Wednesday, August 3, 2011

'ஆனந்தம் விளையாடும் வீடு' வேண்டுமா ?

'ஆனந்தம் விளையாடும் வீடு' வேண்டுமா ?

 நாச்சியாள்
'பள்ளிகள் மற்றும் வீடுகளில் குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற கொடும் நிகழ்வுகள் அடியோடு அழிய வேண்டும்’ என்று சமீபகாலங்களாக வலியுறுத்தப்படுகிறது. இதற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் வகையில், உலக அளவிலான கருத்தரங்கம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
''ஒவ்வொரு வீட்டிலும் 'நேர்மறை ஒழுக்கம் (Positive Descipline)  என்பதை நடைமுறைப்படுத்தினால், குழந்தைகளை அடிக்காமல்... துன்புறுத்தாமல் வளர்க்க முடியும்!'’ என்று அந்த மாநாட்டில் அழுத்தமாக பதிந்துவிட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணரும், 'போதி' இன்ஸ்டிடியூட் மேலாண் இயக்குநருமான முனைவர். ராஜ்மோகன்.
'' 'ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்... அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது’ என்பது போன்ற வழக்கு மொழியும், வழக்கமும் உள்ள நம் கலாசாரத்தில் இது சாத்தியமாகுமா?'' என்ற கேள்வியுடன் ராஜ்மோகனைச் சந்தித்தோம்.
''இங்கு எல்லோருக்குமே அப்பா, அம்மாவிடம் அடி வாங்கி வளர்ந்த பால்யம்தான் கிடைத்திருக்கும். அப்படி அடிவாங்கும்போது, எதிர்த்து நின்று இருப்போம். அல்லது அடித்தவரிடம்இருந்தோ அல்லது அடி வாங்கிய விஷயத்திலிருந்தோ விலகி இருப்போம். அடித்துத் துன்புறுத்துவதால் இதுதான் நடக்கும்!'' என்று அவர் சொன்னபோது 'வெயில்’ சினிமாவில் வரும் பசுபதி கேரக்டர் நம் நினைவிலாடியது.
''உண்மைதான்... அடியும், தண்டனையும் 'வெயில்’ சினிமாவில் வரும் 'பசுபதி’களைத்தான் உருவாக்கும்!'' என்று ஆணித்தரமாக சொன்ன ராஜ்மோகன், பிள்ளைகளை 'பாஸிட்டிவ் டிஸிப்ளி’னுடன் வளர்க்க வேண்டிய அவசியத்தைப் பேசினார்...
''ஒரு குழந்தையை அடிக்கும்போது, அக்குழந்தைக்கென்று இருக்கும் சுயமரியாதையும் அடிபடும். சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு பிறகு எப்படி அக்குழந்தை எல்லா விஷயங்களிலும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும், கம்பீரமாக இயங்கும்? குழந்தையை அடிக்காமல், உதைக்காமல், வார்த்தையால் துன்புறுத்தாமல் 'பாஸிட்டிவ் டிஸிப்ளின்’ அணுகுமுறையைச் செயல்படுத்தி பாருங்கள்... உலகின் சிறந்த குழந்தையாக உங்கள் குழந்தை வளரும்; நிம்மதி வாழ்வில் தங்கும்!'' என்றவர், அந்த வளர்ப்பு முறைக்கான வழிமுறைகளை அடுக்கினார்...
''எந்த ஒரு விஷயத்தையும் நாம் குழந்தைகளுக்காக செய்வதைவிட, குழந்தைகளுடன் சேர்ந்து செய்தால், அதன் பலன் பன்மடங்காக இருக்கும். ஆனால், இதை பல பெற்றோர்கள் செய்வதில்லை. உங்கள் குழந்தையை சுயமரியாதை மிகுந்த குழந்தையாக வளர்த்தாலே... அது எந்தத் தவறும் செய்யாது. தவறு செய்யாவிட்டால்... தண்டனைக்கான வாய்ப்புஇல்லாமல் போகும். அதற்கு, பெற்றோர்கள்தான் குழந்தைக்கு உதாரணமானவர்களாக இருக்க வேண்டும். 'அப்பாவோட நேர்மையாலதான் என்னை எல்லாரும் மதிக்கறாங்க. அதேபோல, நீயும் பொய்யெல்லாம் எதுவும் சொல்லாம நேர்மையா இருந்தா, உன்னையும் எல்லாருக்கும் பிடிக்கும்’ என்று சொல்லி வளர்த்தால், அக்குழந்தை தன் சுயமரியாதையைக் காக்க விரும்பி, பொய் சொல்லாமல் வளரப் பழகும்'' என்று புரிய வைத்த ராஜ்மோகன்,
''முக்கியமான விஷயம்... குழந்தைகள் அம்மா, அப்பா என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில்லை; அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் மனதால் கேட்கிறார்கள். குழந்தையிடம், 'ஆறு மணிக்கு எழுந்து படிப்பா’ என்று சொல்லிவிட்டு, அப்பாவும் ஆறு மணிக்கு எழுந்தால்... நாளாக ஆக குழந்தைக்கும் அந்தப் பழக்கம் தானாக வரும். ஆனால், அம்மா, அப்பாவின் சொல்லும் செயலும் வேறாக இருந்தால்... அவர்களே குழந்தைக்கு நெகட்டிவ் ரோல் மாடல் ஆகிவிடுவார்கள். 'பொய் சொல்லக் கூடாதுப்பா’ என்று சொல்லிய அடுத்த நிமிடம் வீட்டில் இருந்துகொண்டே, 'அப்பா வீட்ல இல்லேனு சொல்லும்மா’ என்று சொல்வது, குழந்தையின் மனதை பாழ்படுத்தும்.
'கூட விளையாடற பசங்களை எல்லாம் அடிக்கறா...’ என்று வருத்தப்படும் பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி... சூதுவாது தெரியாத ஒரு குழந்தைக்கு யார் வன்முறையை கற்றுக் கொடுக்கிறார்கள்? வீட்டில் முதலில் யார் அந்தக் குழந்தையை அடிக்கிறார்களோ அவர்கள்தான். ஒரு காரியம் நமக்குச் சாதகமாக நடக்க வேண்டுமென்றால், ஒருவர் நமக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால் வன்முறையில இறங்கு, அடி, உதை என்று அவர்களுக்கு வன்முறையின் மீது நம்பிக்கையை உருவாக்குவது குழந்தையை கண்மூடித்தனமாக அடிக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். எனவே, இதற்கெல்லாம் தீர்வான 'பாஸிட்டிவ் டிஸிப்ளினை’ பெற்றோர்கள் மட்டுமல்ல, பள்ளியில் ஆசிரியர்களும் பின்பற்றினால், அது குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!'' என்று நம்பிக்கையுடன் கூறியவர்,
''உங்க குழந்தையை தினமும் கொஞ்ச நேரம் அருகில் அமர வைத்து, அவர்களின் கண்களைப் பார்த்து, தோள் தொட்டு சிநேகமாகப் பேசுங்கள். அதற்காக நேரம் ஒதுக்குங்கள். இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால்தான் டீன் ஏஜில் பல குழந்தைகள் குடி, சிகரெட் என்று தடம் மாறுகிறார்கள். மாதத்தில் ஒரு நாள் 'என்மேல் என்ன தப்பு இருக்கு, நான் எதில் திருந்தணும்னு சொல்லுங்க..?’ என்று குடும்பத்தலைவர்/தலைவி கேட்க, அதற்கு வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மேல் உள்ள குற்றம் குறைகளை தைரியமாக சொன்னால்... அந்த வீட்டில் வன்முறையின் சுவடே இருக்காது. இதையெல்லாம் ஒரு குடும்பத்தில் நடைமுறைப்படுத்தினால்... அது அந்த வீட்டில் உள்ள குழந்தைக்கு அம்மா, அப்பா மேல் மிகப் பெரிய நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கை குடும்ப நிம்மதியின் ஆதாரமாக இருக்கும். பிறகென்ன 'ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று குடும்பப் பாட்டு பாடலாம்!'' என்றார் மகிழ்வுடன்.
நம் வீட்டிலும் பிராக்டீஸ் பண்ணலாமா 'பாஸிட்டிவ் டிஸிப்ளின்’? ரெடி... ஸ்டார்ட்!

 குழந்தைகளை அடிக்காதீர்கள்!
 'குளோபல் சம்மிட் ஆன் எண்டிங் கார்போரல் பனிஷ்மென்ட் அண்ட் புரமோட்டிங் பாஸிட்டிவ் டிஸிப்ளின் (Global summit on ending corporal punishment and promoting positive discipline) என்பதுதான் கருத்தரங்கின் தலைப்பு. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள 'எஸ்எம்யூ’ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குழந்தை நல சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். உலகில் 29 நாடுகளில் குழந்தைகளைத் தண்டிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்!.
 படம்: ச.இரா.ஸ்ரீதர்


Source - Vikatan Magazine

Tuesday, August 2, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 - உங்கள் குழந்தை படிப்பாளியா... திறமைசாலியா ?

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தை படிப்பாளியா... திறமைசாலியா ?
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
 ''என் பொண்ணு படிப்புல டாப். ஒரு மணி நேரத்துல ஹோம்வொர்க் அத்தனையும் கிடுகிடுனு செஞ்சுடுவா'',
''என் பையன் சூப்பரா படிப்பான். எந்த சப்ஜெக்ட்டுனாலும் ரொம்ப சீக்கிரமா மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பான்'',
''என் மூத்த பொண்ணு ரொம்ப நேரம் உட்கார்ந்து படிக்கமாட்டா. ஆனா, எப்பவும் அவதான் கிளாஸ் ஃபர்ஸ்ட்!''
- என் கிளினிக் வந்திருந்த மூன்று அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது காதில் விழுந்தவை.
கல்வி என்பது 'விரைவாக எழுதுதல்’, 'மனப்பாடம் செய்தல்’, 'ஒப்பித்தல்’  என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், கல்வி என்பது என்ன? 'ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது’ என்பதுதான் மிகச்சரியான பதில்!
எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும்? ஒரு விஷயத்தில் முழுமையான அறிவைப் பெறுவதற்காக மட்டுமல்ல... கற்றுக் கொண்டதை 'செயல்படுத்தி’ பார்ப்பதே கல்வியின் நோக்கம்!
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை படிப்பாளியாக (Studious) இருக்க ஆசைப்படுகிறார்கள். அதற்காக ஸ்பெஷல் டியூஷன், கோச்சிங் என்று பணம், நேரம் என அனைத்தையும் செலவிடுகிறார்கள். ஆனால், படிப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது... திறமைசாலியாகவும் இருந்தால்தான் அது முழுமையான கல்வி. 'படிப்பாளி குழந்தைகள்’ (a+b)2 = a2 +b2+2ab என்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தப்பில்லாமல் சொல்வார்கள். திறமைசாலி குழந்தைகள் அந்த ஃபார்முலாவை தப்பில்லாமல் தெரிந்து வைத்திருப்பதோடு, அதனை எங்கு, எப்படி 'அப்ளை’ செய்து பார்க்க வேண்டுமோ... அங்கு சரியாக 'அப்ளை’ செய்வார்கள். அத்தகைய குழந்தைகள்தான் பரீட்சையிலும் வாழ்க்கையிலும் பெரிய வெற்றியை எட்டுகிறார்கள். ஆக, படிப்பதற்கும் கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்வதுதான் குழந்தைக்கு சரியாக வழிகாட்ட உதவும்.
'என் புள்ள சரியாவே படிக்க மாட்டேங்குது' என்பது இங்கு பல அம்மாக்களின் மன வருத்தம். ஓ.கே... ஒரு குழந்தை சரியாக படிக்க என்ன வேண்டும்? வெறும் அறிவு மட்டும் இருந்தால் குழந்தை நன்றாகப் படித்து விடுமா? 'நான் நல்லா படிக்கணும். அப்போதான் என் டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை பாராட்டுவாங்க’ என்று படிப்பதற்கு ஒரு நோக்கம் (Motivation) வேண்டும். எல்.கே.ஜி. போகும் குழந்தையிடம் அதை எதிர்பார்க்கக் கூடாது; பெற்றோர்கள்தான் அதை உருவாக்க வேண்டும்.
படிப்பு என்பது டீச்சர் சொல்வதை சரியாகக் காதில் கேட்டு, கண்ணால் எழுத்துக்களைப் புரிந்து, மனதால் உள்வாங்கி, கையால் எழுதுகிற விஷயம். குழந்தைக்கு ஒருவேளை கண்ணில் குறைபாடு இருந்தால், டீச்சர் போர்டில் எழுதிப் போடும் எழுத்துக்கள் அக்குழந்தைக்கு எப்படி தெரியும்? பிறகு அது எப்படி உள்வாங்கிப் படிக்கும்? ஆகையால் இந்த உணர்வு உறுப்பு கள் எல்லாம் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது (Sensory organs activation), இரண்டாவது  தேவை.
அடுத்ததாக, வகுப்பில் டீச்சர் நடத்தும் பாடங்களை கருத்து ஊன்றி கவனிக்க வேண்டும் (Attention). அப்படிக் கவனித்த விஷயங்களை மனதுக்குள் சரியாகவும் முழுமையாகவும் பதியவைக்க வேண்டும் (Registration). பதிய வைத்துவிட்டால் போதுமா? இல்லை... பதிய வைத்த விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் (Understanding).அதோடு அந்தக் கல்வி முழுமை பெற்றுவிடாது. புரிந்துகொண்டவற்றை செயல்படுத்திப் பார்க்க வேண்டும் (Practical application).
'செயல்படுத்திப் பார்த்தல்’ என்பது ஒரு தொடர் நிகழ்வு. ஒரு குழந்தை ஐந்தாம் வகுப்பில் 'தாவரங்கள் உணவை இலையின் மூலம் தயாரித்துக் கொள்கின்றன’ என்று படித்திருக்கும். அதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தால்தான், இலை மூலம் எப்படி உணவைத் தயாரிக்கிறது, 'குளோரோஃபில் - பச்சையம்’ என்றால் என்ன, எப்படி சூரிய ஒளி மூலம் இலைகள் உணவைத் தயாரிக்கின்றன என்பதை அறிவியல் டீச்சர் ஆறாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும்போதும் சரியாகப் புரிந்து கொள்ளும்.
ஆக, கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்களும் டீச்சர்களும் புரிந்து கொண்டால்... கற்றல் எப்போதும் இன்பம்தான் குழந்தைக்கும், பெற்றோருக்கும், டீச்சருக்கும்!
- வளர்ப்போம்...
 படம்: ஆ.வின்சென்ட் பால்


Source - Vikatan Magazine