Saturday, April 9, 2011

ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் ஓர் ஆண்டு சிறை

சென்னை, ஏப்.8, 2011
சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "ஓட்டுப் போடுவதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம்.

இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்காக பணம் கொடுத்த 7 பேரும், பணம் வாங்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுப்பவர்களை மட்டுமல்லாமல், பணம் வாங்குபவர்களையும் சேர்த்து பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது," என்றார்.

Source - Vikatan Magazine

Friday, April 8, 2011

'ஊழலுக்கு எதிரான இந்தியா!'

'ஊழலுக்கு எதிரான இந்தியா!'

அதில் நீங்களும் ஒருவரா?
'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற


உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணா​விரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே! 
மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்​படுத்தி​யவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!
ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்​வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது  நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!
அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்​​களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்​மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர். அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.
இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?
இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!
முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளு​மன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்​பேன்...'' என்றார்.
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.
அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.
நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!
- பா.பிரவீன்குமார்

Source - Vikatan Magazine

ராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

ராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

வேண்டிய நிறுவனங்களுக்கு ரகசியத் தகவல் தந்தார்கள்!
ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் சம்பந்தப்​பட்ட 'ஏ-ஒன்’ குற்றவாளியான
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையை எதிர்கொள்ளத் தயாராகி, நீதிமன்றத்தில் ஆஜரானார்! 
கிட்டத்தட்ட 60 நாட்கள் சிறை​வாசத்தில் மனிதர் சற்று இளைத்து, முகம் வாடிக் காணப்பட்டார். சரியாக அயர்ன் செய்யப்படாதபேன்ட் சட்டை​யோடு நின்றார். மற்ற குற்றவாளி​களின் உறவினர்கள், நண்பர்கள் எல்​லாம் வந்திருக்க... ஆ.ராசாவின் மனைவி​யோ குழந்தைகளோ , நெருங்கிய உறவினர்​களோகூட நீதிமன்றத்துக்கு வரவில்லை. ''என்னுடைய பாவத்தை நானே சுமக்கிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம்!'' என்று  ஆ.ராசாவே கூறிவிட்டாராம். தி.மு.க-வுக்கு நெருக்கமான டெல்லி மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசத்திடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் ஆ.ராசா.
வெறும் 127 பக்கங்கள்தான் குற்றப்​பத்திரிகை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 125 சாட்சிகளுக்கும் கிட்டத்​தட்ட 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 654 தஸ்தாவேஜுகளும் டிரங்க் பெட்டியில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு வந்து இறங்கிய​போது த்ரில் கூடியது.
சி.பி.ஐ. டி.ஐ.ஜி. எஸ்.கே.பல்சானியா மற்றும் விவேக் பிரியதர்சினி ஆகியோரை சந்தித்துக் கை குலுக்கிய ஆ.ராசா, ''நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது வேறு. ஆனால், உங்களைப் பாராட்டுகிறேன். இவ்வளவு விஷயங்களை, குறுகிய காலத்தில் கொண்டுவந்தது பாராட்டுக்கு உரியது!'' என்றார்.  ஷாகித் பால்வாவும் தன் பங்குக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினார். ''எங்களை மட்டும் கைது செய்து உள்ளே அனுப்பிவிட்டு, மற்ற நிறுவனங்களையும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் கௌர​வமாக நடத்துகிறீர்கள். இது அக்கிரமம்!'' என்றார் பால்வா!
இந்த ஊழலில் விழுங்கப்பட்ட பண விவகாரங்களை சி.பி.ஐ. கண்டுபிடித்ததோ... இல்லையோ, இந்த ஊழலின் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதைக் குற்றப் பத்திரிகையாக நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. இந்த முதல் குற்றப் பத்திரிகையில் ஊழல் பற்றி சி.பி.ஐ. தெரிவித்துள்ளவை கொஞ்சம்தான்.
''மே 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றபோது, தன்னோடு சுற்றுச்சூழல் அமைச்​சகத்தில் பிரைவேட் செக்ரெட்டரியாக இருந்த ஆர்.கே.சந்தோலியா, கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த சித்தார்த்த பெஹுரா இருவரையும் தன் அமைச்சகத்துக்கு அழைத்து வந்து, செயலராக ஆக்கினார். திட்டமிட்டுத் தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து சதித் திட்டம் தீட்டினார்.
அதேபோல, ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், மற்ற குற்றவாளிகளான டிபி ரியாலிட்டி ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் சஞ்சய் சந்திரா எல்லோரும் அவருக்குப் பழக்கமானார்கள். இந்தத் தொழில் அதிபர்களின் பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆ.ராசா அப்போதே அனுமதி வழங்கி உள்ளார். இவர் அமைச்சரானவுடன் முதல் காரியமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், யுனிடெக் நிறுவனத்துக்கும், ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்தைக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்!
ஸ்வான் டெலிகாம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு மனு செய்து இருந்தது. யுனிடெக் நிறுவனம் விதவிதமான பெயர்களில் எட்டு நிறுவனங்களைத் தயாராக வைத்திருந்தது.
1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றின் (என்.டி.பி.99) அடிப்​படையில் டிராய் அடிக்கடி வலியுறுத்திய விஷயம், 'ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்குப் போக, ஸ்பெக்ட்ரம் மீதம் இருந்தால்தான்... புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கவேண்டும்’ என்பது. ஆனால், ஆ.ராசா இந்த ஸ்பெக்ட்ரம் இருப்பை அறிந்துகொள்ளாமலே புதிய உரிமங்களை அளிக்கத் தொடங்கினார்.
புதிய உரிமங்களைப் பெறும் விண்ணப்பங்களை அளிக்கும் தேதியை அக்டோபர் 1 என்று அறிவித்துவிட்டு, பின்னர் 'செப்டம்பர் 24 வரை அளிக்கப்பட்டவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று அறிவித்தார். இந்த மாற்றம் குறித்து சட்ட அமைச்சகத்துக்கு 2007 அக்டோபரில் தகவல் கொடுத்தார். சட்ட அமைச்சகம், 'இது அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியும், அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பாமல், தன் முடிவில் ராசா குறியாக இருந்தார். அதோடு, 'அப்படி அனுப்புவது தேவை இல்லாதது’ என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார்!
02.11.2007-ல், 'ஸ்பெக்ட்ரம் போதுமானதாக இல்லாத நிலையில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இதற்குரிய ஒதுக்கீடுகளை கவனமாகவும் வெளிப்படையாகவும் செய்யவேண்டும்’ என்று பதில் எழுதினார் பிரதமர்.
அந்தக் கடிதத்துக்கு, அன்று இரவே சந்தோலியாவை வைத்துக்கொண்டு பதில் எழுதிய ஆ.ராசா, 'ஒரு சிறு விதிமுறைகூட மீறாமல் தொலைத் தொடர்பு துறை வெளிப்படையாக இந்த உரிமங்களை வழங்குகிறது’ என்று தெரிவித்தார். ஆனால், நடந்தவையோ வேறு!
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை தரும் கொள்கையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. 'முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றியதைத்தான் பின்​தொடர்ந்​தேன்’ என்று கூறினார் ஆ.ராசா. ஆனால், முதலில் விண்ணப்பித்தவர்கள் என்கிற முறையை மாற்றி, 'உரிமக் கட்டணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை’ என்று ஆ.ராசா மாற்றினார். கைப்பற்றப்பட்ட ஃபைல்கள் மூலம் இது தெரிய வருகிறது. இதில்தான் சொலிசிட்டர் ஜெனர​லையும் ஆ.ராசா ஏமாற்றியுள்ளார். இதில் ஆ.ராசாவின் கூட்டாளி அதிகாரிகளான ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெஹுரா ஆகி​யோர் கூட்டுச் சதிகள் புரிந்துள்​ளனர்.
முதலில் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற முறை இருந்​திருந்​தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்​​துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்​பட்டவுடன் ஏழு நாட்​களுக்குள் விண்ணப்பதாரர்கள் தொலைத் தொடர்புத் துறையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் 15 நாட்களில் நுழைவுக் கட்டணத் தொகையை வங்கி கியாரன்ட்டிகள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்டாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொன்றும் படிப்படியாக நடந்தால், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தகுதி இழந்துவிடும் என்பதால், அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர்! 
தங்களுக்கு வேண்டிய இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரகசியத் தகவல்களைக் கொடுத்தனர். அதாவது, 'யார் முதலில் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டுவருகிறார்களோ, அவர்களுக்குத்தான் அனுமதி’ என்கிற தகவல், அறிவிப்பு வருவதற்கு முன்கூட்டியே இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் வங்கி கியாரன்ட்டி, டிமாண்ட் டிராஃப்ட் எல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே எடுத்துத் தயாராக இருந்தனர். இந்த அறிவிப்பு, 2008 ஜனவரி 10-ம் தேதி பிற்பகல் 1.47-க்கு பத்திரிகை செய்தி, வெப்சைட் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் 3.30 மணிக்கு அனுமதிக் கடிதம் விநியோகிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படுகிறது. இதன்படி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அவகாசத்தில் மற்ற கம்பெனிகளை எல்லாம் திணறடித்துவிட... ஸ்வான் மற்றும் யுனிடெக்கின் எட்டு நிறுவனங்கள் இந்த வங்கி கியாரன்ட்டிகளைக் கொடுத்தன. அனுமதிக் கடிதங்களையும் முதலில் பெற்றுச் சென்றனர். இந்த இரு நிறுவனங்கள் உட்பட 120 நிறுவனங்கள் கடிதங்களைப் பெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியே தள்ளப்பட்டன. இதனால், முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை விவகாரத்திலேயே தில்லுமுல்லு நடந்து உள்ளது!'' என்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் குற்றப் பத்திரிகையில்!
இப்படி ஆதாரங்களோடு பல விஷயங்களையும் சொல்லி இருக்கும் சி.பி.ஐ., அடுத்து ஏப்ரல் 25-ல் வைக்கப்போகும் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இன்னும் பல அணுகுண்டுகள் வெடிக்கும்!
- சரோஜ் கண்பத்      


(Source - Vikatan Magazine)

பணநாயகம்!

பணநாயகம்!

ண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தேர்தல் ஆணையம் கண்காணித்து வந்தாலும், அரசியல் கட்சிகள் தங்களின் தில்லுமுல்லு தகிடுதத்தத் தில்லாலங்கடி


வேலைகளை அரங்கேற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக புதுப் புது டெக்னிக்குகள் கையாளப்பட, அதற்கேற்றவாறு, அதிரடிப் பறிமுதல்களும் தொடர்கின்றன! 
கவரில் பெயர்... உள்ளே பணம்!
மதுரை மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக, தி.மு.க-வினர் பக்காவாக 'பிளான்’ வைத்திருந்தனர். ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? அவற்றை சப்ளை செய்ய வேண்டிய நபர் யார்? என்று பட்டியல் தயாரித்து கவர்களில் பணத்தைப் பிரித்துவைத்து இருந்தார்கள். ஒவ்வொரு கவரிலும் அந்த விவரத்தையும் தெள்ளத் தெளிவாக எழுதி இருந்தார்கள்.
கூடல் நகர் பகுதியில் தி.மு.க-வினர் பணப் பட்டுவாடா செய்யத் தொடங்க, தே.மு.தி.க. இளைஞர்கள் கூட்டமாகப் போய், அவர்களை விரட்டியடித்து 19 லட்சத்து 32 ஆயிரத்தைக் கைப்பற்றினார்கள். அந்தப் பணத்தை அப்படியே அள்ளிக்கொண்டு தே.மு.தி.க-வினர் ஓட, தி.மு.க-வினர் விரட்ட, ஒரு வழியாக கலெக்டர் சகாயத்திடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை பிடித்துக் கொடுத்தவர்​களைப் பாதுகாப்போடு அனுப்பிவைத்ததுடன், அவர்களின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டார் எஸ்.பி. ஆஸ்ரா கர்க். பணத்தைப் பிடித்துக் கொடுத்த இளைஞர்களுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்​காக, போலீஸாரே அதனைப் பிடித்தது​போல் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வினர் இரண்டு பேரைக் கைது செய்தார்கள்.
திருமங்கலம் ஆறுமுகம் தெருவில் உள்ள ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில், கவர்களில் பணம் பிரித்துப் போடும் வேலை மும்முரமாக நடப்பதாகத் தகவல் கிடைக்கவே, போலீஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கே, 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 சிக்கியது.
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க-வினர் பலரது வீடுகளிலும் இதே ஸ்டைலில் பணம் பிரிக்கும் வேலை நடந்துகொண்டு இருக்க... அத்தனை பேரையுமே சத்தமில்லாமல் அமுக்கியது போலீஸ்.
ஆம்னி பஸ்ஸில் ஐந்து கோடி..!
திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அலுவலரான ஆர்.டி.ஓ. சங்கீதாவின் செல்போன் கடந்த ஐந்தாம் தேதி அதிகாலை 2 மணிக்கு அலறியது. ''பொன்னகர் பகுதியில் தியேட்டரின் பின்புறம் உள்ள ரோட்டில் ஆம்னி பஸ் ஒன்று நிற்கிறது. அதில் கோடிக்கணக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறது!'' என்று கரகரத்த குரல் ஒன்று தகவல் சொன்னது. உடனே சங்கீதா, உதவிக்கு ஒரு போலீஸ்காரரை மட்டும் அழைத்துக்கொண்டு ஜீப்பில் ஸ்பாட்டுக்கு விரைந்தார். எம்.ஜே.டி. என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஆம்னி பஸ் ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருக்க... மேலே தார்ப் பாய் போட்டு மூடி இருந்தது. வண்டியின் உள்ளே பணம் இல்லை. உடன் வந்த போலீஸ்காரரிடம், மேலே சென்று சோதனையிடுமாறு சொல்லி இருக்கிறார். தார்ப்பாயைப் பிரித்துப் பார்த்தால், ஐந்து டிராவல் பேக்குகள். அதன் உள்ளே கட்டுக்கட்டாகப் பணம்!
உடனடியாக போலீஸ், தேர்தல் கமிஷன் அப்சர்வர்​களுக்குத் தகவல்கள் பறக்க... அனைவரும் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தார்கள். கைப்பற்றப்பட்ட பணம் மொத்தமும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு எண்ணப்பட்டது. மொத்தம் 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
ஆம்னி பஸ் நின்ற இடத்துக்குப் பக்கத்தில்தான் பஸ்ஸின் உரிமையாளர் உதயகுமாரின் வீடு. அந்த வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டாலும், பணம் சிக்கவில்லை. பஸ்ஸில் பணம் எப்படி வந்தது? அது யாருக்குச் சொந்தமானது என்று குடைந்த அதிகாரிகள், அவரை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
உதயகுமார், ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தூரத்து சொந்தம். நேருவின் உறவினர்கள் இதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இதை எல்லாம் வைத்து, ''இந்தப் பணம் நேருவின் சகோதரர்களான ராமஜெயம் மற்றும் ரவி மூலமாக சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. கடைசிக் கட்டத்தில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது!'' என்று திகுதிகு தகவல் நகரமெங்கும் பரவியது.
இந்தச் செய்தி அ.தி.மு.க-வுக்கு ஆதரவான டி.வி. மூலம் சொல்லப்பட, தமிழகமே ஆச்சர்யமாகப் பார்த்தது. உடனே அமைச்சர் நேரு, 'ஒரு தனியார் டி.வி. உள்ளிட்ட சில ஊடகங்களின் செய்திகளில் இன்று அதிகாலை தேர்தல் கமிஷனால் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் என்னுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டது என்று தவறாகத் திட்டமிட்டு செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனது.  கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனது உறவினர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை!’ என்று அறிக்கை வெளியிட்டார்.
இதைத் தூக்கிச் சாப்பிடும்படி நடந்ததுதான் அதிரடி க்ளைமாக்ஸ். வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ''அது முழுக்க முழுக்க என்னுடைய சொந்தப் பணம். ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம். அனைத்துக்கும் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன!'' என்று சொல்லி இருக்கும் உதயகுமார், எந்த வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது, யாரிடம் இருந்து நிலம் வாங்கப் பணம் கொண்டுசெல்லப்பட்டது, நிலம் வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன என்பதை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்து இருக்கிறாராம்.!
கட்டைப் பையில் பணம்..!
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி தலைவர் முருகையன். தி.மு.க-வைச் சேர்ந்த இவரது வீட்டில்தான் கீழ்பெண்ணத்தூர் தொகுதிக்கு சப்ளை செய்யப் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்று பறக்கும் படைக்கு யாரோ தகவல் சொல்லி இருக்கிறார்கள். உடனடியாக முருகையன் வீட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது பறக்கும் படை. அவரது வீட்டில் இருந்த 16 லட்சத்து 64 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணம் பற்றி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வேட்டவலம் பேரூராட்சி தலைவர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பணத்தைத்தான் பறிமுதல் செய்து இருக்கிறோம். பணத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு, அந்த கவருக்குள் எந்த வார்டுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், யாரிடம் கொடுக்க வேண்டும் என்று செல்போன் நம்பர் உட்படத் தெளிவாக எழுதி 14 கட்டைப் பைகளில் அடுக்கிவைத்து இருந்தார். அதனால், அவர் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு பண்ணச் சொல்லிவிட்டேன்!'' என்று சொன்னார்.
இட்லிப் பாத்திரத்தில் பணம்!
''தி.மு.க-காரர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வருவார்கள். அப்படி வருபவர்களை அடித்து விரட்டுங்கள். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை. நான் என் சொத்தை விற்றாவது உங்களை வெளியில் எடுக்கிறேன். பணம் கொடுக்கப் போனால், அ.தி.மு.க-காரன் அடிப்பான் என்ற பயம் தி.மு.க-காரனுக்கு வர வேண்டும். அப்போதுதான் நாம் ஜெயிக்க முடியும்!'' இப்படி பேசியது வேறு யாரும் அல்ல. கடந்த எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திதான். அவரது பேச்சைக் கேட்டு பணம் கொடுக்க வந்த தி.மு.க-வினர் மீது தாக்குதல் நடத்தியதாக சத்தியமூர்த்தியின் சகோதரர் உள்ளிட்டோர் மீது அப்போது புகாரானது. அதே சத்தியமூர்த்தி இப்போது தி.மு.க-வின் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர். அவர் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த தி.மு.க-வினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் காலம் செய்த கோலம்!
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதி பெருநாழி. இங்கு இட்லிக் கடை நடத்தி வருபவர் பாண்டி. இவரது வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.  சோதனையிட்டதில், இட்லிப் பாத்திரத்தில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த 40 லட்சத்தைப் பறிமுதல் செய்தார்கள். இட்லிக் கடைக்காரர் உட்பட தி.மு.க-வைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துக் கைது செய்தது போலீஸ்.
இப்போதே இவ்வளவு என்றால், தேர்தல் நெருக்கத்தில் எவ்வளவு பணம் வெளியே புறப்பட்டு வருமோ என்ற அச்சத்தில் தேர்தல் கமிஷன் திணறிக்கொண்டு இருக்கிறது.
தேர்தல் கமிஷனுக்கு மர்ம டெலிபோன் அழைப்புகள் அதிகமாக வருகின்றன. அந்த இடத்தை நோக்கிப் போவதற்குள், பணம் மறைக்கப்பட்டுவிடுகிறதாம். எனவே, முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அரசு அதிகாரிகளுக்கே இருக்கிறது. ஜன நாயகம் பண நாயகமாக ஆகிவிட்டது என்பதைப் பட்டவர்த்தனமாக உணர்த்துவதாகவே அமைந்து​விட்டது இந்தத் தேர்தல்!
- ஜூ.வி. டீம், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
சொந்தக் கட்சிக்கே சூன்யம்!
தேர்தல் அதிகாரிகள் கத்தை கத்தையாகப் பணத்தை கைப்பற்றத் தொடங்கியுள்ள சூழலில், 'இந்த விவரங்களை கமிஷனின் காதில் போட்டுக் கொடுப்பவர்கள் யார்?’ என முக்கிய கட்சிகள் அனைத்தும் சிண்டைப் பிய்த்துக் கொள்கின்றன. வேறு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் ஸீட் கிடைக்காத அதிருப்தியாளர்களும்தான் சொந்தக் கட்சிக்கு எதிராகவே தயவுதாட்சண்யம் பார்க்காமல் குழி வெட்டுகிறார்கள் என்பது தெரியவர... எல்லா தலைகளும் அதிர்ந்து நிற்கின்றன. திருச்சியில் தனியார் பேருந்தின் பெயரையும், பஸ்சின் மேல் கூரையில் பணம் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தையும் விலாசத்துடன் போட்டுக் கொடுத்தது ஏரியா புள்ளிக்கு எதிர்கோஷ்டிதானாம். உறவினர்கள் என்றாலும் இருவருக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாக மோதல் இருந்த காரணத்தால்தான் மாட்டி விட்டாராம். மதுரையில் அழகிரியின் நட்பு வட்டத்தில் இருக்கும் சில அதிருப்தியாளர்கள்தான், கமுக்கமாக போன் போட்டு, வேட்பாளர்களை மாட்டி விடுகிறார்களாம்.
அ.தி.மு.க. முகாமிலும் இதே கூத்து நடக்கிறது. ஒரு அ.தி.மு.க. பிரமுகர் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்துச் செல்வதாக தகவல் சொல்லியுள்ளார் ஒருவர். இதை நம்பத் தயங்கிய அதிகாரிகள், ''உங்க பேர் என்ன? அட்ரஸ் எது?'' என்று கேட்டு இருக்கிறார்கள். உடனே பயந்துபோன ஆசாமி, ''உண்மையைச் சொல்றேங்க.  நான் பக்கத்து மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர். இவர் தோத்தாத்தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், அதான்...'' என்று உளறிக் கொட்டினாராம்.


Source - Vikatan Magazine

தேவை ஆறு மாத இடைவெளி!

தேவை ஆறு மாத இடைவெளி!


'தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளைப் பதவியில் இருந்து விலக்கிவைத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தித் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று பேரறிஞர் அண்ணா ஒரு காலத்தில் தெரிவித்த கருத்தை, செயல்படுத்தும் தருணம் வந்துவிட்டது.
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரம், அமைச்சர்கள் என்ற தகுதியுடன் தேர்தலை சந்திப்பது, ஒரு பயில்வான் நோஞ்சானுடன் மல்யுத்தம் செய்வதற்கு ஒப்பானதாகும்.  மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது ஆட்சிக் காலங்களில் துறை சார்ந்த நிர்வாகத்துக்கும், கட்சிக்காரர்களுக்கும் இடைவெளி இருந்தது. ஆனால், இப்போது உள்ளாட்சி முதல் செயலகம் வரை, அனைத்துத் துறைகளிலும் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகரித்து உள்ளது.
ஐந்து ஆண்டு காலம் ஆளும் கட்சியினரின் விருப்பத்துக்கேற்பச் செயல்பட்டுக்கொண்டு இருந்த அதிகாரிகளையும், அலுவலர்களையும், காவல் துறையினரையும், திடீரென்று ஒரு நாள், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. நீங்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டீர்கள். பாரபட்சம் இல்லாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. நேற்று வரை ஆளும் கட்சிக்கு நெருக்கமாகச் செயல்பட்டு வந்த அதிகாரிகளின் செயல்பாடு உடனே மாறிவிடுமா என்ன?
எனவேதான், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்,  ஆட்சியில் இருந்து விலக்கிவைத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பின்னர் தேர்தலை நடத்துவதே சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்கும். வரும் காலத்தில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இதனைக் கவனத்தில் கொள்ளுமா?
- கே.வேலுச்சாமி, தாராபுரம்.

(Source - Vikatan Magazine)

அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

மதுரைக்குப் போகாதீங்க!
'ஏப்ரல் 13-ம் தேதி என்ன நடக்குமோ?’ என அச்சத்தில்


இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். காரணம், மாநிலத்தின் பல இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்தான்! 
முதல் சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் நடந்தது. சீலேப்பள்ளி என்ற ஊரில், கோயில் சுவரில் தி.மு.க-வின் தேர்தல் விளம்பரம் வரையப்​பட்டது. குருபரப்பள்ளி வருவாய் ஆய்வாளர் பூவிதன் தலைமையிலான வருவாய்த் துறை ஊழியர்கள் அந்த விளம்பரத்தை அழித்தனர். அதை எதிர்த்த சீலேப்பள்ளி ஊராட்சித் துணைத் தலைவர் சிவக்குமார், சந்தோஷ், ரஜனீஷ், கார்த்திக் ஆகியோர் பூவிதனைத் தாக்கினர். அவருடைய பைக்கையும், செல்போனையும் பறித்துக்கொண்டனர். திடீர் தாக்குதலால் அதிர்ச்சியான ஊழியர்கள், வேறு ஒருவரின் செல்போன் மூலம் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி, அங்கு இருந்து தப்பித்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பூவிதன் சேர்க்கப்பட்டார். தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
தாக்குதலைக் கண்டித்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை ஊழியர்கள் பெருமளவில் ஒன்றுகூடி எதிர்ப்பைக் காட்டினர்.
அடுத்த சம்பவம், மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் சாமி கோயிலில் நடந்தது. அந்தப் பகுதி பிரமுகர்களைக் கூட்டி அழகிரி உள்பட்ட தி.மு.க-வினர் பேசிக்கொண்டு இருந்தனர். 'ஐந்து பேருக்கு மேல் கூடினால், கண்காணிக்க வேண்டும்’ என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தனியார் வீடியோகிராஃபர் கண்ணன் அதைப் படம் பிடித்தார். உடனே அழகிரி, துணை மேயர் மன்னன், மேலூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுபதி, உள்ளூர் தி.மு.க. பிரமுகர் திருஞானம் ஆகியோர் அவரைக் கண்டித்து உள்ளனர். பயந்துபோன கண்ணன், வட்டாட்சியர் காளிமுத்துவிடம் வீடியோ கேமராவை ஒப்படைத்தார். அழகிரி அவரைத் திட்ட, கூட வந்தவர்கள் காளிமுத்துவை அடித்துள்ளனர். பிறகு, காளிமுத்து அளித்த புகாரை வாங்கிக்கொண்டு வழக்கைப் பதிவு செய்தது கீழவளவு போலீஸ். அதில், 'தேர்தல் ஆணையத்தின் வீடியோகிராஃபரைப் படம் எடுக்கவிடாமல் அழகிரி தடுத்ததாகவும், மன்னனும், ரகுபதியும் வட்டாட்சியரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வட்டாட்சியரைத் திருஞானம் தாக்கினார்’ என்றும் சொல்லப்பட்டது. பிறகு, இதே விவகாரத்தில் புகார் கூறிய அதிகாரிகள், முன்பு தாங்கள் சொன்னதையே மாற்றிப் பேசி பல்டி அடித்தனர்.
மூன்றாவது தாக்குதல், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தது. முதல் இரண்டு சம்பவங்களில் குற்றச்சாட்டு தி.மு.க-வினர் மீது வந்தது என்றால், இதில் சம்பந்தப்பட்டது  காங்கிரஸ் கட்சி. பள்ளிப்பட்டுத் தொகுதியில் உள்ள மடவலம் என்ற ஊரில் கடந்த 3-ம் தேதி, காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு அங்கு பிரியாணி வழங்கப்பட்டது. தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை துணை வட்டாட்சியர் அரிபாபு, ஒளிப்பதிவாளருடன் அங்கு விரைந்தார். அவர்கள் பிரியாணி வழங்கியதைப் படம் பிடிக்க, சாப்பிட்டுக்கொண்டு இருந்த கும்பல் அரிபாபுவைக் கடுமையாகத் தாக்கியது. கேமராவையும், அதிகாரிகளின் காரையும் அந்தக் கும்பல் நொறுக்கியது. 'உயிர் பிழைத்தால் போதும்!’ என தப்பித்த அதிகாரிகள் குழு, ஆர்.கே. பேட்டை போலீஸில் புகார் செய்தது.
வாக்குப் பதிவு நாள் நெருங்க நெருங்க, தேர்தல் பணியில் உள்ளவர்களை அரசியல் கட்சியினர்

தொடர்ந்து தாக்குவதால், ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 'இதை இப்படியே விட்டுவிடக் கூடாது’ என போர்க் கொடி தூக்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். 'தாக்குதல்கள் தொடருமானால், ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் வலுவான போராட்டம் நடத்தப்படும்’ என்றும் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசனை சந்தித்தோம். ''இதுபோன்ற தாக்குதல்களால், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தாக்குதல்பற்றி புகார் கொடுத்த அதிகாரியே, பிறகு மாற்றிப் பேசும் அளவுக்கு மிரட்டப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால், இப்படி மாற்றிப் பேசியதில் பின்னணி இருக்கிறது என்பது உறுதி. பல மாவட்டங்களில், 'குறிப்பாக மதுரையில் பெண் ஊழியர்களைத் தேர்தல் பணிக்குப் போக வேண்டாம்’ என அவரவர் குடும்பத்தினர் சொல்லிவிட்டனர். 'அரசின் உத்தரவுப்படி நடப்பதா? வீட்டார் சொல்படி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதா?’ என பெண் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். திருமங்கலம் இடைத்தேர்தலிலும் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஊழியர்களை, நேரடியாகவும் மறைமுகமாகவும் தொந்தரவு செய்தனர். ஊழியர்கள் தாங்களாகவே வெளி மாவட்டத்துக்கு இடமாற்றல் வாங்கிச் செல்லும் அளவுக்கு அவர்களுக்குத் தொல்லைகள் தரப்பட்டன.
பீகார் தேர்தலில் இதுபோல நடந்தபோது, ராணுவம் முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டது. எனவே, தேர்தல் நேர்மையாக நடக்கவும், அரசு ஊழியர்கள் அச்சம் இன்றிப் பணியாற்றவும் பாதுகாப்பு வழங்க வேண்டும்!'' என்றார்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம், ஊழியர் சங்கத்தினர் புகார் அளித் துள்ளனர். 'நேர்மையான ஊழியர்களுக்கு ஆணையம் பாதுகாப்பு வழங்கும்’ என உறுதி சொல்கிறார் பிரவீண்குமார்.
உறுதி கொடுத்ததைக் காப்பாற்றட்டும்!
- இரா.தமிழ்க்கனல்

Source - Vikatan Magazine

''நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?''

''நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?''

அ.மார்க்ஸ்
தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்களிக்க வேண்டிய திசைகள் குறித்துப்


பேசுகிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ். 
''நம்முடைய தேர்தல் முறை விநோதமானது. 32 சதவிகிதம் வாக்கு பெற்ற கட்சி ஆட்சிக்கு வருவதும், 29 சதவீதம் வாக்கு பெற்ற கட்சி நான்கைந்து இடங்களில் மட்டுமே வெல்வதும், இன்றைய தேர்தல் முறையின் நிதர்சனம்.
ஒரு தொகுதியில் வாக்கு வங்கிகளாகக் குவிந்து இருக்க இயலாத மக்கள் பிரிவினர், ஏதேனும் பெரும் கட்சிகளைச் சார்ந்து இராமல் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு இல்லை. இதனால்தான் முஸ்லிம்கள், தலித்துகள், குறிப்பாக அருந்ததியர்கள், பழங்குடியினர் போன்றோர் அவர்களுக்கு உரிய விகிதத்தில் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.
மேலும் நமது தேர்தல் முறையில் பணம் மற்றும் சாதி செல்வாக்கு மூலம் வெற்றி பெறுபவர்கள் ஊழல் புரியும்போதும், தொகுதி மக்களுக்குத் துரோகம் இழைக்கும் போதும், அவர்களைத் திரும்ப அழைக்கிற உரிமையும் இங்கு மக்களுக்குக் கிடையாது. இவற்றால்தான் நான் வாக்கு அளிப்பது இல்லை.
ஆனாலும் வாக்களிப்பதில் உறுதியாக இருப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளைச் சொல்கிறேன்...
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத் துறை பெரிய அளவில் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு திறந்துவிடப்படுகிறது. நீர் மற்றும் கனிம வளம் உள்ள நிலங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கப்படுகின்றன. தங்கள் உரிமைகள் பறிபோவதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்கள் மீது கடும் அடக்குமுறை ஏவப்படுகிறது. இந்தப் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் அதே இடத்தில் மசூதியைக் கட்டித் தருவதாக உறுதி கூறுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.
தலித் கிறிஸ்துவர்கள், அருந்ததியர்கள் ஆகியோருக்கு, தேசிய அளவில் உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறுபவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்துள்ள ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளிப்பவர்களுக்குமே ஆதரவை நல்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. கார்ப்பரேட்டுகள் நேரடியாக நிலம் வாங்குவதுடன், அரசு நிறுவனமான சிப்காட் மூலம் ஏழை எளிய அப்பாவி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. 'சிப்காட் மூலம் நிலம் பறிப்பு செய்வதை நிறுத்துவோம், ஏற்கெனவே பறித்ததைத் திருப்பிக் கொடுப்போம்!’ என்று உறுதி கொடுக்கிற அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.
என்கவுன்ட்டர் கொலைகளை ஊக்குவிக்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகளுக்கு சமீபத்திய ஜப்பான் சம்பவங்களே சான்றுகள். புது அணு உலைகளை உருவாக்குவது இல்லை, நமது அணு ஆற்றல் கொள்கை மறு பரிசீலனை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க வேண்டும்.
வளர்ச்சி மற்றும் சிங்காரச் சென்னை என்ற பெயர்களில் கூவம் மற்றும் அடையாறு பகுதியில் குடியிருந்த சுமார் ஒரு லட்சம் மக்கள், துரைப்பாக்கம் போன்ற வசதிகளற்ற இடங்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களை இடம் பெயர்க்கவில்லை எனவும் ஏற்கெனவே இடம் பெயர்க்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதாரங்கள் அளிக்கப்படும் என்று உறுதி அளிப்போருக்கும் வாக்களிக்க வேண்டும்.
இலவசங்களைப் பெறுவதன் மூலம் ஆட்சியாளர்களின் ஊழலில் மக்களும் பங்குதாரர்களாக மாற்றப்படுகின்றனர். அதற்குப் பதிலாக, அவற்றைத் தாமே பெற வல்லவர்களாக மக்களை மாற்றி அமைக்கும் பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.
ஜனநாயகத்தின் ஆகப் பெரிய களங்கம் வாரிசு அரசியல்தான். வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் தகுதியானவர்கள் முக்கிய நிலைகளுக்கு வருவது தடுக்கப்படுகிறது. வாரிசு அரசியலுக்கு வாய்ப்பு அளிக்காத அரசியல் கட்சிகளுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஈழப் பிரச்னை அவர்களுடைய உணர்வுகளுடன் சம்பந்தப்​​​பட்ட மிகவும் அடிப்​படையான ஒன்று. மிக மோச​மான இனப் படுகொலை அங்கே நிகழ்த்தப்பட்டு, லட்சக்கணக்கான தமிழ் மக்களது அடிப்​படை வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான அரசி​யல் தீர்வு ஒன்றை வழங்குவதற்கு ராஜபக்ஷே அரசுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ள அரசியல் கட்சிகளுக்​கே ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் எந்தக் குறைந்தபட்ச வசதிகளும் இன்றி முகாம்களில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகை, கால் வயிறு நிரம்பக்கூட பயன்படாது. கிட்டத்தட்ட சிறைச்சாலை போல, முகாம்கள் க்யூ பிரிவு போலீஸாரால் கண்காணிக்கப்​படுகின்றன. இந்த நிலை ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழகச் சிறைகளில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆயுள் கைதிகள் சுமார் 2,000 பேர் கடந்த ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும். 14 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள எல்லாக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். போதிய அளவில் முஸ்லிம்கள், தலித்துக்கள், பழங்குடியினர், மீனவர்கள் ஆகியோர் உரிய அளவில் சட்டமன்றத்தில் இடம் பெறத்தக்க அளவில் இவர்களில் தகுதியானவர்களைக் கட்சி வேறுபாடு இன்றி. மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் வெளிநாட்டு மது என்கிற பெயரில் சாராயக் கடைகளைத் திறந்து, கள்ளுக் கடைகளை மூடிவைத்து இருப்பது எந்த வகையிலும் பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய செயல் அல்ல. 'கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்’ என்கிற தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பவருக்கே வாக்களிக்க வேண்டும்.
நான் குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கோரிக்கைகள் எல்லாவற்றையும்கூட அல்ல, பெரும்பாலானவற்றைக்கூட நிறைவேற்றத்தக்க அரசியல் கட்சிகளுக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள்!''
சந்திப்பு: கவின்மலர்

Source - Vikatan Magazine

மதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்!

மதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்!

காயம், கண்ணப்பன், ஆஸ்ரா கர்க்... இந்த மூன்று பேரும்தான்
தமிழகத்தில் இன்றைய சூழலில் யாருக்கும் தலை வணங்காத வணங்காமுடிகள்! 
மதுரையில் அழகிரியைத் தாண்டி எதுவும் நடக்காது என்பது எழுதப்படாத விதி. ஆனால், இந்த மூவரும் அந்த விதியைத் திருத்திப் புதிய தீர்ப்புகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்த வந்த பாதையைப்பற்றி சில நினைவுக் குறிப்புகள்...
சகாயம் (மதுரை மாவட்ட கலெக்டர்): புதுக்​கோட்டை அருகே உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சகாயம். இவரது ஒரே பிரச்னை - நேர்மை!
நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, தனது சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டு, ஒட்டுமொத்த அதிகாரிகளின் கோபத்தை சம்பாதித்தார். காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாக இருந்தபோது, பெப்ஸி பாட்டிலில் குப்பை இருப்பதாக ஒரு பெரியவர் புகார் செய்ய... அந்த கம்பெனிக்கு சீல் வைத்ததும் சகாயம்தான்!
கோவையில் சென்ட்ரல் எக்ஸைஸ் டெபுடி கமிஷனராக இருந்தபோது, அவரது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, மருத்துவமனையில் சேர்த்தார். அவர் கையில் இருந்ததோ 1,000-தான். அந்த சமயத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த 650 பிராந்தி கடைகளின் லைசென்ஸ்களைப் புதுப்பிக்க, 65 லட்சங்களோடு கடைக்காரர்கள் காத்திருந்தார்கள். யாருடைய மனதாக இருந்தாலும், அந்த நேரத்தில் சபலப்படும். ஆனால், சகாயம் அதைப் பொருட்படுத்தாமல், தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி மருத்துவச் செலவை சமாளித்தார்!
''அதிகாரிகள் சில வருடங்கள் நேர்மையாக இருப்​பது பெரிய விஷயம் இல்லை. சர்வீஸில் இருந்து ஓய்வு பெறும் வரைக்கும் அந்த நேர்மையைத் தொடர வேண்டும். அப்போதுதான் நாம் நேர்மையாக இருந்த​தாக அர்த்தம். நான் நேர்மையாகத்தான் இருந்தேன். இனியும் இருப்பேன்!'' நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார் சகாயம்!
கண்ணப்பன் (மதுரை மாநகர போலீஸ் கமிஷனர்):  தமிழில் மட்டும் இல்லை... உலகத்தில் இருக்கும் எந்த மொழியிலும் கண்ணப்பனுக்குப் பிடிக்காத வார்த்தை 'சிபாரிசு!’
நியாயமான விஷயம் என்றால், சாதாரண ஆள் வந்து புகார் கொடுத்தாலும், உடனே காரியத்தை முடித்துக் கொடுப்பார். ஆனால், உண்மைக்குப் புறம்பான விஷயத்துக்கு எங்கு இருந்து பிரஷர் வந்தாலும், 'ஸாரி... என்னால் முடியாது!’ என்று பொளேரெனச் சொல்வார்.
கண்ணப்பன் நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி-யாகப் பணி ஆற்றியபோது அவர் மகன் தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் செல்வார். ஒரு நாள் கண்ணப்பன் வெளியே வந்திருக்கிறார். பையனது சைக்கிள் வாசலிலேயே இருந்தது. போலீஸ் ஜீப்பைக் காணோம். விசாரித்தபோது, மகன் ஜீப்பில் போனது தெரிய வர... உடனே டிரைவரைக் கூப்பிட்டு, 'இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது’ என எச்சரித்தார்.
சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஐ.ஜி-யாக இருந்த​போது​தான், சேலத்தில் நடந்த ஆறு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ§க்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அவரைக் கைது செய்ய உத்தரவு போட்டது இதே கண்ணப்பன்தான்.
''சட்டத்துக்கு முன்னாடி எல்லோரும் ஒண்ணுதானே... அது அமைச்சரா இருந்தா என்னா, ஆண்டியப்பனா இருந்தா என்ன?'' என்று கேட்பாராம் கண்ணப்பன்!
ஆஸ்ரா கர்க் (மதுரை எஸ்.பி.): பஞ்சாப் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆஸ்ரா கர்க், எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானதும் வேலூர் மாவட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால், அவரது அதிரடி நெல்லையில்தான் தொடங்கியது. காரணம், அப்போது டி.ஐ.ஜி-யாக இருந்தவர் கண்ணப்பன்.
அவரிடம் பால பாடம் படித்ததால், நேர்மை, எளிமை, கண்டிப்பு, துணிச்சல் என அத்தனையும் கர்க்கிடம் மிளிரத் துவங்கின. இவரின் பலமே, மக்களோடு நேரடித் தொடர்புதான்.
நெல்லை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றபோது, மாவட்டம் முழுவதும் கந்து வட்டியும், சாதி மோதலும் தலை விரித்து ஆடின. சிலை உடைப்புகள், பழிக்குப் பழி கொலைகள் என சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்தில் கிடந்தது. அதனைச் சரிப்படுத்தினார்.
காற்றாலைத் தொழில் வேகமாகப் பரவி வருவதால், பெரிய நிறுவனங்களுக்காக, அடுத்தவர்களின் சொத்துகளை அபகரிக்கும் வழக்குகள் அதிகம் உண்டு. அவை கோர்ட்டுக்குக்குப் போனால், பல ஆண்டுகள் நடக்கும். ஆனால், ஆஸ்ரா கர்க்கின் கண்டிப்புக்குப் பிறகு அத்தகைய மோசடிகள் முழுமையாக நின்றன!
''மக்களுக்குச் சேவை செய்யவே, இந்த வேலைக்கு வந்திருக்கிறோம். அதை தைரியமாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும். பூச்சாண்டி காட்டுபவர்களுக்குப் பயப்பட்டால், வேலை பார்க்க முடியாது!'' என புன்னகைப்​பார் ஆஸ்ரா கர்க்.
இந்த மூன்று பேர் மீதுதான் வழக்குத் தொடரப்போவதாக சொல்லி இருக்கிறார் அழகிரி.
கலி முத்திடுச்சு!
- கே.ராஜாதிருவேங்கடம், ஆண்டனிராஜ்
படங்கள்: எம்.விஜயகுமார், எல்.ராஜேந்திரன்

(Source from Vikatan Magazine)

தொடரும் மதுரை ஜல்லிக்கட்டு

முட்டல்... மோதல்... மிரட்டல்!
'கொடுத்தே தீருவோம்!’ என்று முறைப்பாக அரசியல் கட்சிகள் காத்திருக்க, 'தடுத்தே தீருவோம்!’ என்று விறைப்பாக நிற்கிறது தேர்தல் கமிஷன்.  மதுரையில் என்னதான் நடக்கிறது?
பந்தாடப்பட்ட அதிகாரிகள்!
'தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும்’ என்று நினைத்தே முதலில் கலெக்டர், எஸ்.பி., கமிஷனர், டி.ஐ.ஜி. ஆகியோரை மாற்றியது தேர்தல் கமிஷன். இப்போதோ, தி.மு.க. ஆதரவு நிலை எடுக்கும் அதிகாரிகள் வரிசை நீள்கிறது. 'அழகிரி மீது வழக்குப் போடச் சொல்லி நிர்பந்திக்கிறார்’ என்று புகார் சொன்ன கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி சுகுமாறன், உடனடியாக கரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்​டார். பின்னணி தெரிய வர... இப்போது அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டது தேர்தல் கமிஷன்.
'மதுரை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் குமாரவேலு, தி.மு.க. பகுதிச் செயலாளர்போல் செயல்படுகிறார். பணப் பட்டுவாடாவுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பது முதல், தேர்தல் அதிகாரிகள் ரெய்டுக்கு போகும் முன்பே, கட்சிக்காரர்களை உஷார்படுத்துகிறார்’ என்று அ.தி.மு.க., சி.பி.எம். வேட்பாளர்கள் புகார் கொடுக்க... குமாரவேலு சென்னைக்கு மாற்றப்பட்டார். மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத்தேர்தல், திருமங்கலம் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என தொ​டர்ந்து சர்ச்சையில் சிக்கி, தேர்தலுக்குப் பிறகு மதுரைக்கே வந்தவர் இவர்.
மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி, கூடல்நகர் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனும் மாற்றப்பட்டு இருக்கிறார்.
அடுத்தது இவர்கள்தான்!
அழகிரி நிகழ்ச்சியை வீடியோ எடுத்த தன்னை தி.மு.க-வினர் தாக்கியதாக மேலூர் தாசில்தார் காளிமுத்து புகார் கொடுக்க... அழகிரி, துணை மேயர் மன்னர், ஒன்றியச் செயலாளர் ரகுபதி உள்ளிட்டவர்கள் முன் ஜாமீன் பெற்றார்கள். இப்போது தாசில்தார் அந்தர் பல்டி அடித்துவிட்டார். 'கோயிலுக்​குள் செருப்போடு சென்ற தங்களை வெளியே போகச் சொன்னார்கள். மற்றபடி யாரும் அடிக்க வரவில்லை. கலெக்டர் சகாயமும் போலீஸாரும் சொல்லித்தான் அப்படி ஒரு புகார் கொடுத்தேன்’ என்று ஆளும் கட்சி சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்தார் காளிமுத்து. இவருக்கும் ஆர்.டி.ஓ-வான சுகுமாறனின் கதி சீக்கிரமே வரலாம்!
போலீஸ் உதவி ஆணையர் ஜெயஸ்ரீயும் பணப் பட்டுவாடாவுக்கு உறுதுணையாக இருப்பதாக சி.பி.எம். வேட்பாளர் புகார் கொடுத்து இருக்கிறார். அநேகமாக அம்மணியும் ஆஃப் செய்யப்படலாம். கணேசபுரம் தி.மு.க. பிரமுகர் சசிகுமார் தேர்தலுக்காக வைத்திருந்த 10,300-ஐ தே.மு.தி.க-வினர் பறித்துச் செல்ல, உடனே அவர்கள் தன் வீட்டில் கொள்ளை அடித்ததாகப் புகார் செய்தார் சசிகுமார். அதை வழக்காகப் பதிவு செய்த போலீஸ் அதிகாரியை, தேர்தல் கமிஷன் விசாரிக்கத் தொடங்கிவிட்டது!
மற்றொரு சர்ச்சை நாயகனான மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா, அழகிரிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு ஆரம்பத்திலேயே பெயர் குறிப்பிட்டுப் புகார் கொடுத்துவிட்டார். இதற்கிடையே, தேர்தல் கமிஷன் வீடியோகிராஃபர்கள் எடுத்த சில முக்கியமான தேர்தல் விதி மீறல் காட்சிகளை, அதிகாரிகளின் பார்வைக்கு வரவிடாமல் செய்துவிட்டதாக வந்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது!
வெடிகுண்டு வீச்சு!
ஜெய்ஹிந்த்புரத்தில் தி.மு.க-வினர் பணம் கொடுக்க முயன்றதைத் தடுத்ததால்... தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையே கடும் மோதல். ஆத்திரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக, தி.மு.க. கவுன்சிலர் கண்ணன் உள்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, வைத்தியநாதபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரனைத் தாக்கியதாக தி.மு.க. வட்டச் செயலாளர் சண்முகம் மீது வழக்குப் பதிவானது.
அலங்காநல்லூரில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தபோது, ஒரு குரூப் அவர் வாகனத்தின் மீது கற்களை வீசியது. இதில், போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவி கைது செய்யப்பட்டார்.
ஓட்டுக்கு வெறும் 200-தானா?
'திருமங்கலம் இடைத் தேர்தலின்போது எங்களால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது திருப்தியாகப் பணி செய்கிறோம். டோல் ஃப்ரீ நம்பரில் வரும் அனைத்துப் புகார்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கிறோம். சரியோ, தவறோ எந்தப் புகாரையும் நிராகரிப்பது இல்லை. இடையிடையே கலெக்டரே, டோல் ஃப்ரீ நம்பருக்கு கால் பண்ணி செக் பண்ணுவதால், ஊழியர்கள் உஷாராக இருக்கிறார்கள். மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் ஐந்து டி.வி-க்கள் மூலம் செய்திகள், பிரசாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்கிறோம். மதுரை தி.மு.க. புள்ளி ஒருவரின் லோக்கல் டி.வி-யில், 'சேனல் எம்பளம்’ இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படுவதாகப் புகார் வந்தது. அதையும் பதிவு செய்து இருக்கிறோம். இது வரையில் 280 வழக்குகள் பதிவு செய்து இருக்கிறோம்!'' என்கிறார்கள் தேர்தல் பணியாளர்கள்!
இவர்கள் பெருமைப்பட்டுக்கொண்டாலும்கூட, மதுரையில் பரவலாகப் பணப் பட்டுவாடா நடந்து​கொண்​டேதான் இருக்கிறது. மதுரையில் இது வரை அனைவருக்குமே வெறும் 200 கொடுத்து இருக்கிறார்களாம்.
ஓட்டுக்கு 200 தானா... என்ன கொடுமை சார்?
- கே.கே.மகேஷ், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

(Source from Vikatan Magazine)

வாக்களிப்பது எப்படி?

வாக்களிப்பது எப்படி?

சமஸ், ந.வினோத்குமார்
ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி...
 முந்திச் செல்லுங்கள்
 
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி. இதனால், கடைசி நேரக் காத்திருப்பையும் தவிர்க்கலாம்.
வரிசைக்கு மரியாதை
வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசை யில் நில்லுங்கள். மாற்றுத்திறனாளி களுக்கும் கைக்குழந்தையைச் சுமந்து இருக்கும் பெண்களுக்கும் வாக்கு அளிப்பதில் முன்னுரிமை அளிப்பார்கள். முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். தேவையற்ற சச்சரவு களைத் தவிர்க்க இது உதவும்.
'நீங்கள் யார்?’ - பதற்றம் இன்றிப் பதில் அளியுங்கள்
ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனு மதிப்பார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த வுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா; அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் சொல்வார். இதன் மூலம், தேர்தல் முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்துகொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.
ஒரு துளி மை - கௌரவச் சின்னம்
நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவல ரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு,  வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.
வாக்களிக்க அனுமதி
நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவல ரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத் தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.
இது வரலாற்றுத் தருணம்
ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். இந்த தேசத்தை வழிநடத்தும் தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கு நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.
யாருக்கு ஓட்டு... சொன்னால் குற்றம்
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக் குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது!
உங்களுக்கு ஓட்டு இருக்கிறதா - எப்படித் தெரியும்?
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கும்கூட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு, தேர்தல்ஆணையம் அடையாள அட்டைகளை அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே அடையாளச் சீட்டுகளை வீடுகள்தோறும் விநியோகிக்கிறது. அடையாளச் சீட்டு உங்களைத் தேடி வந்தால், ஓட்டு இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால், வாக்குச்சாவடிக்குப் போய் உறுதிசெய்துகொள்ளுங்கள்!
'49 ஓ’ போடுவது எப்படி?
நீங்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியைப் பதிவுசெய்யச் சட்டம் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டு அளிக்க விரும்பவில்லை எனில், உடனே அதை வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர் உங்க ளிடம் இருந்து வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொண்டு, 'இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை’ என்று தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் '49 ஓ’ போட்டுவிட்டீர்கள்!
பட்டியலில் பெயர் இருக்கிறது; அடையாள அட்டை இல்லை - என்ன செய்யலாம்?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.
பட்டியலில் பெயர் இருக்கிறது; ஆனால், உங்கள் படம் இல்லை - என்ன செய்யலாம்?
சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் மீது சந்தேகப்பட்டால், என்ன செய்வது?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் நீங்கள் வாக்களிப்பது 'சவாலுக்குரிய ஓட்டு’!
உங்கள் பெயரில் ஏற்கெனவே மற்றொருவர் வாக்களித்து இருந்தால், என்ன செய்வது?
முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!
உங்களுக்கு யாராவது பணம் கொடுக்க முற் பட்டால், மிரட்டி ஓட்டு கேட்டால், வாக்களிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், யாரிடம் முறையிடுவது?
காவல் துறையினரிடம் முறையிடலாம். தலைமைத் தேர்தல் அலுவலர், தொகுதி அளவில், வாக்குப் பதிவு அலுவலர்... வட்ட அளவில், துணைத் தேர்தல் அலுவலர்... தொகுதி அளவில், தேர்தல் அலுவலர்.., மாவட்ட அளவில், மாவட்டத் தேர்தல் அலுவலர்... மாநில அளவில், தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நீங்கள் அணுகலாம்!

''மக்கள் மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும்!''
ந்தத் தேர்தலின் கதாநாயகி 'எது’வாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதாநாயகன்... பிரவீன் குமார்! மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி. ஒரு மாநிலத்தின் முதல்வரே அடுத்தடுத்து அறிக்கை விட்டுத் தாக்கும் அளவுக்குத் தன்னுடைய கறாரான செயல்பாடுகளால் தேர்தல் ஆணையத்தைத் தலைநிமிர வைத்திருப்பவர். வரிசை கட்டி வரும் அலுவலர்களைச் சந்தித்தபடியே எனது கேள்விகளை எதிர்கொண்டார் பிரவீன் குமார்.
''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இவ்வளவு அதிகாரம் அரசு அலுவலர்களிடம் இருக்கிறதா என்று வியப்பு ஏற்படுகிறது. ஆனால், மற்ற சமயங்களில் அரசுஅலுவலர்கள் இப்படிச் செயல்படுவது இல்லையே?''
''செயல்படாமல் இல்லை. மேலே இருப்பவர்கள் எதை எதிர்பார்க்கிறோமோ அதைக் கீழே உள்ள அலுவலர்கள் தருகிறார்கள். இப்போது ஒட்டுமொத்தத் துறைகளின் கவனமும் தேர்தலில் குவிந்திருப்பதால், அப்படி ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. அவ்வளவே!''
''இதுவரை எவ்வளவு புகார்கள் வந்திருக்கின்றன?''
''ஐம்பதாயிரம் புகார்கள் வந்திருக்கின்றன. இருபது கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறோம். அதில், உரிய ஆவணங்கள் அளித்தவர்களின் ஐந்து கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டு இருக்கிறது!''
''இவ்வளவு புகார்கள், முறைகேடுகள்... ஆனால், குற்றம்சாட்டப்படுபவர்கள் மீது பெரிய அளவிலான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுவது இல்லையே?''
''எங்களுடைய வேலை கண்காணிப்பது. அதை நாங்கள் செய்கிறோம். அதற்கு மேல் நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறது.''
''இந்த மாதிரி தேர்தல் சூழலில், ஒரு சாதாரண குடிமகன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது சாத்தியமானதுதானா?''
''இவர் நமக்குத் தேவை என்று மக்கள் நம்பும் சூழல் இருந்தால், சாத்தியம் என்றே நினைக்கிறேன்!''
''ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்லுங்கள்... எல்லா முறைகேடுகளையும் பார்க்கிறீர்கள். ஜனநாயகத்தின் மீதான பணத்தின் தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''மன்னியுங்கள். நீங்கள் ஒரு சாதாரண குடிமகனிடம் பேட்டி எடுக்கவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பேட்டி எடுக்கிறீர்கள். அந்த நிலையில் இருந்து நான் இதற்குப் பதில் அளிக்க விரும்பவில்லை!''
''நேர்மையான தேர்தலுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது, தேர்தல் ஆணையத்துக்கு என்ன அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''
''அரசு ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. தேர்தல் ஆணையத்துக்கும் பெரிய அதிகாரங்கள் எல்லாம் தேவை இல்லை. ஒரேயரு தேவைதான். மக்கள் மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும். நேர்மையான தேர்தலுக்கு அது ஒன்றே போதும்!''

Source - Vikatan Magazine

இந்தியாவுக்கு விசில் போடு!

இந்தியாவுக்கு விசில் போடு!

சார்லஸ், படங்கள் : சு.குமரேசன்
ட்டு வருடங்களுக்கு முன்பு கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்த மஹேந்திர சிங் டோனியின் கையில் இப்போது உலகக் கோப்பை!
 100 கோடிக்கும் மேலான இந்திய கிரிக்கெட் ரசிகர் களின் கனவை நனவாக்கிய தருணத்தில், டோனியின் முகத்தில் அத்தனை தெளிவு, பிரகாசம். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்ன? இதோ ஆறு அசத்தல் காரணங்கள்...
டோனியின் தலைமை!
''டோனி ஒரு அசட்டுத் துணிச்சல்காரர். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் சர்ச்சைக்கு உரிய முடிவுகளை எடுத்துவிட்டு, அதை வெற்றிகரமாக மாற்றக் கடும் முயற்சி எடுப்பவர்''-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் சொன்னது இது. கபில் சொன்ன மாதிரியே இறுதிப் போட்டியில் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தைச் சேர்த்தது, ஃபார்மில் இருக்கும் யுவராஜை முந்திக்கொண்டு களம் இறங்கியது என ஃபைனலிலும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுத்தார். ஆனால், எடுத்த முடிவுகள் தவறாக முடிந்துவிடக் கூடாது என்று அவர் காட்டிய துணிச்சலும் திறமையான ஆட்டமும் டோனி சிறந்த கேப்டன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. வெற்றி பெறப்போகிறோம் என்கிற தருணத்தில்கூட, எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக இருந்தது அவரது பக்குவத்தைக் காட்டியது. வெற்றி பெற்றதும் சச்சினை முன்னால் செல்லவிட்டு, அமைதியாகப் பின்னால் சென்றது அவரது முதிர்ச்சியைக் காட்டியது!
சச்சின் டெண்டுல்கரின் அனுபவம்!
ச்சின் கலந்துகொண்டு விளையாடிய ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி இது. ''100-வது சதம், மூன்றா வது முறையாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு'' என்று பல சாதனைகள் ஒவ்வொரு போட்டியின்போதும் சச்சினைத் துரத்திக்கொண்டு இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், தனக்காக விளையா டாமல் அணிக்காக விளையாடினார் சச்சின். ''தனிப்பட்ட சாதனைகளைவிட, இந்தியா வெற்றிபெறுவதுதான் எனக்குச் சந்தோஷம். வெற்றி அணியில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்'' என்றார் சச்சின். 18 ஆயிரம் ரன்களைத் திரட்டிய ரன் மெஷினுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது உலகக் கோப்பை. அதை சச்சினுக்காகவே விளையாடி வாங்கித் தந்திருக்கிறார்கள் இளம் வீரர்கள்!
டீம் ஸ்பிரிட்!
ந்தியா வெற்றி பெற முக்கியக் காரணம்... டீம் ஸ்பிரிட். முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் எனத் திறமையான வீரர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்தனர். ஆனால், டீம் ஸ்பிரிட் என்பது இவர்களது காலங்களில் எப்படி இருந்தது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிவார்கள். டோனி கேப்டனாகப் பொறுப்பு ஏற்கும்போது, யுவராஜ் சிங் அவருக்கு சீனியர். சச்சின்  அணியில் இருக்கிறார். ஆனால், எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், சீனியர் வீரர் களுக்கு மதிப்பு அளித்து, ஜூனியர் வீரர் களையும் அரவணைத்து, அணிக்குள் ஒற்று மையை வளர்த்தார் டோனி. போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது டீம் டூர் போவது, அவ்வப்போது பார்ட்டி வைப்பது என டீம் மெம்பர்களை ஒருங்கிணைத்தார் டோனி. போட்டியின்போது ஒவ்வொரு பந்துக்கும் முனாஃப் பட்டேலுக்கு ஓடோடி வந்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருந்தார் ஜாகீர்கான். விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டும் என்று களத்தில் நின்றே வழிகாட்டிக்கொண்டே இருந்தார் சச்சின். இந்த டீம் ஸ்பிரிட்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது!
இளம் வீரர்களின் ஆதிக்கம்!
லகக் கோப்பை தொடங்குவதற்குமுன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்குப் பதில் யூசுப் பதானையும், சுரேஷ் ரெய்னாவையும் விளையாடவைக்கலாம் என்பதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பை ஆரம்பித்ததும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. நான்கு அரை சதம், ஒரு சதம், ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டம்தான், இரண்டு கண்டங்களில் இருந்தும் இந்தியா தப்பிக்க உதவியது. தனக்கு விளையாடக் கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். சச்சின், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த வருடத்தில்தான் இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி பிறந்தார். ''21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டைத் தூக்கிச் சுமந்துகொண்டு இருக்கிறார் சச்சின். அவரை நாங்கள் இன்று தூக்கிச் சுமப்பது என்பது பெரிய விஷயமா என்ன?''- உலகக் கோப்பையை வென்றவுடன் யோசிக்காமல் பேசிய விராட் கோலி யின் வார்த்தைகளில் தெரிந்தது அவரது கிரிக்கெட் காதல்!
கடுமையான பயிற்சி!
கேரி கிரிஸ்டனின் பலமே, இந்திய வீரர்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டதுதான். உடல் பயிற்சியைவிட, பேட்டிங் பயிற்சியில்தான் இந்திய வீரர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் கிரிஸ்டன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் பயிற்சியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சேவாக், கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் 'ஃபிட்னெஸ் டிரெயினிங் நேரத்தில் ஒரு பகுதியை நாங்கள் பேட்டிங் பயிற்சிக்குச் செலவிடுகிறோம். அப்போது தான் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்!’ என்று சொன்னதை ஏற்றுகொண்டார் கிரிஸ்டன். ஒன்று, இரண்டு ரன்களை ஓடி ஓடி எடுப்பதைவிட 4, 6 அடிப்பது சூப்பர்தானே? அதே சமயம், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கு மத்தியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்குச் சிறப்பான ஃபீல்டிங் பயிற்சி கொடுத்து அவர்களை இன்னும் மெருகேற்றினார் கிரிஸ்டன்!
ஜாகீர் கானின் எழுச்சி!
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கான் தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர்கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர்கான்!
1999 உலகக் கோப்பைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா. இப்போது ஆஸ்திரேலியாவுக்குப் பதில் இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. 'இனி எப்போதுமே இந்தியாதான் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும்!’ என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசை. டோனி தலைமையிலான அசத்தல் அணிக்கு அதைச் சாதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது!

Source - Vikatan Magazine

Thursday, April 7, 2011

மறக்கக் கூடாத பட்டியல் - 3

டந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!

தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.
ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!
ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது. 'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!
மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது. இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!
காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை. நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா? வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.
முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.
விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு. 'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!
விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!
இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?
'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி. வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?

Source - Vikatan Magazine

Tuesday, April 5, 2011

மறக்கக் கூடாத பட்டியல் - 2

திர்க் கட்சிகளோ, ஊடகங்களோ தன் மீது ஒரு சிறு குற்றச்சாட்டை வைத்தாலும்கூட, பாய்ந்தோடி வந்து பதில் தருவதில் முதல்வர் கருணாநிதி காட்டும் வேகமே வேகம்தான்! குற்றச்சாட்டு எழுப்பியவரின் குலம், கோத்திரத்தை எல்லாம் புரட்டிப் போட்டு... சாதி, சரித்திரத்தைக் குத்திக் குதறி... புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிப்பார். எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை, தந்திரத்தோடு எதிர்கொள்வதில் அத்தனை வல்லவர்!

இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியிலோ, பதிலே சொல்ல முடியாமல் அவர் மௌனம் காத்து மழுப்பிய பட்டியல் வெகு நீளம்.
கட்சியின் கௌரவத்துக்குரிய தென்மாவட்டத் தளகர்த்தர்களில் ஒருவரான தா.கிருட்டிணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை, ஆந்திர மாநில நீதிமன்றத்தில் நடந்தது. அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்தக் கொலை வழக்கைப் பதிவுசெய்த அதே காவல் துறைதான், தி.மு.க. ஆட்சியின்போதும் தொடர்ந்து வழக்கை நடத்தியது. ஆனால், வழக்கில் சிக்கிய அனைவருமே பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படியானால், பட்டப்பகலில் தா.கிருட்டிணனை யார்தான் வெட்டிச் சிதைத்தார்கள்? அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? ஆளும் தி.மு.க. அரசு ஏன் அப்பீலுக்குப் போகவில்லை? தா.கி. தன்னைத்தானே வெட்டிக் கொன்றுகொண்டாரா? இதுவரை இதற்கெல்லாம் பதில் இல்லை!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசாங்க மதுக் கடைகளில் 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளுக்கே ஏகபோகக் கொள்முதல் நடப்பதாகவும்... அந்த மது ஆலையின் பின்னே இருப்பது அன்றைய முதல்வரின் தோழி தொடர்பானவர்கள் என்பதால்தான், இந்த அநியாய ஏற்பாடு என்றும் முழங்கினார் கருணாநிதி. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அதே 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளை அரசாங்கம் மானாவாரியாகக் கொள்முதல் செய்தது. 'உள்ளுக்குள் என்ன ரகசிய ஏற்பாடு?' என்று எழுந்தது கேள்வி... வரவில்லையே பதில்!
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரால் 'ஸ்டார் இன்ஷூரன்ஸ்' என்ற நிறுவனத்துடன் தி.மு.க. அரசு போட்ட ஒப்பந்தத்தின் பின்னணி பற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா கடுமையான கேள்விகளை எழுப்பினார். 'ஸ்டார்' அதிபர் சலாவுதீனுக்கும் தி.மு.க. தலைமைக்கும் மர்மத் தொடர்பு என்றும் குற்றம் சாட்டினார். பதில் என்னவோ - பேரமைதி மட்டுமே!
'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டு முறைகேடுகள் பற்றி வெளிநாட்டு ஊடகங்களும்கூட சரமாரியாகக் குற்றம்சாட்டின. 'குற்றமற்றவர் ஆ.ராசா. தலித் என்பதால், காழ்ப்பு உணர்வு' என்றார் முதல்வர் முதலில்! ராசாவுக்காக திஹார் சிறையின் கதவுகள் திறந்துகொண்டபோதோ, 'கைது செய்யப்படுவதாலேயே, ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது’ என்பது கருணாநிதியின் சமாளிப்பு. அதன் பிறகு..? பேச்சு மூச்சே கிடையாது!
அறிவாலயத்தின் கீழ்த் தளத்தில் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சு... மேல் தளத்தில் மனைவியிடமும் மகளிடமும் சி.பி.ஐ. விசாரிப்பு என்ற வரலாறு காணாத விநோத நிலை எழுந்தபோது, 'இது பழிவாங்கல் நடவடிக்கை' என்றோ... 'சட்டத்தின் சம்பிரதாயமான விசாரிப்பு' என்றோகூட விளக்கம் சொல்ல முடியாத விபரீத சிக்கல் அவருக்கு!
ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி ராஜபக்ஷே அரசு நசுக்கிக் குவித்த தொடர் கொடுமைகளின்போது, 'தமிழினத் தலைவராகத் தூக்கி நிறுத்தப்பட்டவரே! தகுமா உங்களின் மௌனம்?' என்று நாள்தோறும் கிளம்பிய ஏராளமான கதறல் கேள்விகள், இந்து மகா சமுத்திரத்தின் இரைச்சலோடு கரைந்ததுதான் மிச்சம்!
இப்படி இன்னும் உண்டு சில பல மர்ம மௌனங்கள். இதற்கெல்லாம் பதில் தரத் 'தெரியாதவர்' அல்ல கருணாநிதி, 'முடியாதவர்' என்பதே உண்மை!
முடியாமல்போனதற்கு என்ன காரணம்? சிந்திப்போம் நாம் தொடர்ந்து!

Source - Vikatan Magazine

மறக்கக் கூடாத பட்டியல் - 1

ட்சியை மாற்றினால், காட்சிகள் மாறும். அந்தக் காட்சிகளை மாற்றுவதா, வேண்டாமா என்று மக்கள் முடிவு எடுப்பதற்கு, நம் ஜனநாயக அமைப்பு அளிக்கும் ஒரே வாய்ப்பு... தேர்தல்!

ஐந்து ஆண்டு காலம் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை, ஆளும் கட்சி எந்த அளவுக்கு நியாயமாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்திக்கொண்டது என்பதை எடை போட்டுப் பார்ப்பதற்கு, வலுவான ஞாபக சக்தி மக்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த நினைவு ஆற்றலின் அடிப்படையில் அவர்கள் வாக்களிக்கிறார்களா? அல்லது, தேர்தல் நெருக்கத்தில் அரங்கேறும் மிகச் சில காட்சிகள் அவர்களைத் திசை திருப்பி விடுகின்றனவா?
2006... கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து, அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளை எல்லாம் மக்கள் முன் பட்டியலிட்டு, 'தவறாமல் நாங்கள் தருவோம் நல்லாட்சி' என்ற வாக்குறுதியோடு அரியணையில் அமர்ந்த தி.மு.க-வின் பரிபாலனம் எப்படி இருந்தது?
2009... லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் சிதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தபோது, முதல்வர் கருணாநிதி காட்டிய அதிகபட்சக் கருணை - டெல்லிக்குக் கடிதம் எழுதியதுதான். அதையும் தாண்டி, அரை நாள்  அதிசய உண்ணாவிரதம் இருந்து அரசியல் உலகத்தைத் 'திகைக்க’வைத்தார்!
அதுவே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், வீட்டு உறுப்பினர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதில் சிக்கல் எழுந்தபோது, குடும்பத்தின் முதல்வராகப் பறந்து போனார் டெல்லிக்கு. கிட்டத்தட்ட ஒரு வார காலத்தை 'உறவுக்குக் குரல் கொடுக்கும்' போராட்டத்துக்கு அர்ப்பணிக்க அவரால் முடிந்தது.
2010... தடம்புரண்ட செல்வாக்கைச் சரிக்கட்டும் தந்திரமாக, தமிழ் செம்மொழி மாநாடு என்று ஆடம்பர, அலங்காரத் தொடர் வண்டி ஓட்டியது தி.மு.க. அரசு. பிரபாகரனின் நலிவுற்ற தாயாரைச் சிகிச்சைக்காகத் தமிழ் மண்ணில் அனுமதித்தால், உலகத் தமிழ் அறிஞர்களின் கவனம் எல்லாம் மீண்டும் இலங்கை சோகத்தின் மீதே மையம்கொள்ளும் என்று அரசியல் ராஜதந்திரிகளுக்கா தெரியாது! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் மண்ணில் கால் பதிக்கக்கூட அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார் அந்த மூதாட்டி!
உப்புப் பெறாத விஷயத்துக்கும்கூட ரோஷம் பொங்க அறிக்கை விட்டு அனல் கக்கும் முதல்வர், தன் குடும்பத்தினர் மீது அடுக்கடுக்காகக் கிளம்பிய கடுமையான பல குற்றச்சாட்டுகளுக்கு, மௌனத்தையே கேடயமாக ஏந்தித் தப்பிய சந்தர்ப்பங்கள் ஒன்றா... இரண்டா?
மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது... சிந்திப்போம் நாம் தொடர்ந்து!



Source - Vikatan Magazine

வாழ்க வளமுடன்! - 1

வாழ்க வளமுடன்! - 1


ந்த உலகின் மிகப் பெரிய அவஸ்தை, காத்திருத்தல்தான்! உலகத்து மனிதர்கள் அனைவருமே எவருக்காகவோ எதற்காகவோ எப்போதும் காத்திருக்கத்தான் செய்கின்றனர். உரிய நபர் வராவிட்டாலோ, அல்லது உரிய செயல், உரிய தருணத்தில் நிகழாமல் தள்ளிப்போனாலோ பேரவஸ்தைக்கு ஆளாகிறோம்; மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறோம்.
காத்திருப்பது கொடுமை; காக்க வைப்பது தர்மசங்கடம். பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவம் வாங்குவதில் துவங்கி, அந்தக் குழந்தை வளர்ந்து மேற்படிப்புக்கோ அல்லது இதுவரையிலான கடன்களை அடைப்பதற்கோ அல்லது வீடு வாங்குவதற்கோ வங்கிக் கடனுக்காக, எவரேனும் ஒருவரைச் சிபாரிசு பிடித்து, அந்த நபருக்காக வங்கியின் வாசலில் கால் கடுக்கக் காத்திருந் தவர்கள் நம்மில் அநேகம் பேர் இருக்கலாம்.

'காலம் தவறாமை’ என்பது மிகமிக முக்கியம். ''பாங்க் வாசல்ல இருக்கிற பெட்டிக் கடைல, நாளைக்குக் காலைல பத்தமணிக்கு  நில்லுங்க, வந்துடறேன். கண்டிப்பா லோன் கிடைச்சிரும்’ என்று சொல்வது, ஒரு வாக்குறுதிதான். ஆனால் பலர், கொடுத்த வாக்குறுதியை மறந்தே விடுகிறார்கள். பத்து மணிக்குத்தான் குளித்துச் சாப்பிட்டு ரெடியாவார்கள்; பத்தே காலுக்கு வீட்டிலிருந்து கிளம்புவார்கள். பத்தரைக்கு நான்கு சிக்னல்களைக் கடந்திருப்பார்கள்; பத்தே முக்காலுக்கு மீதமுள்ள மூன்று சிக்னல் களைக் கடந்து, வழியில் இரண்டு மூன்று நிமிடங்கள் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போக, அதை உதைத்துச் சரிசெய்து... பாங்க் வாசல் பெட்டிக் கடைக்கு வரும்போது மணி 11. அந்த ஒரு மணி நேரம் வெயிலில், புழுதியில், வாகன இரைச்சலில், கால் மாற்றி மாற்றி நின்று தவித்தவர்களின் முகங்களைப் பார்த்திருக்கிறீர் களா? இந்த உலகின் மிஸ்டர் பரிதாபம் அவர்களும், அவர்களின் கால்களும்தான்!  
ஆடுதசை இறுகிக் கொள்ளும்; முழங்கால்கள் கழன்று கொள்ளும்; பாதங்களில் வலு குறைந்து, வலி அதிகரித்திருக்கும்; விரல்களும் நரம்புகளும் துவண்டே போயிருக்கும். ஆக, புத்தி முழுக்க கால்களின் வலியே நிறைந்து இம்சிக்கும். அந்த சிபாரிசு மனிதர், ஒரு மணி நேரம் கழித்தாகிலும் வந்தாரே என்று சந்தோஷம் கொள்ளாமல், அவர் மீது எரிச்சல்பட வைக்கும். 'என்ன பிறவிடா இவன்! என் தலையெழுத்து, இவன் தயவையெல்லாம் எதிர்பார்த்துக் கால் கடுக்க நிக்கவேண்டியிருக்கு!’ என எவருக்கும் தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு, அவருக்குப் பின்னே பூனை போல் பதுங்கிச் செல்வார், மிஸ்டர் பரிதாபம். வேறென்ன செய்வது? அலைக்கழிப்புகளையும் அவமானங்களையும் கடந்து, வலிகளையும் வேதனைகளையும் சகித்துக் கொண்டு, ஏக்கங் களையும் எதிர்பார்ப்புகளையும் சேகரித்தபடி வாழ்வதுதானே வாழ்க்கை?! இந்தச் சோதனை களிலும் சோகங்களிலும், நம்முடன், நமக்குப் பக்கபலமாகத் திகழ்கிற ஒப்பற்ற நண்பன், நம்முடைய கால்கள். ஆனால், நண்பனையும், அவனது பொறுமையையும் உணர்வதே இல்லை; அவனுக்குச் சின்னதாக நன்றியும் சொல்வதில்லை.
ரயில்வே ஸ்டேஷனில் உறவுக்காரரை அழைப் பதற்காக, அந்த நீண்ட நெடிய படிகளில் ஏறி இறங்கி, பிளாட்பார மேடையில் உள்ள இருக்கை களில் சிதறிக் கிடக்கும் வெற்றிலை எச்சில் கறைகளை முறைத்துப் பார்த்துவிட்டு, அங்கும் இங்கும் நடந்தபடி இருக்கும்போதுதான்... 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு...’ என்று ஆரம்பித்து, ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வரும் என்பதை அறிவிப்பார்கள். அந்த ஒருமணி நேரமும், உங்களுக்கு உறுதுணையாக இருப்பவை, கால்கள்தான்!
கைக்குழந்தையுடன் கணவர், அந்த வளா கத்தில் உள்ள செடி- கொடிகளையும், பறந்து கிளையில் வந்து அமர்ந்து விட்டுச் செல்கிற காக்கா- குருவிகளையும், பட்டாம் பூச்சிகளையும் அங்கும் இங்குமாக ஓடி, குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்க, உள்ளே வகுப்பறையில் அவரின் மனைவி, பரீட்சை எழுதிக்கொண்டி ருப்பாள். அது பத்தாம் வகுப்புத் தேர்வாகவும் இருக்கலாம்; ஐ.ஏ.எஸ். தேர்வாகவும் இருக்கலாம். குழந்தையோடு கணவன் கால் கடுக்க வெயிலில் காத்திருக்கும் வேதனையையும், பொருளாதாரச் சிக்கல் தீர்ந்து, குடும்பம் நிமிரவேண்டும் எனும் கனவையும் மனதுள் சுமந்தபடி, புத்தியில் தேக்கி வைத்திருந்த பாடங்களையெல்லாம் எழுத்தில் கொண்டு வரும் வெறியுடன் தேர்வு எழுதுவாள், அவள். மனைவிக்கும், தனது கால்களுக்கும் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம், அந்தக் கணவர். காத்திருத்தல் கொடுமையானது என்பது பொய்த்து, காத்திருப்பதும் காக்க வைப்பதும் சுகம் என்பது நிரூபணமாகும் தருணம் அது.
காலம் பொன் போன்றது என்பது, கால்களுக் கும் பொருந்தும். கால்களை உரிய தருணத்தில் கவனியுங்கள். பாதங்களைப் பராமரிப்பதில்தான் நம் ஒட்டுமொத்த வெற்றியும் ஒளிந்திருக்கிறது!
உலகில் மருத்துவமனைகள் இல்லாத ஊரே இல்லை. நோயாளியாக, அவர்களின் உறவினர் களாக, பார்வையாளர்களாக, மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்வாக... என எவரேனும் எதற்காகவேனும் மருத்துவமனைகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். தாய், தந்தை அல்லது யாரேனும் உறவை மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு, வராந்தாவின் நாற்காலியில் காத்திருப்பார்கள், அவர்களின் உறவினர்கள். மூன்றாவது மாடியில் இருந்து அழைப்பு வர... விறுவிறுவென ஓடி, மருந்துச்சீட்டை எடுத்துக் கொண்டு, தரைத் தளத்துக்கு வந்து, பார்மஸியில் மருந்துகளை வாங்கிக் கொண்டு, மீண்டும் மூன்றாவது மாடிக்கு ஓடி, கொடுத்து விட்டு, வரவேற்பு அறையின் நாற்காலியைப்
பார்த்தால், அங்கே வேறு எவரோ உட்கார்ந் திருப்பார்கள். அயர்ச்சியுடன் மீண்டும் நீள் நடை. அவர்களின் கால்களில் மட்டுமல்ல; முகத்திலும் அந்தச் சோர்வு பிரதிபலிக்கும். கவலையும் பயமும் குடிகொண்டிருக்கும். உள்ளே இடையறாது பிரார்த்தனை ஓடிக்கொண்டிருக்கும். அடுத்து, மருந்துகளை வாங்குவதற்காக அவர்களின் கால்கள் அடுத்த ஓட்டத்துக்குத் தயாராக இருக்கும்.  மருத்துவமனைகளில் லிஃப்ட் வசதி இருக்கும்தான். ஆனால், அதைப் பயன்படுத்த மாட்டார்கள் அவர்கள். பயன்படுத்தத் தோன்றாது. காரணம், லிஃப்ட் எப்போதுமே நிரம்பி வழியும். தவிர, லிஃப்டைவிட கால்களே கைகொடுக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
'பாவம்ப்பா புள்ள... நாலு நாளா ஆஸ்பத் திரியே கதியா, மாடிக்கும் மெடிக்கல் ஷாப்புக்குமா ஓடிக்கிட்டே இருந்துச்சு’ என்பார்கள் உறவுக்காரர்கள். இது  நன்றியின் வெளிப்பாடு. 'அப்பா நல்லாயிட்டாரு! இன்னிக்கி சாயந்திரமே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்’ என்று டாக்டர் சொல்ல, கைகுவிப்போம். இதுவும் நன்றியைச் சொல்வதுதான். ஆனால், மாடிக்கும் தரைத்தளத்துக்குமாகப் பறந்து பறந்து வேலை செய்த நம் கால்களுக்கு நன்றி சொல்லி யிருப்போமா? மாட்டோம்தானே? இனியாவது சொல்லுவோம். 'கால்களே... காலம் உள்ள வரை உங்கள் உதவியை மறக்க மாட்டேன்’ என்று மனதாரச் சொல்லுவோம் நம் நன்றியை!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா



Source - Vikatan Magazine 

நூற்றுக்கு நூறு சச்சின் !

நூற்றுக்கு நூறு சச்சின் !


 கே.கணேசன்
உலகமே ஆர்வத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஓர் ஆசிய நாட்டு அணி இந்தக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்த வரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்ரிக்க அணிக்கு மிகவும் எளிதான இலக்குதான் என்றாலும், அதை எடுக்க விடாமல், தங்களது திறமையான பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கினால் தடுத்து விட்டனர் நியூஸிலாந்து அணியினர். அதே போல, நான்கு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியாவை, இந்தியா தனது  சிறப்பான பேட்டிங் திறமையால் வெற்றி கண்டுள்ளது.


இந்தப் போட்டிகளின் ஆரம்பத்தில் பல்வேறு குழப்பங்களில் இருந்த பாகிஸ்தான் அணி, அதில் இருந்து மீண்டு, அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், சாஹித் அப்ரிடி. இவருக்குத்தான்  இந்தப் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி, சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினப் பெறும் வாய்ப்புள்ளது. நமது  ஜாகீர் கானுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது இந்தப் போட்டியின் சிறப்புகளில் ஒன்று.
இந்த உலகப் கோப்பையில் எந்த அணி வெற்றிபெறும் என்கிற பதைபதைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எல்லோரது கவனமும் குவிந்திருப்பது நமது சச்சின் மீதுதான்!
கிரிக்கெட்டில் அவர் ஒரு சகாப்தம். அதுவும் சாதனைகளின் சகாப்தம் என்றே சொல்லலாம். உலகக் கோப்பைப் போட்டிகள் உட்பட, ஒரு தினப் போட்டிகளில் தனது தனித்த ஆட்டத் திறமையால் சாதனைகளுக்கு மேல் சாதனை புரிந்து வருகிறார் இந்த ஹீரோ. இவரது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டுவிட்டால் செஞ்சுரிகளில் செஞ்சுரி போட்ட சாதனையை அள்ளிக்கொள்வார். எனவே, எல்லோரது கவனமும் அவர் எடுக்கப் போகும் அந்த நூறாவது சதத்தை எதிர்பார்த்தே இருக்கிறது.
நாம் முந்தைய இதழ்களில் எழுதியிருந்தபடி சச்சினின் சாதனைகளை அவரேதான் முறியடிக்க முடியும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது குறிப்பிடத் தகுந்த சாதனையைச் செய்வதே சச்சினின் இயல்பு!
ஒரு தினப் போட்டிகளில் 18,000 ரன்களுக்கு மேல் அடித்தது, நூறாவது சதத்தினை பூர்த்தி செய்ய இருப்பது, 153 அரை சதங்களை அடித்து நொறுக்கியது, 452 ஒரு தினப் போட்டிகளில் ஆடியுள்ளது, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான 200 ரன்களை அடித்து, அவுட் ஆகாமல் இருந்தது...  அதிக உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றது, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தது என சாதனைகளுக்கு மேல் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் சச்சின்.
உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான நபர் நம் யுவராஜ் சிங். சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் அவர், இந்த உலகக் கோப்பையில் முதல் ஏழு ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி, நான்கு முறை ஆட்ட நாயகன் விருதினைப் பெற்று இருக்கிறார்.
ஒரு சதம், நான்கு அரை சதங்கள் என பேட்டிங்கில் கலக்கியதோடு இல்லாமல், 11 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்.
அதுவும் தவிர, இந்த உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, அரை சதமும் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
இந்திய அணி உலகக் கோப்பை கால் இறுதியில் நுழைய பெரிதும் இவரது ஆட்டமே உதவியது. நான்கு முறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியவை வீழ்த்தி, அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு முக்கியக் காரணம், யுவராஜ் சிங்கின் திறமையான ஆட்டம்தான். சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து யுவராஜ் சிறப்பாக ஆடி, 57 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த தொடர் நாயகன் விருதும் இவருக்கே கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பும் வலுப்பெற்று இருக் கிறது.
அட்டை, படங்கள்: சு.குமரேசன்
 Source - Vikatan Magazine