கருணாநிதி குடும்பத்தின் மீது 'கார்' அட்டாக்!
அடுத்த பூகம்பம் ஆரம்பம்
2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார்.
மயிலாப்பூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் இருந்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர்தான், விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்துப் பயணிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் நம்பர் ஜிழி06 ணி 0001. 'இதை மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தினார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர்தான் அவருக்கு இந்த காரை பரிசாகக் கொடுத்தார்!’ என்று முதலில் செய்தி கசிந்தது. ஏற்கெனவே காலாவதி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் ஒரு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாகக் கொடுத்ததாக, இதே சபரீசன் மீது புகார் கிளம்பியது நினைவு இருக்கலாம்.நாம் சென்னை தி.நகரில் இருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்றபோது, அந்த காரின் நம்பர் பிளேட்டைக் கழற்றி எடுத்துவிட்டார்கள். யாரும் அதை படம் எடுக்க முடியாதபடி காரை கவர் போட்டு மூடி இருந்தார்கள். இந்த கார் விவகாரம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, 'கருணாநிதி குடும்பத்தில் யார் யார், என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள், அவற்றின்நம்பர்கள் என்ன என எல்லா விவரங்களும் எனக்கு உடனடியாகக் கொடுங்கள்!’ என உளவுத் துறையிடம் கேட்டு இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தினரிடம் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சொகுசு கார்கள் இருக்கின்றனவாம். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி 'ஹம்மர்’ சொகுசு காரை பயன்படுத்துகிறார். கருணாநிதியின் பயணத்துக்கு என்று 'லம்போகினி,’ 'ஆஸ்டன் மார்டின்,’ 'மாடிஃபைடு பென்ஸ்’ ஆகிய மூன்று கார்கள் உள்ளன. கருணாநிதி பெரும்பாலும் பென்ஸில்தான் பயணிக்கிறார். இந்த காரில், ஏ.சி. காற்று கீழ்ப்புறத்தில் இருந்து வருவது ஸ்பெஷல். 'கருணாநிதியின் சொந்தபந்தங்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களுக்கும் முறையாக வரி கட்டப்பட்டு உள்ளதா?’ என்று அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணையில் குதித்து இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார் சபரீசன் பயன்படுத்தியது அல்ல. உதயநிதி ஸ்டாலின்தான் பயன்படுத்தினார். அதற்கான வீடியோ ஆதாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி வசம் உள்ளது என்றும் இன்னொரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் (சென்னை) ராஜனிடம் பேசினோம். ''சென்னையில் நாங்கள் பறிமுதல் செய்த சொகுசு கார் பஷீர் அகமது என்பவருக்குச் சொந்தமானது. அவரது மயிலாப்பூர் வீட்டில்தான் அதைப் பறிமுதல் செய்தோம். இதற்கு முன்பு அந்த காரை அரசியல் பிரபலங்கள் யாரும் பயன்படுத்தினார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எங்களின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும்...'' என்றார்.
இது குறித்து, சபரீசனைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், பதில் பெற இயலவில்லை! அவர் விளக்கம் வந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம்.
- தி.கோபிவிஜய்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment