Thursday, July 21, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ரொமான்ஸ் ரகசியங்கள்!

 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' (A smooth sea, never made a skillful sailor) என்பார்கள். அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும் கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையாளராக ஆகிவிடுவார்.
ஆண் - பெண் மண வாழ்க்கையும் அப்படித்தான். திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
தொடக்க நிலையில் வரும் சிறுசிறு தடைகளை(Hiccup)வெற்றிகரமாக தாண்டிவிட்டால், அதன் பிறகு சுவையான வாழ்க்கை காத்திருக்கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. அதன் ஃபார்முலாக்களை ஒரு உதாரண தம்பதியின் மூலம் சொல்கிறேன்.
அந்தத் தம்பதி சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். 'வாலன்டரி ரிட்டையர்மென்ட்’ வாங்கியவர்கள். ஒரு மகன், மகள். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பணம் காசுக்குக் குறைவில்லை. இவர்கள் மிக ஆச்சர்யமான தம்பதி... ஏதோ நேற்றுதான் திருமணம் ஆனவர்களைப் போல் அத்தனை அந்யோன்மாக, சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி இருப்பார்கள்.
சென்னையில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் அந்தத் தம்பதியை தற்செயலாகப் பார்த்தேன். எழுத்தாளர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பிஸினஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சென்று பேசியபடி இருந்தார்கள். பலரைப் பாராட்டிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தேன். குறிப்பாக, ஓர் இளம் சினிமா கவிஞரிடம் அவர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி அவர்கள் பாராட்டியதைக் கவனித்தேன். கவிஞரும் மிக உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு அவர்கள் மேலிருந்த ஈடுபாடு இன்னும் அடர்த்தியாக, ஒரு கட்டத்தில் தனியாக இருந்த அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே கை கொடுத்து, 'ஃப்ரெண்ட்லி' ஆகிவிட்டார்கள்.
'கல்யாணம் ஆனதில்இருந்து இப்படித்தான் அந்யோன்யமாக இருக்கிறீர்களா? சண்டையே வருவதில்லையா?'' என்றேன்.
'அதை ஏன் கேட்கிறீர்கள்? கல்யாணம் ஆன புதிதில் தினமும் சண்டைதான். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டோம். சில சிம்பிள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புரிதல்கள் என்று அட்டவணை போட்டுக் கொண்டோம். அதன்படி நடந்து கொண்டதில் நாளுக்கு நாள் எங்களுக்கு அன்பு கூடியது!' என்றார் கணவர்.
'ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்படி பேசி வைத்துக் கொண்டுகூட வாழ முடியுமா?' என்றேன்.
'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்... நல்ல விருந்து சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று அன்புடன் அழைத்தார் அப்பெண்மணி. அடுத்த ஞாயிறே அவர்களின் வீட்டில் ஆஜரான நான், அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய 'சக்சஸ் ஃபார்முலா'வின் பல விதிகள் எனக்குப் புரிந்துவிட்டன.
இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்கள் வீசுவதில்லை. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இவர் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் உள்ளே காபி தயாரித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் போனில் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை மனைவி கணவனுக்குக் கொடுத்தார். கணவனுக்கு நகம் வெட்டினார். இருவரிடமும் சகஜமான 'தொடுதல்’ இருந்தது. 'இன்றைக்கு இரவு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்’ என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் மனைவி.
இருவரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளவில்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி நேரம் யோகா, நாற்பது நிமிடங்கள் வாக்கிங், அடுத்து பேப்பர். வீட்டு வேலைகள் தொடர்கின்றன. தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இருவருக்கும் இருந்தது.
இருவருக்குமான அன்பும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்ததையும், அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருந்ததையும் அதிசயமாகப் பார்த்தேன். கணவன்- மனைவி இருவரின் உறவும் மேற்பட அவர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட சில ஃபார்முலாக்களை, பத்து விதிகளாகச் சுருக்கிச் சொல்கிறேன்...
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.
2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.
3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தாலும், பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.
5. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10. 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.
ஆனந்தமான ரொமான்ஸ் வாழ்க்கையின் பத்து அடிப்படை ரகசியங்களாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன. மனித மனம் என்பது காட்டாறு போன்றது. அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் போன்ற பல விதிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
‘To love and to be loved is the greatest happiness of human existence’எனும் பொன்மொழி... எத்தனை சத்தியம்!
         - நெருக்கம் வளரும்...

Source - Vikatan Magazine

Tuesday, July 19, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 - அவர்கள் 'சுயம்பு'வாக உருவெடுக்கட்டுமே !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

அவர்கள் 'சுயம்பு'வாக உருவெடுக்கட்டுமே !
 சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
ஸ்கூலில் இருந்து களைப்பாக வந்த ஷாலினி, அரை மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பிறகு, ''அம்மா டிரெஸ் மாத்தி விடுங்க'' என்றாள். மாற்றிவிட்ட அம்மா, ''ஷாலு, டிபன் சாப்பிடு, டியூஷனுக்கு நேரமாச்சு'' என்றபடியே ஊட்டிவிட்டார். பாடப் புத்தகங்களை பையில் அடுக்கி, அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று, டியூஷனில் விட்டார்.
இரவு மணி ஏழு மணிக்கு திரும்பச் சென்று அழைத்து வந்து, சாப்பாடு ஊட்டிவிட்டு, வாயைத் துடைத்துவிட்டு படுக்க வைத்தார். பக்கத்திலேயே படுத்து, பாட்டுப் பாடி ஷாலினி அயர்ந்து தூங்குகிறாள் என்பதை உறுதி செய்த பின்தான் எழுந்து வந்தார்... கிச்சனுக்கு மீதமிருக்கும் வேலைகளை முடிக்க.
ஷாலினி படிப்பது, எட்டாம் வகுப்பு!
''ஏழாவது, எட்டாவது படிக்கிற என் பையனுக்கும் பொண்ணுக்கும்... இதேமாதிரிதான் நான் பண்றேன். இதுல என்ன தப்பு?'' என்கிற பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தை எதிர்காலத்தில் எந்த சுய விருப்பங்களும், சுய தேடல்களும் இல்லாமல், தன்னம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்த்து இருக்க நீங்கள் விரும்பினால்.... இந்தச் செயல்களைத் தொடருங்கள்.
அப்படியன்றி... மிடுக்கான, தன்னம்பிக்கை நிறைந்த, எந்த அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியக் குழந்தையாக வளர்க்க விரும்பினால்... குழந்தையே சுயமாக சில வேலைகளைச் செய்வதற்கு அனுமதியுங்கள். அதுதான் குழந்தையின் பண்பை, ஆளுமையை வளர்க்கும் காரணி! அவனுடைய உலகத்தில் அவனே போரிடவும், போட்டியிடவும், வெற்றி பெறவும், தோல்வியை கம்பீரமாக எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்; அவனாகவே கற்றுக் கொள்ளவும் அனுமதியுங்கள். அதன் முலம்தான் அவனுடைய பலமும் பலவீனமும் அவனுக்கே புரிய வரும்.
உதாரணமாக, ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறாள் உங்கள் ஆசை மகள் என்றால், முதலில் அனுமதியுங்கள். ஒரு விஷயத்தில் பங்கெடுப்பதுதான் முக்கியம். அதில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இரண்டாம் பட்சம்தான் என்பதை அவளுடைய அனுபவத்தின் வாயிலாகவே கற்றுக் கொள்வதுதான் எந்தச் செயலிலும் தொடர்ந்து போராட வைக்கும். ஒருவேளை உங்கள் மகள் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டால், ''அந்த டீச்சருக்கு கலரிங் சென்ஸே கிடையாது. நீ எவ்வளவு நல்லா பண்ணியிருந்தே...'' என்று நெகட்டிவ் கமென்ட்ஸ் கொடுக்காதீர்கள். இது, தன் இயலாமைக்கு அடுத்தவர் மேல் பழி சொல்லும் குணத்தை குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும். அது தீவிரமானால், குறுக்கு வழியில் வெற்றியைப் பெறுவதற்கான சிந்தனையில் ஆழ்ந்துவிடும்.
உங்கள் அணுகுமுறையும் வார்த்தைகளும் நேர்மையாகவும் நேர்மறையாகவும் இருப்பது, உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கம்பீரமாக மாற்றும் வல்லமை கொண்டது. ''நீ அழகா வரைஞ்சிருந்தேடா... ஆனா, ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கின பொண்ணு கலர் பண்றதுல ஸ்கோர் பண்ணிட்டா. அடுத்த முறை நீயும் கவனமா பண்ணினா கண்டிப்பா பரிசு உனக்குத்தான்'' என்று அவளுடைய ஓவியத்தின் மீதான நேர்மையான விமர்சனம், அவளுக்கு அந்தப் பிழையை உணர வைத்து, அடுத்த முறை திருத்தச் செய்யும்தானே?!
சரி, ஒரு பரிசோதனை. இந்தக் குணங்கள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா..?
1-3 வயதில் பிடிவாதம் நிறைந்தவளாக, எதற்கெடுத்தாலும் மூச்சைக் கட்டி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாளா? தன் விருப்பத்துக்கு எதிராக எது நடந்தாலும் அழுகிற 'சென்ஸிடிவ்’ குழந்தையா?
 3-9 வயதில் உள்ள குழந்தை, வீடியோ கேம்ஸ் வாங்கித் தரவில்லை என்று ஊரே கேட்கும்படி கத்திக் கத்தி அழுது, தரையில் மண்டையைப் போட்டு முட்டிக் கொள்கிறதா, கடித்துத் துன்புறுத்துகிறதா?
 9 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, மற்றவர்களை அடிப்பது, பொருட்களை உடைப்பது என்றிருக்கிறதா..?
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, வீட்டில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை சொன்ன தற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் அடம் பிடிக்கிறதா?
'ஆமாம்... ஆமாம்!’ என்றால் பயந்து விட வேண்டாம். எப்போதாவது ஒருநாள் என்றால்... அது குழந்தைக்குரிய இயல்பு; நோ பிராப்ளம். எப்போதுமே இப்படித்தான் என்றால்... குழந்தையிடம் பிரச்னை என்று அர்த்தம். அதை தீர்ப்பதற்கான வழிகளை செய்யுங்கள்... அன்போடும் அக்கறையோடும்!
- வளர்ப்போம்...


Source - Vikatan Magazine

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

- என்.கணேசன்
நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.
"சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்."
நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.
சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும்.
சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.
மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்துக்கான தூண்டில்கள் என்றும், எந்த நேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.
சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது.  அகத்திற்கும், புறத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான்.
அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்துக்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.
"நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை."
இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். "ஆன்மா மகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை."
நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.
சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.


அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான்.  மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.
இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!

Sunday, July 17, 2011

சூடு பிடிக்கும் நித்தி வீடியோஸ்!

சூடு பிடிக்கும் நித்தி வீடியோஸ்!

அது நிஜமா? மார்ஃபிங்கா?
'நித்தியானந்தா - ரஞ்சிதா' என்று ஒரு வீடியோ திடீர் 'ஈவினிங் ஷோ'வாக தொலைக்காட்சியில் வெளியாகி... தமிழக மக்களை மூச்சுத் திணறவைத்தது பழைய பரபரப்பு. ''இந்த வீடியோ ஃபோர்ஜரியாகத் தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரித்தவர்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால், என்னுடைய உயிருக்கேகூட அது ஆபத்தாக மாறிவிடும்!'' என்று ஆரம்பத்தில் சொல்லி வந்த நித்தியானந்தா... அதன் பிறகு மெதுமெதுவாக சில 'மோட்டிவ்'களை இலைமறை காயாகச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார். இப்போதோ ''அது மொத்தமும் மார்ஃபிங்... பின்னால் இருந்தது பிளாக்மெயில் மோட்டிவ்!'' என்ற கோஷத்துடன்
படுஸ்பீடாக சென்னையை வலம் வர ஆரம்பித்துள்ளார். முதல் நாள் நடிகை ரஞ்சிதாவும், மறு நாள் நித்தியானந்தா - கம் - ரஞ்சிதாவுமாக குரு - பக்த சமேதராக சென்னை மீடியாக்களுக்கு கடந்த 13-ம் தேதி 'தரிசனம்’ கொடுத்தார்கள்.
'வீடியோ விவகாரத்துக்குப் பிறகு சென்னை பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, சன் குழுமத்துக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்ததே ஜெயலலிதா அரசுதான்!’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நித்தியானந்தா தொடர்பான வீடியோ உண்மையானதுதான் என்று கர்நாடக மாநில போலீஸார் சொல்கிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இது உண்மையானதுதான் என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பான வழக்கு வரும்போது, கோர்ட்டில் நிரூபிப்போம். மற்றபடி நித்தியானந்தா சென்னை சென்று மீடியாக்களில் பேசுவதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதில் பொலிடிக்கல் மோட்டிவ் உள்ளது!'' என்று சொன்னார்.
பெங்களூருவைச் சேர்ந்த தடயவியல் துறையின் முன்னாள் இயக்குநர் சந்திரசேகரிடம் பேசினோம். ''அந்த படுக்கை அறை வீடியோ வெளியானதுமே ஒரு தனியார் டி.வி. சேனல் மூலமாக எனக்கு ஒரு சி.டி. கொடுத்தார்கள். அதை நான் ஆராய்ந்து பார்த்ததில் மார்ஃபிங் செய்யப்பட்டதைப்போலத் தெரியவில்லை. கேமராவை ரகசியமாக ஒரு இடத்தில் ஃபிக்ஸ் செய்துவைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. மார்ஃபிங் என்றால் வெவ்வேறு கேமராக்களில் பதிவான காட்சிகளின் கலவையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை எடுக்க ஒரே கேமராதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது!'' என்று உறுதியாகச் சொன்னார்.
அப்படி இருக்க நித்தியானந்தா தரப்பின் வாதம்தான் என்ன?
சென்னை வந்த நடிகை ரஞ்சிதாவை, தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் சந்தித்தோம். ''எனக்கு வாழ்வு கொடுத்து ஆளாக்கியது சென்னைதான். ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த மண்ணில் என்னைக் கால் மிதிக்கவிடாமல் செய்துவிட்டார்கள். தப்பு செய்து அதற்காகத் தண்டனை கொடுத்து இருந்தால், கவலைப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவித்தேன். அனுபவித்த எனக்குத்தான் அந்த வலி புரியும். ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் நான் பட்ட வேதனைகள் கொஞ்சம்நஞ்சம் இல்லை...'' என்றவரிடம் கேள்விகள் கேட்டோம்.
''அந்த வீடியோ பற்றி என்னதான் சொல்கிறீர்கள்?''
''ஒரு நாள் திடீர் என்று லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா, என்னை சந்திக்க வந்தார். ஆசிரமத்தின் முன்னாள் சீடரான அவர் அந்த வீடியோவை என்னிடம் காட்டினார். பார்த்ததும் அதிர்ந்து​விட்டேன். 'இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையே... அப்புறம் எப்படி?’ என்று கத்தினேன். 'அது எங்களுக்கும் தெரியும். இது நாங்களே உருவாக்கிய வீடியோ. இதை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் சொல்​வதை நீ கேட்கணும்!’ என்று சொன்ன லெனின், இந்த வீடி​யோவைக் காட்டி என்னிடம் தவறாக நடந்துகொள்ளவும் முயற்சி செய்தார். நான் அவரைத் திட்டி அனுப்பினேன்.
அதற்குப் பிறகு, 'நாங்கள் நான்கு பேர் சேர்ந்துதான் இதைத் தயாரித்தோம். வீடியோவை சன் டி.வி-யிலும், போட்டோவை நக்கீரன் பத்திரிகையிலும் வெளி​யிடாமல் இருக்க வேண்டும் என்றால், 60 கோடி கொடுக்கணும்’ என அடுத்த மிரட்டல் வந்தது. 'போலியான வீடியோவை வைத்து உங்களால் என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டேன். 'அது நமக்கு மட்டும்தானே தெரியும். எங்களுடைய நோக்கம் சாமியின் பேரைக் கெடுக்கணும்!’ என்று சொன்னார்கள். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவர்கள் கேட்கும் மன நிலையில் இல்லை.
அடுத்த சில நாட்களில் டி.வி-யிலும், பத்திரிகையிலும் வெளியிட்டு, எங்களை எவ்​வ​ளவு கேவலப்படுத்த முடியு​மோ... அவ்வளவு கேவலப்​படுத்தினார்கள்!''
''அந்த வீடியோவில் அத்தனை விவரமாகவும் துல்லியமாகவும் உள்ள காட்சிகளை 'மார்ஃபிங்' செய்து ஒட்டுவேலையில் காட்டி இருக்க முடியாது என்று சொல்கிறார்களே?''
''அது மார்ஃபிங் செய்யப்​பட்டதுதான்!
அந்த வீடியோ ஒளிபரப்பான அன்று இரவு, 'நீங்க சாமிக்கு எதிராகத்தான் பேட்டி கொடுக்​கணும். அதையும் மீறி ஏதாவது வாய் திறந்தீங்கன்னா, என்ன நடக்கும்னு தெரியாது’ என்று எனக்கு மிரட்டல் வந்தது. உடனே, மிரட்டியவர்கள் மீது புகார் கொடுக்கக் கிளம்பினேன். மறுபடியும் டி.வி. தரப்பில் இருந்து போன் வந்தது. 'மெட்ராஸ் பக்கம் காலெடுத்து வைத்தால், பொய் கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். நீ வாயே திறக்கக் கூடாது!’ என மிரட்டினார்கள். அந்தச் சூழ்நிலையில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் அவர்கள் கையில் இருந்தது. அதை மீறி நான் கொடுத்து இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.
இப்போது ஆட்சி மாறிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா மேடம், தப்பு செய்தவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு இருக்கிறார். இந்த சமயத்தில் நாமும் புகார் கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று நம்பித்தான், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தேன்.
'சம்பந்தமே இல்லாத என்னை சுவாமியோடு இணைத்து ஒரு வீடியோ தயாரித்து, அதை வெளியிட்ட டி.வி. மீதும், என்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று புகார் கொடுத்தேன். சன் குழுமத்தைச் சேர்ந்த சிலரது பெயரையும் என் புகாரில் சொல்லி இருக்கிறேன். 'அவங்க பேரை இப்போது வெளியில் சொன்னால், அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிப் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால், விசாரணை முடியும் வரை அதை வெளியில் சொல்ல வேண்டாம்’ என போலீஸ் தரப்பில் சொன்னார்கள். அதனால் அதை உங்களிடம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்!'' என்று சொல்கிறார் ரஞ்சிதா.
''அந்த வீடியோ முழுக்கவுமே பொய்க் காட்சி. அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று கூறும் நித்தியானந்தா தரப்பு, தங்கள் பக்தர்களிடம் பணமும் நிலமும் கேட்டு சிலர்  பிளாக்மெயில் செய்தததாகவும் அதில் சிலர் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுவது எப்படி?
நித்தியானந்தா குரூப்பைப் பார்த்தால், தப்பே செய்யாமல் மிரட்டலுக்குப் பணிகிற ரகம் மாதிரியா தெரிகிறது?'' என்று சிலர் கேட்பதற்குத்தான் பதிலே இல்லை!
- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: சு.குமரேசன்
''மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது!''
சென்னை எழும்பூரில் உள்ள மெரினா டவர் ஹோட்டலில் பத்திரிகை யாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் நித்தியானந்தா. அவர் வந்த சில நிமிடங்களில் ரஞ்சிதாவும் ஏக சிரிப்போடு வந்து அமர்ந்தார்.
''தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கும் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தியான பீடத்தின் சார்பாக வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...'' என ஜெ. புராணத்தோடுதான் பேச்சை ஆரம்பித்தார் நித்தியானந்தா.
''சென்னையில் எங்களது ஆசிரமத்தின் கிளையைத் தொடங்க பக்தர் ஒருவர் நிலம் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார். அதைக் கைப்பற்ற சன் டி.வி-யை சேர்ந்தவர்கள் முயற்சித்தார்கள். அது முடியாமல் போனது. அந்தக் கோபத்தில் தான் என்னைப் பழிவாங்க மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை ஒளிபரப்பி அசிங்கப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. வீதிக்கு வீதி அசிங்கமான போஸ்டர்களை ஒட்டினார்கள். பணத்துக்காக அந்த வீடியோவைக் கோடி கோடியாக விற்பனை செய்தார்கள்!'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்.
எக்குத்தப்பான கேள்விகள் சில நிருபர்களிடம் இருந்து வந்தபோது, அதற்கெல் லாம் அசராமல் நித்தியானந்தா தந்த பதில்களைப் பார்த்தால்... அவருக்குப் பின்னாலும் இப்போது பக்காவான அரசியல் பலம் சேர்ந்துவிட்டது என்பது தெளிவாகப் புரிந்தது!  

Source - Vikatan Magazine

ஜெயலலிதாவின் அதிரடியில் இ.டி.ஏ. ஸ்டார்!

ஜெயலலிதாவின் அதிரடியில் இ.டி.ஏ. ஸ்டார்!

விசாரணைக்குள் வருகிறார் சலாவுதீன்!
லைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. முந்தைய தி.மு.க. அரசின் பல திட்டங்களை ஜெயலலிதா தவிடுபொடி ஆக்கினாலும், 'புதிய தலைமை செயலகத்துக்கு விசாரணை கமிஷன், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தம்’ ஆகியவைதான் கூடுதல் அரசியல் அர்த்தத்தோடு பார்க்கப்படுகிறது. காரணம், இந்த இரண்டு திட்டங்களுக்கும் கருணாநிதிக்கு நெருக்கமான சலாவு​தீனின் இ.டி.ஏ. ஸ்டார் ஒப்பந்தம் எடுத்திருந்தது!
இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் வளர்ச்சி!
கீழக்கரையில் வைர வியாபாரம் செய்துவந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான், இலங்கை, ஹாங்காங், துபாய் என்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்​கினார். மதுரையில் அவரது சேது பிலிம்ஸ் நிறுவனம் 'இதயக் கனி,’ 'உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களைத் தயாரிக்கப் பல வகைகளில் உதவியது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தாலும், கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களோடும் சமமாகப் பழகினார் அப்துல் ரஹ்மான்.
கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் போன்றவை அப்துல் ரஹ்மானின் இ.டி.ஏ. நிறுவனம் கட்டியவைதான். இந்த  நிறுவனத்தில், தனது தூரத்து உறவினரான சையத் சலாவுதீனை வேலைக்கு அமர்த்தினார்.
ஆனால், கொஞ்ச காலத்திலேயே அப்துல் ரஹ்மானுக்குப் போட்டியாக 'இ.டி.ஏ. ஸ்டார்’ என்ற புதிய நிறுவனத்தை சலாவூதீன் தொடங்கிவிட்டார். அப்துல் ரஹ்மானைப்போலவே இவரும் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
கட்டுமானம், சாலைப் பணிகள், ரியல் எஸ்டேட், மின் மற்றும் வணிகத் திட்டங்​கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், மின் இயந்திரவியல் பயன்பாடு என்று பல தொழில்களில் விரிந்துகிடக்கிறது சலாவூதீனின் சாம்ராஜ்யம்.
22 நாடுகளில் 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் அவர் கண் அசைவில் செயல்படுகின்றன. 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தமிழகத்தில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ரஹேஜா டவர்ஸ், கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள புதிய நூலகக் கட்டடம் என்று இ.டி.ஏ. ஸ்டார் தொடாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு சுமார் 16,000 கோடிக்கு மேல் என்கிறார்கள்.
தி.மு.க. தொடர்பு...
புதிய தலைமைச் செயலகம் கட்டிய 'ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’, இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் ஓர் அங்கம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,750 கோடி செலவில், 350 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஒருங்​கிணைக்கப்பட்ட நகரியத்தை அமைக்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. இந்தப் பணியை இ.டி.ஏ. ஸ்டார் ப்ராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், சலாவுதீ​னுடன் கருணாநிதிக்கு இருக்கும் நெருக்கம் தான். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 517 கோடியை பிரிமியமாக அரசு செலவழித்தது. முதல் ஆண்டில், பயனாளிகளுக்காக மருத்துவ​மனை களுக்குச் செலுத்தப்​பட்ட தொகை சுமார் 415 கோடி மட்டுமே. இரண்டாவது ஆண்டில், 750 கோடி பிரிமியம் செலுத்தப்பட்டது. ''மக்களின் வரிப் பணம், பன்னாட்டு கம்பெனிக்கு போய்க்கொண்டு இருந்தது. மக்களின் வரிப் பணத்தில், சுமார் 400 கோடி லாபம் ஈட்டி இருக் கிறது!'' என்று புகார் வாசிக்கப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகம்
'முதலில் 700 கோடிக்கு தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி,  பிறகு 1,200 கோடி வரையில் பணத்தை செலவழித்தார்கள்!’ என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. வரைபடம் தயாரித்துக் கொடுத்த ஜெர்மன் கம்பெனி, முன்னாள் பொதுப் பணித் துறை செயலாளர் ராம சுந்தரம், அரசு அதிகாரிகள், தோட்டா தரணி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரிகளை எல்லாம் விசாரணை கமிஷன் விரைவில் விசாரிக்கப்போகிறது.
ஸ்பெக்ட்ரம்
ஆ.ராசாவின் தயவால் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று, ஸ்வான் டெலிகாம் நிறுவனம். ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அதை 9 மாதங்கள் கழித்து, துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸாலட் நிறுவனத்துக்கு 5.7 சதவிகிதப் பங்குகளை அதிக விலைக்கு விற்றது. பிறகு, எடிஸாலட் டிபி என அந்த நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. மூன்றே மாதத்தில் 380 கோடி மதிப்புள்ள பங்குகளை, எடிஸாலட் டிபி-யிடம் இருந்து வாங்குகிறது இன்னொரு நிறுவனம். அதன் பெயர் 'ஜெனிக்ஸ் எக்ஸிம் வெண்டர்ஸ்’. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம், வெறும் 1 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாவுதீனின் மகனைச் சார்ந்தது. இ.டி.ஏ. ஸ்டார் 7.1.2008 அன்று, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு 1 கோடி கொடுத்தது.
இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கும் ஜெயலலிதா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்!
- எம்.பரக்கத் அலி

Source - Vikatan Magazine