Sunday, August 14, 2011

தகவல் தர மறுக்கும் தலைவர்கள்!

தகவல் தர மறுக்கும் தலைவர்கள்!

கப்சிப் வருமான வரித் துறை
த்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரத்தைக் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஃபேக்ட் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கோபால கிருஷ்ணன். ஆனால், வருமான வரித் துறை தகவல்களைக் கொடுக்கவில்லை. கனிமொழி, டி.ஆர்.பாலு, ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரது கணக்குகள் குறித்துக் கேட்டபோது, 'கொடுக்கலாமா? வேண்டாமா?’ என்று சம்பந்தப்பட்டவர்களிடமே விளக்கம் கேட்டது வருமான வரித் துறை. 'எந்த விவரத்தையும் தரக் கூடாது’ என்று அவர்கள் சொன்​னதால், தரவில்லை.
தா.பாண்டியனின் கணக்கைக் கேட்டபோது 'அவர் ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை’ என்று பதில் வந்தது. கருணாநிதியின் கணக்கு விவரங்களைக் கேட்க, அவருடைய ஆடிட்டர் டி.சிவசுப்பிரமணியம் மூலம், 'கணக்கு விவரங்களைத் தரக் கூடாது’ என்று கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதில் கொடுமை... கருணாநிதி முதல் முறையாக முதல்வரான போது, 'எம்.எல்.ஏ-க்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது சொத்துக் கணக்குகளை சட்டசபைக்கு அளிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தை 27.8.1969-ல் நிறைவேற்றினார். ஜெயலலிதாவுக்கோ வருமான வரித் துறையே தகவல் தர மறுத்துவிட்டது. விஜயகாந்த்துக்கு 'தகவல் அறியும் சட்டத்தில் வருமான வரித் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது’ என்று சொல்லி நிராகரித்தனர். ஸ்டாலின் கணக்குகளுக்கும் பதில் தர மறுத்துவிட்டனர்.
ஆ.ராசா, அவர் மனைவி பரமேஸ்வரி மற்றும் கூட்டுக் குடும்பம் சார்பில் மூன்று பான் கார்டுகள் வைத்திருக்கிறார்கள். இந்த கார்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரங்களைக் கேட்டபோது, அவர்களின் ஆடிட்டர் முத்துகுமாரசாமி மூலம் 'தரக் கூடாது’ என்று சொல்லிவிட்டார்கள்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த யசோதா இரண்டு பான் கார்டு நம்பர்களைப் பயன்படுத்தி இருக்கிறாராம். 2006 தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, வேட்பு மனுவோடு அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில் கொடுத்த பான் கார்டு நம்பரை வைத்து, யசோதாவின் வருமான வரிக் கணக்கைக் கேட்டார் கோபால கிருஷ்ணன். அதற்கு, 'அது அவருடைய பான் நம்பர் இல்லை’ என்று பதில் வந்தது. அதன் பிறகு 2011 தேர்தலில் காட்டிய சொத்துக் கணக்கில் இருந்த வேறொரு பான் கார்டு நம்பரை அனுப்பி, விளக்கம் கேட்டபோது, அதற்கு வருமான வரித் துறை இன்று வரை பதில் அனுப்பவில்லை.
அரசியல்வாதிகள் இருக்கட்டும்... அரசியல் கட்சிகளின் நிலையும் இதே கதைதான். காங்கிரஸ் கட்சியின் வருமான வரிக் கணக்குகள் மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, 2010-11 ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு 467.57 கோடி நன்கொடை வந்ததாக கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை 2006-​2007, 2009-2010 ஆகிய இரண்டு வருடங்களுக்கு வருமான வரிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்திருப்பதாக பதில் அனுப்பியது வருமான வரித் துறை. இதிலும் சில முரண்பாடுகள். 2008-ம் ஆண்டு படப்பையில் இரண்டு இடங்களை வாங்கிய விவரங்கள் வேட்பு மனுவோடு தாக்கல் செய்த சொத்து விவரத்தில் உள்ளது. ஆனால், இந்த சொத்து வாங்கப்பட்ட காலத்தில் அவர் ஐ.டி. ரிட்டர்ன்ஸே தாக்கல் செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அனுப்பப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த சொத்துகளுக்கு வருமான வரி கட்டப்பட்டதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஜெய்ஸ்ரீ ஐ.பி.எஸ்., வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள் பிருந்தா ஆகியோர் மட்டும்தான் கணக்குவிவரங்களைக் கொடுத்​தவர்கள்.
கோபால கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
''வரி ஏய்ப்பை வருமான வரித் துறையே ஊக்குவிப்பதுபோல இருக்​கிறது. சமூகத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் ஆகியோரின் சொத்துக் கணக்குகள் வெளிப்​படையாக இருக்க வேண்டும் என்பது நீதி. அந்த அடிப்படையில் இவர்களின் வருமான வரிக் கணக்குகளை, வருமான வரித் துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சொத்துக் கணக்குகளை தகவல் அறியும் சட்டத்தில் கேட்க முடியாது என்ற நிலை இருந்தது. இதனை எதிர்த்து வழக்குப் போட்டபோது 'அவர்களும் சொத்துக் கணக்கைக் கொடுக்க வேண்டும்’ என்று சமீபத்தில் உத்தரவு போட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதனால், வருமான வரி கணக்குகளையும் வெளியிடுவதில் தவறு இல்லை. அப்போதுதான் மறைக்கப்படும் லஞ்ச ஊழல் பணம், சொத்துகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும். அரசுக்கும் வருவாய்; மக்களுக்கும் பயன்!'' என்றார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நிலைமை நாளுக்கு நாள் கவலைக்​கிடமாகப் போய்க் கொண்டு இருக்கிறது!
- எம்.பரக்கத் அலி
சட்டம் என்ன சொல்கிறது?
சென்னையின் முன்னணி ஆடிட்டரும் வழக்கறிஞருமான கே.வைத்தீஸ்​வரன், ''ஒருவரின் வருமான வரிக் கணக்கு தாக்கல் விவரம் எதற்காக கேட்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதை கொடுப்பதா? வேண்டாமா? என்று தகவல் அறியும் சட்டம் முடிவு செய்கிறது. அது பொதுநலன் கருதி கேட்கப்படுகிறதா? அல்லது தனிப்பட்ட நலனுக்காக கேட்கப்படுகிறதா? என்று பார்க்கப்படுகிறது. பொது நலன் கருதி என்றால் கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவரத்தை கொடுத்தால் நாட்டுக்கோ அல்லது பொது நலனுக்கோ கேடு ஏற்படும் என்றால் மறுக்கப்படும்.
வருமான வரித் துறை அதிகாரிகள், தகவல் அறியும் சட்டப்படி நியாயமான விஷயத்துக்கு தகவல் தர மறுக்கும்பட்சத்தில் மத்திய தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பித்து வரி கணக்கு தாக்கல் விவரத்தை பெற முடியும்''
- சி.சரவணன்

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment