Wednesday, July 6, 2011

மலைக்க வைக்கும் பத்மநாப சுவாமி திருக்கோயில்

மலைக்க வைக்கும் பத்மநாப சுவாமி திருக்கோயில்

ஆக்ஸிஜன் செலுத்திய அறைக்குள் நுழைந்தால்.. அறை முழுக்க அத்தனையும் தங்கம்!
ந்தியாவையே, திருவனந்தபுரம் நோக்கித் திரும்பிப் பார்க்க​வைத்து​விட்டார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான சுந்தர்​ராஜன்!
கேரள உயர் நீதிமன்றத்தில், 'பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும். உள்ளே இருக்கும் நகைகளைக் கணக்கெடுக்க வேண்டும்!’ என அவர் அதிரடி வழக்கு தொடர... 'கோயிலை அரசே ஏற்று நடத்தலாம்’ என உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தப் பழைமையான கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளை, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள், கோயிலை அரசாங்கம் கையகப்படுத்த உயர்நீதி​மன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதித்தனர். ஆனாலும், 'ரகசிய அறைகளில் பாதுகாக்கப்படும் ஆபரணங்களையும், மதிப்பு வாய்ந்த பொருட்களையும் மதிப்பீடு செய்ய​லாம்’ என உத்தரவிட்டனர். இதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் என்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோர் தலைமை​யில் ஏழு பேர்கொண்ட குழுவை நியமித்தனர். இதை அடுத்துதான், கோயிலின் பாதாள அறைகளில் டன் கணக்கில் கிடந்த தங்கமும் வைரமும் அம்பலம் ஆனது. இதைப்பார்த்து நாடே ஆச்சர்யத்தில் மூழ்கிக்கிடக்கிறது!
இந்தக் குழு, ஜூன் 27-ம் தேதி முதல், ரகசிய அறைகளைத் திறந்து நகைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டது. ஒவ்வொரு அறையிலும் கொட்டிக்கிடக்கும் நகைகள், தங்கக் காசுகள், வைரம் உள்ளிட்ட பொருட்​களைப் பார்த்ததும் மலைத்துப்போனது கணக்கெடுப்புக் குழு.
அதில் இடம் பெற்ற அதிகாரிகளிடம் பேசியபோது, ''முதல் இரண்டு அறைகள் கடந்த 160 வருடங்களாகத் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. அடுத்த நான்கு அறைகளை கோயிலில் பூஜைகளைக் கவனிக்கும் பெரிய நம்பி, தெக்கெடம் நம்பி ஆகியோர் அவ்வப்போது திறந்து, அதில் இருக்கும் நகைகளை சுவாமிக்கு அணிவிப்பார்கள். அதனால், நீண்ட காலம் திறக்கப்படாத அறைகளில் ஏதாவது விஷ ஜந்துகள் இருக்கலாம் என்பதால், அவற்றை ஒதுக்கிவிட்டு வழக்கமாகத் திறக்கும் அறைகளை ஆய்வு செய்தோம். முதல் நாளில் மூன்றாவது அறையைத் திறக்க, அதில், தங்கத்தால் தகதகத்த 20 பெரிய குடங்கள், 340 சிறிய குடங்கள் இருந்தன. தங்கத்தில் செய்யப்பட்ட எழுத்தாணி, சிலைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களும் சிலைகளும் கொட்டிக்கிடந்தன. அடுத்த நாளில் இரு அறைகளில் இருந்த பொருட்களை மதிப்பீடு செய்தபோது... தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்ட ஆசனங்கள், குடம் குடமாகப் பொற்காசுகள், வைரம் பதிக்கப்பட்ட கலை நயம்கொண்ட பொருட்களும் குவிந்துகிடந்தன...'' என்கிறார்கள் வியப்போடு.
திருவாங்கூர் மன்னர் பரம்​பரை குறித்து அறிந்த வரலாற்று ஆய்வாளரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''அந்தக் காலத்தில் திருவாங்கூருக்குப் பக்கத்தில் இருந்த காயம்குளம், செம்ப​கசேரி, கோட்டயம், கொச்சி ஆகிய இடங்களின் மன்னர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றபோது, இந்த நகைகளை அள்ளிக்கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர். இடையில் மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் படையெடுப்பின்போது, அவர்களிடம் இருந்து இவற்றைப் பாதுகாக்க ரகசிய அறைகளில்வைத்து இருக்கிறார்கள்!'' என்றார்.
சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்ற முன்னாள்  நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ண அய்யர், ''கோயிலில் கிடைத்து இருக்கும் நகைகளைத் தனி நபர்கள் யாரும் பயன்படுத்த உரிமை இல்லை. இவற்றைப் பாதுகாக்க தனியாக ஓர் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அதன் பலன், ஏழை, எளிய மக்களைச் சென்றடையும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டி, ''நகைகள் அனைத்தும் கோயிலுக்கே சொந்தம். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று நகைகளைப் பாதுகாப்பதுபற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்வோம்!'' என்றார்.
கோயிலில் செல்வம் குவிந்து இருக்கும் காரணத்தால்,  இப்போது மக்கள் கூட்டம் அலை மோதுகிறது!
- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
உள்ளே சில சுவாரஸ்யங்கள்...
. இருட்டாக இருக்கும் பாதாள அறைகளின் உள்ளே பாம்புகள் இருக்கக்கூடும் என்ற அச்சம் இருந்ததால் ஊழியர்கள் ஜாக்கிரதையுடன் முதலில் உள்ளே சென்று பார்த்த பிறகே அதிகாரிகள் குழுவினர் நுழைந்தனர்.
. ஓர் அறையின் கதவில் பாம்பு சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. மிகவும் அச்சத்துடன் திறக்கப்பட்ட அந்த அறையில், தங்கமும் வைரமும் குவிந்து கிடந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.
. பாதாள அறை ஒன்றில் சுரங்கப்பாதை இருப்பதாகவும் அங்கே இருந்து கோவளம், சங்குமுகம், கொட்டாரம் மற்றும் குமரி மாவட்டத்தின் வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனைக்கு எல்லாம் செல்லமுடியும் என்று மக்கள் பேசிக்கொண்டனர். ஆனால், இதை கோயில் நிர்வாகமோ, ஆய்வுக் குழுவினரோ உறுதி செய்யவில்லை.
. பத்மநாப சுவாமி கோயில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயிலைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருக்கிறார். 1686-ல் தீ விபத்தில் கோயில் அழிந்துவிட்டதால் 1729-ல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மா கோயிலைப் புதுப்பித்தார்.
. திருவிதாங்கூர் ராஜாவான மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்ஜியம், செல்வம் முழுவதையும் பதம்நாப சுவாமி கோயிலுக்கு எழுதிக்கொடுத்து, தன்னுடைய தங்க வாளையும் சுவாமியின் பாதத்தில் வைத்தார். அதன் பின்னர் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் 'பத்மநாப தாசர்’ என்று அழைக்கப்பட்டனர்.
. பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட நகைகள், தங்க விக்கிரகங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றின் மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டி இருப்பதால்,  இதுவரையிலும் பணக்காரக் கோயில்களாகக் கருதப்பட்ட திருப்பதி மற்றும் பொற் கோயிலையும் முந்திவிட்டது, பத்மநாப சுவாமி திருக்கோயில்.

Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1


உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1

'பொத்தி' வளர்ப்பதில் பிரயோஜனம் இல்லை !
குழந்தை மனநல மருத்துவர்ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
'எம்பொண்ணு ஷாலினிக்கு 9 வயசாகுது டாக்டர். ஆனா... யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டேன்றா, வெளிமனுஷங்க யார் வீட்டுக்கு வந்தாலும்... ரூம்ல போய் ஒதுங்கறா...’
- இப்படி ஒரு கம்ப்ளைன்ட்டுடன் சமீபத்தில் ஓர் அம்மா என்னிடம் வந்தார்.
''உங்க குழந்தையை... சொந்தக்காரங்க வீட்டு விஷேசம், கோயில், பார்க்னு கூட்டிட்டுப் போவீங்களா..?'’ என்று கேட்டேன்.
சில நிமிடங்கள் மௌனமாக என்னைப் பார்த்தவர், ''இல்ல டாக்டர்... கொழந்தையை எங்கயும் வெளியவே போக விட மாட்டாங்க என் மாமியார். பொம்பளப் புள்ளைனு வீட்டுக்குள்ளயே பொத்திப் பொத்தி வெச்சுப்பாங்க'’ என்று பதில் தந்தார்.
இந்தப் பதிலில்தான் அவர் மகளின் பிரச்னைக்கான பதிலும் இருந்தது. ஒரு குழந்தையை, 'சொகுசாக வளர்க்கிறேன்... பொத்திப் பொத்தி வளர்க்கிறேன்’ என்று அக்கம் பக்கம், உறவினர்கள், பார்க், கோயில் என பொது இடங்களில் பழக அனுமதிக்காமல் இருந்தால், அதுவே அக்குழந்தையின் 'சமூக நடத்தை’யைச் சுருக்கிவிடும்.
அடுத்தவர்களுடன் எப்படி பேச வேண்டும், தன் வயதுக்கேற்ற ஒரு பிரச்னை வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும், என்ன மாதிரியான நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற 'உலக பொதுக் கல்வி’யை குழந்தைக்குக் கற்றுத் தரும் பள்ளி... சுற்றுப்புறமும், சமூகமும்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே!
இந்த உலக பொதுக்கல்வியை ஒரே நாளில் திடீரென கற்றுக் கொண்டுவிட முடியாது. அது ஒரு தொடர் கல்வி. உங்கள் குழந்தையை பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அழைத்துச் செல்கிறீர்கள். அப்போது, சாக்லேட் சாப்பிட்டு விட்டு பேப்பரை அங்கயே போடுகிறது குழந்தை. 'அம்மு, பேப்பரை அங்க போடக் கூடாது, குப்பைத் தொட்டியில போட்டுட்டு வாடா செல்லம்’ என்று சொல்லித் தருகிறீர்கள் அல்லவா? அந்த நிகழ்விலிருந்து 'பொது ஒழுங்கு’ என்றால் என்ன என்பதைக் குழந்தை கற்றுக்கொள்கிறது.
'பார்க்'கில் உங்கள் தோழியைப் பார்த்து கையசைத்து, சிரித்து, 'எப்படி இருக்கிறே வெண்ணிலா... அம்மா, அப்பாவெல்லாம் நல்லா இருக்காங்களா?’ என்று நலம் விசாரித்து, 'இது என் பொண்ணு விநோதினி’ என்று உங்கள் குழந்தையை அறிமுகப்படுத்திகிறீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் தோழியும் மீண்டும் அங்கு சந்திக்கும்போது உங்கள் குழந்தையும் உங்கள் தோழியைப் பார்த்துச் சிரிக்கிறது என்றால்... உங்கள் குழந்தை 'மற்றவர்களிடம் எப்படி அணுகுவது’ என்ற பாலபாடத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறது என்று அர்த்தம்.
அம்மா, அப்பா, தன் வீடு - இவற்றைத் தாண்டி வெளியுலகில் குழந்தை உலவவும் பழகவும் ஆரம்பிக்கும் கணத்தில்தான்... அதன் மனவளர்ச்சிக்கு ஏற்ப உலகத்தை புரிந்து கொள்கிறது. அப்போதுதான் குழந்தை 'நான்’ என்ற உணர்விலிருந்து, 'நாம்’ என்ற உணர்வையும், சமூக வாழ்வியல் மதிப்பீடுகளையும் கற்றுக் கொள்கிறது. இவைதான் ஒரு குழந்தையை 'உயர்ந்த மனிதன்’... 'சுயநலம் மிகுந்த மனிதன்’ என்றெல்லாம் தீர்மானிக்கின்றன.
ஆக, பள்ளிப் பாடங்களைவிட, சமூக நடத்தையில்தான் ஒரு குழந்தை தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. அழகு, பண்பு, ஒழுக்கம் இவையெல்லாம் உள்ளவளாக... உள்ளவனாக குழந்தை தன்னை மாற்றிக் கொள்ள அனுமதியுங்கள் பெற்றோர்களே!
ஸ்கூலில் இருந்து வந்தவுடன், டிரெஸ்ஸை கழட்டுவதற்குக்கூட உங்களைக் கூப்பிடுகிறாளா உங்கள் 12 வயது மகள்? ஏன் இப்படி?
- வளர்ப்போம்...
படம்: ச.இரா.ஸ்ரீதர்

Source   - Vikatan Magazine

Tuesday, July 5, 2011

'நோ' சொல்லக் கற்றுக் கொடுங்கள் !


'நோ' சொல்லக் கற்றுக் கொடுங்கள் !

நாச்சியாள்,
க.நாகப்பன் 
'ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும், ஏதோ ஒரு பெண் மீது... ஏதோ ஒரு வடிவில் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு 9 நிமிடத்துக்கும், யார் வீட்டிலாவது ஒரு பெண் கணவனால் அடி, உதை என கொடுமைக்கு ஆளாகிறாள். ஒவ்வொரு 29 நிமிடத்துக்கும், ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். ஒவ்வொரு 77 நிமிடத்துக்கும், வரதட்சணைக் கொடுமையால் ஒரு பெண்ணின் உயிர் பறிபோகிறது.'
இதெல்லாம் நடப்பது எங்கே...?
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி என்று நதிகள்கூட பெண் பெயரால் அழைக்கப்படுவது பாரதமாதாவின் இந்தத் திருநாட்டில்தான்!
தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி என எந்த மொழி செய்தித்தாள்களை புரட்டினாலும் ஊர், பெயர்களில் மட்டுமே வித்தியாசம் காட்டி வரும் செய்திகள்... பெண் மீது பாலியல் பலாத்காரம், மனைவி எரித்துக் கொலை, மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற வைதான். பள்ளி, கல்லூரி, பணியாற்றும் அலுவலகம், பேருந்து, நடமாடும் சாலை, வீடு என எல்லா இடங்களுமே பாதுகாப்பு அற்ற இடங்களாகவே இருக்கின்றன - பெண்களுக்கு.
'இது யுகம் யுகமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தானே’ என்று நொடிப்பொழுதில் கருத்து சொல்லி, இப்போதும்கூட பிரச்னையைக் கடப்பது, பெண் இனத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம். பெண் இனத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போய், நாட்டின் சில இடங்களில் இன்று 1,000 ஆண்களுக்கு 847 பெண்கள் என்று இருக்கிற அபாயகரமான, அவமானகரமான நிலையிலும்கூட, அந்த துரோகத்தை இச்சமூகம் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் வேதனை!
ஒரு பெண்ணின் பாதுகாப்பு என்பது அவள், கருவாகத் தாயின் கருப்பையில் உருக்கொண்ட நாளில் இருந்தே ஆரம்பிக்கிறது. பிறந்த பிறகு, அவளின் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கும் இடம் பள்ளிக்கூடம்தான். அங்கேயும், அதற்கு வெளியிலும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறார் பள்ளி ஆசிரியை பூமாதேவி...
''பெண் குழந்தைகள் மட்டுமல்ல, 5-10 வயதுக் குழந்தைகள் அனைவருமே பள்ளி முகவரி, வீட்டு முகவரி, அம்மா-அப்பா செல்போன் நம்பர் என முக்கிய விலாசங்களை மனப்பாடமாகத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். சில சமயங்களில் கடத்தப்படுகிற குழந்தைகள், இந்த முகவரிகளையும் போன் நம்பர்களையும் சரியாகத் தெரிந்து வைத்திருந்ததாலேயே சமயோஜிதமாகத் தப்பித்து வந்த உதாரணங்கள் உள்ளன. பள்ளிக்கு பெண் குழந்தைகளை தனியார் வேன், ஆட்டோக்களில் அனுப்பும் பெற்றோர்... அந்த வாகன ஓட்டுநரின் முகவரி, செல்போன் நம்பரைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர், குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு நீண்ட காலமாக வாகனம் ஓட்டுபவராகவும் தெரிந்தவராகவும் இருப்பது கூடுதல் பாதுகாப்பானது.
'எது பாலியல் சீண்டல்?' என்பதையே பெரும்பாலும் குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுப்பதில்லை. அதன் காரணமாகவே நம் பெண் குழந்தையிடம் அநாகரிகமாக, அருவெறுக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு நபரைக்கூட, 'இவர், நம்மிடம் சரியாக நடக்கவில்லை. தவறான நோக்கத்துடன் பழகுகிறார்' என்று புரிந்து கொள்ளாமல் பாதிக்கப்படுகின்றன குழந்தைகள். 'உன் முகம், கை தவிர வேறு எங்கும் தொட்டுப் பேச யாரையும் அனுமதிக்காதே’ என்பதையும், 'குட் டச்’ என்றால் என்ன, 'பேட் டச்’ என்றால் என்ன போன்றவற்றையும் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஒருவர், தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ளும்போது, 'அப்படி செய்யாதீங்க’ என்று சத்தம் போட்டு 'நோ’ சொல்லக் கற்றுக் கொடுங்கள். அதில்தான் குழந்தையின் பாதுகாப்பு அடங்கி இருக்கிறது'' என்ற பூமா,
''அம்மா, அப்பா, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா போன்ற உறவுகள் தவிர... தெரியாதவர்கள் யாராவது வந்து, 'சாக்லேட் வாங்கித் தர்றேன், அங்க வாம்மா’ என்று எங்கு கூப்பிட்டாலும் போகக்கூடாது. என்று 'அலர்ட்’ செய்யுங்கள்'' என்றார் பூமா அக்கறையுடன்.
கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்குமான பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!

படம்: ச.இரா.ஸ்ரீதர்

Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 5


ரொமான்ஸ் ரகசியங்கள்!

பேசு மனமே...பேசு !
அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்

'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'விமர்சனம் செய்தாலும், அதை எதிராளி மனம் புண்படாதவாறு இனிமையுடன் இடித்துரை' என்பதை இப்படி சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம்.
உரையாடல்... மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் இருக்கலாமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!
பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. 'முதல் மரியாதை’ படத்தில் வரும் வடிவுக்கரசி கேரக்டரின் அச்சு அசல் மாறாமல் முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.
பேச்சு என்பது எப்படி உறவுகளைச் சிதைக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்...
தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரளவுக்கு அறிமுகமான ஜோடிதான் அவர்கள். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இருவரும் காதலித்தார்கள். முற்போக்குவாதிகளான இருவருமே குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.
அந்தப் பெண் அழகானவர். பல திறமைகள் கொண்டவர். வாழ்க் கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்கிற முனைப்பு கொண்டவர். அவர் இருக்கக் கூடிய துறை, பல ஆண்களிடம் சகஜமாகப் பழக வேண்டிய ஒரு துறை. கணவரும் பரபரப்பான வேலையில் இருப்பவர்தான். இருவரும் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால்... மீண்டும் வீடு திரும்ப இரவு பதினோரு மணி ஆகிவிடும்.
மண வாழ்க்கை மூன்று ஆண்டுகள்தான் தாக்குப் பிடித்தது. பிறகு, தினமும் சண்டை. 'என்னை விட சாதியில் தாழ்ந்தவரை காதலித்து திருமணம் செய்தேன்...’ என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது அப்பெண்ணின் வழக்கம். இது கணவனுக்கு எரிச்சலூட்டியது. ஆரம்ப காலத்தில் மனைவி பல ஆண்களுடன் பழகியது சாதாரணமாக தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல கணவனுக்கு எரிச்சல் அதிகமானது. இருவரும் 'விவாகரத்து’ முடிவுக்கு வந்தனர்.
வக்கீலுக்கே மலைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. 'எனக்கு என் கணவன் மீது உடல் ரீதியாக எந்தக் கவர்ச்சியும் இல்லை... காதலும் இல்லை..!’ என்றார் மனைவி அதிரடியாக.
'நாளுக்கு ஒரு ஆணுடன் படுக்கும் ஒருத்தி மீது எனக்கு மட்டும் எப்படி அன்பு பிறக்கும்? நான் காதலித்த பெண் வேறு, இப்போது இருக்கும் பெண் வேறு!’ என்று பகிரங்க பதிலடி கொடுத்தார் கணவன்.
வக்கீலுக்கு, 'முற்றிய கேஸ்’ என்று தோன்றியது. இருவரிடமும் தனித்தனியாகப் பேசிப் பார்த்தார். பல நாட்கள் நடந்த கவுன்சிலிங் பயனளிக்கவில்லை. 'உங்கள் இருவருக்கும் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற ஆவல் கொஞ்சம்கூட இல்லை. அதனால் நீங்கள் பிரிந்து செல்வதே நல்லது. இன்னும் பல பாதிப்புகளை அது குறைக்கும்’ என்று சொல்லி வழி அனுப்பினார் நீதிபதி. பிரிவது என்பதுகூட சில சமயங்களில் நல்ல தீர்வாக அமைவது வாழ்க்கையின் விநோதம்தான்!
இந்த இருவரின் பிரச்னையும் பேச்சுதான் என்கிறார் அந்த வக்கீல். பேச்சு என்றால், ஏடாகூடாமான பேச்சு.
''என் செல்போன் எங்கேனு பார்த்தியா?''
''ஏன்... இப்ப எவ கூட கடல போடணும்?''
''காலையில அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சு என்னை எழுப்பி விடறீங்களா?''
''வீட்டை விட்டு ஓடிப் போகப் போறியா? யார் கூட?''
''இன்னிக்கு சாயங்காலம்... சினிமாவுக்குப் போகலாமா?''
''மட்டமான படம். உங்க ரசனைக்குச் சரியா இருக் கும். போயிட்டு வாங்க...''
''இன்னிக்கு டாக்டரைப் பார்க்கப் போறேன்...''
''ஏன் பீரியட்ஸ் தள்ளிப் போச்சா? எவன் காரணமோ அவனைத் துணைக்குக் கூட்டிட்டுப் போ!'' இப்படியேத்தான் இருந்திருக்கின்றன அவர்களுடைய உரையாடல்கள். இவை யெல்லாம் இடைவெளியை அதிகரிக்காமல்... வேறென்ன செய்யும்? விரைவிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து போனார்கள்.
இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரி டையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திர மயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி விடுகிறது? அல்லது ஒரு கட்டத்தில் ஏன் முறிந்து விடுகிறது?
பேச்சுதான் அத்தனைக் கும் காரணம். சுவாரஸ்யமான உரையாடல்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பை நாளுக்கு நாள் செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன பேசுவதற்கு.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. எப்போது இன்கிரிமென்ட் வரும், எப்போது நகை வாங்கலாம் என்றே யோசித்துக் கொண்டு, அதையே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.
இன்னொரு தம்பதியும் என்னால் மறக்க முடியாதவர்கள். 'லட்சியத் தம்பதி', 'ஆதர்ச கணவன்-மனைவி' அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் சில ஃபார்முலாக்களை வைத்திருக் கிறார்கள்.
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ஆயிரம் வாரிசுகள் :பசுமை தொண்டர் பெருமிதம்

உருவமில்லா இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததெனும் கருத்தை உருவாக்கி மரங்களை கடவுளின் மறு உருவங்களாக வழிபட்டனர்.

வைணவ ஆச்சாரியர்கள், திருத்தலங்களில் வளர்கிற மரம், செடி, கொடிகளைக் கூட கடவுளின் அடியவர்களாக கருதினர்; "இறைவா ! திருவேங்கட மலையில் நான் ஒரு செண்பக மரமாக வேண்டும்' என்று குலசேகர ஆழ்வார் பெருமாளை வேண்டி நின்றதும் இதனால்தான்.சங்க இலக்கியங்களும் மரங்களை கடவுள்களின் பிம்பங்களாக வகைப்படுத்துகின்றன. புன்னை மரத்திலும், ஆலமரத்திலும் கடவுள் வாழ்வதாக அகநானூறும், நற்றிணையும் கூறுகின்றன. வேம்பு காளி தேவிக்குரியதாக போற்றப்படுகிறது.பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, குபேரன் ஆகியோருக்கு ஆலமரம்; ராமன், நாராயணன் ஆகியோருக்கு துளசி; சிவன், துர்கை, சூரியன் ஆகியோருக்கு வில்வமரம், கிருஷ்ணனுக்கு கடம்ப மரம்; கோவிந்தனுக்கு மாமரம்; வனதேவதைகளுக்கு அரசு, இந்திரனுக்கு அசோக மரம் உகந்ததாக அதர்வன வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான், வைணவ கோயில்களில் துளசியும், சிவன் கோயிலில் வில்வ இலைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பனம் பூ, அத்தி பூ, வேப்பம் பூ ஆகிய பூக்களை தங்களின் அரச அடையாளமாக பயன்படுத்தியதாகவும், "காவல் மரம்' வளர்த்து வணங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.அந்த மரத்திற்கு, மன்னனுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் முற்றங்களில் உள்ள தல விருட்சத்தை தொட்டு வணங்குவதும், வீட்டிலுள்ள துளசியை சுற்றி வணங்குவதும், அந்த தெய்வீக பண்பாட்டின் தொடர்ச்சியே.இன்றைக்கு இந்த புனித தன்மை வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காவும் பின்பற்றப்படுகிறதே ஒழிய மரங்களை போற்றி வளர்க்கும் எண்ணம் மறைந்து போனது.

மரங்களை புனிதமாக பார்த்தவர்களின் சந்ததி, இன்று அதை சந்தைப்பொருளாக பார்ப்பதால் இயற்கையின் அரண்களாக இருந்த மரங்கள், விறகாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிப் போனது. நீர், நிலம், காற்று அனைத்தும் விஷமாகி போன இந்த விஞ்ஞான பூமியில், மரங்கள் மட்டுமே மாற்று மருந்து. கோடி மரங்களை வெட்டத் துணிந்த மனித குலம், ஒரு ஜோடி மரங்களைக் கூட நட தயாரில்லை என்கிற வருத்தத்தை பகிர்ந்து கொண்டோமே தவிர அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், கோவையை பசுமையாக்க "ஒரு மரமாவது வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்' என்கிற ஒற்றை கோரிக்கையோடு பசுமை பணியில் களமிறங்கியிருக்கிறது "பசும்புலரி' அமைப்பு.இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஒரு மரம் என்ன ஓராயிரம் மரங்களை வளர்க்க தயார், என்று பசும்பலரிக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார் செலக்கரிச்சல் வேலுச்சாமி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இந்த 76 வயது மனிதர், தன் பென்ஷன் பணம் முழுக்க மரங்களுக்காக செலவிடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக மரம் நட்டு வளர்க்கும் பணி செய்து வரும் இவர், தனி ஆளாக 1000 மரக் கன்றுகளுக்கு மேல் நட்டு மரமாக்கியுள்ளார்.

இனி மரம் நட ஊரில் இடமில்லையே என்கிற கவலையோடு இருந்த இவர், இப்போது "பசும்புலரி'ன் உதவியோடு ஊரைச் சுற்றி மரக்கன்று நடும் பணியை துவக்கியுள்ளார். அவரை சந்தித்த போது ...

நான், பெற்ற தாயை விட அதிகம் நேசிப்பது இயற்கையைதான். ஆசிரியராக பணியாற்றியபோது, பாடத்துடன் சூழல் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றி அதிகம் சொல்லிக் கொடுப்பேன். பணியிலிருந்தபோது, மரம் நடுவதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை; பணி ஓய்வுக்குப் பிறகு, கடந்த இருபதாண்டுகளாக மரம் வளர்ப்பதையே முழு நேர பணியாக செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் என் பணிகளை மக்கள் ஏளனமாக பார்த்தனர்; அதைப்பற்றி கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தேன். பென்ஷன் பணத்தின் பெரும்பகுதியை, மரக்கன்றுகள் வாங்கவும், வேலிக்கான இரும்பு வலை வாங்கவும்தான் செலவு செய்துள்ளேன். இது வறட்சியான பகுதி என்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால் விவசாயக் கிணறுகளிலிருந்து சைக்கிள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, இவற்றை உயிராக்கினேன். அதன் விளைவாகத்தான், செலக்கரிச்சல் இன்று 1000க்கும் மேற்பட்ட மரங்களோடு பசுமையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.தற்போது, மக்கள் என் லட்சியத்தை புரிந்து கொண்டதுடன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கராஜன், பழனிக்கவுண்டர் உள்ளிட்டோர் என்னோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.

சிறுதுளியின் தலைவர் வனிதாமோகன் என்னை தொடர்பு கொண்டு, என் பணியைப் பாராட்டியபோது, அவரிடம் என் ""ஆயுளுக்குள் இன்னும் 1000 மரங்களையாவது நட்டு வளர்க்கும் ஆசை உள்ளது; நடத்தான் இங்கு இடம் இல்லை'' என்றேன். அதற்கு அவர் ""அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; உங்களை போன்றவர்களைத்தான் பசும்புலரி தேடிக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாட்டை பசும்புலரி மூலம் செய்து தருகிறோம்; உங்கள் பணியை துவங்குங்கள்'' என்று உற்சாகப்படுத்தினார்.முதல் கட்டமாக, பசும்புலரி மூலம் 300 மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை தோண்டியுள்ளேன், என்றவர், "நான் பெற்று வளர்த்தது 3 மகள்களை; நட்டு வளர்த்ததோ 1000 மகன்களை; இந்த மரங்கள்தான் என் ஆண் பிள்ளைகள்; என் வாரிசுகள்' என்று உற்சாகமாகக் கூறினார் அந்த பசுமை நாயகன்.

அரசன் மரங்கள் : அரசனுக்குரிய கடமைகளை வரையறுக்கும் "சுக்கிர நீதி' என்னும் பழங்கால சட்ட நூல், அரசன் என்னனென்ன மரங்களை எங்கெங்கு நட்டு வளர்க்கவேண்டும் என விளக்குகிறது.அத்தி, அரசு, ஆல், புளி, மா, சந்தனம், எலுமிச்சை, வெண்கடம்பு, அசோகம், மகிழம், கடவிளம், சிந்தில் விளா, ராசாதனம், புன்னை, பூவரசு, செம்பகம் கடம்பு, கோகாமிரம், சரணம், மாதுளை, கரு, பிடகம், நாரத்தை, சிஞ்சபம், சிம்பு, இலந்தை, வேம்பு, பாலை, பேரீந்து, புன்பு, பேயந்தி, நெல்லி, தாமலம், சிம்பலம், மலையத்தி வெள்ளிக்கொடி, கமுகு, கொம்மபட்டி, தெங்கு, வாழை,மலைஅத்தி, தேக்கு, கொங்கு, பெருவாகை, வெளவுவம், தமாலம், ஆக்கா, வெட்டபாலை, வெள்வேல், மருது, புரசு, ஏழிலைப்பாலை, வன்னி, நந்தி, காஞ்சிரை, குமில், பங்கம்பாலை, திந்துகம், பீசகாரகம், கிடு, சே, சம்பாகம், இலுப்பை போன்ற நல்ல பழங்களையும், நறுமணம் தரும் மலர்களையும் தரக்கூடிய மரங்களை, கிராமங்களில், நகரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்க வேண்டும் என்று "சுக்கிரநீதி' கூறுகிறது.


Source-Dinamalar July 04,2011

சுவாமி விவேகானந்தர்-வரலாற்று நாயகர்


வணக்கம் நண்பர்களே இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு  தினம்.  சுவாமி விவேகானந்தரை வணங்கி இந்த தினத்திலே சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வோம்.


1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11 ந்தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார் தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகயும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர் வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர்.இன்னும் சிலர் பக்கத்தி இருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார் அவர். கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவணமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்த்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா இந்துமதம் ஆகியவைபற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு சனவரி 12 ந்தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயர்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்தி நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரதக் கதைகளை சொல்வார்  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர் போகப் போக தியானத்தில் மூழ்க தொடங்கினார் சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு விவேகானந்தர் என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி லக்னோ ஆக்ரா பிருந்தாவனம் ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது எங்கு உறங்குவது என தெரியாமல் கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டார்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11 ந்தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும் அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார் அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார் கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயதுப் பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும் நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண் அப்படி காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் திரும்பினார் விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும் இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் காலமானார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  "விவேகானந்தர் பாறை" என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் விவேகானந்தர்.

நமது தேசத்தின் சில அவலங்களை படித்து பாருங்கள் !

* அரிசியின் விலை கிலோ 44 ரூபாய் . ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது .

*பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் .ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய் .

* வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம் .ஆனால் கல்விக் கடன்களுக்கான வட்டி 12 சதவீதம் .

*பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகதில்கூட ,அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும் ,தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை .

*ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்ககூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் .அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அரபணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை .

*நாம் அணியும் உள்ளாடைகளும் ,ஆடைகளும் ,காலணிகளும் ,குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன .ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன .

*நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன .பாத்திரம் கழுவ உதவும் நீர்க்கலவை இயற்கையான லெமனில் தயாரிக்கப்படுகிறது .

*மொத்தமாக பள்ளிகளையும் ,கல்லூரிகளையும் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்றுகொண்டிருக்கிறது .சாராயம் விற்றுகொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .

*கோதுமைக்கு வரியில்லை .அது விலைபொருள் .கோதுமையை மாவாக திரித்தால் வரி உண்டு .கோதுமை மாவை சப்பாத்தியாக செய்தால் வரியில்லை .அதே மாவை பிஸ்கட் கேக் பிரெட்டாக செய்து விற்றால் வரி உண்டு.

*பிரபலமாக வேண்டும் என்ற பிலாசைகள் அனைவருக்கும் உண்டு. அனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பமில்லை .

*குழந்தை தொழிலார்களை ஒழிக்க வேண்டும் என்போம் .அனால் தேநீர்க்கடைகளில் வேலைப் பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக் குடிப்போம் .

இந்த நிலை மாறுவது எப்போது ?

பாரத மாதாவைத்தான் கேட்க வேண்டும்.

Source - Vijayabharatham Magazine

நான் யாருடைய முகமூடியும் அல்ல: ராம்தேவின் சிறப்புப் பேட்டி


யோகா பயிற்சி மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைத் தன்பால் ஈர்த்தவர் பாபா ராம்தேவ்.
ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கப் போவதாக அண்மையில் நடத்திய போராட்டத்தின் மூலம் மிகவுப் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.
 உண்ணாவிரதம் நடந்த ராம்லீலா மைதானத்திலிருந்து ஹரித்துவாருக்குத் தப்பிச் சென்ற அவர், கடந்த வாரம் மீண்டும் தில்லிக்குத் திரும்பினார். 
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் குழும இயக்குநர் பிரபு சாவ்லாவுக்கு அவர் அளித்த பேட்டியில்,

தமது போராட்டங்கள் பற்றியும், நாடாளுமன்ற நடைமுறையில் தமக்குள்ள நம்பிக்கை பற்றியும் விவரிக்கிறார்...
  
பிரபு சாவ்லா:
நான் உங்களது பல பரிமாணங்களைப் பார்த்திருக்கிறேன். இன்று உங்களது "அவதாரம்' என்ன?  பாபா ராம்தேவ்: முதலில் நான் ஒரு சன்யாசி. இந்த நாட்டின் குடிமகன். நாட்டின் அரசியல் சட்டப்படி ஒரு குடிமகன் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டுமோ அந்தக் கடமைகளையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் செய்து வருகிறேன். நமது முன்னோர் எழுதிய சாஸ்திரங்களை மக்களுக்குப் போதித்து வருகிறேன். என்னால் முடிந்தவரை எனது கடமைகளைச் செய்து வருகிறேன். இறுதி மூச்சுவரை அப்படியே.  சாவ்லா: லட்சக்கணக்கான மக்கள், தொண்டர்கள், பக்தர்கள், உங்களைக் காண வருகிறார்கள். உங்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்... 
பாபா:
இன்றைக்கு மட்டுமல்ல வருங்காலத்திலும் என்னிடம் வருவார்கள்... 
சாவ்லா:
நான் ஏற்கிறேன். ஆனால் ராம்லீலா மைதானத்திலிருந்து நீங்கள் வெளியேறிய விதம், உங்களைப் பின்பற்றுவோரின் மனதில் உங்களைப் பற்றிய மதிப்பைக் குறைத்திருக்கக் கூடுமே...
 பாபா:
அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இருந்தது. இப்போது அப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் இல்லை. ஆனால் நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டது. சர்வாதிகாரி போலச் செயல்பட்டு அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். இதையெல்லாம் உலகமே கண்டித்தது. இது துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் கூட கூற வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். எனது ஜூன் 4-ம் தேதி நள்ளிரவுக்கு முன் இருந்த எனது வாழ்க்கை இப்போதைய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதலில் எங்களது கோரிக்கைகளை அரசு முன் வைத்தோம். அவர்கள் ஏற்க மறுத்தார்கள். ஆனால் அதற்குள் கறுப்புப்பண விவகாரம் 121 கோடி மக்களையும் எட்டிவிட்டது. உலகம் முழுவதும் சென்றடைந்தது. ஜூன் 4-ம் தேதி பல விஷயங்களுக்கு நிரூபணமாக அமைந்தது. அதில் ஒன்று, இவர்களிடமெல்லாம் கறுப்புப் பணம் இருக்கிறது என்பது. பிரபுஜி, நான் ஒன்றைச் சொன்னால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ரூ.4 லட்சம் கோடி பணம் சுவிஸ் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் யார் பதுக்கியது?  சாவ்லா: 4-ம் தேதிக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டது என்று சொல்கிறீர்களா?
 பாபா:
ஆமாம். 
சாவ்லா:
நீங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்போ, தொடங்கியபோது இந்தப் பணம் எடுக்கப்படவில்லை என்கிறீர்கள்... 
பாபா:
பணத்தை எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போது நாட்டில் நிலம், தங்கம் விலையெல்லாம் பாருங்கள். எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 10, 50, 100 மடங்காக. பதஞ்சலி யோகபீடம் அருகே நாங்கள் பணிகளைத் தொடங்கும் முன்பு ஒரு பிகா நிலத்தின் விலை ரூ. 25 ஆயிரமாக இருந்தது. இப்போது ரூ.25 லட்சம். அதனால்தான் நான் சொல்கிறேன்... 
சாவ்லா:
ஆக, உங்களால் விவசாயிகளெல்லாம் செல்வந்தர்களாகிவிட்டார்கள். அதை விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறினீர்களே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்...  பாபா: அவர்கள் எனக்கு நெருக்கடி தரலாம். எனக்கு எதிராகச் சதி செய்தார்கள். ஒடுக்க முயற்சித்தார்கள். அவதூறு பரப்பினார்கள். அதை வருங்காலத்திலும் செய்வார்கள். 
சாவ்லா:
உங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பதஞ்சலி யோக பீடத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது என அவர்கள் கேட்பார்கள். தயாராக இருங்கள்.
 பாபா:
நான் எப்போதோ தயார். இப்போதும் தயாராக இருக்கிறேன். எப்போதும் தயாராக இருப்பேன். அவர்கள் ஊழல்வாதிகள். திருந்துவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏமாற்றிவிட்டார்கள். எளிமையாக ஒன்றைச் சொல்கிறேன், 4-ம் தேதிக்கு முன்னரும் இந்தப் பிரச்னைகள் இருந்தன. நாங்கள் எழுப்பிய அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக பிரதமரே கூறியிருக்கிறார்.  சாவ்லா: இதை அவர் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
 பாபா:
நான் அவருக்கு 3 கடிதங்களை எழுதினேன். அவரும் எனக்கு எழுதினார். அதன் பிறகு நிதியமைச்சர் 2 முறை எழுதினார். அதன் பிறகு 4 அமைச்சர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போதெல்லாம் ராம்தேவ் தேசபக்தன். வன்முறையாளனாக அவர்களுக்குத் தெரியவில்லை. 
சாவ்லா:
ஆர்எஸ்எஸ் ஏஜென்டாகவும் தெரியவில்லை... 
பாபா:
ராம்தேவ் ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் அல்ல. பாஜகவின் முகமூடியும் அல்ல. நேரடியாகச் சொல்வதென்றால் அவர் மிகவும் நல்லவர். நேர்மையாளர். ஆனால் 4-ம் தேதிக்குப் பிறகு ராம்தேவ் என்றால் வன்முறையாளன் என்கிற அவதூறு பரப்பப்பட்டது. அவர் செய்யும் எல்லாம் குற்றமாகிவிட்டது. 
சாவ்லா:
நீங்கள் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தும்போது, உங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். நீங்கள் அரசியல்வாதி இல்லையென்பதால், அது உங்களுக்குத் தெரியவில்லை. கடைசியில் நீங்களே உங்களது மரியாதையைக் குறைத்துவிட்டீர்கள்.
 பாபா:
இல்லை. நான் என் மரியாதையைக் குறைக்கவில்லை. 
சாவ்லா:
நீங்கள் ஓடினீர்கள், பெண்களுடன் சென்று மறைந்துவிட்டீர்கள் என்று மக்கள்தான் சொல்கிறார்கள்...  பாபா: இதோ பாருங்கள், என் மீது கூறப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் உண்மையாகப் பதிலளிக்க முடியும். நான் ஒரு அரசியல்வாதியல்ல. முதலில் இருந்து நான் இதைத்தான் கூறி வருகிறேன்.  சாவ்லா: அரசியல்வாதிகள் யாரையும் ஏமாற்றவில்லை என்று நினைக்கிறீர்களா? 
பாபா:
எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். ஒரு சன்யாசியைத் தவிர.
 சாவ்லா:
உங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும், யோகா முகாம் நடத்துவதற்குத்தான் அனுமதி பெற்றீர்கள் என்று தில்லி போலீஸôர் கூறுகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கூறவில்லை என்கின்றனர். இது துரோகமில்லையா? 
பாபா:
நான் ஒரு தவறும் செய்யவில்லை. நாங்கள் பயிற்சி முகாம் நடத்துவோம் என்றோம். அதைத்தான் செய்தோம். 
சாவ்லா:
5000 பேர்தான் கலந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறீர்கள்... 
பாபா:
எத்தனை பேர் வருவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள். முதலில் எங்கள் அனுமானப்படி 5000 பேர் வருவார்கள் என்றுதான் தெரிந்தது. நான் காலை 5 மணி முதல் 8 மணி வரை யோகா பயிற்சியளித்தேன். அதை உலகமே பார்த்தது. நான் பொய் சொல்லவில்லை. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் அனுமதி வாங்கினோம். ஆனால் போலீஸôர் எங்களை அங்கு போகவிடவில்லை. 
சாவ்லா:
அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 பாபா:
ராம்லீலா மைதானத்திலேயே போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
 சாவ்லா: போராட்டம் அல்ல... யோகா முகாம். 
பாபா:
நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வாங்கினோமே. 
சாவ்லா:
ஜந்தர் மந்தரில்தானே, ராம்லீலா மைதானத்தில் இல்லையே... 
பாபா:
அவர்கள்தான் ஜந்தர் மந்தருக்கு போகாதீர்கள்; ராம்லீலா மைதானத்திலே போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். உச்ச நீதிமன்றத்தில் போலீஸôர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். 
சாவ்லா:
நான் உங்களை ஒன்று கேட்க வேண்டும். ஏன் அரசியல்வாதிகளிடம் போய் பேச்சு நடத்த வேண்டும். அண்ணா ஹசாரேயும் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தினார். இப்போது அவர்கள் தரும் வரைவு மசோதாவைக் குறை சொல்கிறார். நீங்களும் அப்படித்தான். ஊழல்வாதிகள் என்று நீங்களே கூறும் அமைச்சர்கள், உங்களை வந்து சந்தித்தவுடன், பனிக்கட்டியாக உருகிவிடுகிறீர்கள். பேச்சு நடத்த நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்கிறீர்கள்...
 பாபா:
பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. நாடாளுமன்ற அமைப்பில் இதெல்லாம் தேவையான ஒன்று. நாடாளுமன்ற அமைப்பில் ஒரு அவசரச் சட்டம் போட்டு கறுப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து, அமைச்சர்களுடன்தான் பேச வேண்டியிருக்கிறது... 
சாவ்லா:
முன்பு நீங்கள் சொன்ன கருத்திலிருந்து இது முரண்பாடாக இருக்கிறது. நாடாளுமன்ற அமைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
 பாபா:
நாடாளுமன்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற அமைப்பு சரியில்லை என்றால், அதை மாற்றும் உரிமையை அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்க வேண்டும். 
சாவ்லா:
அதற்குத்தான் தேர்தல் மூலம் வழி இருக்கிறதே. மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் மட்டுமே அரசை மாற்ற முடியும், வன்முறையால் அல்ல. 
பாபா:
ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தவறு. மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.  சாவ்லா: கருத்துக் கூறலாம். ஆனால் அரசை பிளாக்மெயில் செய்யக்கூடாது. 
பாபா:
நாங்கள் எப்போது பிளாக்மெயில் செய்தோம்?  சாவ்லா: ஆனால் அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் சொல்வதைச் செய்யுங்கள். அல்லது போராட்டம் நடத்துவேன் என்று கூறுவதை...
 பாபா: நாங்கள் தனிப்பட்ட மனிதருக்காக எதையும் கேட்கவில்லை. எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்று பிரதமரே கூறியிருக்கிறார்.
 சாவ்லா:
அவை நியாயமற்றவை அல்ல என்று யார் கூறுகிறார்கள். சொல்லுங்கள்.
 பாபா:
4-ம் தேதிக்கு முன்பாக எல்லாம் நியாயமாகத்தான் இருந்தது.
  சாவ்லா: நாடாளுமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறும் நீங்கள், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவற்றை எழுப்புவதற்கு முயற்சி செய்திருக்கலாமே. அண்ணா ஹசாரே அரசியல் கட்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல... 
பாபா:
நாங்களும் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். காங்கிரûஸத் தவிர. பாபாவின் கோரிக்கைகள் அனைத்தும் சரியானவை என்று கட்சிகள் கூறியிருக்கின்றன.
 சாவ்லா:
கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராடும் உங்களுக்கு, நன்கொடையாகக் கறுப்புப் பணம் வருவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே. உங்களது கட்டடங்கள் கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டவை என்று கூறுகிறார்களே...  பாபா: நான் பெறுவதெல்லாம் சட்டப்பூர்வமானதே. 
சாவ்லா: நான் கூறுவது மொத்தமாக. கட்டடங்கள், ஏக்கர் கணக்கில் நிலம், அறிவித்த சொத்து மதிப்பு ரூ. ஆயிரம் கோடி... 
பாபா:
அறக்கட்டளைக்கு என்ன சொத்து இருக்கிறது என்று நாட்டுக்கு சொல்லியாகிவிட்டது. நாங்கள் செய்யும் சேவைக்காக எங்களுக்கு நன்கொடை வருகிறது. அதையெல்லாம் நாங்கள் வெளிப்படையாகக் கூறிவிட்டோம். காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதைச் செய்யுமா?  
சாவ்லா:
நீங்கள் யோகா குரு என்பதைவிட வியாபாரியாகவே இருக்கிறீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.  பாபா: நான் முன்னரே கூறினேனே. இந்தக் குற்றசாட்டுகளெல்லாம் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகுதான்.
 சாவ்லா:
ஜூன் 4-ம் தேதிக்கு முன்பாக உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதன் பிறகு நீங்கள் ஊழல் செய்கிறீர்கள், கறுப்புப் பணம் வைத்திருக்கிறீர்கள் என்கிறார்கள். உங்கள் பக்கம் ஏதாவது தவறு இருக்கிறதா?  பாபா: இல்லையில்லை. எந்தத் தவறும் இல்லை.  சாவ்லா: உங்கள் மதிப்பு எந்த வகையிலும் குறையவில்லை என்கிறீர்கள். பிறகு ஏன், உங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அண்ணா ஹசாரே நிபந்தனைகளை விதிக்கிறார்? அந்த நிபந்தனைகளையெல்லாம் நீங்கள் ஏற்கிறீர்களா? உங்களை ஆர்எஸ்எஸ்காரர் என்கிறார்கள்.  பாபா: என்மீது கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் ஆர்எஸ்எஸ் மீதும், பாஜக மீதும் கூறினார்கள்.  சாவ்லா: ஹசாரேயின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டீர்களா? 
பாபா:
எந்த நிபந்தனையும் இல்லை. நான் எந்த அமைப்புக்கும் முகமூடி அல்ல. நான் விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் பேசுகிறேன். நான் நாட்டின் 121 கோடி இந்தியர்களின் முகம். 
சாவ்லா:
லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால், ஆகஸ்ட் 16-ம் தேதி ஹசாரேயுடன் உண்ணாவிரதம் இருப்பீர்களா? 
பாபா:
முன்பே கூறிவிட்டேன். யாரெல்லாம் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராகப் போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் ஆதரிப்பேன். அவர்களது ஆதரவைப் பெறுவேன். எங்களுக்கு ஒரே நோக்கம்தான், ஒரே பிரச்னைதான்... 
சாவ்லா:
நான் அண்ணா ஹசாரே பற்றிக் கேட்கிறேன்... 
பாபா:
ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான யாருடனும் நாங்கள் சேர்ந்து செயல்படுவோம்... 
சாவ்லா:
ஹசாரேயுடன் இணைந்து ஏதாவது போராட்டத்தை நடத்துவீர்களா? 
பாபா:
நாங்கள் அவர்களுடன் இருப்போம். எங்களுடன் 121 கோடி இந்திய மக்களும் இருப்பார்கள். 
சாவ்லா:
பாபா ராம்தேவின் பிரச்னைதான் என்ன? 
பாபா:
கறுப்புப் பணம், ஊழல், நிர்வாகச் சீர்கேடு. 
சாவ்லா: அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது ஓடிவிட மாட்டீர்களே? 
பாபா:
இந்த முறையும் நான் எங்கும் ஓடவில்லை. இது வித்தியாசமான சம்பவம். அவர்கள் கைது செய்யத்தான் முயன்றார்கள் என்றால் நான் அங்கேயே இருந்திருப்பேன். கைது செய்யப்படுவதற்குத் தயாராகத்தான் இருந்தேன். 
சாவ்லா:
அடுத்த முறை கைது செய்ய வரும்போது மைதானத்திலேயே அமர்ந்திருப்பீர்கள்?
 பாபா:
அவர்கள் என்னைக் கைது செய்ய வரவில்லை. கொல்ல வந்தார்கள். நான் அவர்களுக்கு இரையாக விரும்பவில்லை. நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.  சாவ்லா: பேட்டியளித்ததற்கு மிக்க நன்றி. 
பாபா:
நன்றி பிரபுஜி.

Source : Indian Express-Dinamani-July 03,2011

ஏன் சொல்லுறோம் தெரியுமா?




Delhi CM Sheila Dixit :ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்குங்க...
இப்ப கேட்டீங்களே இந்த மாதிரியெல்லாம் இனி கேக்கக்கூடாது...

HM P Chidambaram :ஏன் என்ன அப்படி கேட்டுட்டேன்... பிரதமரே லோக்பாலுக்குள்ள நான் வரத் தயார்னு சொல்லுறப்போ நமக்கு எதுக்கு தயக்கம் இருக்கணும்... சரின்னுட வேண்டியதுதானே! இதத்தான நான் கேட்டேன்.

Delhi CM Sheila Dixit இப்ப மன்மோகன் சிங்ஜி இருக்காரு... பிரச்னையில்லே! அவர் எதுவுமே எனக்கு தெரியாதுன்னு எல்லார் முன்னாடியும் சொன்னமாதிரி எல்லா இடத்திலயும் சொல்லி தப்பிச்சிக்குவாரு...
ஆனா எதிர்காலத்துல... யோசிச்சீங்களா?

HM P Chidambaram :எதிர்காலத்துல என்ன? அப்படியே இருந்துட்டுப் போறதுதானே!

Delhi CM Sheila Dixit ஆனா நாம யார் மூலமா என்ன சொல்ல வெச்சிருக்கோம்... யோசிச்சுப் பாருங்க! திக்சிங்ஜி என்ன சொல்லிட்டுவர்றாரு... கவனிச்சீங்களா? ராகுல்ஜி பிரதமர் ஆகுறதுக்கு தகுதியானவருன்னு பேசிட்டு வர்றோமே..!

HM P Chidambaram :அடடா... இதை நான் யோசிக்கலையே!

Source : Dinamani-June 30,2011

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்-சேக்கிழான்

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்-சேக்கிழான்

anna_hazare_lokpal_bill_01

திப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களுக்கு,

வணக்கம்.

ஊழலுக்கு எதிரான உங்கள் போராட்டம் நாட்டு மக்களை விழிப்புணர்வடையச் செய்துள்ளது. அதிலும் 'ஜன லோக்பால்' சட்டத்தை நிறைவேற்ற நீங்கள் மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்ததைக் கண்டபோது பெருமகிழ்வு கொண்டோம். ஆனால்…

இந்த 'ஆனால்' என்ற வார்த்தை வந்தாலே, வாக்கியத்தின் பொருள் மாறிவிடுகிறது. "மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு" என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் அடிக்கடி நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டுவது. பிரதமர் ஊழல்கறை படியாதவர் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்வதை ஒத்திருப்பதாகவே உங்கள் கருத்தும் இருப்பதை ஏற்கவே முடியவில்லை.

கண் முன்னால் அரசுக் கருவூலத்தில் சேர வேண்டிய பணம் கொள்ளை போகக் காரணமான அமைச்சர் ஒருவர் "பிரதமருக்குத் தெரிந்தே தான் முடிவெடுத்தேன்" என்று சொல்லிக் கொண்டே அனைத்து அத்துமீறல்களிலும் ஈடுபட்டு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி செய்திருக்கிறார். ஆனாலும், மன்மோகன் நல்லவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்…, என ஊழல் விவகாரங்கள் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் நீங்கள் பிரதமர் நல்லவர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை.

இதைவிட மோசம், திக்விஜய் சிங், கபில் சிபல், மணிஷ் திவாரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் உங்களுக்கு எதிராக நடத்தும் அவதூறுப் பிரசாரங்களைக் கண்டிக்குமாறு கோரி, காங்கிரஸ் தலைவி சோனியா அம்மையாருக்கு நீங்கள் கடிதங்கள் எழுதுவது. திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் உங்களுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், நீங்கள் எப்படி இன்னமும் சோனியாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.

சோனியா கண்ணசைவின்றி இப்படிப்பட்ட உளறல்களை திக்விஜய் சிங் வெளிப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த ஊழல்களில் சோனியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், ஊழலுக்கு எதிரான போரை தலைமை தாங்கி நடத்துவதற்கான தகுதியையே நீங்கள் இழந்தவர் ஆகிவிடுவீர்கள்.

ஊழல் கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறதா? மேலிருந்து கீழ் நோக்கிச் செல்கிறதா? இரண்டும் சாத்தியம் என்றாலும், மேல்மட்ட ஊழல்களே நாட்டை திவாலாக்குகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காகவே லோக்பால் சட்டத்தில் விசாரணை வளையத்தில் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் கூறி வருகிறீர்கள். அப்படியானால், பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான ஐ.மு.கூட்டணி தலைவரும் மத்திய அரசின் வழிகாட்டியுமான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா? சோனியா மீதான மிகவும் ஆபத்தான புகார்களை ஜனதா தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடிதமாக பிரதமருக்கு எழுதி பல மாதங்கள் ஆகியும், இதுவரை அதற்கான எந்த மறுப்பையும் பிரதமரோ, சோனியாவோ கூறாதது ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

subramaniaswamyநாட்டில் இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் அரசு மன்மோகன் சிங் அரசு தான் என்று உண்மையான பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால் மன்மோகன் நல்லவர் என்று நீங்கள் சான்றிதழ் அளிக்கிறீர்கள். அரசில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு அமைச்சரும் ஊழலில் ஈடுபடுவதைக் கண்டித்துத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மன்மோகன் எப்படி நல்ல பிரதமர் ஆவார்? இதுதான் ஆட்சியை தலைமை தாங்கி நடத்தும் அழகா? உங்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை கட்டுப்படுத்துமாறு, அதற்குக் காரணமான சோனியாவுக்கே நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள். இவை முரணாகத் தெரியவில்லையா? இது ஊழலுக்கு எதிரான போரில் தலைமை தாங்கும் உங்களுக்கு அழகா?

உங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கை பற்றிப் படித்து அதில் உத்வேகம் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள். 'ராலேகான் சித்தி' கிராமத்தில் நீங்கள் நிகழ்த்திய மகத்தான மாற்றத்தை நாங்கள் அறிவோம். ஆனால், உங்களுடன் சேர்ந்துள்ள ஊழல் எதிர்ப்பு வீரர்களின் முழு விபரமும் நீங்கள் அறிவீர்களா?

உங்கள் பின்னால் நிற்கும் அக்னிவேஷும், அரவிந்த் கேஜ்ரிவாலும் கொண்டுள்ள காங்கிரஸ் சார்பை அறிவீர்களா? அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து தகவல் உரிமை சட்டத்திற்காகப் போராடிய அருணா ராய் தற்போது சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களை வழிநடத்தும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் (என்.ஜி,ஓ.க்கள்) அரசிலும் ஊடகவெளியிலும் கொண்டுள்ள பிரமாண்டமான செல்வாக்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆங்கிலத் தொலைகாட்சி ஊடகங்கள் அரசுக்கு சாதகமாக நடத்தும் நாடகங்களில் நீங்கள் சிக்கி இரையாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறோம்.

உங்கள் ஊழலுக்கு எதிரான இயக்கம் லோக்பால் மசோதா நிறைவேற்றத்துடன் நின்றுவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கும் கூட காங்கிரஸ் கட்சி அனுமதிக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும், லோக்பாலை மட்டும் குறியாகக் கொண்டு உண்ணாவிரத அறிவிப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். உங்கள் தன்னலமற்ற போராட்ட அறிவிப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தப் போரில் உங்கள் தலைமையை நாடி நாடு காத்திருக்கிறது என்பதை நீங்கள் ஏன் கண்டுகொள்ளாமல் உள்ளீர்கள்?

985_jayaprakash_narayanநீங்கள் தில்லி, ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் (2011, ஏப்ரல் 5) இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிக்குக் காரணம், நாட்டில் நிலவும் ஊழல் மக்களை மிகவும் கசப்புக்கு உள்ளாக்கி இருப்பதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஊழலுக்கு எதிராக நாட்டு மக்களை ஒருங்கிணைக்கவும், சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை திரட்டவும் நீங்கள் ஏன் முயலக் கூடாது? 1975 ல் முழுப் புரட்சி இயக்கம் நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஏன் நீங்கள் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது?

ஒரு வீடு தீப்பற்றி எரியும் பொது அதை முதலில் அணைப்பது தான் விவேகம். அதை விடுத்து தீ பற்றியதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்க சட்டம் கொண்டு வருவதில் முனைந்திருந்தால் வீடு சாம்பலாகி விடும். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதுவரை நாட்டைக் கொள்ளை அடித்தது தெரிந்தும், அதனைக் கண்டிக்காமல், பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட, இப்போதைய மன்மோகன் சிங் அரசு மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? உங்களைச் சுற்றிலும் உள்ள காங்கிரஸ் ஆதரவு கைக்கூலிகளிடமிருந்து நீங்கள் விடுபடுவது எப்போது?

வெறும் 60 கோடி போபர்ஸ் ஊழலை முன்னிறுத்தி விஸ்வநாத் பிரதாப் சிங் ராஜீவ் காந்தி அரசை வீழ்த்தியது (1989) சமீபத்திய சரித்திரம். அதைவிட லட்சம் மடங்கு அதிகமான ஊழலை செய்துள்ள தற்போதைய மத்திய அரசை ஏன் நேரடியாகக் கண்டிக்காமல் அமைதி காக்கிறீர்கள்? உங்களைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்யும் காங்கிரஸ்காரர்களைப் பார்த்த பின்னரும், ஏன் அதே ஊழல்வாதிகளிடம் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

'போராட்டங்களில் சமரசம் ஒரு உத்தி' என்று மகாத்மா காந்தியை நீங்கள் முன்னுதாரணமாக சொல்லக் கூடும். அவர் பேச்சு நடத்தியது ஆதிக்கம் செலுத்திய அந்நியனிடம். அவர் ஆங்கிலேரிடம் பேச்சு நடத்தியதே அதைக் காட்டி, அஞ்சிக் கிடந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கத் தான். ஏனெனில் அப்போது அரசியல் ரீதியாக நாடு ஒருங்கிணைக்கப் பட்டிருக்கவில்லை. அன்றைய காலம் வேறு. சுதந்திரம் பெற்ற மக்களான நாம், நம்மை அரிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் அதே போன்ற கோரிக்கை மனு போராட்டங்களைத்தான் நடத்த வேண்டுமா? நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னரும், மக்களிடம் போர்க்குணம் இல்லாமல் இருப்பதை நீங்களேனும் மாற்ற வேண்டாமா?

இன்றைய மத்திய அரசில் ஊழல் கொடிகட்டிப் பறக்க என்ன காரணம் என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றி சிதறிக் கிடப்பதே மன்மோகன் அரசின் பலம் என்பதை அவர்களும் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான கட்சிகளாகவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவையாகவும் உள்ளன. ஆனால் அவை இரண்டும் ஜென்மப் பகை கொண்டிருப்பது தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆசுவாசம் அளித்து வருகிறது. பிற கட்சிகளை விலை கொடுத்து வாங்கவும் பேரம் பேசி மயக்கவும் காங்கிரஸ் கட்சியால் முடியும் நிலையில், வலதுசாரிக் கட்சியான பாஜகவும் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் இணைந்தால் ஊழல் அரசை ஒரேநாளில் வீட்டிற்கு அனுப்ப முடியும், இதனை ஏன் நீங்கள் முன்னின்று நிகழ்த்தக் கூடாது?

இதனைத் தவிர்க்கும் வகையில் 'அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல்மயமானவை' என்ற பொதுவான கருத்துடன் நீங்கள் எதிர்க்கட்சிகளைப் புறக்கணிப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை. எல்லாக் கட்சிகளும் ஊழல்மயமானவையாகவே இருக்கட்டும். அவற்றில் மிக அபாயமானது எது என்பதை நிகழ்காலத்தில் நின்று யோசிக்க வேண்டாமா? லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்தான் வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துதான் உள்ளீர்களா?

லோக்பால் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் வேடம் போடும் காங்கிரஸ் கட்சி அதே நாடகத்தைத்தான் உங்கள் குழுவுடனும் நடத்துகிறது. எதிர்க்கட்சிகளை அவமதிப்பதற்காக உங்களை ஒருசமயம் தூக்கி நிறுத்தும் காங்கிரஸ் கட்சி, பிறகு நீங்கள் ஒத்துவரவில்லை என்றதும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறது. இந்த நாடகங்கள் எத்தனை நாளுக்கு? நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டவே தாமதிக்கும் காங்கிரஸ் கட்சி, நடப்புக் கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றும் என்று இன்னமும் நீங்கள் பரிபூரணமாக நம்புகிறீர்களா? பிறகு எதற்காக ஆகஸ்ட் 16 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்கிறீர்கள்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதா படும் பாடு நீங்கள் அறிந்தது தானே?

கருப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம்தேவ் அவர்களின் போராட்டம் (2011, ஜூன் 4) தில்லி ராம்லீலா மைதானத்தில் அதிகார மமதையாளர்களால் குலைக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து தில்லி, ராஜ்காட்டில் ஜூன் 8 ல் நீங்கள் உண்ணாவிரதம் இருந்தீர்கள். நீங்கள் ஏன் அதே ராம்தேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடக் கூடாது? ஒன்று தெரியுமா? நீங்கள் ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ராம்தேவ் வடிவமைத்து வந்ததும், அதை முறியடிக்கவே ஆங்கில ஊடகங்களும் அரசு சார்பு என்.ஜி.ஓ.க்களும், உங்கள் உண்ணாவிரதத்தை முன்னிறுத்தின என்பதும் நீங்கள் அறிவீர்களா?

உங்களை மிகையாகக் காட்டி நாடகம் ஆடுபவர்களை விட உங்களையே முன்மாதிரியாகக் கொண்டு போராட நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் பட்டாளம் தயாராக உள்ளதை நீங்கள் அறியாமல் போனால், எதிர்காலத்தில் உங்கள் போராட்டம் மிக எளிதாக முறியடிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது. திக்விஜய் சிங்கின் மிரட்டல் கோமாளித்தனமானது என்று சாதாரணமாக ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை விடுத்து திக்விஜய் பினாத்துவதாக சோனியாவிடம் நீங்கள் புகார் செய்து கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து பரிதாபப்படவே முடியும்.

anna_hazare_lokpal_hindutva_supportஉங்கள் மீதான அவதூறு பிரசாரத்தில் ஓர் அங்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் உங்களை தொடர்பு படுத்துவது. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் காங்கிரஸ் தந்திரம் என்பதை புரிந்துகொள்ளாமல் ஏன் எதிர்வினை ஆற்றுகிறீர்கள்? இந்தக் குற்றச்சாட்டின்மூலமாக, தன்மீதான குற்றச்சாட்டுகளை திசை மாற்றும் லாவகம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கிறது. தவிர, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றிய ஏற்கனவே காங்கிரஸ் ஸ்தாபித்துள்ள எதிர்நிலை பிம்பத்தைக் கொண்டு உங்களை வீழ்த்த சதி செய்கிறது. இதற்கு நீங்கள் ராஜதந்திரமாக எதிர்வினை ஆற்ற வேண்டாமா? அதுதானே நல்ல தலைமைக்கு அழகு?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னணித் தலைவர்கள் பலர் உங்களால் உத்வேகம் பெற்றவர்களே. ராலேகான் சிந்தியில் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை நீங்கள் அறிவீர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான கிராம விகாஸ் பரிஷத்திற்கு நீங்கள் நல்ல வழிகாட்டுதல்களை அளித்துள்ளீர்கள். அவற்றை நீங்கள் மறைக்க முயன்றாலும் முடியாது. நல்ல விஷயங்களை ஏன் மறைக்க வேண்டும்? ஆனால் நீங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்துவதை ஏதோ தீண்டத் தகாத விஷயமாக இப்போது கருதுவதுபோலத் தெரிகிறது. இதற்கு உங்கள் தற்போதைய சகவாசதோஷம் காரணமாக இருக்கக் கூடும்.

இதே குற்றச்சாட்டு ராம்தேவ் மீது கூறப்பட்டபோது, ''ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க அனைவருக்குமே உரிமை உள்ளது" என்று ஒரே வரியில் பதில் கொடுத்தார் அவர். அந்தத் தெளிவு உங்களிடம் இல்லாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உங்கள் போராட்டம் ஊழலுக்கு எதிரான தன்முனைப்பை நாட்டு மக்களிடம் தூண்டாமல் உங்கள் தன்முனைப்பாகவே தேங்கிவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நடந்த ஜனநாயகத்தை மீட்கும் இயக்கத்திற்கு அடிநாதமாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். அதனை ஆரம்பத்தில் எதிர்த்த ஜே.பி பிற்பாடு மனம் திருந்தி ஆர்.எஸ்.எஸ்.சை மனமாரப் பாராட்டியது வரலாறு. ஜனதா அரசு அமைந்ததிலும் ஜனதாதள அரசு அமைந்ததிலும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள பலருக்கு தொடர்புண்டு. ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மீது இப்போதைய மன்மோகன் அரசு மீது கூறப்படும் அளவற்ற ஊழல் புகார்கள் போல புகார்கள் கூறப்பட்டதில்லை. அவ்வாறு குற்றச்சாட்டுகள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்பதை நாட்டுமக்கள் போலவே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ்.காரர் தான். உங்களைப் போலவே எளிய வாழ்க்கை வாழும் பல்லாயிரக் கணக்கான தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உண்டு. இவற்றை நீங்களும் அறிவீர்கள். பிறகு ஏன் நீங்கள் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பாவனையில் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

ஊழல் என்பது மேலிருந்து கீழே பாய்வது மட்டுமல்ல. கீழிருந்தும் மேலே உயர்வது. நாட்டு மக்களில் பெரும்பாலோர் ஊழல் ஒரு பொருட்டில்லை என்று எண்ணுகின்றபோது இரு திசைகளிலும் ஊழல் பிரவாகமாக ஓடும். அதையே இப்போது நாம் காண்கிறோம். தனிமனிதன் சரியாகாமல், நாட்டுப்பற்றுள்ள குடிமகன் உருவாகாமல், சட்ட மிரட்டல்களால் குற்றங்களை ஒழித்துவிட முடியாது. இப்போதும் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன; அவற்றில் பிரதமரையும் கூட விசாரிக்க முடியும். ஆனால் அதனால் பலன் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. பிறகு லோக்பால் சட்டம் கொண்டுவந்தால் மட்டும் அது முறையாகக் கடைபிடிக்கப்பட்டு விடுமா? நீங்கள் சிந்திக்க வேண்டும்.

லோக்பால் சட்டம், ஈசன் மீது விழுந்த பிரம்படி அனைவருக்கும் விழுவது போல அமையும் என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமது மக்கள் சுரணையற்றுப் போய் பல ஆண்டுகளாகி விட்டதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். உண்மையில் லோக்பால் சட்டத்திற்காகப் போராட்டத்தை நீங்கள் குறுக்கிக் கொள்வது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மறைத்தபின், கொக்கைப் பிடிக்கப் போடும் திட்டமாகவே தெரிகிறது.

இப்போதைய தேவை சட்டமல்ல; மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை ஒருங்கிணைத்து அவர்களை மேலும் நல்வழிப்படுத்துவதே. மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம். இதனை உங்களால் நிச்சயமாக சாதிக்க முடியும். நாடு உங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது; இதை நீங்கள் தட்டிக் கழிக்கக் கூடாது. அனைத்து அரசியல்வாதிகளையும் ஏசிவிட்டு, அரசியலை நீங்கள் சுத்தம் செய்துவிட இயலாது.

பெருமதிப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களே,

இக்கடிதம் உங்களைப் புண்படுத்த அல்ல. நீங்கள் எங்களைப் பண்படுத்த வேண்டும் என்ற ஆதங்கமே இக்கடிதத்தின் சாரம்.

நீங்கள் தனித்துவமானவர் என்பதை உங்கள் கட்டற்ற நடவடிக்கைகள் வாயிலாக அரசுக்கு நிரூபியுங்கள்.

உங்கள் தலைமை மூலமாக நாட்டு மக்களை சுத்திகரியுங்கள்.

தன்னலமற்ற உங்கள் வாழ்வின் தொடர்ச்சியாக அரசியல் மாற்றத்திற்கு அறைகூவல் விடுங்கள்.

இவையே இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை. மதியாதார் தலைவாசலில் உண்ணாவிரதம் இருப்பதை விட, அறிவுப்பூர்வமான வழி இதுவே. இதனை நீங்கள் உணர்ந்தால் நாடு நலம் பெறும். செய்வீர்களா?

தாழ்மையுடன் வேண்டும்,

ஹசாரே தாசன்

Re:Gurumoorthy Speech -Dinamani

குடும்ப அமைப்பும், கலாசாரமும்தான் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது:
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி



கூட்டத்தில் பேசுகிறார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.
ஈரோடு, ஜூலை 4: நமது குடும்ப அமைப்புகளும், கலாசாரமும்தான் நம்முடைய பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.  தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க ஈரோடு கிளை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்திய பொருளாதார அமைப்பு என்ற தலைப்பில் அவர் பேசியது:  மேற்கத்திய நாடுகளில் சேமிக்கும் பழக்கம் மக்களிடையே இல்லை. இந்தியாவில் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் உள்ளது. மேலைநாடுகளில் திருமண முறிவுகள் சகஜமானது. இதனால் நாம் யாருக்கும் பணம் சேர்த்து வைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் உள்ளது.  இந்தியாவில் குடும்ப அமைப்புகள் மிக நன்றாக உள்ளன. எதிர்காலத்திற்குப் பணம் தேவை என நாம் எண்ணுகிறோம். 1992-ல் உலகமயமாக்கலின்போது இந்தியாவின் சேமிப்பு 21 சதவீதம். அப்போது பல மேலைநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் இந்த அளவு சேமிப்பு தேவை இல்லை. இதை வைத்து தொழில் தொடங்கலாம் எனக் கூறினர்.  இது நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என இந்திய நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்தனர்.  இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். தற்போது இந்தியாவின் சேமிப்பு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1977-ல் அமெரிக்கா வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நாடாக இருந்தது. தற்போது பல நாடுகளிடம் கடன் வாங்கும் நாடாக அது உள்ளது. ஏனெனில் அங்கு மக்களிடையே சேமிக்கும் பழக்கம் இல்லை.  நாம் நமது சுயபலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடு என்றால் உயர்வாக எண்ணுவதை நாம் கைவிட வேண்டும். இந்தியா எந்தத் துறையிலும் சோடை போகவில்லை.  ஆனால் மேலைநாட்டினர் இந்தியாவைக் குறைத்துக் கூறுவதால், நாம் நம்மைப்பற்றி தவறான நிலையை எண்ணுகிறோம். இந்தியா 2025-ல் பெரும் சக்தியாக உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2045-ல் உலகின் முக்கிய நாடாக இந்தியா மாறிவிடும்.  நாட்டின் வளர்ச்சியிலும், சமூக மாற்றத்திலும் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை அறிந்து அந்த வழியில் பட்டய கணக்காளர்கள் நாட்டின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  இப்பணி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுவது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய நகரங்களில் மட்டுமே தேவையாக இருந்த இப்பணி தற்போது கிராமப்பகுதிகளுக்கும் தேவையாக மாறிவிட்டது.  இப்பணி மூலம் சமூக முன்னேற்றத்திற்கான வழியை பட்டய கணக்காளர்கள் ஆராய வேண்டும் என்றார். 

Source - Dinamani July 05,2011

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

மிரண்டுகிடக்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!
முதல்வராகப் பொறுப்​பேற்று 50 நாட்கள்கூட முடியாத நிலையில்... எட்டு மாவட்ட செயலாளர்களைத்தூக்கி வீசி இருக்கிறார் ஜெயல​லிதா. விசாரித்தால், 'கருணா​​நிதிக்கு எப்போதும் சீனியாரிட்டி முக்கியம். ஆனால், ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டிதான் முக்கியம்’ என்கிறார்கள்!
மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ''தி.மு.க-வில் பெரிய பதவியில் இருக்கிறவர் எவ்வளவு பெரிய தப்பு பண்ணினாலும், யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா, எங்க கட்சியில் ஒருத்தன் நாலு பேரு பார்க்கிற மாதிரி சத்தமாக் கத்திப் பேசினான்னு தலைமைக்குப் புகார் போனாலே போதும்... பதவியைவிட்டுத் தூக்கிடுவாங்க. அம்மா பதவியேற்றதும் எங்களை எல்லாம் கண்காணிக்க எப்படி தனியா ஒரு டீம் போட்டாங்களோ, அதைப்போலவே மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்கவும் உத்தரவு போட்டாங்க. அமைச்சரவைக் கூட்டத்திலும், 'ஆளும் கட்சி ஆகிட்டோம்கிற மிதப்பில், நம்ம கட்சி மாவட்டச் செயலாளர்கள் யாராவது ஆட்டம் போடுறாங்களான்னு நீங்களும் கவனிங்க. யாராவது தப்பு பண்றது தெரிஞ்சா, உடனடியா என் கவனத்துக்குக் கொண்டுவாங்க. யாரு தப்பு செஞ்சாலும், பழி என் மேல்தான் விழும்கிறதை மனசுல வெச்சு நடந்துக்கோங்க’னு அம்மா சொல்லி அனுப்பினாங்க. அப்படி பிரச்னைகளுக்கு உள்ளான மாவட்டச் செயலாளர்களோட பதவிகள்தான் இப்ப காலி ஆகியிருக்கு!'' என்றார்.
பதவிகள் பறிக்கப்பட்டதற்கான பின்னணிபற்றி கார்டன் வட்டாரத் தொடர்பில் இருக்கும் சிலரிடம் விசாரித்தோம். ''விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.சிவசாமி தேர்தல் சமயத்தில் சரியா வேலை செய்யவில்லை என்பது புகார். உளவுத் துறையும் அதை உறுதி
செய்ய... பதவி காலி. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, மாவட்டத்தில் 16 டாஸ்மாக் பார்களை தி.மு.க-வைச் சேர்ந்த நபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததா ஒரு ஆதாரம் அம்மாவுக்கு வர... முத்தையாவுக்குப் பதவி போச்சு. 'ஒரு மாவட்டத்துக்கு எதுக்கு இரண்டு மூன்று மாவட்ட செயலாளர்கள்?’னு அமைச்சர் ஒருத்தர்கிட்ட அம்மா கேட்க... அவரும், 'ஆமாம்மா, தேவை இல்ல. ஒருத்தர் போதும்’னார். 'அப்போ தூக்கிடுங்க. இனி நெல்லை மாவட்டச் செயலாளர் மட்டும்தான். மாநகர் மாவட்டச் செயலாளர் தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க!
சேலத்திலும் இதே மாதிரிதான். 'கிழக்கு, மேற்கு எல்லாம் வேண்டாம். மாநகர் ஒருத்தர், புறநகர் ஒருத்தர்னு போதும். கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் எஸ்.கே.செல்வத்தைத் தூக்கிட்டு மொத்தப் பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுத்துடலாம். செல்வத்துக்கு வேறு எதாவது செய்யலாம்’னு அம்மா சொன்னாங்க...' என்றவர்கள், மற்ற மாற்றங்களைப் பற்றியும் தொடர்ந்தனர்.
''சின்னம்மாவின் சொந்தக்காரரான ராவண​னுக்கும் நீலகிரி மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும் சில பிரச்னைகள். சின்னம்மா மூலமா இந்த விஷயம் அம்மாவோட கவனத்துக்கு வந்தது. உடனே அங்கேயும் ஆக்ஷன். புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ-வான நெடுஞ்செழியனுக்கும், மாவட்டச் செயலாளர் கருப்பையாவுக்கும் தேர்தலுக்கு முன்பு இருந்தே பிரச்னை. தேர்தல் நேரத்தில் சரியா வேலை செய்யவில்லை என்று கருப்பையா மீது புகார்.
இதைப் போலவே காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வும் சிவகங்கை மாவட்டச் செயலாள​ருமான சோழன் சித.பழனிசாமி, அமைச்சராக இருக்கும் கோகுல இந்திராவைப்பற்றி வெளிப்படையாகவே சில விஷயங்களைப் பேசியதாகச் சொல்றாங்க. காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் கோகுல இந்திராதான் பொறுப்பாளர். இரண்டு மாவட்டச் செயலாளர்களின் பிரச்னைகளையும் கோகுல இந்திராதான் அம்மாவோட கவனத்துக்குக் கொண்டுவந்தாங்க. உடனே நடவடிக்கை எடுத்துட்டாங்க.
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த செல்லூர் ராஜு, தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் பார் ஒதுக்கீடு செஞ்சதாகவும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் கடைகளில் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்வதாகவும் போலீஸ் ரிப்போர்ட் வைக்கப்பட்டது. திருச்சிப் புறநகர் மாவட்டச் செயலாளர் சுப்பு என்கிற சுப்ரமணி மீது எம்.எல்.ஏ. ஸீட் வாங்கித் தருவதாகச் சொல்லி சிலரிடம் பணம் வாங்கியதாக புகார். உளவுத் துறை ரிப்போர்ட்டும் திருப்தியாக இல்லாததால், அவரை நீக்கிட்டாங்க. இது எட்டோடு நிற்கப்போவது இல்லை. புகார்கள் வரும்பட்சத்தில், அம்மாவோட ஆக்ஷன் தொடரும்...'' என்று முடித்தனர்.
ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அரண்​டு கிடக்கிறார்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள்!
- கே.ராஜாதிருவேங்கடம்,
படம்: சு.குமரேசன்

மதுரையில் சி.பி.ஐ.! சித்தூரில் போலீஸ்!

மதுரையில் சி.பி.ஐ.! சித்தூரில் போலீஸ்!


நெருக்கடியில் அழகிரி..
ரு வழியாக, மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதித்துவிட்டது மதுரை உயர் நீதிமன்றம். இதனால், மதுரை மாநகரமே பரபரப்பில் இருக்கிறது.
கடந்த 9.5.2007-ல் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் பட்டப்பகலில் தாக்கப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் பலியானார்கள். தி.மு.க. பிரமுகரான 'அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் சாட்சிகள் உள்ளிட்ட அனைவரும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். இதனால், கடந்த 9.12.09-ல் தீர்ப்பு அளித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து, 208 நாட்கள் கழித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது சி.பி.ஐ. இந்தக் கால தாமதத்துக்கான காரணத்தையும் சொன்னது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ''இந்த அப்பீல் மனுவை மத்திய அரசின் அனுமதி பெற்று சி.பி.ஐ-யின் சிறப்பு வழக்கறிஞர்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல், சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மனுவைத் தாக்கல் செய்கிறார். இது சரியானது அல்ல. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!'' என்று வாதம் வைக்கப்பட்டது. இதன் மீது விவாதம் முடிந்து,  தீர்ப்பு கடந்த 29-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ''அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போதிய முகாந்திரம் இருக்கிறது...'' எனத் தீர்ப்பு தந்திருக்கிறது நீதிமன்றம்.
தேர்தல் பிரசாரத்தின்போது, 'தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கு உள்ளிட்டவை மீண்டும் விசாரிக்கப்படும். அதற்குக் காரணமானவர்கள் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்!’ என்று முழங்கிய ஜெயலலிதா, முதல்வரானதுமே இது தொடர்பாக சட்டப் புள்ளிகளிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு உள்ளார். தா.கி. வழக்கில் இருந்த முக்கியமான சில ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டிய சட்டப் புள்ளிகள், ''தா.கி. வழக்கைவிடவும் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தினால், குற்றவாளிகளைத் தண்டிக்க வலுவான ஆதாரங்களும் முகாந்திரங்களும் இருக்கின்றன...'' என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே ஜெயலலிதா, ''இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமான அத்தனை கோப்புகளையும் திரட்டுங்கள்...'' என்றாராம். இப்போது, எல்லாம் தயார்.
தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு விசாரணை எப்படிப் போகும் என்று சி.பி.ஐ. புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம். ''குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட கட்சியே ஆளும் கட்சியாக மாநிலத்தில் இருந்ததால், சாட்சிகளாக இருந்த எஸ்.ஐ-க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளே பிறழ் சாட்சியம் அளித்தார்கள். சம்பவம் நடந்தபோது ஆவேசப்பட்டுப் பேசிய சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஊழியர்கள்கூட, நெருக்கடிகள் காரணமாக சரியாக சாட்சியம் அளிக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை வேறு. பிறழ் சாட்சியம் அளித்த போலீஸ் அதிகாரிகள், இப்போது தைரியமாக உண்மையைச் சொல்வார்கள்.
தாக்குதல் நடத்த வந்தவர்கள், தினகரன் பத்திரிகையைத் தீயிட்டுக் கொளுத்தி மறியல்தான் செய்தார்கள். 'இதெல்லாம் போதாது... இன்னும் ஏதாவது செய்யுங்கள்’ என்று அவர்களுக்கு யாரோ பிரஷர் தர... அதன் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கி, அலுவலகத்தைக் கொளுத்தினார்கள். ஸ்பாட்டில் ஆஜரான அந்தப் பத்திரிகையாளர்கள், தாக்குதல் நபர்களின் அராஜகங்கள் அனைத்தையும் படம் பிடித்து உள்ளனர். மறைக்கப்பட்ட அனைத்தும் இனி வெளியில் வரும்... வரவைப்போம்!'' என்றனர் அந்த சி.பி.ஐ. புள்ளிகள்.
இப்போது, அப்பீலுக்காக நீதிமன்றப் படி ஏறி இருக்கும் சி.பி.ஐ., முக்கியப் புள்ளி ஒருவரை அப்ரூவர் ஆக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறதாம். அது நடந்தால், தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் திகில் திருப்பங்கள் அரங்கேறும்!
மதுரை நிலைமை இப்படி இருக்க... தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் விசாரணை நடந்த சித்தூர் நீதிமன்றத்திலும், அரசு அதிகாரிகள் போய் இறங்கி உள்ளார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் அத்தனை ஆவணங்களையும் கேட்டு மனுத் தாக்கல் செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இந்த வழக்கில் அழகிரி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் மேல் முறையீடு இதுவரை செய்யப்படவில்லை. அதனையும் செய்ய சட்டத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'இந்த இரண்டு வழக்குகளையும் வைத்து அழகிரியை மடக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்’ என்கிறது கோட்டை வட்டாரம்!
- குள.சண்முகசுந்தரம்
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்