Thursday, April 21, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர்ஜெயந்தினி
எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது... 'ஒபிஸிட்டி' (Obesity)எனப்படும் உடல் பருமன் பிரச்னை. 5 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினரிடையே பெரும் பிரச்னையாக இது உருவெடுத்து நிற்கிறது.
'இந்தியாவின் பெரும் பலம் என்று கருதப்படும் மனித வளத்தையே, இந்த ஒபிஸிட்டி, எதிர்காலத்தில் நலம் இழக்கச் செய்துவிடும்' என்று மருத்துவ உலகம் பெரும் கவலையோடு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்படியரு அச்சுறுத்தலாக எழுந்து நிற்கும் 'உடல் பருமன்' பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, 'குழந்தைகளுக்கு போதுமான உடல் இயக்கம் இல்லை' என்பதுதான்! சுருக்கமாகச் சொன்னால்... 'அவர்கள் விளையாடுவது இல்லை' என்பதுதான்.
மாறி வரும் காலச் சூழலும் வாழ்க்கை முறையும் விளையாட்டை இரண்டாம்பட்சமாகக் கருத வைத்துவிட்டன. பள்ளிக்கூடத்தில், 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா’ என பாரதியாரின் பாடலை அழகாகப் படித்துவிட்டு, வீட்டுக்கு வரும் குழந்தை... டியூஷன், டி.வி, சாப்பாடு, தூக்கம் என ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறது. அந்த வட்டத்துக்குள், விளையாட்டு என்பது நேரத்தைக் கொல்லும் விஷயமாகவே பெரும்பாலான பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடாது... விளையாட்டும் அவர்களின் வாழ்க்கையையும் அந்தப் பருவத்தையும் அழகாக்கும்; அர்த்தமுள்ளதாக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
''அப்படி என்ன நல்லது செய்துவிடும் விளையாட்டு?'' என்கிறீர்களா தோழிகளே?! விளையாட்டு உங்கள் குழந்தையின் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை, கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும். அத்தகைய சீரான இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது!
நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும். நன்றாகச் சாப்பிடுவார்கள். ''காலையில எழுந்து கஷ்டப்பட்டு ருசியா, வெரைட்டியா சமைச்சுக் கொடுத்தா... லஞ்ச்சை அப்படியே திருப்பிக் கொண்டு வந்துடுறா எங்க பூஜா'' என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குழந்தையின் ஜீரண உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும்.

ஓடியாடி விளையாடி, நன்கு சாப்பிட்டுப் படுத்தால்... குழந்தை ஆழ்ந்து உறங்கும். தினமும் சரியான அளவுக்குத் தூங்கும் குழந்தை... எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் மனது, உடல், செய்கைகள் தெளிவாக இருக்கும். சரியாகத் தூங்காமல் பள்ளிக்குப் போய், கணக்கு டீச்சர் அல்ஜீப்ரா நடத்தும்போது அசந்து தூங்கி, கடைசி வரை அந்தக் குழந்தைக்கு அல்ஜீப்ரா புரியாமலே போகலாம்.
ஆக... விளையாட்டு, நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது என்பது உறுதியாகிறது. பிறகென்ன... குழந்தைகளை விளையாடவிட வேண்டியதுதானே... அம்மாக்களே-அப்பாக்களே!
பண்புள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, புத்திசாலியாக, திறமைசாலியாக குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உங்களின் லட்சியம் நிறைவேற, இந்த விளையாட்டுதான் கை கொடுக்கும்.
உதாரணத்துக்கு, உங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 'கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு குழந்தை மட்டும் ''தேன்மொழி, அமுதா, ரம்யா, சுரேஷ், கண்ணன் எல்லாரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடலாம்... வர்றீங்களாப்பா?'' என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் (Organising).
அடுத்து, யார் கண்ணைப் பொத்திக் கொள்வது, கண்டுபிடிப்பது என்பதைத் திட்டமிடுவார்கள் (Planning). இடையில் யாராவது 'சுரேஷ் தென்னை மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான்’ என்று சைகை காட்ட... பிரச்னை வந்து, அவனை விளையாட்டிலிருந்து வெளியேற்றலாம் என்று யாராவது முடிவு செய்தால்... ''சரிப்பா, இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னிச்சு சேர்த்துக்கலாம்'' என்று விட்டுக் கொடுக்கும் குணத்தை (Adjustment and adaptability) பழகுவார்கள்.
கபடி போன்ற டீம் விளையாட்டுகளில், ''நம்ம டீம் கண்டிப்பா ஜெயிக்கணும்'' என்று உறுதி ஏற்கும்போது... அவர்களுக்குள் குழு மனப்பான்மையும் (Team spirit),, ''டேய், நம்ம டீம்ல ஆள் பத்தல, அடுத்த தெரு சங்கரை சேர்த்துக்கலாமா... கூட்டிட்டு வாங்கடா'' என்கிற முடிவில் சமூகமயமாதல் பண்பும் (Socialisation)வளர்கின்றன!
இவற்றையெல்லாம் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளும் குழந்தைதான்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது. அதுதான் அவர்களை திறமையுள்ளவராகவும் மனிதநேயம் மிகுந்த மனிதர்களாகவும் மிளிர வைக்கிறது.
''எல்லாம் சரி. முன்ன மாதிரியெல்லாம் விளையாடறதுக்கு எங்க இடமிருக்கு... போதுமான நேரமும் இல்லையே?'' என்ற கேள்வியை ரெடியாக வைத்திருக்கிறீர்கள்தானே?!
- வளர்ப்போம்...
படம்: என்.விவேக்

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment