Monday, December 26, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 12(ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் ! )

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண், பெண் ரொமான்ஸ் உறவின் அடிப்படையே.... உடல்ரீதியான தொடர்புதான். அது இயல்பான ஒன்று. ஆனால், பல்வேறு உடல் மற்றும் மனரீதியான காரணங்களால் இது பாதிக்கப்படுவதும் இயல்பான ஒன்றாகவே இன்று ஆகிவிட்டது.
பரத்தின் அக்கா மகள் நித்யா. இருவருக்கும் வயது வித்தியாசம் எட்டு ஆண்டுகள். சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் தோழர்களாகவே வளர்ந்தார்கள். நித்யாவைத் தூக்கி வளர்த்திருக்கிறான் பரத். மடியில் படுக்கவைத்து தூங்கவும் வைத்திருக்கிறான். அண்ணன், தங்கை போன்ற உறவுகூட இருவராலும் உணரப்பட்டிருக்கிறது. வீட்டுப் பெரியவர்களோ, 'எதிர்கால தம்பதி' என்று சொல்லியே வளர்த்தார்கள்.
பரத், மத்திய அரசுப் பணியிலும்... நித்யா டீச்சராகவும் வேலை செய்து கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்களைக் கணவன், மனைவியாகக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. ஆனால், குடும்பத்தினரின் பிடிவாதத்தை மீறி அவர்களால் எதுவும் செய்யவும் முடியவில்லை.
திருமணமும் கோலாகலமாக நடந்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்ததுதான் பரிதாபம். நித்யா, பரத் இருவராலும் தாம்பத்ய உறவுகொள்ள முடியவில்லை. மூடிய அறைக்குள் இரு துருவங்களாக வாழ ஆரம்பித்தனர்.
ஆண்டுகள் ஒன்று, இரண்டு என ஓடின. வாரிசு எதுவும் உருவாகாததால்... இருதரப்புப் பெற்றோரும் கவலைகொண்டு, கோயில் கோயிலாக கூட்டிச் சென்றனர். பரிகாரங்களையெல்லாம் செய்தனர். புத்திசாலியான ஓர் உறவினர்தான், பரத் - நித்யா இருவரின் வாழ்க்கையில் ஏதோ சிக்கல் இருப்பதைப் புரிந்து, மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். உண்மை மெள்ள வெளிப்பட்டது. பெற்றோர் இடிந்து போனார்கள். இனி இந்த பந்தத்தைத் தொடர்வதில் அர்த்தமே இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக அவர்களுக்குப் புரிய, மணவிலக்குக்கு ஏற்பாடு செய்தார்கள். இன்று பரத், நித்யா இருவரும் அடுத்த வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு சிறுவனிடம், 'இவள் உன் எதிர்கால மனைவி’ என்று ஒரு சிறுமியைக் காட்டி, அந்த வயதிலேயே கருத்தைத் திணிப்பது விபரீதத்தில்தான் கொண்டுபோய் விடும் என்பதற்கு உதாரணமானதைத் தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை... பரத் - நித்யாவின் வாழ்க்கை.
'உன் கண்ணில் நீர் வழிந்தால்...’, கணவன் - மனைவி உறவின் அற்புதத்தை விளக்கும் உன்னதமான பாடல். 'வேரென நீ இருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’, 'என் தேவையை யார் அறிவார், உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ போன்ற காலத்தால் அழியாத வரிகளைக் கொண்ட பாடல் அது.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி கூட்டை விட்டுப்பிரிந்த பிறகு, ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இத்தனை நாள் ஓடி ஒடி உழைத்த களைப்பு, அப்போது ஓய்வெடுக்கச் சொல்லும். உடலும் தன்னுடைய வலுவையும் ஆரோக்கியத்தையும் மெள்ள இழந்து, சாய்ந்துகொள்ள ஒரு தோளைத் தேடும். அப்போதுதான் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஜெயந்தி, ரமேஷ் தம்பதிக்கு... அது தொடர்பான ஒரு கசப்பான அனுபவம், வாழ்க்கையின் ஆரம்ப காலங்களிலேயே ஏற்பட்டது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். ரமேஷ் மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவான். ஜெயந்திக்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும் அரசாங்கப் பணி. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
ஜெயந்திக்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டிக்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, ஒரு மாதமாவது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாய சூழல் வந்து சேர்ந்தது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஊரில் இருந்து ஒரு பெண்மணியை வரவழைத்த ரமேஷ், ஆஸ்பத்திரிக்கு பணத்தைக் கட்டிவிட்டு, கடமை முடிந்ததாக நினைத்தான். ஆபரேஷன் அன்றுகூட மனைவியின் அருகே இல்லாமல், ஆபீஸ் வேலையாக மும்பை சென்று விட்டான்.
அது, ஜெயந்தியின் மனதை மிகவும் பாதித்தது. பைத்தியம் பிடித்தவள்போல் ஆனாள். 'எப்படி இருக்கிறாய்?’ என்றுகூட விசாரிக்காமல், 'நல்ல காலம் முழு இன்ஷூரன்ஸ் பணம் வந்துவிட்டது’ என்று சந்தோஷப்பட்டான் ரமேஷ்.
ஒரு சில மாதங்கள் உருண்டோடிய நிலையில்... 'முதுகுத்தண்டில் இன்ஃபெக்ஷன்' காரணமாக படுத்த படுக்கையானானான் ரமேஷ். ஆறு மாதங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இப்போதுதான், பழைய கோபங்களை மீட்டெடுத்தாள் ஜெயந்தி. 'அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க முடியாது' என்றவள், கணவனை சம்பிரதாயத்துக்கு மட்டுமே கவனித்துக் கொண்டாள். ரமேஷ§க்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. படுக்கையில் படுத்தபடியே சண்டையிட்டான். மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வேதனைகளை எல்லாம் ஜெயந்தியும் கொட்டினாள். தன் தவறு புரிந்து, அதிர்ந்தவன், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டான். வாழ்வு மறுபடி இனிக்க ஆரம்பித்தது அவர்களுக்கு!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! -11 (காதல் காதல்தன்...நட்பு நட்புதான் ! )

ரொமான்ஸ் ரகசியங்கள்!

காதல் காதல்தன்...நட்பு நட்புதான் !
அகிலன் சித்தார்த்
ஓவியம்: மணியம் செல்வன்

சில ஆண்டுகளுக்கு முன் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. சண்முகம், 17 வயது இளைஞன். வேலூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, அம்மாவுடன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்திருந்தான். சிறிய ஓட்டு வீட்டில் தங்கியிருந்தார்கள். சண்முகம் வேலை தேடிக் கொண்டிருக்க... அக்கம்பக்க வீடுகளில் பாத்திரம் தேய்த்து சொற்பப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் அம்மா. அவ்வப்போது சண்முகத்துக்கு சிறு சிறு வேலைகள் கொடுத்து, கொஞ்சம் பணமும் கொடுப்பது என் வழக்கம். அம்மாவின் கனவெல்லாம், சண்முகம் தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்பதுதான்.
அவர்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே அக்காவுடன் தங்கியிருந்தாள் அர்ச்சனா. சினிமாவில் 'ரிச் கேர்ள்ஸ்’ என்று சொல்வார்கள். பின்னணியில் நடமாடும் துணை நடிகைகள். அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள் அர்ச்சனா. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியில் உடைகள், செருப்புகள், மேக்கப் சாமான்களை வாங்கிவிடுவாள். அவளுடைய வேலைக்கு அது தேவையாக இருந்தது என்பது வேறு விஷயம்.
சண்முகத்துக்கும் அவளுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையிலான சுத்தமான நட்புதான். சண்முகம் அவளை ஆராதித்தான். 'உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஃப்ரெண்ட்’ என்பான். அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பான். அர்ச்சனாவும் அவனிடம் விகல்பம் இல்லாமல் பழகினாள். 'ஏதாவது விபரீதத்தில் முடியுமோ?' என்கிற பயம் சண்முகத்தின் அம்மாவிடம் இருந்தது.
ஒருநாள் திடீரென்று சண்முகம் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டான். எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. 'எனக்கும் அர்ச்சனாவுக்கும் இருந்த புனிதமான நட்பை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் சாவதன் மூலம் அந்த புனிதத்தன்மையை இந்த உலகத்துக்கு உணர்த்துகிறேன். அர்ச்சனா நல்ல வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்!’ என்றது அவன் எழுதி வைத்திருந்த கடிதம்.
அர்ச்சனாவிடம் பிறகு பேசியபோது, சண்முகத்தை அவளுடைய அக்கா சந்தேகப் பட்டதாகவும், தன் தங்கையை அவன் திட்ட மிட்டு கவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய தாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சொன்னாள்.
'நட்பு’ என்கிற விஷயத்தை அவன் குழப்பிக் கொண்டிருக்கிறான். சரியான கவுன்சிலிங், சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், அப்படிச் செய்திருக்கமாட்டான் என்று நினைத்தேன். அவன் உள்மனதில் அர்ச்சனாவின் மேல் காதல்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவைப்பட்டிருக்கிறது. நட்பு என்று பெயரிட்டு அதை அணிந்திருக்கிறான். அதற்குக் காரணம் அர்ச்சனாவிடம் அவனுக்கு இருந்த காம்ப்ளக்ஸ். அவள் நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே அவனை மிகக் கவர்ந்திருந்தாலும், அவளுடன் பழகுவதற்கான அங்கீகாரமாக நட்புதான் அவனுக்குப் பயன்பட்டிருக்கிறது. அந்த கவசம் உடைந்து போனதில் அப்செட் ஆனவன்... தற்கொலையை நாடியிருக்கிறான்.
பால்ய பருவத்திலிருந்து வாலிப பருவத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் இளம் உள்ளங்கள் நட்பு, காதல் இவை பற்றிய தெளிவான புரிதல்களை அடைய வேண்டும். அதுவும் இளம் பருவத்துக் காதல் என்பது மிகவும் அபாயகரமானது. தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாக சிறு வயதில் ஏற்படும் காதலைப் பெருமைப்படுத்திக் காண்பிக்கிறார்கள். அந்த வயதில் ஏற்படும் உணர்வு என்பது வெறும் நட்புதான்... காதல் அல்ல. இருபால் கவர்ச்சி என்பது அதில் இலைமறை காயாக இருக்கலாம். அதுவே எல்லாமும் கிடையாது.
நிறையபேர் 'புனிதம்’ என்ற சொல்லை வைத்துக்கொண்டு, வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். உலகில் எல்லாமே இயல்பானதுதான். புனிதம் என்பதெல்லாம் அதீதமான வார்த்தை. பரத் - நித்யா இருவரையும் பற்றி தெரிந்து கொண்டால்... நான் சொல்வதில்இருக்கும் உண்மை உங்களுக்கே புரியும்!

Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 10 (இரட்டை வாழ்க்கை இம்சை !)


ரொமான்ஸ் ரகசியங்கள் !

இரட்டை வாழ்க்கை இம்சை !
அகிலன் சித்தார்த்
ஓவியம்: மணியம் செல்வன்
'ஆணும் பெண்ணும் சமம்' என்பதுதான் மார்க்ஸ் முதல் பாரதி வரை உலக முற்போக்கு சிந்தனையாளர்கள் படித்துப் படித்துச் சொன்ன விஷயம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் சமூகத்தில் அந்த நிலை, பெரும்பான்மையாக உருவாகவில்லை... குறிப்பாக கணவன் - மனைவி இடையே! கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரிசமமாக நடத்தக்கூடிய தாம்பத்யத்தில்... ரொமான்ஸ் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதே உண்மை!
முரளி, சுலோச்சனா... அந்த விதி பழகாத தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சுலோச்சனா, மத்திய அரசுத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்தில் அரசாங்கம் தொடங்கிய ஒரு துறையில், கிரியேட்டிவான முறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி நிறைய விருதுகளையும், பதவி உயர்வுகளையும் வாங்கியவர். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு நிம்மதி இல்லை.
தன்னால் இயன்றவரை வீடு, அலுவலகம் என்று இரண்டு பொறுப்புகளை சுலோச்சனா சுமந்தாலும், கணவர் எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பார். தன் அலுவல் தொடர்பாக மேற்கல்வி படித்து அதில் முனைவர் பட்டமும் பெற்றார் சுலோச்சனா. கை நிறைய சம்பளம். எந்நேரமும் அவரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி விவாதிக்க வரும் கிராமத்தினரின் கூட்டம், அரசியல்வாதிகள், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் காட்டும் மரியாதை, அரசு தந்த கார் என்று மிக மரியாதையான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தாலும், கணவர் முரளிக்கு அவர் தன் கை மீறிப்போய் விட்டதாக எண்ணம்.
''ரொம்ப படிச்சவனு திமிரு!''
''ஊர்ல எல்லாரும் மதிக்கிறாங்க இல்லை... அதான் என்னைப் போட்டு மிதிக்கிறே.''
''வீட்டை முழுசா பார்த்துக்க வக் கில்லை... உனக்கெல்லாம் ஏன் குடும்பம், புருஷன், புள்ளகுட்டிங்க?''
''போகிற போக்கை பார்த்தா எலெக்ஷன்ல நின்னு மந்திரி ஆயிடுவபோல. அப்புறம் என்னைத் துரத்தி விட்டுட்டு வேற ஆள் பார்த்துப்ப.''
- கணவன் கூசாமல் கொட்டும் இந்தக் கொடும் சொற்களுக்கு, ஆரம்பகாலத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சுலோச்சனா. நாட்கள் செல்லச் செல்ல முரளியின் குரூரமும், வக்கிர சிந்தனையும் அதிகமாகிக் கொண்டே வந்ததால், வெறுத்துப் போய் மௌனம் காக்க ஆரம்பித்தார். அதற்கும் வசை தொடர்ந்தது. 'அம்மாவை உலகமே பாராட்டுகிறதே... அப்பாவுக்கு மட்டும் ஏன் விபரீத சிந்தனை' என்று அவர்களின் குழந்தைகளுக்குப் புரியவே இல்லை... பாவம்தான்.
வெளியுலகில் ஒரு வாழ்க்கை, வீட்டுக்குள் ஒரு நரக வாழ்க்கை என்று சுலோச்சனாவின் இரட்டை நிலை இன்றும் பரிதாபமாகத் தொடர்கிறது. அவர்களுக்குள் காதல் என்கிற வார்த்தையே அடிபட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறன்றன.
மாறி வரும் இன்றைய சூழலில், தடைகளைத் தாண்டி அலுவலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பெண்கள் நடத்திவரும் பெரும் சாதனையை, ஆண்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.
இந்த விஷயத்தை ஒரு தம்பதிக்கு மட்டுமல்ல, ஊருக்கே... ஏன் உலகுக்கே பிராக்டிகலாக புரிய வைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேரடியாக இறங்கிய அனுபவத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
''தமிழ்நாட்டின் புதிரன்கோட்டை கிராமத்தில் நடந்திருந்தது ஒரு மௌனப்புரட்சி. ஆயிரக்கணக்கான படிப்பற்ற கிராமத்தவர்களை, மிகவும் குறுகிய காலத்தில், 'என்.ஏ.எஃப்' (NAF) எனப்படும் தேசிய விவசாய ஃபவுண்டேஷன் தன்னுடைய முயற்சியினால் படிப்பறிவு பெற்றவர்களாக மாற்றிஇருந்தது. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பாடத் திட்டத்தில், நவீனமுறையில் அளிக்கப்பட்ட பயிற்சி அது.
அதிகாலையில் வெள்ளி முளைக்கும்போது எழுந்திருக்கும் பெண்கள்... வீட்டு வேலை, குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல் இவற்றுடன் காடு, கழனி என்று வயல்வேலையும் பார்த்துவிட்டு, இரவு கண்களை மூடிப் படுக்கும்போது நிலவு உச்சிக்கு வந்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நேரம் கண்டுபிடித்து எழுத்தறிவிப்பது, சாதாரண விஷயமல்ல. அவர்களுக்கான கல்வியை இரவு நேரத்தில்தான் கொடுக்க முடியும். 'என்.ஏ.எஃப்' அப்படித்தான் செயல்பட்டது.
நான் அங்கே சென்றிருந்தபோது சுமார் 4,200 பேர் இரவு பாடசாலை மூலம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள். அந்தச் சுற்றுவட்டார கிராமங்களில் 288 சுய உதவிக் குழுக்களையும் 'என்.ஏ.எஃப்' உருவாக்கியிருந்தது. அவர்களின் மொத்த சேமிப்பு 48 லட்சம் ரூபாயை எட்டியிருந்தது. சுமார் 70 லட்சம் ரூபாய்க்கான தொழில் கடன்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தது.
கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண். அவருடைய கணவர் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். நான் அந்தப் பஞ்சாயத்துத் தலைவியிடம், 'நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட உங்கள் கணவர் விடுகிறாரா? அல்லது தலையிடுகிறாரா?' என்று கேட்டேன். அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல தடுமாறினார்.
நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு, 'அவ்வப்போது சில உதவிகளைச் செய்வதுண்டு' என்று பூசி மெழுகினார் கணவர். உண்மையில் அந்தப் பெண்மணியின் வேலைகளில் அவர் தலையிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டில் பெரும்பான்மையான பெண் பஞ்சாயத்துத் தலைவிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
'இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் மனைவியைச் சுதந்திரமாக வேலை பார்க்கவிட வேண்டும். அவரால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். உங்கள் மனைவியின் வேலைகளில் தலையிட மாட்டேன் என்று உங்களால் உறுதி கூற முடியுமா?' என்றேன். அவர் 'நிச்சயமா சார்!' என்றார். சுற்றி நின்றிருந்த பெண்கள் எல்லாம் அதற்குக் கரகோஷம் செய்தார்கள். அந்தக் கரகோஷம், அவர்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தையே விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. பெண்கள் லீடர்ஷிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், அதற்கு ஆண்கள் முழுமனதோடு வழிவிட வேண்டும் என்பதே என் எண்ணம்''
- இப்படி எழுதியிருக்கிறார் அப்துல் கலாம்.
பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட மண வாழ்க்கையிலும் இனி ஆண்கள், பெண்களை அடக்கி ஆளாமல் அவர்களின் சுதந்திரத்துக்கும், திறமைக்கும் வழிவிட்டு நடந்தால்... அவர்களின் காதல் வாழ்க்கையும் கடைசி வரை இனிக்கும். இது 21-ம் நூற்றாண்டின் புதிய விதிகளில் ஒன்று.
'காதல் ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து...' என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை, ஆணுக்கும் பொருந்தும்.
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

Money Money Money - (அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆர்.டி!)

Money Money Money

அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆர்.டி!
பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்
நிதி ஆலோசகர் அனிதா பட்
சேமிப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது... 'சிறுவாடு’க்கு அப்புறம், தபால் அலுவலக ஆர்.டி (RD - Recurring Deposit)! ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரக் குடும்பம் என அனைவருக்கும் கை கொடுக்கும் நல்ல திட்டம் இது. 10 ரூபாய் தொடங்கி... 50, 100, 1,000 என உங்களால் முடிந்ததை ஆர்.டி. மூலமாக சேமித்து வரலாம். இதற்கான வட்டிகூட அண்மையில் கூடியுள்ளது என்பது அனைவரையும் சந்தோஷப்படுத்தும் சங்கதி!
ஆர்.டி.-யில் சேமிக்கும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு கட்டாயம் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும். இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், மாதந்தோறும் கட்டும் ஆர்.டி. தொகையை ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்கு முன்கூட்டியே மொத்தமாக கட்டினால், கணக்கு வைத்திருப்பவரை ஊக்குவிக்க, ஆறாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் வீதம் ஊக்கத் தொகை கிடைக்கும்!
அவசரத் தேவைகளுக்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல், உங்கள் ஆர்.டி. கணக்கில் அதுவரை நீங்கள் கட்டியிருக்கும் தொகையில் 50% கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி... ஆர்.டி கொடுக்கப்படும் வட்டியைவிட இரண்டு சதவிகிதம் கூடுதலாக இருக்கும். கடனை இடையிலேயே திரும்பச் செலுத்திவிடலாம். அல்லது ஆர்.டி. முடியும்போது, கடன் தொகை பிடித்தம் போக, மீதமிருக்கும் சேமிப்புத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் கடனை திரும்பச் செலுத்திவிடுவதே, நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
அடுத்து, தபால் நிலைய டைம் டெபாஸிட். அதாவது உங்களிடம் ஓர் தொகை இருக்கிறது. அது ஐந்து ஆண்டுகள் கழித்து மகளின் திருமணத்துக்குத் தேவைப்படும் என்றால், அதை ஐந்து ஆண்டு டைம் டெபாஸிட்-ல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம்... ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் என முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வட்டி முறையே 7.7%, 7.8%, 8% மற்றும் 8.3%. இதில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.
பணி ஓய்வு பெறப் போகிறவர்கள், மாதந்தோறும் வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள்... தபால் நிலைய மாத வருமான சேமிப்பு திட்டத்தில் (மன்த்லி இன்கம் ஸ்கீம்) முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை, 1,500. தனிநபர் 4.5 லட்சம் வரையிலும், கணவன்- மனைவி ஒன்பது லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இதற்கான 8.2 சதவிகித வட்டியை மாதந்தோறும் பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம் என்பதும் நல்லதொரு முதலீடுதான். இந்த பணத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இதற்கு 8.4 சதவிகித வட்டி மற்றும் வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த பத்திரத்தை நகை போலவே வங்கியில் அடமானம் வைத்து உடனடியாக கடனும் பெற முடியும்.
சேமிப்புக்கு மட்டும் இல்லை... இதையே ஒரு தொழிலாக எடுத்து சம்பாதிப்பதற்கும் வழிகள் இருக்கின்றன! நிதி சார்ந்த முதலீடுகள் மற்றும் அது சார்ந்த வேலை வாய்ப்பு பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம்!
- பணம் பெருகும்...
மெடிக்ளைம் மோசடி உஷார்!
சென்ற இதழில் (6.12.2011) வெளியான 'மெடிக்ளைம் பாலிசி' பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு, கோயம்புத்தூர் வாசகர் பிந்துமாதவன் நமக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ''தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஏஜென்ட்டிடம் பாலிசி எடுத்தேன். ஜூலை மாத இறுதியில் எனக்கு நெஞ்சு வலி வந்தது. அதற்கு பைபாஸ் சர்ஜரி செய்தார்கள். மருத்துவச் செலவுகளுக்கு க்ளைம் வாங்குவதற்காக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஆவணங்களை அனுப்பினேன். 'முன்கூட்டியே ரத்த அழுத்தம் இருந்ததால் க்ளைம் கிடைக்காது' என்று சொல்லிவிட்டார்கள். இதைப் பற்றி ஏஜென்ட்டிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவர் அதைப் பற்றி குறிப்பிடாமல், எனக்கு பாலிசி எடுத்துக் கொடுத்துவிட்டார். ரத்த அழுத்தம் இருப்பதைக் குறிப்பிட்டால், பாலிசிக்கு அதிக தொகை செலுத்த வேண்டும். அதைச் சொன்னால், நான் பாலிசி எடுக்காமல் போய்விடுவேன் என்று ஏஜென்ட்டாகவே முடிவு செய்துவிட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். அவர் செய்த தவறுக்கு... எனக்குத் தண்டனை'’ என வேதனையுடன் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
''பொதுவாக பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே இருக்கும் நோய்கள், அறுவை சிகிச்சை விவரங்கள் என அனைத்தையும் மறைக்காமல் குறிப்பிட வேண்டியது மிகமிக அவசியம். ஆனால், உங்களுக்கு இருக்கும் ரத்த அழுத்தத்தைப் பற்றி ஏஜென்ட்டிடம் சொல்லியும், அவர் அதை மறைத்து பாலிசி எடுத்திருக்கிறார். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் நிச்சயம் கஷ்டமானதுதான். ஆனால், அது கற்பித்த பாடம் முக்கியமானது. ஏஜென்ட் தெரிந்தவராக இருந்தாலும், அவரிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே என்று இருந்துவிடாமல், பாலிசிப் பத்திரம் வந்தவுடன் அதை சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும். அதில் இதுபோல ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனே அந்த ஏஜென்ட் மூலமாகவே அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று தவறுகளினால் க்ளைம் கொடுக்க மறுத்தால், சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனில் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் விசாரித்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் க்ளைம் கிடைப்பதற்கு உதவி செய்வார்கள்.

Source from Viktan Magazine

தங்க நகைச் சீட்டு எது பெஸ்ட்?

தங்க நகைச் சீட்டு எது பெஸ்ட்?

தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கம் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.

ங்க முதலீட்டில் பலப்பல திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் தங்க நகைச் சீட்டுகளுக்கு இருக்கும் மவுசு அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக தங்கம் 'ஜிவ்’வென ஏறுவதைப் பார்த்த பெண்கள், தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற பயத்தில் தங்கக் காசுகளாக வாங்கி வருகின்றனர். பெண்கள் இப்படி ஆர்வமாக வந்து வாங்குவதைப் புரிந்து கொண்ட நகைக் கடைகளும் புதுப்புது தங்க நகை சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
இன்றைக்கு தமிழகம் முழுக்க உள்ள தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். பழைய திட்டம், புது திட்டம், லேட்டஸ்ட் திட்டம் என தற்போது நகைச் சீட்டில் மூன்று வகையான திட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் எதில் பணத்தைப் போடுவது லாபகரமாக இருக்கும் என்பதை அறிய களத்தில் இறங்கி, விரிவாக விசாரித்தோம். எது பெஸ்ட் என்பதைச் சொல்லும் முன்பு மூன்று தங்க நகைத் திட்டங்களையும் பார்த்து விடுவோம்.
பழைய திட்டம்!
மாதம் 1,000 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 15,000 கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 16,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக ஐந்நூறு ரூபாய்க்கு கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் நகை வாங்குபவர்களுக்கு செய்கூலி, சேதாரம், மதிப்புகூட்டு வரி போன்றவைகளில் சலுகைகள் தருவதாக நகைக் கடைகள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், இந்த திட்டம் முடியும்போது நகைகளாகவோ அல்லது காசுகளாகவோதான் வாங்க முடியும்.
புதிய திட்டம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க விலை எப்போதாவது ஒருமுறைதான் அதிகளவில் மாற்றம் காணும். ஆனால், இப்போது தினம் தினம் மாறுவதோடு, அந்த மாற்றம் பற்றிய செய்தி அடுத்த நிமிடமே டி.வி.-யிலும் இன்டெர்நெட்டிலும் வந்துவிடுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 2011-ம் ஆண்டில் மக்கள் அதிகளவில் வாங்கியது தங்க காசுகள்தான் என்று தெரிய வந்துள்ளது. தங்கம் விலை தாறுமாறாக ஏறுவதால் பின்வரும் நாட்களில் நகை வாங்க முடியாமல் போகுமோ என்கிற பயத்தில்தான் மக்கள் இப்படி காயின்களாக வாங்கி சேமித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள். இதனால் புதிதாக ஒரு சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த புதிய திட்டத்தின்படி தங்கத்தின் விலை குறையும் அன்று கடைக்குச் சென்று பணத்தைக் கட்டி தங்கத்தை 'ரிசர்வ்’ செய்து கொள்ளலாம். அதாவது, இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் கட்டலாம். மொத்தம் பதினைந்து மாதங்கள் கட்ட வேண்டும். உதாரணமாக, 2012 ஜனவரி மாதம் தொடங்கினால் 2013 மார்ச்சில் முடியும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் அந்த மாதத்திற்கான தவணையை கட்டிக் கொள்ளலாம்.
இதில் கூடுதல் வசதி என்னவெனில், ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டும் என்றில்லை. அந்த மாதத்தில் உங்களிடம் அதிக பணமிருந்தாலோ, இல்லை தங்கம் விலை குறைந்ததால் அதிகமான பணத்தை நீங்கள் கட்ட நினைத்தாலோ தாராளமாக கட்டலாம். இந்த கூடுதல் தொகை என்பது ஆயிரங்களின் பெருக்கமாகவே இருக்கும். இதற்கான தங்கம் உங்களுக்கு அன்றைய விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.
சில கடைகளில் இத்திட்டத்தின் முடிவில் தங்க நகைகள் மட்டுமே வாங்க முடியும்; காயின்களாக வாங்க முடியாது என்கின்றனர். சில கடைகளில் தங்க காயின்களும் வாங்கிக் கொள்ளலாம் என்கின்றனர். இது கடைக்கு கடை மாறுபடுகிறது. முதல் மாதம் கட்டும் தொகையில் 50% பதினைந்தாவது மாத முடிவில் இருக்கும் அன்றைய விலைக்கு நிகரான தங்கம் போனஸாக கொடுக்கப்படுகிறது. பதினைந்தாவது மாத முடிவில் நீங்கள் மொத்தம் கட்டியிருக்கும் பணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தங்கம் மற்றும் போனஸ் தங்கம் ஆகியவற்றிற்கு என மொத்தமாக நகை வாங்கிக் கொள்ளலாம். சேதாரம், செய்கூலி, வாட் உள்ளிட்டவை உண்டு.
லேட்டஸ்ட் திட்டம்!
குறிப்பிட்ட மாதங்களுக்கு என இருக்கும் இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்ச தொகையாக கட்டும் தொகையைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ கட்டிக் கொள்ளலாம். அதாவது, 2,000 ரூபாய் மாதம் கட்டும் திட்டத்தில் சேர்ந்தால், அடுத்த மாதத்தில் 5,000 ரூபாய் கட்டிக் கொள்ளலாம். அதற்கு அடுத்த மாதம் 500 ரூபாய்கூட கட்டிக் கொள்ளலாம். உங்களின் விருப்பம்போல் பணத்தின் இருப்பை பொறுத்து கட்டிக் கொள்ளலாம். திட்டம் நிறைவடையும் மாதத்தில் கூடுதலாக போனஸ் தொகையும் வழங்கப்படும்.

எது பெஸ்ட்?
மேற்சொன்ன இந்த மூன்று திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தாலும், இதில் எது பெஸ்ட் என்பதுதான் முக்கியமான விஷயம். பழைய திட்டத்தின்படி 2010, செப்டம்பர் மாதம் சீட்டு ஆரம்பித்து மாதம் 1,000 ரூபாய் கட்டிவந்தால் நவம்பர் 2011-ல் சீட்டு முடியும். ஆனால் டிசம்பர் மாதம் தான் நகை வாங்க முடியும் என்பதால் அந்த மாதத்தில் (20-ம் தேதி 2,590) ஒரு கிராம் தங்கத்தின் விலைப்படி 6.33 கிராம் வாங்கலாம்.
இதுவே புதிய திட்டத்தின்படி செப்டம்பர் 2010-ல் சீட்டு போட்டு 2011 நவம்பர் மாதத்தில் முடித்திருந்தால் அந்த மாதங்களில் தங்கத்தின் அதிகவிலையோ அல்லது குறைந்த விலையோ எப்படி நீங்கள் பணம் கட்டியிருந்தாலும் சுமார் 7 கிராம் தங்கம் வாங்கலாம். இது பழைய திட்டத்தைவிட பத்து சதவிகிதம் அதிகம். லேட்டஸ்ட் திட்டத்திலும் இதே அளவு வாங்க முடியும். இன்னும் தங்கத்தின் விலை நிலவரங்களை எஃப்.எம்., டி.வி., இன்டெர்நெட் என பல வகைகளில் உடனே தெரிந்து கொள்ள முடியும் என்பதால், விலை குறையும் நாளை பார்த்து பணத்தைக் கட்டினால் இன்னும் கூடுதலாக தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் எது பெஸ்ட் என்று சொல்லிவிட்டோம். பாரம்பரியம், நம்பிக்கை, நாணயம் கொண்ட நகைக் கடைகள் நடத்தும் திட்டங்களில் சேர்ந்து பலன் அடைய வேண்டியது நீங்கள்தான்!
- பானுமதி
(Source fromVikatan Magazine)