Friday, April 8, 2011

வாக்களிப்பது எப்படி?

வாக்களிப்பது எப்படி?

சமஸ், ந.வினோத்குமார்
ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி...
 முந்திச் செல்லுங்கள்
 
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி. இதனால், கடைசி நேரக் காத்திருப்பையும் தவிர்க்கலாம்.
வரிசைக்கு மரியாதை
வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசை யில் நில்லுங்கள். மாற்றுத்திறனாளி களுக்கும் கைக்குழந்தையைச் சுமந்து இருக்கும் பெண்களுக்கும் வாக்கு அளிப்பதில் முன்னுரிமை அளிப்பார்கள். முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். தேவையற்ற சச்சரவு களைத் தவிர்க்க இது உதவும்.
'நீங்கள் யார்?’ - பதற்றம் இன்றிப் பதில் அளியுங்கள்
ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனு மதிப்பார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த வுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா; அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் சொல்வார். இதன் மூலம், தேர்தல் முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்துகொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.
ஒரு துளி மை - கௌரவச் சின்னம்
நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவல ரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு,  வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.
வாக்களிக்க அனுமதி
நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவல ரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத் தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.
இது வரலாற்றுத் தருணம்
ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். இந்த தேசத்தை வழிநடத்தும் தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கு நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.
யாருக்கு ஓட்டு... சொன்னால் குற்றம்
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக் குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது!
உங்களுக்கு ஓட்டு இருக்கிறதா - எப்படித் தெரியும்?
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கும்கூட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு, தேர்தல்ஆணையம் அடையாள அட்டைகளை அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே அடையாளச் சீட்டுகளை வீடுகள்தோறும் விநியோகிக்கிறது. அடையாளச் சீட்டு உங்களைத் தேடி வந்தால், ஓட்டு இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால், வாக்குச்சாவடிக்குப் போய் உறுதிசெய்துகொள்ளுங்கள்!
'49 ஓ’ போடுவது எப்படி?
நீங்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியைப் பதிவுசெய்யச் சட்டம் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டு அளிக்க விரும்பவில்லை எனில், உடனே அதை வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர் உங்க ளிடம் இருந்து வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொண்டு, 'இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை’ என்று தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் '49 ஓ’ போட்டுவிட்டீர்கள்!
பட்டியலில் பெயர் இருக்கிறது; அடையாள அட்டை இல்லை - என்ன செய்யலாம்?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.
பட்டியலில் பெயர் இருக்கிறது; ஆனால், உங்கள் படம் இல்லை - என்ன செய்யலாம்?
சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் மீது சந்தேகப்பட்டால், என்ன செய்வது?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் நீங்கள் வாக்களிப்பது 'சவாலுக்குரிய ஓட்டு’!
உங்கள் பெயரில் ஏற்கெனவே மற்றொருவர் வாக்களித்து இருந்தால், என்ன செய்வது?
முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!
உங்களுக்கு யாராவது பணம் கொடுக்க முற் பட்டால், மிரட்டி ஓட்டு கேட்டால், வாக்களிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், யாரிடம் முறையிடுவது?
காவல் துறையினரிடம் முறையிடலாம். தலைமைத் தேர்தல் அலுவலர், தொகுதி அளவில், வாக்குப் பதிவு அலுவலர்... வட்ட அளவில், துணைத் தேர்தல் அலுவலர்... தொகுதி அளவில், தேர்தல் அலுவலர்.., மாவட்ட அளவில், மாவட்டத் தேர்தல் அலுவலர்... மாநில அளவில், தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நீங்கள் அணுகலாம்!

''மக்கள் மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும்!''
ந்தத் தேர்தலின் கதாநாயகி 'எது’வாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதாநாயகன்... பிரவீன் குமார்! மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி. ஒரு மாநிலத்தின் முதல்வரே அடுத்தடுத்து அறிக்கை விட்டுத் தாக்கும் அளவுக்குத் தன்னுடைய கறாரான செயல்பாடுகளால் தேர்தல் ஆணையத்தைத் தலைநிமிர வைத்திருப்பவர். வரிசை கட்டி வரும் அலுவலர்களைச் சந்தித்தபடியே எனது கேள்விகளை எதிர்கொண்டார் பிரவீன் குமார்.
''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இவ்வளவு அதிகாரம் அரசு அலுவலர்களிடம் இருக்கிறதா என்று வியப்பு ஏற்படுகிறது. ஆனால், மற்ற சமயங்களில் அரசுஅலுவலர்கள் இப்படிச் செயல்படுவது இல்லையே?''
''செயல்படாமல் இல்லை. மேலே இருப்பவர்கள் எதை எதிர்பார்க்கிறோமோ அதைக் கீழே உள்ள அலுவலர்கள் தருகிறார்கள். இப்போது ஒட்டுமொத்தத் துறைகளின் கவனமும் தேர்தலில் குவிந்திருப்பதால், அப்படி ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. அவ்வளவே!''
''இதுவரை எவ்வளவு புகார்கள் வந்திருக்கின்றன?''
''ஐம்பதாயிரம் புகார்கள் வந்திருக்கின்றன. இருபது கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறோம். அதில், உரிய ஆவணங்கள் அளித்தவர்களின் ஐந்து கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டு இருக்கிறது!''
''இவ்வளவு புகார்கள், முறைகேடுகள்... ஆனால், குற்றம்சாட்டப்படுபவர்கள் மீது பெரிய அளவிலான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுவது இல்லையே?''
''எங்களுடைய வேலை கண்காணிப்பது. அதை நாங்கள் செய்கிறோம். அதற்கு மேல் நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறது.''
''இந்த மாதிரி தேர்தல் சூழலில், ஒரு சாதாரண குடிமகன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது சாத்தியமானதுதானா?''
''இவர் நமக்குத் தேவை என்று மக்கள் நம்பும் சூழல் இருந்தால், சாத்தியம் என்றே நினைக்கிறேன்!''
''ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்லுங்கள்... எல்லா முறைகேடுகளையும் பார்க்கிறீர்கள். ஜனநாயகத்தின் மீதான பணத்தின் தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''மன்னியுங்கள். நீங்கள் ஒரு சாதாரண குடிமகனிடம் பேட்டி எடுக்கவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பேட்டி எடுக்கிறீர்கள். அந்த நிலையில் இருந்து நான் இதற்குப் பதில் அளிக்க விரும்பவில்லை!''
''நேர்மையான தேர்தலுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது, தேர்தல் ஆணையத்துக்கு என்ன அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''
''அரசு ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. தேர்தல் ஆணையத்துக்கும் பெரிய அதிகாரங்கள் எல்லாம் தேவை இல்லை. ஒரேயரு தேவைதான். மக்கள் மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும். நேர்மையான தேர்தலுக்கு அது ஒன்றே போதும்!''

Source - Vikatan Magazine

இந்தியாவுக்கு விசில் போடு!

இந்தியாவுக்கு விசில் போடு!

சார்லஸ், படங்கள் : சு.குமரேசன்
ட்டு வருடங்களுக்கு முன்பு கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்த மஹேந்திர சிங் டோனியின் கையில் இப்போது உலகக் கோப்பை!
 100 கோடிக்கும் மேலான இந்திய கிரிக்கெட் ரசிகர் களின் கனவை நனவாக்கிய தருணத்தில், டோனியின் முகத்தில் அத்தனை தெளிவு, பிரகாசம். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்ன? இதோ ஆறு அசத்தல் காரணங்கள்...
டோனியின் தலைமை!
''டோனி ஒரு அசட்டுத் துணிச்சல்காரர். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் சர்ச்சைக்கு உரிய முடிவுகளை எடுத்துவிட்டு, அதை வெற்றிகரமாக மாற்றக் கடும் முயற்சி எடுப்பவர்''-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் சொன்னது இது. கபில் சொன்ன மாதிரியே இறுதிப் போட்டியில் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தைச் சேர்த்தது, ஃபார்மில் இருக்கும் யுவராஜை முந்திக்கொண்டு களம் இறங்கியது என ஃபைனலிலும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுத்தார். ஆனால், எடுத்த முடிவுகள் தவறாக முடிந்துவிடக் கூடாது என்று அவர் காட்டிய துணிச்சலும் திறமையான ஆட்டமும் டோனி சிறந்த கேப்டன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. வெற்றி பெறப்போகிறோம் என்கிற தருணத்தில்கூட, எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக இருந்தது அவரது பக்குவத்தைக் காட்டியது. வெற்றி பெற்றதும் சச்சினை முன்னால் செல்லவிட்டு, அமைதியாகப் பின்னால் சென்றது அவரது முதிர்ச்சியைக் காட்டியது!
சச்சின் டெண்டுல்கரின் அனுபவம்!
ச்சின் கலந்துகொண்டு விளையாடிய ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி இது. ''100-வது சதம், மூன்றா வது முறையாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு'' என்று பல சாதனைகள் ஒவ்வொரு போட்டியின்போதும் சச்சினைத் துரத்திக்கொண்டு இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், தனக்காக விளையா டாமல் அணிக்காக விளையாடினார் சச்சின். ''தனிப்பட்ட சாதனைகளைவிட, இந்தியா வெற்றிபெறுவதுதான் எனக்குச் சந்தோஷம். வெற்றி அணியில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்'' என்றார் சச்சின். 18 ஆயிரம் ரன்களைத் திரட்டிய ரன் மெஷினுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது உலகக் கோப்பை. அதை சச்சினுக்காகவே விளையாடி வாங்கித் தந்திருக்கிறார்கள் இளம் வீரர்கள்!
டீம் ஸ்பிரிட்!
ந்தியா வெற்றி பெற முக்கியக் காரணம்... டீம் ஸ்பிரிட். முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் எனத் திறமையான வீரர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்தனர். ஆனால், டீம் ஸ்பிரிட் என்பது இவர்களது காலங்களில் எப்படி இருந்தது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிவார்கள். டோனி கேப்டனாகப் பொறுப்பு ஏற்கும்போது, யுவராஜ் சிங் அவருக்கு சீனியர். சச்சின்  அணியில் இருக்கிறார். ஆனால், எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், சீனியர் வீரர் களுக்கு மதிப்பு அளித்து, ஜூனியர் வீரர் களையும் அரவணைத்து, அணிக்குள் ஒற்று மையை வளர்த்தார் டோனி. போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது டீம் டூர் போவது, அவ்வப்போது பார்ட்டி வைப்பது என டீம் மெம்பர்களை ஒருங்கிணைத்தார் டோனி. போட்டியின்போது ஒவ்வொரு பந்துக்கும் முனாஃப் பட்டேலுக்கு ஓடோடி வந்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருந்தார் ஜாகீர்கான். விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டும் என்று களத்தில் நின்றே வழிகாட்டிக்கொண்டே இருந்தார் சச்சின். இந்த டீம் ஸ்பிரிட்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது!
இளம் வீரர்களின் ஆதிக்கம்!
லகக் கோப்பை தொடங்குவதற்குமுன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்குப் பதில் யூசுப் பதானையும், சுரேஷ் ரெய்னாவையும் விளையாடவைக்கலாம் என்பதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பை ஆரம்பித்ததும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. நான்கு அரை சதம், ஒரு சதம், ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டம்தான், இரண்டு கண்டங்களில் இருந்தும் இந்தியா தப்பிக்க உதவியது. தனக்கு விளையாடக் கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். சச்சின், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த வருடத்தில்தான் இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி பிறந்தார். ''21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டைத் தூக்கிச் சுமந்துகொண்டு இருக்கிறார் சச்சின். அவரை நாங்கள் இன்று தூக்கிச் சுமப்பது என்பது பெரிய விஷயமா என்ன?''- உலகக் கோப்பையை வென்றவுடன் யோசிக்காமல் பேசிய விராட் கோலி யின் வார்த்தைகளில் தெரிந்தது அவரது கிரிக்கெட் காதல்!
கடுமையான பயிற்சி!
கேரி கிரிஸ்டனின் பலமே, இந்திய வீரர்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டதுதான். உடல் பயிற்சியைவிட, பேட்டிங் பயிற்சியில்தான் இந்திய வீரர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் கிரிஸ்டன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் பயிற்சியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சேவாக், கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் 'ஃபிட்னெஸ் டிரெயினிங் நேரத்தில் ஒரு பகுதியை நாங்கள் பேட்டிங் பயிற்சிக்குச் செலவிடுகிறோம். அப்போது தான் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்!’ என்று சொன்னதை ஏற்றுகொண்டார் கிரிஸ்டன். ஒன்று, இரண்டு ரன்களை ஓடி ஓடி எடுப்பதைவிட 4, 6 அடிப்பது சூப்பர்தானே? அதே சமயம், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கு மத்தியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்குச் சிறப்பான ஃபீல்டிங் பயிற்சி கொடுத்து அவர்களை இன்னும் மெருகேற்றினார் கிரிஸ்டன்!
ஜாகீர் கானின் எழுச்சி!
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கான் தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர்கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர்கான்!
1999 உலகக் கோப்பைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா. இப்போது ஆஸ்திரேலியாவுக்குப் பதில் இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. 'இனி எப்போதுமே இந்தியாதான் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும்!’ என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசை. டோனி தலைமையிலான அசத்தல் அணிக்கு அதைச் சாதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது!

Source - Vikatan Magazine

Thursday, April 7, 2011

மறக்கக் கூடாத பட்டியல் - 3

டந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!

தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.
ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!
ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது. 'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!
மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது. இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!
காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை. நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா? வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.
முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.
விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு. 'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!
விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!
இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?
'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி. வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?

Source - Vikatan Magazine

Tuesday, April 5, 2011

மறக்கக் கூடாத பட்டியல் - 2

திர்க் கட்சிகளோ, ஊடகங்களோ தன் மீது ஒரு சிறு குற்றச்சாட்டை வைத்தாலும்கூட, பாய்ந்தோடி வந்து பதில் தருவதில் முதல்வர் கருணாநிதி காட்டும் வேகமே வேகம்தான்! குற்றச்சாட்டு எழுப்பியவரின் குலம், கோத்திரத்தை எல்லாம் புரட்டிப் போட்டு... சாதி, சரித்திரத்தைக் குத்திக் குதறி... புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிப்பார். எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை, தந்திரத்தோடு எதிர்கொள்வதில் அத்தனை வல்லவர்!

இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியிலோ, பதிலே சொல்ல முடியாமல் அவர் மௌனம் காத்து மழுப்பிய பட்டியல் வெகு நீளம்.
கட்சியின் கௌரவத்துக்குரிய தென்மாவட்டத் தளகர்த்தர்களில் ஒருவரான தா.கிருட்டிணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை, ஆந்திர மாநில நீதிமன்றத்தில் நடந்தது. அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்தக் கொலை வழக்கைப் பதிவுசெய்த அதே காவல் துறைதான், தி.மு.க. ஆட்சியின்போதும் தொடர்ந்து வழக்கை நடத்தியது. ஆனால், வழக்கில் சிக்கிய அனைவருமே பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படியானால், பட்டப்பகலில் தா.கிருட்டிணனை யார்தான் வெட்டிச் சிதைத்தார்கள்? அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? ஆளும் தி.மு.க. அரசு ஏன் அப்பீலுக்குப் போகவில்லை? தா.கி. தன்னைத்தானே வெட்டிக் கொன்றுகொண்டாரா? இதுவரை இதற்கெல்லாம் பதில் இல்லை!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசாங்க மதுக் கடைகளில் 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளுக்கே ஏகபோகக் கொள்முதல் நடப்பதாகவும்... அந்த மது ஆலையின் பின்னே இருப்பது அன்றைய முதல்வரின் தோழி தொடர்பானவர்கள் என்பதால்தான், இந்த அநியாய ஏற்பாடு என்றும் முழங்கினார் கருணாநிதி. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அதே 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளை அரசாங்கம் மானாவாரியாகக் கொள்முதல் செய்தது. 'உள்ளுக்குள் என்ன ரகசிய ஏற்பாடு?' என்று எழுந்தது கேள்வி... வரவில்லையே பதில்!
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரால் 'ஸ்டார் இன்ஷூரன்ஸ்' என்ற நிறுவனத்துடன் தி.மு.க. அரசு போட்ட ஒப்பந்தத்தின் பின்னணி பற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா கடுமையான கேள்விகளை எழுப்பினார். 'ஸ்டார்' அதிபர் சலாவுதீனுக்கும் தி.மு.க. தலைமைக்கும் மர்மத் தொடர்பு என்றும் குற்றம் சாட்டினார். பதில் என்னவோ - பேரமைதி மட்டுமே!
'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டு முறைகேடுகள் பற்றி வெளிநாட்டு ஊடகங்களும்கூட சரமாரியாகக் குற்றம்சாட்டின. 'குற்றமற்றவர் ஆ.ராசா. தலித் என்பதால், காழ்ப்பு உணர்வு' என்றார் முதல்வர் முதலில்! ராசாவுக்காக திஹார் சிறையின் கதவுகள் திறந்துகொண்டபோதோ, 'கைது செய்யப்படுவதாலேயே, ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது’ என்பது கருணாநிதியின் சமாளிப்பு. அதன் பிறகு..? பேச்சு மூச்சே கிடையாது!
அறிவாலயத்தின் கீழ்த் தளத்தில் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சு... மேல் தளத்தில் மனைவியிடமும் மகளிடமும் சி.பி.ஐ. விசாரிப்பு என்ற வரலாறு காணாத விநோத நிலை எழுந்தபோது, 'இது பழிவாங்கல் நடவடிக்கை' என்றோ... 'சட்டத்தின் சம்பிரதாயமான விசாரிப்பு' என்றோகூட விளக்கம் சொல்ல முடியாத விபரீத சிக்கல் அவருக்கு!
ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி ராஜபக்ஷே அரசு நசுக்கிக் குவித்த தொடர் கொடுமைகளின்போது, 'தமிழினத் தலைவராகத் தூக்கி நிறுத்தப்பட்டவரே! தகுமா உங்களின் மௌனம்?' என்று நாள்தோறும் கிளம்பிய ஏராளமான கதறல் கேள்விகள், இந்து மகா சமுத்திரத்தின் இரைச்சலோடு கரைந்ததுதான் மிச்சம்!
இப்படி இன்னும் உண்டு சில பல மர்ம மௌனங்கள். இதற்கெல்லாம் பதில் தரத் 'தெரியாதவர்' அல்ல கருணாநிதி, 'முடியாதவர்' என்பதே உண்மை!
முடியாமல்போனதற்கு என்ன காரணம்? சிந்திப்போம் நாம் தொடர்ந்து!

Source - Vikatan Magazine

மறக்கக் கூடாத பட்டியல் - 1

ட்சியை மாற்றினால், காட்சிகள் மாறும். அந்தக் காட்சிகளை மாற்றுவதா, வேண்டாமா என்று மக்கள் முடிவு எடுப்பதற்கு, நம் ஜனநாயக அமைப்பு அளிக்கும் ஒரே வாய்ப்பு... தேர்தல்!

ஐந்து ஆண்டு காலம் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை, ஆளும் கட்சி எந்த அளவுக்கு நியாயமாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்திக்கொண்டது என்பதை எடை போட்டுப் பார்ப்பதற்கு, வலுவான ஞாபக சக்தி மக்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த நினைவு ஆற்றலின் அடிப்படையில் அவர்கள் வாக்களிக்கிறார்களா? அல்லது, தேர்தல் நெருக்கத்தில் அரங்கேறும் மிகச் சில காட்சிகள் அவர்களைத் திசை திருப்பி விடுகின்றனவா?
2006... கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து, அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளை எல்லாம் மக்கள் முன் பட்டியலிட்டு, 'தவறாமல் நாங்கள் தருவோம் நல்லாட்சி' என்ற வாக்குறுதியோடு அரியணையில் அமர்ந்த தி.மு.க-வின் பரிபாலனம் எப்படி இருந்தது?
2009... லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் சிதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தபோது, முதல்வர் கருணாநிதி காட்டிய அதிகபட்சக் கருணை - டெல்லிக்குக் கடிதம் எழுதியதுதான். அதையும் தாண்டி, அரை நாள்  அதிசய உண்ணாவிரதம் இருந்து அரசியல் உலகத்தைத் 'திகைக்க’வைத்தார்!
அதுவே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், வீட்டு உறுப்பினர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதில் சிக்கல் எழுந்தபோது, குடும்பத்தின் முதல்வராகப் பறந்து போனார் டெல்லிக்கு. கிட்டத்தட்ட ஒரு வார காலத்தை 'உறவுக்குக் குரல் கொடுக்கும்' போராட்டத்துக்கு அர்ப்பணிக்க அவரால் முடிந்தது.
2010... தடம்புரண்ட செல்வாக்கைச் சரிக்கட்டும் தந்திரமாக, தமிழ் செம்மொழி மாநாடு என்று ஆடம்பர, அலங்காரத் தொடர் வண்டி ஓட்டியது தி.மு.க. அரசு. பிரபாகரனின் நலிவுற்ற தாயாரைச் சிகிச்சைக்காகத் தமிழ் மண்ணில் அனுமதித்தால், உலகத் தமிழ் அறிஞர்களின் கவனம் எல்லாம் மீண்டும் இலங்கை சோகத்தின் மீதே மையம்கொள்ளும் என்று அரசியல் ராஜதந்திரிகளுக்கா தெரியாது! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் மண்ணில் கால் பதிக்கக்கூட அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார் அந்த மூதாட்டி!
உப்புப் பெறாத விஷயத்துக்கும்கூட ரோஷம் பொங்க அறிக்கை விட்டு அனல் கக்கும் முதல்வர், தன் குடும்பத்தினர் மீது அடுக்கடுக்காகக் கிளம்பிய கடுமையான பல குற்றச்சாட்டுகளுக்கு, மௌனத்தையே கேடயமாக ஏந்தித் தப்பிய சந்தர்ப்பங்கள் ஒன்றா... இரண்டா?
மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது... சிந்திப்போம் நாம் தொடர்ந்து!



Source - Vikatan Magazine