Tuesday, April 19, 2011

சி.டி. சர்ச்சை - சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்!


சி.டி. சர்ச்சை - சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்!
புதுடெல்லி, ஏப்.18,2011
ஊழலுக்கு எதிரான முயற்சியில் மக்களைக் குழப்பும் வகையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தனிப்பட்ட முறையில் அனுமதி தருகிறீர்களா என்று சோனியா காந்திக்கு அன்ன ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திக் விஜய் சிங்குக்கும், கபில் சிபிலுக்கும் அறிவுரை வழங்கக் கோரி, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், பிரபல வழக்கறிஞரும், லோக்பால் மசோதா வரைவு கூட்டுக் குழுவின் சமூக ஆர்வலர்கள் தலைவருமான ஷாந்தி பூஷனை சி.டி. சர்ச்சையில் சிக்க வைக்க, வேண்டுமென்றே முயற்சி நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லோக்பால் மசோதாவில் இருந்து கவனத்தைச் சிதறடிப்பதற்காகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
"ஊழலுக்கு எதிராக வலுவான சட்டத்தை இயற்றுவதற்கான கூட்டு வரைவுக் குழுவின் முயற்சிகளை கவிழ்க்கச் செய்யும் நோக்கத்தில், ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர்," என்று ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ஒருவரை லஞ்சம் கொடுத்து சரி செய்துவிடலாம் என்று சமாஜ்வாடி தலைவர்களிடம் ஷாந்தி பூஷ்ன் பேசியதாக கூறப்படும் சி.டி. வெளியான சர்ச்சையை முன்வைத்தே மேற்குறிப்பிட்ட கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பற்றி கடிதத்தில் குறிப்பிட்ட அன்னா ஹசாரே, "காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவர், கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களிடம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தவறானது. கூட்டுக் குழுவின் விவாதங்களை சீர்குலைக்கும் வகையிலேயே மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே அந்தக் கருத்துகள் உள்ளன.
உங்களது தனிப்பட்ட அனுமதியைப் பெற்ற பிறகுதான் அவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகிறார்?" என்று சோனியாவிடம் அன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அமைச்சர் ஒருவர் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் ஒன்றில், சமூக ஆர்வலர்கள் குழு விலைபோகிறார்கள் என்கிற ரீதியில் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளதாக கபில் சிபல் குறித்தும் கடிதத்தில் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறுமாறு சோனியா காந்தியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment