ஒரு பவுன் ரூ.36 ஆயிரம் ?
கல்யாண கனவுகளைக் காப்பாற்றுவது எப்படி ?
ம.பிரியதர்ஷினி
'இருபத்தி நான்கு கேரட் தங்கம், ஒரு பவுன் 20,648 ரூபாயாக உயர்ர்ர்ர்ர்ர்ந்திருக்கிறது....'தலைப்புச் செய்திகளில் தொடங்கி தெரு பெண்களின் குழாயடிச் சந்திப்பு வரை இப்போது பேசப்படுகிற விஷயம்... இதுவரை காணாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு பற்றித்தான்.
நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே தோடு, செயின், மூக்குத்தி, மோதிரம்... என்பது போன்ற நகைகள்தான். ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்கவும் உதவும் என்பதால், இந்த மக்களின் முழு முதலீடும் தங்கமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அதிலும் ஆடி மாதம் முடிந்து, திருமண மாதமான ஆவணி தொடங்க இருக்கிற இந்நிலையில் வயிற்றில் அடுத்தடுத்து இடியை இறக்கிக் கொண்டே இருக்கும் 'தங்க விலை உயர்வு' செய்தி... மக்களை மிகுதியாகவே கலங்கிப் போகச் செய்திருக்கிறது!எந்த ஒரு விஷயத்துக்கும் முடிவு என்று ஒன்று கணிக்கப்படும். ஆனால், கணிப்புக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது தங்கத்தின் விலை. 'கண்டிப்பா ஒருநாள் சடார்னு தங்கத்தோட விலை குறையும் பாருங்க... அப்போ தங்கத்துக்கு மதிப்பே இல்லாமப் போகப்போகுது’ என்பது மாதிரியான 'நம்பிக்கை’ பேச்சுக்கள், தங்கம் விலையேறும் சமயத்தில் எல்லாம் எழுகிறது. ஆனால், 'அதற்கெல்லாம் சான்ஸே இல்லை' என்று சொல்லிச் சிரிக்கிறது தங்கம்!

''தங்கம் விலை உயர்ந்திருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 'ஒரு பவுன் தங்கத்தின் விலை இருபதாயிரத்தைத் தொடும்' என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எதிர்பார்த்தோம். அது இன்று நடந்திருக்கிறது'' என்று அதிரடியாக ஆரம்பித்தவர்,
''அத்தியாவசியப் பொருட்களில் இருந்து பள்ளிக் கட்டணம் வரை அனைத்தும் முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்காக அதையெல்லாம் நாம் வாங்காமல் இருப்பதில்லை. தங்கமும் அப்படித்தான். விலை உயர்கிறது என்பதற்காக யாரும் வாங்காமல் இருக்கப் போவதில்லை. வாங்கும் அளவு வேண்டுமானால் குறையலாம்.உலகளவில் தங்கச் சுரங்கங்கள் சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. தங்கச் சுரங்கங்களில் வேலை பார்ப்பது மிகக்கடினம் மற்றும் ஆபத்தான வேலையும்கூட. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சம்பளம் குறைவு என்பதால், சம்பள உயர்வு கேட்டு அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் அந்நாட்டு மக்கள். இதனால் தங்கம் எடுக்க முடியாமல் போய், கையிருப்புத் தங்கத்தை அதிகம் பேருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது... விலையும் அதிகரிக்கிறது.

''நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான்'' என்று ஆணித்தரமாகச் சொன்னார்.
தங்கம் விலை ஏறிக் கொண்டிருக்கிற இந்நிலையில், தங்க நகைக் கடைகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய சென்னை, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் மேனேஜிங் டைரக்டர் அனந்த
பத்மநாபனிடம் பேசினோம். ''இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை ஏறிக்கொண்டு இருந்தாலும், முன்பைவிட அதிகமாக மக்கள் வாங்கத் துவங்கிஇருக்கிறார்கள் என்பதும் உண்மை. தங்கம் என்பது மதிப்புமிக்க விஷயம் என்பதால் மக்களிடம் எப்போதும் அதற்கு மதிப்பு உண்டு. விலை ஏற ஏற... எந்தெந்த வழிகளில் எல்லாம் தங்கத்தை வாங்கலாம் என்று மிடில் கிளாஸ் மக்கள் யோசிக்க துவங்கிவிட்டார்கள். அதற்கெனவே தங்க நகைச் சீட்டு போன்ற விஷயங்கள் இருப்பதால், விலை ஏறும்போதும் சிறுகச் சிறுக சேமித்து அதற்கேற்ப தங்கம் வாங்கி விடுகிறார்கள்'' என்று தன்னுடைய பார்வையைச் சொன்னார்.பொதுவாக அப்பர் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் சமூகத்து மக்களுக்கு, தங்கம் விலை ஏறினாலும் அதற்கேற்ப தங்கள் வருமானமும் ஏறுவதால், அங்கே பாதிப்பு தெரிவதில்லை. ஆனால்... மிடில் கிளாஸ் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ் மக்களின் நிலை?
கோவையைச் சேர்ந்த வளர்மதி பேசியது... அந்த மக்களின் பிரதிநிதித்துவமாகவே தோன்றியது நமக்கு. அவர் சொன்னது... ''என் கணவர் டிரைவரா இருக்கார். நான் அக்கவுன்டன்ட்டா இருக்கேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. 'தங்கம் விலை கிடுகிடு உயர்வு’னு நியூஸ்ல கேட்கற அன்னிக்கு ராத்திரி எல்லாம் என் தூக்கம் தொலைஞ்சு போயிடுதுங்க. பசங்க ஸ்கூல் ஃபீஸ், காலேஸ் பீஸ், வீட்டு செலவுனு எல்லாத்தையும் சமாளிச்சு நிமிர்ந்தா... விலைவாசி உயர்வு, தங்கம் விலை உயர்வுனு அப்பப்போ குண்டைத் தூக்கி போடுறாங்க. ஒவ்வொரு தடவையும் சிறுகச் சிறுக ஒரு பத்தாயிரம் ரூபா அளவுக்கு சேர்த்து தங்கம் வாங்கலாம்னு நினைச்சுட்டு இருப்பேன். சேர்த்து முடிக்கறதுக்குள்ள கூடுதலா ஆயிரம், ரெண்டாயிரம் விலை கூடியிருக்கும். இப்போ நான் சேமிக்கற பணத்துல கிராம்லதான் தங்கம் வாங்க முடியும் போல'' என்றவர்,
''தங்கம் எவ்வளவு விலை கூடினாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிறதை குறைச்சுக்க மாட்டாங்களே?!'' என்று வருந்தினார் மிடில் கிளாஸ் அம்மாவாக.
வரும் காலங்களில், 'வாடி என் தங்கம்!’ என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ?!
இப்படிச் சேமிக்கலாம்... எளிதாக!
'அப்படி இப்படி சேமிச்சு... கொஞ்சம் கொஞ்சமா தங்கம் வாங்கலாம்னா... பங்கத்தை ஏற்படுத்துதே இந்த விலை ஏத்தம்!' என்று கவலைப்படுகிறீர்களா?டோண்ட் வொர்ரி...
முகம் தெரியாத மனிதர்களிடம் 'தங்கச் சீட்டு' என்று ஏமாறாமல், அரசாங்கத்தின் ஒப்புதலோடு கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன... தைரியமாக முதலீடு செய்வதற்கு! உங்கள் ஊர்களில் இருக்கும் ஷேர் புரோக்கர்கள் அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்களை அணுகினாலே போதும்!
இ.டி.எஃப்(Exchange Trader Fund)கோல்ட்: இது, சிறுசேமிப்பு போல தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கான அற்புத பிளான். 'கோட்டக் கோல்ட்’, 'கோல்ட் பீஸ்’, 'ஸ்டேட் பேங்க் கோல்ட்’ என நல்ல ஸ்கீம்கள் இருக்கின்றன. இவற்றில் சேர்வது எளிது. (மார்க்கெட் நிலையைப் பொறுத்து) குறைந்தது மாதம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயை மேற்சொன்ன கம்பெனிகளின் இ.டி.எஃப் பிளானில் இன்வெஸ்ட் செய்யலாம். விரும்பும்போது, மார்க்கெட் விலைக்கு விற்றுப் பணமாக்கி, கடைகளில் தங்கம் வாங்கிக் கொள்ளலாம். பெண்ணின் கல்யாணத்துக்கு சேர்க்கத் துவங்கிவிட்டால், தங்கம் விலையேறினால்கூட கவலைப்பட தேவையில்லை.
நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச்: ஈ கோல்ட், ஈ சில்வர், ஈ காப்பர் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் இன்வெஸ்ட் செய்யலாம். (மார்க்கெட் நிலையைப் பொறுத்து) குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வீதம் இன்வெஸ்ட் செய்யலாம். விற்கும்போது, தங்கமாகவே வாங்கிக் கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்: பல கம்பெனிகளில் கோல்ட் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் இருக்கின்றன. குறைந்தபட்சம் நூறு ரூபாயில் இருந்து மாதாமாதம் இன்வெஸ்ட் செய்து கொண்டே வாருங்கள். தேவையின்போது மார்க்கெட் விலைக்கு விற்றுப் பணமாக வாங்கிக் கொள்ளலாம்.
படங்கள்: தி.விஜய்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment