Friday, June 17, 2011

தயாவிடம் பாதி... கனியிடம் மீதி!

தயாவிடம் பாதி... கனியிடம் மீதி!

கோபாலபுரம் 'மோதல்' பாரதம்
ப.திருமாவேலன், படம்: என்.விவேக்
''குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன!
 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது!
படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல்லிவிட முடியாது. சரித்திரத் தேர்ச்சிகொண்டவர்கள் இதை 'யதுகுல’ மோதல் போன்றது என்றே வர்ணிக்கிறார்கள்.
பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெற்ற பிள்ளைகளுக்கு இடையே அரங்கேறிய சகோதரச் சண்டையே... மகாபாரதம்.  இறுதியில் காந்தாரியின் கோபம் எல்லாம் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியதாகவும்... 'சூழ்ச்சியால் நீ என் குலத்தை அழித்தாய்... கிருஷ்ணா, உன் குலமும் தமக்குள் அடித்துக்கொண்டு அழியும்’ எனச் சாபம் கொடுத்ததாகவும்... இதனால், மதுராவை ஆண்ட கடைசி மன்னனாக கிருஷ்ணனே ஆனதாகவும் கிளைக் கதைகள் உண்டு!
அப்படி ஒரு நெடுங்கதையின் கிளைக் கதையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.
அசைக்க முடியாத ஆளும் கட்சியாய் கோலோச்சி வந்த தி.மு.க, இன்று இழந்திருப்பது அரியாசனத்தை மட்டும் அல்ல... தன் கட்சி யின் ஒட்டுமொத்த இமேஜையும்!
2007 மே 9... தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்ததாக யாருக்குச் செல்வாக்கு? என்ற கருத்துக் கணிப்பை, 'தினகரன்’ நாளிதழ் கணித்துச் சொன்னது. 74 சதவிகித செல்வாக்கு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் கனிமொழிக்கு 1 சதவிகிதமும் என்றது அந்த சர்வே முடிவு. இதுபோக... மீதி உள்ள சதவிகித எண்ணிக்கை 'மற்றவர்கள்' என்றும் சொன்னது. ''அண்ணன் - தம்பி சண்டையை மூட்டுவது மட்டும் அல்ல இதன் நோக்கம்... அந்த 'மற்றவர்கள்' என்பது தயாநிதி மாறனை மனதில்கொண்டுதான்'' என்று அறிவாலயத்திலும் மதுரையிலும் கொதிப்பு கிளம்பியது.
அந்தக் கணிப்பை ஸ்டாலின் ரசித்தார். அழகிரி வெறுத்தார். கனிமொழியின் நலம் விரும்பிகளும் எரிச்சலானார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரை யில் நாளிதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு கொளுத்தப்பட்டது. மூன்று உயிர்கள் பலியாகின. அன்றைக்கு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அன்றைய உள்துறைச் செயலாளர் மாலதிக்கு போன் செய்து மிரட்டியதாக மின்சாரத் துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமியே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ''மதுரையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டதாக ஆற்காடு வீராசாமி சொன்னார். மகனுக்கும் பேரனுக்குமான மோதலில், மகன் பக்கம் கருணாநிதி நின்றார். மே 13-ம் தேதி தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய... கோபாலபுர மெகா பாரதம் வேகம் கண்டது!
முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு டெல்லி விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள அவரது குடும்பத்துக்குள் இருந்தே வாரிசை அழைத்து வந்தவர் கருணாநிதிதான். ''தயாநிதி மாறன் தேர்தலில் நிற்கப்போகிறாரா?'' என்று அதற்கு முன் ஆனந்த விகடனுக்கான தனிப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்டபோது, ''இல்லை! அண்ணன் கலாநிதியை விட்டுவிட்டு தம்பியை ஏன் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் கருணாநிதி. அவரே, பிறகு தயாநிதியை மத்திய சென்னை எம்.பி. ஆக்கினார். அமைச்சரும் ஆக்கினார். அதுவும் கேபினெட் அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார். அதற்கு விமர்சனங்கள் வந்தபோது வக்காலத்தும் வாங்கினார். ''தயாநிதி அரசியலுக்கு வருவார். இப்படி வளர்வார் என்று நான் எதிர்பார்க்கலே. அவர் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால், திருஞான சம்பந்தன் என்று பாராட்டி இருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே'' என்பது கருணாநிதி தந்த வாசகங்கள். ஆனால், அது மதுரைச் சம்பவத்துக்குப் பிறகு மொத்தமாகத் திசை மாறிப் போனது.
தயாநிதி கவனித்து வந்த டெல்லி காரியங்களை இனி யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, ''நம்பிக்கையாக இருக்கணும். இங்கிலீஷ் நல்லாத் தெரியணும். தங்கச்சி கனி இருக்குதே...'’ என்று மு.க.அழகிரிதான் அப்போது எடுத்துக் கொடுத்தார் என்பார்கள். அந்தச் சமயத்தில், ''கனிமொழிக்கு ஏதாவது பதவி கொடுப்பீர்களா?'' என்று கேட்கப்பட்டது. ''காய், கனி ஆகும்போது பார்க்கலாம்'' என்றது மு.க-வின் வாய்ஜாலம். அடுத்த சில வாரங்களில் கனிமொழி மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். தயாநிதி வகித்து வந்த அதே தொலைத்தொடர்புத் துறை, ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ராசாவுக்கும் தயாநிதிக்கும் இடையே ஓர் அறிக்கைப் போர் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத் துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தயாநிதி மீது ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி திகிலைக் கிளப்பினார். இன்று '2ஜி’ பற்றிப் பேசுபவர்கள்கூட இதை ஏனோ மறந்துவிட்டார்கள்!
இன்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. குடும்பத்தின் ஒவ்வொரு தலையாகக் கபளீகரம் செய்துவரும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அசிங்கங்கள் மெள்ள மெள்ள மீடியாவின் வாசலுக்கு வரத் துவங்கியதும், அந்தக் குடும்ப மோதலுக்குப் பிறகுதான்!
'மீடியாவை வைத்துக்கொண்டுதானே அதிகாரம் செலுத்துகிறார் தயாநிதி. அதையே நாமும் செய்தால் என்ன?’ என்று அழகிரி தரப்பு யோசித்தது. அதன் பிறகுதான் 'கலைஞர் டி.வி.’ உதயம் ஆனது. சுமங்கலி கேபிளுக்குப் பதிலாக இவர்கள் ராயல் கேபிளைத் தொடங்கினார்கள். அதாவது, தயாநிதி மாறனின் இரண்டு பலங் களைப் பலவீனப்படுத்தத் தொடங்கினார்கள்!
டெல்லி குருஷேத்திரத்தைக் களமாக்கி, தி.மு.க. குடும்பம் இரண்டு அணிகளாக நடத்திக்கொண்ட அந்த 'நவீன பாரத' யுத்தத்தில் சூழ்ச்சிகளுக்கு எந்தத் தரப்பிலுமே பஞ்சம் இல்லை. நஷ்டங்களும் அப்படியே!
2008 செப்டம்பர், அக்டோபரில் ஸ்பெக்ட்ரம் டெண்டர்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அடுத்த மாதமே, இது மீடியாக்களில் வெளியானது. நவம்பர் 3-ம் தேதி யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திராவிடம் டெலிபோனில் பேசிய நீரா ராடியா, ''மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டன. இது சன் டி.வி, ஜெயா டி.வி-யில் வருகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துகொடுத்து, ஆ.ராசா பயன் அடைந்ததாக அவை சொல்கின்றன. ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி. மாறன் குரூப்பைச் சேர்ந்தது'' என்று குழப்பம் அடைந்தவராகப் பேசுகிறார். அதாவது, 'தனது பதவியைப் பறித்த தி.மு.க-வைப் பழிவாங்கவே, இந்தச் செய்திகளை தயாநிதி மாறன் லீக் செய்தாரோ’ என்ற அர்த்தத்தில் நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.
மோதலை முடித்துக்கொள்ள இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்து, வெளியி லும் உள்ளேயுமாகப் பல உடன்பாடுகள் ஏற்பட்டு, எல்லோரும் கூடிச் சிரித்து, 'கண்கள் பனிக்க... இதயம் இனிக்க' புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாலும், மோதல் நெருப்பின் கங்குகள் அணையாமல் உள்ளே கனன்றுகொண்டேதான் இருந்தன.
அது மட்டுமா... நெஞ்சம் இனித்த அந்த தினத் தன்று இரு தரப்பினரும் உள்ளே நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகள் உண்டு. சமாதான அறிவிப்பு ஸ்தலமான கோபாலபுரத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளுக்கு போன் செய்த கருணாநிதி, ''அவங்க எல்லாரும் தனியாப் பேசி ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது!'' என்றாராம். அதாவது, மாறன் சகோதரர்கள் மறுபடி கோபால புரத்துடன் உடன்பாடு கண்டதை சி.ஐ.டி. காலனி ரசிக்கவில்லை!
''தயாநிதி மாறன் மட்டும் அல்ல... அவரை ஆதரிப்பவர்களும் எனக்கு எதிரிகள்தான்'' என்று சொன்ன அழகிரியும், ''நான் என்ன தவறு செய்தேன்? அவரைப்போல் போட்டி வேட்பாளரை நிறுத்தி முன்னாள் சபாநாயகரைத் தோற்கடித்தேனா?'' என்று கேட்ட தயாநிதியும்... கை குலுக்கிக்கொண்டார்கள். ''நீதான் இங்கிலீஷ் நல்லாப் பேசுவியே!'' என்று அழகிரியால் ஆசீர்வாதம் செய்து அழைத்து வரப் பட்ட கனிமொழி, மீண்டும் தனித்துவிடப்பட்டார்.
ஸ்பெக்ட்ரம் புகாரோ, எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பலமான அலைவரிசையில் போட்டுத் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டெல்லி சென்ற கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கேட்கப்பட்டது. ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டது'' என்றார் அவர். கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் ஒன்றிணை வதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி முடிக்கப்பட்டுவிடும்?
தொடர்ந்து நடந்ததை நாடு அறியும்!
ஆ.ராசா, கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்தது... தயாளு அம்மாள் கை விலங்கில் இருந்து தப்பினார். ''அந்தக் குடும்பத்துல எல்லாரும் தப்பிட்டாங்க. கனிமொழி மட்டும் என்ன பாவம் செய்தார்? தயாநிதிதான் இது எல்லாத்துக்கும் காரணம்'' என்று சி.ஐ.டி. காலனியில் சோகமும் சீறலுமாகக் கேள்வி ஒலித்தது. இப்போது 'தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் வாக்குமூலம்' என்று புதிய புயல் வீசும் நிலையில், தி.மு.க. தரப்பு கவனமாக அமைதி காத்துக்கொண்டு இருக்கிறது - அடுத்து நடப்பதை எதிர் நோக்கி!
அலைக்கற்றை விவகாரம் ஆ.ராசா காலத்தில் இருந்து ஆரம்பமான விஷயம் அல்ல. தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த நேரத்திலும் சில முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று 'தெகல்ஹா’ சொல்ல... அவருடைய பதவி, சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கித் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. 'குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுவதாலேயே ராசா குற்றவாளி ஆகிவிட மாட்டார்’ என்று வக்காலத்து வாங்கிய கருணாநிதி, ''தயாநிதி தனது பிரச்னைகளைத் தானே பார்த்துக் கொள்வார்'' என்று சொன்னதன் உள் அர்த்தம் அந்தக் கனல் ஆறவில்லை என்பதையே காட்டுகிறது.
''ஆ.ராசா, கனிமொழி கைதுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று சொல்லும் ஒரு தரப்பு தி.மு.க-வினர், ''நாளைக்கு தயாநிதி மாறனுக்குச் சிக்கல் வலுத்தால் அதற்கு ஆ.ராசாவும் கனிமொழி யும்தான் காரணமாக இருப்பார்கள்'’ என்றும் சொல்லத் தவறவில்லை!
கருணாநிதியை, அவர் குடும்பத்து உட்பகையே உறக்கம் இல்லாமல் செய்துவிட்டது. இதில் இருந்து தப்பிக்க மந்திரக்கோல் எதுவும் இப்போதைக்கு அவர் கை வசம் இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும்... அது இரண்டாக உடைந்துபோனதாகவே சொல்லலாம்...
தயாவிடம் பாதியும்... கனியிடம் மீதியும்!

Source - Vikatan Magazine

Thursday, June 16, 2011

செய்திகள்...

செய்திகள்...

''ஸ்பெக்ட்ரம் தொடர்பான சம்பவங்களையும் மீறி, தி.மு.க-  காங்கிரஸ் உறவு நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதர வாக இருக்கிறோம்!''
 - குலாம் நபி ஆசாத்
''பாபா ராம்தேவுக்கு, வெளிநாட்டுத் தலைவர்போல விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளித்த அரசு, அவர் தங்களுக்கு உடன்படவில்லை என்றவுடன், அடக்குமுறையில் ஈடுபட்டது!''
- அத்வானி
''காந்தி சமாதி முன் நடந்த சத்யாகிரகப் போராட்டத்தில் நான் தேசபக்திப் பாடல்களுக்கு ஏற்றபடிதான் நடனம் ஆடினேன். இதில் தவறு இல்லை!''
- சுஷ்மா ஸ்வராஜ்
''லோக்பால் மசோதா நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். அது எப்போது நிறைவேற்றப்படும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது சாத்தியம் அல்ல!''
- பிரணாப் முகர்ஜி
''சல்மான் கானுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவருக்கு யாரையாவது பிடித்துவிட்டால், அவர்களுக்காக எதையும் செய்வார்!''
- அசின்

டார்கெட் தயாநிதி!

டார்கெட் தயாநிதி!

முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர்  தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்!
தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது...
''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை.
ஆ.ராசா என்ன செய்தார்? ஒரு டெலிகாம் சர்க் கிளில், எத்தனை மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உரிமங்களைக் கொடுக்கலாம் என்கிற முறையைக் கொண்டுவந்தார். இந்த முறை தொலைத் தொடர்புத் துறை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறி 2005 டிசம்பர் மாதமே தயாநிதி மாறன் அனுமதி கொடுத்து உள்ளார். ஆக, மாறன்தான் விதிமுறைகளை மீறி முதலில் செயல்பட்டவர். இத்தகைய அனுமதிக்கு, தொலைத் தொடர்பு கமிஷனின் அனுமதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஆலோசனை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இவற்றில் ஒன்றைக்கூட பெறாமல் தயாநிதி மாறன் உரிமங்களைக் கொடுத்தார். குறைந்த பட்சம் இதை டிராய் சிபாரிசின் அடிப்படையிலாவது செயல்படுத்தி இருக்க வேண்டும். டிராயின் சிபாரிசு 2007-ல்தான் வந்தது. அப்படியானால் மாறன் முன்கூட்டியே எப்படிச் செய்தார்?
பல ஆபரேட்டர்களை அனுமதிப்ப தன் மூலம் ஆரோக்கியமான போட்டியையாவது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்தி யில் ஏற்படுத்தினார்களா? இல்லை என்பதே என் வாதம். பால்வா போன்ற - தொலைத் தொடர்புத் துறைக்கே சம்பந்தம் இல்லாத - ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை இந்தத் துறைக்குள் கொண்டுவந்தது எப்படி?'' என்று கேள்விகளை வரிசையாக அடுக்கிய அருண்ஷோரி, மேலும் பல விஷயங்களையும் எடுத்து வைக்கிறார்.
''என்.டி.ஏ. ஆட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை அடுத்து, டிராய் அமைப்பு ஒருங் கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமம் சம்பந்தப்பட்ட சிபாரிசுகளை 18 மாதங்களுக்குப் பின்னர் கொடுத்தது. அந்த சமயத்தில் என்.டி.ஏ. ஆட்சி இல்லை. இந்த இறுதி சிபாரிசு வந்த 2005 அக்டோபரில் தயாநிதி மாறன்தான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர். ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்களை வழங்குவது குறித்து அந்த சிபாரிசில் சொல்லப்பட்டது. ஆனால், மாறன் இந்த சிபாரிசுகளைக் கிடப்பில் போட்டார். இதனால், டிராய் சேர்மன் பிரதீப் பைஜாலுக்கும் மாறனுக்கும் மோதல் நடந்தது. பைஜால் இந்த சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாறன் மறுத்தார். காரணம், ஒருங்கிணைந்த அணுகுமுறைச் சேவையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவையிலும் ஈடுபடலாம் என்று இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக மாறன் இந்த சிபாரிசை முடக்கத் திட்ட மிட்டார்.
மூன்று விதங்களில் தயாநிதி மாறன் பதவிக் காலத்தில் தவறுகள் நடந்து இருக்கின்றன. ஒன்று, டிராய் சிபாரிசு இல்லாமல் ஏராளமான தொலைபேசி ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கியது. இரண்டா வது, ஏர்செல் டிஷ்நெட் பங்குகளை அப்போலோ நிறுவனத்தையும் துணையாக்கி மாற்றியது. மூன்றாவது, 2003-ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்கள் வழங்குவது குறித்து டிராய் கொடுத்த சிபாரிசை முடக்கியது. இதனை எல்லாம் முறையாக விசாரித்தால், உண்மைகள் வெளிவரும். இந்த வகையில் சி.பி.ஐ-யின் அடுத்த டார்கெட் மாறன்தான்!'' என்றார்.
இப்போது சி.பி.ஐ. முன்பு வாக்குமூலம் கொடுத்து, பழைய யுத்தத்தைப் புதுப்பித்து இருக்கிறார் சிவசங்கரன். ஒரு பக்கம் சி.பி.ஐ-யே சிவசங்கரனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தகவல்களைக் கறப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், தமிழக அரசியல் புள்ளி களின் ஆதரவு கிடைக்கவும், அதையட்டியே சி.பி.ஐ-க்கு சிவசங்கரன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ சி.பி.ஐ-யின் புதிய அலுவல கத்தின் ஒன்பதாவது மாடி வரை சிவசங்கரன் படி ஏறிவிட் டார். ஆரம்பத்தில் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியேயும்... பின்னர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை அவர் கொடுத்த தாகச் சொல்லப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ. 2007 முதல் 2010 வரையிலான விஷயங்களை மட்டும் உள்ளடக்கி விசாரணையை முடித்து மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்போகிறது. அடுத்த கட்டமாக 2001 முதல் 2007 வரையிலான விசாரணையைத் தொடங்க வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், தயாநிதி மாறன் விவகாரம்தான் முன்னிலையில் இருக் கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை விற்கவைத்தார் என்று சிவசங்கரன் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுமார் 10 சாட்சி களை சி.பி.ஐ. முன் நிறுத்தத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருப்பவர்களாம். வங்கி அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களும் இதில் அடக்கம் என்று கூறப் படுகிறது.
இந்த சாட்சிகளோடு, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. சேகரிக்கும் எனத் தெரிகிறது. ஏர்செல் பங்குகளை வாங்கிய 'மேக்ஸிஸ்' அனந்த கிருஷ்ணனின் மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 'சன் டைரக்ட்'டில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டுக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் அனுமதியைப் பெறாமல் முடிவு எடுக்காது. இதன்படி, மத்திய அரசின் எஃப்.ஐ.பி.பி. பிரிவுக்கு மனு வந்து, 2007 மார்ச் 2 மற்றும் 19-ம் தேதிகளில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக, சன் டைரக்ட்டில் ஆஸ்ட்ரோ முதலீடு செய்ததை 2007 ஜூலை ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மாறன் 2007 மே மாதம் வரை பதவி வகித்தார். ''மேக்சிஸ் நிறுவனம் நான் அமைச்சராவதற்கு முன்பே எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது. 15 வருடங்களாகத் தொடர்பு உண்டு!'' என்பது தயாநிதி தரப்பு விளக்கமாக உள்ளது.
''தொலைத் தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்த கிருஷ்ண னின் 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பிரபல அப்போலோ குழுமத்தின் பிரதாப் ரெட்டி குடும் பத்தினர் பெற்று உள்ளனர். இவர்கள் டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனத்தின் பேரில் அந்த 26 சதவிகிதப் பங்குகளைப் பெற்று உள்ளனர். இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட் ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அனந்த கிருஷ்ணனுக்காக மறைமுகமாக இந்தப் பங்குகள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் இதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஊழல் விவகாரங்களில் சிக்கி காங்கிரஸ் அரசாங்கத்தின் பெயர் கெட்டு வருவதைத் தொடர்ந்து ஒரு தடுப்பணை போடுவதற்கு பிரதமர் முயற்சித்துள்ளார். அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், 'அனைத்து அமைச்சர்களும் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின்  சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடத்தை விதிகள் ஏற்கெனவே இருப்பவைதான். என்றாலும், இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமை யைக் காட்டுகிறது!
- சரோஜ் கண்பத்

Source - Vikatan Magazine

தமிழகம் காப்பாற்றப்பட்டது: ஜெ. உடன் ரஜினி பேச்சு


தமிழகம் காப்பாற்றப்பட்டது: ஜெ. உடன் ரஜினி பேச்சு
சென்னை, ஜூன்.16,2011
"நீங்கள் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது," என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார்.

"மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் முதலில் உங்களுடன் தான் பேச முடிவு செய்தேன்," என்றும் முதல்வரிடம் அவர் கூறினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட தகவல்:

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் முதலில் பேச வேண்டும் என்று முடிவு செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாகவும், அவர் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்து கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு, தான் இன்னும் ஒன்றரை மாதத்தில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

லதா ரஜினிகாந்தும், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு, சென்னையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக முதல்வர் நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Source - Vikatan Magazine

Wednesday, June 15, 2011

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

''அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்!''

மேலூர் கோர்ட்டில் சரண்டர் காட்சி!
த்தனையோவில்லங்​கங்களை சர்வசாதார​ணமாக எதிர்கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மேலூர் கோர்ட்டில் வெலவெலத்துப் போய் நிற்கும் அளவுக்கு இப்போது நிலைமை மாறி இருக்கிறது. தேர்தலின்போது தாசில்தார் தாக்கப்பட்ட வழக்குக்காக நீதிமன்றத்தில் சரண் அடைந்து, ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்!
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மேலூர் அருகே வாக்கு சேகரிக்கச் சென்றார் அழகிரி. 'அப்போது, அங்கு நடந்தவற்றை நான் வீடியோ எடுத்தேன். அதற்காக தி.மு.க-வினர் என்னைத் தாக்கினார்கள்!’ என்று போலீஸில் புகார் கொடுத்தார், மேலூர் தாசில்தாராக இருந்த காளிமுத்து. இது தொடர்பாக அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுபதி மற்றும் திருஞானம் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டது கீழவளவு போலீஸ்.
உடனே, அழகிரி உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றார்கள். இதற்கு மறுநாளே, ''தன்னை யாரும் தாக்கவில்லை. கலெக்டர் சகாயமும் மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியும் கட்டாயப்படுத்தியதால்தான் அப்படிப் புகார் கொடுத்தேன்!'' என்று பல்டி அடித்தார் காளிமுத்து. 'புகார் கொடுத்தவரே மறுப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தி.மு.க-வினர் நீதிமன்றத்தில் மனு போட்டனர்.
ஆனால், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியோ, ''சம்பவம் நடந்தது உண்மை. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால், உண்மையை கோர்ட்டில் சொல்வேன்!'' என்றார். இதனிடையே, முன்ஜாமீன் பெற்ற அழகிரி உள்ளிட்டவர்கள் 15 நாட்களுக்குள் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்து, பிணையில் ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவானது.
இது ஒருபுறம் இருக்க, 'மிரட்டலுக்கு பயந்துதான் காளிமுத்து மாற்றிப் பேசுகிறார்’ என்று கலெக்டர் சகாயம், தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட் அனுப்ப... அவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது ஆணையம். இதையடுத்து, சகாயம் கொடுத்த புகாரின் பேரில், முகம் தெரியாத நபர்கள் காளிமுத்துவை மிரட்டியதாக இன்னொரு வழக்கும் போட்டது போலீஸ். இந்நிலையில், 'ஒருதலைப்​பட்சமாக விசாரணை நடக்கிறது. எனவே, வழக்கை வேறு ஏஜென்ஸி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என காளிமுத்து இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். இப்படி, தொடர்ந்து அரசு தரப்புக்கு எதிராகவே செயல்பட்டதால், காளிமுத்துவை சஸ்பெண்ட் செய்தார் கலெக்டர் சகாயம்.
இதைத் தொடர்ந்து, ரகுபதியும் திருஞானமும் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீனில் வெளிவந்தார்கள். அழகிரியும் மன்னனும் மட்டும் சரண் அடைவதற்கான அவகாசத்தை இரண்டு முறை நீடித்தனர். மூன்றாவது முறையாகவும் அப்படியரு மனுத் தாக்கலாகவே, முன்ஜாமீனையே ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு போடப்பட்டது. ஆட்சி மாறி இருக்கும் நிலையில் புதுச் சிக்கல் தலைதூக்கிவிடக்கூடாது என்று நினைத்த அழகிரியும் மன்னனும் கடந்த 7-ம் தேதி மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சரியாக 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த அழகிரி, அங்கே இருந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டார். ''மத்திய அமைச்சராக இருப்பதால், முதல் வழக்காக அழகிரியின் ஜாமீன் மனுவை எடுத்துக்கொள்ள வேண்டும்...'' என்று அவரது வக்கீல்கள் அவசரம் காட்டியதை நீதிபதி கண்டுகொள்ளவே இல்லை. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அழகிரி தரப்பின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும் வக்கீல்கள் சிலர், 'அழகிரி மத்திய அமைச்சராக இருக்கிறார்’ என்று சொல்லியபடி இருக்க, ''நீங்க யாரும் எனக்கு டிக்டேட் பண்ண வேண்டியதில்லை!'' என்று கடிந்தார் மாஜிஸ்திரேட். அழகிரிக்காக தனிநபர் ஜாமீன் கொடுக்க இரண்டு பேர் வந்திருந்தனர். ஒருவர் பெயர் முருகானந்தம். இன்னொருவர் பெருமாள்.
இவர்களிடம் ''நீங்கள் யாருக்காக ஜாமீன் கொடுக்கிறீர்கள்? அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?'' என்று மாஜிஸ்திரேட் கேட்டார். ''மத்திய அமைச்சருக்காக ஜாமீன் கொடுக்கிறோம்'' என்று அவர்கள் சொல்ல, ''மத்திய அமைச்சரா இருந்தா குடுத்துருவீங்களா? அப்படின்னா, எல்லா மத்திய அமைச்சருக்கும் ஜாமீன் குடுப்பீங்களா?'' என்று கேட்டார் மாஜிஸ்திரேட்.
''அமைச்சர் அழகிரி வீட்டுக்கு நாங்கள் போக வர இருப்பதால், அவரை எங்களுக்கு நன்றாகத் தெரியும்...'' என்று ஜாமீன் போட்டவர்கள் சொல்ல, அப்படியும் விடாதவர், ''என்ன கேஸுக்காக ஜாமீன் கொடுக்கிறீர்கள்?'' என்று கொக்கி போட்டார். இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திணற, ''எலெக்ஷன் கேஸ்னு சொல்லுங்கப்பா!'' என்று அருகில் இருந்த வக்கீல்கள் எடுத்துக் கொடுத்தனர். கடைசியாக, ''விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும்!'' என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வாங்கிக்கொண்டு கோர்ட்டில் இருந்து விறுவிறுக்க வெளியேறினார் அழகிரி.
கோர்ட்டில் அழகிரி சரண் அடைந்ததால், தாசில்தார் காளிமுத்துவும் 'இந்த வழக்கை வேறு ஏஜென்ஸி விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லித் தாக்கல் செய்த மனுவை 7-ம் தேதி வாபஸ் வாங்கினார். இனி இந்த வழக்கு எப்படிப் போகும் என்பது குறித்துக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''மத்தவங்களுக்கு இது சாதாரண வழக்கு. ஆனால், மத்திய அமைச்சராக இருக்கும் அழகிரிக்கு, இது கொஞ்சம் விவகாரமானதுதான். காளிமுத்து தாக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் விசாரணை நடத்துவோம். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் கலெக்டரிடம் இருக்கிறது. அதையும் முக்கிய ஆவணமாகச் சேர்த்து,அழகிரி உள்ளிட்டவர்கள் மீது கூடிய விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வோம். தேர்தல் நேரத்தில் அழகிரி தரப்பி​னரால் விமர்சிக்கப்பட்டகலெக்டர் சகாயம், மாவட்டஎஸ்.பி-யான ஆஸ்ரா கர்க் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பணியில் இருப்​பதால், இதில் தி.மு.க-வினர் எந்தச் சலுகையும் எதிர்பார்க்க முடியாது. வழக்கு சரியான பாதையில் சென்றால்,அழகிரிக்கு சிக்கல்தான்!'' என்று சொன்​னார்கள்.
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி  

Source - Vikatan Magazine

Tuesday, June 14, 2011

''தயாநிதி மாறனைப் பற்றி நான் பேசியது ஏன்?'' - நீரா ராடியா வாக்குமூலம்

''தயாநிதி மாறனைப் பற்றி நான் பேசியது ஏன்?''

நீரா ராடியா வாக்குமூலம்
நீரா ராடியா கடந்த 2010 டிசம்பர் மாதம் சி.பி.ஐ-க்குக் கொடுத்துள்ள வாக்குமூலங்களைத் தவிர, ஜனவரி 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் (சி.ஆர்.பி.சி. 161 படி) வாக்குமூலம் கொடுத்து உள்ளார். ராடியாவின் பேச்சு, தொலைபேசி ஒட்டுக்​கேட்பில் பதிவாகி இருப்பதால், சி.பி.ஐ. விளக்கமாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுத்​தான்  குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. நீரா ராடியா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரின்  உதவியாளர்கள், அதிகாரிகள், டெலிகாம் நிறுவனத்தினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இவை.
நாள்: 25.1.2011
இடம்: டெல்லி பாராகம்பா ரோடு, கோபால்தாஸ் பவன், ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலு​வலகம்.
விசாரணை அதிகாரி: டி.எஸ்.பி. ராஜேஷ் ஷகால், சி.பி.ஐ.
ராடியாவின் மொபைல் (எண் 9810723015), அவருடைய நிறுவனத்தின் லேண்ட்லைன் (எண் 42393500), ஃபார்ம் ஹவுஸ் லேண்ட்லைன் (எண் 26806188 - சகோதரி கருணா மேனன் பெயரில் உள்ளவை) ஆகிய தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது.
வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாகப் பதிவு செய்த தொலைபேசி உரையாடல்களை, ஒவ்வொன்றாக சி.பி.ஐ. அதிகாரி ராஜேஷ், லேப்டாப்பில் போட்டுக்காட்ட, ராடியா எதற்காக... யாரிடம்... என்ன பேசினார் என்பதை விளக்குகிறார்.
ஆயிரக்கணக்கான உரையாடல்களில் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து சி.பி.ஐ. கேள்வி கேட்டது. இதில் நாம் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்!
கால் எண்: 1 (நவ.3, 2008)
ஸ்பெக்ட்ரம் ரேட்: யுனிடெக் டெலினார்
ராடியா மற்றும் யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திரா.
யுனிடெக் நிறுவனத்தில் நார்வேயைச் சேர்ந்த டெலினார் நிறுவனம் முதலீடு செய்து இருந்தது. இந்த முதலீட்டை வைத்தே ஸ்பெக்ட்ரம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு வந்தது. இதையட்டி ராடியா, யுனிடெக் தலைவரை அழைத்து அவர்கள் பெற்றுள்ள முதலீடுகள் குறித்து பத்திரிகைகளுக்கும் மத்திய அரசுக்கும் விளக்கம் கொடுக்கச் சொல்கிறார். இதுபற்றி சி.பி.ஐ-யிடம் ராடியா விளக்குகிறார்.
''பிரதமரும், நிதி அமைச்சரும் யுனிடெக்கில் டெலினார் முதலீடு செய்தது குறித்து விளக்கம் கேட்டு இருந்தனர். இதை நான் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொண்டேன்.  யுனிடெக் நிறுவனத்துக்கு நாங்கள் 2005 முதல் ஆலோசகராக இருக்கிறோம். அதனால், யுனிடெக் நிறுவனத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு விளக்கமாகக் கடிதம் எழுதுமாறு யோசனை கூறினேன். ரமேஷ் சந்திரா ஏற்கெனவே என்னை அழைத்து இது குறித்து, 'வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்தவர்கள், நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளனர். இது கம்பெனிக்கு வந்த நேரடி வெளிநாட்டு முதலீடு தவிர வேறொன்றும் இல்லை. இதில் நானோ... என் குடும்பமோ பயன் அடையவில்லை’ என்று கூறி இருந்தார். பத்திரிகைச் செய்திகளுக்கு விளக்கம் கொடுக்கவும் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்த பணப் பரிமாற்றம் குறித்து தகவல் கொடுக்கவும் யோசனை கூறினேன்.
தொடர்ந்து நான் தயாநிதி மாறனைப் பற்றிப் பேசியதற்கு காரணம், அந்த சமயத்தில் அவருடைய சன் டி.வி-யும் ஜெயா டி.வி-யும்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளைப் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து ஆ.ராசா பயன் அடைந்ததாகச் சொல்லிக்​கொண்டு இருந்தனர். ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி., மாறன் குரூப்பைச் சேர்ந்தது என்பதால் அது குறித்தும் பேசினோம்.''
கால் எண்: 2 (நவ.3, 2008)
எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையாளர் கணபதி சுப்பிர​மணியத்துடன்...
''ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுக்க 14,000 பெட்ரோல் பங்க்குகளைத் திறப்பதாகச் செய்தி வந்தது. இது குறித்து கணுவோடு (கணபதி சுப்பிரமணியம்) பொதுவாகப் பேசினேன். இந்த செய்தியினால் என்ன அபிப்ராயம் ஏற்படும்? என்பது குறித்துப் பேசினேன். அடுத்து யுனிடெக் எஃப்.டி.ஐ. பெற்றது குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது பற்றி கணு என்னிடம் சொன்னார். இந்தியாவிலுள்ள போட்டி டெலிகாம் கம்பெனிகள் (ஏர்டெல்?) வெளிநாடுகளில் இருந்து பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க முயற்சித்து வருவதைப் பற்றியும் என்னோடு பேசினார்...''
கால் எண்: 3 (நவ.3, 2008)
ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலி​யாவுடன்...
''கலைஞர் டி.வி. ஒளிபரப்பை டாடா ஸ்கை பிளாட்​பாரத்துக்குள் கொண்டு வருவதற்கும், அவர்களுடைய மனு டாடா கம்யூனிகேஷனில் டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் ஒதுக்கீடு செய்வதில் நிலுவையில் இருப்பது குறித்தும் பேசினோம். நான் சந்தோலியாவுடன் 'பாஸ்’ என்று குறிப்பிட்டது, அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத்தான். நான் இதுகுறித்து ஆ.ராசாவுடன் பேசி இருந்தேன். ஆ.ராசா, டாடா ஸ்கையையும் டாடா கம்யூனிகேஷனையும் இது சம்பந்தமான நடவடிக்கையில் விரைவுபடுத்துமாறு கூறி இருந்தார். நானும் இது சம்பந்தமான நடவடிக்கை எடுத்து, டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டது சம்பந்தமாக லெட்டர் வர, அதை அமைச்சரின் வீட்டுக்கு அனுப்பி உள்ளதைத்தான் சந்தோலியாவிடம் தெரிவித்தேன். அமைச்சர் வீட்டில் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது என்று நான் தொலைபேசியில் சொன்னது இந்த 'லெட்டரை’த்தானே தவிர 'வேறு’ ஒன்றும் இல்லை''
கால் எண்: 4 பி (நவ.25, 2008)
ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோ​லியாவுடன்...
ஆ.ராசாவின் தனி உதவியாளரான அவரிடம், மீடியாக்​களிடம் எச்சரிக்கையாகப் பேசும்படி சொன்னேன்.  மறுநாள் ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்த மீட்டிங் குறித்தும் பேசினோம். டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் அரசின் பங்கு 26 சதவிகிதம் இருக்கிறது. டாடா கம்யூனிகேஷன், டாடா டெலிசர்வீஸிலும் பங்குகளைப் பெற்றுள்ளது. இந்த டெலி சர்வீஸ் நிறுவனத்தின் சில பங்குகளை டொகோமோ நிறுவனத்துக்கு கொடுக்க இருப்பது சம்பந்தமான மீட்டிங், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்தது. இது சம்பந்தமாக சந்தோலியா, ரத்தன் டாடா உதவியாளர் ஆர்.வெங்கட் ஆகியோரிடம் பேசினேன். அப்போது வெங்கட் சி.என்.என். ஐ.பி.என். டி.வி-யில் ஆ.ராசா மற்றும் டி.ஆர்.பாலு மீது பிரதமர் கோபமாக இருக்கிறார் என்றும் இவர்கள் மீதான ஊழல் புகார்தான் கோபத்துக்குக் காரணம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது என்று தெரிவித்தார். இது குறித்தும் மறுநாள் 26-ம் தேதி சந்தோலியா என்னிடம் பேசினார். 'பிரதமர் அலுவலகம் இந்த செய்தி குறித்து சி.என்.என்., ஐ.பி.என். வசம் விளக்கம் கேட்டுள்ளது என்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட விதம் குறித்து பிரதமருக்கு அமைச்சர் ஆ.ராசா தகவல் கொடுத்து ஒப்புதலும் பெற்று உள்ளார் என்பதை பத்திரிகைகளிடம் அமைச்சர் விளக்கி உள்ளார்’ என்றும் சந்தோலியா தெரிவித்தார்.
கால் எண்: 5 (நவ.18, 2008)
பிசினஸ் ஜீரோ பத்திரிகை ஆசிரியர் சதீஷ் ஓரியுடன் பேசியது...
''அப்போதைய அரசியல் நிலவரம்... நாடாளுமன்ற நிலைமை போன்ற பொது விஷயங்கள் குறித்துத்தான் நான் சதீஷ§டன் பேசினேன். என்னுடைய முதல் பேச்சில், விஜய மல்லையாவின் வெளிநாட்டு முதலீடு குறித்தும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு விமான கம்பெனிகள் பங்கெடுக்காதது குறித்தும் பேசினேன். இரண்டாவது பேச்சில் சதீஷ் என்னிடம், அனில் அம்பானி மற்றும் ஆ.ராசாவைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார். ஸ்வான் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் குறித்த புகார்கள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனரிடம் நிலுவையில் இருப்பது மற்றும் பொது நலன் வழக்குகளாக தொடரப்பட்டு உள்ளதைக் குறிப்பிட்டார். ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளுக்காக ஆ.ராசாவுக்கு லண்டனில் வைத்து பணம் கொடுக்கப்பட்டது... கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இவை எல்லாம் அவர் சொன்ன தகவல்கள். இந்த பணப் பரிவர்த்தனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது!''
கால் எண்: 6 (நவ.19, 2008)
டைம்ஸ் நவ் டி.வி-யின் மூத்த பொலிடிகல் எடிட்டர் நவிகா குமாருடன்...
''நவிகா பொதுவாக அரசியல் விவகாரங்களை கவனிப்பவர். நான் அவரோடு பேசும்போது தெரிந்து கொண்டது சரத் பவார், ஆ.ராசாவை தொடர்பு கொண்டு பேசியதின் மூலமே ஸ்வானுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கிடைத்து உள்ளது என்றும் இதில் அனில் அம்பானியின் இன்வால்வ்மென்ட் இருப்பதால் பவார் தலையிட்டு உள்ளார் என்பது குறித்தும் பேசப்பட்டது. டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் பால்வா மற்றும் கோயங்கா முக்கியப் பிரமுகர்கள். ஆனால், மும்பையில் பொதுவாக சொல்லிக்கொள்வது, டிபி ரியாலிட்டியை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கன்ட்ரோல் செய்வது சரத் பவாரும் அவரது குடும்பதினரும்தான் என்று. இதனால்தான் சரத் பவார், ஸ்வானுக்கும் அனில் அம்பானிக்கும் முறையே ஸ்பெக்ட்ரம் உரிமமும் இரட்டை தொழில்நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமமும் பெற்றுத் தருவதில் உதவி புரிந்துள்ளார் என்று தொலைபேசியில் குறிப்பிட்டேன்.''
வாக்குமூலம் தொடரும்..

Source - Vikatan Magazine

சிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

சிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை
சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!
'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!
'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!
யார் இந்த சிவசங்கரன்?
சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.  பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.
கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!
அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார். அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார். அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார். வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.
சிவசங்கரனின் பாலிசி!
'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார். கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.
''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம். ''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள். கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.  சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார். உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.
கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!
1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள். தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார். சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.
தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள். மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.
1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.
சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!
2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார். அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது.
இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன். ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.
இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!
- ஆர்.பி., ஆரோக்கியவேல்
படம்: சு.குமரேசன்
தெஹல்காவும் தயாநிதியும்!
''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன். பலன் எதுவும் இல்லை. அதன்பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய (மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன். என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!
இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது!
''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!

Source - Vikatan Magazine

தீர்மானம் போட்ட ஜெயலலிதா!

தீர்மானம் போட்ட ஜெயலலிதா!

திட்டம் தீட்டிய இந்திய கம்யூனிஸ்ட்..
மிழின விரோதி என ஜெயல லிதாவைக் கடுமையாக விமர்சிக்கும் தமிழ் இன உணர் வாளர்கள், இப்போது அவர் மீது பாராட்டு மழை பொழிகிறார்கள்!  கடந்த 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு சட்டப் பேரவையில் ஜெ-வால் முன்மொழியப் பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம்தான் இதற்குக் காரணம்!
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு, வழக்கம்போல உள்ளூர் அரசியல் செய் யாமல், தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தது, நல்ல விஷயம்! 
இந்தத் தீர்மானத்தில் இரண்டு விஷயங்கள். ''உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசு கடுமையான, நம்பத்தகுந்த குற்றங்களைச் செய்துள்ள தாக ஐ.நா.  குழு கண்டறிந்து உள்ளது. எனவே, போர்க் குற்றங்களை நிகழ்த்திய வர்களை, போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்த ஐ.நா. அவையை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும்!'' என்பது ஒன்று.
அடுத்தது, ''இலங்கை முகாமில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாகக் கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!'' என்பது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ''ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள். இந்தியாவிடம் இருந்து ராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை ராணுவம், 2008 கடைசியிலும் 2009 தொடக்கத்திலும் இலங்கைத் தமிழர்களைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தது. அதன் இறுதியில், போரை நிறுத்த இலங்கை அரசை மத்திய அரசு மூலம் நிர்ப்பந்தப்படுத்தாத அன்றைய முதல்வர் கருணாநிதியால், பலவித நாடகங்கள் நடத்தப்பட்டன. உச்சகட்டமாக காலைச் சிற்றுண்டியை வீட்டில் முடித்துக்கொண்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், 'போர்நிறுத்தம் வரை உண்ணாவிரதம்’ உட்கார்ந்தார்! மதிய உணவு வேளை வந்தவுடன், 'ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக்கொண்டது’ என்று உண்ணாவிரதத்தை முடித்தார். கருணாநிதியின் பேச்சைக் கேட்டு, பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொத்துக்கொத்தாகக் குண்டுகளை வீசிக் கொன்றனர்.
ஐ.நா. குழுவானது அங்கு போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்றுதான் சொல்லி இருக்கிறதே தவிர, ராஜபக்ஷேவும் மற்றவர்களும் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவில்லை. அதனால்தான் இந்த தீர்மானத்தில், 'போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா-வை வலியுறுத்தவேண்டும்’ என்று குறிப்பிட்டோம்...'' என்று பேசினார்.
இந்தத் தீர்மானம், ஒருமனதாக ஏற்கப்பட்டு சட்ட மன்றத் தீர்மானம் ஆன தகவல் அறிந்தவுடன், ஆதரித்து அறிக்கை விட்டார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன். வைகோ, சீமான் என அடுத்தடுத்து மற்ற ஈழ ஆதரவுத் தலைவர்களும் தீர்மானத்தை வரவேற்றுக் கருத்து வெளியிட்டனர். அன்று இரவு திருமாவளவனின் அறிக்கை வெளியானது.
ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை முன்மொழிவதற்கு முந்தைய நாளன்று, சட்டப் பேரவையில்  இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவகங்கை குணசேகரன் பேசியது தான் அனைத்துக்குமான தூண்டுதல் என்கிறார்கள். ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான். அதற்குக் காரணமான ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!'' என்று இவர் சொன்னார். இந்தக் கோரிக்கைக்கு, முதல்வர் அப்போது எந்த ரியாக்ஷனையும் வெளிக் காட்டவில்லை. ஆனால், மறுநாள் அவரே இதை தீர்மானமாகக் கொண்டுவந்ததை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரே எதிர்பார்க்கவில்லை!
இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. குணசேகரனிடம் கேட்டதற்கு, ''ராஜபக்ஷேவை சர்வ தேச நீதிமன்றத்தின் முன்பு போர்க்குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று கடந்த ஆட்சியில் தீர்மானம் போட வலியுறுத்தினோம். ஆனால், போரை நிறுத் தவே நடவடிக்கை எடுக்காமல் இன அழிப்புக்குக் காரணமான கருணாநிதி, அதைச் செய்யவில்லை. இப்போது, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு உள்ள இந்தத் தீர்மானம், அற்புதமானது! ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் வேண்டும் எனக் கேட்கும் இந்திய அரசு, பக்கத்து நாட்டில் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு இனத்தை அழிக்க உதவியாக இருந்துவிட்டு, மானுட பண்பாடு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?'' என்றார் சூடாக.
தடை பல கடந்து, தமிழக சட்டமன்றத்தில் 'போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்’ என தீர்மானம் நிறைவேறி இருக்கிறது! டெல்லி நாடாளுமன்றத்திலும் இதே  தீர்மானம் வெற்றிபெற, எல்லா கட்சிகளுமே ஒருமனதாகக் குரல்கொடுக்க வேண்டும். நடக்குமா?
- இரா.தமிழ்க்கனல்
படம்: சு.குமரேசன்
'சி.பி.எம். இப்படித்தான்!’
தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்’ என்று பேச... தமிழின அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு!
''இலங்கைக்கு எத்தனை உதவிகள் செய்தாலும் அதை தமிழர்களுக்குக் கொடுக்கவே போவது இல்லை. பொருளாதாரத் தடை என்பது ஒரு நாட்டுக்கு வழங்கும் தார்மீகத் தண்டனை. அதை இலங்கைக்குத் தரத்தான் வேண்டும். எல்லோரும் ஒரு கோரிக்கையை வைக்கும் போது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் விநோதமாக எதையாவது சொல்வார்கள்!'' என்கின்றன தமிழர் அமைப்புகள்.
இது பற்றி சவுந்தரராசனிடம் கேட்டதற்கு, ''இதுவரை உலகில் பொருளாதாரத் தடையால் தவறு செய்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்டது இல்லை. அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவர். இலங்கையில் பொருளாதாரத் தடை விதித்தால், இப்போது தமிழ் மக்களுக்குக் கிடைத்துவரும் சிறிதளவு பொருள்களும் உதவிகளும் நின்றுவிடுமோ என்பதுதான் எங்களின் ஆதங்கம்!'' என்றார்

Source - Vikatan Magazine