்கு ஏற்ப கடினமான வேலைகளைக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களின் சூப்பர் இன்டெலிஜென்ஸை பயன்படுத்துவதற்கான மற்றும் பண்படுத்துவதற்கான எளிய வழி!
வகுப்பில் டீச்சர் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருப்பார். ஆனால், அந்த பாடத்தின் மேல் கவனம் செலுத்தாமல் சோர்வாக அமர்ந்து இருப்பது, பெஞ்ச்சில் தலை சாய்த்து தூங்குவது, பக்கத்தில் இருப்பவனிடம் வம்பு செய்வது என இருப்பவன், சராசரிக்கும் குறைவான மாணவன். வீட்டில், 'படிம்மா என் செல்லம், தங்கம்’ என்று எவ்வளவு கெஞ்சி னாலும், கொஞ்சினாலும் புத்தகத்தை எடுக்கக்கூட இந்த ரக மாணவர்கள் யோசிப்பார்கள். எடுத்தாலும் படிப்பதுபோல் பாவனை செய்வார்களே தவிர, கவனம் ஊன்றி படிக்கமுடியாமல் திணறுவார்கள்.
'ஐயோ, என் பையன்கூட இப்படித்தான் இருக்கான்... என்ன செய்யறது?’ என்று அலற வேண்டாம். ஆசிரியர்கள்... அம்மாதிரியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் அமர்ந்து, அவர்களுக்கு ஒருமுறைக்கு இருமுறை பாடங்களை விளக்கிப் புரிய வைப்பது அவசியம். ஒவ்வொரு பாடத்தையும் சுருக்கியும், எளிமைப்படுத்தியும் படிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்று சில நடைமுறை டிப்ஸ்களை பின்பற்றுவதும் முக்கியம். உதாரணமாக, பெரிய கேள்வி பதிலை சுருக்கமாகவும், பாயின்ட்ஸ் பாயின்ட்ஸாகவும் பிரித்துக் கொடுத்து, சரியாகப் புரியவைத்து எழுதச் சொல்ல வேண்டும். 'செல் அமைப்பைப் பற்றி எழுதுங்க’ என்று பொதுவாகச் சொல்லாமல், அதில் மைட்டோகாண்ட்ரியா, நியூக்ளியஸ், நியூக்ளியஸ் சவ்வு என்று ஒவ்வொன்றையும் பற்றிக் குறைந்தபட்சம் ஒரு பாயின்டாவது படிக்கச் சொல்லி, அதைப் புரியவைத்து, பிறகு எழுத வைக்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால்... அவர்கள் குறைந்தபட்ச மார்க் வாங்கி வெற்றி பெறுவது உறுதி.
தெரிந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லியோ, எழுதியோ வெளிகாட்டத் தெரியாமல் இருப்பதும் சராசரிக்கும் குறைவாக இருக்கும் மாணவர்களின் பிரச்னை. அந்த மாணவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்வதில் பிரச்னை என்றால்... அவர்களை எழுதச் சொல்லலாம். அவர்களைப் பாடங்களை அப்படித் திரும்பத் திரும்ப எழுத வைப்பதன் மூலம் அவர்களின் திறனை உயர்த்தலாம். பலமுறை எழுதிப் பார்ப்பதால் எப்போதும் நினைவில் இருக்கும் என்பதால், அது பரீட்சையில் அவர்களைக் கரை சேர்க்கும். இவர்களுக்குப் பள்ளியிலும் வீட்டிலும் ஸ்பெஷல் கவனம் மற்றும் தொடர் பயிற்சி கொடுப்பது போன்ற அணுகுமுறைகள், அவர்களை சராசரி மாணவர்களின் இடத்தைப் பிடிக்க வைக்கும்.
மோசமான கையெழுத்து, மெதுவாக எழுதுவது, எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை என்று எழுதுவதில் பிரச்னை இருக்கும் மாணவர்களுக்கு, முதலில் தாய்மொழியில் பாடத்தைப் புரிய வைக்க வேண்டும். அப்படி உள்வாங்கிய விஷயத்தை, பிறகு ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். பெற்றோர்களும் வீட்டில் உள்ள படித்த தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா போன்ற குடும்ப உறவுகளும் இந்த விஷயத்தில் கைகொடுக்க வேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளையெல்லாம் பின்பற்றினால், குறைகளை வென்று... நிறைகளை எட்டி பிடிப்பான் உங்கள் செல்லக் குழந்தை!
அடுத்த இதழுடன் நிறைவடைகிறது
படம்: ஜெ.தான்யராஜு