Sunday, July 17, 2011

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா? - மீண்டும் மும்பை அதிர்ச்சி

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?

மீண்டும் மும்பை அதிர்ச்சி
ரியாக 31 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் மும்பையில் குண்டு வெடிப்புகள்!
93-ம் ஆண்டு மும்பையில் குண்டு வெடிப்புக் கலாசாரத்தை துவக்கிவைத்தது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அன்று தொடங்கி, 2008, நவம்பர் தாக்குதல் வரை ஐ.எஸ்.ஐ-யின் அட்டூழியம் நேரடியாகவே இருந்தது. அந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் குண்டு வெடிப்புகள்!
கடந்த 13-ம் தேதி மாலை 6.50 முதல் 7.04 மணிக்குள் மும்பையின் ஜவேரி பஜார், தாதர், ஓப்ரா ஹவுஸ் ஆகிய முக்கிய இடங்களில் அடையாளம் காண இயலாத வகையிலான டிஃபன் பாக்ஸ், டேப் ரிக்கார்டர் மற்றும் கார்களில் பொருத்தப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்து, 18 பேர் உயிர் இழந்தார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைய, 23 பேரின் நிலைமை கவலைக்கிடம்.
ஜவேரி பஜார், மும்பையின் மிகப் பெரிய தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதி. ஓப்ரா ஹவுஸ், இந்தியாவின் மிகப் பெரிய வைர வியாபார ஸ்தலம். தாதர் மார்க்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் வியாபாரம் நடக்கும் இடம். இந்த இடங்களில் நாச வேலையை செய்து இருப்பதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் முயன்று இருக்கின்றன. இதற்குக் காரணம் இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே மும்பையை மட்டுமே தீவிரவாதிகள் குறிவைக்கக் காரணம், அதன் பொருளாதாரம். இந்தியாவின் அரசியல் தலைநகரம் டெல்லி என்றால், பொருளாதாரத் தலைநகரம் மும்பை. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், துறைமுகம், தொழிற்​சாலைகள் எனப் பொருளாதார வளர்ச்சியில், கணிசமான பங்கு மும்பைக்கு உண்டு. இதனால்தான், மும்பையில் க்ரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முனுசாமி என்கிற வரதராஜ முதலியார், தாவூத் இப்ராஹிம், டைகர் மேமோன் போன்ற நிழல் உலக தாதாக்கள் உருவானார்கள். தவிர, கராச்சியில் இருந்து கடல் வழியே மும்பை குறுகிய தொலைவுதான். அதனால்தான், அஜ்மல் கசாப் அண்ட் கோ மும்பை கடல் வழியே கரை ஏறியது!
முதல் முறையாக ஐ.எஸ்.ஐ. அமைப்பு 93-ம் ஆண்டு மார்ச் 12-ல் மும்பையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிரூபணமானது. அப்போது, தான் உண்டு... தனது கடத்தல் தொழில் உண்டு என இருந்த தாவூத் இப்ராஹிமை, அவரது கடத்தல் சரக்கு ஒன்றை கராச்சியில் மடக்கிவைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ. அவரிடம் பேரம் பேசியது. அதன்படி, டைகர் மேமோன் மூலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 275 பேர் இறந்தார்கள்.
அதன் பின்பும் மும்பையை விடவில்லை ஐ.எஸ்.ஐ. கடந்த 13-ம் தேதி தாக்குதலோடு சேர்த்து, இதுவரை மொத்தம் எட்டு தாக்குதல்கள். சுமார் 750 பேர் பலியானார்கள். 2008 நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நமக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு... கசாப். மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவனது பிறந்த நாள் அன்று, இந்த தாக்குதல் நடந்து இருப்பது, தீவிரவாத இயக்கம் அவனுக்குக் கொடுத்த பரிசாகவே கருதப்படுகிறது.
அமோனியம் நைட்ரேட் மருந்தைக்கொண்டு டிரிக்கரை அழுத்தி அல்லது டைமர் பொருத்திக் குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்கள். இந்த வகை குண்டுகளை கடந்த காலங்களில் அதிக அளவு பயன்படுத்தியது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு. உத்தரப் பிரதேசத்தைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் சிமி அமைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்ப காலத்தில் சிமி அமைப்பில் இருந்து பின்னர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு வந்தவன், அப்துல் சுபான் க்யூரேஸி என்கிற தவ்ஹீர். டெல்லி, வாரணாசி, அகமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இவனே, இந்த குண்டு வெடிப்புக்கும் மாஸ்டர் மைண்டாக இருக்கலாம் என்று கருதுகிறது உளவுத் துறை.
பின்லேடன் கொலைக்குப் பின், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்குவோம் என்று அல்கொய்தா பகிரங்க மிரட்டல் விடுத்தது. சில மாதங்களிலேயே கராச்சியின் கப்பல் படைத் தளத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது. அதனால், அல்கொய்தாவுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் உளவுத் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தத் தாக்குதலை, 'தீவிரவாத அமைப்புகளின் கூட்டு முயற்சி’ என்று சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பீதியிலேயே கழிகிறது மும்பை மக்களின் வாழ்க்கை. மும்பை காவல் துறை, 'வீட்டுக்குள் இருந்து வெளியே வர வேண்டாம்’ என்று மக்களை எச்சரிக்கிறது.
எத்தனை காலம்தான் வீட்டுக்குள் அடைபட்டுக்​கிடப்பது?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: லைவ் போட்டோஸ்

Source - Vikatan Magazine

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை! - வந்தாச்சு ரஜினி

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை!

வந்தாச்சு ரஜினி
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையில் ஒன்றரை மாதங்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
 கடந்த 13-ம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினி வந்து இறங்க... மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் தேனீக் களைப்போல் மொய்த்தனர். 'சாமியே ரஜினியே... கடவுளே ரஜினியே...’ என்று ரசிகர்கள் எழுப்பிய 'ரஜினி கோஷம்’ விமான சத்தத்தை மீறி ஒலித்தது. 'எந்த வழியில் ரஜினி வெளியே வருவார்’ என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடாமல் இருக்கவே, ரசிகர்கள் தவித்துக்கொண்டு அலை பாய்ந்தனர். கடைசியில், வி.வி.ஐ.பி-க்களுக்கான 6-ம் எண் வாசல் வழியாகத்தான் ரஜினி வருகிறார் என்று தெரிய வந்ததும், அங்கே எல்லோரும் குவிந்தனர். ரஜினி வரும் வழியில் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டது.
'விமான நிலையத்தில் சில அடிகள் நடப்பார். சுற்றி உள்ள மீடியா மற்றும் ரசிகர்களுக்கு கை அசைப்பார். பின்னர் தன் இன்னோவா காரில் புறப்படுவார்’ என்று பலர் கற்பனைக் குதிரையை ஓடவிட்டனர். வேறு சிலர், 'ரஜினி வீல் சேரில் வருவாரோ... ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அவர் போயஸ் கார்டன் போய்விடுவாரோ?’ என்று சந்தேகத்தை எழுப்பினர்.
சரியாக இரவு 10-மணிக்கு 6-ம் எண் கேட் வழியாக அனைவரின் அனுமானத்தையும் தவிடுபொடியாக்கி, 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’ ஸ்டைலில் துள்ளிக் குதித்து வந்தார் ரஜினி. ரசிகர்கள் கூட்டத்தில் அவரது இன்னோவா கார் மிதந்தது. இரவு 10-மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் பெரும் திரளாகக் கூடியதைப் பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர்.  ஆனாலும் ரஜினியை வரவேற்க ஒரு சினிமா புள்ளிகூட வரவில்லை. நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எட்டிப் பார்க்கவில்லை.
மீனம்பாக்கத்தில் மேடை அமைத்து மீடியா வுக்குப் பேட்டியும், ரசிகர்களுக்கு நன்றியும் சொல்லும்விதமாக முதலில் திட்டமாம்.
''உங்களுக்குக் கிட்னி கோளாறா?'' என்பது போன்ற கேள்விகளால் ரஜினி மனசு சங்கப் படும் என்பதால், அந்தத் திட்டத்தைத் தவிர்த்து விட்டனர். போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை தங்கவைத்தால், குசலம் விசாரிக்க அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வருவார்கள். அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில், ஆசிரியர் கள் பிரச்னை, அரசு ஊழியர்கள் போராட்டம் என்று பல பிரச்னைகள் தலை விரித்து ஆடின. ஆட்சியும் தடுமாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலையில் திடீரென கோளாறு ஏற்பட... உடனே, எம்.ஜி.ஆர் மீது இருந்த சின்னச் சின்னக் கோபதாபங்களை மறந்துவிட்டு, தமிழ்நாடே அலகு குத்தி, பால் குடம் எடுத்து அவர் நலம் பெற வேண்டும் என இறைஞ்சியது.
அதுபோலவே, கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ் சினிமாவே கருணாநிதி குடும்பத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ரஜினியோ, கருணாநிதியின் குடும்பக் கல்யாணத்துக்காக மதுரைக்குப் போனார், அந்தக் கட்சியின் விழாக்களிலும் கலந்துகொண்டார். இதனால் சினிமாக்காரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியிலும் ரஜினி மீது சின்னக் கசப்பு இருந்தது. ஆனால், ரஜினி எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ... அடுத்த நிமிடமே அத்தனை கசப்பும் காணாமல் போக... தமிழ் நாட்டில் மசூதி, சர்ச், கோயில் என எல்லா இடங்களிலும் மனமுருகப் பிரார்த்தனைகள் செய்தனர்.
இதோ, வெள்ளித் தாடியோடு மீண்டும் துள்ளி வந்துவிட்டார் ரஜினி!
- எம். குணா
படம்: வி.செந்தில்குமார்

Source - Vikatan Magazine

யோகா பயிற்சி முகாம் - முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே...

முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி கல்வி இயக்குனரின் உத்தவுப்படி, மாணவர்களுக்கு அறிவுத்திறன், ஞாபகசக்தி, பண்பு பயிற்சி ஏற்பட, வேதாந்திரி மகரிஷி மனவளக்கலை இயக்கத்தின் சார்பில் நடந்த முகாமிற்கு தலைமை
ஆசிரியர் ஜே.ஜமுனா தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் துவக்கினார். பயிற்சி பயிற்றுனர்கள் ரங்கநாயகி, நாகஜோதி, சுமதி, சுப்பிரமணியம் ஆகியோர் ஐநூறு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி வகுப்பு பள்ளியில் நடைபெறும்.

Source - Vikatan Magazine

ஜக்கி வாசுதேவ் - பேசுகிறார்

ஓங்கி உயர்ந்த மலைக் குன்றுகள். அதை, எட்டிப் பிடிக்க முயலும் பாக்கு மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?
ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.

இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு?
அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.

அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?
ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?

அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...
போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.

ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா?
நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.
அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?

ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.
என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?

சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...
அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.
பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!

பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்?
அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.
எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம்.

 கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா?
அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!

ஆர்.ரங்கராஜ் பாண்டே-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611

Wednesday, July 13, 2011

உதயமானது தெற்கு சூடான்

உதயமானது தெற்கு சூடான்

''இன்று முதல் நாம் சுதந்திர மனிதர்கள்..!''
நைல் நதி ஓரத்தில் ஒரு நாடு புதிதாகப் பூத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையில் 193-வது கொடியாக தெற்கு சூடான் தேசத்தின் கொடி பறக்கிறது. கொசாவா, எரித்திரியா, கிழக்கு தீமோர், சொமாலிலான்ட் வரிசையில் புதிய வரவு, தெற்கு சூடான்!
கடந்த 9-ம் தேதி அந்த நாட்டின் தலைநகரான ஜூபாவில் ஜோன் காரங் நினைவகத்தின் முன்னால் சூடானியர்கள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள். தெற்கு சூடானியர்​களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த காரங், சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன சோகம் சூடானியர்களுக்கு இன்னும் தாங்க முடியாத வேதனை!
வடக்கு சூடான் நாட்டிடம் இருந்து தெற்கு சூடான் மக்களுக்கு விடுதலையை வாங்கித் தர வேண்டும் என்பதற்காக காரங் முதலில் போராடவில்லை. தெற்கு சூடானியர்களை ஒடுக்கும் படையில் மிக முக்கியமானவராக இருந்த காரங்... பின்னர் மனம் மாறி துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்த வரலாறு அவர்களுடையது.
வடக்கு சூடானில் அரபு முஸ்லிம்​களும் தெற்கு சூடானில் பழங்கு​டியினரும் அதிகம். பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவது உலகத்தின் எல்லா நாடுகளிலும் நடப்பதுதான். பழங்குடி சமூகத்தினர் அதிகம் வாழும் டிங்கா என்ற சின்ன கிராமத்தில்தான் காரங் பிறந்தார். இந்த சமூகத்தினருக்குப் படிக்கப் பள்ளிகள் கிடையாது. யாரும் படிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த ஏற்பாடு. ஆனால், அதை மீறி கிறிஸ்துவ மிஷன் பள்ளிக்கூடம் ஒன்று இவரது பகுதியில் திறக்கப்பட்டது. அதில் படித்த காரங், உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தையும் விவசாயம்பற்றிய கல்வியையும் கற்றார். இவை இரண்டுக்கும் மத்தியில் ராணுவத் தந்திரங்கள், ஆயுதங்களின் செயல்பாடுகளையும் தெரிந்துகொண்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய காரங், தான் கற்ற பொருளாதாரம் மற்றும் விவசாயம் குறித்த வேலைக்குப் போகாமல், சூடான் ராணுவத்தில் சேர்ந்தார். திறமையின் அடிப்படையில், படைத் துறையின் அதிகாரி பதவி கிடைத்தது.
1983 காலகட்டத்தில்தான் தெற்கு சூடானில் போராட்டக்காரர்கள் மெள்ள எழுந்து ஆயுதங்களைப் பிடித்தார்கள். அன்றும் இன்றும் வடக்கு சூடானின் அதிபராக இருக்கும் ஓமர் அல் பஷீர், இந்தப் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பினார். ஓமரின் கெட்ட நேரம் அன்றுதான் தொடங்கியது. இந்த ராணுவ அணிக்கு, ஜோன் காரங்தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் ஓமர் அறிவித்தார். 'சூடான் விடுதலை அமைப்பு’ என்ற சிறு குழுக்களைவைத்து சில நூறு பேர் அப்போது சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலம் அது. அதை அடக்குவதற்கு பெரும் படையுடன் காரங் வந்தார். அதற்காகவே சூடான் விடுதலை அமைப்பு குறித்த அத்தனை தகவல்களையும் காரங் திரட்டினார். 'இவர்கள் விடுதலை கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?’ - திடீரென்று ஒரு நாள் காரங்குக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது. யாரை ஒடுக்குவதற்காகத் துப்பாக்கியைத் தூக்கி வந்தாரோ... அதே சூடான் விடுதலை அமைப்புக்கு, ஆதரவு தரத் தொடங்கினார் காரங். இவரோடு வந்த பலரும் இவருடன் இணைந்துகொள்ள, மற்ற ராணுவ வீரர்கள் வந்த பாதையிலேயே திரும்ப ஓடினார்கள். 'சூடான் மக்கள் விடுதலை ராணுவம்’ என்ற அமைப்பு காரங் தலைமையில் அப்போதுதான் உருவானது.
கெரில்லா போர்த் தந்திரங்களில் தேர்ந்த காரங் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவரது அமைப்பை இரண்டாகப் பிளக்கும் காரியங்கள் நடந்தன. அதில் ஈடுபட்ட துரோகிகளின் பல்வேறு தாக்குதல்களில் இருந்தும் காரங் தப்பினார்.
''அந்தத் துரோகியைக் கொன்றுவிடுங்கள்!'' என்று ஓமர் உத்தரவிட்டார். தெற்கு சூடானைக் கைப்பற்றுவதற்கான புனிதப் போர் என்று இதனை ஓமர் சொன்னார். ஆனால், காரங் வசம் இருந்த நிலங்களை ஓமர் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. அப்பாவிகளைக் கொல்வது அரசாங்கங்களின் ராஜ தந்திரங்களில் ஒன்று அல்லவா? இரண்டு நாடுகளின் எல்லையில் வாழ்ந்த பழங்குடியினரை கண்ணை மூடிக்கொண்டு கொல்ல ஆரம்பித்தது வடக்கு சூடான் ராணுவம். சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஓமர் மீது இன்று குற்றச்சாட்டு கிளம்பி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அவர் நிறுத்தப்பட்டு உள்ளார். மிக மிகக் கால தாமதமாகத்தான் இந்தக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அதற்கு மூன்று காரணங்கள். வடக்கு சூடானின் அதிபர் ஓமர், சீனாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இரண்டு, தெற்கு சூடானின் பழங்குடியினர் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடுகொண்டவர்களாக மாறிக்கொண்டு இருந்தார்கள். மூன்றாவது, தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் வளம். புதிய தேசத்தை உருவாக்கினால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எண்ணெய் வளத்தை தன்னுடைய பக்கம் திருப்பலாம் என்று அமெரிக்கா கணக்குப் போட்டது. ஓமரைப் போர்க் குற்றவாளியாக ஆக்கியதும், தெற்கு சூடான் விடுதலை ராணுவத்தின் தலைவர் காரங்குடன் ஓமரைப் பேச்சுவார்த்தை மேஜையில் உட்காரவைத்ததும் அடுத்தடுத்து நடந்த அதிரடித் திருப்பங்கள்.
சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை ராணுவத்துக்குமான ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்னிலையில் 2005-ம் ஆண்டு நடந்தது. ஓமரும் உட்கார்ந்து இருந்தார். காரங் எதிர் முனையில் இருந்தார். ''தெற்கு சூடானில் வாழும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ... அதற்கு இரண்டு தரப்புமே கட்டுப்பட வேண்டும். 'ஒன்றுபட்ட சூடானாக வாழ்வதா... பிரிந்து சென்று புதிய தேசத்தை அமைப்பதா?’ என்பதை அந்த மக்கள் முடிவெடுக்கட்டும்!'' என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த தேர்தல் 2011-ம் ஆண்டு நடக்கட்டும் என்று அறிவித்தார்கள்.
இடைக்காலத் தெற்கு சூடான் அரசின் துணை அரசுத் தலைவராக காரங் முடிசூட்டிக்கொண்டார். இயற்கையின் சதி காரங் விஷயத்திலும் நடந்தது. ஆம், பதவி ஏற்றுக்கொண்ட மூன்று வாரங்களில் இவர் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. சம்பவ இடத்திலேயே காரங் இறந்துபோனார். மிக மோசமான வானிலைதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. காரங் மரணம்,  சூடான் மக்களை அதிகமாகப் பாதித்தது. இவரது மரணத்தைக் காரணம் காட்டி, மீண்டும் வடக்கு சூடான் தனது அதிகாரத்தை அதிகப்படுத்துமோ என்று மக்கள் பயந்தார்கள். உலக நாடுகளின் பார்வை இருந்ததால், அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் நாள் வாக்கெடுப்பு நடந்தது. 'லட்சக்கணக்கான மக்கள் தம் வாழ்க்கையின் விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். 'நாம் இந்த நாட்டுடன் ஒன்றாக இருக்கக் கூடாது. உடனடியாகப் பிரிந்தாக வேண்டும்’ என்று 37.92 லட்சம் பேர் வாக்களித்தார்கள். பிரிவினை வேண்டாம் என்று 44 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள். அதாவது 98 சதவிகிதம் பேர் தெற்கு சூடான் உருவாக உத்தரவிட்டார்கள்.
காரங்குடன் இருந்து போராடிய சல்வா கிர், அடுத்த தலைமைப் பொறுப்புக்கு வந்தார். காரங் சமாதியில் நின்று சல்வா கிர், ''இன்று முதல் நாம் சுதந்திர மனிதனாக மாறியுள்ளோம்!'' என்று கர்ஜித்தார்.
ஜூலை 9-ம் தேதி புதிய தேசத்தின் பிறப்புக்கான தேதி குறிக்கப்பட்டது. தேவாயங்களில் மணி ஒலிக்க... பொது இடங்களில் மெழுகுவத்தி ஏற்ற... ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன், தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், வடக்கு சூடான் அதிபர் ஓமர் நிற்க, புதிய கொடி பறந்தது. இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி அன்சாரி கலந்துகொண்டார். தெற்கு சூடானில் முதன் முதலாகத் தூதரகம் திறந்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு.
இதில் இன்னொரு திருப்பம்... இந்த விழாவுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெற்கு சூடான் அழைத்தது. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவரான உருத்திரகுமாரன், 'எங்களை அழைத்திருப்பது இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரம்!’ என்று அறிவித்துள்ளார். தெற்கு சூடான் உதயமானது, நாடு கடந்து வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்து உள்ளது.
தெற்கு சூடானைவிட தமிழ் ஈழம் தனியாகப் பிரிவதற்கு பல்லாயிரம் காரணங்கள் உண்டு. சூடானுக்காக அமெரிக்கா துடிப்பதற்கு, அங்கே எண்ணெய் வளம் இருக்கிறது; தமிழ் ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லையே!
- ப.திருமாவேலன்