Saturday, April 2, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர்


Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

'துறுதுறு'குழந்தை...'திருதிரு'வென விழித்தால்...
குழந்தை மனநல மருத்துவர் ஷெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
சுஜ்ஜி குட்டி பார்ப்பதற்கு அத்தனை அழகு. அவளின் பிரகாசமான கோலிகுண்டு கண்களும், துறுதுறு நடையும் எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்துவிடும். மூன்று வயதான அவளின் குறும்புகள்... அழகிய கவிதை. ஆனால்... 'அம்மா, அப்பா, மம்மு’ போன்ற சின்னச் சின்ன வார்த்தைகளைத்தான் இன்னமும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறாள்.
'மூணு வயசாகியும் சரியா பேச மாட்டேங்கறாளே...’ என்று அவள் அம்மாவுக்கு கவலை தூங்கவிடாமல் துரத்துகிறது.
''மூணு வயசுதானே ஆகுது... போகப் போக சரியாகிடும்... நல்லா பேசுவா, கவலைப்படாதே. எங்க மச்சினர் மகனுக்குக்கூட இப்படித்தான் அஞ்சு வயசு வரைக்கும் சரியா பேச்சு வரல...'' என்று ஆறுதல் சொன்னார் அவருடைய தோழி. ஆனாலும் இவள் மனது ஆறவில்லை; எப்போதும் இதயத்தின் ஓரத்தில் ஒரு பயம் இரவு பகலாக அரித்துக் கொண்டே இருந்தது. பெற்ற தாயல்லவா?!
ஒரு குழந்தைக்கு பேச்சும், அந்தப் பேச்சுக்கான மொழியும் மிக அவசியம். மொழி என்பது நல்லது, கெட்டதை பகுத்தறிய உதவும் அற்புதமான கருவி. அந்த மொழிதான், ஒரு குழந்தையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ''அம்மா எனக்கு பசிக்குது... பப்பு சாதம் தா'' என்று தன் பசியை, தன் தேவையை, தான் நினைக்கும் விஷயத்தை அம்மாவிடமோ... அப்பாவிடமோ சொல்ல உதவுகிறது. மொழி என்பதை, சின்னக் குழந்தை வாய் வார்த்தைகளாகத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. பிறவியிலேயே பேசும் திறனற்ற குழந்தைகள்... கண் ஜாடையாலோ, முக பாவனைகளாலோ, தொட்டுச் சொல்வது போலவும் சொல்லலாம். ஆனால், தான் நினைக்கும் விஷயத்தை... சரியாகவும், முழுமையாகவும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அந்த வயதிலேயே வெளிப்படுத்தும் திறமை வளர்ந்திருக்கிறதா என்பதைத்தான் பெற்றோர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
இங்கே அதைக் கவனிக்கத் தவறினால்...? குழந்தையின் கற்கும் திறனும், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறனும், கருத்துகளைப் பரி மாற்றம் செய்யும் எழுத்தாற்றல், பேசும் திறன் எல்லாம் பாதிக்கப் படலாம். இந்தத் திறன்கள்தானே ஒரு குழந்தையை வெற்றி படிக்கட்டுகளில் ஏற்றி விடும் தாரக மந்திரங்கள்! குட்டிப் பாப்பா ஒரு சிட்டுக் குருவி பறப்பதை தன் மொட்டுக் கண்களால் ரசித்து, அது சிறகை விரித்து படபடவென பறக்கும் ஓசையை காதால் வாங்கி, 'இது எப்படி இவ்வளவு அழகா பறக்குது?!’ என்று ஆச்சர்யப்பட்டு சிந்திக்கவும், புரிந்து கொள்ளவும் அந்த அழகுச் செல்லத்தின் மூளையில் இதற்கென 'வெர்னிக்கஸ்' (Wernicke's) என்ற பகுதி இருக்கிறது. இப்படி புலன்கள் ஐந்தும் உணரும் விஷயத்தை, ''நான் சிட்டுக் குருவி பறக்கறதைப் பார்த்தேனே!'' என்று சந்தோஷமாக தன் உணர்வை வெளிப்படுத்துவதற்கு 'புரோக்காஸ்' (Broca's) என்றறொரு பகுதியும் மூளையில் உண்டு.
மேற்சொன்ன இரு பகுதி களும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஒரு குழந்தையின் மொழியும், பேச்சும் சரியாகவும் முழுமையாகவும் அமையும். உதாரணமாக... உங்கள் சுஜ்ஜிம்மாவிடம், ''அண்ணாவோட லஞ்ச் பேக்கை எடுத்துட்டு வாடா செல்லம்'' என்று சொன்ன வுடன் குழந்தை புரிந்து கொண்டு லஞ்ச் பேக் இருக்கிற இடத்துக்கு சென்று பேக்கை எடுத்து வந்து, ''அம்மா இந்தாங்க'' என்று சொன்னால்.... சந்தோஷம். குழந்தைக்கு நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும், 'அம்மா இந்தாங்க’ என்று சொன்ன பதிலில் அவளின் மொழியறிவும் சரியாக இருக்கிறது. அதாவது, 'வெர்னிக்கஸ்' மற்றும் 'புரோக்காஸ்' ஆகிய இரண்டு பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாறாக, நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், அந்தத் துறுதுறு குழந்தை திருதிருவென விழித் தால்... குழந்தையின் மொழியறிவு சரியாக இல்லை என்று அர்த்தம்.
குழந்தையின் உள்ளார்ந்த அறிவு... வீடு, அக்கம் பக்கம், அம்மா, அப்பா போன்ற சுற்றுப்புறங்களும்தான் மொழியறிவை வளர்க்கும் காரணிகள். மொழி, பேச்சு போன்றவற்றைத் தூண்டும் விதமாக சுற்றுப்புறம் இருக்க வேண்டியது அவசியம். அது சரியாக அமையவில்லை என்றால், அவளின் பேச்சுத் திறனும் மொழியறிவும் பாதிக்கப்படும். மொழியறிவு பாதிக்கப்படுவதற்கு சுற்றுப்புறம்தான் காரணம் என்றால், அந்த சுற்றுப்புறத்தை சீர் செய்தால், சுஜ்ஜிமாவுக்கு பேச்சு ஒரு தடை இல்லை. சுற்றுப்புறம் மிக நன்றாக அமைந்தும் சுஜ்ஜிம்மாவுக்கு பேசுவது புரியவில்லை என்றால்... அதன் மன வளர்ச்சி யில் (மூளை வளர்ச்சியில் அல்ல) பிரச்னை என்று அர்த்தம்.
குழந்தையிடம் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், குழந்தை நம்மிடம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாத பெரும் சொத்து. அந்த சொத்தைக் கூர்ந்து கவனிப்பது... குழந்தையை வாழ்க்கை யின் உயரத்துக்கு உந்தித் தள்ளும் மகாசக்தி என்பதால் மழலை சொற் களை, அழகிய கண், கை, முக பாவனைகளை ஆழ்ந்து கவனிப்போம்.
- வளர்ப்போம்...

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...


Source - Vikatan Magazine

01-பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

மாதம் ரூ.45 ஆயிரம் கைகொடுத்த கார்மென்ட் பிஸினஸ் !
கு.ராமகிருஷ்ணன்
சாமான்ய பெண்களின் சாதனை கதை
தன் ஊரான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத தொழில்தான் என்றாலும்கூட, தனித்துவமான பார்வையோடும்... நுட்பமான வியூகத்தோடும் கார்மென்ட்ஸ் தொழிலை கையிலெடுத்து, தான் ஒரு வெற்றிப் பெண்மணி என நிரூபித்துக் காட்டிய லோகநாயகி பற்றி, 'மனது வைத்தால்... 'மைனஸ்’கள் 'ப்ளஸ்’ஸாகும்!’ என்ற தலைப்பில் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். நிறைவான லாபம் பார்க்கும் லோகநாயகி தான் சந்தித்த சவால்களையும், இத்தொழிலில் கால் பதிக்க நினைப்பவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் தொடர்கிறார் இங்கு...
''சொந்தமா ஒரு தொழில் தொடங்கலாம்ங்கற எண்ணம் வந்தது. ஆனாலும், எந்தத் திசையில போறதுனு தெரியல. 'எனக்குத் தையல் தெரியும்ங்க’னு கணவர்கிட்ட சொன்னப்போ, 'எனக்கும் திருப்பூர்ல கொஞ்சநாள் வேலை பார்த்த அனுபவமிருக்கு’னு முன் வந்தார். 'அப்போ எக்ஸ்போர்ட் கம்பெனிகள்ல ஆர்டர் எடுத்து, பெரிய அளவுல செய்யலாம்ங்க’னு நான் சொன்னப்போ, 'ஆரம்பத்துலயே அகலக்கால் வேணாமே’னு தயங்கினார்.
'தெளிவான திட்டமும், தேவையான உழைப்பும் இருந்தா பயம் வேண்டாம். இதுக்காக நம்ம கைப்பணத்தைப் போட்டு பொருட்களை உற்பத்தி பண்ணிட்டு, விற்பனைக்காக தவிக்க வேண்டியதில்ல. எக்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்களே மொத்தமா துணி, நூல் எல்லாம் கொடுத்துடுவாங்க. அவங்க சொல்ற அளவுல துல்லியமா, நேர்த்தியா தைச்சுக் கொடுத்தாலே போதும். இங்க வேலைக்கும் நிறைய ஆட்கள் கிடைப்பாங்க. கண்டிப்பா இந்தத் தொழில்ல பெரிய அளவுல சாதிக்க முடியும்'னு அவர்கிட்ட எடுத்துச் சொன்னேன்... புரிஞ்சுக் கிட்டார். ஆனா, இதுக்கு 4 லட்சம் ரூபாய் தேவை... முதலீட்டுக்கு எங்க போறதுங்கற ஒரு கேள்வி, ரெண்டு பேர் மனசுலயுமே ஒரு சிறு தடையை ஏற்படுத்தப் பார்த்துச்சு'' என்று சொல்லும் லோகநாயகிக்கு, அப்போதுதான் பாதையைக் காட்டியிருக்கிறது, நாளிதழில் வெளியான ஓர் அறிவிப்பு.
'' 'சிறு, குறு தொழில்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான திட்டம்’ங்கற அறிவிப்பை பார்த்துட்டு, உடனடியா விண்ணப்பம் போட்டேன். கும்பகோணம், இந்தியன் வங்கியில நேர்முகத் தேர்வு நடந்துச்சு. ஒரு மாசம் மேலாண்மைப் பயிற்சி, நிர்வாகம் தொடர்பா நிறைய கத்துக்கிட்டேன். அதுக்கிடையில கரூர்ல உள்ள ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில ஒரு வாரம் பயிற்சி. நாலு மாத காத்திருப்புக்கு அப்புறம் மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ்னு அடுத்தடுத்து தொடர்ச்சியா பல நகர்வுகள். 'பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பக'த்துல திட்ட இயக்குநரா இருக்குற ராமசாமி தேசாய் உதவியோட, தெளிவான திட்ட அறிக்கையை இந்தியன் வங்கியில சமர்ப்பிச்சேன். எல்லாம் முடிஞ்சதும் லோன் 'ஓகே’ ஆச்சு!'' என்பவர் தனது நிறுவனத்துக்கான இடம், இயந்திரங்கள், பணியாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி, வெற்றிகரமாக தொழிலைத் தொடங்கியிருக்கிறார்.
''பெண் பணியாளர்களுக்கு வசதியா, பேருந்து நிலையப் பகுதியில உள்ள இந்தக் கட்டடத்தை வாடகைக்குப் பிடிச்சி, 25 இயந்திரங்களோடு நிறுவனத்தைத் தொடங்கினோம். ஆரம்பத்துல ஏகப்பட்ட பின்னடைவுகள்... தொடர்ச்சியா ஆறு மாசம் வரைக்கும் நஷ்டம். மின்சாரத்துல இயங்கற அதிநவீன இயந்திரங்களா இருந்ததுனால, பணியாளர்களால வேகமா வேலை பார்க்க முடியல. வாடகை, மின் கட்டணம், போக்குவரத்து செலவுகளுக்கே கட்டுப்படியாகல. ஆனாலும் அவங்க படிப்படியா, திறமையா வேலை பழகிகிட்டதால... வேகம் அதிகமாகி, நிறுவனம் பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது. டவல், கிச்சன் ஏப்ரான், கிளவுஸ், ஜன்னல், கதவு விரிப்புகள், சேர் குஷன் துணி, பிளேட் விரிப்பு, மேஜை விரிப்பு, இன்னும் பலதரப்பட்டதையும் தைச்சு கொடுக்க ஆரம்பிச்சோம். இப்போ அது ஏறுமுகத்துல தொடர்ந்துட்டு இருக்கு'' என்று முகம் கொள்ளாத மகிழ்ச்சியோடு சொன்னவர்,
''இந்த அயிட்டங்கள் எல்லாமே வெளிநாடுகள்ல உள்ள ஸ்டார் ஹோட்டல்களுக்காக ஏற்றுமதி ஆகக்கூடியது. அதனால, எக்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்க சொல்ற அளவுல இருந்து ஒரு இன்ச் அதிகமாகவோ குறைவாகவோ போகக் கூடாது. சின்ன பிசிறுகூட இருக்கக் கூடாது. ரொம்பவே கவனமா இருக்கணும். இல்லைனா... எக்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்க நமக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. நாங்க ரொம்பவே நேர்த்தியா செஞ்சு கொடுக்குறதுனாலயும், சொன்ன நேரத்துக்கு சரியா முடிச்சுக் கொடுக்குறதுனாலவும், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தொழிலை தொடங்கி, கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகுது. 17 பேர் வேலை பார்க்கறாங்க. 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல மாசா மாசம் லாபமா கிடைக்குது. சாதிச்சுட்ட சந்தோஷம் தினமும் கிடைக்குது!''
- உழைப்பும், முன் கணிப்பு ஆற்றலும்தான் லோகநாயகியை இந்தளவுக்குப் பெருமிதப்பட வைத்திருக்கின்றன!
படங்கள்: கே.குணசீலன்