Sunday, August 14, 2011

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''

ரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் பேசுவது... ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையைத்தான்! இந்த நிமிடத்தில், 24 காரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 26,000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அது
27,000-க்கு மேல் அதிகரிக்கும்என்பது நிபுணர்களின் கணிப்பு. 'ஏன் இந்த உயர்வு?’ என அறிந்து கொள்ள, சென்னை யில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் பாபி எஸ்.ஸ்ரீனிவாசனை சந்தித்தோம். ''தங்கம் விலை உயர்வுக்குப் பல காரணங் கள் இருக்கின்றன. இருந்தாலும், சிலவற் றைச் சொல்கிறேன்...'' என்று ஆரம்பித் தார்.
கையிருப்பு குறைவு!
''உலகத்தில் தங்கம் வெட்டி எடுப் பது குறைந்துகொண்டு வருவதும், பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள். பூமிக்குள் இருந்து இதுவரை சுமார் 1,70,000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) அமெரிக்க டாலர். ஆனால், உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்ஸிகள், நிறுவனப் பங்குகள், சேமிப்புகள், டெபாசிட்கள் போன்றவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் டாலர். இது தங்கத்தின் மதிப்பைவிட சுமார் 8.5 மடங்கு அதிகம். அதாவது, உலக அளவில் மக்களி டம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது என்பதால், அவர்கள் என்ன விலை என்றாலும் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள். இதனால்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை தங்கமாகப் பதுக்குகிறார்கள். இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் 1,500 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
உலகம் முழுக்கத் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 3,550 டன்னாக இருக்கிறது. ஆனால், நமக்குக் கிடைப்பது 2,450 டன்தான். அதாவது, பற்றாக்குறை சுமார் 1,100 டன். மேலும், உலக அளவில் பூமிக்கு அடியில் வெறும் 22,000 டன் தங்கம்தான் மொத்தமே இருப்பதாகக் கணக் கிடப்பட்டு உள்ளது. தங்கத்தை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், தங்கத்தை எடுப்பதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதன் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது.
மற்ற முதலீடுகளில் லாபம் இல்லை!
உலக அளவில் பங்குச் சந்தை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்த வருமானம் மைனஸ் 8 சதவிகிதம். அதே நேரத்தில், இதே காலத்தில் தங்கம் கொடுத்திருக்கும் வருமானம் 42 சதவிகிதம்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல வங்கிகள் அண்மை ஆண்டுகளில் மஞ்சள் கடுதாசி (திவால்) கொடுத்து வருகின் றன. இதனால், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தவர்கள் கதி அதோ கதிதான். விளைவு, அசலுக்கு மோசமில்லாமல் பாதுகாப்புக் கருதி ஃபிக்ஸட் டெபாசிட்களில் செய்வதை தவிர்த்துவிட்டு, தங் கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தங்கமாக மாற்றுகின்றன.
டாலர் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்கா டாலரின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது, அமெரிக்க டாலராக வைத்திருப்பதற்கு பதில் தங்கமாக வாங்கி வைத்துவிட்டால், அதன் விலை எப்படியும் உயரும். தேவை ஏற்படும்போது தங்கத்தை விற்று செலவு செய்துகொள்ளலாம் என்கிற மனநிலை அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பரவிவிட்டது. இது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
முதலீட்டுக் கோணம்..!
ஒரு காலத்தில் அணிந்து அழகு பார்க்க மட்டுமே தங்கத்தை மக்கள் பயன் படுத்தினார்கள். இப்போது அதை லாபகரமான முதலீ டாகப் பார்க்கிறார்கள். சாதாரண மக்கள் பவுன் கணக்கில் வாங்கினால், கோடீஸ்வரர்கள் கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். நாடுகளோ டன் கணக்கில் வாங்கிக் குவிக்கின்றன. அண்மையில்கூட, தென் கொரியாவின் மத்திய வங்கி (நம் ஊர் ரிசர்வ் பேங்க் போல்) 25,000 கிலோ தங்கத்தை வாங்கி இருக் கிறது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடுசெய்வது அதிகரித்துள்ளது.
தொழில் துறை பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் தொழில் துறை குறிப்பாக செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருத்துவத் துறையில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த உபயோகம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், விலை தொடர்ந்து அதிகரித்து அதிக லாபகரமான முதலீட்டு வாய்ப்பாக இருக்கும். சில ஆயிரம் ரூபாய் இருந்தால்கூட தங்கம் வாங்க முடியும் என்பதால், அதனை மக்கள் பெரிதும் விரும்பத் தொடங்கி விட்டனர். மேலும், இதனை அவசரத்துக்கு அடமானம் வைத்து கடன் பெறுவதும் சுலபம். விற்றுப் பணமாக்குவதும் சுலபம் என்பதும் அதனை வாங்குவதற்கான முக்கியக் காரணம்!'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.
- சி.சரவணன், படம்: எம்.உசேன்

Source - Vikatan Magazine

ரத்தம் தெறிக்கும் மதுரை!

ரத்தம் தெறிக்கும் மதுரை!

யாருக்காக கொல்லப்பட்டான் பாண்டியராஜன்?
நில மோசடி வழக்குகளில் சிக்கி, 'மிஸ்டர் குண்டாஸ்’ ஆகிவிட்ட பொட்டு சுரேஷ் மீது இப்போது கொ​லை வழக்கும் பாய்ந்து விட்டது! 'ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை பொட்டு சொல்லித்தான் போட்டுத் தள்ளினோம்’ என்று எஸ்ஸார் கோபி வாக்குமூலம் கொடுத்ததால், அந்த வழக்கில் பொட்டு சுரேஷை முதல் குற்றவாளியாக்கி, ரிமாண்ட் செய்திருக்கிறது போலீஸ்!
பாண்டியராஜன் கொலை வழக்கில் கோபியை விசாரிக்க 10 நாள் காவலில் எடுக்க மனு போட்டது போலீஸ். ஒரு நாள் மட்டும் கஸ்டடிக்கு அனுமதித்தது நீதிமன்றம். ''அந்த ஒரு நாள்லயே கோபி ஏகப்பட்டதைச் சொல்லிட்டான்...'' என்கிறார்கள், விசாரணை டீமில் இருந்த போலீஸ் அதிகாரிகள் சிலர்.
''எஸ்ஸார் கோபியின் சின்னம்மா மகள் தயாளு​வைத்​தான் 'அட்டாக்’ பாண்டி கல்யாணம் கட்டியி​ருக்கார். தா.கி. கொலை வழக்கில் எஸ்ஸார் உள்ளே இருந்தப்ப, அழகிரி வீட்டில் பாதுகாப்பைக் கவனித்த  'அட்டாக்’ பாண்டி, எஸ்ஸார் தரப்பினருக்கு எதிரான விஷயங்களை அழகிரி குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்தார். இதுவும் இன்னும் சில விஷயங்களுமாகச் சேர்ந்து அட்டாக்குக்கும் எஸ்ஸாருக்கும் இடையில் பகை ஏற்பட்டது.
இந்த நிலையில், 'தினகரன்’ பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தனக்கு பதவி மற்றும் கான்ட்ராக்ட்கள் கேட்டு 'பொட்டு’விடமே முஷ்டி மடக்கினார் அட்டாக். மிரண்டு போன பொட்டு, எஸ்ஸார் கோபி மூலமாக 'அட்டாக்’கைத் தட்டி வைக்க நினைத்தார். இதைக் கேள்விப்பட்டு  கடுப்பான அட்டாக், தன் உறவினரான ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை அனுப்பி, பொட்டுவை மிரட்டியிருக்கார். பொட்டு வீட்ல பெட்ரோல் குண்டு வீசுனதும் பாண்டி​யராஜன்தான்னு சொல்றாங்க.
அப்ப பொட்டு சுரேஷ், அதிகாரம் பொருந்திய மனிதராக இருந்ததால்  தனக்கு நெருக்கமான உளவு அதிகாரியின் மூலமாக பாண்டி​யராஜனை தூக்கிட்டுப்போய் புதூரில் ரெண்டு நாள் அடைத்து வைத்தார்கள். அடிக்கவும் செய்தார்கள். அப்படியும் விடாம, 'இவன் கதைய முடிச்சாத்தான் அட்டாக் பயப்படுவான்’ன்னு கோபிக்கு சிக்னல் குடுத்துருக்காங்க என்பதாக எங்கள் விசாரணை தகவல் சொல்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த கோபி கோஷ்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்தல் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்த விவகாரத்தை வெச்சு, பாண்டியராஜனை அடிச்சு ரோட்ல போட்டு, காரை ஏத்திக் கொன்னுருக்கு. விஷயம் தெரிஞ்சு, எல்லாரையும் அப்பவே மதுரை பெரிய இடத்துல சத்தம் போட்டிருக்காங்க. அப்ப, 'எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்’னு சொல்லி தைரியம் கொடுத்த பொட்டு, அந்தக் கொலையை விபத்தா முடிச்சிருக்கார். அவனியாபுரம் இன்ஸ்பெக்டரா இருந்தவரும்  இதுக்கு உடந்தை. விசாரணையில், கோபியே இதை எல்லாம் சொன்னான். பக்காவா வீடியோ எடுத்துருக்கோம்!'' என்று போலீஸ் தரப்பு சொல்லி அதிர்ச்சியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. அவர்களே தொடர்ந்து பேசினர்...
''கோபியிடம் அழகிரிக்கு எழுதுனதாக சொல்லப்​படும் லெட்டர் சம்பந்தமாவும் விசாரிச்சோம். பண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி, ஒரிஜினல் லெட்​டரையே எங்ககிட்ட கொடுத்துவிட்டார். 'இதை நான் சொல்லச் சொல்ல இன்னாரு எழுதுனாரு’ன்னு ஒருத்தர் பேரையும் சொன்​னார்.
'அழகிரிக்காகப் பல காரியங்களைச் செஞ்​சும், எங்களுக்கு அதுக்கான அங்கீகாரம் கிடைக்​கல. அழகிரிக்காக எதுவுமே செய்யாத பொட்டு மாதிரி ஆளுங்க கோடிகோடியா சம்பாதிச்சு, நெனச்சத சாதிக்கிறப்ப... நமக்குப் பதவி குடுக்கக்கூட அழகிரி யோசிக்கிறாரு’ங்கற வருத்தத்துலதான் அதை எழுதினேன். 'இந்த லெட்டரை வெச்சே அண்ணன்கிட்ட இல்லாததும் பொல்லாததுமா போட்டுக் குடுத்துருவான் பொட்டு’ன்னு எனக்கு நெருக்கமானவங்க சொல்லவே, லெட்டரை அழகிரிக்கு அனுப்பாம வச்சிருந்தேன். அதான் உங்க சோதனையின்போது கிடைச்சிருக்கு. அப்பவே இதைக் கிழிக்காம விட்டதுதான் தப்பாப் போச்சு’ன்னான்.
'பொட்டு சுரேஷை சாதாரணமா நெனச்சிடாதீங்க. அழகிரிகிட்ட இருந்து எங்க சொந்தக்காரங்கள எல்லாம் பிரிச்சதே அந்தாளுதான். 'என்னையும் பிரிச்சுட வேண்டாம்னு உங்க புள்ளைக்கிட்ட சொல்லுங்கம்மா’ன்னு பொட்டுவோட அம்மா காலில் விழுந்ததாலதான் மன்னனை மட்டும் அழகிரி பக்கத்துலயே விட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க கத்தி எடுத்துட்டு சுத்துவோம். ஆனா, அதை எடுக்காமலே காரியங்களை செய்வான் பொட்டு. இல்லாட்டி, இதுவரைக்கும் பிரச்னையே வராம இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்ஸார் கோபி. பாண்டியராஜன் கொலைக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் எட்டு பேர் கை மாறி, திருச்சியில இருந்துச்சு. அதையும் கோபியோட கடிதத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சு இருக்கோம்...'' என்று முடித்தனர்.
பாண்டியராஜன் கொலை வழக்கில் கோபியின் அண்ணன் மருதுவும், திருப்பரங்குன்றம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கார்த்திகேயனும் தலைமறைவாக உள்ளனர். இதில் மருது, லீலாவதி கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று அண்ணா பிறந்தநாள் கோட்டாவில் விடுதலை ஆனவர். கொலை வழக்கில் சிக்கியிருப்பதால், அந்த நன்னடத்தை சான்றிதழை ரத்து செய்து மீண்டும் மருதுவை சிறையில் அடைப்பது குறித்தும் சட்ட ஆலோசனை நடத்தும் போலீஸ், கார்த்திகேயனைப் பற்றி இப்படிச் சொல்கிறது...
''எஸ்ஸார் பிரதர்ஸ் எது சொன்னாலும் செய்யக்கூடியவர் கார்த்திகேயன். திருமங்கலம் இடைத்​தேர்தலில் ஸீட் குடுக்கலைங்கிற ஆத்திரத்துல அழகிரிகிட்ட கடுமையா சண்டை போட்டுருக்கார் எஸ்ஸார். அதுல அப்செட் ஆன அழகிரி, 'நான்கூட சாதாரண கார்லதான் போறேன். கோபி  ஃவோக்ஸ்வேகன்ல  போறான்யா! பத்து வருஷம் முன்னாடி சாதாரண காளியம்மா மகனா இருந்தவனுக்கு இதெல்லாம் எப்படி வந்துச்சு? நெனச்சுப் பாக்காம என்னையவே மிரட்டுறான்யா’னு கார்த்திகேயன்கிட்ட வருத்தப்பட்ட அழகிரி, தன் விசுவாசிகளை 'கோபியோட சகவாசம் வெச்சுக்க வேணாம்’னு சொல்லிட்டு, கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சாரு.
இது கோபி தரப்புக்குப் பிடிக்கல. 'எங்களை மீறி நீ அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாது’ன்னு கட்டைய போட்ருக்காங்க. சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன், தன் பிள்ளைகளுக்குக் காதுகுத்து வெச்சப்ப, 'விழாவை அவனியாபுரத்துல வெச்சா, அவனுக (எஸ்ஸார் பிரதர்ஸ்) தங்களோட படங்களைப் போட்டு பெருசு பெருசா ஃபிளெக்ஸ் வெப்பாங்க. நான் வரமாட்டேன்’னு சொல்லிட்டாரு அழகிரி. அதனாலதான் தயா மகால்ல விழாவை வெச்சாரு. ஆனாலும், கோபி கூட்டத்தைப் பகைச்சிக்க முடியாம, அவங்க அண்ணன் தம்பிக நாலு பேரு படத்தையும் பத்திரிகையில போட... அதைப் பாத்துட்டு டென்ஷனான அழகிரி, அந்த ஃபங்க்ஷனுக்கே போகலையாம்!
இவ்வளவு பிரச்னைக்கு நடுவுலயும் திருப்பரங்​குன்றம் தொகுதியில நிக்கணும்கிறதுக்காக 2010-ல் கோபி அலைந்தார் . ஆனா, தொகுதியைத் திட்டம் போட்டு காங்கிரஸுக்கு ஒதுக்கிட்டாங்க. இதுக்கு கார்த்திகேயனும் பொட்டும்தான் காரணம்னு நெனச்ச கோபியோட ஆளுங்க, தேர்தல் சமயத்துல கார்த்திகேயன் வீட்ல பெட்ரோல் குண்டை வீசி டூவீலரை கொளுத்தினாங்க. 'இப்போதைக்கு ஒரு கம்ளெயின்ட் குடுத்து வெச்சிரு. அடுத்தும் நம்ம ஆட்சி தான்... அவனுகள வெச்சிக்​கிறேன்’னு அப்பவே கார்த்திகேயன்கிட்ட அழகிரி சொல்லியிருக்காரு.ஆனா, தேர்தல் முடிவுகள் ஏடாகூட​மானதால, எஸ்ஸார் கோஷ்டிதப்பிச்​சிருச்சு. இப்ப என்னடான்னா, 'கார்த்தி​கேயன்​தான் இன்ஸ்​பெக்டருக்கு 50 ஆயிரம் குடுத்து பாண்டி​யராஜன் கொலை வழக்கை சரிக்கட்​டுனாரு’ன்னு கோபி வாக்குமூலம் குடுத்துருக்கான்...'' என்றனர்.
விசாரணையின்போது, மதுரையை மையப்படுத்தி நடந்த கொலைகள், அடிதடிகள், கட்டப் பஞ்சாயத்துகள், பேரங்கள் உள்ளிட்டவை குறித்து ஒரு பெரிய பட்டியலே கொடுத்த கோபி, யாரைப் பிடித்தால் எதைக் கறக்கலாம் என்பதையும் போலீஸுக்கு ஸ்கெட்ச் போட்​டுக் கொடுத்தாராம். இதை வைத்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது போலீஸ்.
பொட்டு சுரேஷ் பாளை சிறையில் இருப்பதால், மோதலைத் தவிர்க்கத்தான் அட்டாக்​கையும் எஸ்ஸாரையும் திருச்சி ஜெயிலில் வைத்தார்களாம். இதில் வேடிக்​கை, பொட்டுவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முட்டிக்கொண்டு நின்ற எஸ்​ஸாரும் அட்டாக்கும் இப்போது  நேசமாகி விட்டார்களாம். போலீஸ் எதிர்பார்த்ததும் இதைத்தானாம்! இப்போது இருவருமே கோபத்தில் தகிப்பதால், ''உள்ளே இருப்பது​தான் பொட்டுக்கு பாதுகாப்பு'' என்று போலீஸ் தரப்பில் இருந்தே எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு இருக்கிறதாம்.
எஸ்ஸார் வாக்குமூலம் குறித்து மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கார்க்கிடம் கேட்டதற்கு, ''பொட்டு சுரேஷ் சொல்லித்தான் பாண்டியராஜனை கொன்றதாக கோபி வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதனால், பொட்டுவையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளோம். இதில் முக்கியமான மேலும் மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்காங்க. அவங்க யாருன்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. குற்றவாளிகளுக்கு ஆதரவா போலீஸார் யாராவது செயல்பட்டு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். பொட்டு பற்றி மேலும் பல அதிர்ச்சியான தகவல்களைக் கோபி சொல்லியதால், அது சம்பந்தமா விசாரிக்கிறதுக்காக கூடிய சீக்கிரமே பொட்டுவை கஸ்டடியில் எடுப்போம்!'' என்றார்.
''போலீஸார் தன்னிடம் மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக கோபி கோர்ட்டில் சொல்லி இருக்கிறாரே..?'' என்று கேட்டபோது, ''பின்னாடி தப்பிச்சிக்கலாம்கிற திட்டத்துல எல்லா குற்றவாளிகளும் சொல்றதுதான் இது! நாங்க அவனை மிரட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை!'' என்றார் எஸ்.பி.!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Source - Vikatan Magazine

சமச்சீர் சாதனையாளர்கள்!

சமச்சீர் சாதனையாளர்கள்!

மிழகக் கல்வியாளர்களின் நாற்பது ஆண்டுக் கனவு, நிறைவேறி இருக்கிறது. தடை பல கடந்து வெற்றிக்​கொடியை நாட்டி இருக் கிறது, சமச்சீர்க் கல்வித் திட்டம்!
பலரும் இதற்காக முயன்று இருந்​தாலும், 'இவர் கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சில அமைப்புகள்தான் இதற்கு முக்கியக் காரணம்! இதில், பிரின்ஸ் கஜேந்திரபாபு என்ற தனி மனிதரின் போராட்டம் முக்கியமானது. 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ எனும் அமைப்பின் மூலம், சமச்சீர்க் கல்விக்காகப் போராடி வருகிறார் இவர்.
தொலைபேசியிலும் நேரிலும் பலரின் பாராட்டு களில் நனைந்துகொண்டு இருந்த அவரை நாம் சந்தித்தபோது, ''மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பாடத் திட்டங்களில் மதவாதக் கருத்துகளைச் சேர்த்து, பிரச்னை உண்டானது. அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கை’யின்படி, புதிய பாடத்திட்டம் இருக்க​வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 10 லட்சத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) வழங்கியது. தமிழகத்திலும் 2006-ல் தொடங்கிய இந்தப் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. 2009 அக்டோபரில் 'வரைவு பொதுப் பாடத்திட்டம்’ என இணையதளத்தில் இது வெளியிடப்பட்டது. இறுதியாக, என்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டக் குழுவும் இதை ஆராய்ந்து, 'இது சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று 2009 நவம்பர் 25-ல் அறிவித்தது. அடுத்த இரண்டாவது நாளில், சமச்சீர்க் கல்விக்கான அவசரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. இதனால்தான் சமச்சீர்க் கல்வி தமிழகத்துக்கு வந்தது. கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2006-ல் இருந்து கல்வியாளர்களும் மாணவர் அமைப்பினரும் சமச்சீர்க் கல்விக்காகப் போராடினர். 2006 செப்டம்பரில் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு, 2007 ஜூலையில் அறிக்கை தந்தது. அதை ஆராய விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு... அதுவும் அறிக்கை தந்தது. ஆனால், தி.மு.க. அரசு சமச்சீர்க் கல்வி பற்றி வாய் திறக்கவே இல்லை. தமிழகக் கல்விக் குழு தயாரித்த 'பொதுப் பாடத் திட்ட’த்தை என்.சி.இ.ஆர்.டி. அங்கீகரித்தபின்பு, அதை தி.மு.க. அரசும் அங்கீகரிக்கவேண்டிய கட்டம் வந்தபோது, திடீரென சமச்சீர்க் கல்விக்கான அவசர சட்டத்தைக் கொண்டு​வந்தார்கள்.
நவம்பர் 30-ம் தேதி கெசட்டில் வெளி​யிட்டு, 2010 பிப்ர​வரியில்தான் சட்டப் பேரவை மூலம் இந்த சட்டம் நிறைவேறியது. இதன்படி புத்தகத்தை அச்சடிக்க உத்தரவு பிறப்பித்த பிறகு, தனியார் பள்ளிகள் தரப்பில் சமச்சீர் பாடத் திட்டத்தை எதிர்த்து, நீதிமன்றம் சென்றனர். விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் மற்றும் ஜனார்த்தன்ராஜா பெஞ்ச், 'சமச்சீர் பாடத் திட்டம் செல்லும். ஆனால், அந்தப் பாடத் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் புத்தகங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, ஒரு சட்டம் கொண்டுவந்து... அதனால் இரண்டு மாதம் குழந்தைகள் மனச் சித்ரவதைக்கு உள்ளாகி, ஒரு வழியாக அதே நீதிமன்றத்தால், பொதுப் பாடத்திட்ட உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு உள்ளது!'' என்று முடித்தார் பிரின்ஸ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினரும் (எஸ்.எஃப்.ஐ.) அடுத்​தடுத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை. 2009 ஜூலை 14-ம் தேதி, தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்​தனர்.
''இந்தத் தாக்குதலில், அனீஃபா என்ற மாண வருக்கு தலையில் படுகாயம். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து! மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார். சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததாக இப்போது தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதற்காகப் போராடிய மாணவனுக்குக் கிடைத்த பரிசு அப்படி!'' என்றார், எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் ராஜ்மோகன்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) ஆகிய அமைப்புகள் செய்த போராட்டங்கள் ரொம்பவும் அதிரடி!
''எல்லோருக்கும் பொதுவான பாடத்​திட்டம் கூடாது என்பது சமூக அநீதி. உலகமயமாக்கலுக்கு ஏற்ப பொதுப் பாடத்திட்டம் இல்லை என்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, 'மீண்டும் குலக் கல்வியைக் கொண்டுவரும் ஜெ. அரசின் முயற்சியை முறியடிப்போம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம். சென்னையில் 600 பேர் மறியல் செய்து, 63 பேர் சிறையில் அடைபட்டோம். கடலூர், திருச்சி, மதுரை என பல ஊர்களிலும் போராடியவர்களுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் சிறை. கடலூரில் 15 வயது மாணவர் ஒருவரை 21 நாள் சிறார் சிறையில் அடைத்தது இந்த அரசு!'' என்றார், இந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் கணேசன்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தின் சமநீதிக்கான ஒரு படிக்கல்லைத் தொட்டிருக்கும் இந்தத் தருணம், விடாப்பிடி போராட்டங்களுக்குக் கிடைத்த அர்த்தமுள்ள ஒரு பரிசுதான்!
- இரா.தமிழ்க்கனல்
படங்கள்: வீ.நாகமணி
'உண்மைக்குப் புறம்பானது...’
கடந்த 10.8.2011 தேதியிட்ட ஜூ.வி-யில் 'கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இடம் பெற்றிருந்த மாறன் சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர்கள் தரப்பில் இருந்து உறுதியாக மறுக்கப்படுகிறது.
''கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீடு, மகாலிங்கபுரம் 2 கிரவுண்ட் சன் கேபிள் விஷன் சொத்து, 1.84 ஏக்கரில் பண்ணை வீடு என்று கூறப் பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் மிகைப்​படுத்தப்பட்டவை.
'ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை வாங்கிய சமயத்தில் அதன் மதிப்பு 13,384 கோடி என்று கலாநிதி மாறன் தெரிவித்திருந்தார்’ என்று வெளியாகி உள்ள செய்தி அபத்த மானது. உண்மையில் 'செபி’ வரையறைகளின்படி தாக்கல் செய்த ஆவணங்களின்படியே, ஸ்பைஸ் ஜெட்டின் 37 சதவிகித பங்குகளின் மதிப்பு   797 கோடி என்று தெளிவாக டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்.டி. கூரியர் கம்பெனிக்கோ மற்றும் சன் மெடிக்கல் காலேஜுக்கோ அதன் மருத்துவமனைக்கோ மாறன் சகோதரர்களின் குடும்பத்தினருக்கும் வேறு உறவினர்​களுக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. மேலும், ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை, மாறன் சகோதரர்கள் கட்டப் போகும் மருத்துவ​மனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள் என்ற தகவலும் விஷமத்தனமானது. உண்மைக்குப் புறம்பானது' என்று கூறி மறுத்துள்ளார்கள்.
குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை வெளியிட்டதில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. யாரையும் புண்படுத்து​வதோ, அவதூறுக்கு ஆளாக்குவதோ நம் எண்ணமும் அல்ல. இருப்பினும் இதன் மூலம் யார் மனம் காயப்பட்டிருந்தாலும் அதற்கு மிகவும் வருந்துகிறோம்.
_ ஆசிரியர்

Source - Vikatan Magazine

Wednesday, August 3, 2011

'ஆனந்தம் விளையாடும் வீடு' வேண்டுமா ?

'ஆனந்தம் விளையாடும் வீடு' வேண்டுமா ?

 நாச்சியாள்
'பள்ளிகள் மற்றும் வீடுகளில் குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற கொடும் நிகழ்வுகள் அடியோடு அழிய வேண்டும்’ என்று சமீபகாலங்களாக வலியுறுத்தப்படுகிறது. இதற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் வகையில், உலக அளவிலான கருத்தரங்கம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
''ஒவ்வொரு வீட்டிலும் 'நேர்மறை ஒழுக்கம் (Positive Descipline)  என்பதை நடைமுறைப்படுத்தினால், குழந்தைகளை அடிக்காமல்... துன்புறுத்தாமல் வளர்க்க முடியும்!'’ என்று அந்த மாநாட்டில் அழுத்தமாக பதிந்துவிட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணரும், 'போதி' இன்ஸ்டிடியூட் மேலாண் இயக்குநருமான முனைவர். ராஜ்மோகன்.
'' 'ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்... அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது’ என்பது போன்ற வழக்கு மொழியும், வழக்கமும் உள்ள நம் கலாசாரத்தில் இது சாத்தியமாகுமா?'' என்ற கேள்வியுடன் ராஜ்மோகனைச் சந்தித்தோம்.
''இங்கு எல்லோருக்குமே அப்பா, அம்மாவிடம் அடி வாங்கி வளர்ந்த பால்யம்தான் கிடைத்திருக்கும். அப்படி அடிவாங்கும்போது, எதிர்த்து நின்று இருப்போம். அல்லது அடித்தவரிடம்இருந்தோ அல்லது அடி வாங்கிய விஷயத்திலிருந்தோ விலகி இருப்போம். அடித்துத் துன்புறுத்துவதால் இதுதான் நடக்கும்!'' என்று அவர் சொன்னபோது 'வெயில்’ சினிமாவில் வரும் பசுபதி கேரக்டர் நம் நினைவிலாடியது.
''உண்மைதான்... அடியும், தண்டனையும் 'வெயில்’ சினிமாவில் வரும் 'பசுபதி’களைத்தான் உருவாக்கும்!'' என்று ஆணித்தரமாக சொன்ன ராஜ்மோகன், பிள்ளைகளை 'பாஸிட்டிவ் டிஸிப்ளி’னுடன் வளர்க்க வேண்டிய அவசியத்தைப் பேசினார்...
''ஒரு குழந்தையை அடிக்கும்போது, அக்குழந்தைக்கென்று இருக்கும் சுயமரியாதையும் அடிபடும். சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு பிறகு எப்படி அக்குழந்தை எல்லா விஷயங்களிலும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும், கம்பீரமாக இயங்கும்? குழந்தையை அடிக்காமல், உதைக்காமல், வார்த்தையால் துன்புறுத்தாமல் 'பாஸிட்டிவ் டிஸிப்ளின்’ அணுகுமுறையைச் செயல்படுத்தி பாருங்கள்... உலகின் சிறந்த குழந்தையாக உங்கள் குழந்தை வளரும்; நிம்மதி வாழ்வில் தங்கும்!'' என்றவர், அந்த வளர்ப்பு முறைக்கான வழிமுறைகளை அடுக்கினார்...
''எந்த ஒரு விஷயத்தையும் நாம் குழந்தைகளுக்காக செய்வதைவிட, குழந்தைகளுடன் சேர்ந்து செய்தால், அதன் பலன் பன்மடங்காக இருக்கும். ஆனால், இதை பல பெற்றோர்கள் செய்வதில்லை. உங்கள் குழந்தையை சுயமரியாதை மிகுந்த குழந்தையாக வளர்த்தாலே... அது எந்தத் தவறும் செய்யாது. தவறு செய்யாவிட்டால்... தண்டனைக்கான வாய்ப்புஇல்லாமல் போகும். அதற்கு, பெற்றோர்கள்தான் குழந்தைக்கு உதாரணமானவர்களாக இருக்க வேண்டும். 'அப்பாவோட நேர்மையாலதான் என்னை எல்லாரும் மதிக்கறாங்க. அதேபோல, நீயும் பொய்யெல்லாம் எதுவும் சொல்லாம நேர்மையா இருந்தா, உன்னையும் எல்லாருக்கும் பிடிக்கும்’ என்று சொல்லி வளர்த்தால், அக்குழந்தை தன் சுயமரியாதையைக் காக்க விரும்பி, பொய் சொல்லாமல் வளரப் பழகும்'' என்று புரிய வைத்த ராஜ்மோகன்,
''முக்கியமான விஷயம்... குழந்தைகள் அம்மா, அப்பா என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில்லை; அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் மனதால் கேட்கிறார்கள். குழந்தையிடம், 'ஆறு மணிக்கு எழுந்து படிப்பா’ என்று சொல்லிவிட்டு, அப்பாவும் ஆறு மணிக்கு எழுந்தால்... நாளாக ஆக குழந்தைக்கும் அந்தப் பழக்கம் தானாக வரும். ஆனால், அம்மா, அப்பாவின் சொல்லும் செயலும் வேறாக இருந்தால்... அவர்களே குழந்தைக்கு நெகட்டிவ் ரோல் மாடல் ஆகிவிடுவார்கள். 'பொய் சொல்லக் கூடாதுப்பா’ என்று சொல்லிய அடுத்த நிமிடம் வீட்டில் இருந்துகொண்டே, 'அப்பா வீட்ல இல்லேனு சொல்லும்மா’ என்று சொல்வது, குழந்தையின் மனதை பாழ்படுத்தும்.
'கூட விளையாடற பசங்களை எல்லாம் அடிக்கறா...’ என்று வருத்தப்படும் பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி... சூதுவாது தெரியாத ஒரு குழந்தைக்கு யார் வன்முறையை கற்றுக் கொடுக்கிறார்கள்? வீட்டில் முதலில் யார் அந்தக் குழந்தையை அடிக்கிறார்களோ அவர்கள்தான். ஒரு காரியம் நமக்குச் சாதகமாக நடக்க வேண்டுமென்றால், ஒருவர் நமக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால் வன்முறையில இறங்கு, அடி, உதை என்று அவர்களுக்கு வன்முறையின் மீது நம்பிக்கையை உருவாக்குவது குழந்தையை கண்மூடித்தனமாக அடிக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். எனவே, இதற்கெல்லாம் தீர்வான 'பாஸிட்டிவ் டிஸிப்ளினை’ பெற்றோர்கள் மட்டுமல்ல, பள்ளியில் ஆசிரியர்களும் பின்பற்றினால், அது குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!'' என்று நம்பிக்கையுடன் கூறியவர்,
''உங்க குழந்தையை தினமும் கொஞ்ச நேரம் அருகில் அமர வைத்து, அவர்களின் கண்களைப் பார்த்து, தோள் தொட்டு சிநேகமாகப் பேசுங்கள். அதற்காக நேரம் ஒதுக்குங்கள். இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால்தான் டீன் ஏஜில் பல குழந்தைகள் குடி, சிகரெட் என்று தடம் மாறுகிறார்கள். மாதத்தில் ஒரு நாள் 'என்மேல் என்ன தப்பு இருக்கு, நான் எதில் திருந்தணும்னு சொல்லுங்க..?’ என்று குடும்பத்தலைவர்/தலைவி கேட்க, அதற்கு வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மேல் உள்ள குற்றம் குறைகளை தைரியமாக சொன்னால்... அந்த வீட்டில் வன்முறையின் சுவடே இருக்காது. இதையெல்லாம் ஒரு குடும்பத்தில் நடைமுறைப்படுத்தினால்... அது அந்த வீட்டில் உள்ள குழந்தைக்கு அம்மா, அப்பா மேல் மிகப் பெரிய நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கை குடும்ப நிம்மதியின் ஆதாரமாக இருக்கும். பிறகென்ன 'ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று குடும்பப் பாட்டு பாடலாம்!'' என்றார் மகிழ்வுடன்.
நம் வீட்டிலும் பிராக்டீஸ் பண்ணலாமா 'பாஸிட்டிவ் டிஸிப்ளின்’? ரெடி... ஸ்டார்ட்!

 குழந்தைகளை அடிக்காதீர்கள்!
 'குளோபல் சம்மிட் ஆன் எண்டிங் கார்போரல் பனிஷ்மென்ட் அண்ட் புரமோட்டிங் பாஸிட்டிவ் டிஸிப்ளின் (Global summit on ending corporal punishment and promoting positive discipline) என்பதுதான் கருத்தரங்கின் தலைப்பு. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள 'எஸ்எம்யூ’ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குழந்தை நல சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். உலகில் 29 நாடுகளில் குழந்தைகளைத் தண்டிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்!.
 படம்: ச.இரா.ஸ்ரீதர்


Source - Vikatan Magazine

Tuesday, August 2, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 - உங்கள் குழந்தை படிப்பாளியா... திறமைசாலியா ?

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தை படிப்பாளியா... திறமைசாலியா ?
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
 ''என் பொண்ணு படிப்புல டாப். ஒரு மணி நேரத்துல ஹோம்வொர்க் அத்தனையும் கிடுகிடுனு செஞ்சுடுவா'',
''என் பையன் சூப்பரா படிப்பான். எந்த சப்ஜெக்ட்டுனாலும் ரொம்ப சீக்கிரமா மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பான்'',
''என் மூத்த பொண்ணு ரொம்ப நேரம் உட்கார்ந்து படிக்கமாட்டா. ஆனா, எப்பவும் அவதான் கிளாஸ் ஃபர்ஸ்ட்!''
- என் கிளினிக் வந்திருந்த மூன்று அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது காதில் விழுந்தவை.
கல்வி என்பது 'விரைவாக எழுதுதல்’, 'மனப்பாடம் செய்தல்’, 'ஒப்பித்தல்’  என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், கல்வி என்பது என்ன? 'ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது’ என்பதுதான் மிகச்சரியான பதில்!
எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும்? ஒரு விஷயத்தில் முழுமையான அறிவைப் பெறுவதற்காக மட்டுமல்ல... கற்றுக் கொண்டதை 'செயல்படுத்தி’ பார்ப்பதே கல்வியின் நோக்கம்!
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை படிப்பாளியாக (Studious) இருக்க ஆசைப்படுகிறார்கள். அதற்காக ஸ்பெஷல் டியூஷன், கோச்சிங் என்று பணம், நேரம் என அனைத்தையும் செலவிடுகிறார்கள். ஆனால், படிப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது... திறமைசாலியாகவும் இருந்தால்தான் அது முழுமையான கல்வி. 'படிப்பாளி குழந்தைகள்’ (a+b)2 = a2 +b2+2ab என்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தப்பில்லாமல் சொல்வார்கள். திறமைசாலி குழந்தைகள் அந்த ஃபார்முலாவை தப்பில்லாமல் தெரிந்து வைத்திருப்பதோடு, அதனை எங்கு, எப்படி 'அப்ளை’ செய்து பார்க்க வேண்டுமோ... அங்கு சரியாக 'அப்ளை’ செய்வார்கள். அத்தகைய குழந்தைகள்தான் பரீட்சையிலும் வாழ்க்கையிலும் பெரிய வெற்றியை எட்டுகிறார்கள். ஆக, படிப்பதற்கும் கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்வதுதான் குழந்தைக்கு சரியாக வழிகாட்ட உதவும்.
'என் புள்ள சரியாவே படிக்க மாட்டேங்குது' என்பது இங்கு பல அம்மாக்களின் மன வருத்தம். ஓ.கே... ஒரு குழந்தை சரியாக படிக்க என்ன வேண்டும்? வெறும் அறிவு மட்டும் இருந்தால் குழந்தை நன்றாகப் படித்து விடுமா? 'நான் நல்லா படிக்கணும். அப்போதான் என் டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை பாராட்டுவாங்க’ என்று படிப்பதற்கு ஒரு நோக்கம் (Motivation) வேண்டும். எல்.கே.ஜி. போகும் குழந்தையிடம் அதை எதிர்பார்க்கக் கூடாது; பெற்றோர்கள்தான் அதை உருவாக்க வேண்டும்.
படிப்பு என்பது டீச்சர் சொல்வதை சரியாகக் காதில் கேட்டு, கண்ணால் எழுத்துக்களைப் புரிந்து, மனதால் உள்வாங்கி, கையால் எழுதுகிற விஷயம். குழந்தைக்கு ஒருவேளை கண்ணில் குறைபாடு இருந்தால், டீச்சர் போர்டில் எழுதிப் போடும் எழுத்துக்கள் அக்குழந்தைக்கு எப்படி தெரியும்? பிறகு அது எப்படி உள்வாங்கிப் படிக்கும்? ஆகையால் இந்த உணர்வு உறுப்பு கள் எல்லாம் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது (Sensory organs activation), இரண்டாவது  தேவை.
அடுத்ததாக, வகுப்பில் டீச்சர் நடத்தும் பாடங்களை கருத்து ஊன்றி கவனிக்க வேண்டும் (Attention). அப்படிக் கவனித்த விஷயங்களை மனதுக்குள் சரியாகவும் முழுமையாகவும் பதியவைக்க வேண்டும் (Registration). பதிய வைத்துவிட்டால் போதுமா? இல்லை... பதிய வைத்த விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் (Understanding).அதோடு அந்தக் கல்வி முழுமை பெற்றுவிடாது. புரிந்துகொண்டவற்றை செயல்படுத்திப் பார்க்க வேண்டும் (Practical application).
'செயல்படுத்திப் பார்த்தல்’ என்பது ஒரு தொடர் நிகழ்வு. ஒரு குழந்தை ஐந்தாம் வகுப்பில் 'தாவரங்கள் உணவை இலையின் மூலம் தயாரித்துக் கொள்கின்றன’ என்று படித்திருக்கும். அதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தால்தான், இலை மூலம் எப்படி உணவைத் தயாரிக்கிறது, 'குளோரோஃபில் - பச்சையம்’ என்றால் என்ன, எப்படி சூரிய ஒளி மூலம் இலைகள் உணவைத் தயாரிக்கின்றன என்பதை அறிவியல் டீச்சர் ஆறாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும்போதும் சரியாகப் புரிந்து கொள்ளும்.
ஆக, கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்களும் டீச்சர்களும் புரிந்து கொண்டால்... கற்றல் எப்போதும் இன்பம்தான் குழந்தைக்கும், பெற்றோருக்கும், டீச்சருக்கும்!
- வளர்ப்போம்...
 படம்: ஆ.வின்சென்ட் பால்


Source - Vikatan Magazine