Tuesday, July 5, 2011

ஏன் சொல்லுறோம் தெரியுமா?




Delhi CM Sheila Dixit :ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்குங்க...
இப்ப கேட்டீங்களே இந்த மாதிரியெல்லாம் இனி கேக்கக்கூடாது...

HM P Chidambaram :ஏன் என்ன அப்படி கேட்டுட்டேன்... பிரதமரே லோக்பாலுக்குள்ள நான் வரத் தயார்னு சொல்லுறப்போ நமக்கு எதுக்கு தயக்கம் இருக்கணும்... சரின்னுட வேண்டியதுதானே! இதத்தான நான் கேட்டேன்.

Delhi CM Sheila Dixit இப்ப மன்மோகன் சிங்ஜி இருக்காரு... பிரச்னையில்லே! அவர் எதுவுமே எனக்கு தெரியாதுன்னு எல்லார் முன்னாடியும் சொன்னமாதிரி எல்லா இடத்திலயும் சொல்லி தப்பிச்சிக்குவாரு...
ஆனா எதிர்காலத்துல... யோசிச்சீங்களா?

HM P Chidambaram :எதிர்காலத்துல என்ன? அப்படியே இருந்துட்டுப் போறதுதானே!

Delhi CM Sheila Dixit ஆனா நாம யார் மூலமா என்ன சொல்ல வெச்சிருக்கோம்... யோசிச்சுப் பாருங்க! திக்சிங்ஜி என்ன சொல்லிட்டுவர்றாரு... கவனிச்சீங்களா? ராகுல்ஜி பிரதமர் ஆகுறதுக்கு தகுதியானவருன்னு பேசிட்டு வர்றோமே..!

HM P Chidambaram :அடடா... இதை நான் யோசிக்கலையே!

Source : Dinamani-June 30,2011

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்-சேக்கிழான்

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்-சேக்கிழான்

anna_hazare_lokpal_bill_01

திப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களுக்கு,

வணக்கம்.

ஊழலுக்கு எதிரான உங்கள் போராட்டம் நாட்டு மக்களை விழிப்புணர்வடையச் செய்துள்ளது. அதிலும் 'ஜன லோக்பால்' சட்டத்தை நிறைவேற்ற நீங்கள் மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்ததைக் கண்டபோது பெருமகிழ்வு கொண்டோம். ஆனால்…

இந்த 'ஆனால்' என்ற வார்த்தை வந்தாலே, வாக்கியத்தின் பொருள் மாறிவிடுகிறது. "மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு" என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் அடிக்கடி நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டுவது. பிரதமர் ஊழல்கறை படியாதவர் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்வதை ஒத்திருப்பதாகவே உங்கள் கருத்தும் இருப்பதை ஏற்கவே முடியவில்லை.

கண் முன்னால் அரசுக் கருவூலத்தில் சேர வேண்டிய பணம் கொள்ளை போகக் காரணமான அமைச்சர் ஒருவர் "பிரதமருக்குத் தெரிந்தே தான் முடிவெடுத்தேன்" என்று சொல்லிக் கொண்டே அனைத்து அத்துமீறல்களிலும் ஈடுபட்டு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி செய்திருக்கிறார். ஆனாலும், மன்மோகன் நல்லவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்…, என ஊழல் விவகாரங்கள் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் நீங்கள் பிரதமர் நல்லவர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை.

இதைவிட மோசம், திக்விஜய் சிங், கபில் சிபல், மணிஷ் திவாரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் உங்களுக்கு எதிராக நடத்தும் அவதூறுப் பிரசாரங்களைக் கண்டிக்குமாறு கோரி, காங்கிரஸ் தலைவி சோனியா அம்மையாருக்கு நீங்கள் கடிதங்கள் எழுதுவது. திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் உங்களுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், நீங்கள் எப்படி இன்னமும் சோனியாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.

சோனியா கண்ணசைவின்றி இப்படிப்பட்ட உளறல்களை திக்விஜய் சிங் வெளிப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த ஊழல்களில் சோனியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், ஊழலுக்கு எதிரான போரை தலைமை தாங்கி நடத்துவதற்கான தகுதியையே நீங்கள் இழந்தவர் ஆகிவிடுவீர்கள்.

ஊழல் கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறதா? மேலிருந்து கீழ் நோக்கிச் செல்கிறதா? இரண்டும் சாத்தியம் என்றாலும், மேல்மட்ட ஊழல்களே நாட்டை திவாலாக்குகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காகவே லோக்பால் சட்டத்தில் விசாரணை வளையத்தில் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் கூறி வருகிறீர்கள். அப்படியானால், பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான ஐ.மு.கூட்டணி தலைவரும் மத்திய அரசின் வழிகாட்டியுமான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா? சோனியா மீதான மிகவும் ஆபத்தான புகார்களை ஜனதா தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடிதமாக பிரதமருக்கு எழுதி பல மாதங்கள் ஆகியும், இதுவரை அதற்கான எந்த மறுப்பையும் பிரதமரோ, சோனியாவோ கூறாதது ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

subramaniaswamyநாட்டில் இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் அரசு மன்மோகன் சிங் அரசு தான் என்று உண்மையான பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால் மன்மோகன் நல்லவர் என்று நீங்கள் சான்றிதழ் அளிக்கிறீர்கள். அரசில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு அமைச்சரும் ஊழலில் ஈடுபடுவதைக் கண்டித்துத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மன்மோகன் எப்படி நல்ல பிரதமர் ஆவார்? இதுதான் ஆட்சியை தலைமை தாங்கி நடத்தும் அழகா? உங்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை கட்டுப்படுத்துமாறு, அதற்குக் காரணமான சோனியாவுக்கே நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள். இவை முரணாகத் தெரியவில்லையா? இது ஊழலுக்கு எதிரான போரில் தலைமை தாங்கும் உங்களுக்கு அழகா?

உங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கை பற்றிப் படித்து அதில் உத்வேகம் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள். 'ராலேகான் சித்தி' கிராமத்தில் நீங்கள் நிகழ்த்திய மகத்தான மாற்றத்தை நாங்கள் அறிவோம். ஆனால், உங்களுடன் சேர்ந்துள்ள ஊழல் எதிர்ப்பு வீரர்களின் முழு விபரமும் நீங்கள் அறிவீர்களா?

உங்கள் பின்னால் நிற்கும் அக்னிவேஷும், அரவிந்த் கேஜ்ரிவாலும் கொண்டுள்ள காங்கிரஸ் சார்பை அறிவீர்களா? அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து தகவல் உரிமை சட்டத்திற்காகப் போராடிய அருணா ராய் தற்போது சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களை வழிநடத்தும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் (என்.ஜி,ஓ.க்கள்) அரசிலும் ஊடகவெளியிலும் கொண்டுள்ள பிரமாண்டமான செல்வாக்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆங்கிலத் தொலைகாட்சி ஊடகங்கள் அரசுக்கு சாதகமாக நடத்தும் நாடகங்களில் நீங்கள் சிக்கி இரையாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறோம்.

உங்கள் ஊழலுக்கு எதிரான இயக்கம் லோக்பால் மசோதா நிறைவேற்றத்துடன் நின்றுவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கும் கூட காங்கிரஸ் கட்சி அனுமதிக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும், லோக்பாலை மட்டும் குறியாகக் கொண்டு உண்ணாவிரத அறிவிப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். உங்கள் தன்னலமற்ற போராட்ட அறிவிப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தப் போரில் உங்கள் தலைமையை நாடி நாடு காத்திருக்கிறது என்பதை நீங்கள் ஏன் கண்டுகொள்ளாமல் உள்ளீர்கள்?

985_jayaprakash_narayanநீங்கள் தில்லி, ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் (2011, ஏப்ரல் 5) இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிக்குக் காரணம், நாட்டில் நிலவும் ஊழல் மக்களை மிகவும் கசப்புக்கு உள்ளாக்கி இருப்பதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஊழலுக்கு எதிராக நாட்டு மக்களை ஒருங்கிணைக்கவும், சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை திரட்டவும் நீங்கள் ஏன் முயலக் கூடாது? 1975 ல் முழுப் புரட்சி இயக்கம் நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஏன் நீங்கள் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது?

ஒரு வீடு தீப்பற்றி எரியும் பொது அதை முதலில் அணைப்பது தான் விவேகம். அதை விடுத்து தீ பற்றியதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்க சட்டம் கொண்டு வருவதில் முனைந்திருந்தால் வீடு சாம்பலாகி விடும். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதுவரை நாட்டைக் கொள்ளை அடித்தது தெரிந்தும், அதனைக் கண்டிக்காமல், பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட, இப்போதைய மன்மோகன் சிங் அரசு மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? உங்களைச் சுற்றிலும் உள்ள காங்கிரஸ் ஆதரவு கைக்கூலிகளிடமிருந்து நீங்கள் விடுபடுவது எப்போது?

வெறும் 60 கோடி போபர்ஸ் ஊழலை முன்னிறுத்தி விஸ்வநாத் பிரதாப் சிங் ராஜீவ் காந்தி அரசை வீழ்த்தியது (1989) சமீபத்திய சரித்திரம். அதைவிட லட்சம் மடங்கு அதிகமான ஊழலை செய்துள்ள தற்போதைய மத்திய அரசை ஏன் நேரடியாகக் கண்டிக்காமல் அமைதி காக்கிறீர்கள்? உங்களைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்யும் காங்கிரஸ்காரர்களைப் பார்த்த பின்னரும், ஏன் அதே ஊழல்வாதிகளிடம் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

'போராட்டங்களில் சமரசம் ஒரு உத்தி' என்று மகாத்மா காந்தியை நீங்கள் முன்னுதாரணமாக சொல்லக் கூடும். அவர் பேச்சு நடத்தியது ஆதிக்கம் செலுத்திய அந்நியனிடம். அவர் ஆங்கிலேரிடம் பேச்சு நடத்தியதே அதைக் காட்டி, அஞ்சிக் கிடந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கத் தான். ஏனெனில் அப்போது அரசியல் ரீதியாக நாடு ஒருங்கிணைக்கப் பட்டிருக்கவில்லை. அன்றைய காலம் வேறு. சுதந்திரம் பெற்ற மக்களான நாம், நம்மை அரிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் அதே போன்ற கோரிக்கை மனு போராட்டங்களைத்தான் நடத்த வேண்டுமா? நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னரும், மக்களிடம் போர்க்குணம் இல்லாமல் இருப்பதை நீங்களேனும் மாற்ற வேண்டாமா?

இன்றைய மத்திய அரசில் ஊழல் கொடிகட்டிப் பறக்க என்ன காரணம் என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றி சிதறிக் கிடப்பதே மன்மோகன் அரசின் பலம் என்பதை அவர்களும் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான கட்சிகளாகவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவையாகவும் உள்ளன. ஆனால் அவை இரண்டும் ஜென்மப் பகை கொண்டிருப்பது தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆசுவாசம் அளித்து வருகிறது. பிற கட்சிகளை விலை கொடுத்து வாங்கவும் பேரம் பேசி மயக்கவும் காங்கிரஸ் கட்சியால் முடியும் நிலையில், வலதுசாரிக் கட்சியான பாஜகவும் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் இணைந்தால் ஊழல் அரசை ஒரேநாளில் வீட்டிற்கு அனுப்ப முடியும், இதனை ஏன் நீங்கள் முன்னின்று நிகழ்த்தக் கூடாது?

இதனைத் தவிர்க்கும் வகையில் 'அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல்மயமானவை' என்ற பொதுவான கருத்துடன் நீங்கள் எதிர்க்கட்சிகளைப் புறக்கணிப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை. எல்லாக் கட்சிகளும் ஊழல்மயமானவையாகவே இருக்கட்டும். அவற்றில் மிக அபாயமானது எது என்பதை நிகழ்காலத்தில் நின்று யோசிக்க வேண்டாமா? லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்தான் வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துதான் உள்ளீர்களா?

லோக்பால் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் வேடம் போடும் காங்கிரஸ் கட்சி அதே நாடகத்தைத்தான் உங்கள் குழுவுடனும் நடத்துகிறது. எதிர்க்கட்சிகளை அவமதிப்பதற்காக உங்களை ஒருசமயம் தூக்கி நிறுத்தும் காங்கிரஸ் கட்சி, பிறகு நீங்கள் ஒத்துவரவில்லை என்றதும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறது. இந்த நாடகங்கள் எத்தனை நாளுக்கு? நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டவே தாமதிக்கும் காங்கிரஸ் கட்சி, நடப்புக் கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றும் என்று இன்னமும் நீங்கள் பரிபூரணமாக நம்புகிறீர்களா? பிறகு எதற்காக ஆகஸ்ட் 16 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்கிறீர்கள்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதா படும் பாடு நீங்கள் அறிந்தது தானே?

கருப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம்தேவ் அவர்களின் போராட்டம் (2011, ஜூன் 4) தில்லி ராம்லீலா மைதானத்தில் அதிகார மமதையாளர்களால் குலைக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து தில்லி, ராஜ்காட்டில் ஜூன் 8 ல் நீங்கள் உண்ணாவிரதம் இருந்தீர்கள். நீங்கள் ஏன் அதே ராம்தேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடக் கூடாது? ஒன்று தெரியுமா? நீங்கள் ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ராம்தேவ் வடிவமைத்து வந்ததும், அதை முறியடிக்கவே ஆங்கில ஊடகங்களும் அரசு சார்பு என்.ஜி.ஓ.க்களும், உங்கள் உண்ணாவிரதத்தை முன்னிறுத்தின என்பதும் நீங்கள் அறிவீர்களா?

உங்களை மிகையாகக் காட்டி நாடகம் ஆடுபவர்களை விட உங்களையே முன்மாதிரியாகக் கொண்டு போராட நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் பட்டாளம் தயாராக உள்ளதை நீங்கள் அறியாமல் போனால், எதிர்காலத்தில் உங்கள் போராட்டம் மிக எளிதாக முறியடிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது. திக்விஜய் சிங்கின் மிரட்டல் கோமாளித்தனமானது என்று சாதாரணமாக ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை விடுத்து திக்விஜய் பினாத்துவதாக சோனியாவிடம் நீங்கள் புகார் செய்து கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து பரிதாபப்படவே முடியும்.

anna_hazare_lokpal_hindutva_supportஉங்கள் மீதான அவதூறு பிரசாரத்தில் ஓர் அங்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் உங்களை தொடர்பு படுத்துவது. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் காங்கிரஸ் தந்திரம் என்பதை புரிந்துகொள்ளாமல் ஏன் எதிர்வினை ஆற்றுகிறீர்கள்? இந்தக் குற்றச்சாட்டின்மூலமாக, தன்மீதான குற்றச்சாட்டுகளை திசை மாற்றும் லாவகம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கிறது. தவிர, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றிய ஏற்கனவே காங்கிரஸ் ஸ்தாபித்துள்ள எதிர்நிலை பிம்பத்தைக் கொண்டு உங்களை வீழ்த்த சதி செய்கிறது. இதற்கு நீங்கள் ராஜதந்திரமாக எதிர்வினை ஆற்ற வேண்டாமா? அதுதானே நல்ல தலைமைக்கு அழகு?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னணித் தலைவர்கள் பலர் உங்களால் உத்வேகம் பெற்றவர்களே. ராலேகான் சிந்தியில் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை நீங்கள் அறிவீர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான கிராம விகாஸ் பரிஷத்திற்கு நீங்கள் நல்ல வழிகாட்டுதல்களை அளித்துள்ளீர்கள். அவற்றை நீங்கள் மறைக்க முயன்றாலும் முடியாது. நல்ல விஷயங்களை ஏன் மறைக்க வேண்டும்? ஆனால் நீங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்துவதை ஏதோ தீண்டத் தகாத விஷயமாக இப்போது கருதுவதுபோலத் தெரிகிறது. இதற்கு உங்கள் தற்போதைய சகவாசதோஷம் காரணமாக இருக்கக் கூடும்.

இதே குற்றச்சாட்டு ராம்தேவ் மீது கூறப்பட்டபோது, ''ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க அனைவருக்குமே உரிமை உள்ளது" என்று ஒரே வரியில் பதில் கொடுத்தார் அவர். அந்தத் தெளிவு உங்களிடம் இல்லாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உங்கள் போராட்டம் ஊழலுக்கு எதிரான தன்முனைப்பை நாட்டு மக்களிடம் தூண்டாமல் உங்கள் தன்முனைப்பாகவே தேங்கிவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நடந்த ஜனநாயகத்தை மீட்கும் இயக்கத்திற்கு அடிநாதமாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். அதனை ஆரம்பத்தில் எதிர்த்த ஜே.பி பிற்பாடு மனம் திருந்தி ஆர்.எஸ்.எஸ்.சை மனமாரப் பாராட்டியது வரலாறு. ஜனதா அரசு அமைந்ததிலும் ஜனதாதள அரசு அமைந்ததிலும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள பலருக்கு தொடர்புண்டு. ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மீது இப்போதைய மன்மோகன் அரசு மீது கூறப்படும் அளவற்ற ஊழல் புகார்கள் போல புகார்கள் கூறப்பட்டதில்லை. அவ்வாறு குற்றச்சாட்டுகள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்பதை நாட்டுமக்கள் போலவே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ்.காரர் தான். உங்களைப் போலவே எளிய வாழ்க்கை வாழும் பல்லாயிரக் கணக்கான தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உண்டு. இவற்றை நீங்களும் அறிவீர்கள். பிறகு ஏன் நீங்கள் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பாவனையில் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

ஊழல் என்பது மேலிருந்து கீழே பாய்வது மட்டுமல்ல. கீழிருந்தும் மேலே உயர்வது. நாட்டு மக்களில் பெரும்பாலோர் ஊழல் ஒரு பொருட்டில்லை என்று எண்ணுகின்றபோது இரு திசைகளிலும் ஊழல் பிரவாகமாக ஓடும். அதையே இப்போது நாம் காண்கிறோம். தனிமனிதன் சரியாகாமல், நாட்டுப்பற்றுள்ள குடிமகன் உருவாகாமல், சட்ட மிரட்டல்களால் குற்றங்களை ஒழித்துவிட முடியாது. இப்போதும் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன; அவற்றில் பிரதமரையும் கூட விசாரிக்க முடியும். ஆனால் அதனால் பலன் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. பிறகு லோக்பால் சட்டம் கொண்டுவந்தால் மட்டும் அது முறையாகக் கடைபிடிக்கப்பட்டு விடுமா? நீங்கள் சிந்திக்க வேண்டும்.

லோக்பால் சட்டம், ஈசன் மீது விழுந்த பிரம்படி அனைவருக்கும் விழுவது போல அமையும் என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமது மக்கள் சுரணையற்றுப் போய் பல ஆண்டுகளாகி விட்டதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். உண்மையில் லோக்பால் சட்டத்திற்காகப் போராட்டத்தை நீங்கள் குறுக்கிக் கொள்வது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மறைத்தபின், கொக்கைப் பிடிக்கப் போடும் திட்டமாகவே தெரிகிறது.

இப்போதைய தேவை சட்டமல்ல; மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை ஒருங்கிணைத்து அவர்களை மேலும் நல்வழிப்படுத்துவதே. மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம். இதனை உங்களால் நிச்சயமாக சாதிக்க முடியும். நாடு உங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது; இதை நீங்கள் தட்டிக் கழிக்கக் கூடாது. அனைத்து அரசியல்வாதிகளையும் ஏசிவிட்டு, அரசியலை நீங்கள் சுத்தம் செய்துவிட இயலாது.

பெருமதிப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களே,

இக்கடிதம் உங்களைப் புண்படுத்த அல்ல. நீங்கள் எங்களைப் பண்படுத்த வேண்டும் என்ற ஆதங்கமே இக்கடிதத்தின் சாரம்.

நீங்கள் தனித்துவமானவர் என்பதை உங்கள் கட்டற்ற நடவடிக்கைகள் வாயிலாக அரசுக்கு நிரூபியுங்கள்.

உங்கள் தலைமை மூலமாக நாட்டு மக்களை சுத்திகரியுங்கள்.

தன்னலமற்ற உங்கள் வாழ்வின் தொடர்ச்சியாக அரசியல் மாற்றத்திற்கு அறைகூவல் விடுங்கள்.

இவையே இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை. மதியாதார் தலைவாசலில் உண்ணாவிரதம் இருப்பதை விட, அறிவுப்பூர்வமான வழி இதுவே. இதனை நீங்கள் உணர்ந்தால் நாடு நலம் பெறும். செய்வீர்களா?

தாழ்மையுடன் வேண்டும்,

ஹசாரே தாசன்

Re:Gurumoorthy Speech -Dinamani

குடும்ப அமைப்பும், கலாசாரமும்தான் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது:
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி



கூட்டத்தில் பேசுகிறார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.
ஈரோடு, ஜூலை 4: நமது குடும்ப அமைப்புகளும், கலாசாரமும்தான் நம்முடைய பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.  தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க ஈரோடு கிளை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்திய பொருளாதார அமைப்பு என்ற தலைப்பில் அவர் பேசியது:  மேற்கத்திய நாடுகளில் சேமிக்கும் பழக்கம் மக்களிடையே இல்லை. இந்தியாவில் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் உள்ளது. மேலைநாடுகளில் திருமண முறிவுகள் சகஜமானது. இதனால் நாம் யாருக்கும் பணம் சேர்த்து வைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் உள்ளது.  இந்தியாவில் குடும்ப அமைப்புகள் மிக நன்றாக உள்ளன. எதிர்காலத்திற்குப் பணம் தேவை என நாம் எண்ணுகிறோம். 1992-ல் உலகமயமாக்கலின்போது இந்தியாவின் சேமிப்பு 21 சதவீதம். அப்போது பல மேலைநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் இந்த அளவு சேமிப்பு தேவை இல்லை. இதை வைத்து தொழில் தொடங்கலாம் எனக் கூறினர்.  இது நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என இந்திய நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்தனர்.  இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். தற்போது இந்தியாவின் சேமிப்பு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1977-ல் அமெரிக்கா வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நாடாக இருந்தது. தற்போது பல நாடுகளிடம் கடன் வாங்கும் நாடாக அது உள்ளது. ஏனெனில் அங்கு மக்களிடையே சேமிக்கும் பழக்கம் இல்லை.  நாம் நமது சுயபலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடு என்றால் உயர்வாக எண்ணுவதை நாம் கைவிட வேண்டும். இந்தியா எந்தத் துறையிலும் சோடை போகவில்லை.  ஆனால் மேலைநாட்டினர் இந்தியாவைக் குறைத்துக் கூறுவதால், நாம் நம்மைப்பற்றி தவறான நிலையை எண்ணுகிறோம். இந்தியா 2025-ல் பெரும் சக்தியாக உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2045-ல் உலகின் முக்கிய நாடாக இந்தியா மாறிவிடும்.  நாட்டின் வளர்ச்சியிலும், சமூக மாற்றத்திலும் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை அறிந்து அந்த வழியில் பட்டய கணக்காளர்கள் நாட்டின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  இப்பணி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுவது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய நகரங்களில் மட்டுமே தேவையாக இருந்த இப்பணி தற்போது கிராமப்பகுதிகளுக்கும் தேவையாக மாறிவிட்டது.  இப்பணி மூலம் சமூக முன்னேற்றத்திற்கான வழியை பட்டய கணக்காளர்கள் ஆராய வேண்டும் என்றார். 

Source - Dinamani July 05,2011

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

மிரண்டுகிடக்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!
முதல்வராகப் பொறுப்​பேற்று 50 நாட்கள்கூட முடியாத நிலையில்... எட்டு மாவட்ட செயலாளர்களைத்தூக்கி வீசி இருக்கிறார் ஜெயல​லிதா. விசாரித்தால், 'கருணா​​நிதிக்கு எப்போதும் சீனியாரிட்டி முக்கியம். ஆனால், ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டிதான் முக்கியம்’ என்கிறார்கள்!
மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ''தி.மு.க-வில் பெரிய பதவியில் இருக்கிறவர் எவ்வளவு பெரிய தப்பு பண்ணினாலும், யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா, எங்க கட்சியில் ஒருத்தன் நாலு பேரு பார்க்கிற மாதிரி சத்தமாக் கத்திப் பேசினான்னு தலைமைக்குப் புகார் போனாலே போதும்... பதவியைவிட்டுத் தூக்கிடுவாங்க. அம்மா பதவியேற்றதும் எங்களை எல்லாம் கண்காணிக்க எப்படி தனியா ஒரு டீம் போட்டாங்களோ, அதைப்போலவே மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்கவும் உத்தரவு போட்டாங்க. அமைச்சரவைக் கூட்டத்திலும், 'ஆளும் கட்சி ஆகிட்டோம்கிற மிதப்பில், நம்ம கட்சி மாவட்டச் செயலாளர்கள் யாராவது ஆட்டம் போடுறாங்களான்னு நீங்களும் கவனிங்க. யாராவது தப்பு பண்றது தெரிஞ்சா, உடனடியா என் கவனத்துக்குக் கொண்டுவாங்க. யாரு தப்பு செஞ்சாலும், பழி என் மேல்தான் விழும்கிறதை மனசுல வெச்சு நடந்துக்கோங்க’னு அம்மா சொல்லி அனுப்பினாங்க. அப்படி பிரச்னைகளுக்கு உள்ளான மாவட்டச் செயலாளர்களோட பதவிகள்தான் இப்ப காலி ஆகியிருக்கு!'' என்றார்.
பதவிகள் பறிக்கப்பட்டதற்கான பின்னணிபற்றி கார்டன் வட்டாரத் தொடர்பில் இருக்கும் சிலரிடம் விசாரித்தோம். ''விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.சிவசாமி தேர்தல் சமயத்தில் சரியா வேலை செய்யவில்லை என்பது புகார். உளவுத் துறையும் அதை உறுதி
செய்ய... பதவி காலி. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, மாவட்டத்தில் 16 டாஸ்மாக் பார்களை தி.மு.க-வைச் சேர்ந்த நபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததா ஒரு ஆதாரம் அம்மாவுக்கு வர... முத்தையாவுக்குப் பதவி போச்சு. 'ஒரு மாவட்டத்துக்கு எதுக்கு இரண்டு மூன்று மாவட்ட செயலாளர்கள்?’னு அமைச்சர் ஒருத்தர்கிட்ட அம்மா கேட்க... அவரும், 'ஆமாம்மா, தேவை இல்ல. ஒருத்தர் போதும்’னார். 'அப்போ தூக்கிடுங்க. இனி நெல்லை மாவட்டச் செயலாளர் மட்டும்தான். மாநகர் மாவட்டச் செயலாளர் தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க!
சேலத்திலும் இதே மாதிரிதான். 'கிழக்கு, மேற்கு எல்லாம் வேண்டாம். மாநகர் ஒருத்தர், புறநகர் ஒருத்தர்னு போதும். கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் எஸ்.கே.செல்வத்தைத் தூக்கிட்டு மொத்தப் பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுத்துடலாம். செல்வத்துக்கு வேறு எதாவது செய்யலாம்’னு அம்மா சொன்னாங்க...' என்றவர்கள், மற்ற மாற்றங்களைப் பற்றியும் தொடர்ந்தனர்.
''சின்னம்மாவின் சொந்தக்காரரான ராவண​னுக்கும் நீலகிரி மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும் சில பிரச்னைகள். சின்னம்மா மூலமா இந்த விஷயம் அம்மாவோட கவனத்துக்கு வந்தது. உடனே அங்கேயும் ஆக்ஷன். புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ-வான நெடுஞ்செழியனுக்கும், மாவட்டச் செயலாளர் கருப்பையாவுக்கும் தேர்தலுக்கு முன்பு இருந்தே பிரச்னை. தேர்தல் நேரத்தில் சரியா வேலை செய்யவில்லை என்று கருப்பையா மீது புகார்.
இதைப் போலவே காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வும் சிவகங்கை மாவட்டச் செயலாள​ருமான சோழன் சித.பழனிசாமி, அமைச்சராக இருக்கும் கோகுல இந்திராவைப்பற்றி வெளிப்படையாகவே சில விஷயங்களைப் பேசியதாகச் சொல்றாங்க. காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் கோகுல இந்திராதான் பொறுப்பாளர். இரண்டு மாவட்டச் செயலாளர்களின் பிரச்னைகளையும் கோகுல இந்திராதான் அம்மாவோட கவனத்துக்குக் கொண்டுவந்தாங்க. உடனே நடவடிக்கை எடுத்துட்டாங்க.
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த செல்லூர் ராஜு, தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் பார் ஒதுக்கீடு செஞ்சதாகவும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் கடைகளில் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்வதாகவும் போலீஸ் ரிப்போர்ட் வைக்கப்பட்டது. திருச்சிப் புறநகர் மாவட்டச் செயலாளர் சுப்பு என்கிற சுப்ரமணி மீது எம்.எல்.ஏ. ஸீட் வாங்கித் தருவதாகச் சொல்லி சிலரிடம் பணம் வாங்கியதாக புகார். உளவுத் துறை ரிப்போர்ட்டும் திருப்தியாக இல்லாததால், அவரை நீக்கிட்டாங்க. இது எட்டோடு நிற்கப்போவது இல்லை. புகார்கள் வரும்பட்சத்தில், அம்மாவோட ஆக்ஷன் தொடரும்...'' என்று முடித்தனர்.
ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அரண்​டு கிடக்கிறார்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள்!
- கே.ராஜாதிருவேங்கடம்,
படம்: சு.குமரேசன்

மதுரையில் சி.பி.ஐ.! சித்தூரில் போலீஸ்!

மதுரையில் சி.பி.ஐ.! சித்தூரில் போலீஸ்!


நெருக்கடியில் அழகிரி..
ரு வழியாக, மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதித்துவிட்டது மதுரை உயர் நீதிமன்றம். இதனால், மதுரை மாநகரமே பரபரப்பில் இருக்கிறது.
கடந்த 9.5.2007-ல் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் பட்டப்பகலில் தாக்கப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் பலியானார்கள். தி.மு.க. பிரமுகரான 'அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் சாட்சிகள் உள்ளிட்ட அனைவரும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். இதனால், கடந்த 9.12.09-ல் தீர்ப்பு அளித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து, 208 நாட்கள் கழித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது சி.பி.ஐ. இந்தக் கால தாமதத்துக்கான காரணத்தையும் சொன்னது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ''இந்த அப்பீல் மனுவை மத்திய அரசின் அனுமதி பெற்று சி.பி.ஐ-யின் சிறப்பு வழக்கறிஞர்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல், சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மனுவைத் தாக்கல் செய்கிறார். இது சரியானது அல்ல. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!'' என்று வாதம் வைக்கப்பட்டது. இதன் மீது விவாதம் முடிந்து,  தீர்ப்பு கடந்த 29-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ''அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போதிய முகாந்திரம் இருக்கிறது...'' எனத் தீர்ப்பு தந்திருக்கிறது நீதிமன்றம்.
தேர்தல் பிரசாரத்தின்போது, 'தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கு உள்ளிட்டவை மீண்டும் விசாரிக்கப்படும். அதற்குக் காரணமானவர்கள் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்!’ என்று முழங்கிய ஜெயலலிதா, முதல்வரானதுமே இது தொடர்பாக சட்டப் புள்ளிகளிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு உள்ளார். தா.கி. வழக்கில் இருந்த முக்கியமான சில ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டிய சட்டப் புள்ளிகள், ''தா.கி. வழக்கைவிடவும் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தினால், குற்றவாளிகளைத் தண்டிக்க வலுவான ஆதாரங்களும் முகாந்திரங்களும் இருக்கின்றன...'' என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே ஜெயலலிதா, ''இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமான அத்தனை கோப்புகளையும் திரட்டுங்கள்...'' என்றாராம். இப்போது, எல்லாம் தயார்.
தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு விசாரணை எப்படிப் போகும் என்று சி.பி.ஐ. புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம். ''குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட கட்சியே ஆளும் கட்சியாக மாநிலத்தில் இருந்ததால், சாட்சிகளாக இருந்த எஸ்.ஐ-க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளே பிறழ் சாட்சியம் அளித்தார்கள். சம்பவம் நடந்தபோது ஆவேசப்பட்டுப் பேசிய சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஊழியர்கள்கூட, நெருக்கடிகள் காரணமாக சரியாக சாட்சியம் அளிக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை வேறு. பிறழ் சாட்சியம் அளித்த போலீஸ் அதிகாரிகள், இப்போது தைரியமாக உண்மையைச் சொல்வார்கள்.
தாக்குதல் நடத்த வந்தவர்கள், தினகரன் பத்திரிகையைத் தீயிட்டுக் கொளுத்தி மறியல்தான் செய்தார்கள். 'இதெல்லாம் போதாது... இன்னும் ஏதாவது செய்யுங்கள்’ என்று அவர்களுக்கு யாரோ பிரஷர் தர... அதன் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கி, அலுவலகத்தைக் கொளுத்தினார்கள். ஸ்பாட்டில் ஆஜரான அந்தப் பத்திரிகையாளர்கள், தாக்குதல் நபர்களின் அராஜகங்கள் அனைத்தையும் படம் பிடித்து உள்ளனர். மறைக்கப்பட்ட அனைத்தும் இனி வெளியில் வரும்... வரவைப்போம்!'' என்றனர் அந்த சி.பி.ஐ. புள்ளிகள்.
இப்போது, அப்பீலுக்காக நீதிமன்றப் படி ஏறி இருக்கும் சி.பி.ஐ., முக்கியப் புள்ளி ஒருவரை அப்ரூவர் ஆக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறதாம். அது நடந்தால், தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் திகில் திருப்பங்கள் அரங்கேறும்!
மதுரை நிலைமை இப்படி இருக்க... தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் விசாரணை நடந்த சித்தூர் நீதிமன்றத்திலும், அரசு அதிகாரிகள் போய் இறங்கி உள்ளார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் அத்தனை ஆவணங்களையும் கேட்டு மனுத் தாக்கல் செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இந்த வழக்கில் அழகிரி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் மேல் முறையீடு இதுவரை செய்யப்படவில்லை. அதனையும் செய்ய சட்டத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'இந்த இரண்டு வழக்குகளையும் வைத்து அழகிரியை மடக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்’ என்கிறது கோட்டை வட்டாரம்!
- குள.சண்முகசுந்தரம்
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்