Thursday, July 28, 2011

குழந்தைகள் அடம்பிடிக்கலாம்! அம்மா..?

குழந்தைகள் அடம்பிடிக்கலாம்! அம்மா..?

கவின்மலர்
ஓவியம் : ஹாசிப்கான்
டந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டபோது,  'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம், உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன் பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத் திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.
ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.  டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும், மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா?
இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக் கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின் 109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது.
ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, ''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.
கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?
''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப் புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க் கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை வழங்காவிட்டால், இது நாள் வரை
பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.
''நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல் அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81 பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.
ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும் நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!

Source - Vikatan Magazine

தா.கி-யைக் கொன்றோம் என்று எழுதியது எஸ்ஸார் கோபியா?

நில மோசடி விவகாரங்களில் சிக்கி, கைது​கள், ரெய்டுகள் நடக்கும் நேரத்​தில், கடிதப் புயல் ஒன்று மதுரை தி.மு.க-வைப் புரட்டி எடுக்கிறது. தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கடிதம் இப்போது போலீஸ் கையில்!
 'நான் என் உயிருக்கும் மேலாக நினைத்துக்கொண்டு இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கு தம்பி 'எஸ்ஸார்’ கோபி எழுதிக்கொள்ளும் உள்ளத்தின் வெளிப்​பாடு’ என்று நயமாக ஆரம்பிக்கும் அந்தக் கடிதம் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அழகிரிக்காக கோபியும் அவரது குடும்பத்​தாரும் செய்த தியாகங்களை(!) சொல்லும் அந்தக் கடிதத்தில், தா.கிருட்டிணன் கொலை வழக்கு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்தும் எழுதப்பட்டுஇருக்கிறது.
'தங்களை (அழகிரி) கட்சியைவிட்டு நீக்கிய நேரத்தில் என்னுடைய ஏரியாவில்தான் முதன் முதலில் பஸ்ஸை எரித்தோம். சீனிவேல் (முன்னாள் அ.தி.மு.க.) எம்.எல்.ஏ. அலுவலகத்தை எரித்தது, அக்கினிராஜ் (முன்னாள் தி.மு.க. எம்.பி.) வீட்டில் காரை எரித்தது, பி.டி.ஆர். அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்தது எல்லாம் நீங்கள் சொல்லி நாங்கள் செய்தது. கடைசியாக தா.கி. கொலை!
இந்த வழக்கில் நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் ஆனால், அதுபற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியாது என இப்போது நினைக்கிறேன். எதெற்கெடுத்தாலும் நண்பர் (பொட்டு) சுரேஷ், 'உங்கள் குடும்பத்துக்கு ஒரு பதவி கொடுத்தாகிவிட்டது. உங்கள் கோட்டா ஓவர்.’ என்கிறார். அப்படிப் பார்த்தால், தளபதி தங்கைக்கு நகராட்சித் தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. ஸீட்; தோற்றதும் மாவட்டச் செயலாளர் பதவி. கவுஸ் பாஷாவுக்கு துணை மேயராக இருக்கும்போதே, ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ. பதவி. இவர்கள் எல்லாம் உங்களுக்காக அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்கள்? யாரோ ஒருத்தரை திருமங்கலத்தில் (இடைத் தேர்தலில்) நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்? இன்று காலை (16.12.08) உங்கள் வீட்டுக்கு வந்தேன். நீங்கள் இருந்துகொண்டே, 'இல்லை’ என்று சொல்லிவிட்டீர்கள். நான் பதவி கேட்கும்போதெல்லாம் தட்டிக் கழிக்கிறீர்கள்..
- இப்படிப் போகும் அந்தக் கடிதத்தின் முடிவில் 'இனிமேல் நிம்மதியாக என் மனைவி குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். மனதில் பட்டதை எழுதிவிட்டேன். நான் எழுதியதில் ஏதா​வது அண்ணன் மனம் புண்படும்படி இருந்தால், என்னை மன்னித்துவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்​கொள்கிறேன். அன்புடன் உங்கள் நலம் விரும்பும்’ என்று முடிந்து அடியில் எஸ்ஸார் கோபியின் கையெ​ழுத்தும் இருக்கிறது.
கடிதம், திருமங்கலம் இடைத்தேர்தல் சமயத்தில் எழுதப்பட்டதுபோல் செல்கிறது. அப்போது திருமங்கலம் தொகுதியைத் தனக்காகக் கேட்டு அழகிரி​யிடம் போராடினார் கோபி. ஆனால், பொட்டு சுரேஷ் உள்ளே புகுந்து, தன் கூட்டாளியான தாய் மூகாம்பிகை சேதுராமனின் உறவினரான லதா அதியமானை திடீர் வேட்பாளர் ஆக்கினார். அதில் இருந்தே கட்சியில் பட்டும்படாமல் இருந்த கோபி, சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டார். ஆனால், அந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டார்கள்.
அண்மையில் அட்டாக், பொட்டு, எஸ்ஸார், தளபதி என அத்தனை பேர் மீதும் வழக்குகள் வரிசை கட்டின. இதில் மற்றவர்களுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபிக்கு மட்டும் 'ஜூலை 26-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது’ என முன் ஜாமீன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் எஸ்ஸாரின் கடிதம் பரபரப்பைப் பற்றவைத்து இருக்கிறது. கடந்த 20-ம் தேதி எஸ்ஸார் வீடுகளில் நடந்த ரெய்டுகளுக்கு பிறகே இந்தக் கடிதம் லீக் ஆகி இருப்பதால், எஸ்ஸார் வீட்டில் இருந்துதான் கடிதம் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது மீடியாக்களின் யூகம். ஆனால், இது குறித்து நம்மிடம் பேசிய எஸ்ஸாரின் வக்கீல் ராமச்சந்திரன், ''ரெய்டின்போது எடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வி.ஏ.ஓ. முன்னிலையில் பட்டியல் இட்டுக் கொடுத்து இருக்கிறது போலீஸ். அந்த லிஸ்ட்டில் இந்தக் கடிதம் இல்லை. இப்போது ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இப்படி ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறது போலீஸ். இது உண்மையான கடிதம்தானா என்பதைத் தடய அறிவியல் சோதனை நடத்திக் கண்டுபிடிக்க வேண்டும்!'' என்கிறார். ''பொட்டு சுரேஷின் வீட்டில் இருந்து இதைக் கைப்பற்றி இருக்கலாம்...'' என்று மதுரை தி.மு.க-வினர் சொல்​கிறார்கள்.
இந்தக் கடிதத்தின் உண்மைத்​தன்மையை அறிய எஸ்ஸார் கோபியின் அண்ணன் மருதுவை நாம் தொடர்புகொண்டோம். ''இன்னிக்கு நாங்க நல்ல நிலையில் இருக்கோம்னா, அதுக்குக் கார​ணமே அழகிரி அண்ணன்தான். இப்படி ஒரு கடிதத்தை என் தம்பி நிச்சயமா எழுதி இருக்க மாட்டான். அண்ணன் எங்க மேல்வெச்சு இருக்கிற நல்ல அபிப்பிராயத்தைக் கெடுக்குறதுக்காக, இந்த டுபாக்கூர் கடிதத்தை வெளியிட்டு இருக்காங்க. இதுக்கு எங்க ஆட்களே உடந்தையா இருந்து இருக்காங்க...'' என்றார்.
கோபியைத் தங்கள் வசம் வைத்துக்​கொண்டு அழகிரிக்கு டார்ச்சர் கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் அழகாகக் காய் நகர்த்துகிறார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எஸ்ஸார் கோபியை போனில் தொடர்புகொண்டோம்.
''அண்ணனோட (அழகிரி) பொதுக் குழுவுக்கு வந்திருக்கேண்ணே...'' என்று கூலாக ஆரம்பித்தவர், ''அழகிரி அண்ணனோட உதவி இல்லைன்னா, இன்னிக்கி நாங்க நல்லா இருந்திருக்க மாட்டோம். நேர்மையான அதிகாரிகள்னு சொல்றாங்களே... நமக்குப் பிரச்னை இருக்காதுனு நெனச்சேன். ஆனா, போலீஸ் நடந்துக்குற விதம் சரி இல்லை. ரெய்டுங்கிற பேர்ல எங்க வீட்டுக் குழந்தைகளைக்கூட எட்டு மணி நேரமா வீட்டுக்கு வெளியில் நிறுத்திவெச்சாங்க. சாவியைக் கேட்டாலே, குடுத்து இருப்பாங்க. ஆனா, அதை விட்டுட்டு பீரோவை உடைச்சு இருக்காங்க. எல்லாத்துக்கும் நாங்க வருமான வரி கட்டி முறையா வெச்சிருக்கோம்.
எங்களை எதுலயும் சிக்கவைக்க முடியலைன்னதும், போலியா ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்காங்க. என் மீது எந்த வழக்கும் இல்லாதபோது, இதை எல்லாம் நாங்கதான் செஞ்சோம்னு எவிடென்ஸுக்கு எழுதி வெப்போமோ? அழகிரி அண்ணன்கிட்ட ஏதாச்சும் கேக்குறதா இருந்தா, நான் நேராவே கேட்டுட்டுப் போறேன்; எதுக்கு லெட்டர் போட்டுக் கேக்கணும்? கட்சியில் வாய்ப்பு கேட்குறது இயல்புதான். வாய்ப்புக் கிடைக்காதபோது, வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக கட்சியைக் காட்டிக் குடுத்துட்டு ஓடிருவாங்களா? என்னையும் அழகிரி அண்ணனையும் பிரிக்கிறதுக்கு போலீஸை வெச்சு அ.தி.மு.க. நெருக்கடி குடுக்குது. இதைவிடக் கொடுமைகளை எல்லாம் அனுபவிச்ச எங்களுக்கு, இது சாதாரணம். 'கடிதத்தை நான் எழுதலை’னு அழகிரி அண்ணன்கிட்ட சொன்னேன். அவரும் 'சரி விடுப்பா’னு சொல்லிட்டார்...'' என்றவரிடம்,
''கடிதத்தின் அடியில் இருக்கும் கையெழுத்து உங்களுடையது மாதிரித்தானே தெரியுது..?'' என்று கேட்டதற்கு, ''கையெழுத்து என்னது மாதிரித்தான் இருக்கு. போலிக் கையெழுத்து போட்டு இருக்கணும்; இல்லாட்டி வேற எதுலயாவது இருந்த என்னோட கையெழுத்தை வெட்டி இதில் சேர்த்து இருக்கணும். நாங்கள் அண்ணனை நெருங்கிடக் கூடாதுன்னு ஒரு சிலர் நினைக்கிறாங்க. எங்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்கக் கூடாதுனு நினைக்கிற அவங்களேகூட இந்த சதிக்கு உடந்தையா இருந்து இருப்பாங்களோனு சந்தேகம். யார் என்ன செஞ்சாலும், எங்களுக்கும் அழகிரி அண்ணனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு வராது; வரவும் விட மாட்டோம்!'' என்று அழுத்தம் கொடுத்தார்.
இந்தக் கடிதம் எங்கே இருந்து எடுக்கப்பட்டது என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. விசாரணை தொடர்கிறது. கடிதத்தைப்போல இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் வெளியில் வரலாம்...'' என்று சூசகமாகச் சொன்னார்கள்.
அழகிரி வட்டத்தில் எஸ்ஸார் பிரதர்ஸ் அதி​காரத் தோரணையுடன் திரிவது மதுரை புள்ளி ஒருவருக்குப் பிடிக்கவில்லை. எஸ்ஸார் பிரதர்ஸைத் தட்டிவைப்பதற்காக தி.மு.க-வில் தனக்கு விசுவாசமான மூன்று முக்குலத்துச் சிங்கங்களை கொம்பு சீவினார் அவர். இது தெரிந்து எஸ்ஸார் பிரதர்ஸ் அலர்ட்டாகி ஒதுங்கினார்கள். தேர்தல் பிரசாரத்தின்போதே மதுரை அரசியல் தாதாக்கள் சிலர் தங்களைக் காத்துக்கொள்வதற்காக அ.தி.மு.க-வுக்குத் தூது அனுப்பினார்கள். ஒரு சிலர், 'அப்ரூவராக மாறவும் தயார்...’ என்று பதறினார்கள். இவர்களில் முக்கியமான மூன்று நபர்களை மட்டும் தேர்தல் பிரசாரத்துக்காக ஜெயலலிதா திருச்சி வந்திருந்தபோது, சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. அந்த நேரத்தில், 'உங்களுக்கு தி.மு.க-வில் என்ன பிரச்னை? எதற்காகக் கட்சி மாறுகிறீர்கள்? என்று அ.தி.மு.க. தரப்பில் விலாவாரியாக விசாரணை நடத்தினர். அப்படியாவது அடைக்கலம் கொடுப்பார்களா என்ற ஆசையில் மதுரை தாதாக்கள் நங்கூரம் மாதிரி நாலு 'பிட்’டைப் போட்டனர். அவை அனைத்தையும் அப்போது வீடியோ எடுத்துவைத்தது அ.தி.மு.க. டீம். எஸ்ஸார் கடிதத்தைத் தொடர்ந்து அந்த வீடியோ ஸ்டேட்மென்ட்களும் விரைவில் ரிலீஸ் ஆகலாம்.
'ஒப்பனையும் கற்பனையும் கலைந்துவிடும்... இறுதியில் உண்மையும் உழைப்புமே வெற்றி பெறும்.’ - எஸ்ஸார் கோபி இந்த ஆண்டு அனைவருக்கும் வழங்கிய காலண்டரில் இருக்கும் வாசகங்கள் இவை! யாரை நினைத்து இந்த வாசகங்களைப் போட்டாரோ... தெரியவில்லை. மதுரை தி.மு.க-வில் ஒப்பனையும் கற்பனையும் கலையும் நேரம் இப்போது!
- குள.சண்முகசுந்தரம், டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Source - Vikatan Magazine
தா.கி-யைக் கொன்றோம் என்று எழுதியது எஸ்ஸார் கோபியா?


அழகிரியை விழுங்கும் அ.தி.மு.க. அதிரடிகள்

நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?

நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?

ஸ்பெக்ட்ரம் புயலில் காங்கிரஸ்
தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.
 இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசாஜி, கனிமொழிஜி, தயாநிதிஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜி’ சிக்குகிறார் என்கிறார்கள். அவர், ப.சிதம்பரம்ஜி.
4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும். என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.
பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தோம். முதலில் ப.சிதம்பரம் மீதான நான்கு குற்றச்சாட்டுகளைப் பட்டியல் இட்டார்.
குற்றச்சாட்டு - 1:  2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!’ என்று பிரதமரே சொல்கிறார். இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?
குற்றச்சாட்டு - 2 :  டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது? ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே  இதற்கு முழுப் பொறுப்பு?
குற்றச்சாட்டு - 3:  ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார். 'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும்தான்’ என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன’ என்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?
குற்றச்சாட்டு-  4 :  தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?'' என்றார் ஆவேசமாக.
இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!
- சரோஜ் கண்பத்
படங்கள்: முகேஷ் அகர்வால், அர்ஜுன் பவார்

Tuesday, July 26, 2011

ஏலம்... எப்படி எடுக்கணும்?

ஏலம்... எப்படி எடுக்கணும்?

'பொது ஏல அறிவிப்பு’  செய்தித்தாள்களில் இப்படி வரும் விளம்பரங்களை தினம் தினம் பார்த்திருப்பீர்கள். வங்கிகள் ஏலத்திற்கு விடும் பொருட்களை நம்மவர்களில் பலர் வாங்க நினைப்பதே இல்லை. காரணம், அதனால் பெரிதாக லாபம் இருக்காது என்று நினைத்துவிடுவதுதான். ஆனால், விஷயம் தெரிந்த சிலர் ஏலத்திற்கு வரும் சொத்துக்களை மட்டுமே குறி வைத்து வாங்குகிறார்கள்.
பொ
துவாக வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன் திரும்ப வராதபோது பிணையாக வைக்கப்பட்ட வீட்டையோ அல்லது நகையையோ ஏலம் விட்டு, தங்களுக்கான கடன் தொகையை எடுத்துக் கொள்ளும். இந்த சொத்துக்களை மார்க்கெட் ரேட்டைவிட குறைவான விலையில், எந்த வில்லங்கமும் இல்லாமல் வாங்கலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இப்படி ஏலத்துக்கு வரும் சொத்துக்கள் வீடு, தங்க நகைகள் என மதிப்புமிக்கதாக இருப்பதால், அவற்றை ஏலம் எடுக்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு அலசல்
வீடு ஏலம்...
வீட்டின் மதிப்பைவிட கடன் தொகை எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். கடன் தொகை திரும்ப வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் வங்கிகள் இருக்கும் என்பதால், பெரிய அளவில் விலையை ஏற்ற மாட்டார்கள்.
சில நேரங்களில் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு ஏலத் தொகை நிர்ணயிக்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கிதான் சொத்து மதிப்பீட்டாளராக இருக்கும் என்பதால், அது சொல்லும் சந்தை மதிப்பும் நம்பகமானதாகவே இருக்கும். அதுவும் 1520% வரை விலை குறைவாகவே இருக்கும்.
 'ஃபுல் ஃபர்னிஷ்டு’ வீடுகள் ஏலத்தில் எடுக்கும்போது, சில நேரங்களில் சந்தை மதிப்புக்கும் குறைவாகவே கிடைக்கும்.
எல்லா ஆவணங்களும் வங்கியிடம் இருக்கும் என்பதால், ஏலத்தில் வாங்கும் வீட்டின் அனைத்து ஆவணங்களையும் வங்கியே கொடுத்துவிடும்.
வங்கியிடமிருந்து வாங்குவதால் பொதுவாக எந்த வில்லங்கமும் இல்லாமல்தான் இருக்கும்.
ஏலத்தில் எடுத்த வீட்டை வைத்து, திரும்பவும் வங்கிக் கடன் பெறமுடியும். சில வங்கிகள் ஏலத்தில் வீடு வாங்குவதற்குகூட கடன் வழங்குகின்றன.
ஏலத்தில் வாங்கிய வீட்டைப் பதிவு செய்ய குறிப்பிட்ட வங்கியின் மேலாளரே பத்திரப்பதிவில் கையப்ப மிடுவதால் மோசடிகள் நடக்க வாய்ப்புக் குறைவு.
வெளிப்படையான விலை, வங்கி வழி பணப் பரிமாற்றம் என்பதால் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லிவிடலாம்.-
 மொத்த கடன் தொகையிலிருந்தே ஏல கேட்புத் தொகை தொடங்குவதால் நமக்கு ஏற்ற விலைக்கு வரும்போது வாங்கி விடலாம்.
ஏல முறையில் வாங்கும் போது இடைத்தரகர்கள், கமிஷன் தொந்தரவுகள் இருக்காது என்பது சூப்பர் பிளஸ் பாயின்ட்.

 ஏல முறை!
பொதுவாக தனியார் வங்கிகள் தாங்கள் கையகப் படுத்தும் வீடுகளை நேரடி யாகவே ஏலம் விடுகின்றன. கூட்டுறவு வங்கிகள் எனில் முறையான அரசு அங்கீகாரம் பெற்ற ஏலதாரர்கள் மூலம் ஏலம் விடுகின்றன. வங்கி நிர்ண யித்த தொகையைவிட அதிகமாக அல்லது ஏலம் கேட்கும்போது யார் அதிகமாகக் கேட்கிறார் களோ அவர்களுக்கே வீடு தரப்படும். இது சம்பந்தமாக செய்தித்தாள்களில் அறிவிப்பு வரும்போது ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவதாக வங்கியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
 தகுதி!
ஏலத்தில் கலந்து கொள்ள எந்த தகுதி வரம்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
ஏலத்துக்கு வரும் வீட்டை ஏலம் எடுப்பவர் களுக்கு காண்பிக்கவும் செய்வார்கள்.
ஏல கேட்பில் கலந்துகொள்ள கட்ட வேண்டிய தொகையை, வங்கி வரைவோலை வழியாகத்தான் கட்ட வேண்டும். சில சமயங்களில் இந்த தொகை ஐம்பதாயி ரத்திற்கு மேற்பட்டால் கண்டிப்பாக வங்கிக் கணக்கு இருந்தால்தான் வரைவோலையே கிடைக்கும்.
அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு வருமானவரி கணக்கு எண் இருக்க வேண்டும்.
நகை ஏலம்...
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏலத்தில் வரும் நகைகளை குறைவான விலையில் வாங்கிவிடலாம் என்பது சிறப்பான விஷயம். ஏலத்தில் நகைகளை வாங்குவது எப்படி, அதற்கான வழிமுறைகள் எப்படியெல்லாம் பின்பற்றப் படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்...
அடகுக்கு வரும் நகைகளை உடனே ஏலத்திற்கு விடுவதில்லை. நான்கு முதல் ஐந்து முறையாவது நோட்டீஸ் அனுப்பி, நகை அடகு வைத்திருப்பவர்களிட மிருந்து உரிய பதில் வர வில்லை என்றால் மட்டுமே ஏலம் விடப்படும் என்பதால் இந்த நகைகளுக்கு பிற்காலத்தில் எந்த சிக்கலும் வராது.
நகைகள் ஏலத்திற்கு விடப்படும் அறிவிப்பை நாளிதழ் மூலம் செய்வார்கள்.
அதில் நாள், ஏலம் விடும் இடம், ஏலமுறை குறிப்பிடப் படும். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட வங்கிகளி லேயே ஏலம் நடைபெறும்.
ஏலத்தில் பங்குபெற விரும்புபவர்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன்பே குளோஸ்டு கவர் படிவத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும்.
நகையை அடகு வைத்தவர் கட்டவேண்டிய அசல், வட்டி மற்றும் அபராதத் தொகை என அனைத்தையும் சேர்த்துதான் ஏலத் தொகை நிர்ணயிக்கப்படும். அன்றைய தினத்தில் தங்கத்தின் விலை என்னவோ, அதைத் தாண்டாத அளவுக்கு இந்த தொகை இருக்கும்.
ஏலம் நடக்கும்போது, நாம் விரும்பும் விலையைக் கேட்கலாம். வங்கிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்து விட்டால் பணத்தை பெற்றுக் கொண்டு நகையைத் தந்துவிடுவார்கள். ஆனால், உடனடியாகக் கிடைக்காது. முதலில் ஏலத் தொகையில் 25% கட்ட வேண்டும்.
ஏலம் நடைபெற்றது பற்றி சம்பந்தப்பட்ட வங்கி அதன் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து, சரியான முறையில்தான் ஏலம் நடந்தது என ஒப்புதல் அளித்த பிறகே மீதமுள்ள தொகையை (75%) வாங்கிக் கொண்டு நகையைத் தருவார்கள். ஏலத் தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
நகைக்கு அளிக்கப்பட்ட கடன் தொகை போக, ஏலம் நடத்தியதற்கான செலவுத் தொகையையும் கழித்து பாக்கித் தொகை இருந்தால் அதனை நகை அடகு வைத்த உரிமையாளருக்கு வங்கி சேர்த்துவிடும்.
 ஆதாயம்!
புதிதாக நகைகள் வாங்கினால் சேதாரம், செய்கூலி போன்றவை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஏலத்தில் நகை வாங்கினால் பண விரயத்தைத் தவிர்க்கலாம். தவிர, இன்றைய மார்க்கெட் விலையைவிட குறைவான விலையில் வாங்கலாம்.
ஏலத்தில் எடுத்த நகைகளில் டிசைன்கள் பிடிக்கவில்லை என்றால், அதை மார்க்கெட் ரேட்டுக்குக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்.
அதிக பணத்தைக் கொட்டி கொடுத்தால்தான் அது நல்ல பொருள் என்று நாம் நினைக்கிறோம். ஏலத்திற்கு வரும் பொருளை இளக்காரமாக நினைப்பதை விட்டுவிட்டு, குறைந்த விலையில் அதிக லாபம் தரக்கூடிய சொத்துக்களை வாங்க ஒரு நல் வாய்ப்பாகவே கருதலாம்!
பானுமதி அருணாசலம், நீரை.மகேந்திரன்.