அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?
மீண்டும் மும்பை அதிர்ச்சி
93-ம் ஆண்டு மும்பையில் குண்டு வெடிப்புக் கலாசாரத்தை துவக்கிவைத்தது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அன்று தொடங்கி, 2008, நவம்பர் தாக்குதல் வரை ஐ.எஸ்.ஐ-யின் அட்டூழியம் நேரடியாகவே இருந்தது. அந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் குண்டு வெடிப்புகள்!
கடந்த 13-ம் தேதி மாலை 6.50 முதல் 7.04 மணிக்குள் மும்பையின் ஜவேரி பஜார், தாதர், ஓப்ரா ஹவுஸ் ஆகிய முக்கிய இடங்களில் அடையாளம் காண இயலாத வகையிலான டிஃபன் பாக்ஸ், டேப் ரிக்கார்டர் மற்றும் கார்களில் பொருத்தப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்து, 18 பேர் உயிர் இழந்தார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைய, 23 பேரின் நிலைமை கவலைக்கிடம்.

ஆரம்பத்தில் இருந்தே மும்பையை மட்டுமே தீவிரவாதிகள் குறிவைக்கக் காரணம், அதன் பொருளாதாரம். இந்தியாவின் அரசியல் தலைநகரம் டெல்லி என்றால், பொருளாதாரத் தலைநகரம் மும்பை. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், துறைமுகம், தொழிற்சாலைகள் எனப் பொருளாதார வளர்ச்சியில், கணிசமான பங்கு மும்பைக்கு உண்டு. இதனால்தான், மும்பையில் க்ரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முனுசாமி என்கிற வரதராஜ முதலியார், தாவூத் இப்ராஹிம், டைகர் மேமோன் போன்ற நிழல் உலக தாதாக்கள் உருவானார்கள். தவிர, கராச்சியில் இருந்து கடல் வழியே மும்பை குறுகிய தொலைவுதான். அதனால்தான், அஜ்மல் கசாப் அண்ட் கோ மும்பை கடல் வழியே கரை ஏறியது!

அதன் பின்பும் மும்பையை விடவில்லை ஐ.எஸ்.ஐ. கடந்த 13-ம் தேதி தாக்குதலோடு சேர்த்து, இதுவரை மொத்தம் எட்டு தாக்குதல்கள். சுமார் 750 பேர் பலியானார்கள். 2008 நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நமக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு... கசாப். மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவனது பிறந்த நாள் அன்று, இந்த தாக்குதல் நடந்து இருப்பது, தீவிரவாத இயக்கம் அவனுக்குக் கொடுத்த பரிசாகவே கருதப்படுகிறது.

பின்லேடன் கொலைக்குப் பின், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்குவோம் என்று அல்கொய்தா பகிரங்க மிரட்டல் விடுத்தது. சில மாதங்களிலேயே கராச்சியின் கப்பல் படைத் தளத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது. அதனால், அல்கொய்தாவுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் உளவுத் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தத் தாக்குதலை, 'தீவிரவாத அமைப்புகளின் கூட்டு முயற்சி’ என்று சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பீதியிலேயே கழிகிறது மும்பை மக்களின் வாழ்க்கை. மும்பை காவல் துறை, 'வீட்டுக்குள் இருந்து வெளியே வர வேண்டாம்’ என்று மக்களை எச்சரிக்கிறது.
எத்தனை காலம்தான் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடப்பது?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: லைவ் போட்டோஸ்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment