| 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது... திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்! | |||||
புதுடெல்லி, மே 20,2011 ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.கனிமொழியை உடனடியாக கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். இதேபோல், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார். கனிமொழி, சரத்குமார் இருவரும் மாலை 4 மணிக்கு மேல் திகார் சிறைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளளனர். (தொடர்புடையச் செய்தி: கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! ) மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக, நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் ரூ.1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், முக்கியப் பங்கு உள்ளது என சிபிஐ-யின் முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும் பங்கு உள்ளது என்ற சிபிஐ, அவரது பெயரை துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. கூட்டு குற்றச்சதி செய்ததாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டது. கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பெண் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் அளித்தாக வேண்டும் என்றும் ராம் ஜெத்மலானி வாதிட்டார். அதேநேரத்தில், கலைஞர் டிவி நிர்வாகத்தில் துவக்கம் முதல் மூளையாக இருந்து செயல்பட்டவர் கனிமொழியே என்றும், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிமன்றம், முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை வருமான வரி அலுவலகத்தில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரான பிறகு, கனிமொழியும் சரத்குமாரும் மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 14-ல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, மே 20-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர். கலைஞர் டிவியின் செயல்பாடுகளின் பின்னணியில் கனிமொழி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்றும், 2009-ல் ஆ.ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக மீண்டும் நியமிப்பது தொடர்பாக திமுக தலைமையகம் மற்றும் இடைத்தரகர்களுடன் கனிமொழி தொடர்ந்து தொடர்புகொண்டு பேசிவந்துள்ளார் என்றும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது. சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய ரூ.214 கோடி பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே சிபிஐ-யின் குற்றச்சாட்டு. ஆனால், பால்வாவின் நிறுவனம் மூலம் பெற்றது கடன் தொகையே என்றும், அதனை திருப்பித் தந்துவிட்டோம் என்றும் கலைஞர் டிவி தரப்பு விளக்கம் அளித்து வந்தது கவனத்துக்குரியது. | |||||
Source - Vikatan Magazine
ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment