Saturday, April 16, 2011

சபாஷ் தேர்தல் ஆணையம்!

சபாஷ் தேர்தல் ஆணையம்!


அராஜகமும், வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். இது வரை இல்லாத அளவுக்கு 77 சதவிகிதத்துக்கு மேலாக வாக்குப் பதிவு நடந்திருப்பது, ஜன​நாயகத்​​தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் பிரமிக்க​வைத்தது.
'வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை’ என்பதைத் தேர்தல் ஆணையம் வலிமையாக எடுத்துச் சொன்னது. இதை இளைய வாக்காளர்கள் வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாக்களித்து இருக்கிறார்கள். பயம், நிர்பந்தம் இன்றி வாக்களிக்க வழிவகை செய்ததும் சாதனையாகும். தேர்தல் ஆணையம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமும் உறுதுணையாக நின்றது பாராட்டத்தக்கது.
பணம், அதிகாரத்துக்கு விலை போய்விடாமல் மக்களைத் தடுத்த தேர்தல் ஆணையத்தை மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறோம். இனி, அமையப்போகும் ஆட்சி யாருடையதாக இருந்​தாலும், அது மக்களின் நிஜமான மன நிலையின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ள முடியும். அரசு இயந்திரத்தை செம்மையாக எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதையும் மக்களிடம் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷன் காட்டிய வழியில் அடுத்து வரும் அரசு, ஊழியர்களைத் திறம்படச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளைவிட, அரசியல்வாதிகள் மக்களுக்காக உழைக்கக்​கூடிய​வர்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க வேண்டிய கடமை வரக்கூடிய அரசுக்கு உள்ளது.
அன்னா ஹசாரேயின் போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் சாட்டை அடிகள், தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளை எல்லாம் பார்க்கும்போது, ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது!
- டி.கோவிந்தராஜ், திருச்சி.
Source - Vikatan Magazine

எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு?

எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு?

பதறும் பிரசார ஸ்டார்கள்
எம்.குணா
படங்கள்: கே.குணசீலன்,எல்.ராஜேந்திரன்
ள்கைக் கோட்பாடுகளை அடுக்கி, நல்லாட்சிக்கு உத்தரவாதம் தந்து, மக்கள் மனதில் நம்பிக்கை வைட்டமின் ஏற்றி, ஆட்சி அமைக்க முயற்சித்த காலம் மலையேறிவிட்டது. இலவச இனிமா, கவர்ச்சி சினிமா, கவருக்குள் 'மணி’மா என்ற ஒற்றைக் கொள்கையைச் சகல கட்சிகளும் கடைப்பிடிக்கும் காலம் இது. அதிலும் எந்தப் பொது நல நோக்கும் இல்லாமல், தனிப்பட்ட விரோதம் தீர்க்கும் தனி மனித விமர்சனங்கள் இந்தத் தேர்தலில் அதன் உச்சத்தை எட்டியது.

இதில், தேர்தல் சமயம் மட்டும் அரசியல் கால்ஷீட் கொடுத்து, ஆவேசம் காட்டுவது கோடம்பாக்க நட்சத்திரங்களின் பழக்கம். இந்தத் தேர்தலில் அப்படி சபைக்கு வந்து வெளுத்துக் கட்டியவர்களுள் முக்கியமானவர்கள் விஜய், வடிவேலு, சரத்குமார் மற்றும் குஷ்பு. பிரசார அனல் அடங்கியதும் மீண்டும் இவர்கள் கோடம்பாக்கத்தில்தான் நிலை கொள்ள வேண்டும். ஒருவேளை இவர்கள் சார்ந்த கட்சி, ஆட்சிக் கட்டிலை எட்ட முடியாவிட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? 'எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி, யாருக்கெல்லாம் ஆப்பு?’ என்று சோழி உருட்டி, கணிப்பு வேட்டை நடத்திக்கொண்டு இருக்கிறது கோலிவுட். 'அப்படி என்னதான் நடக்கும்?’ என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம்...       
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. மீது வெளிப்படையாக வெறுப்பு காட்டினார், அ.தி.மு.க சார்பாக தேர்தலில் போட்டியிடுவார் என்று ஹேஷ்யங்கள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசா ரம் மேற்கொள்வார் என்று விஜய்யை மையமாக வைத்து, முன் எப்போதைக் காட்டிலும் அதிக அரசியல் அனல். ஆனால், வாக்குப் பதிவு நெருக்கத்தில், 'இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார்!’ என்று அதிரடியாக பேக் அடித்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.
தடாலடியாக, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலனை அலேக் செய்தது தி.மு.க. ''என்னதான் நடக்குது விஜய்யைச் சுற்றி?'' என்று ஜெயசீலனிடம் கேட்டதும்  கொந்தளித்துவிட்டார். ''கடந்த 15 வருஷமா விஜய் ரசிகர் மன்றப் பொறுப்புல இருந்தேன். 3 ஆயிரம் மன்றங்களை இத்தனை வருஷத்துல 40 ஆயிரம் மன்றங் களா ஆக்கி இருக்கோம். கூண்டுக் கிளியா இருந்த விஜய்யை மக்கள் மன்றம் அமைப்பு மூலமா, பொது மேடைக்கு அழைச்சுட்டு வந்ததே எங்களைப்போன்ற ரசிகர்களின் உறுதிதான். ஆனா, இன்னிக்கு அவரோட ஒரு படத்தை ரிலீஸ் பண்றதில் சிக்கல் உண்டாகவும், சுய நலத்துக்காக தனித்தன்மையை விட்டுட்டு அ.தி.மு.க. பக்கம் ஒதுங்கிட்டார். இதுக்காகவா ராத்திரி பகலா நாங்க கஷ்டப்பட்டோம்!
முதல்ல, 'விஜய் மக்கள் இயக்கம்’னு ஓர் அமைப்பு இல்லவே இல்லை. அது ஜெயலலிதாவை ஏமாத்தப் போட்ட ஒரு நாடகம். திடீர்னு ஒருநாள், தமிழகம் முழுக்க 32 மாவட்டத் தலைவர்களை சென்னைக்கு அழைத்தார், எஸ்.ஏ.சந்திர சேகரன். 'தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்?’னு கூட்டத்தில் கேட்டவர், எங்க கருத்துக்களைக் காதில் போட்டுக் காம, 'நீங்க எல்லாரும் தி.மு.க-வுக்கு எதிரா வேலை பார்க்கணும். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா இருப்பதா விஜய்கிட்டே சொல் லுங்க. அப்பதான் அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுப்பார்’னு அவரோட சொந்த விருப்பத்தை எங்க மேல திணிச்சார். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா செயல்பட அங்கே இருந்த 27 மாவட்டத் தலைவர்களுக்குப் பிடிக்கலை. இதை விஜய்கிட்ட நேர்லயே சொன்னோம். 'அதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாத்தையும் அப்பாகிட்ட பேசிக்குங்க’ன்னு சொல்லி நழுவிட்டார் விஜய். 
நிச்சயம் கலைஞர்தான் முதல்வர் ஆவார். அப்போ, விஜய்யும் அவர் அப்பாவும் அடிக்கிற அந்தர் பல்டியைப் பார்க்கத்தானே போறோம்!''
''ஜெயா டி.வி 'ஜாக்பாட்’ நிகழ்ச்சி மூலமா தமிழகப் பெண்கள் மத்தியில் குஷ்பு வளர்த்துக்கொண்ட புகழை தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்து அறுவடை செய்துகொண்டார். 'எனக்கு அரசியலில் பிடித்த பெண் ஜெயலலிதா’ன்னு முன்னாடி சொன்னவங்க, இப்போ அவங்களை எதிர்த்து அரசியல் செய்யுற அளவுக்கு வளர்ந்துட்டாங்களா? குஷ்புவுக்கு எப்படி திராவிடப் பாரம்பர்யம் பத்தித் தெரியாதோ... அப்படித்தான் தி.மு.க பாரம்பர்யமும் தெரியாது!'' என்று மர்மப் புன்னகை பூக்கிறார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி. 
''நான் தி.மு.க-வுக்காக எத்தனையோ வருஷம் கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா, என் ஒட்டுமொத்த உழைப்பையும் உறிஞ்சிக்கொண்டு என்னை குப்பைக் காகித மாகக் கடாசியது தி.மு.க. தலைமை. எப்பவும் பழசை மறந்துவிடும் குணாதிசயம்கொண்டவர் கருணாநிதி. புதுசுக்குத்தான் மவுசு. குஷ்பு தி.மு.க-வுக்குக் கிடைச்ச புதுத் துடைப்பம். அதனால கொஞ்ச நாள் பட்டுக் குஞ்சம் கட்டி வேடிக்கை பார்த்தாங்க. இப்போ வடிவேலு என்ட்ரி கொடுத்த பிறகு குஷ்பு பழசாகிவிட்டார். 'தி.மு.க ஆளுங்க மாதிரி மோசமானவங்களை நான் பார்த்ததே இல்லை’னு கதறிக்கிட்டே குஷ்பு கட்சியைவிட்டு வெளியேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. குஷ்பு போஸ்டரை முறத்தால் அடித்தவர்கள், அவரது வீட்டில் கழுதையைக் கொண்டுவந்து கட்டியவர்கள், அவர் முகத்துக்கு நேராத் துடைப்பத்தைத் தூக்கிக் காண்பித்தவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இப்போ பிரசாரம் செய்கிறார் குஷ்பு.
போன தடவை தி.மு.க ஜெயித்தவுடன் என் மீதும், எஸ்.எஸ்.சந்திரன் மீதும் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி. என் துறை சார்ந்தவர் என்ற நேசத்தில் சொல்றேன்... 
அம்மாவைப் பத்தி அவதூறாகப் பேசுவதை குஷ்பு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து அம்மா ஆட்சி என்பதை மறந்துடக் கூடாது!'' என்று எச்சரிக்கை தொனியில் முடிக்கிறார் ராதாரவி. 
'இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்... இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா!’ என்று சினிமாவில் வடிவேலுவுவைக் காய்ச்சி எடுத்த சிங்கமுத்து, அரசியலிலும் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து அதகளப்படுத்துகிறார்.
''உண்மையில் வடிவேலு வீட்லயும் அலுவலகத்திலும் கல் எறிஞ்சது தி.மு.க -தான். இதுகூடத் தெரியாம விஜயகாந்த் ஆளுங்க அடிச்சதா நம்பிட்டு, ஊர் ஊரா சுத்திட்டு இருக்கார். தி.மு.க-வின் கொள்கைக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வடிவேலு அந்தக் கட்சிக்காகப் பிரசாரம் பண்ணலை. என் மேல பொய் வழக்கு போடவும், விஜயகாந்த்கூட மல்லுக்கட்டவும் அந்தப் பக்கம் ஒதுங்கி இருக்கார். மத்தபடி தி.மு.க-வை ஜெயிக்கவைக்கிறது அவர் நோக்கமா இருக்காது. எம்.ஜி.ஆரை தி.மு.க. தூக்கி எறிஞ்சப்ப, தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தாங்கிப் பிடிச்சு அன்புக் கடலில் ஆழ்த்தினாங்க. தன்னைக் காயப்படுத்திய தி.மு.க-வை எதிர்த்து எம்.ஜி.ஆர் ஆவேசமாப் பாடிய பாடல்களை, இப்போ தி.மு.க. மேடையில வெட்கமே இல்லாமப் பாடிட்டு இருக்காரு வடிவேலு.
மே 13-ம் தேதிக்குப் பிறகு அம்மா ஆட்சி நிச்சயம். அப்போ, இந்த மாப்புக்கு ஆப்பும் நிச்சயம். தமிழ் சினிமா சார்பா அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்போ, கையெடுத்துக் கும்பிட்டு கால்ல விழாத குறையாக் கெஞ்சினவர் இந்த வடிவேலு. இப்போ மறுபடி அம்மா முதலமைச்சர் ஆனதும், 'அம்மா தாயே... நீங்கதான் பராசக்தி! என்னை மன்னிச்சுக் காப்பாத்துங்க தாயீ’ன்னு அம்மா கால்ல விழத்தான் போறார். அதையும் நாம பார்க்கத்தானே போறோம்!'' என்று சீறுகிறார்.
தி.மு.க பாசறையில் முழங்கிக்கொண்டு இருக்கும் பாக்யராஜ், சரத்குமார் பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ''சினிமா நடிகருக்கு இமேஜ் ரொம்பவே முக்கியம். ஆனா, சரத்குமார் அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப்பட்டதாவே தெரியலை.  தி.மு.க-வில் எம்.பி., பதவி கொடுத்துக் கௌரவித்தார்கள். அந்தக் கட்சியை மதிக்காமல் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தி.மு.க அரசு அமைத்த திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினரா சரத்குமாரை நியமித்தார் கலைஞர். ஆனா, இவர் பாட்டுக்கு திடீர்னு அவர் சாதியினரைச் சேர்த்துக்கொண்டு 'பெருந்தலைவர் மக்கள் கட்சி’ன்னு ஆரம்பித்தார். அங்கேயாவது ஒழுங்கா இருந்தாரா?
அந்தக் கட்சி பொறுப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல், ஒரு ராத்திரியில் தன்னிச்சையா அ.தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டார். இப்போ, அவரோட ஒரே பலத்தையும் இழந்து நிற்கிறார். நிச்சயம் மீண்டும் கலைஞர் ஆட்சி மலரும். அப்போ, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சமாதானத் தூது விடுவார் சரத்குமார். 'ஐயா, உங்களைப்போல் ஒரு தலைவர்... முதல்வர் உலகத்துலயே இல்லை’ன்னு சரண்டராகி காக்கா பிடிப்பார் சரத்!''
கொ

Source -  Vikatan Magazine

திருநங்கைகளின் உலகம்!

திருநங்கைகளின் உலகம்!

லிவிங் ஸ்மைல் வித்யா
ஓவியங்கள் : ஸ்யாம்
ன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால், அரை குறையாகச் சேலை கட்டி, கரகரக் குரலில் 'மாமா... மாமா...’ என்று பாலியல் இச்சையோடு கும்மி அடிக்கும் கோமாளிகள்!

திருநங்கைகள் / திருநம்பிகள் யார் என்றும், அடிப்படையில் அவர்கள் ஏன் இப்படி மாறினர் என்பதன் காரணம் பலருக்குத் தெரியாது என்பதுதான் நாங்கள் கேலியாகப் பார்க்கப்படுவதன் காரணம். 'கருவறையில் ஓர் உயிர் ஜனிக்கும்போது முதலில் அது பெண் குழந்தையாகவே உருவாகிறது. ஆறு வாரங்கள் கழித்தே, அதன் நிரந்தரப் பாலின அடையாளத்தை இயற்கை தீர்மானிக்கிறது. அந்தக் குழந்தை நிரந்தரமாகப் பெண்ணாகவே இருக்கும்பட்சத்தில், அதன் உடற்கூறுகளும் மனக்கூறுகளும் அப்படியே எந்த மாற்றமும் இன்றித் தொடரும். அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கும். அதன் உடற்கூறும் மனக்கூறும் ஆணாக மாற்றம் அடையும் பட்சத்தில், அது ஆண் குழந்தை ஆகிறது. எதிர்காலத்தில் ஆண் தன் குழந்தைக்குப் பாலூட்டப்போவது இல்லை என்றாலும், அவனுக்குப் பயன்படாத, முதிர்ச்சியடையாத மார்புக் காம்புகள் இருப்பதே அவன் ஒரு காலத்தில் பெண்ணாகவே இருந்தான் என்பதற்கு ஆதாரம்.
பெண்ணில் இருந்து ஆணாக உடற்கூறு மாற்றம்கொள்ளும் வேளையில், மனக்கூறும் அதேபோல ஆணாக மாற வேண்டும். பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு இப்படியான மாற்றம் நிகழ்ந்துவிடும். ஆனால்,இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மனரீதியான மாற்றம் நிகழாமல், உடல் மட்டுமே மாற்றம் அடைந்துவிடுவது உண்டு. முறையான மாற்றம் இன்றிப் பிறக்கும் குழந்தை, உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவுமே பிறக்கிறது. உலகம் இவர்களின் தோற்றத்தை வைத்து ஆணாகப் பார்க்க, இந்தக் குழந்தை களோ, தங்களைப் பெண்ணாகவே உணர்வார் கள். இவர்களே... திருநங்கைகள். இதன் நேர் எதிர்த் தன்மையோடு பிறக்கும் குழந்தைகள்... திருநம்பிகள். (நன்றி: டாக்டர் ஷாலினி)
தான் யார், என்ன என்பதை நிதானித்து உணர்ந்துகொள்ளும் வயதில், அந்தக் குழந்தையின் மனதில் தோன்றும் குழப்பங்களையும், சக மனிதர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் வசைமொழிகள் தரும் வலியையும் உங்களால் உணரவே முடியாது.
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த திருநங்கையை ஒருமுறை வகுப்பில் உலோகம், அலோகம் பற்றி பாடம் நடத்திய ஆசிரியர், 'இவனைப் பாருங்க, இவன் உலோகமும் இல்ல... அலோகமும் இல்ல. ரெண்டும் கெட்டான்!’ என்று கிண்டலடிக்க, அதைத் தொடர்ந்து சக மாணவர்களின் கேலிப் பேச்சு கூடியதில், பத்தாம் வகுப்போடு அன்று அந்தத் திருநங்கையின் கல்வி முடிந்துபோன துயரத்தை உங்களில் எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடியும்?
இப்படி வெவ்வேறு கசப்பான அனுபவங்களால் பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கையில் இருந்து கல்வி தூர எறியப்பட்டதை எந்த சினிமா வித்தகர்களும் உங்களுக்குக் காட்டப்போவது இல்லை.
வீதிகளைப்போலவே, சொந்த வீட்டுக்குள்ளும் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும்... திருநங்கைகள் வேண்டாத பிள்ளையாக, குடும்பத்துக்கு அவமானச் சின்னமாக வெறுத்து ஒதுக்கப் படுகிறார்கள். படிப்பு இல்லை என்றான பிறகு, வேலைக்குச் செல்லும் இடத்தில் முதலாளி முதல் வாடிக்கையாளர் வரை பலரது வசைக்கும் கேலிக்கும் ஆளாகிறார்கள். அதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கும் பலியாகிறார்கள். நாளடைவில் இறுகிப் போகும் மனது, இனி வேலைக்குப்போய் சம்பாதிக்க நினைப் பது முட்டாள்தனம் என்ற முடிவுக்கு வருகிறது.
வீட்டில், பள்ளியில், பணியிடத்தில் எனத் தான் புழங்கும் இடங்கள் எங்கும், அன்பு, மனிதம், மாண்பு என்ற பதங்கள் மறந்துபோன உலகத்தையே எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த உலகில் கேலி, வசை, வன்முறை போன்ற கொடூரங்களே இருக்கின்றன. அவளை அரவணைக்கும் ஒரே இடமாக இருப்பது மற்ற திருநங்கைகள் கூட்டமாக வாழும் பகுதி மட்டுமே. அவர் களோடு இந்த வெயில் தேசத்தில் நாசூக்காக மறைக்கப்பட்ட பனித் திரையில் அவள் மறைந்து கொள்கிறாள். குறைந்தபட்சம் திருநங்கைகளுக்குக் கிடைக்கும் இந்தக் கூடாரமும் திருநம்பிகளுக்கு வாய்ப்பது இல்லை!
இனி, இந்த உலகத்தில் உயிர் பிழைக்க நாகரிகமான வழிமுறை ஏதும் திருநங்கைகளுக்குக் கிடையாது. ஓர் ஆண் அல்லது பெண்... மருத்துவராகவோ, இன்ஜினீயராகவோ, ஆசிரியராகவோ, மாவட்ட ஆட்சித் தலைவராகவோ அல்லது குமாஸ்தாவாகவோ, அலுவலக உதவியாளராகவோ வாழ விரும்பினால்... அதற்கான அடிப்படை வாய்ப்புகள் இங்கு அனைவருக்கும் உண்டு. ஆனால், தன் வயிற்றைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சராசரி குடிமகனுக்கு உள்ள அத்தனை நிகழ்தகவுச் சாத்தியங்களும் திருநங்கைகளுக்கு, அவர்களின் பாலியல் அடையாளத்தால் முழுவதுமாக மறுக்கப்படுவது என்ன நியாயம்?
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடவும், பிச்சையெடுக்கவும் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இந்தச் சமூகமும் மறைமுகமாக அதையேதான் விரும்புகிறது என்பதுதான் கசப்பான நிதர்சனம்.
எனக்குத் தெரிந்த திருநங்கை ஒருவர், தினமும் ரயிலில் பிச்சையெடுத்து வந்தார். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு நாமும் கௌரவமாக வாழலாம் என்று நினைத்து, கீ செயின், மொபைல் கவர், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையில் இறங்கினார். அவர் பிச்சையெடுத்தபோது, பலரது ஏச்சுக்கும் சிரிப் புக்கும் மத்தியில், பயந்தோ, பரிதாபப்பட்டோ சிலர் பிச்சையிட்ட அதே ரயிலில்... 'குடுத்தா வெச்சிருக்கே? நீ கேட்டதும் எடுத்து நீட்டுறதுக்கு!’ எனப் பலர் சலித்துக்கொண்ட அதே ரயிலில்... 'கை கால் நல்லாத்தானே இருக்கு. உழைச்சுத் திங்க வேண்டியதுதானே!’ என எத்தனையோ முறை 'திடீர்’ மகான்களின் பொன்மொழிகள் உதிர்க்கப் பட்ட அதே ரயிலில்தான்... அன்று அவர்வியாபாரம் செய்தார். பிச்சையெடுத்தபோது கேலி கிண்டல்கள் கடந்து குறைந்தபட்சம் வருமானமாவது கிடைத்த அவருக்கு... நாள் முழுக்க வியாபாரம் செய்தபோது மிஞ்சியது வெறும் அருவருப்பான கேலிச் சிரிப்பு கள் மட்டுமே. ஒருவரும் அவரிடம் இருந்து சின்ன கீ செயின் வாங்கக்கூட முன்வரவில்லை.
ஆண் உடையில் வளைய வரும்போது அவளை மீறி எழும் பெண் தன்மையால் பலரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில் அது முடியாதபோது, வெளிப்படையாகத் தன்னைத் திருநங்கை என்றே அறிவித்துப் பணியாற்ற விரும்பினாலும்... யாரும் வேலை தர முன்வருவது இல்லை. ஒரு சிலர், 'உங்களுக்கு வேலை தருவதில் எங்க ளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், உடன் வேலை செய்யும் மத்த ஸ்டாஃப் எப்பிடி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை... ஸாரி!’ என்று மழுப்பி நழுவுவது உண்டு.
முதுகலை படிப்பு முடித்த திருநங்கை ஒருவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆரம்பத்தில் ஆண் அடையாளத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தன்னைத் திருநங்கை என்று வெளிப்படையாகக் கூறி, பால் மாற்று சிகிச்சையும் மேற்கொண்டார். ஆனால், பெண்ணாக மாறிய பின், அதே நிறுவனத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. தனது வீட்டில் இருந்து பெண் உடையில் வெளிவரும் அவர், பேருந்தில் பயணித்து அலுவலக நிறுத்தம் வரை பெண்ணாகச் சென்று, அங்கே இருக்கும் கோயில் ஒன்றில் கைப்பையில் மறைத்துவைத்து இருக்கும் ஆண் உடைக்கு மாறி, ஆண் அடையாளத்துடன்தான் அலுவலகத்துக்குள் நுழைய முடியும். இதனால் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல் களுக்குப் பிறகு, அவர் வேலையைவிட்டு விலக வேண்டிவந்தது! 
ஆனால், அவர் அளவுக்குப் பொறுப்புடன் பணியாற்ற வேறு நபர் கிடைக்காத நிலையில், சில மாதங்களில் அவரையே மீண்டும் அங்கு பணியமர்த்தினர். அதன் பின் அவர் பெண்ணாக, பெண் அடையாளத்துடன் அலுவலகம் சென்று வருகிறார் இன்று வரை. ஆண், பெண்ணுக்கு உரிய அதே திறமையும் வல்லமையும் இருந்தாலும், திருநங்கைகளின் திறமையைக் கவனத்தில்கொள்ளாமல், அவர் திருநங்கை என்பதற்காகவே அவர்களை விலக்கிவைப்பது ஜனநாயக நாட்டில் நிலவும் இன்னொரு தீண்டாமைக் கொடுமை அல்லவா?
ஆனால், உங்களுக்கு அந்தக் கவலை எதுவும் கிடையாது. உங்களை நோக்கிக் கை தட்டி, சற்றுக் களேபரத்துடன் கை நீட்டி வரும் திருநங்கைகள் மட்டும் தான் அவமானமாகத் தெரிகிறார்கள். திருநங்கைகளைத் தவிர, இந்த நாடு முழுவதும் உள்ள எல்லா ஆணும் பெண்ணும்... புத்தன், இயேசு, காந்தி, அன்னை தெரசா என்று உங்களால் கூற முடியுமா? நல்ல படிப்பும், குடும்பச் சூழலும் இன்ன பிற சகல அங்கீகாரங்களும் கிடைத்தபோதும், ஊழல், லஞ்சம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு, தீண்டாமை, ஆள் கடத்தல் என சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் யார்?
என்றோ ஒருநாள் எதிர்ப்படும்போது, கை நீட்டி யாசகம் கேட்கும் திருநங்கைகளை நீங்கள் இவ்வளவு வெறுக்கிறீர்கள். ஆனால், அநீதியான இந்தச் சமூகம் புறக்கணித்ததன் விளைவால், காலந்தோறும் கை ஏந்தி நிற்க வேண்டிய அவலத்துக்காக, இந்தச் சமூகத்தை அவர்கள் எவ்வளவு வெறுக்க வேண்டும்?
சில நண்பர்கள் என்னிடம், 'திருநங்கைகள் பாவம்தான். அவர்கள் பிச்சையெடுப்பது இருக்கட்டும். ஆனால், அதைக் கொஞ்சம் கண்ணியமாகவாவது கேட்கலாமே! கலவரமூட்டும் தொனியில், அநாகரிகமான முறையில் பொது இடங்களில் அவர்கள் நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளதே!’ என்று ஆதங் கப்படுவது உண்டு. இது ஒரு பக்கம் இருக்கட்டும்... நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள்,பொது இடத்தில் நிஜமாகவே நாகரிகமாகத்தான் நடந்துகொள்கிறீர்களா? சாலை நெரிசலில் பொறுமையின்றி விதிகளை மீறுவதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும், ஓவர் டேக் செய்வதும் எப்படி நாகரிகமாக முடியும்? பொது இடத்தில், பொதுச் சொத்துக்கு மதிப்பு தரும் பக்குவம் இல்லாத ஒரு சமூகம், அந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களிடம் மட்டும் நாகரிகம் எதிர்பார்ப்பது எவ்வளவு சுயநலமானது? இதற்காக, அவர்கள் அநாகரிகமாக நடக்கட்டுமே என்று நான் கூறவில்லை. ஏனெனில், இந்த அநாகரிகம்தான் ஒரு வகையில் அவர்களுக்குப் பொது இடத்தில் பாதுகாப்பு தருகிறது. பொதுப் புத்தியில் உறைந்துபோயுள்ள நாகரிக மதிப்பீடுகளுடன் உள்ளவர்கள் ஏவிவிடும் சொல் வன்முறையைக்கூட ஒரு திருநங்கையால் தாங்கிக்கொள்ள முடியும். உடல் வன்முறையைத் தாங்க முடியாது!
யாராலும் இப்படி வன்முறைக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு திருநங்கைகளுக்கு இங்கு மிக அதிகம். அப்படி வன்முறைக்கு ஆளாகும்போது, யாரும் வேடிக்கை பார்ப்பார்களேயன்றி, தடுத்து நிறுத்தப்போவது இல்லை. ஆனால், அந்தத் திருநங்கையோ சற்று மிரட்டலான தொனியில் மற்றவருக்குப் பீதி ஏற்படும் வகையில் இருந்தால்தான், அவளுக்குப் பாதுகாப்பு! திருநங்கைகளை ஏதோ சமூகப் பொறுப்பற்ற விட்டேத்திகளாகவே சமூகம் புரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால், பெரும்பாலான திருநங்கைகள் சம்பாதிப்பதே தங்கள் குடும்பத்துக்காகத்தான் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தான் பிச்சையெடுத்த வருமானத்தில், பாலியல் தொழில் செய்த வருமானத்தில், தன் குடும்பத்துக்கு வீடு கட்டித் தந்த, கடன் அடைத்த, தன் சகோதர - சகோதரி களுக்குத் திருமணம் செய்துவைத்த திருநங்கைகளை நீங்கள் அறிவீர்களா? தன் சகோதர-சகோதரிகளால் கை விடப்பட்ட தாய், தந்தையரை தன்னுடன் வைத்துப் பாதுகாக்கும் பல திருநங்கைகளை நான் அறிவேன்!
ஆரம்பத்தில் குடும்பம், திருநங்கைகளை ஏற்க மறுத்தாலும்... ஒரு கட்டத்துக்கு மேல் மனதளவில் அவர்களை ஏற்றுக்கொள்ளவே செய்கிறது. அதில் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்று வருவது உண்டு. சிலர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதும் உண்டு. எப்போதாவது குடும்பத்துடன் தங்கும் திருநங்கைகள், மாதா மாதம் தவறாமல் பெருந் தொகையை வீட்டுக்கு அளிக்கிறார்கள். மற்ற விசேஷ காலங்களில் ஏற்படும் பெரும் செலவையும் அவர்களே ஏற்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து வாழும் திருநங்கைகளின் குடும்பம் பெரும்பாலும் 80-களில் வெளியான பாலசந்தர் படக் குடும்பங்களைப்போலவே இருக்கும். திருநங்கைகள், அந்தப் பட நாயகிகளைப்போல குடும்பத்தையே தாங்கும் தூண்களாக இருப்பர்.
அப்படி ஒரு நாயகியிடம் ஒருமுறை, 'எப்படி உன் அம்மா நீ பாலியல் தொழில் செய்வதை ஏற்றுக் கொள்கிறார்?’ என்று கேட்டபோது, 'நீ இப்படிக் கேட்கிறாய். ஆனால், என் அம்மாவோ தினம் இவ்வளவு ரூபா கொடுத்துத்தான் ஆகணும் என்கிறார்’ என்றாள் வெற்றுக் குரலில்! இன்று இப்படி ஒரு தாயை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. தனக்கென ஒரு குடும்பமோ, வாரிசோ இல்லாத திருநங்கைகளுக்குக் குறைந்த பட்சம் தன் தாய் வீட்டு உறவுகள் தேவைப்படுகிறது. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை... பணம்!
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் திருநங்கைகளிடம் சற்று கரிசனத்துடன் செயல்படுவது நிஜம். திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, இலவச பால் மாற்று அறுவை சிகிச்சை, இவற்றோடு தனி நல வாரியம் அமைத்தது எனப் பல முதல் கட்ட மாற்றங்கள் இங்கு நிகழ்ந்து உள்ளன.
ஆனால், கண்ணியமான முறையில் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத வரை, அவர்களால் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இயல்பான சக மனிதர்களாக வாழ முடியாது. கணினியில் இளங்கலைப் பட்டமும் கூடுதல் பணித் தகுதியும்கொண்ட திருநங்கை ஒருவர், திருநங்கை நல வாரியத்தில் வேலைவாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. 'வேலைக்குப் பதிலாக, ஒரு கணினி வேண்டும் என விண்ணப்பித்தால், அதனை நல வாரியம் பரிசீலிக்கும்’ என்றாராம் ஓர் அதிகாரி. தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஏழு மாதங்கள் அவர் காத்திருந்தார். ஆனால், 'அப்படி எல்லாம் தனி நபர்களுக்கு உதவ முடியாது’ என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுதான் மிச்சம். அவர் களைப் பொறுத்த வரை, தையல் கலை தெரியாத 10 திருநங்கைகளுக்கு தையல் மெஷின்கள் கொடுத்துப் பத்திரிகைகளில் செய்தி வருவதோடு, நல வாரியத் தின் பணி முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆக்கபூர்வமான நலத் திட்டங்கள் எதுவும் இன்றி, வெறும் கண் துடைப்புக்காகச் செய்யப்படும் எதுவும் திருநங்கைகளின் வாழ்க்கையை மாற்றாது.
திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காத வரை... திருநங்கைகளை அச்சத்துடனும் அந்நியமாகவும் கண்ணில் விழுந்த துரும்புகளாகவுமே இந்தச் சமூகம் எதிர்கொள்ளும்! உங்கள் பக்கத்து இருக்கையில், ஓர் ஆணோ, பெண்ணோ அமர்ந்து இருந்தால், எப்படி உங்களுக்கு எந்தச் சலனத்தையும் பாதிப்பையும் அது ஏற்படுத்தாதோ, அப்படி ஒரு சக பயணியாக வாழ்க்கைப் பயணத்தில் திருநங்கைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தையேனும் இப்போதைக்குச் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது!

இந்த 'எமர்ஜென்சி'க்குப் பெயர்தான்... மக்கள் எதிர்பார்க்கும் 'ஜனநாயகம்’!

ப்ரல் 13-ம் தேதி கடமையைச் செய்துவிட்டு, மே 13 நோக்கி பலனுக்காகக் காத்திருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்!

தேர்தலில் வெற்றி யாருக்கு இருந்தாலும், தேர்தல் களத்தில் கம்பீரமாக நின்ற அதிகாரிகள் சந்தேகத்துக்கே இடம் இல்லாத வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்!
வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் தங்கள் கம்பீரத்தைக் காட்டும் களமாக அமைந்தது இந்தத் தேர்தல். அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்ட, செயல்பட்ட ஒரு சில போலீஸ் அதிகாரிகள் இதில் திருஷ்டிப்பொட்டு!
'தேர்தல் நேர சோதனை என்ற பெயரில், அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இல்லாமலே வண்டிகளை நிறுத்தி, பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்' என்று சில அரசியல்வாதிகள் எகிறிக் குதித்ததை நீதிமன்றம் புறந்தள்ளிய விதம், பொதுமக்களின் ஆரவார வரவேற்பைப் பெற்றது. 'நினைத்ததை'ச் சாதித்துக்கொள்ள முடியாத ஆற்றாமையும் இயலாமையும்தான் 'ஆடு நனைகிறதே' என்று இந்த அரசியல்வாதிகளை அழவைக்கிறது என்பது மக்களுக்குப் புரியாதா என்ன?
தேர்தல் நடக்கும் சொற்ப நாட்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிவில் மற்றும் காவல் துறை அதிகாரிகளைத் திறமையோடு ஒருங்கிணைத்து, அவர்களுக்கான அதிகாரங்களைப் புரியவைத்து, ஆதரவாகத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கிய தேர்தல் ஆணையத்தின் பணி பிரமிப்புக்கு உரியது!
'அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இது!' என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி அரசியல்வாதிகள் சீறியதை, அர்த்தபுஷ்டியோடு மக்கள் ரசித்தார்கள்.
எத்தனை பெரிய அதிகார பலம்கொண்ட கொம்பனாக இருந்தாலும் சரி... அதிரடி சோதனைகள் நடக்கும், கோடிகள் பறிமுதலாகும், வழக்குகள் பாயும், கைதுகளும்கூட அரங்கேறும் என்று அதிரடியாகப் புரியவைக்கும் அசாதாரணமான வாய்ப்பு, இப்படிப்பட்ட 'எமர்ஜென்சி' சூழ்நிலையில்தான் அதிகாரிகளுக்குக் கிடைக்கும் என்றால்...
இந்த 'எமர்ஜென்சி'க்குப் பெயர்தான்... மக்கள் எதிர்பார்க்கும் 'ஜனநாயகம்’!

Source - Vikatan Magazine

அன்னா ஹஸாரே (எ) இந்தியன் தாத்தா

அன்னா ஹஸாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்
படம் : பொன்.செந்தில்குமார்
ஃபக்கீர்
 


- ந்த அரபு வார்த்தைக்கு, 'சொந்த பந்தங்களோ, சொத்துப் பத்துகளோ அற்றவன்’ என்று பொருள். அன்னா ஹஸாரே இப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். இன்று இந்த ஃபக்கீருக்குப் பின் இந்திய தேசமே திரண்டு நிற்கிறது. காந்தி இறந்து 63 ஆண்டுகளுக்குப் பின், சத்யாகிரகமும் உண்ணாவிரதமும் மீண்டும் உலகத்தின் பாடு பொருள் ஆகி இருக்கின்றன. டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி, சர்வதேச கவனத்தைத் தன் பால் இழுத்திருக்கிறது. மும்பையின் 'கேட் வே ஆஃப் இந்தியா’ பகுதியில் அன்னாவுக்கு ஆதரவாக முழக்கங்கள். ஆமதாபாத்தில் அவருடைய போராட்டத்தை ஆதரித்தும், அரசை எதிர்த்தும், வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறந்தன. ஜெய்ப்பூரில் பிரமாண்டமான ஆதரவு ஊர்வலம். அன்னாவுக்கு ஆதரவு தெரிவிக்க முனைந்தவர்கள் மெரினா கடற்கரையில் மௌனமாகக் குழுமி நின்றார்கள். கோவையில் ஆயிரக்கணக்கானோர் கைகளில் மெழுகுவத்திகள் ஏந்தி அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்கள். பாட்னாவில் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் மூலமாக ஆதரவு தெரிவித்தார்கள். அன்னாவுக்கு ஆதரவான 'மிஸ்டு கால் இயக்கம்’ தொடங்கப்பட்டபோது, '022 - 61550789’ என்ற எண் நாட்டின் மிக பிஸியான எண்ணாக மாறியது. அவரைப்பற்றி சுமார் 60 லட்சம் குறுஞ்செய்திகள் 'டிவீட்’டப்பட்டன. ஃபேஸ்புக்கில் லட்சோப லட்சம் பேர் அவரைப் பின்தொடர்ந்தார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் சென்ற வாரம் அன்னா பெயரை உச்சரித்தது!
அன்னா ஹஸாரே... ஊழலுக்கு எதிரான இந்தியாவின் புதிய அடையாளம்!
டந்த மக்களவைத் தேர்தல் சமயம். 'ஊழல்... ஊழல்!’ என்று கூவிக்கொண்டே ஊழல் பணத்தில் எல்லோரும் திளைத்துக்கொண்டு இருந்த தருணம். அன்னா தீவிர யோசனையில் இருந்தார். அவருடைய சகாக்கள் நாடு முழுவதும் உள்ள நேர்மையான அதிகாரிகளிடமும் சமூகச் செயல்பாட்டாளர்களிடமும் ஆலோசனை நடத்தினர். அனைவரின் ஆலோசனைகளும் யோசனைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான்... ஊழலை ஒழிக்க, வல்லமை மிக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்! அன்னா நிறைவேற்றக் கோரி போராடிக்கொண்டு இருக்கும் 'லோக் பால் மசோதா’வுக்கான மாதிரி இப்படித்தான் உருவானது. சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே, கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், அர்விந்த் கேஜ்ரிவால் எனப் பலருடைய உழைப்பும் முனைப்பும் இந்த நோக்கத்தைச் சாத்தியப்படுத்தும் எரிபொருளாகத் திகழ்கின்றன!
ஊழல் புகார் என்றால், பிரதமரே ஆனாலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வழக்குப் பதிய உத்தரவு இட வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், உச்சபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படி ஓர் அதிகாரம்கொண்ட தன்னாட்சி அமைப்பாக 'லோக் பால்’ உருவானால் எப்படி இருக்கும்? அப்போதுகூடவா ஊழலை ஒழிக்க முடியாது? - அன்னா திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி இது. 'லோக் பால்’ மசோதாவுக்கான மாதிரியாக, அவருடைய குழுவினர் தயாரித்த 'ஜன் லோக் பால்’ மசோதா இவற்றையெல்லாம்தான் பரிந்துரைக்கிறது. ஆனால், அன்னாவின் கனவு சாத்தியமாவது அத்தனை எளிது அல்ல என்பது சுடும் நிதர்சனம்!
இந்திய அரசியல் வர்க்கம் 43 வருடங்களாக முடக்கிப்போட்டு இருக்கும் அந்த மசோதா, 1968-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது அது அறிமுகப்படுத்தப்படுவதும், மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்படுவதும், அதன் பரிந்துரைகளோடு தாக்கல் செய்யப்படுவதற்குள் காலாவதி ஆகிவிடுவது மாக இதுவரை 10 முறை தாக்கல் செய்யப் பட்டு இருக்கிறது அந்த மசோதா. ஆனால், எந்த அரசும் அந்த மசோதாவை நிறைவேற்ற விரும்ப வில்லை!
இத்தனைக்கும் அரசாங்கம் உருவாக்கி இருக்கும் மசோதா, பல் இல்லாத பாம்பு. அரசினால் முன்வைக்கப்படும் லோக் பால் மசோதாவின் படி, ஓர் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டால், அதற்கு ஓர் ஆலோசனைக் குழுவுக்கான அதிகாரம் மட்டுமே இருக்கும். ஒரு விவகாரம்பற்றி புகார்கள் ஏதும் இன்றி, தானாக விசாரிக்கும் அதிகாரம்கூட அதற்கு இல்லை. தவிர, பொதுமக்களிடம் இருந்து புகார் களைப் பெறும் அதிகாரமும் கிடையாது. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும். காவல் துறை நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரமும் கிடையாது. ஊழல் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவோருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம். அவ்வளவே!
பெயர் அளவிலான இப்படி ஓர் அமைப்பை உருவாக்கவே நம்முடைய அரசியல்வாதிகள் தயாராக இல்லை. இப்போது அன்னா கேட்பதோ, முழு அதிகாரம் மிக்க ஓர் அமைப்பு. எப்படி ஒப்புக்கொள்வார்கள்? அதுவும் இந்த மசோதாவைத் தயாரிக்கும் குழுவில், மக்கள் தரப்பில் நேர்மையாளர்களுக்குச் சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் அன்னா.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அன்னா பேசினார். 'ஜன் லோக் பால்’ மாதிரி மசோதாவை அவருடைய 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த சகாக்கள் அரசிடம் ஒப்படைத்தார்கள். அன்னாவுக்கு நம்பிக்கை தருவதுபோலவே எல்லாமும் நடந்தன. ஆனால், வழக்கம்போல கபட நாடகம் ஆடியது இந்திய அரசு. மசோதாவைத் தயாரிக்கும் குழுவில், மக்கள் தரப்புப் பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்க வில்லை. வெறுமனே கோரிக்கைகள் மட்டும் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித் தது. நொறுங்கிப்போனார் அன்னா!
உண்ணாவிரத முடிவோடு ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்றபோது அவர் கேட்டார், ''பிரதமருக்கு பிரஷாந்த் பூஷனோ, சந்தோஷ் ஹெக்டேவோ நேர்மையாளர் களாகத் தெரியவில்லை. மகாராஷ்டிரத்திலேயே அதிகமாக நிலம் வைத்திருக்கும் சரத் பவார்தான் பொருத்தமானவராகத் தெரிகிறார். சரத் பவார் தலைமையில் ஊழலுக்கு எதிராக ஒரு குழு. இந்தக் குழு தயாரிக்கும் மசோதா எப்படி இருக்கும்?''
அரசு முதலில் இந்த உண்ணாவிரதத்துக்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை. பிரதமர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி, ''அன்னாவுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?'' என்று கேள்வி கேட்டது. ஆனால், நாடெங்கும் பல்கிப் பெருகிய மக்கள் ஆதரவு, நிலைமையைத் தலை கீழ் ஆக்கியது. குழுவின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகினார். தொடர் போராட்டத்தின் விளைவாக அன்னாவின் அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாகக் கூறி, குழுவில் சரிபாதி இடங்களை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்து அறிவிப்பாணையை வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு.
நிச்சயம் இந்தியாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மைல் கல் முத்திரை இது!
  ஒருபுறம் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் கடுமையான விமர் சனங்களையும் எதிர்கொள்கிறது. 'இதெல்லாம் ஒரு போராட்டமா?’ என்பதில் தொடங்கி... இந்த ஒரு மசோதா, இந்தியாவை ஊழல் அற்ற நாடாக மாற்றி விடுமா என்பது வரை!
எந்த ஒரு சமூக மாற்றமும் மக்களிடத்தில் இருந்துதான் உருவாக வேண்டும். ஒரு குடிமைச் சமூகத்தில் எல்லா வகையினருக்கும் இடம் உண்டு. ஏ.சி அறையில் பர்கர் கொரித்துக்கொண்டு 'ஃபேஸ்புக்’கில் கமென்ட் அடிப்பவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்பதற்கான பதில்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பிரதிபலிக்கின்றன.
மக்கள், அன்னா ஹஸாரே போல உண்ணாவிரதம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு எதிரான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த இந்தப் போராட்டம் ஒரு வாசலைத் திறந்து இருக்கிறது.
இந்த மசோதா அப்படியே நிறைவேறுமா, நேர்மையான ஓர் அதிகாரம் மிக்க அமைப்பு உருவாகுமா, அது அரசியல்வாதிகளைத் தண்டிக்குமா, நம் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குமா... எல்லாமே கேள்விகள்தான். ஆனால், அப்படி ஓர் அமைப்பு உருவாகுமானால், வெளிப்படையான நிர்வாக அமைப்புக்கு நிச்சயம் அது முக்கியமான பங்கு அளிக்கும்.
அன்னா தன் சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியைத் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியபோது சொன்னார், ''இதுதான் முடிவென்றோ, தீர்வென்றோ நான் நினைக்கவில்லை. பிரச்னை இருக்கிறது. தீர்க்கப்பட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதற்கான தொடக்கப் புள்ளி நான். அவ்வளவுதான். சரி, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?''
- தொடர்வோம்...

யார் இந்த அன்னா ஹஸாரே?
மகாராஷ்டிர மாநிலம், பிங்கூர் கிராமத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த மூத்த பிள்ளை ஹஸாரே. ஏழாம் வகுப்பைத் தொடரவே பொருளாதாரச் சூழல் அனுமதிக்கவில்லை. ஹஸாரேவின் 12 வயதில், அவருடைய குடும்பம், பூர்வீக நிலம் இருந்த ராலேகான் சித்திக்கு இடம்பெயர்ந்தது. கொஞ்ச காலம் காய்கறிக் கடை வேலை. அப்புறம், ராணுவத்தில் சேர்ந்தார்.

வங்கதேசப் போரின்போது, பாகிஸ்தான் விமானப் படையின் தாக்குதலில் இவருடன்  வந்தவர்கள் சிதைந்துபோக, அதிர்ஷ்டவசமாக ஹஸாரே மட்டும் தப்பினார். வாழ்வைத் திருத்தி அமைக்கும் கேள்விகள் ஹஸாரேயின் மனசாட்சியைப் புரட்டியது இந்தக் காலகட்டத்தில்தான்.
மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், வினோபாபா பாவே ஆகியோரின் புத்தகங்கள் அவருடைய மன எழுச்சிக்கு வழிகாட்டுதலாக அமைந்தன. ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊர் திரும்பினார் ஹஸாரே.
வறண்ட பூமியான ராலேகான் சித்தியை, மக்கள் பங்கேற்புடன் பாசனக் கட்டமைப்புகளை உருவாக்கி, தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றினார். மழை நீர் சேகரிப்பு, சிறு அணைத் திட்டங்கள், சுய முன்னேற்றத் திட்டங்கள் என்று நாட்டின் முன்மாதிரி கிராமமாக ராலேகான் சித்தி உருவெடுத்தது. ஒரு சாதாரண மனிதன் வரலாற்று நாயகனாக உருவெடுத்த தருணம் அது!

ஏன் நமக்கு 'லோக் பால்' வேண்டும்?
சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் 28.5 லட்சம் கோடி சட்ட விரோதமாகப் பதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 22.5 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தப் பணத்தை நம்மால் மீட்க முடியாது!
 ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மதுகோடா, ஜார்கண்ட் முதல்வரானதும் உலகெங்கும் 1,800 வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் அளவுக்குப் பெரும் பணக்காரர் ஆனார். 4,000 கோடி அளவுக்கு அவர் பண மோசடி செய்திருப்பதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. ஆனாலும், அவர் தப்பிக்கிறார்!
 இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் '2ஜி’ அலைக்கற்றை முறைகேடு. நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய இந்த ஊழலின் சூத்திரதாரியான ஆ.ராசா, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னும் 400 நாட்கள் வரை மத்திய அமைச்சர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தார்!
 நாட்டிலேயே 'லோக் ஆயுக்தா’ சிறப்பாகச் செயல்படும் மாநிலமான கர்நாடகத்தில், வெட்டி எடுக்கப்படும் கனிமங்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவை சட்ட விரோதமான வகையில் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் எஃகு மட்டும் இப்படி 35 லட்சம் டன் எடுக்கப்பட்டது. இதன் சூத்திரதாரிகள் அம்மாநில அரசின் செல்வாக்கு மிக்க ரெட்டி சகோதரர்கள். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
''அதிகாரம் அற்ற அமைப்பில் இருப்பதில் பிரயோஜனம் இல்லை!'' என்று கூறி பதவியில் இருந்தே விலக முடிவெடுத்தார் 'லோக் ஆயுக்தா’ நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.
இவை அவ்வளவுக்கும் காரணம், ஊழலை ஒழிக்க இந்தியாவில் சுய அதிகாரம் மிக்க அமைப்பு இல்லை!


Source - Vikatan Magazine

Wednesday, April 13, 2011

தமிழக சட்டமன்ற வரலாறு!

தமிழக சட்டமன்ற வரலாறு!

-எம். பரக்கத் அலி 
மிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும்  ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய  ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது 'சென்னை மாகாணம்'.
சென்னையை போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களும் அப்போது
நடைமுறையில் இருந்தன. இந்த  மாகாணங்களுக்கு பொறுப்பாக தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும்  சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்)  நியமிக்கப்பட்டார்.
1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும்  சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. 1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில்  நிறைவேற்றப்பட்ட 'இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.
சென்னை மாகாணத்திற்கான நிர்வாகக் குழுவில் ஆறுக்கு குறைவில்லாத 12-க்கு மேற்படாத எண்ணிக்கையிலான  அதிகாரிகள் அல்லாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டது.  அமைதி மற்றும் நல்லாட்சியை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற இந்த சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.  1892-ம் ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படும் கூடுதல்  உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்பட்டது. அதிகாரிகள் அல்லாத இந்த உறுப்பினர்களை  மாவட்ட நிர்வாக குழுக்களும் (ஜில்லா போர்டுகள்), பல்கலைக் கழகங்களும், நகராட்சிகளும் பரிந்துரை செய்தன.
மிண்டடோ  மார்லி சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக  சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் நேரடித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்த  சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை  50-ஆக உயர்த்தப்பட்டது. 1919-ம் ஆண்டு மாண்டேகு -செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில்  நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்கீழ் மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும்  பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இச்சட்டத்தின்கீழ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஆளுநர் அந்த  சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிகாரத்தை பெற்றார்.
1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் 'சென்னை மாகாண சட்டமன்றம்' 1921-ம் ஆண்டு  உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட  மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்டதாக இது இருந்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு  ஜனவரி 9-ம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த  வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12-ம்  நாள் துவக்கி வைத்தார். இதில் முதல்முறையாக மாகாண ஆளுநர் பிப்ரவரி 14-ம் நாள் உரையாற்றினார்.

1923 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின்  இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன. 1930-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின்  அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு, 1935-ம் ஆண்டின் இந்திய  அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.
சட்ட மேலவை:
1935-ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 'மேல் அவை', 'கீழ் அவை' என இரு  அவைகள் உருவாக்கப்பட்டன. இந்த இரு அவைகளும், ஆளுநரும் சேர்ந்து மாகாண சட்டமன்றம் என  அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் கலைக்கப்பட இயலாத நிரந்தர அவையாக 'சட்ட மேலவை' செயல்பட்டது.  ஒவ்வொரு மூன்றாண்டின் நிறைவிலும் அதன் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஓய்வுபெற வகை  செய்யப்பட்டிருந்தது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54-ஆகவும் அதிகபட்சம் 56-ஆகவும் இருந்தது.  சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும்,  மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர். எட்டுக்கு குறையாமலும் பத்துக்கு மேற்படாமலும் நியமன  உறுப்பினர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
சட்டப்பேரவை:
சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146  இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றில் கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது:
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 30
பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் - 1
இஸ்லாமியர்கள்-28
ஆங்கிலோ இந்தியர்கள் - 2
ஐரோப்பியர்கள் - 3
இந்திய கிறிஸ்தவர்கள் -8
தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் - 6
நிலச்சுவான்தார்கள் - 6
பல்கலைக்கழகம் - 1
தொழிலாளர் பிரதிநிதிகள் - 6
பெண்கள் - 8
1935-ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான்  நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம்  1937-ம் ஆண்டு ஜுலை மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம்  அறிவிக்கப்பட்டதால் 1939-ம் ஆண்டு அக்டடோ பர் மாதம் அமைச்சரவை பதவி விலகியது. இதனை தொடர்ந்து  இந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

போர் முடிந்ததும் 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம்  அமைக்கப்பட்டது.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952ல் குடியரசு ஆனது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்  அடிப்படையில் 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. வயது வந்தோருக்கான  வாக்குரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை தொடர்ந்து சென்னை மாநிலத்தின் முதலாவது  சட்டமன்றம் 1952-ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சென்னை மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். மொத்தம் 309  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 243 'ஒரு உறுப்பினர் தொகுதி'களும் 66 'இரட்டை உறுப்பினர்  தொகுதி'களும் இடம் பெற்றிருந்தன. இதில் 62 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம்  தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் நான்கு 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் பழங்குடியினருக்கும்  ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இவை தவிர ஆங்கிலோ இந்திய வகுப்பினரைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை ஆளுநர்  நியமனம் செய்தார்.
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை தனி ஆந்திர மாநிலமாக அறிவித்தும்,  பெல்லாரி மாவட்டத்தின் கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை அன்றைய மைசூர் மாநிலத்துடன் இணைத்தும் 1953-ம்  ஆண்டு அக்டோ பர் 1ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்  எண்ணிக்கை 231-ஆக குறைந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து 'மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்'  நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மலபார் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகள் கேரள மாநிலத்துடன்  இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 190-ஆக  குறைந்தது. அன்றைய கேரள மாநிலத்தில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான தற்போதைய கன்னியாகுமரி  மாவட்டமும், செங்கோட்டை வட்டமும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.
பின்னர் 1956-ஆம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை  உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது. மொத்தம் 167 தொகுதிகளில் 38 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள்  இடம் பெற்றிருந்தன.
1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி  அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 205 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் இதில் இடம்  பெற்றிருந்தார்.
1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை  சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு  மாற்றப்பட்டது. இதன் விளைவாக மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 206-ஆக உயர்ந்தது.
1961-ஆம் ஆண்டில் 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் 'ஒரு  உறுப்பினர்' தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 37 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் ஒரு தொகுதி  பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து  மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு'  நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன.  இவற்றில் 42 இடங்கள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் இரண்டு இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  கூடுதலாக ஒரு இடத்திற்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டார்.
1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின்  நான்காவது சட்டப்பேரவை அமைந்தது. இந்த சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 'சென்னை  மாநிலம்' 'தமிழ்நாடு' மாநிலமாக பெயர் மாறியது. 1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது  சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.  தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல்  முறையாகும்.
1977-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1975ம் ஆண்டின் 'தொகுதி  சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த  சட்டப்பேரவையும் 1980-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. இதற்கிடையே  1979-ம் ஆண்டு உப்பிலியாபுரம் பொது தொகுதி பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.  1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவையும் 1985-ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி எட்டாவது  சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன. எட்டாவது சட்டப்பேரவை 1988-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி  கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக 'சட்ட மேலவை'யை நீக்குவதற்கான தீர்மானம் 1986ம் ஆண்டு  நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின்  நவம்பர் 1ம் தேதி தமிழக 'சட்ட மேலவை' கலைக்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு இரு அவைகளாக  உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக  உருவெடுத்தது.

1989-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள்  கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கலைக்கப்பட்ட 'சட்ட மேலவை'யை மீண்டும்  உருவாக்க இந்த சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-வது சட்டப்பேரவை 1991ம்  ஆண்டு ஜுன் 24-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்கும்  தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் 1991ம் ஆண்டு அக்டோ பர் 4-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1996ம்  ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் ஜுலை 26-ம்  தேதி மீண்டும் தமிழக 'சட்ட மேலவை'யை உருவாக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2001ம் ஆண்டு  மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.  13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2006 மே 8ம் தேதி நடைபெற்றது.
தொகுதி மறுசீறுமைப்பு:
இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல்
நடவடிக்கைகள் 1951-ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஒன்பது  கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் உட்பட மொத்தம் 309  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1957-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள்  சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக குறைந்தது. 1965-ம் ஆண்டின்  'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்தது.

1975-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல்  நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன. 1977-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு  வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில்  நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டு நடைபெற்ற 'தொகுதி சீரமைப்'பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட  போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Source - Vikatan Magazine

Monday, April 11, 2011

சேறு வாரி இறைத்த கட்சிகளின் தீவிரபிரசாரம் முடிகிறது: தேர்தல் கமிஷன் கெடுபிடிகளில் அதிருப்தி

சேறு வாரி இறைத்த கட்சிகளின் தீவிரபிரசாரம் முடிகிறது: தேர்தல் கமிஷன் கெடுபிடிகளில் அதிருப்தி
 
மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 10,2011,23:29 IST
சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இதையடுத்து, வெளிநபர்கள் அனைவரும் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். தமிழகத்தில் இரு முக்கிய அணிகள் தரப்பிலும் மாறி மாறி சேறு வாரி இறைத்த நிலையில், தற்போது தேர்தல் கமிஷன் மீது கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டுப் பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது.எனவே, இடைப்பட்ட 14 நாட்களில், தமிழகம் முழுவதும் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இது தவிர, பிரதான இரண்டு கூட்டணிகளிலும் ஸ்டார் பிரசாரகர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, இரு தரப்பிலுமே மாறி மாறி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்பட்டு, சேறு வாரி இறைக்கப்பட்டன. இதுவரை தேர்தல்களில் இல்லாத அளவு தனிப்பட்ட விமர்சனங்களை தி.மு.க., அணியினரும், அ.தி.மு.க., அணியினரும் மேற்கொண்டனர். தற்போது இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான தலைவர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இதன் பின், கூட்டம் நடத்தியோ, மைக் மூலமாகவோ யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. எனினும், வீடு வீடாகச் சென்று அமைதியாக ஓட்டு சேகரிக்கலாம். தொகுதியில் வாக்காளராக இல்லாத எவரும் அந்த தொகுதிக்குள் இருக்கக்கூடாது. லாட்ஜ்கள், மண்டபங்கள் போன்றவற்றில் சம்பந்தமில்லாதவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலுமே ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், பெரும்பாலும் வெளிநபர்கள் தொகுதிக்குள் இருக்க வாய்ப்பில்லை. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேண்டுமானால், வேறு தொகுதி கட்சிக்காரர்கள் இருக்கலாம்.பிரசாரம் முடியும் நிலையில், பணப் பட்டுவாடாவில் முக்கிய கட்சிகள் கவனம் செலுத்தலாம் என்பதால், இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சில நாட்களாக, இரவு நேரத்தில் மின் தடையை ஏற்படுத்தி, பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் வந்துள்ளன.

முன்கூட்டியே அறிவிக்காமல், மின் தடை ஏற்படுத்தக் கூடாது என மின் வாரியத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டும், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊழியர்களை கவனித்து, மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கு ஏற்ப, ஓட்டுச் சாவடிகளுக்கான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் நாளை அனுப்பி வைக்கப்படும்.தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக, தீவிர பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே, 200 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். இன்று மேலும் 40 கம்பெனி படையினர் வருகை தர உள்ளனர்.

"டாஸ்மாக்' மதுபானக் கடைகள் மற்றும் தனியார் பார்கள் இன்று மாலை 5 மணியுடன் மூடப்படுகின்றன. வரும் 13ம் தேதி வரை கடைகள் மூடப்பட்டிருக்கும்; 14ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும்.பிரசாரம் முடிவுக்கு வர உள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர், தேர்தல் கமிஷனின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். பணப் பட்டுவாடாவையும், பரிமாற்றத்தையும் தடுக்கவில்லை என்று அ.தி.மு.க., தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனிப்பட்ட முறையில் விமர்சனம் மற்றும் எஸ்.எம்.எஸ்., பிரசாரம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை என்று தி.மு.க., தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் தன் அதிகாரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதாக முதல்வர் கருணாநிதி தெளிவாக குற்றம் சாட்டியுள்ளார். அதே சமயம் தலைமைத் தேர்தல் கமிஷனர், "தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலான பணி' என்று குறிப்பிட்டது இதுவரை கூறப்படாத புகாராகும். மேலும், அதிக அளவில் கணக்கில் காட்டப்படாத பணம் தமிழகத்தில் பிடிபட்டிருக்கிறது என்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்திருப்பது அதிர்ச்சி தகவலாகும். பீகாரை விட அதிக கெடுபிடியுடன் தேர்தலை நடத்த கமிஷன் முன்வந்திருப்பதால், ஓட்டுப்பதிவு முடியும் வரை அதிக பரபரப்பு புகார்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source - Dinamalar

ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ; ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011,14:35 IST
 
டோக்கியோ : கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி இன்று தனது ஒரு மாத இடைவெளியில் மீண்டும் கோரத்தாண்டவத்தை வெளிக்காட்டியுள்ளது. இன்றைய பயங்கர நிலநடுக்கும் 7. 1 ரிக்டர் அளவாகி பதிவாகியிருக்கிறது. இதனால் ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் தாக்கிய இந்த பூகம்பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி தாக்கும் பட்சத்தில் 50 செ.மீட்டர் உயரம் வரை கடலில் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி நடந்த அதே நாளில் இன்று 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பான் மீண்டும் வளர்ச்சி பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பூகம்பம், சுனாமியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். உலகம் முழுவதும் இருந்து நிவாரணப்பொருட்கள் இன்னும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது.

Source - Dinamalar News

Sunday, April 10, 2011

வாழ்க வளமுடன்! - 2

வாழ்க வளமுடன்! - 2

வேதாத்திரி மகரிஷி
'சுவாமி, உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கும்போது, கால்களுக்கு மட்டும் ஏன் இத்தனைக் கரிசனம் காட்டச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அன்பர் ஒருவர்.
அவரே தொடர்ந்து... ''அலுவலகத்திலோ வீட்டிலோ ஏதேனும் வேலை செய்யும் போதெல்லாம் கைகளைத்தான் பயன்படுத்து கிறோம். மின்விசிறிக்குக் கீழே அமர்ந்து செய்கிற வேலையாக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு  பல ஏரியாக்களில் அலைவதாக இருந்தாலும் சரி... கால்களுக்குப் பெரிய வேலை எதுவுமே இல்லியே?! கண்கள் கவனமாகப் பார்க்கின்றன; முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டிலும் வருகிற மற்ற வாகனங்களுக்குத் தக்கபடி வண்டியைச் செலுத்தவேண்டும் என எந்நேரமும் புத்தி விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மனம், புத்தி, கண்கள் ஆகியன ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்றுகின்றன. அதேபோல், வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டுவதற்குத் தோதாக, நம் முதுகு நிமிர்ந்தும் வளைந்தும் செயல்பட்டபடி இருக்கிறது. கைகள் ஹேண்டில்பாரைப் பற்றியிருக்கின்றன. அப்படியிருக்க... கால்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? இத்தனைக் கரிசனம் எதற்காக?'' என்றார்.
உடனே அங்கிருந்த மற்ற அன்பர்கள், அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர். கைகளை உயர்த்திச் சிரிப்பை நிறுத்தினேன். ''ஏன் சிரிக்கிறீர்கள்? அவரது சந்தேகம் நியாயமானது! நீங்கள் இப்படிச் சிரித்தால், உங்களில் வேறு சிலரின் இதுபோன்ற சந்தேகங்கள் கேட்கப்படாமலே போகலாம்; விடைகள், வினாக்களுக்காக ஏங்கித் தவிக்கும்'' என்று சொல்லிவிட்டு, அந்த அன்பரைப் பார்த்தேன்.
''நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்றார். ''நிம்மதியாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ''ஆமாம்'' என்றார். ''சரி, மிகப் பெரிய சந்தோஷமும் நிம்மதியும் எப்போது, எதனால் கிடைப்பதாக உணர்கிறீர்கள்?'' என்று கேட்டேன். சற்றே யோசித்தவர், ''ஆபீஸ் செல்வதற்குப் புதிதாக பைக் வாங்கினேன். இப்போது ஆபீஸ் சென்று வருவது சுலபமாக, சுகமாக இருக்கிறது, சுவாமி!'' என்றார். தொடர்ந்து, ''என் மகன் ஆசைப் பட்டபடி, அவனை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்?'' என்றார். பிறகு அவரே, ''என் மனைவிக்குச் சமீபத்தில் தங்க வளையல் வாங்கித் தந்தேன். அவளது முகத்தில் அப்படியரு பிரகாசம்!'' என்று வெட்கத்துடன் தெரிவித்தார். ''அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?'' என்று புன்சிரிப்புடன் கேட்டேன்.
''கிராமத்தில் உள்ள என் அப்பாவின் குடை, கிழிந்து, கம்பிகள் உடைந்துவிட்டன. அதேபோல், அம்மாவின் மூக்குக்கண்ணாடி வளைந்தும் நெளிந்துமாக, கீழே குனிகிறபோதெல்லாம் விழுந்துவிடுகின்றன. போன மாதம் ஊருக்குச் சென்றபோது, அப்பாவுக்கு குடையும் அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் மனதின் பூரிப்புக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை'' என்று சொல்லும்போது அந்த அன்பரின் கண்கள் கலங்கியிருந்தன.
மோட்டார் சைக்கிள், கல்லூரிப் படிப்பு, தங்க வளையல் எல்லாமே காஸ்ட்லிதான்! ஆனால், அப்பாவுக்கு வாங்கித் தந்த குடையிலும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியிலும் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் பரவிக் கிடக்கின்றன. பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலான நம்முடைய இந்தப் பயணத்துக்கு, அவர்கள்தானே வித்து! வேர்களுக்கு நீருற்றினால் தானே மரத்துக்குத் தெம்பு?!
அப்படித்தான்...  மரமென ஓங்கி உயர்ந்து, வளர்ந்து நிற்கிற நமக்கான வேர்கள், நம் கால்கள்!
வஜ்ராசனம் தெரியுமா? இரண்டு தொடைகளும் சேர்ந்த நிலையில், இரண்டு
பாதங்களும் பின்னுக்குச் செல்ல, மண்டியிட்டு அமருங்கள்.  அதாவது, உங்களுக்குப் பின்பக்கத் தில், வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரல்மீது வைத்துக் கொண்டு, குதிகால்களை நன்றாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த உள்ளங்கால்களுக்கு இடையே பிருஷ்டத்தை, அதாவது நமது பின் பாகத்தை வசதியாக வைத்துக்கொண்டு, அமருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் பின்னால், முதுகின் மேல் பகுதிக்குக் கொண்டு வரவும். கட்டைவிரல்கள் தவிர, மீதமுள்ள எட்டு விரல்களும் முதுகை மேலிருந்து கீழாக அழுத்தியபடி, கீழ் முதுகு வரை அழுத்துங்கள். அதாவது, முதுகெலும்பு எனும் பகுதியை எட்டு விரல்களும் தொட்டுக் கொண்டே வரட்டும். கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ஐந்தைந்து முறை செய்யுங்கள்.



நம்முடைய முதுகை நம்மால் பார்க்கமுடியாது. அதனால் என்ன?! நமது முதுகை, கால்கள் தாங்கிக் கொள்ளும். 'உனக்கு நான், எனக்கு நீ’ என்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளும். முதுகெலும்பில் தெம்பில்லை எனில், கால்கள் ரொம்ப நேரம் நிற்காது. கால்களுக்கு வலு இல்லையெனில், முதுகெலும்பு நொந்து போகும். சட்டென்று முதுகு வளையும். 'என்னன்னே தெரியலீங்க... பத்து நிமிஷம் நின்னாலே, முதுகு சுருக்குனு பிடிச்சுக்குது’ எனப் பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்!
அதுமட்டுமா? அலுவலகத்தில், நீண்ட நேரம் கால்களை அசைக் காமல் வைத்திருந்தபடி உட்கார்ந்திருந்தாலோ அல்லது பைக்கில் எந்த அசைவுமின்றி கால்களை அப்படியே வைத்திருந் தாலோ, பிறகு எங்கேனும் வண்டி நிற்கும்போதோ அல்லது அலுவலக நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ என்ன செய்வீர்கள்?!
கால்களை உதறுவீர்கள்; விரல்களைச் சுருக்கி விரிப்பீர்கள்; தொடைகளில் செல்லமாக அறைந்து கொள்வீர்கள்; ஆடுதசையை மெள்ளப் பிடித்து விடுவீர்கள். முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கைகளை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியுமாகத் திரும்புவீர்கள்; பிறகு, பின்னோக்கி முதுகை வளைத்து, அண்ணாந்து பார்த்துவிட்டு, அப்படியே குனிந்து பார்ப்பீர்கள். அப்போது உடலுக்குள் ஒரு பரவசம் ஓடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
வேர்களில் நீரூற்றினால் செடி, மரமாகும்; கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

''என் வாக்கு விற்பனைக்கு அல்ல!''

''என் வாக்கு விற்பனைக்கு அல்ல!''

சபதம் எடுக்கச் சொல்லும் தமிழருவி
அன்புக்கினிய வாக்காளப் பெருமக்களே... வணக்கம். வளர்க நலம்!
'நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்?’ என்று
வழிகாட்டும் தகுதி எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. என் தலைக்குப் பின்னால் எந்த ஒளிவட்டமும் இல்லை என்பதை நன்றாக நான் அறிவேன். சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க ஒரு சாதாரண மனிதனாக உங்களிடம் மனம் திறக்க விரும்புகிறேன். தேர்தலில் உங்கள் வலிமை மிக்க வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு முன்பு, நிதானமாக நின்று கொஞ்சம் சிந்திக்க வேண்டுகிறேன்!
'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?’ என்று பாரதி அன்று பதறித் துடித்தான். அவன் அஞ்சியபடியே, இன்று நம் கண் முன்னால் ஜனநாயகப் பயிரைக் கள்ள ஆடுகள் மேய்ந்து திரிகின்றன. நம் மூதாதையர் ஓராயிரம் தியாகம் செய்து நமக்குப் பெற்றுத் தந்த ஜனநாயகப் பயிரை, இந்த மலினமான ஆடுகள் முற்றாக மேய்ந்துவிடுவதற்கு முன்பு நாம் விழிப்பு உணர்வு பெற்றாக வேண்டும்.
ஜனநாயக அமைப்பில் நம் வாழ்க்கை விதியை வரையறுக்கும் உரிமை நம்மிடம்தான் உள்ளது. நம் கையில் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுதான் நம் வாழ்வை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டு, ஒரு கணத்தில் நாம் தவறான முடிவு எடுத்து... மோசமான மனிதர்களுக்கு வாக்கு அளித்தால், அதன் பயனாகப் படை எடுக்கும் தீய விளைவுகளை நாம்தான் ஐந்து ஆண்டுகள் முழுவதும் அனுபவித்தாக வேண்டும். வரங்களோ, சாபங்களோ, வானத்தில் இருந்தபடி ஆண்டவன் அளிப்பது இல்லை. வாக்கு அளிக்கும் முறையின் மூலம் நாம்தான் அவற்றை நமக்கு வழங்கிக்கொள்கிறோம்.
'எந்த நெறிமுறைக்கும் உட்பட்ட சட்டத்தையும் நான் அரசியலில் அங்கீகரிப்​பது இல்லை. அரசியல் ஒரு விளையாட்டு. அதில் எல்லா விதமான தந்திரங்களும் ஏற்கப்படும். அரசியல் விளையாட்டில் பங்கேற்பவரின் வசதிக்கு ஏற்ப சட்டங்கள் வளைக்கப்படும்’ என்ற ஹிட்லரின் வழித் தோன்றல்களுக்குத்தான் நாம் இங்கே வழிபாடு நடத்துகிறோம். நேர்மையின் நிறம் மாறாமல் நெறி சார்ந்து அரசியல் நடத்த, 8 கோடி மக்களில் 234 உறுப்பினர்களை நம்மால் கண்டெடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய அவலம்!
தனி மனித ஒழுக்கமும், தன்னல மறுப்பும், எளிமை தவழும் வாழ்வும், மக்கள் நலனில் முழுமையான நாட்டமும், ஊழலற்ற நேரிய நிர்வாகத் திறனும் நிறைந்த தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு கசப்பான உண்மை!
மேலான சமூக லட்சியங்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு பிறந்த இயக்கங்கள் இன்று செயலற்றுப் போய்விட்டன. கோட்டை நாற்காலிக் கனவுகளுடன் பிறந்த கட்சிகள், கொள்கைகளைக் கைவிட்டுவிட்டன. ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் ஆசைவைப்பது மக்களின் ஏழ்மையை அகற்றுவதற்காக அல்ல. அமெரிக்காவில் இரண்டு கட்சிகள். பிரிட்டனில் மூன்று கட்சிகள். நம் இந்திய மண்ணிலோ ஈராயிரம் கட்சிகள். இங்கே மனிதர்களுக்கு மானம் மறைக்கத் துணி இல்லை. ஆனால், பல்வேறு வண்ணங்களில் கட்சிக் கொடிகள் விண்ணளாவப் பறப்பதில் குறைவே இல்லை.
'கட்சி என்பது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் மூலம் நாட்டு நலனைப் பெருக்குவதற்கு, கூட்டு முயற்சி மேற்கொள்பவர்களின் தொகுப்பு’ என்றார் அறிஞர் எட்மண்ட் பர்க். இந்திய மண்ணில் தேச நலனை நெஞ்சில் நிறுத்தி நடமாடும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நாட்டு நலனைவிட, ஒரு கட்சியின் நலனும், கட்சியின் நலனைவிட, ஒரு தலைவரின் குடும்ப நலனும் போற்றப்படுவதுதான் நம் ஜனநாயக அமைப்பில் நேர்ந்துவிட்ட மிகப் பெரிய வீழ்ச்சி.
ஜனநாயகத் தேவதையின் மூச்சுக் காற்றுதான் தேர்தல். முறைகேடுகள் முற்றுகையிடாத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை நசிந்துவிட்டது. பண பலம், அடியாள் பலம், அதிகார பலம் ஆகிய மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித் தரும் என்றால், உண்மையான ஜனநாயகம் எப்படி உயிர் வாழும்? 'திருமங்கலம் பாணி’ இனி எல்லா இடங்களிலும் பின்பற்றப்படும் எனில், நேர்மையும், உண்மையும், சமூகப் பொறுப்பு உணர்வும்கொண்ட நியாயமான மனிதர்கள் தேர்தலில் எப்படி நிற்க முடியும்?
'திருமங்கலம் பாணி’ 1957-லேயே அரங்கேறி இருந்தால், அண்ணாவும் கலைஞரும், திராவிட இயக்கத் தளபதிகளும் சட்டப் பேரவை வாயிலுக்குள் எப்படி நுழைந்திருக்க முடியும்?
'ஜனநாயகம், பிரபுக்கள் ஆட்சியைவிட இழிவானது. ஜனநாயக அமைப்பில் எண்ணிக்கையின் முன் திறமை பலியிடப்படுகிறது. தந்திரங்களால்தான் எண்ணிக்கை உருவாக்கப்படுகிறது. பாமர மக்கள் மிக எளிதில் திசை திரும்பக்கூடியவர்கள்; கருத்தளவில் திடசித்தம் இல்லாதவர்கள்’ என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ சொன்னதை இன்று நாம் நியாயப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இலவசங்களுக்காக ஏங்கும் மனோபாவம் வளர்ந்து இருப்பது எவ்வளவு கொடுமையானது!
இலவசங்கள் மூலம் ஏழ்மையை ஓர் அரசை அகற்ற முயல்வது ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒப்பானது. உழைப்பைத் தராமல் பெறும் பொருள் திருட்டுக்குச் சமமானது என்ற வாழ்வியல் தர்மம் தகர்ந்துபோவது தகாது.
வறுமையோடு நாம் வாழ்வதற்கு ஒரே காரணம், சரியாகத் திட்டமிடத் தெரியாத ஆட்சியாளர்கள்தான். நம் நோய் தீர, திறமையான மருத்துவரையே நாடுவோம். நன்றாகப் பேசத் தெரிந்தவரா, கவர்ச்சியான தோற்றம் உள்ளவரா என்று அப்போது நாம் பார்ப்பது இல்லை. ஆனால், நம் விதி எழுதும் தேர்தல் களத்தில் ஆட்சிக் கலையில் தேர்ந்தவரா என்று ஆராயாமல், 'அடுக்கு மொழியில் பேசத் தெரிந்தவரா? கண்ணுக்கு அழகாகக் காட்சி தருபவரா?’ என்று மயங்கி நிற்கிறோமே, அதுதான் நம்முடைய மாபெரும் பிழை.
காமராஜர் கல்வியைப் பெருக்க, ஏழை மாணவர்களுக்கு மதிய உணவை இலவசமாகத் தந்தார். கல்வியை இலவசமாக்​கினார். அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். வேறு எதையும் வாக்குகளுக்காக இலவசமாக அவர் வழங்கியதே இல்லை. வயிற்றுக்குச் சோறிட்டு, அறிவுக்குக் கல்வி தந்த அந்த மனிதனைத் தோற்கடித்து, காதுக்குச் சுகம் அளிக்கும் பேச்சுக் கச்சேரிக் கலைஞர்களுக்கு நாம் வாக்களித்தோம். அந்தப் பாவத்துக்கான சம்பளம்தான் இன்று 'திருமங்கலம்’ உருவில் திரும்பி இருக்கிறது.
இலவசத் திட்டங்களால் நம் ஏழ்மை அகலாது என்பதற்கு நம் முதல்வர் வழங்கிய வாக்குமூலமே சரியான சான்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு 3 கோடி மக்களுக்கு இலவச வேட்டி, புடவை வழங்கப்படுவதாகவும், மாற்று ஆடைகூட இல்லாத இவர்கள் விழாக் காலத்திலாவது புத்தாடை உடுத்தட்டும் என்றுதான் அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் முதல்வர் அறிவித்தார். கலைஞர் ஐந்து முறை ஆட்சி நடத்திய பின்பும், தமிழகத்தில் மூன்று கோடி மக்கள் மாற்று ஆடைகூட இல்லாமல் ஏழ்மையில் உழல்கின்றனர்என்றால், இந்த இலவசத் திட்டங்களால் யாருக்கு என்ன நன்மை?
வண்ணத் தொலைக்காட்சியை இலவசமாக வழங்க வேண்டும் என்று எந்த வாக்காளர், கோபாலபுரம் வாசலில் நின்று வேண்டுகோள் விடுத்தார்? ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுங்கள் என்று கலைஞரிடம் மன்றாடியது யார்? செம்மொழி மாநாடு நடத்திக் காசைக் கரியாக்குங்கள் என்று எந்தத் தமிழறிஞர் முதல்வரிடம் பரிந்துரை செய்தார்? இலவசத் தொலைக்காட்சிக்கு 4,000 கோடி போய்; உணவு மானியம் 4,000 கோடி ரூபாய். சட்டமன்றக் கட்டடம் புதிதாய்ப் பளபளக்க 1,000 கோடி ரூபாய். செம்மொழி மாநாட்டு ஆடம்பரத்துக்கு 500 கோடி ரூபாய். இவற்றுக்காக மட்டும் மக்கள் வரிப் பணத்தில் 9,500 கோடி ரூபாய் கொட்டப்பட்டது. சென்றது இனி மீளாது. இப்படித்தான் இலவசங்களின் பட்டியல் நீண்டு, கிரைண்டரில் இருந்து ஆடு, மாடு வரை தொடர்கிறது. பாமர மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, வாக்குகளைப் பறிக்கும் வஞ்சகத்தின் வெளிப்பாடுதானே இந்த இலவச அறிவிப்புகள்?
நண்பர்களே... எப்படியாவது அதிகார நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்ள ஓர் அணியும், இழந்த நாற்காலியை மீண்டும் அடைவதற்கு மற்றோர் அணியும் உங்களுக்கு ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளிவிடும். மதுப் புட்டிகள் உங்கள் மடியில் தாமாக வந்து விழும். பிரியாணிப் பொட்டலங்கள் வீடு தேடி வரும். 1,000 போய் நோட்டுகள் தேர்தல் கமிஷனையும் தாண்டி உங்கள் கதவிடுக்குகளில் கண் சிமிட்டும். நம்முடைய வாக்குகள் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை என்பதை இந்த மலினமான நாற்காலி மனிதர்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் உணர்த்த முற்படுவோம்.
அரசியல்வாதிகளுக்குக் குறைந்தபட்ச அச்சம் வாக்காளர்​களிடம் எழுவதற்காகவாவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும். அப்போதுதான் மூச்சைத் திணறச் செய்யும் ஊழல் நாற்றம் ஓரளவாவது குறையும். மக்களை இலவசங்களால் எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்பதை அவர்கள் உணரும் வாய்ப்பு உருவாகும். குஜராத்தில் மீண்டும் மோடி, ஆட்சி நாற்காலியில் அமர்ந்தது இலவச அறிவிப்புகளால் அன்று. பீகாரில் நிதிஷ்குமார் இரண்டாவது முறை அதிகாரத்தைக் கைப்பற்றியது கிரைண்டர், மிக்ஸி தயவில் இல்லை.
மக்கள் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்ப்பது பசுமைப் புரட்சி, தொழில் வளர்ச்சி, உயர் கல்விப் பெருக்கம், சுகாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு!
நாம் யாரிடத்தும், எதற்காகவும் கையேந்தி யாசகம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இலவசங்களை அறிவிப்பவர்​கள் அவர்களுடைய சொந்த சொத்துகளை விற்று நமக்கு எதையும் வழங்குவது இல்லை. அரசுப் பணம் நம் பணம். விரயமாகும் பணம் நம் பணம். வீணடிக்கும் பணம் நம் பணம். நாம்தான் அவர்களுக்கு வாக்குப் பிச்சை அளிக்கிறோம்.
நாம் பிச்சை இடுபவர்களே தவிர, பிச்சைக்காரர்கள் இல்லை என்ற பெருமிதத்துடன் வாக்குச் சாவடிக்குச் செல்வோம். ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கப் புறப்படுவோம். வெயில் அடித்தால், வியர்வை வழியும். மழை பொழிந்தால், மேனி நனையும் என்று தயங்கி, வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் நாம் தொலைந்து​போனால், நட்டம் நமக்கே.
சின்னஞ்சிறு நெருப்புத் துண்டு அடர்ந்துகிடக்கும் இருங்காட்டை அழிக்கும் பெரு நெருப்பாய்ப் பெருக வேண்டும் எனில், காற்று அதிகமாக வீச வேண்டும். நம் சமூகத்தைச் சகல தளங்களிலும் பாழ்படுத்திடும் ஊழல், அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் எனில், முதலில் சமூகப் பொறுப்பு மிக்கவர்கள் சிறு நெருப்பாய் புறப்பட வேண்டும். மக்கள் ஆதரவுக் காற்று வலிமையாக வீசத் தொடங்கி, இந்த சிறு நெருப்பு கால நடையில் பெரு நெருப்பாய் கனன்று ஊழல் குப்பைகளை ஒட்டுமொத்தமாக சுட்டுப் பொசுக்கிவிடும்.
இன்று காந்தீயத் தொண்டர் அன்னா ஹசாரே தன்னுடைய 72 வயதில் மூட்டிய சிறு நெருப்பு, நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவில் ஊழித் தீயாய் வளரத் தொடங்கிவிட்டது. இருண்டுகிடக்கும் அரசியல் வானத்தில் நம்பிக்கை வெளிச்சம் இருள் கிழிக்கும் வைர ஊசிகளாய் கண் சிமிட்டும் இந்த நேரத்தில் வாக்காளர்களாகிய நாம் மலிவு விலையில் நம் வாக்குகளை விற்றுவிடலாகாது.
இப்படிக்கு,
எவரிடத்தும், எதற்கும், எந்த நிலையிலும் விலைபோக விரும்பாத வாக்காளன்
- தமிழருவி மணியன்

Source - Vikatan Magazine

தமிழகச் சட்டசபைத் தேர்தல் ரிசல்ட்

ன்பார்ந்த வாசகப் பெருமக்களே...
தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில், 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார் என்றும் தோல்வியைத் தழுவத் தயாராக இருப்பவர் யார் என்ற நிலவரங்களைக் காட்டும்  மெகா ரிசல்ட் ஸ்பெஷல் உங்கள் கைகளில் தவழ்கிறது!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையின் 30 தொகுதிகளில் வெற்றி பெறப்​போகும் வெற்றி வேட்பாளரை அறிய, ஜூ.வி-யின் பிரமாண்டமான நிருபர் குழு, தேர்தல் களத்தின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டது.
மூன்று முக்கியமான நெருக்கடிகளை நமது குழு எதிர்கொண்டது!
அதில் முதலாவது... இதுவரை இருந்த 234 தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பிறகு பல விதங்களில் மாறி உள்ளது. 234 என்ற எண்ணிக்கை மாறவில்லையே தவிர... நகரங்களும் கிராமங்களும் வெவ்வேறு தொகுதிகளாக மாறி உள்ளன. எனவே கடந்த கால வெற்றி, தோல்விகளை மையமாக வைத்து... எந்த முடிவுக்கும் வர முடியாது!
அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ... எதிர்க் கட்சிக்கான ஆதரவோ... தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை... இது இரண்டாவது!
வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணம் மிக மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் ஜெயிக்கலாம் என்று பெரும்பாலான வேட்பாளர்கள் நினைப்பதும், பணம் கொடுத்தால் கொடுத்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று பெரும்பாலான வாக்காளர்கள் நினைப்பதுமான மனோபாவம் அனைத்துத் தொகுதியிலும் வெளிப்படையான விஷயமாக இருக்கிறது. மக்கள் மனசை பணம் படைத்தவர் மாற்றலாம் என்ற விதி... மூன்றாவது சிக்கல்!
கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (ஏப்ரல் 6, 7) இந்தத் தேர்தல் நிலவரங்களை அறிய நமது நிருபர் படை முயன்றது. மகுடம் யாருக்கு என்பது மே 13-ம் தேதிதான் தெளிவாகத் தெரியும். ஆனாலும் மகுடத்தை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் யார் முன்னே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஜூ.வி-யின் இந்தத் தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல் உங்களுக்கு கலங்கரை விளக்கமாகக் காட்டும்.
நமக்குக் கிடைத்துள்ள எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சியை அமைக்கத் தேவையான மந்திர எண் 118 கிடைக்காது என்பதே இன்றைய நிலவரம். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க. வரும் என்றே தெரிகிறது. அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைப்​பதற்கான சூழ்​நிலையே உருவாகும்​போல!
தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்கள் இருக்கும் சூழலில் 3 காரணங்கள் நாம் இதுவரை எடுத்த முன்னணி நிலவரத்தில், மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை!
தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, (அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கம் தளர்த்திக்கொண்டால்!) நினைத்த தொகுதி​களில் எண்ணிவைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ...
'மன சாட்சிப்படி வாக்களியுங்கள்’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி ம.தி.மு.க-வுக்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது. இந்தக் கட்சியினருக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய்தான். ஆனால், சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மன வேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ....
கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்​போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ...
இந்த முன்னணி நிலவரத்தில்  மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்​கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...
இது நமக்கான தேர்தல். யாரோ 234 பேரை எம்.எல்.ஏ.க்களாக ஆக்க... எந்தக் கட்சியையோ ஆட்சியில் அமர்த்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா அல்ல இது.
இதில் நாம் பார்வையாளர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பாளர். நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம். படைப்புக் கடவுளுக்கு இருக்கும் வலிமை நமக்கும் உண்டு. அதை நிரூபிக்கும் நாள் ஏப்ரல் 13...
வாக்களிக்க மறவாதீர்கள்!
- ஆசிரியர்
இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?
1. 2ஜி ஊழல் விவகாரம் மற்றவர்களைவிட இளைஞர்களிடமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், தி.மு.க. ஊழல் மலிந்த கட்சி என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. அதனால், இளம்  வாக்காளர்கள் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
2. தே.மு.தி.க. மீது இளம் வாக்காளர்களுக்கு இருந்த ஈர்ப்பு கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. இந்த முறை சிறு சலசலப்பு இருந்தாலும், இன்னமும் விஜயகாந்த் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். 
3. வைகோ தேர்தலைப் புறக்கணித்து இருப்பது, இளைஞர்களிடம் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், அவர்களது வாக்கு அ.தி.மு.க. அணிக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் மாறலாம்.
4. திரைப்படத் துறையில் கருணாநிதியின் குடும்ப ஆளுமையால் விஜய் பட்ட துயரமும், அஜீத் மிரட்டப்பட்ட விவகாரமும் அவர்களின் ரசிகர்களையும் பாதித்து இருப்பது தி.மு.க-வுக்குப் பாதகம்.
5. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
6. பெரும்பாலான இளைஞர்களுக்கு 'ஜெயலலிதாவின் பழைய ஆட்சியைப்பற்றித் தெரியவில்லை!
7. கருணாநிதிக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள்!
8. படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை.
9. 'ஒரு சர்வாதிகாரி வரணும்... அவர் நல்லவரா இருக்கணும்’ என்று புதுத் தத்துவம் சொல்கிறார்கள்.
10. 'நிச்சயம் வாக்களிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்கிறார்கள்!

Source - Vikatan Magazine

ஹசாரே போராட்டத்துக்கு பணிந்தது மத்திய அரசு

ஊழல்வாதிகளை விசாரிக்க வருகிறது மக்கள் கோர்ட்: ஹசாரே போராட்டத்துக்கு பணிந்தது மத்திய அரசு
 
 
புதுடில்லி: ஒரே நாளில் மூன்று முறை ஹசாரே தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும், "எந்த கோரிக்கையையும் விட்டுக் கொடுக்க முடியாது' என்று ஹசாரே உறுதியுடன் இருந்ததால், இறுதியாக அனைத்து கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்றது. இதையடுத்து, தன் 97 மணி நேர உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக் கொண்டார். இது, மக்களுக்கு கிடைத்த வெற்றி. "வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் லோக்பால் (மக்கள் கோர்ட்) மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், தேசியக் கொடியை தோளில் சுமந்து பார்லிமென்டிற்குள் நுழையும் போராட்டம் நடத்துவேன்' என்று அன்னா ஹசாரே உறுதியாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு, சர்வ அதிகாரமும் படைத்த லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும், இதற்கான சட்ட வரைவு மசோதாவை வலுவுள்ளதாக தயாரிக்க வலியுறுத்தியும், காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே, டில்லியில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். ஹசாரே தரப்புடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. ஹசாரே தரப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ், கிரண் பேடி உள்ளிட்டோருடன் அமைச்சர் கபில் சிபல் நேற்று முன்தினம் மட்டும் மூன்று முறை பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சின் முடிவில், ஹசாரே தரப்பின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக அரசாங்கம் அறிவித்தது. இந்த தகவல் வந்து சேர்ந்ததும், ஹசாரேவுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் அளித்திருந்த கடிதத்தை மேடையிலேய ஹசாரே வாசித்து காட்டினார். இருப்பினும், இவை அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், காலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த உறுதிமொழியின்படி, கெஜட் அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்று காலையில் 10.45 மணியளவில் அன்னா ஹசாரே தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். பழச்சாறு கூட அருந்தாமல், வெறும் தண்ணீரை மட்டும் கண்ணாடி டம்ளரில் சிறுமி ஒருவர் தர, அதை வாங்கிக் குடித்தார். பிறகு அந்த சிறுமியிடம் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டறிந்து, தலையை தடவிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை ஹசாரே வெளிப்படுத்தினார். இதையடுத்து, ஹசாரேயுடன் சேர்ந்து நான்கு நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த சில பெண்கள் உட்பட 300க்கும் அதிகமானோரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இதில், பலரும் ஹசாரே தரும் தண்ணீரை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள விரும்பினர். இதன் காரணமாக சிலருக்கு தண்ணீரைத் தந்து பருகச் செய்தார் ஹசாரே. உண்ணாவிரதத்திற்கு வந்திருந்த பலரும் ஹசாரேயின் அருகில் சென்று அவரது பாதத்தை தொட்டு வணங்கினர்.
இதன் பின், அங்கு கூடியிருந்தவர்களிடையே ஹசாரே பேசியதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. இது, வெறும் ஆரம்பம் மட்டுமே. இனிமேல் தான் நிஜமான சண்டை உள்ளது. அளித்த வாக்குறுதியின்படி, லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தவறினால், மீண்டும் எனது போராட்டம் தொடரும். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தான் இறுதி கெடு; அதற்குள் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், நானே தேசியக்கொடி ஏந்தி போராட்டத்தில் குதிப்பேன். பார்லிமென்டிலும், அமைச்சரவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், நிறைய தடங்கல் வரத்தான் போகிறது. ஆயினும் அத்தனையையும் முறியடிக்க மக்கள் ஒற்றுமை காட்ட வேண்டும். இப்போதைய வெற்றி, வருங்கால இந்தியாவின் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி.ஊடகங்கள் மிகப்பெரிய சேவையை ஆற்றியுள்ளன. இந்த போராட்டத்தை நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று தெரிவித்த அவர்களின் சேவை அளப்பரியது. இது முதற்கட்ட போராட்டம் மட்டுமே. வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், டில்லி செங்கோட்டையில் மக்களைத் திரட்டி, தேசியக் கொடியை ஏற்றி, இரண்டாம் சுதந்திரப் போரை பிரகடனப்படுத்துவோம். ஆகஸ்ட் 15க்குள் மசோதா நிறைவேற்றப்பட்டால், மகிழ்ச்சியுடன் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம். இம்மசோதா நிறைவேறும் வரை அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பார்லிமென்டில் இம்மசோதா நிறைவேறுவதில் தடங்கல் ஏற்பட்டால், தேசியக் கொடியை எனது தோளில் சுமந்துபடி நானே லோக்சபாவுக்குள் நுழையும் போராட்டம் நடத்துவேன். இவ்வாறு ஹசாரே பேசினார்.
வரலாற்று சிறப்புமிக்க மசோதா: மன்மோகன்: லோக்பால் மசோதா தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: லோக்பால் மசோதா, மிக முக்கியமான ஒன்று. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை, வரும் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. பொதுமக்கள் தரப்பும், அரசு தரப்பும் லோக்பால் மூலம் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு நலம் தரக்கூடிய விஷயம். அதைவிட, ஊழலுக்கு எதிராக இரு தரப்புமே ஒற்றுமை காட்டுவது மிகவும் முக்கியமான அம்சம். அரசு தரப்பில், இடைவிடாமல் எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக, அன்னா ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source - (Dinamalar)