குடும்ப அமைப்பும், கலாசாரமும்தான் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது:
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி

கூட்டத்தில் பேசுகிறார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.
ஈரோடு, ஜூலை 4: நமது குடும்ப அமைப்புகளும், கலாசாரமும்தான் நம்முடைய பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கூறினார். தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க ஈரோடு கிளை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்திய பொருளாதார அமைப்பு என்ற தலைப்பில் அவர் பேசியது: மேற்கத்திய நாடுகளில் சேமிக்கும் பழக்கம் மக்களிடையே இல்லை. இந்தியாவில் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் உள்ளது. மேலைநாடுகளில் திருமண முறிவுகள் சகஜமானது. இதனால் நாம் யாருக்கும் பணம் சேர்த்து வைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் உள்ளது. இந்தியாவில் குடும்ப அமைப்புகள் மிக நன்றாக உள்ளன. எதிர்காலத்திற்குப் பணம் தேவை என நாம் எண்ணுகிறோம். 1992-ல் உலகமயமாக்கலின்போது இந்தியாவின் சேமிப்பு 21 சதவீதம். அப்போது பல மேலைநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் இந்த அளவு சேமிப்பு தேவை இல்லை. இதை வைத்து தொழில் தொடங்கலாம் எனக் கூறினர். இது நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என இந்திய நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்தனர். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். தற்போது இந்தியாவின் சேமிப்பு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1977-ல் அமெரிக்கா வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நாடாக இருந்தது. தற்போது பல நாடுகளிடம் கடன் வாங்கும் நாடாக அது உள்ளது. ஏனெனில் அங்கு மக்களிடையே சேமிக்கும் பழக்கம் இல்லை. நாம் நமது சுயபலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடு என்றால் உயர்வாக எண்ணுவதை நாம் கைவிட வேண்டும். இந்தியா எந்தத் துறையிலும் சோடை போகவில்லை. ஆனால் மேலைநாட்டினர் இந்தியாவைக் குறைத்துக் கூறுவதால், நாம் நம்மைப்பற்றி தவறான நிலையை எண்ணுகிறோம். இந்தியா 2025-ல் பெரும் சக்தியாக உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2045-ல் உலகின் முக்கிய நாடாக இந்தியா மாறிவிடும். நாட்டின் வளர்ச்சியிலும், சமூக மாற்றத்திலும் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை அறிந்து அந்த வழியில் பட்டய கணக்காளர்கள் நாட்டின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இப்பணி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுவது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய நகரங்களில் மட்டுமே தேவையாக இருந்த இப்பணி தற்போது கிராமப்பகுதிகளுக்கும் தேவையாக மாறிவிட்டது. இப்பணி மூலம் சமூக முன்னேற்றத்திற்கான வழியை பட்டய கணக்காளர்கள் ஆராய வேண்டும் என்றார். Source - Dinamani July 05,2011
No comments:
Post a Comment