Wednesday, May 4, 2011

பின்லேடனைக் காட்டிக் கொடுத்தது தபால்காரரா?

பின்லேடனைக் காட்டிக் கொடுத்தது தபால்காரரா?

'கிட்னி ஃபெயிலியரால் ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார்.’ 'டைஃபாய்ட் வந்து இறந்து​விட்டார்.’ 'பின்லேடனைக் கொன்று, அவரது ஆட்களே புதைத்துவிட்டார்கள்’ - இதுவரைக்கும் எந்தத் தனிமனிதனைப்பற்றியும் இத்தனை வதந்திகள் வந்து இருக்காது. இது முளைக்கும்போதெல்லாம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து, டி.வி. சேனல்களுக்கு வீடியோ டேப் அனுப்புவார் பின்லேடன். ஆனால், இந்த வாரம் வந்த இறப்புச் செய்தியை மறுத்து இதுவரை கேசட் வரவில்லை. 'ஒசாமா,  கொல்லப்பட்டார்’ என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தொலைக்காட்சியில் ஒப்புக் கொண்டுள்ளார்.  இந்தச் செய்தியை ஒபாமா அறிவித்தபோது, அமெரிக்​காவில் ஞாயிற்றுக்கிழமை - பின்னிரவு நேரம். இருந்தும், ஏராளமான அமெரிக்க மக்கள், வெள்ளை மாளிகையின் முன்பு திரண்டு 'யு.எஸ்.ஏ... யு.எஸ்.ஏ.’ என்று பெருமையோடு அடிவயிற்றில் இருந்து சத்தமாகக் குரல் எடுத்து, மணிக்கணக்கில் கொண்டாடினார்கள். சரிந்துகொண்டு இருந்த ஒபாமாவின் செல்வாக்கு அன்று இரவு முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துஇருக்கிறது.
ஆஃப்கானிஸ்தானில் ஆட்சி செய்வது அமெரிக்​காவின் கைப்பாவை அரசு. பாகிஸ்தானோ... அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து காலம் தள்ளும் இரவல் நாடுகளில் ஒன்று. இந்த இரண்டு நாடுகளின் ராணுவம், ஆயிரக்கணக்கான வீரர்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், விமானங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பல செயற்கைக்கோள்கள்... என்று அனைத்தையும் பயன்படுத்தி அமெரிக்கா, ஒசாமாவை சல்லடை போட்டுத் தேடியது. இருந்தும், அவரது இருப்பிடத்தை 10 வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சவுதி அரேபியாவில் செல்வந்தனின் மகனாகப் பிறந்து, அரபு நாடுகளுக்காக, அமெரிக்காவை எதிர்த்துப் போராடி, பல ஆண்டு காலம் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் மறைந்து வாழ்ந்த 54 வயது ஒசாமா பின்லேடனுக்கு மொத்தம் நான்கு அல்லது ஐந்து மனைவிகள். 11 பிள்ளைகள் என்றும், இல்லை இல்லை... 23 பிள்ளைகள் என்றும் சத்தியம் செய்கிறவர்கள் உண்டு. உண்மை, பின்லேடனுக்கு மட்டுமே வெளிச்சம்!
பின்லேடனைப் பிடிக்க ஆயுதங்களும், தொழில்​நுட்பமும் இருந்தால் மட்டும் போதாது, மிகச் சரியான தொடர்புகள் வேண்டும் என்பதால், ஒசாமாவின் நான்காவது மகனான ஒமர் மூலமாக அவரைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப்போட்டு, அவரைத் தனது வெள்ளை மாளிகைக்கே அழைத்துப் பார்த்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்.
அல் ஜஸீரா சேனல் மூலமாக அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து ஒசாமா பின்லேடன் அனுப்பும் ஒவ்வொரு வீடியோ டேப்பையும் அமெரிக்கா, இன்ச் இன்ச்சாக அலசும். அதன் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும் என்று ஒசாமா, தனது டேப்புகளின் பின்னணியில் மண்ணைத் தவிர வேறு எதையுமே காட்டுவது இல்லை. இருந்தாலும் அதையே ஒரு க்ளூவாக வைத்து மண்ணியியல் அறிஞர்களைக்கொண்டு, 'இது பாகிஸ்தான் மண்ணா? காஷ்மீரை ஒட்டியிருக்கும் மண்ணா? இல்லை... ஆஃப்கானிஸ்தான் மண்ணா?’ என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு அலசியது அமெரிக்கா.
அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, 'நானோ, அமெரிக்​காவோ, இஸ்லாமியர்​களுக்கு விரோதி அல்ல’ என்ற செய்தியை  ஒபாமா அழுத்தம் திருத்தமாக உலகின் இஸ்லாமிய நாடுகளுக்குப் பிரகடனப்படுத்தினார். அப்போது, 'இந்த கதை எல்லாம் வேணாம்’ என்று ஒபாமாவைப் புறம்தள்ளிய பின்லேடன், அமெரிக்க மக்களைப் பார்த்து, ''உங்கள் ஜனாதிபதி சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்த, ஒபாமாவால் முடியாது. ஆட்சி அதிகாரத்தில் நீக்கமற நிறைந்து இருக்கும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, நீங்கள் உங்கள் நாட்டை மீட்டால் மட்டுமே இது சாத்தியப்படும்!’ என்று சொல்லி ஒபாமாவுக்கே ஓமக் கஷாயம் கொடுத்தார்!
பின்லேடனின் இருப்பிடத்தை அமெரிக்கா கடைசியாக எப்படிக் கண்டுபிடித்தது? 'அமெரிக்கா கொடுத்த அழுத்ததைத் தாக்குப்​பிடிக்க முடியாமல், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. போட்டுக் கொடுத்து இருக்கும்’ என்று ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்புகின்றன.
எட்டு மாதங்களுக்கு முன்பே, அதாவது கடந்த ஆகஸ்ட் மாதமே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் இருக்கும் அபோட்டோபாத் என்ற சிற்றூரில், பின்லேடன் தங்கி இருக்கும் வீட்டை அமெரிக்கா அடையாளம் கண்டுகொண்டது. அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற வீடுகளைவிட அது சுமார் எட்டு மடங்கு பெரியது. வீட்டைச் சுற்றி சிறையைப்போல் உயரமான மதில் சுவர். அந்த வீட்டில் தொலைபேசியோ, இன்டர்நெட் இணைப்போ இல்லை என்பதால்,  உளவு பார்ப்பது அமெரிக்காவின் உளவுத் துறையினருக்கு சுலபமானதாக இல்லை. அந்த வீட்டில் இருந்து வெளி உலகத்தோடு தொடர்புவைத்து இருப்ப​வர்கள், இரண்டே இரண்டு நபர்கள்தான். ஒருவர், வேலைக்காரப் பெண்மணி. இன்னொருவர், பின்லேடனுக்கும், அவரது ஆட்​களுக்கும் பாலமாக செயல்படும் தனிப்பட்ட தபால்​காரர். இவரைவைத்துத்தான் அமெரிக்க உளவு அதிகாரிகள் முக்கியமான பல தகவல்களைப் பெற்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் தவிர, பின்லேடன் அவரது இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளும் இங்கே வசித்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு... பின்லேடனின் வீட்டுக்குச் செல்லும் சாலைகளை 'சீல்’ செய்துவிட்டு, அமெரிக்க ராணுவம் அந்தப் பகுதியில் புகுந்தது. சில ஹெலிகாப்டர்களும் உதவி செய்ய... நள்ளிரவு 1.15 மணிக்கு அதிரடிக் காட்சிகள் ஆரம்பமாகின. ஆனால், 'அதற்குப் பிறகு என்ன நடந்தது? எப்படி நடந்தது?’ என்று தெரியவில்லை. தீப்பிடித்து எரியும் ஒரு ஹெலிகாப்டரையும், உயர்ந்த மதில் சுவர்களைக்கொண்ட ஒரு வீட்டையும் காட்டிவிட்டு, 'பின்​லேடன் இறந்துவிட்டார். இந்த அதிரடித் தாக்குதலில், அமெரிக்கா சிப்பாய்கள் யாரும் பலியாகவில்லை’ என்று ஒபாமா சொல்லி, தனது பாப்புலாரிட்டி ரேட்டிங்கைக் கூட்டிக்கொண்டு இருக்​கிறார்.
பின்லேடன் மறைந்து வாழ்ந்த வீட்டுக்கும், பாகிஸ்தானின் மிலிட்டரி அகாடமிக்கும் இடையே இருந்தது மிகச் சில மீட்டர்களே என்பதுதான், இதில் கவனிக்க வேண்டிய விஷயம். 'ஒசாமா, பாகிஸ்தானில்தான் மறைந்து  இருக்கிறார்’ என்று கோபக் குரல்கள் எழுந்தபோது, அதை மறுத்த பாகிஸ்தான், 'பின்லேடன் கொல்லப்பட்டதில், தனக்கும் பங்கு இருப்பதாக’ இப்போது சொல்ல ஆரம்பித்து உள்ளது.
எந்த வகையில் பார்த்தாலும் பின்லேடனின் மரணம்கூட பிரமாண்டமானதுதான்!
- பி.ஆரோக்கியவேல்
Source - Vikatan Magazine

No comments:

Post a Comment