Monday, April 4, 2011

மு.க.சர்க்கார்!

அரசியல் ஆக்டோபஸ்!
ப.திருமாவேலன்
படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன்

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!
ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!


42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை. அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு. இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!


குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள். ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை. ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார். கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!


இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத் துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.
தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!


டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!
 மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
 தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!
 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!
 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
  சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!
கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!
 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

 Source - Vikatan Source

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

வாசகிகள் கைமணம்

 'சுள்'ளு னு இருக்கு சில்லி பூரி !
 சில்லி பூரி
தேவையானவை: பூரி - 10, வெங்காயம் - 3, குடமிளகாய், கேரட், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது, சோயா சாஸ் - தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கரண்டி, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பூரியை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது,  கீறிய பச்சை மிளகாய், கேரட், தக்காளி, குடமிளகாய்,  மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் பால் விட்டு, கொதித்து சுண்டியதும் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறி... பூரி துண்டுகள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- லஷ்மிதேவி, புத்தூர்
கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு
தேவையானவை: சிறு துண்டுகளாக நறுக்கிய கமலா ஆரஞ்சுத் தோல் - 100 கிராம் (அரை கப்), புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 5 (கீறிக் கொள்ளவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, அச்சு வெல்லம் - 1, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், வறுத்து அரைத்த எள்ளுப்பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை சேர்த்து சிவப்பாக வறுக்கவும். கமலா ஆரஞ்சுத் தோல், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு, வெல்லம், கறிவேப்பிலை, எள்ளுப்பொடியை சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
- சரஸ்வதி ராமசாமி, கோவை
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் அவருடைய கமென்ட்ஸ்... சில்லி பூரி: சாப்பிடும்போது சீஸ் துருவலை மேலாக தூவி சேர்க்கலாம். டேஸ்ட் அருமையாக இருக்கும். கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு: எள்ளுப்பொடிக்கு பதிலாக கசகசாவை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை வித்தியாசமாக இருக்கும்.
 படங்கள்: வி.செந்தில்குமார்

Source - Vikatan Magazine

ஹலோ ஜாக்கிரதை !

ஹலோ ஜாக்கிரதை !
ஆண்களின் வலையில் சிக்காதீர்கள்!
 நான், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். கணவருடன் அடிக்கடி பிரச்னைகள் எழுந்து கொண்டிருந்த நிலையில், இளம் வயதில் எனக்கு அறிமுகமான ஒருவரை, சில வருடங்களுக்கு முன் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவரின் அன்பான வார்த்தைகளிலும், அக்கறையான பேச்சிலும் மதி மயங்கி, உள்ளத்தாலும், உடலாலும் இன்று அவருடன் தொடர்பு வைத்திருக்கிறேன். குழந்தைகள் பெரியவர்களாக வளர வளர, நான் செய்வது எத்தனை பெரிய தவறு என்பதை உணர முடிந்தாலும், இன்று வரை அவரிடமிருந்து விடுபட முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேன்.
பேசும்போதே என் குரல் நடுக்கத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. என் மனபாரத்தை அவள் விகடனிடம் இறக்கி வைக்கிறேன்... பாவ மன்னிப்பு கேட்கும் மனநிலையில்தான் இப்போது பேசுகிறேன். தோழிகளே... கணவரிடம் மனக்கசப்பு எனில் அவரிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஆனால், வேறு ஆண்களின் வலையில் சிக்கினால், என்னைப் போல காலம் முழுவதும் கண்ணீர் விடும் நிலைதான் ஏற்படும்.
- குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகிக் கொண்டிருக்கும் ஒருத்தி
நேயர் கடிதத்துக்கு 1,500 தண்டம்!
நான்கு மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நடத்திய பரிசுப் போட்டி கேள்விக்கு, நான் பதில் எழுதிப் போட்டேன். சமீபத்தில் எனக்கு ஒரு போஸ்ட் கார்டும், ஒரு பார்சல் தபாலும் (வி.பி.பி.) வந்திருந்தது. அந்த போஸ்ட் கார்டில், 'உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. இதற்காக பார்சல்
தபால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 1,500 கட்டி அதை வாங்கிக் கொள்ளவும்’ என்று எழுதியிருந்தது. என் கையெழுத்தில், ஏற் கெனவே அவர்களுக்கு நான் எழுதியிருந்த என் வீட்டு முகவரியை கட் செய்து, அந்த போஸ்ட் கார்டின் பின்புறம் ஒட்டியிருந்ததால், அதன் மீது முழுநம்பிக்கை கொண்டு, 1,500 கட்டி வாங்கிக் கொண்டேன். பிரித்துப் பார்த்தால்... உள்ளே பல் இளித்தன காகிதக் குப்பைகள். பிறகுதான் புரிந்தது நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற விஷயம்.
சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத் துக்கு அனுப்பப்பட்ட என்னுடைய கடிதம் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அதை அவர்கள் சரிவர கிழித்துப் போடவில்லை. விளைவு, யாரோ பயன்படுத்திக் கொண்டு இப்படி ஏமாற்றிவிட்டார்கள்.
திட்டமிட்டே இப்படி ஒரு கும்பல் நிறைய பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதோ என்று சந்தேகிக்கிறேன். எனவே, பத்திரிகைகள், சேனல்கள் என்று பொதுமக்களோடு தொடர்புடைய நிறுவனங்கள் இந்த விஷயத் தில் எச்சரிக்கையோடு நடந்து கொண்டு, உரிய வகையில் வாசகர்கள் மற்றும் நேயர் களின் கடிதங்களைப் பராமரிக்கவோ அல்லது அழிக்கவோ முயற்சி எடுக்க வேண்டும்.
- பணத்தை இழந்த வருத்தத்தில் ஒரு வாசகி
இப்படி உங்களுக்கும் ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதையெல்லாம் இரண்டே நிமிடத்தில் இங்கே இறக்கி வையுங்கள். அது, நீங்கள் சிக்கிக் கொண்டதாகவோ... அதிலிருந்து மீண்டதாகவோ... சிக்கலில் மாட்டிக் கொண்டவரை விடுவித்ததாகவோ... எப்படியும் இருக்கலாம். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி வைப்பதோடு, 'அவள் விகடன்' மற்றும் விகடன் டாட் காம் (http://www.vikatan.com/) ஆகிவற்றில் பிரசுரமாகி, மற்ற தோழிகளுக்கு எச்சரிக்கையாகவும் அமையப்போகிறது.!  உங்கள் அடையாளங்கள் எதையுமே நீங்கள் தரத் தேவையில்லை. ரகசியத்துக்கு நாங்கள் 100% கியாரன்டி!
உடனே, உங்கள் செல்போனிலிருந்து  04442890003 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.
 வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது. 

Source - Vikatan Magazine

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

வாசகிகள் பக்கம்
'டூ மினிட்ஸ்ல வெறும் சாலட், பச்சடி மட்டும்தான் பண்ண முடியும்'னு நினைப்போம். ஆனா, சமையலையே முடிச்சுட முடியும்ங்கிறத தொடர்ந்து நிரூபிச்சுக்கிட்டே இருக்காங்க வாசகிகள்.
வந்து குவியற ரெசிபிகள்ல இருந்து, இந்த இதழுக்கு வடை மற்றும் பச்சடி ரெசிபியை தேர்ந்தெடுத்து தந்திருக்காங்க 'சமையல் திலகம்’ ரேவதி சண்முகம் - கமென்ட்ஸோட!
சமைச்சுக் கொடுத்து ஜமாய்ங்க!

பூசணிக்காய் பச்சடி

கல்யாண பூசணியைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, கொட்டை நீக்கிய திராட்சை, மாதுளை முத்துக்கள், சிறிது தயிர் சேர்த்துக் கலந்து சாப்பிடவும். வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சி பச்சடி.
- எம்.வனிதா, கரூர்
கமென்ட்: துருவிய கேரட், நறுக்கிய பேரீச்சம்பழம், ஊற வைத்து பொடியாக நறுக்கிய பாதாம் ஆகியவற்றைச் சேர்த்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

வெங்காய வடை

பொட்டுக்கடலை மாவுடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தெடுக்கவும். ருசியான வெங்காய வடை ரெடி!
- ஜெயா சங்கரன், சென்னை-41
கமென்ட்: மாவு பிசையும்போது பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயை அதிகம் காயவிடாமல் இந்த வடையை செய்ய வேண்டும். இல்லையெனில் கருகிவிடும்.
நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! பிரசுரமாகும் சிறந்த ரெசிபிகளுக்கு வழக்கம் போலவே சிறப்பான பரிசு உண்டு! பரிசுக்குரிய ரெசிபிகளோடு மற்ற ரெசிபிகளும் விகடன் டாட் காம் (www.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்!
உடனே உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.
வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.

Source - Vikatan Magazine

30 வகை சம்மர் ரெசிபி

30 வகை சம்மர் ரெசிபி

'இதோ வந்துட்டோம்ல...' என்பது போல ச்சும்மா சுள்ளென்று வாட்டியெடுக்க ஆரம்பித்துவிட்டார் சூரிய பகவான் வழக்கம்போல! நாமும் வழக்கம்போல சமாளித்துதானே ஆகவேண்டும்!
 என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!

கிர்ணிப்பழ கீர்
 தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
 பயறு தோசை
தேவையானவை: முழுப்பயறு (பச்சைப் பயறு முழுதாக), பச்சரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
தர்பூசணி பக்கோடா
தேவையானவை: தர்பூசணி - பாதி அளவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், புதினா இலை, நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும். இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
 கலர் லெமன் சர்பத்
தேவையானவை: தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6, கேரட் - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
 கீரை சாதம்
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். அரிசியைப் பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
 அவல் - நுங்கு சாலட்
தேவையானவை: நன்றாக சுத்தம் செய்த சிவப்பு அவல், நுங்கு துண்டுகள் - தலா 100 கிராம், பனங்கல்கண்டு - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - சிறிதளவு.
செய்முறை: அவலுடன் நுங்கு, கேரட், பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.நுங்கில் உள்ள தண்ணீரில் அவல் ஊறிவிடும். சாப்பிட சுவையாக இருக்கும்.
 வெந்தய மசியல்
தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து,  புளிக் கரைசலை ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம் - பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
 பரங்கிக்காய் அடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து... மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
 ஸ்டஃப்டு புடலை
தேவையானவை: சிறிய குழல் வடிவில் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - 6, துருவிய கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 50 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். துருவிய கோஸ்,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வறுத்த கடலைமாவைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். நறுக்கிய புடலங்காய்களில் உட்புறம் இருக்கும் விதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதில் மசாலா கலவையை நிரப்பவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடைத்த புடலைங்காய்த் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மெள்ள வதக்கி எடுக்கவும்.
 கிடாரங்காய் சாதம்
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், கிடாரங்காய் - பாதி அளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை உதிர் உதிராக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும். கிடாரங்காயை சாறு பிழிந்து கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, கிடாரங்காய் சாறையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 சுரைக்காய் அல்வா
தேவையானவை: துருவிய சுரைக்காய், திக்கான பால் - தலா 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கலர் பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 50 கிராம், துருவிய முந்திரி - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான கடாயில் நெய் விட்டு, சுரைக்காய் துருவலைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை போக வதங்கியதும் பாலை விட்டு, நன்றாகக் கொதித்து கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும். பிறகு கலர் பவுடர், துருவிய முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும்.
 கொத்தமல்லி குணுக்கு
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, மைதா மாவு - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, ரவை - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்த மல்லியைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ரவை, மைதா மாவு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சின்னச் சின்ன குணுக்குகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக் கவும்.
 பீர்க்கங்காய் கூட்டு
தேவையானவை: பீர்க்கங்காய் - 1, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பீர்க்கங்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். சிறிது எண்ணெயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து அரைக்கவும். வெந்த பருப்புகளுடன், பீர்க்கங்காய் சேர்த்துக் கொதிக்க வைத்து, காய் நன்றாக வெந்ததும்... வறுத்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொதிக்கும் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
 பூசணிக்காய் அவியல்
தேவையானவை: பூசணிக்காய் - 2 கீற்று, பச்சை மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,  புளிப்பில்லாத தயிர் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெயில் வறுத்து... தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெந்த பூசணியுடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்து, அவியலில் சேர்த்து, தயிரை விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.
 வாழைத்தண்டு சூப்
தேவையானவை: வாழைத்தண்டு - 1, வெண்ணெய், துருவிய கேரட் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, ஸ்வீட் கார்ன் - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு... வெங்காயம், கேரட், ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, அரைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்து, கொதித்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
 ஜவ்வரிசி மோர்க்களி
தேவையானவை: மாவு ஜவ்வரிசி, தயிர் - தலா 200 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், மோர் மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வந்ததும் இறக்கவும்.
 முள்ளங்கி ரோல்ஸ்
தேவையானவை: துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 100 கிராம், கோதுமை மாவு, மைதா மாவு - தலா 50 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிது உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். முள்ளங்கி சேர்த்துப் பிசைந்த மாவை சிறு அப்பளங்களாக இட்டு, அதில் சிறிது மசாலா கலவை வைத்து மூடி, உருளை வடிவில் செய்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 ஐஸ்க்ரீம் வித் சப்ஜா விதை
தேவையானவை: சப்ஜா விதை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பழக்கலவை (பைனாப்பிள், ஆப்பிள், திராட்சை, கிர்ணி)  - 200 கிராம், சைனா கிராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 50 கிராம், சர்க்கரை - 25 கிராம், வெனிலா ஐஸ்க்ரீம் - மீடியம் சைஸ் கப், விரும்பிய கலர் பவுடர் - சிறிதளவு.
செய்முறை: சைனா கிராஸை தண்ணீரில் நனைத்து பத்து நிமிடம் வைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டு சூடாக கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கலர் பவுடர் சேர்க்கவும். சிறிது நேரத்தில் நன்றாக செட்டாகிவிடும். இதை தனியே எடுத்து வைக்கவும்.
சப்ஜா விதையில் சிறிது தண்ணீர் விட்டு வைக்கவும். ஒரு ஐஸ்க்ரீம் பவுலில் பழக்கலவை, ஐஸ்க்ரீம், சைனா கிராஸ், சப்ஜா விதை என ஒவ்வொன்றின் மேல் ஒன்றாக போட்டு பரிமாறவும்.
 சுரைக்காய் பொரியல்
தேவையானவை: சுரைக்காய் - 1, சின்ன வெங்காயம் - 10,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுரைக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் சுரைக்காய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கடைசியில் வேர்க்கடலைப்பொடியைத் தூவி இறக்கவும்.
 நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 100 கிராம், இஞ்சி - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தயிர் - 100 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காய் களைத் துருவி... இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து தயிரில் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
 மிக்ஸட் சாலட்
தேவையானவை: நறுக்கிய தக்காளி, ஊற வைத்து முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், நறுக்கிய தர்பூசணி, வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு - தலா அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவையான அளவு, ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தக்காளி, பயறு, வெள்ளரிக்காய், மாதுளை, தர்பூசணி, வெங்காயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு... சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். கொத்தமல்லியை மேலாகத் தூவவும்.
 சௌசௌ ஸ்ட்டூ
தேவையானவை: சௌசௌ - 1, தேங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியான பால் எடுக்கவும். வேக வைத்த சௌசௌவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து, பச்சை மிளகாயைக் கீறி சேர்த்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
 தக்காளி ஜாம்
தேவையானவை: பெங்களூர் தக்காளி - 10, சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தக்காளியை கேரட் துருவியால் மெள்ள துருவிக் கொள்ளவும். அடி கனமான கடாயில் துருவிய தக்காளி, சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். ஜாம் பதத்துக்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
 நாரத்தை பச்சடி
தேவையானவை: நாரத்தங்காய் - 5, வெல்லம் - 250 கிராம், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நாரத்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நாரத்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு,  வெல்லத்தை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
 பரங்கிக்காய் சட்னி
தேவையானவை: பரங்கிக் காய் - ஒரு கீற்று, காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைபாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, பரங்கிக்காயை நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
 இளநீர் - பால் ஜூஸ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வழுகல் தேங்காய், இளநீர் - தலா 100 கிராம் (வழுகலுடன் சேர்ந்த இளநீராக இருக்க வேண்டும்), திக்கான பால் - 200 கிராம், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: வழுகல் தேங்காயுடன் இளநீர், சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து, பால் ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்று கொடுக்கவும்.
 வெண் பூசணி தோசை
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, தோல், விதை நீக்கிய பூசணிக்காய் - ஒரு கீற்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து, பூசணிக்காயை நறுக்கி சேர்த்து மையாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கரைக்கவும். மாவு சிறிது புளித்தவுடன், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, மாவை தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
 பனங்கல்கண்டு அப்பம்
தேவையானவை: பனங்கல் கண்டு, மைதா மாவு - தலா 100 கிராம், வெல்லம், அரிசி மாவு - தலா 25 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் வெல்லத்தை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி, பனங்கல் கண்டை சேர்த்து, கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சிறிது ஆறியதும் மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இந்த மாவை அப்பக்குழியில் ஊற்றி அப்பங்களாக வார்த்தெடுக் கவும்.
 இளநீர் ஆப்பம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 200 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், இளநீர் - 1,  ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், பால் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி வகைகள், உளுத்தம்பருப்பை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.
 ஆரஞ்சு கத்லி
தேவையானவை: ஆரஞ்சு - 2, முந்திரி - 200 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: முந்திரியை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும், இதில் ஆரஞ்சை ஜூஸாக பிழிந்துச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி... சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது சேர்த்துக் கிளறி, தீயை மிதமாக வைத்து, நெய் விட்டு நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். விருப்பப்பட்டால் ஃபுட் கலர் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.

Source - Vikatan Magazine