Tuesday, August 2, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 - உங்கள் குழந்தை படிப்பாளியா... திறமைசாலியா ?

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தை படிப்பாளியா... திறமைசாலியா ?
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
 ''என் பொண்ணு படிப்புல டாப். ஒரு மணி நேரத்துல ஹோம்வொர்க் அத்தனையும் கிடுகிடுனு செஞ்சுடுவா'',
''என் பையன் சூப்பரா படிப்பான். எந்த சப்ஜெக்ட்டுனாலும் ரொம்ப சீக்கிரமா மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பான்'',
''என் மூத்த பொண்ணு ரொம்ப நேரம் உட்கார்ந்து படிக்கமாட்டா. ஆனா, எப்பவும் அவதான் கிளாஸ் ஃபர்ஸ்ட்!''
- என் கிளினிக் வந்திருந்த மூன்று அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது காதில் விழுந்தவை.
கல்வி என்பது 'விரைவாக எழுதுதல்’, 'மனப்பாடம் செய்தல்’, 'ஒப்பித்தல்’  என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், கல்வி என்பது என்ன? 'ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது’ என்பதுதான் மிகச்சரியான பதில்!
எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும்? ஒரு விஷயத்தில் முழுமையான அறிவைப் பெறுவதற்காக மட்டுமல்ல... கற்றுக் கொண்டதை 'செயல்படுத்தி’ பார்ப்பதே கல்வியின் நோக்கம்!
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை படிப்பாளியாக (Studious) இருக்க ஆசைப்படுகிறார்கள். அதற்காக ஸ்பெஷல் டியூஷன், கோச்சிங் என்று பணம், நேரம் என அனைத்தையும் செலவிடுகிறார்கள். ஆனால், படிப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது... திறமைசாலியாகவும் இருந்தால்தான் அது முழுமையான கல்வி. 'படிப்பாளி குழந்தைகள்’ (a+b)2 = a2 +b2+2ab என்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தப்பில்லாமல் சொல்வார்கள். திறமைசாலி குழந்தைகள் அந்த ஃபார்முலாவை தப்பில்லாமல் தெரிந்து வைத்திருப்பதோடு, அதனை எங்கு, எப்படி 'அப்ளை’ செய்து பார்க்க வேண்டுமோ... அங்கு சரியாக 'அப்ளை’ செய்வார்கள். அத்தகைய குழந்தைகள்தான் பரீட்சையிலும் வாழ்க்கையிலும் பெரிய வெற்றியை எட்டுகிறார்கள். ஆக, படிப்பதற்கும் கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்வதுதான் குழந்தைக்கு சரியாக வழிகாட்ட உதவும்.
'என் புள்ள சரியாவே படிக்க மாட்டேங்குது' என்பது இங்கு பல அம்மாக்களின் மன வருத்தம். ஓ.கே... ஒரு குழந்தை சரியாக படிக்க என்ன வேண்டும்? வெறும் அறிவு மட்டும் இருந்தால் குழந்தை நன்றாகப் படித்து விடுமா? 'நான் நல்லா படிக்கணும். அப்போதான் என் டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை பாராட்டுவாங்க’ என்று படிப்பதற்கு ஒரு நோக்கம் (Motivation) வேண்டும். எல்.கே.ஜி. போகும் குழந்தையிடம் அதை எதிர்பார்க்கக் கூடாது; பெற்றோர்கள்தான் அதை உருவாக்க வேண்டும்.
படிப்பு என்பது டீச்சர் சொல்வதை சரியாகக் காதில் கேட்டு, கண்ணால் எழுத்துக்களைப் புரிந்து, மனதால் உள்வாங்கி, கையால் எழுதுகிற விஷயம். குழந்தைக்கு ஒருவேளை கண்ணில் குறைபாடு இருந்தால், டீச்சர் போர்டில் எழுதிப் போடும் எழுத்துக்கள் அக்குழந்தைக்கு எப்படி தெரியும்? பிறகு அது எப்படி உள்வாங்கிப் படிக்கும்? ஆகையால் இந்த உணர்வு உறுப்பு கள் எல்லாம் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது (Sensory organs activation), இரண்டாவது  தேவை.
அடுத்ததாக, வகுப்பில் டீச்சர் நடத்தும் பாடங்களை கருத்து ஊன்றி கவனிக்க வேண்டும் (Attention). அப்படிக் கவனித்த விஷயங்களை மனதுக்குள் சரியாகவும் முழுமையாகவும் பதியவைக்க வேண்டும் (Registration). பதிய வைத்துவிட்டால் போதுமா? இல்லை... பதிய வைத்த விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் (Understanding).அதோடு அந்தக் கல்வி முழுமை பெற்றுவிடாது. புரிந்துகொண்டவற்றை செயல்படுத்திப் பார்க்க வேண்டும் (Practical application).
'செயல்படுத்திப் பார்த்தல்’ என்பது ஒரு தொடர் நிகழ்வு. ஒரு குழந்தை ஐந்தாம் வகுப்பில் 'தாவரங்கள் உணவை இலையின் மூலம் தயாரித்துக் கொள்கின்றன’ என்று படித்திருக்கும். அதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தால்தான், இலை மூலம் எப்படி உணவைத் தயாரிக்கிறது, 'குளோரோஃபில் - பச்சையம்’ என்றால் என்ன, எப்படி சூரிய ஒளி மூலம் இலைகள் உணவைத் தயாரிக்கின்றன என்பதை அறிவியல் டீச்சர் ஆறாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும்போதும் சரியாகப் புரிந்து கொள்ளும்.
ஆக, கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்களும் டீச்சர்களும் புரிந்து கொண்டால்... கற்றல் எப்போதும் இன்பம்தான் குழந்தைக்கும், பெற்றோருக்கும், டீச்சருக்கும்!
- வளர்ப்போம்...
 படம்: ஆ.வின்சென்ட் பால்


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment