Saturday, April 16, 2011

சபாஷ் தேர்தல் ஆணையம்!

சபாஷ் தேர்தல் ஆணையம்!


அராஜகமும், வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். இது வரை இல்லாத அளவுக்கு 77 சதவிகிதத்துக்கு மேலாக வாக்குப் பதிவு நடந்திருப்பது, ஜன​நாயகத்​​தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் பிரமிக்க​வைத்தது.
'வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை’ என்பதைத் தேர்தல் ஆணையம் வலிமையாக எடுத்துச் சொன்னது. இதை இளைய வாக்காளர்கள் வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாக்களித்து இருக்கிறார்கள். பயம், நிர்பந்தம் இன்றி வாக்களிக்க வழிவகை செய்ததும் சாதனையாகும். தேர்தல் ஆணையம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமும் உறுதுணையாக நின்றது பாராட்டத்தக்கது.
பணம், அதிகாரத்துக்கு விலை போய்விடாமல் மக்களைத் தடுத்த தேர்தல் ஆணையத்தை மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறோம். இனி, அமையப்போகும் ஆட்சி யாருடையதாக இருந்​தாலும், அது மக்களின் நிஜமான மன நிலையின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ள முடியும். அரசு இயந்திரத்தை செம்மையாக எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதையும் மக்களிடம் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷன் காட்டிய வழியில் அடுத்து வரும் அரசு, ஊழியர்களைத் திறம்படச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளைவிட, அரசியல்வாதிகள் மக்களுக்காக உழைக்கக்​கூடிய​வர்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க வேண்டிய கடமை வரக்கூடிய அரசுக்கு உள்ளது.
அன்னா ஹசாரேயின் போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் சாட்டை அடிகள், தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளை எல்லாம் பார்க்கும்போது, ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது!
- டி.கோவிந்தராஜ், திருச்சி.
Source - Vikatan Magazine

No comments:

Post a Comment