Friday, May 27, 2011

நான் எழுதிய பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: கருணாநிதி


நான் எழுதிய பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: கருணாநிதி
சென்னை, மே 27,2011
தாம் தொகுத்து எழுதிய பாடல் இடம்பெற்றது தான் தமிழக அரசின் முடிவுக்கு காரணம் என்றால், அதனை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டேனும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் நன்மைகளையும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முந்தைய அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் விவரித்துள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலேயே அமல்படுத்த கோரி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்தது.

சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச்சட்டம் 2010 இயற்றப்பட்டு சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

2011-2012 கல்வியாண்டில் சமச்சீர் கல்விமுறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிக் கல்வி முறையில் மாநில கல்வித் திட்டம், மெட்ரிக் கல்விமுறை, ஆங்கிலோ இந்தியக் கல்விமுறை மற்றும் கீழ்த்திசை கல்வி முறை என நான்கு வகை கல்வித் திட்டங்கள் 2009-2010 ஆம் கல்வி ஆண்டு வரை பின்பற்றப்பட்டன. 

இவற்றுள் பாடமுறை, பாட புத்தகங்கள், தேர்வுமுறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஒவ்வொன்றும் தனித்தனியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றில் இருந்த சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி மாநிலம் முழுவதும் ஒரே சீரான சமச்சீர் கல்வி முறையினை நடைமுறைப்படுத்த அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவை அனைத்தையும் ஆய்வு செய்து மற்றும் ஒன்றுபடுத்தி ஆய்வு செய்ய குழு அமைக்க அரசால் திட்டமிடப்பட்டது.

இதன்படி பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் ஒரு குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. மேற்கொண்ட குழு தனது ஆய்வறிக்கையை அரசின் பரிசீலனைக்காக சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க எம்.பி.விஜயகுமார் (ஓய்வு) ஒருநபர் குழுவாக தமிழக அரசாணையின் 222/ பள்ளிக் கல்வித்துறை நாள் 3.9.2007-ன்படி அமைக்கப்பட்டது.

முனைவர் எஸ்.முத்துக்குமரன் ஆய்வறிக்கையை ஒருநபர் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்ந்து பரிசீலிக்க, பிற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத் திட்டங்கள், தேர்வுமுறைகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அதிகாரிகளை கொண்ட கல்வியாளர்கள் குழு அரசாணை எண்.212 பள்ளிக் கல்வி துறை நாள் 30.10.2008-ன்படி அமைக்கப்பட்டது.

அரசால் அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் குழு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அரசுக்கு வழங்கியது. சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் இயற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு 2010-ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டமும் (தமிழ்நாடு சட்டம் 8/2010) அதன் கீழ் விதிகளும் 1.2.2010 அன்று தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டன. முதற்கட்டமாக 2010-2011 ஆம் கல்வியாண்டில், 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல், கழகத்தால் முதலாம் வகுப்புக்குத் தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும், 6-ம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணைக்கு இடைக்கால தடை வழங்ககோரி புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது. 

எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் - அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை.

அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்பதற்காக தான் எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித்தனமாக அதனை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து அந்த குழுக்களை கொண்டு வெளி மாநிலங்களுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்யச் செய்து அதன்பிறகுதான் படிப்படியாக சமச்சீர் கல்விமுறை நடைமுறைக்கு கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு அது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை எல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக தயாரித்து அதன்பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பது சரியான நடைமுறைதானா என்பதை அரசினர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்கிட உருவாக்கப்பட்ட திட்டமாகும். மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம் ஓ.எஸ்.எல்.சி. போன்ற பாடத்திட்டங்களியிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் போட்டியிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை இருந்ததை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் தி.மு.கழக அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இந்த அரசின் அறிவிப்புக்கான காரணம் என்றால் அதை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலே அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடுவதற்காக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் பாடலில் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் என்ற வரியை நீக்கி விட்டுத்தான் - தமிழக அரசின் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழகத்திலே அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்தேன்.

அந்தப் பாடல் தற்போது சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களிலே இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தையே எதிர்த்திட முனையுமா?
மேலும் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல் அந்த புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது.

அந்த பாடலில் தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலக்கேசி, கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல் இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா?

ஆம், என்றால் அந்த பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்துவிட்டு அல்லது அந்த பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே?
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Source - Vikatan Magazine

தமிழக சட்டப்பேரவை தலைவரானார் டி.ஜெயக்குமார்!

தமிழக சட்டப்பேரவை தலைவரானார் டி.ஜெயக்குமார்!
 சென்னை, மே 27,2011
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக டி.ஜெயக்குமாரும், துணைத் தலைவராக ப.தனபாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 14-வது சட்டப் பேரவையின் தலைவர் பதவிக்கான தேர்தலில், ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. தனபால் ஆகியோர் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால், சட்டப்பேரவைத் தலைவராக டி.ஜெயக்குமாரும், துணைத் தலைவராக ப.தனபாலும், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் இன்று அறிவித்தார்.



Source - Vikatan Magazine

Thursday, May 26, 2011

அமைச்சர்கள்...

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...

மாடு மேய்த்தவர் கால்நடை அமைச்சர்!
இரா.சரவணன்
படங்கள்: கே.கார்த்திகேயன், எல்.ராஜேந்திரன், ராம்குமார், வின்சென்ட், பி.ஆர்.முருகன்.
ஜெயலலிதா முதலமைச்சரானால், அதிர்ச்சிகளுக்கும் ஆச்சர்யங்களுக்கும் சம பங்கு இருக்கும். இம்முறையும் அப்படியே!
 'கானா’ கருப்பசாமி!
நான்காவது முறையாக வெற்றி பெற்ற கருப்பசாமிக்கு நிச்சயம் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பலரும் அனுமானித்தார்கள். யூகங்களைத் தவிடுபொடி ஆக்குவதுதானே ஜெ ஸ்டைல். இந்த முறை கருப்பசாமியைக் கால்நடைத் துறை அமைச்சர் ஆக்கினார். ''துறைரீதியான அத்தனை பிரச்னைகளையும் அறிஞ்ச ஆள்னா, அது கருப்பசாமிதான். பி.யூ.சி மட்டுமே படிச்ச கருப்பசாமி, பழைய எம்.ஜி.ஆர். பாடல்களை கானா ஸ்டைலில் பாடிக் கலக்குவார்.
ஆரம்பம்தொட்டே ள்ளூரில் விவசாயம் பண்ணி வரும் அவர், ஆடு மாடு மேய்ச்சப்பதான் பாட்டுப் பாடவே கத்துக்கிட்டார். அன்னிக்கு மாடு மேய்த்தவர் இன்னிக்குக் கால்நடைத் துறைக்கே மந்திரி ஆகிட்டார். அம்மா நிகழ்த்துற ஆச்சர் யங்களுக்கு அளவே இல்லை!'' என சிலிர்க் கிறார்கள் கருப்பசாமியின் நண்பர்கள்.
டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்!
டந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சட்டரீதியான சிக்கலால் 'முதல்வர்’ பதவியில் அமர்த்திவைக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். புரோட்டாகால்படி முதல்வருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நிதித் துறை. இந்த அருமை புரியாத ஆதரவாளர்கள் சிலர், ''என்னங்கண்ணே, பொதுப் பணித் துறை கிடைக்கும்னு பார்த்தால், இப்படிப் பண்ணிட்டாங் களே?'' என வருத்தம் காட்டி னார்கள். ''பெரியகுளம் டீக் கடை கல்லாவில் உட்கார்ந்து இருந்த என்னை தமிழ்நாட்டோட கல்லாவிலேயே அம்மா உட்காரவெச்சிருக்காங்க. விவரம் புரியாமப் பேசாதீங்க!'' எனச் சொன்னபோதே ஓ.பி-க்குக் கண் கலங்கிவிட்டது.
நகரப் பொறுப்பில் இருந்தபோது பெரியகுளத்தில் டீக் கடை நடத்தி வந்தவர் பன்னீர்செல்வம். எம்.எல்.ஏ., அமைச்சர் என அவர் கிராஃப் ஏறியபோதும், டீக் கடை நிர்வாகம் தொடந்துகொண்டே இருந்தது. தம்பி மாஸ்டராக டீ ஆற்ற, கல்லா பெட்டியில் உட்கார்ந்து காசு எண்ணுவார் பன்னீர். முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டபோதும், ''டீக் கடையை நிறுத்திடாதீங்க. அதுதான் என்றைக்கும் நிலையானது!'' எனச் சொன்னார். தொகுதிப் பக்கம் வரும்போது பழசை மறக்காதவராக அந்த டீக் கடையின் கல்லாப் பெட்டியில் அமர்ந்து, ஏரியாவாசிகளிடம் பேசிச் சிரிப்பார் பன்னீர். அம்மாவின் அருகில் அவர் பவ்யமாக நிற்கும் படம் அந்த டீக் கடையில் பிரதானமாக இருக்கும். அந்தப் பவ்யம்தான் டீக் கடை கல்லாவில் இருந்து அவரை இந்த உயரத்துக்கு ஏற்றி இருக்கிறது!
தழுதழுத்த தாம்பரம் சின்னையா!
பிற்பட்டோர் நலத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட தாம்பரம் சின்னையாவுக்கு பலரிடம் இருந்தும் வாழ்த்து மழை. 'முதல் தடவை ஜெயிச்சே மந்திரி ஆகிட்டீங்க’ என பலரும் வாழ்த்த, ''அது என் பெயரா இருக்காதுப்பா!'' என நம்ப மறுத்தார் சின்னையா. அவர் பெயர்தான் என்பது உறுதியாக, சின்னையாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ''அமைச்சர் ஆனதற்கு சந்தோஷப்படாமல் மயக்கம் போடுறீங்களே?'' என சிலர் கேட்க, ''எம்.எல்.ஏ. சீட் கிடைச்சப்பவே, மயங்கி விழுந்த ஆள்யா நான். நேர்காணலுக்கே கூப்பிடாமல், அம்மா எனக்கு சீட் அறிவிச்சாங்க. இப்போ அதே மாதிரி, அமைச்சர் பதவியும் கொடுத்துஇருக்காங்க'' என்றார் சின்னையா. தகரக் கூரையும் தட்டுமுட்டுச் சாமான்களுமாகக் கிடக்கும் சாதாரண வீட்டில்தான் சின்னையா வசிக்கிறார். ''இந்த ஆறு சென்ட் இடத்தில் என்னோடு பிறந்த ஒன்பது பேருக்குப் பங்கு இருக்கு சார்'' என்று தழுதழுக்கிறார் மாண்புமிகு பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் தாம்பரம் சின்னையா!
பாதுகாப்புக்காகப் பதவி!
புவனகிரி தொகுதியில் ஜெயித்த செல்வி ராமஜெயத்துக்கு சமூக நலத் துறையை ஒதுக்கி இருக்கிறார் ஜெ. சில வருடங்களுக்கு முன் செல்வியின் கணவர் ராமஜெயத்தை, மர்ம ஆசாமிகள் சிலர் வெட்டிக் கொன்றார்கள். கண்ணீரோடு கார்டனுக்கு வந்த செல்வி, ''அவர் இல்லாமல் வாழப் பயமா இருக்கும்மா!'' எனக் கண்ணீர் சிந்தி இருக்கிறார். 'அவருக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்’ என எண்ணித் தான் எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார் ஜெ. அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் செல்வி ராமஜெயம் பெயரும் இடம்பெற, அவர் அதிர்ச்சியில் கதறி அழாத குறை தான். ''ஆறு அக்கா தங்கைகளோடு பிறந்தவள் நான். பாதுகாப்பு கேட்டுத்தான் அம்மாகிட்ட போனேன். சைரன் வெச்ச காரும் இத்தனை போலீஸும் கொடுப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை!'' என வாழ்த்துச் சொல்ல வருபவர்களிடம் எல்லாம் கண்ணீர் உகுக்கிறார் செல்வி. இவருடைய கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு!
வீம்புக்குக் கிடைத்த விருது!
'36 வயதே ஆன செந்தில் பாலாஜிக்கு எப்படிப் போக்குவரத்துத் துறை கொடுத்தாங்க?’ என்கிற ஆச்சர்யம் அ.தி.மு.க-வுக்குள்ளேயே இன்னமும் அடங்கவில்லை. அ.தி.மு.க. மண்டல வாரியாக நடத்திய கூட்டங்களுக்கு அதிக ஆட்களைத் திரட்டி வந்த மாவட்டச் செயலாளர் கரூர் செந்தில் பாலாஜிதானாம். கோவைக் கூட்டத்துக்கு 180 பஸ்களில் ஆட்களைத் திரட்டியவர், திருச்சிக் கூட்டத் துக்கு அதை விஞ்சுகிற அளவுக்கு அதிகமான பஸ்களைத் திரட்டும் முனைப்பில் இருக்க, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அதற்குத் தடை போட்டார். தனியார் பேருந்து முதலாளிகளை மிரட்டி, ''பாலாஜிக்கு ஒரு பஸ்கூட அனுப்பக் கூடாது'' என்றார். களத்தில் குதித்த பாலாஜி, 800 லாரி, டிராக்டர், மினி வேன்களில் கூட்டத்தைத் திரட்டிப்போனார். இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கார்டனுக்கு புகார் அனுப்பினார்கள். விவகாரத்தை விசாரித்தபோதுதான் பாலாஜியின் துடிப்பு தெரிய வந்தது. விளைவு, இப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!
'கடன்’ கொடுத்த வருவாய்த் துறை!
''அம்மா, எனக்கு சீட் வேணாம். எனக்கு ஒரே ஒரு பையன். அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். நல்லா வாழ்ந்தவன். எல்லாம் நொடிச்சுப்போய், இப்போ ரெண்டே கால் கோடி ரூபாய் கடன்ல இருக்கேன். இனி, விற்க எதுவுமே இல்லம்மா... நீங்க யாரை நிக்கவெச்சாலும் அவங்களுக்காக வேலை பார்க்குறேன்!'' நேர்காணலுக்காக அழைக்கப்பட்டபோது நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கமணி இதைத்தான் சொன்னார். இந்த வார்த்தைகள் ஜெ-யின் மனதைக் கரைக்க, தங்கமணிக்கே சீட் கிடைத்தது. ''பிசினஸ்ல லாப நஷ்டம் சகஜம். ஆனா, அதில் உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைச்சிருக்கும். அதைச் சரியா பயன்படுத்தி, துறையைக் கவனிச்சுக்கங்க!'' என்று தங்கமணிக்கு வருவாய்த் துறையை வழங்கினார் ஜெ!
வார்த்தைகளுக்குக் கிடைத்த வாய்ப்பு!
டந்த தேர்தலில் குளத்தூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த சுப்ரமணியனுக்கு இந்த முறை சீட் இல்லை. காரணம், குளத்தூர் தொகுதி நீக்கப்பட்டு, விராலிமலை என்கிற பொதுத் தொகுதி உருவாகிவிட்டது. ஆனாலும், அசராத சுப்ரமணியன் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதிக்கு வாய்ப்புக் கேட்டு ஜெயலலிதாவைச் சந்தித்தார். ''உள்ளூர் வேட்பாளர்களே தடுமாறும்போது, அடுத்த தொகுதிக்குப் போய் நீங்கள் எப்படி ஜெயிக்க முடியும்?'' எனக் கேட்டார் ஜெ. ''ஆதிதிராவிட மக்களைப் பொறுத்தமட்டில் யார் வேட்பாளர் என்று பார்க்க மாட்டார்கள் அம்மா. தனித் தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் யார் நின்றாலும், அம்மாவின் ஆளாகத்தான் பார்ப்பார்கள். அதனால், தமிழகத்தில் எந்தத் தனித் தொகுதியிலும் என்னை நிறுத்துங்கள். நிச்சயம் ஜெயிப்பேன்!'' எனச் சொன்னார் சுப்ரமணியன். கந்தர்வக்கோட்டை தொகுதியில் சீட் வாங்கி, ஜெயித்தவருக்கு ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. புதுக்கோட்டையில் சொந்த வீடு இல்லாத சுப்ரமணியன், ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு இருக்கிறார். அமைச்சர் பதவி அறிவிக்கப்பட்ட நாளில் பாதுகாப்புக்காக அவருடைய வீட்டைத் தேடி போலீஸ் அலைந்தது பரிதாபக் கதை!
புகார் புள்ளியின் கையில் பொறுப்பு!
'தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுடன் நெருக்கமாக இருக்கிறார்!’ என அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி அடிக்கடி கார்டனுக்குப் புகார் மழை. ஆனாலும், அக்ரிக்கு ஸீட் கொடுத்தார் ஜெ. ஜெயித்த உடன் எ.வ.வேலு வகித்த உணவுத் துறையையே அக்ரிக்குக் கொடுத்தார் ஜெ. கூடவே, எ.வ.வேலு துறைரீதியாகச் செய்த மோசடிகள் குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பும் அக்ரி வசம்! 'எ.வ.வேலுவுடன் நெருக்கம் இல்லை!’ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போதே கிளறல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் அக்ரி!
இவர்கள் தவிர, இன்னும் சிலர் அமைச்சர்கள் ஆனதிலும் 'அம்மா’ பாணி அசத்தல்!
ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த கே.வி.ராமலிங்கத்தை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் சொல்லி, இப்போது அமைச்சராகவும் உயர்த்தி இருக்கிறார் ஜெ. ''பொதுப் பணித் துறையை நீங்கள்தான் பார்க்கப் போறீங்க...'' என ஜெ. சொல்ல, ''அவ்வளவு முக்கியமான துறையை நிர்வகிக்கிற அளவுக்கு எனக்கு ஏதும் விவரம் தெரியாதும்மா'' என்று சொல்லி இருக்கிறார் ராமலிங்கம். ''வருமானம் கொழிக்கும் பொதுப் பணித் துறைக்கு எல்லா விவரங்களையும் அறிந்தவர்களைத்தான் நியமிக்கக் கூடாது'' என சிரித்துக்கொண்டே சொன்னாராம் ஜெ. ஆரம்பத்தில் காய்கறி வியாபாரம் செய்த மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறை, சட்டமன்றத்தில் ஒரே ஒரு தடவை கல்விக் கொள்கை குறித்து அற்புதமாகப் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனுக்கு உயர் கல்வித் துறை, கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தைத் 'தீப்பெட்டித் திட்டம்’ எனக் கிண்டல் அடித்த காரணத்துக்காகவே ஒரத்தநாடு வைத்திலிங்கத்துக்கு வீட்டு வசதித் துறை என அறிவித்து, வழக்கமான விசித்திரங்களை ஜெகஜோதியாக அரங்கேற்றி இருக்கிறார் ஜெ!
பரிதாப பச்சைமால்!
ச்சைமால், வனத் துறை அமைச்சர் ஆனது தனிக் கதை. சில வருடங்களுக்கு முன் திடீரென ஒருநாள் கார்டனுக்குப் போகிறார் பச்சைமால். அப்போது அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. ''அம்மா, நம்ம கட்சி நல்லபடி வளரணும்னா, எங்க மாவட்டத்துக்கு நீலத்தங்கம் என்பவரை மாவட்டச் செயலாளராப் போடுங்க!'' என்றார் கிடைத்த சந்தர்ப்பத்தில். நீலத்தங்கம் என்பவரின் சாதனைகளையும் பட்டியல் போட்டார். அனைத்தையும் கேட்ட ஜெயலலிதா, ''நீங்கதான் இனி மாவட்டச் செயலாளர்!'' என அறிவித்தார். ''அம்மா, என்கிட்ட சைக்கிள்கூட இல்லம்மா. பெரிய பதவி எல்லாம் எனக்கு வேணாம்மா'' எனக் கண்ணில் நீர் வைத்துக்கொண்டு கதறினார் பச்சைமால். உடனே, அவருக்கு ஒரு டாடா சுமோ வழங்கினார் ஜெ. 'அம்மாவே தெய்வம்’ என்கிற வாசகத்தோடு சுற்றுகிறது அந்த சுமோ.
இந்தத் தேர்தலில், ''அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்த தளவாய் சுந்தரம்தான்மா சரிப்படுவார். அவருக்கே சீட் கொடுத்துடுங்க'' என்றார் பச்சைமால். சிரித்தபடியே ஜெ. சீட் அறிவித்தது பச்சைமாலுக்கு. ''சுரேஷ்ராஜனை என்னால் ஜெயிக்க முடியாதும்மா. அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை'' என்று தயங்கி நின்றார். உதவிகளுக்கு வழி செய்து கொடுத்த ஜெ. 'ஜெயிச்சால் அமைச்சர் பதவி'' என்கிற உத்தரவாதமும் அப்போதே அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது தம்மத்துக்கோணம் கிராமத்தில் உள்ள தனது ஓட்டு வீட்டில் பாதுகாப்புக்கு நின்றுகொண்டு இருக்கும் போலீஸைக் கூச்சத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார் பச்சைமால்!

Source - Vikatan Magazine

டெல்லியிலேயே தங்கிடவா?

டெல்லியிலேயே தங்கிடவா?

மகளிடம் தழுதழுத்த அப்பா
இரா.சரவணன்
15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!
 தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத் துக்கு அணை போட்டார்கள். ''கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.
'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழி யைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.
20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.
மீடியா வெளிச்சம் படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந் தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.
20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.
மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி,
அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒருநாள்கூட இருக்க மாட்டான். ஆதி கிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’என்ற படியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.
சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப்பையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான். 'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும் ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதறவைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’
''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம்அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக்கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.
அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப்போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமாப் பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி.டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.
காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.
23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப்போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.
எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!

Source - Vikatan Magazine

Wednesday, May 25, 2011

''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''

''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''

தா.கி. வழக்கில் அணுகுண்டுத் திருப்பம்!
டந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாலையில் வாக்கிங் சென்ற தா.கிருட்டிணன், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். மு.க.அழகிரி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ். தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கின் போக்கு திசை மாறியதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியது அ.தி.மு.க. அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களையும் நிரபராதிகளாக்கி, விடுதலை செய்தது சித்தூர் நீதிமன்றம். இதை எதிர்த்து தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்!’ என வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ''தா.கி. வழக்கு மீண்டும் உயிர்பெறும்'' என்கிறார்கள் மதுரையில்!
'உன்னை வீழ்த்தியவர்கள் இன்று தெய்வத்தின் தண்டனை​யால் வீழ்ந்துவிட்டார்கள். அம்மா ஆட்சியில் உண்மைக் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை உறுதி!’ என மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்கள், தா.கி-யின் புகைப்படத்துடன் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
மே 20-ம் தேதி தா.கிருட்டிணனுக்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம். இதற்காக மதுரையில் அகமுடையார் இளைஞர் பேரவையினர் நடத்திய தா.கிருட்டிணன் படத் திறப்பு நிகழ்ச்சியிலும் அனல் பறந்தது.
மூவேந்தர் பண்பாட்டுக் கழகத் தலைவர் பரங்குன்றம், ''தா.கி. கொலை வழக்கை சரியானபடி நடத்தவில்லை. அதனால், எல்லோரும் விடுதலையாகிவிட்டார்கள். அப்படி என்றால், தா.கி-யை யார்தான் கொன்னது? நாவரசு கொலை வழக்கில் அப்பீலுக்குப் போன அரசு, தா.கி. கொலை வழக்கில் ஏன் அப்பீலுக்குப் போகவில்லை?'' என்றார் காட்டமாக.
தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, அவர் கொலையுண்டுகிடந்த இடத்தில் ஜூன் 10-ம் தேதி அகமுடையார் அமைப்புகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய அகமுடையார் இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ஜெயமணி, ''விதி வலியதுன்னு சொல்வாங்க. எட்டு வருஷத்துக்கு முந்தி இதே தேதியில்தான் தா.கி-யாரை வெட்டிக் கொன்றார்கள். இப்போது அதே தேதியில், கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைகளுக்கு. அது மாதிரி தா.கி-க்குக் கருணாநிதி செய்த கொடுமைக்கு, இப்போது அவர் மகள் கம்பி எண்ணுகிறார்!'' என்றார்.
தேவர் பொலிட் பீரோ உறுப்பினர் அரப்பா பேசுகையில், ''துக்கம் கேட்கக்கூட தா.கி. வீட்டுக்கு கருணாநிதி வரவில்லை. கொலையைக் கண்டித்தோ, இரங்கல் தெரிவித்தோ... பொதுக் குழுத் தீர்மானம்கூட போடவில்லை. அதனால்தான், தா.கி. கொலையின் பின்னணியில் கருணாநிதியும் இருக்கிறார் என்று சொல்கிறோம். அவருக்கு இந்தக் கொலையின் ரகசியங்கள் நன்றாகவே தெரியும். அதனால், போலீஸ் மறு விசாரணையை அவரிடம் இருந்து தொடங்க வேண்டும். இப்போது ஸ்பெக்ட்ரம் சதியில் கனிமொழி எப்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ, அதுபோல தா.கி. கொலை வழக்கில் கருணாநிதி மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்!'' என்றார்.
இந்த வழக்குபற்றி பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வரும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ''மகனைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார். இன்றைய தமிழக அரசு முறையீடு செய்தால், நீதிமன்றம், மறு விசாரணைக்கும் அப்பீலுக்கும் கட்டாயம் அனுமதி கொடுக்கும். இந்த வழக்கில் இருந்து விடுதலையான சிலர், அப்ரூவராக மாறத் தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. எனவே மறு விசாரணை நடத்தினால்,  அச்சுறுத்தலுக்குப் பயந்து பிறழ் சாட்சியம் அளித்தவர்கள், இப்போது மனசாட்சிப்படி உண்மையைச் சொல்வார்கள். இந்த வழக்கு அப்பீலுக்கு உகந்தது இல்லை என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் சொன்னதாகச் சொல்கிறார் கருணாநிதி. அவரிடம் யார், எப்போது கருத்துக் கேட்டார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்டதற்கு, கடைசி வரை கருணாநிதி அரசு பதில் சொல்லவே இல்லை! மேலும் இந்த வழக்கில் தா.கி. எழுதிய கடிதங்கள் உள்பட முக்கியமான ஆவணங்களை போலீஸ் மறைத்துவிட்டது. தா.கி-யின் மனைவியை கடைசி வரை நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவைக்கவில்லை. தா.கி-யின் தம்பி ராமையா, இவர் மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்ததன் ரகசியம் என்ன? தா.கி-யின் இன்னொரு தம்பிக்கு தி.மு.க. அரசில் முக்கியப் பதவி கொடுத்தது ஏன் என்பதையும் இன்றைய அரசு விசாரிக்க வேண்டும்!'' என்றார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடதடக்கப்போகிறது தா.கி. வழக்கு!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி


Source - Vikatan Magazine

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா!

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா!

அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்
லை சிறந்த மனிதர், விஞ்ஞானி, கலைஞர் என ஒவ்வோர் ஆண்டும், உலகின் புகழ் பெற்ற பிரபலங்​களைத் தேர்ந்தெடுத்துக் கௌரவப்படுத்தும் அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, உலகத்தின் 10 மோசமான மனிதர்களையும் பட்டியல் போட்டது! அந்தப் பத்திரிகையின் வார்த்தையில் சொன்​னால், 'உலகின் முதல் 10 இக்னமினியஸ் - ignominious  மனிதர்களை’ அது உலகுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இந்த ஆங்கில வார்த்தைக்கு 'அவமானகரமான, மானங்கெட்ட’ என்று பல அர்த்தங்கள் உண்டு. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இடம் பெற்று இருப்பதுதான் வேதனை. அவர்...2ஜி அலைக்கற்றை விவகாரப் புகழ், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை  அமைச்சர் ஆ.ராசா!
வாட்டர் கேட் ஊழலில் சிக்கி அமெரிக்க ஜனாதிபதி பதவியைப் பறிகொடுத்த நிக்ஸன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு அடுத்தபடியாக, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் ஆ.ராசாவுக்கு.
''இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கிறது இந்த மெகா ஊழல். இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்குக் காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும், சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித் துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!'' என்று டைம் குறிப்பிட்டு இருக்கிறது.
அடுத்ததாக யாரெல்லாம் இடம் பிடித்துள்​ளார்கள் என்பதையும் படியுங்கள்...
'தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், நாட்டு மக்களைச் சுரண்டியும் நசுக்கியும் சுகம் கண்டவர். அவரை எதிர்த்து அங்கு சமீபத்தில் புரட்சி நடந்தது’ என்று லிபியாவின் கர்னல் கடாஃபியை பொறித்துள்ளது 'டைம்’.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மோஷே கேஸ்தவ், பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தார் என்பது துவங்கி, பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார் என நீள்கிறது கட்டுரை. 'இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, நீதியின் குரல்வளையையும் நெரிக்க முயற்சித்தார்’ என்று குற்றம் சாட்டுகிறது.மோஷே, இப்போது, ஏழு ஆண்டுகள் கம்பி எண்ணுகிறார்.
சில்வியோ பர்லஸ்க்கோனி... இத்தாலியின் பிரதமர். இவருக்கு வயது 74 என்றாலும், இளம் பெண்கள் மீது தனி டேஸ்ட். திருட்டுக் குற்றத்துக்​காக கைது செய்யப்பட்ட 17 வயதுப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்கி போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அந்தப் பெண்ணை விடுதலை செய்வதற்காக பிரதமர் தன் பெயரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று இப்போது வழக்கு நடக்கிறது.
அடுத்து வட கொரியாவின் ஜனாதிபதி கிம் யாங். சினிமா நடிகையாக இருந்தாலும் சரி, குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி... நாட்டின் ராணுவத்தை அனுப்பி, அவர்​களைத் தூக்கி வந்து, தனக்கு சின்ன வீடாக வைத்துக்கொள்ளும் இவருக்கும், டைம் உரிய இடம் கொடுத்து 'கௌரவ’ப்படுத்தி இருக்கிறது!
பெல்ஜியம் நாட்டின் மதத் தலைவர் ரோஜர், தன் உறவுக்கார சிறுவர்களிடம் பாலியல்ரீதியாக முறைகேடுகளில் ஈடுபட்டவர். கேட்டால்... ''இதெல்லாம் ஒரு மேட்டரா... நான் எந்த சிறுவனை அணுகினாலும், அதை அவனும் விரும்புவான். மற்றபடி அவர்களிடம் நான் மூர்க்கத்தனமாக நடக்கவில்லையே!'' என்று சமாளிக்கும் இவருக்கும் பட்டியலில் பெயர் இருக்கிறது.
ஜெங் ஜியா யூ... சீனாவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவராக இருந்த இவருக்கு, சீன அரசு மரண தண்டனை கொடுத்தது. காரணம், இவர் வாங்கிய கோடிக்கணக்கான லஞ்சம். அதனால் விற்பனைக்கு வந்த தரம் கெட்ட மருந்து மாத்திரைகளையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு அந்த நாட்டில் பலர் உயிர் இழந்தனர்.
இவர்கள் தவிர 1922-ம் ஆண்டு... 'அமெரிக்காவில் முறைப்படி லஞ்சத்தை ஆரம்பித்துவைத்தவர்’ என்ற கோபத்தில் அமெரிக்கா அமைச்சர் ஆல்பர்ட் ஃபாலுக்கும் பட்டியலில் இடம் . டெண்டர், அது, இது என்று ஏதும் இல்லாமல் லஞ்சம் கொடுத்த எண்ணெய் கம்பெனிகளுக்கு அரசாங்க கான்ட்ராக்ட்டை அள்ளிக் கொடுத்தார் என்பது ஆல்பர்ட் மீது உள்ள குற்றச்சாட்டு.
அமெரிக்காவின் ஒரு தனியார் கம்பெனியின் சி.இ.ஓ-வாக இருந்த டென்னிஸ், வேறு பாணியில் 'மோசமானவர்’. இவரது வீட்டு பாத்ரூமில் இருக்கும் ஒரு திரைச்சீலையின் விலை 2.50 லட்சம். தன் இரண்டாவது மனைவியின் பிறந்த நாளை இத்தாலியின் தீவு ஒன்றில் இவர் டாம்பீகமாகக் கொண்டாடியதற்கு ஆன செலவு சுமார் 9 கோடி. கம்பெனியின் போர்டு மீட்டிங் என்ற பெயரில் நடந்த இந்த மாபெரும் விருந்தில், புகழ்பெற்ற டேவின் சிலையைப்போன்றே ஒரு ஐஸ் சிற்பத்தை உருவாக்கச் சொன்னார். அந்த நிர்வாண சிலையில் இருந்து மதுபான நீரூற்று. கம்பெனி பணத்தை இப்படி வெட்கமே இல்லாமல் தன் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தாம்தூம் என்று செலவு செய்தற்காக டென்னிஸுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை!
நல்லவர்களை அறிமுகப்படுத்தும் 'டைம்’ மோசமானவர்​களையும் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதுதான் 'நேரம்’ என்பது!
- வேல்ஸ்

Source - Vikatan Magazine

கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி!

கனிமொழியைச் சிக்கவைத்த கலைஞர் டி.வி. அதிகாரி!

சிறைக்கு அனுப்பிய பலே வாக்குமூலம்!
'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும், முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.
'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.
''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து
200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.
அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.
''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார். 'கலைஞர் டி.வி.
200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.
6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல்,
200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.
ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime)  மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.
இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின் படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள். ஆனால் நீதிபதி, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று  கருத்துச் சொல்லி இருக்கிறார்.
கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.
தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர். 2ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.
லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.
ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!
- சரோஜ் கண்பத்
படங்கள்: முகேஷ் அகர்வால்,
அர்ஜுன்சிங் பன்வார், ரமாகாந்த்
 
ராசா வீட்டுச் சாப்பாடு...
அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக்கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.
'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக்கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது.
பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.
இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

Source - Vikatan Magazine

கோர்ட்டுக்குத் தேவையா கோடை விடுமுறை?

கோர்ட்டுக்குத் தேவையா கோடை விடுமுறை?

சுதந்திரத்துக்கு முன் நம் நாட்டின் நீதித் துறை யில் உள்ள பதவிகளை, ஆங்கிலேயர்களே பெரும்பாலும் வகித்தார்கள். கோடை வெப்பத்தை சமாளிக்க முடியாத அவர்கள், கோடை நாட்களில் நீதிமன்றத்துக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். அந்தக் காலத்தில் நீதிமன்றங்களில்... வழக்குகள் தேங்கிக்கிடப்பதும் இல்லை என்றதால், நிம்மதியாக ஓய்வை அனுபவித்தார்கள்.
ஆனால்... இன்று?
நம் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளில் இருந்து, பணியாளர்கள் வரை அனைவரும் இந்தியர்களே. நம் நாட்டின் பருவ கால மாற்றங்களை அறிந்து வளர்ந்தவர்கள். இது தவிர, நாட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. ஆண்டு முழுவதும் இரவும் பகலுமாக நீதிமன்றம் செயல்பட்டாலும், இந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இப்படி ஒரு சூழலில் நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை தேவைதானா?
விடுமுறை கால நீதிமன்றம் இயங்கினாலும், அது அவசர மனுக்களை மட்டும்தானே விசாரிக்கும். மேல் முறையீடு மனுக்களை விசாரிக்காது என்பதால், தேக்கம் அடையும் வழக்குகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கிறது. அரசின் அத்தனை துறைகளும் கோடை விடுமுறை இன்றி இயங்கும்போது, நீதிமன்றத்துக்கு மட்டும் விடுமுறை தேவையா?
கோடை விடுமுறை விவகாரத்தை நீதிமன்றம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும். ஏனெனில், தாமதமாக வழங்கப்படும் நீதியும் ஒரு வகையில் அநீதியே!
- கே.வெங்கடாசலபதி, செங்கல்பட்டு.
Source - Vikatan Magazine

Tuesday, May 24, 2011

வாழ்க வளமுடன்! - 5

வாழ்க வளமுடன்! - 5


'கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்குவதுபோல’ என்று நம்மூரில் அருமையாகச் சொல்வார்கள், ஒரு பழமொழி!
உடனே நாம், 'கண்களை எங்கே விற்பது? அதன் பிறகு எதற்காக ஓவியத்தை வாங்கவேண்டும்? அந்த ஓவியத்தை பார்க்கவோ ரசிக்கவோ முடியாதே!’ என்று நம் சிந்தனை களை ஓடவிட்டுத் தெளிவு பெற முடியும். கண்களை விற்று விட்டு ஓவியத்தை வாங்குவது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்பதை உணர முடியும்.

ஆனாலும் நாம், தொடர்ந்து கண்களை விற்றுத்தான் ஓவியம் வாங்கிக்கொண்டு இருக்கிறோம்; காதுகளை முழுவதுமாக அடைத்துவிட்டுத்தான் இசையைக் கேட்கிறோம்; இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டுதான், ஓடுவதற்கு முயற்சி செய்கிறோம்.
'என்ன இது?’ என்று குழம்புகிறீர்களா? 'ஒண்ணுமே புரியலியே சுவாமி!’ என அலுத்துக் கொள்கிறீர்களா?
புரியும்படி தெளிவாகவே சொல்கிறேன். மனிதர்களாகிய நாம் கிராமங்களை விட்டு நகரத்துக்கு வர ஆசைப்பட்டோம். அப்படி நகர்ந்து வரும்போது, நகரத்துக்கு அருகில் இருந்த காட்டை அழித்து நகரமாக்க முனைந்தோம். அதாவது, பசுமையான காட்டை அழித்து நாடாக்கினோம். மரங்களை வெட்டினோம்; சாலையாக்கினோம்; இடங்களை வளைத்தோம்; வீடுகள் கட்டினோம். அப்படி வீடு கட்டு வதற்காக, ஆற்று மணலைச் சுரண்டிச் சுரண்டி, நதிகளை வற்றச் செய்தோம். சைக்கிளில் இருந்து பைக் போன்ற வண்டிக்கு மாறினோம். பைக்கில் இருந்து, காருக்கு மாறினோம்.
இப்போது என்னாயிற்று? மரங்களை வெட்டியதால் மழையைக் காணோம். எப்போதேனும் தப்பித் தவறி மழை பெய்தாலும், அந்த மழை நீரை ஆற்றின் உள்பகுதி, அதாவது பூமியின் உள்பகுதி உள்வாங்கிக் கொள்கிறது. தெருவெங்கும் தார்ச்சாலைகள் வந்துவிட்டன. இதனால், வெப்பம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது. மரங்களும் தண்ணீரும் இல்லாததால், உடலில் புழுக்கமே மிஞ்சுகிறது. சைக்கிள் குறைந்து, பைக்குகளும் கார்களும் பெருகிவிட்ட நிலையில், காற்று மாசுபட்டு, அந்தப் புகைகளைச் சுவாசிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு! ஆக, நகரமயமாக்கம் என்பது நரகமயமாக்கம் என்பதாக ஆகிவிட்டது என்பதே உண்மை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?! ஆக, கண்களை விற்று ஓவியம் வாங்குகிற கதை இதுதான் என்பது இப்போதேனும் புரிகிறதா? இதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவஸ்தைப்படுவது எது தெரியுமா? நாம் விடுகிற மூச்சுதான்!
மூச்சு அதாவது சுவாசம் சரியாக இருந்தால்தான், நிறுத்தி நிதானமாகச் சிந்திக்கமுடியும். மூச்சில் உள்ள லயம் தப்பிப்போனால், எல்லாச் செயல்களிலும் அது எதிரொலிக்கும். காரியத்தில் ஈடுபாடு குறையும்; செயல்களில் ஏகப்பட்ட வேகத் தடைகள் குறுக்கிடும். சீராகச் சிந்திக்கமுடி யாமல், புத்தியானது கிழக்குத் திசையில் பயணித்து சட்டென்று மேற்குக்கு மாறி, திடீரென வடக்கு முகமாக நகர்ந்து, இறுதியில் தெற்கில் போய் முட்டிக்கொண்டு நிற்கும். ஆக, மூச்சு சீராக இருந்தால், வாழ்க்கையும் சீராகப் பயணிக்கும்.
இன்னொன்று...
ஒரு கையால் ஆணியையும், இன்னொரு கையால் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு, சுவரில் கடவுளின் திருவுருவப் படத்தையோ, பொக்கை வாய் தெரியச் சிரிக்கும் குழந்தை யின் புகைப்படத்தையோ மாட்டுவதற்கு முனையும் வேளையில், யாரேனும் ஏதேனும் கேட்டால், 'கை வேலையா இருக்கேன்ல’ என எரிந்து விழுவோமல்லவா?.
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து அக்கடா என்று அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில்... 'ஏங்க, சட்னி அரைக்க பொட்டுக்கடலை இல்லீங்க. கொஞ்சம் வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று மனைவி கேட்டதும், ''ஏன்டீ... காலு ரெண்டையும் வெட்டிப் போட்டுடலாம் போல வலிக்குது. ஆபீஸ் போயிட்டு வந்து உட்கார்ந்த கையோட, இரக்கமே இல்லாம கடைக்கு விரட்டறியே?’ எனக் கத்திவிடுவோம்தானே?
இப்படித்தான், சென்னையில் இருந்து நெல்லைக்கு பஸ்ஸில் சென்று இறங்கினால், முதுகுத் தண்டெல்லாம் பயங்கர வலி என்கிறோம். இரண்டு நாட்களாக, கிட்டத் தட்ட இரவு- பகலாக, கம்ப்யூட்டரில் வேலை செய்ததால், கண்களில் எரிச்சல் என்று கண்களைக் கசக்குகிறோம். துண்டைத் தண்ணீரில் நனைத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கிறோம்.
கை-கால்களில் உள்ள விரல்களைச் சொடுக்கெடுத்துக் கொள்கிறோம். கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆட்டி, ரிலாக்ஸ் செய்து கொள்கிறோம். கழுத்துக்கு கவசம் போல் அணிந்து வலியில் இருந்து விடுதலை பெற முயற்சிக்கிறோம். முழங்கால் பகுதிகளில் விளையாட்டு வீரர்கள்போல், சாக்ஸ் அணிந்து நிவாரணம் தேடுகிறோம்.
கதவிடுக்கில் விரல் லேசாக நசுங்கினால் துடித்துப் போகிறோம். பெயின் கில்லர் கிரீமைத் தடவி, வெந்நீரில் விரலைக் குளிக்க வைத்து, அதை சின்ன டவலால் ஒற்றியெடுத்து... என ஒவ்வொரு உறுப்புக்கும் எத்தனை விதமான முயற்சிகள்... மெனக்கெடல்கள்... பாதுகாப்பு ஏற்பாடுகள்! ஆனால், மூச்சு பற்றி மட்டுமே நாம் சிந்திப்பதே இல்லை.
''ஏங்க... அங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க?'' என்று மனைவி கேட்டால், ''நேத்திக்கி பஸ் ஸ்டாப்புக்கு வரதுக்கும் பஸ் கிளம்பறதுக்கும் சரியா இருந்துச்சு. தடதடவென ஓடி வந்து, பத்துப் பன்னண்டு அடி தூரம் வரை பஸ் பின்னாடியே போய் ஜம்ப் பண்ணி ஏறிட்டேன். அதுல, 'ஹார்ட் பீட்’ அதிகமாயிருச்சும்மா. அதான், இன்னிலேருந்து ஒரு பத்து நிமிஷம், மூச்சுப் பயிற்சி செய்யலாம்னு முடிவு பண்ணி, பயிற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்’ என்று எவரேனும் சொல்கிறார்களா, என்ன?
மூச்சு என்பதை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. 'அதுபாட்டுக்கு அது இயங்கிட்டிருக்கு’ என்பதாலேயே மூச்சினை எடுப்பார் கைப்பிள்ளை என்பதாகவே நினைத்துக் கொள்கிறோம். இதனால், சுவாசத்தில் உள்ள பிரச்னைகளையும் சுவாசப் பாதைகளில் திடீரென்று முளைத்திருக்கிற ஸ்பீடு பிரேக்கர்களையும் கண்டறிவதுமில்லை; அங்கே ஏதேனும் பிரச்னையா என்று கண்டுகொள்வதுமில்லை.
மூச்சு இருக்கிற வரைக்கும் உயிர் இருக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மூச்சு சீராக இயங்கினால்தான், நம்மால் நிம்மதியாகவே வாழ முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.
'என் மூச்சு இருக்கிற வரைக்கும், உன்னை நான் மறக்கவே மாட்டேன்’ என்கிற இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். எவரேனும் உதவி செய்திருந்தால், அவர்களைப் பார்த்து நெக்குருகி இப்படிப் பேசியிருப்பார்கள். ஆனால், காலப்போக்கில், சொன்ன வார்த்தையை மீறி அல்லது மறந்து, மூச்சிருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவார்கள் என்பது வேறு விஷயம்!
ஆகவே, நம்மிடம் அன்பும் கனிவுமாக இருப்பவரை, மூச்சிருக்கிற வரைக்கும் மறக்காமல் இருக்க முயற்சி செய்வோம். முக்கியமாக, நம் மூச்சை மறக்காமல் கவனிப்பது ரொம்பவே அவசியம் என்பதையும் உணர்வோம்!
அது சரி, மூச்சைக் கவனிப்பது எப்படி? அதற்கு ஏதேனும் பயிற்சிகள் உண்டா?
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
 ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!
'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம். செல்போன் வந்துவிட்ட பிறகு. அர்த்தமற்ற ஸ்வீட்டான பேச்சுகளுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது!
'கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக் கிறது’ என்கிறது ஒரு தியரி.
நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்... இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமை களை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும்.
'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் ஜோடிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்... அந்த உறவை விவாகரத்தின் மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.
காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அகஸ்மாத் தாகப் பட்டுக் கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.
துரதிருஷ்டவசமாக நம்மூரில் இந்தத் 'தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.
காலம் காலமாக பெண்களை அடுப் படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்னை.
அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழி லில் இருந்துவிட்டு, படம் இயக்கும் ஆசையுடன் இப்போது கோடம்பாக் கத்தில் செட்டிலாகியிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்... ''தமிழ் சினிமாவின் ஹீரோக்களைப் பாருங்கள்... அவர் களுக்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது போன்ற வற்றைப் பற்றிப் பெரிய பிரச்னை இருக் கிறது. அந்தக் கால எம்.ஜி.ஆரிடம் இருந்து இப்போதைய சிம்பு வரை பெண்களுக்கு அட்வைஸ் செய்வதையே காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். அல்லது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய ஹீரோவோ 'தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவேன். மரியாதையா காதலிச் சுடு’ என்று பெண்ணை மிரட்டுகிறான். மற்றொருவன் 'அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சா விட்டுட்டுப் போயிட்டே இருப்பீங்கடி...’ என்று பிதற்றுகிறான். இதில் உச்சகட்டமாக காதலிக்கவில்லை என்பதற் காக கதாநாயகியின் மீது கோர்ட்டில் வழக்கே போட்டு விடுகிறான் மற்றொரு ஹீரோ.
பெண் என்பவள் ஒரு சக மனுஷி, அவளிடம் நிதானமாக, அன்பாகப் பேச முடியும், விவாதிக்க முடியும் என்று ஏன் இவர்களுக்குத் தோணுவதில்லை?’' என்று அந்த இயக்குநர் கேட்டபோது, அதிலிருக்கும் நியாயத்தை உணர முடிந்தது.
நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது.
பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்னை.
தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய் தவர். 'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டு வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக் கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்த மிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்... உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்!
                  - நெருக்கம் வளரும்...
ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 (May2010)

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

கருவாகும்போதே...உருவாகும் அறிவு !
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
வளர்மதியும் மதிவதனியும் அக்கா - தங்கை. இருவருக்கும் ஒரே நாளில் திருமணம்; இரண்டு வார இடைவெளியில் பிரசவம். இருவருக் கும் பெண் குழந்தை. இருவரின் குழந்தைகளும் தங்களின் அம்மம்மா வீட்டில் ஆறு மாதம் வரை வளர்ந்தன. அப்போது அந்த இரு குழந்தைகளுக்கும் அங்கு ஒரே மாதிரியான அன்பான கவனிப்பு. ஆறு மாதம் கழித்து அவரவர் புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இப்போது இருவரின் குழந்தைகளும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள். ஒப்பீட்டளவில் தன் குழந்தையை நினைத்து மதிவதனிக்கு ஏக வருத்தம். 'வளர்மதியின் குழந்தை உடுமலைப் பேட்டை 'சைனிக்’ ஸ்கூலில் படிக்கிறாள். அதனால் அவளுக்கு நீச்சல், குதிரையேற்றம் என பல கலைகள் கைக்குள் கட்டுபட்டு இருக்கின்றன. ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவளாக இருக்கிறாள். இங்கிலீஷ், மேத்ஸ், சயின்ஸ் என எல்லா பாடங்களிலும் கில்லாடியாக இருக்கிறாள். ஆனால், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் நம் குழந்தை அவளைப் போல் அல்லாது ஆவரேஜ் மாணவியாகத்தானே இருக்கிறாள்...’ என்பதுதான் மொத்த வருத்தமும்.
மதிவதனி மட்டும் அல்ல, பெரும்பாலான அம்மாக்கள் தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தோடு அடுத்த குழந்தையின் புத்திசாலித் தனத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் குழப்பிக் கொள்வதை முக்கியமாக கடைப்பிடிக்கிறார்கள்.
புத்திசாலித்தனத்துக்கு என்று தனி ஜீன்கள் எதுவும் உண்டா? உடம்பில் இருக்கும் பல கோடி ஜீன்களில் ஏதோ சில ஜீன்கள் அதற்குக் காரணமாகின்றன. ஆனால், அந்த ஜீன்கள் ஒட்டுமொத்த அறிவின் கூர்மையையும் தீர்மானிப்பது இல்லை. பின்..?
குழந்தை கருவில் வளரும்போதே, அதன் புத்திசாலித்தனத்தை தீர்மானிக் கும் சூழல்கள் பல. குழந்தை வயிற்றில் இருக்கும்போது உங்கள் மனநிலை சந்தோஷமானதாகவும் உற்சாகமான தாகவும் பாஸிட்டிவான சிந்தனையு டனும் இருப்பது மிக முக்கியம். இது குழந்தையின் புத்திக்கூர்மையைத் தீர்மானிக்கும் காரணங்களில் மிக முக்கியமானது. வீட்டில் மாமியாருடன், நாத்தனா ருடன் சண்டை போட்டுவிட்டு, நாள் முழுவதும் அதை மனதில் தேக்கி வைத்து, சரியான சத்துள்ள உணவைச் சாப்பிடாமல் புலம்பிக் கொண்டிருந்தால்... கண்டிப்பாக அது குழந்தைக்கு பாதிப்பை உண்டு பண்ணும்.
வளர்மதியின் குழந்தை இப்போது நல்ல பள்ளியில் படிப்பது மட்டுமல்ல... கர்ப்பக் காலத்தில் இருந்தே அவர் உடல், மனதளவில் தன்னையும் தன் சிசுவையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட விதமும்தான் அவர் குழந்தையின் புத்திக் கூர்மைக்குக் காரணம்.
டாக்டரின் அறிவுரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவது... 'குழந்தை, வயித்துல நல்லா இருக்கானு ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடுவோம்...’ என்று அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சுகள் கருவைத் தொடுவது போன்றவற்றைத் தவிர்ப்பதில் உங்கள் குழந்தையின் புத்திக்கூர்மைக்கான கூறுகள் அடங்கியிருக்கின்றன அன்புள்ள அம்மாக்களே!
கர்ப்பக் காலத்தில், 'தண்ணியால தொற்றுநோய்’, 'சாப்பாட்டால தொற்றுநோய்’ என்று எந்த 'இன்ஃபெக்ஷனு’ம் அண்டாமல் உங்களை காத்துக் கொள்வது முக்கியம். 'பாத்ரூம்ல தெரியாம வழுக்கி விழுந்துட்டேன்...’ என்று கருவில் குழந்தையை சுமந்துகொண்டு காயங்கள் உண்டாக்கிக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.
கர்ப்பிணி மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சிகரெட்டை ஊது ஊது என்று ஊதினால், அதுவும் குழந்தையின் புத்திசாலித் தனத்தைக் கிள்ளி எறியும். நாகரிகத்தின் பெயரால், 'கொஞ்சம் பீர் குடித்துப் பார்க்கிறேன்’, 'வைன் அடிக்கிறேன்’ என்று கர்ப்பிணிகள் ஆல்கஹாலை அண்டினால், அது பேராபத்து!
குறிப்பாக, கரு உருவான 3-5 மாதங்களில் இந்த மாதிரியான ஆபத்துகளில் இருந்தெல்லாம் குழந்தையைக் காப்பது, அதன் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். ஏனென்றால், 3-5 மாதங்களில்தான் குழந்தையின் மூளை உருவாவதற்கான ஆயிரம் ஆயிரமான செல்கள் உருவாகின்றன. அந்த செல்களை இணைக்கும் லட்சக்கணக்கான நரம்பிழைகளும் உருவாகின்றன. அதனால்தான் 'எண் சாண் உடம்புக்கு... சிரசே பிரதானம்' என்கிறோம். எனவே, அந்தக் காலகட்டத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருந்து சிசுவின் ஆரோக்கியத்தைப் பேணுவதுதான் நீங்கள் குழந்தைக்குத் தரும் பெரும் சொத்து!
சரி, எச்சரிக்கையோடு இருந்து அழகான குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டீர்கள். அது மட்டுமே போதுமா... அந்தக் குழந்தை பண்பான குழந்தையாக பரிமளிக்க..?
- வளர்ப்போம்...
 Source - Vikatan Magazine

தமிழக பேரவையின் சபாநாயகர் ஆகிறார் டி.ஜெயக்குமார்!

தமிழக பேரவையின் சபாநாயகர் ஆகிறார் டி.ஜெயக்குமார்!
சென்னை, மே 23,2011
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக டி.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை - ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுக சார்பில் ப.தனபால் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ராசிபுரம் (தனி) தொகுதியில் இருந்து ப.தன்பால் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதிமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், இருவரின் வெற்றியும் உறுதி.