Wednesday, May 11, 2011

3-வது குற்றப் பத்திரிகையில் ஜெகத் கஸ்பர்?

விரிகிறது ஸ்பெக்ட்ரம் வலை
ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கனிமொழியைத் தொடர்ந்து, அவருடைய நண்பர் ஜெகத் கஸ்பரும் அடுத்துத் தாக்கலாக இருக்கும் குற்றப் பத்திரிகையில் சிக்குவார் எனத் தெரிகிறது. அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கிய கஸ்பரின் 'தமிழ் மைய' கணக்குகள் அம்பலத்துக்கு வரத் துவங்கி உள்ளன!
அலைக்கற்றை ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி, ஜெகத் கஸ்பர் நடத்தும் 'தமிழ் மையம்’ அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. மீடியாக்களில் முகம் வந்துவிடுமோ என, ரெய்டுக்குப் பிறகும் இருட்டு அறையிலேயே உட்கார்ந்திருந்த கஸ்பர், நீண்ட நேரத்துக்குப் பின் வெளியே வந்து, பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியாமல் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஓடினார்.
மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்பர், ''அலைக்கற்றை ஊழலில் தமிழ் மையம் மற்றும் என் மீது சந்தேகங்களை எழுப்புவது அபாண்டமானது. அரசியல் ஆளுமைகளோடு இணைந்து செயல்படும் ஒரே காரணத்துக்காக சந்தேகப்படுவது அநீதியானது!'' என்று சீற்றம் காட்டினார். மேலும், ''நிரந்தரக் குழப்பவாதிகளான சோ.ராமசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இருவரும், இந்த சி.பி.ஐ. சோதனையைப் பயன்படுத்தி, தமிழ் மையம் மூலமாக அலைக்கற்றை ஊழல் பணம் விடுதலைப் புலிகளுக்குச் சென்று இருக்கலாம் என்பது போலப் பேசி வருவது விஷமத்தனமானது. அவர்களின் பேச்சு அவதூறு பரப்பும் நோக்கம்கொண்டது. அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்...'' என்று அறிவிக்கவும் செய்தார் ஜெகத் கஸ்பர்.
தமிழ் மையத்துக்கு நிதி அளித்தவர்களின்பட்டியல் குறித்துக் கேட்டபோது, ''கணக்குகள் எல்லாம் முறையானவை. விவரமாகப் பார்க்க வேண்டு​மானால், இன்னொரு நாள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து பார்க்கலாம்...'' எனக் கூறியவர், நன்கொடை கொடுத்தவர்களைப்பற்றி மட்டும் கடைசி வரை வாய் திறக்கவில்லை.
'அவதூறு’களை சட்டப்படி எதிர்கொண்டா​ரோ இல்லையோ... சட்டம் அவரை எதிர்கொள்வதற்கான முகாந்திரங்கள் தெரி​கின்றன. தமிழ் மையத்துக்கு அள்ளிக் கொடுத்த நிறுவனங்களின் விவரம் இப்போது நீதிமன்றப் படியேறி உள்ளது.
'முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தமிழ் மையத்துக்கு நன்கொடை கொடுத்துள்ளன. அதுபற்றி சி.பி.ஐ. விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து உள்ளார். 'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் இன்று சாட்டை சுழற்றுவதற்கு முக்கியக் காரணமான இந்த பிரசாந்த் பூஷண்,
'அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக, கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த நன்கொடை விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அலைக்கற்றை ஊழலுடன் தொடர்பு உடையதாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்’ என்கிறார்.
2007-ம் ஆண்டு முதல், கோடிகளில் செலவிடப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் பெரும்பாலான உதவிகளைச் செய்கிறது. இந்த நிலையில், 2008-ம் ஆண்டு ஜனவரியில்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களும், தமிழக அரசின் ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களும், தமிழ் மையத்துக்கு லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து இருக்கின்றன.
2ஜி ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே ஜனவரி மாதத்தில், 5 மற்றும் 7-ம் தேதிகளில் யுனிடெக் நிறுவனம் 50 லட்சம், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் 25 லட்சம், ஷ்யாம் டெலிகாம் 10 லட்சம், ரிலையன்ஸ் கேபிட்டல் 25 லட்சம் எனத் தமிழ் மையத்துக்கு வாரி வழங்கி உள்ளன.
'அலைக்கற்றை ஊழலில் கூட்டுச் சதியாளராக நிற்கும் கனிமொழி, தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் தவறாகப் பயன்படுத்தி இந்த நன்கொடையைப் பெற்றுள்ளார். ஊழல் பணத்தை நன்கொடையாகப் பெற்ற காரணத்தால், தமிழ் மையமானது 2ஜி வழக்கில் சேர்க்கப்படுவது தவிர்க்க முடியாதது!’ என்கிறார்கள் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள். தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் உட்பட சிலர் மீது, விரைவில் (மூன்றாவது) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்கிறது சி.பி.ஐ. வட்டாரம்!
- தமிழ் சிற்பி
 அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த இந்தியா புல்ஸ் நிறுவனம், 31.7.2007 அன்று தமிழ் மையத்துக்கு 50 லட்சம் பணம் கொடுத்து உள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இது தவிர, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா 2 லட்சம், நல்லி குப்புசாமி 4.94 லட்சம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் 5 லட்சம் (தமிழக அரசின் மது சப்ளையர்ஸ்), சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் லிமிடெட் 5 லட்சம், மெட்ராஸ் சிமென்ட்ஸ் 2.5 லட்சம், ராம்கோ சிமென்ட்ஸ் 7.5 லட்சம் கொடுத்து உள்ளார்கள். இந்த நிறுவனங்களைத் தவிர, தமிழக அரசில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தி வரும் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனம் 7.1.2008 அன்று, தமிழ் மையத்துக்கு 1 கோடி கொடுத்து உள்ளது. ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் 750 கோடியை தமிழக அரசு பிரீமியத் தொகையாக செலுத்துகிறது. இந்த நிலையில்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது என்பதால், இதுவும் ஊழல்தான் என்றும் தனிப் பிரச்னை கிளம்பி இருக்கிறது!


Source - Vikatan Magazine

டெல்லியைக் கலக்கிய கலைஞர் டி.வி. விவகாரம்!

டெல்லியைக் கலக்கிய கலைஞர் டி.வி. விவகாரம்!

''80 சதவிகிதம் பங்கு உள்ள குடும்பத்துக்குத்தான் எல்லாம் தெரியும்!''
கில இந்திய மீடியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த கனிமொழியின் நீதிமன்ற வருகை, கடந்த 6-ம் தேதி டெல்லியில் நடந்தது. கனிமொழிக்கான வக்கீல் சண்முகசுந்தரம்தான் என்றாலும், ஆஜரானவர் ராம் ஜெத்மலானி. அவரது ஸ்டார் வேல்யூவும் சேர்ந்து, மீடியாக்களை பாட்டியாலா நீதிமன்றத்தை நோக்கி மொய்க்கவைத்தது!
 ராம் ஜெத்மலானி பேசப் பேச... அங்கு இருந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அல்ல, கனிமொழி மற்றும் தி.மு.க. பிரமுகர்களுக்கும் வியர்க்க ஆரம்பித்தது.
''கலைஞர் டி.வி-யின் சி.இ.ஓ. சரத்குமார்தான் எல்லா போர்டு மீட்டிங்குகளிலும் கலந்துகொண்டு முடிவு எடுத்து உள்ளார். அவர்தான் சினியுக் நிறுவனம் கடன் வழங்கிய ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டு உள்ளார். கனிமொழி ஒருபோதும் கலைஞர் டி.வி-யின் அன்றாட நடவடிக்​கைகளில் கலந்துகொண்டது இல்லை. கனிமொழி என்ன தவறு செய்தார்? அவருக்கு அந்த டி.வி-யில் பங்கு இருக்கிறது... அதிலும் பெரும்பான்மைப் பங்குகள் இல்லை. அப்படிப்பட்டவரை, கலைஞர் டி.வி-யின் 'ஆக்டிவ் பிரைன்’ என்று குற்றம் சாட்டுகிறீர்கள்! ஆக்டிவ் பிரைன் என்றால் என்ன? என்ன அர்த்தம் என்று சி.பி.ஐ-க்குத் தெரியுமா? கனிமொழியின் துரதிர்ஷ்டம், அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் என்பது மட்டும்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே,  குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். அவருக்கு எதிராக ஒரே ஓர் ஆதாரத்தையாவது காட்டுங்கள். உயிரையும் கௌரவத்தையும் காக்கும் பண்பு உள்ளவர் கனிமொழி. தாயுள்ளம் கொண்டவர். எந்தவிதமான தவறுகளுக்கும் உள்ளாகாமல் தூய்மையாக இருக்கும் ஒரு பெண் என்பதால், ஜாமீனில் வெளிவர அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு. இந்தக் குற்றப் பத்திரிகை ஓர் அநாகரிகமான அறிக்கை. கனிமொழிதான் கலைஞர் டி.வி-யைக்  கட்டுப்படுத்திவைத்து உள்ளார் என்றும், அவர்தான் எல்லா டைரக்ஷனையும் கொடுக்கிறார் என்றும், அவர்தான் நிறுவனத்தின் மூளை என்றும் சி.பி.ஐ. சொல்கிறது. ஆனால், ஏன் நிரூபிக்கவில்லை? சி.பி.ஐ. சொல்வது எல்லாம், 'அவர் ராசாவோடு ரெகுலராகத் தொடர்பில் இருந்தார்’ என்று. ஆமாம், எங்களுக்கு (டி.வி.) மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையில் இருந்து லைசென்ஸ் வேண்டும். அதற்காக, அவரைத் தொடர்புகொண்டோம். அது எப்படித் தவறாகும்?'' - கேட்டு நிறுத்தினார் ஜெத்மலானி!    
கனிமொழி விவகாரத்தில் ராம் ஜெத்மலானியும் சரி, மற்ற குற்றவாளிகளின் வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியாவது பெயிலில் வந்துவிட வேண்டும் என்று கடுமையாக வாதாடினர். ராம் ஜெத்மலானி, குற்றப் பத்திரிகையை முழுமையாகப் படித்துவிட்டு, ஆ.ராசாவைப்பற்றி சி.பி.ஐ. என்னென்ன குற்றங்கள் கூறுகிறதோ அவற்றை, ஒவ்வொன்றாக நீதிபதியிடம் படித்துக் காட்டினார். அதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி-க்கு 200 கோடி டிரான்ஸ்ஃபர் ஆவதற்கு ராசாவே காரணமாக இருப்பதைக் குறிப்பிட்டு, ''இப்படிக் குற்றப் பத்திரிகையில் இருப்பது எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அவர்தான் இதற்குப் பொறுப்பு. இதற்கும் என்னுடைய கட்சிக்காரரான கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை!'' என்று வாதாடினார். அவர்தான் என்று ராம் ஜெத்மலானி சொன்னது, ஆ.ராசாவை. இதை சி.பி.ஐ. தரப்பு கவனமாகக் குறித்துக்கொண்டது.
தன்னுடைய கட்சிக்காரரைக் காப்பாற்ற, அடுத்தவரைக் காவு கொடுப்பது என்பது, எல்லாக் குற்ற வழக்குகளிலும் நடப்பதுதான். அதே தந்திரத்தைதான் இந்த வழக்கிலும் ஜெத்மலானி கையாண்டார். இது முதலில் கனிமொழிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் அமர்ந்தபடி இதைக் கேட்ட ராசா, சலனம் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார்.
விவாதங்கள் முடிந்த பிறகு, ஆறு முறை கனிமொழியும் ஆ.ராசாவும் பேசிக்கொண்டனர். 2ஜி வழக்கின் விசாரணைப் படலம் தொடங்கிய 9-ம் தேதி அன்று, குற்றவாளிகளுக்கு சாட்சியங்கள், வாக்குமூலங்கள் அடங்கிய 8,000 பக்கங்கள்கொண்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. இதைப் பெற்றுக்கொண்ட ஆ.ராசாவும் கனிமொழியும் ஒன்றாகவே ஒரே வரிசையில் உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் பேசினார்கள். எனவே ராம்ஜெத்மலானியின் வாதம், ஏற்கெனவே சொல்லிவைத்துக்கொண்டு சொன்னதாகவே கருதத் தோன்றுகிறது.
அதனால்தான், ஜாக்கிரதையாக ஒரு வரியை ராம் ஜெத்மலானி, நீதிபதி ஒ.பி.சைனியை பார்த்துச் சொன்னார். அதாவது, 'என்னுடைய வாதங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது’ என்று சொன்னது, ஒருவகையில் ராசாவைக் காப்பாற்றத்தான் என்று டெல்லி வக்கீல்கள் நினைக்கிறார்கள்.
கலைஞர் டி.வி-யின் சி.இ.ஓ. சரத்குமாருக்கு ஆஜரானவர் வி.ஜி.பிரகாசம். அவர் சார்பில் பேசியவர் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான அல்டாஃப் அகமது. ''சரத்குமார் ஒரு அப்பாவி. இந்தச் சமயத்தில், அதை நாங்கள் நிரூபிக்க முடியாது. இப்போது அனுப்பப்பட்டு உள்ள சம்மன் மூலம் அவரை சிறைக்கு அனுப்ப முடியாது. கலைஞர் டி.வி-யை வழக்கில் சேர்க்காமல், தனிப்பட்ட சரத்குமார் மீது  குற்றச்சாட்டுகள் வைப்​பதை ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்றார்.
கிட்டதட்ட ஒரு நாள் முழுக்க, கனிமொழி மற்றும் சரத்குமார் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. மறு நாள் 7-ம் தேதிதான் சி.பி.ஐ. வழக்கறிஞர் யு.யு.லலித் பதில் கொடுத்தார்.
ராம் ஜெத்மலானி மாதிரி, லலித் வசனம் பேசவில்லை. நிதானமாகப் பேசினார். ''ஒரு புலனாய்வுத் துறையால் என்ன செய்ய முடியுமோ... அவற்றை எல்லாம் சி.பி.ஐ. இந்த வழக்கில் செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உள்ளது. எந்த வழக்கிலும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யாமல் சம்மன் அனுப்பும்போதுதான், சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின்படி பெயிலுக்கு மனு செய்ய முடியும். ஆனால், இங்கே குற்றச்சாட்டு, பதிவு செய்யப்பட்டு உள்ளது. 'வீட்டில் இருந்து வந்தோம், திரும்பவும் வீட்டுக்கே அனுப்புங்கள்’ என்று குற்றவாளிகள் சொல்ல முடியாது. அவர்களை ஜாமீனில் விடுவது, நீதிமன்றத்தின் பொறுப்பு. ஆனால், ரிமாண்டில் வைத்த பின்னர்தான் ஜாமீனில் விடுவிக்க முடியும். இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான வழியில் தங்கள் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்து உள்ளனர். பாண்ட் பத்திரத்தின்படி, ஜாமீன் பெற முடியாது. அவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால், வேறு வழியில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்!'' என்று சொன்னார். அவரும் கனிமொழி, சரத்குமார் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ''இப்படிப்பட்ட ஒரு சீரியஸான வழக்கில், பெண் என்ற காரணத்தால் மட்டுமே ஜாமீனில் செல்ல முடியாது. இவர்களை நீதிமன்றக் காவலில் (சிறையில்) வைக்கவேண்டும்!'' என்று குறிப்பிட்டார்.
டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து, இரண்டு நிறுவனங்களைத் தாண்டி, கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த தேதிகள், பின்னர் எஃப்.ஐ.ஆர். போட்ட பின்னர் நடந்த திடீர் ஒப்பந்தங்கள், ராசா கைதானவுடன் பணத்தைத் திரும்ப ஒப்படைத்தது, அதே தேதிகளில் இந்தப் பணம் 'ரிவர்ஸாக’ மற்ற கம்பெனிகளுக்குத் திரும்பிச் சென்ற விதங்களை சி.பி.ஐ. வக்கீல் விளக்கினார்.
''இந்த ஊழல் பகிரங்கமாக நடந்து உள்ளது. இவர்கள் ஊழல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பின்னர் ஆவணங்களைத் தயாரித்து உள்ளனர். ஒரு குற்றத்தை மறைப்பதற்காக, இப்படிப்பட்ட போலி ஆவணங்களைத் தயாரிப்பது மற்றொரு குற்றம். இது இந்த வழக்கின் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது!'' என்று, குற்றப் பத்திரிகையில் இருந்து மிக சென்சிட்டிவான விஷயங்களை விளக்கினார்.
''கனிமொழிக்கு 20 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. தயாளு அம்மாளுக்கு 60 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. இப்படி ஒரு குடும்பத்துக்கு 80 சதவிகிதப் பங்குகள் இந்த டி.வி. நிறுவனத்தில் இருக்கிறது என்றால், இவர்களைத் தவிர வேறு யாருக்கு இதில் சம்பந்தம் இருக்க முடியும்? யாரால் இந்த கம்பெனி நடக்கும்? தயாளு அம்மாள் தனக்கு உள்ள பிரச்னைகளை ரிக்கார்டுபூர்வமாக எழுதிக்கொடுத்து ஒதுங்கிவிட்டார். 2007 முதல் நடந்துள்ள சம்பவங்கள், சாட்சியங்கள், ஆதாரங்களைப் பார்க்கும்போது, இந்தப் பெண்ணைத் (கனிமொழி) தவிர, வேறு யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை!'' என்று கடுமையான வாதங்களை வைத்தார் லலித்.
இதே 2ஜி வழக்கில் சில குற்றவாளிகளுக்குக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டு, ஆஜராகும்போது முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடியாக, நீதிமன்றக் காவலில் வைத்து, சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதே மாதிரி, எடுத்த எடுப்பிலேயே கனிமொழி தரப்பில் ஜாமீன்மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த சி.ஆர்.பி.சி. 88-ன்படி சம்மனுக்கு பாண்ட் பெற்றுக்கொண்டு ஜாமீனில் அனுப்புங்கள் என்பதுதான் கனிமொழி தரப்பு வாதம். இதற்குத்தான் வாதங்கள் கடுமையாக நடந்தன.
வருகிற 14-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க இருக்கிறது. ஒருவேளை இந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளாமல், நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, கனிமொழியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டால், அப்போது ஜாமீன்மனு தாக்கல் செய்யலாம் என்று கனிமொழி மற்றும் சரத்குமார் தரப்புகளில் திட்டம் இடப்படுகிறது!
14-ம் தேதி, கனிமொழிக்கு மற்றொரு முறை ஜாமீன் கேட்க வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே!    
- சரோஜ் கண்பத்  
படங்கள்: முகேஷ் அகர்வால்


Source - Vikatan Magazine

Tuesday, May 10, 2011

ரஜினிக்கு என்னாச்சு...?

ரஜினிக்கு என்னாச்சு...?

ஜினி என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்​தாலே அவரது உலக ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அவர்களுக்கு குளூகோஸ், வைட்டமின் மாத்திரை... எல்லாமே மூன்றெழுத்து மந்திரம் - ரஜினி என்ற பெயர்தான். இப்படி ரசிகர்களின் சர்வசக்தியான ரஜினி, 'சக்தி கொடு’ என்று, இன்று உடல் உபாதையால் சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்!
ரஜினி சமீபத்தில் ஆசைப்பட்டு வாங்கிய, 'இன்னோவா சில்வர் டி.என்.ஒ-7- 2010’ கார், அவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையான 3-ம் எண்ணை ஞாபகப்படுத்தியபடி அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் நிற்க...
'ரஜினிக்கு என்ன ஆச்சு?’ என்று சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கியவர்களிடம் கேட்டோம்.
''ரஜினி சார் உலகக் கோப்பை நிகழ்ச்சியைப் பார்க்க மும்பைக்கு போய் வந்ததில் இருந்தே, அவர் சொன்ன பேச்சை உடம்பு கேட்கவில்லை. மும்பை ஹோட்டலில் குடும்பத்தினர் எல்லோரும் சைவ உணவு சாப்பிட்டார்கள். ரஜினி சாப்பிட்ட அசைவ உணவில், ஏதோ கோளாறு. அப்போதே அவருக்கு வயிற்றுப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. 'ராணா’ பூஜையின் முதல் நாள் நெடுநேரம் தூங்காமல் கண்விழித்து, முக்கியமானவர்களுக்கு போன் போட்டு பேசினார். அப்படியே அசதியோடு மறுநாள் பூஜைக்கு வந்தவர் அவரிடம் அந்த வழக்கமான துடிப்பு இல்லை. போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு உடனே காரில் ஏறி போய்விட்டார். வீட்டுக்கு வந்தவுடன் மயக்கம் வர, குடும்ப டாக்டர் ஆலோசனைப்படி இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். மும்பை ஹோட்டல் உணவு பற்றியும் கேட்டறிந்து , ரஜினிக்கு ஃபுட் பாய்ஸன் அதுதான் ப்ராப்ளம் வேறொன்றும் இல்லை என்று டாக்டர்கள் உரைத்தனர். முதல் முறை, கலைஞர் ரஜினியை குசலம் விசாரிக்க வந்தபோது, போட்டோ எடுக்க அரசு சார்பில் பகீரத பிரயத்தனம் நடந்தது. அப்போது முதல்வரிடம், 'அப்பாவோட முகமும், உடம்பும் ரொம்ப டல்லா இருக்கு. அதோட, போட்டோவுக்கு போஸ் கொடுத்தாஃபேன்ஸ் எல்லாம் ஃபீல் பண்ணுவாங்க...'' என்று கலங்கியபடி ஐஸ்வர்யா சொல்ல, போட்டோ திட்டம் கைவிடப்பட்டது. டாக்டர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கச் சொல்லி வற்புறுத்​தினார்கள். பூஜை போட்ட நல்ல நாளில் சென்டிமென்ட்டாக அங்கே தங்கவிரும்பாத ரஜினி, அன்று மாலையே வீட்டுக்கு வந்துவிட்டார். இருந்தும், 'வீட்டுக்குப் போனால் யாரையும் சந்திக்கக் கூடாது. ஓய்வெடுங்கள்’ என்றே மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
மறுநாளே ரஜினிக்குத் தெரிந்த வி.ஐ.பி-க்கள் வீட்டுக்குப் படையெடுத்து மாறி மாறி உடல் நலம் பற்றி கேட்க... அவர்களுக்கு பதில் சொல்லியே ரஜினி மேலும் சோர்ந்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் ராகவேந்திரா மண்டபம் சென்று தனது வேலைகளைச் செய்தார். ரஜினி இயல்பாகவே ஃபாஸ்ட் பார்ட்டி... ஓர் இடத்தில்  உட்காராமல் எங்காவது சுற்றிக்கொண்டே இருந்தார். ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி போனில் பேசினார்.
திடீரென்று, கடந்த 4-ம் தேதி இரவு எட்டு மணிக்கு சாப்பிட... சட்டென்று வாந்தி எடுத்தார். கடுமையான வைரஸ் காய்ச்சலும் தாக்க, மீண்டும் இசபெல்லாவில் அனுமதிக்கப்பட்டார். 'சாதாரண வார்டில் ரஜினி இருந்தால் குசலம் விசாரிப்போர் குவிந்து விடுவார்’ என்று தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றிவிட்டனர். டாக்டர்கள், 'வீட்டுக்கு அனுப்ப மாட்டோம். விசிட்டர் யாரையும் பார்க்கக் கூடாது. போனில் பேசவே கூடாது. இங்கேயே ஓய்வெடுங்கள்’ என்று கடுமையான உத்தரவு போட்டுவிட்டனர். அதனால் முக்கியமானவர்களுக்கு அவரது குடும்பத்தினரே, 'நாங்கள் தப்பாக நினைக்க மாட்டோம்... இப்போதைக்கு பார்க்க வரவேண்டாம்...’ என போன் செய்து நிலைமையை விளக்கி வருகிறார்கள். ஐஸ்வர்யாவும் ரசிகர்களுக்கு ரஜினியின் உடல்நிலை குறித்து அறிக்கைவிட்டு இருக்கிறார்!'' என்றார்கள் வருத்தமான குரலில்!
''ரஜினிக்கு அலோபதி மருந்துன்னாலே அலர்ஜி. அவரது பலத்துக்கு காரணம் யோகா ப்ளஸ் தியானமே. மனுஷனுக்கு தெம்பே உணவுலதான்.. ஆனா, ரஜினி சாப்பாட்டு அளவை ரொம்ப ரொம்ப குறைச்சுட்டார். காலையில ஒரே ஒரு ஆஃப்-பாயில்தான்... அதுபோதுமா?? அப்புறம் எப்படி உடம்புல தெம்பு இருக்கும்? நீர்ச்சத்து ரொம்ப குறைவா இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். 'யானை விழுந்தா எந்திரிக்க லேட்டாகும்... நான், குதிரை... டக்குனு எந்திரிச்சுடுவேன்..!’ என்று 'சந்திரமுகி’ விழாவில் ரஜினி சொன்ன டயலாக்கையே அவருடைய ரசிகர்களுக்கு சொல்றேன்!'' என்று விளக்கினார், வில்லனாக நடித்து வந்த ரஜினியை முதன் முதலாக 'பைரவி’ படம் மூலம் ஹீரோவாக்கிய கலைஞானம்!
- எம்.குணா  
'ராணா’ பட விளம்பரத்தில் சின்ன மகள் சௌந்தர்யா அஸ்வின் பெயர் இடம்பெற்று இருந்தது. 'ஐஸ்வர்யா தனுஷ் பெயர் இடம் பெறாததில் தனுஷ் வருத்தப்பட்டு பூஜைக்குக்கூட வராமல் தவிர்த்தாராம். 'இதனால் ரஜினி ரொம்பவும் அப்செட்டாக இருந்தார்’ என்று இன்னொரு டிராக்கில் எடுத்து விடுகிறார்கள் விவரமானவர்கள்!

Source - Vikatan Magazine 

23 பணப் பெட்டிகள் எங்கெங்கே டெலிவரி?

23 பணப் பெட்டிகள் எங்கெங்கே டெலிவரி?
ரகசிய டிரைவரின் திகில் வாக்குமூலம்
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்கு​மூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது. ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரை மங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்​கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். அதன் அடிப்படியில்தான்,  பண விவகாரம்பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை,  7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின்  குற்றப்பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளதாகத் தெரிகிறது.
''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்​துக்குக் கொண்டுசெல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்கு​மூலங்கள்.
2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டிபி ரியாலிட்டி பல தவணை​களில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டிபி ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
டிபி ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது. 
டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...
''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக்கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன். முதல் டிரிப்பில், ஏழு பெட்டிகள்; இரண்டாவது டிரிப்பில், நான்கு பெட்டிகள்; மூன்றாவது டிரிப்பில் எட்டு பெட்டிகள்; நான்காவது டிரிப்பில், நான்கு பெட்டிகள் கொண்டுசென்றேன். அந்த நான்காவது டிரிப்பில் மூன்று பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டுசென்றேன்.
ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்க​வில்லை. ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டுபோனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள்.  ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது. 
பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல்போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக்கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய் வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.
பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால்,  டிரைவரைப் பிடித்துக்கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில்வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்​கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்​களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்க​வில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள். போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக்கொண்டார்கள். தேர்தல் முடிந்த 2009 மே  13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடுபோனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம். 
அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள். அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள். காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று  அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள். டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.   அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தைவைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று  டிடெக்டிவ் ஏஜென்சி கண்டு​பிடித்தது.
ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது​பற்றியான உருப்படியான தகவல்​கள் இதுவரை கிடைக்க​வில்லை. இதுகுறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்கு​மூலம் வாங்கி இருப்ப​தாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன. இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!
கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.
டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டுவரப்போகிறது!
- சரோஜ் கண்பத்

Source - Vikatan Magazine