Tuesday, December 13, 2011

கீதை காட்டும் பாதை 12 : உபதேசம் தவிர்ப்போம்.. உதாரணமாக இருப்போம் !

கீதை காட்டும் பாதை 12 : உபதேசம் தவிர்ப்போம்.. உதாரணமாக இருப்போம் !

- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
"பார்த்தா.. பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல் பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.
கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது. அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
ஞானி கூட அவனது இயல்பின்படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும் அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில் நிர்ப்பந்தப்படுத்துவதால் என்ன பயன்?"
இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன் உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும், தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
எல்லோரும் அவரவர் இயல்பின்படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி, பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில், எத்தனை உயரிய தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை அவரிடம் உபதேசிப்பது வீண் தான்.
அறிவுக்கு எட்டும் போதே அதை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது என்பது ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம் சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த வழியின்படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் அவன், தன் வாழ்க்கை ஓட்டத்தை அறிந்தவன். அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்கிவிடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன் உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். எனவே எந்த ஒரு கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே விளைவிக்கும்.



அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டுவிடுவதா? அறிவுக்கு எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால் அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது?
இந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான், நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன் இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி புரிய வை என்கிறார்.

இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் இருவர் கண் முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய சிப்பாய்களை ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு குழு முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் கூட திருப்பி அந்த சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வீழ்கிறது. அடுத்த குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே அடிபட்டு வீழ்கிறது. அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!
இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும் எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வீக முறையில் போராடிய விதத்தை நேரில் கண்டிராவிட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.
வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த சுதந்திர போராட்ட வீரர்கள் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள் வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும் முற்படாத அத்தனை போராட்ட வீரர்களும் மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில் சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல் அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.
எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது. இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும் பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.
அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம். 'என்னால் தானே இப்படி முடிந்தது' என்கிற எண்ணம் வந்து விட்டால், கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். 'நான்' என்கிற அகங்காரத்தை மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி விடும்.
எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: "இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும் நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக நினைக்கின்றான்.

தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும், அதில் தன் செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே 'எல்லாம் இயற்கையின் இயக்கமே' என்று பற்றில்லாமல் இருப்பான்."
எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன. எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம். எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப் பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் "எல்லாம் அவன் செயல்" என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.
அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்: "உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் 'எனது' என்ற உணர்வின்றியும் மன வேதனையை உதறித் தள்ளி போர் செய்"
செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். தான் செய்கின்ற ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும் தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப் போன்றவன் ஆகிறான்.
இதே கருத்து குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. "யாராக இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்கையில் தனது நோக்கத்தை அல்லாவிடம் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அவ்விதம் செய்பவன் அல்லாவின் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டவனாகிறான்." (குரான் 31.22)
எல்லா மதங்களிலும் இது போன்ற கருத்துகளை நாம் காண முடியும். இப்படி பற்றில்லாமலும், கர்வம் இல்லாமலும், இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்கின்ற உயர்ந்த செயல்களாலேயே மனிதகுல மேம்பாடு சாத்தியமாகும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம் - கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

என்.கணேசன்



செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும், பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
"சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும் செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.
பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே இருக்கிறேன்.
நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்."
யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித் தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மை.
இக்காலத்தில் நடக்கும் எத்தனையோ சீரழிவுகளுக்கு நமக்கிடையே நல்ல முன்மாதிரிகள் மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப் பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும், அதன்படி வாழ்ந்து காட்டி மனதில் பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?
அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ, அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லாவிட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம்பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை, சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன், தன் விஷயத்திலும் அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.
அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில் போர் புரியும் வீரன் யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில் குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின் வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ணீர் காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.
இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பது வியாசரின் மகாபாரதம் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப் பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளு எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக் கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே இல்லை.
இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது. சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான் யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத் தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன் இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில் குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்காவிட்டால் தேரில் இருப்பவன் தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல் ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம் சொல்கிறது.
அதே போல தேரில் இருந்து போர் புரியும் வீரன் எந்தப் பக்கம் தேரைத் திருப்ப வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது. யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வீரன் தன் சாரதியின் தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால் வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல வேண்டும்.
இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும் அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன் கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.
அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன் வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான விஷயமே.
தன் பக்தனின் சேவையை மெச்சி விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன். தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர் பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை.
"என் பெற்றோரின் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலையை முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்" என்று கூறிய புண்டலீகன், விட்டலனும் ருக்மணியும் அழுக்கு நீர் கால்களில் படாமல் நிற்க ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.
துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:
"என்ன பைத்தியக்கார அன்பிது
விட்டலனை நிறுத்தி வைத்ததே
என்ன முரட்டுத் துணிவிது
விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே"
தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும் பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது. தன்னைவிட அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?
இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும் வருகிறது. "என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை பளுவாக இல்லை"
பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் சுமை என்பது எதிர்பார்ப்பாலும், விளைவின் மீது வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படுகிறது. கடமையை பலன் எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக எளிமையாகிறது.
இனி ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அர்ஜுனனுக்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று சொல்வது புரிந்தது. உடனே அவன் "செயலைக் காட்டிலும் அந்த அறிவே சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன் புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்" என்று பொறுமையிழந்து சொல்கிறான்.
வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது மனிதனுக்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் மூன்றாம் அத்தியாயமான கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல ஆரம்பிக்கிறார்.
"பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை, மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.
ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.
எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில் உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது."
ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள். அதையும் மீறி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத காரியமே.
இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும் வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும் நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. 'கள் குடித்த குரங்குக்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலை'யை மனதின் நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும் கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும், ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது. வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.
உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள் இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.
எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன் வந்ததல்லவா. அது சொன்ன அளவுக்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று புரிய வைக்கிறார்.
மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால் ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும். வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும் ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.. "கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன் புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின் அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்."
போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம். தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும், எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில் சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வீக நிலையை அடைய முடியும். இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள், என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.
இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.
"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா
பேதையின் பேதையார் இல்."
உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப் பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய். செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே உனக்கு பாரமாய் போய் விடும்.
பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்"
மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப் போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வீணாய் போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது புத்திசாலித்தனம் என்கிறது கீதை. அதையும் பற்றில்லாமல் இறைவன் விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீதை வலியுறுத்துகிறது.
முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ, பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம் என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி விடுகிறது.
டால்ஸ்டாய் கூறுகிறார்... "மக்கள் ஏசுநாதரது தியாகத்தை வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள் தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப் பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி விடுவார்களே!."


எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக் கூறுகிறார். "கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற காகிதத்துக்கு மதிப்பில்லை."
ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான். ஒருவன் சொன்னான்.. "கல்லுடைத்துக கொண்டிருக்கிறேன்." இரண்டாமவன் சொன்னான்.. "வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்." மூன்றாமவன் சொன்னான்.. "கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்." மூவர் செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத் தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான் போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?
பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும். ஒவ்வொரு கடமையையும் 'இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும்' என்ற பாவனையுடன் செய்து பாருங்கள். வாழ்க்கையே தெய்வீகமாக மாறி விடும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

Next
கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

- என்.கணேசன்
நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.
"சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்."
நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.
சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும்.
சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.
மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்துக்கான தூண்டில்கள் என்றும், எந்த நேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.
சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான்.
அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்துக்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.
"நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை."
இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். "ஆன்மா மகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை."
நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.
சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.




அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.
இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9 - திருமணம் என்றொரு சூதாட்டம்?

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9

திருமணம் என்றொரு சூதாட்டம்?
ஒவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
சமீபத்தில் ஓர் இளைஞனைச் சந்தித்தேன். பெயர் நவீன். 24 வயது. சாஃப்ட்வேர் இன்ஜீனியர். நல்ல சம்பளம். வசதியான குடும்பம்.
குழம்பிய மனதோடு இருந்தவன், ''உடனே திருமணம் செய்துகொள் என்று என் பெற்றோர் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்'' என்றான்.
''சரியான வயதுதானே உனக்கு... கோ அஹெட்'' என்றேன்.

அடுத்து, அவன் கேட்ட கேள்வி, திகைக்க வைத்தது - ''என்னுடைய சரியான வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்வு செய்வது?''
திருமணத்தைப் பற்றி எத்தனையோ பழமொழிகளும், மேற்கோள்களும் இருக்
கின்றன. 'அது, லைசென்ஸ் கொடுக்கப்
பட்ட விபச்சாரம்’ என்கிற லெவலுக்கு விமர்சனம் செய்தார் பெர்னார்ட்ஷா. தந்தை பெரியாரோ, திருமணம் என்பதையே ஒரு 'அமைப்பு’ என உருவகப்படுத்தி கிழி கிழி என்று கிழித்தார். 'ஒவ்வொரு திருமணமும் படுக்கையில் முடிவுக்கு வந்து விடுகிறது.’, 'திருமணம் என்பது ஒரு சீட்டாட்டம். உங்கள் கையில் நல்ல கார்டு கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்’ என பல பொன்மொழிகளும் இருக்கின்றன.
நவீன் குழப்பத்தில் இருந்தாலும், அதுவே ஒரு தெளிவினால் ஏற்பட்டதுதான். ''சார்... ஒரு பெண்ணும் நானும் தீவிரமாகக் காதலித்தோம். ஆனால், கடவுள் நம்பிக்கை, சடங்குகள், சினிமா, பொழுதுபோக்குகள், புத்தகம் என்று எல்லாவற்றிலுமே தனக்கு என்ன ஆர்வமோ... அவற்றை என் மீது அவள் திணிக்க ஆரம்பித்தாள். 'விஜய் படத்துக்குப் போக வேண்டாம், சிவன் கோயிலுக்குப் போகக் கூடாது, கிரிக்கெட் பார்க்கக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைக்க ஆரம்பித்தாள்.
'இவளைக் கல்யாணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் அடிமைதான்' என்று உணர்ந்தபோது, 'ஸாரி... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நண்பர்களாகப் பிரிவோம்’ என்றேன். 'நோ பிராப்ளம்’ என்று பைபை சொல்லி விட்டாள்.''
நவீனை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.... அவன் தொடர்ந்தான். ''கொஞ்ச நாளில் அவள் என்னிடம் மறுபடி வருவாள் என்று உள்மனம் எதிர்பார்த்தது போலவே அவள் வந்தாள், தன் திருமண அழைப்பிதழோடு. நவீனப் பெண்களைப் பற்றிய என் நம்பிக்கைகளே ஆட்டம் கண்டன'' என்றான்.
''சரிப்படாது என்று எப்போது நீ சொல்லி விட்டாயோ, அப்போதே அவள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை அவள் பெற்றுவிட்டாளே...'' என்றேன்.
''கரெக்ட்தான். கொஞ்ச நாளிலேயே நானும் சரியாகிவிட்டேன்.''
''சரி, அடுத்து?''
''இப்போது என் அப்பா, அம்மாவுக்குப் பேரன், பேத்தி வேண்டுமாம். ஒரு பெண்ணை பார்த்து விட்டார்கள். அவளிடம் பேசிப் பார்க்குமாறும் சொன்னார்கள். அவர்களுக்காக போய் பார்த்தேன். கணவனே கண்கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இருந்தாள். கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசவே கூச்சப்பட்டாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது தவிர வேறு எதிலுமே நாட்டம் இல்லை. 'ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவீர்களா, கெட்ட பழக்கம் கிடையாதுதானே?’ என்றெல்லாம் தயங்கித் தயங்கிக் கேட்டாள். இவள் சரிப்பட மாட்டாள் என்று மனதில் பட்டுவிட்டது.''
''ஏன் அப்படி தோன்றியது?''
''எனக்கு பல்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. சேட்டன் பகத் புத்தகம் படிப்பேன். கிரிக்கெட், ஃபுட்பால் என்று விளையாட்டுகள் டெக்னிக்கலாகத் தெரியும். இலக்கியப் புத்தகங்களை தேடித் தேடி வாங்குவேன். அந்தக் காலத்து எடித் பியாஃபிலிருந்து இப்போது வந்திருக்கும் செலீனா கோம்ஸ் வரை இசை கேட்பேன். வார இறுதியில் பிராந்தியும் பருகுவேன். ஆபீஸுக்கு லீவு போட்டு அன்னா ஹஜாரே ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஈரானிய சினிமா, உலக சினிமா டி.வி.டி-க்கள் என்றால் உயிர்..''
''ஓகே... அதற்கும் உன் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?''
''இவற்றில் என் வாழ்க்கைத் துணைக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால்தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பாவைக் காட்டிலும் அம்மா பல மடங்கு கிரேட் பர்சனாலிட்டி. ஆனால், அப்பாவுக்காக நிறைய தன்னை மாற்றிக் கொண்டார். அம்பையின் ஒரு கதையில் வருவதுபோல், அவரே அப்பா போல் மாறிவிட்டார். என்னுடைய உயிர் நண்பன் ஆனந்த், தவறாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, கடைசியில் தற்கொலையில் உயிர்விட்டான். எனக்கும் அப்படி ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது'' என்றான்.
''பெண்கள் எல்லோரும் மோசமும் இல்லை... ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. உண்மையில் காதல் என்பது திருமணத்துக்கு அப்புறம்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலுவாக மாறுகிறது. நவீன பெண்ணோ, பழமையான பெண்ணோ... எல்லோரும் மனிதர்கள்தான். முழுக்க முழுக்க உனக்குப் பிடித்தால்தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்காதே. ஈரானியப் படங்களில் கணவன் - மனைவி உறவும், காதலும், குடும்பப் பிடிமானமும் எத்தனை அழகாகச் சொல்லப்படுகிறது? சாக்ரடீஸுக்குக் கொடுமைக்கார மனைவி கிடைத்ததும், காரல் மார்க்ஸுக்கு ஜென்னி கிடைத்ததும் யாரும் திட்டமிட்டதல்ல. ஓரளவுக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய். அவளுக்காக விட்டுக்கொடு. உனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். பயம் என்கிற கண்ணாடியோடு இந்த உறவை நீ பார்த்தால், எதுவுமே தெளிவாகத் தெரியாது'' என்றேன்.
நவீன், சற்றுத் தெளிவானவன்போல் தெரிந்தாலும், ''அப்படியென்றால்... திருமணம் என்பது ஒரு சூதாட்டம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?'' என்றான் சிரித்தபடி.
''சூதாட்டம்தான். ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அது. காதல், புரிதல், விட்டுக்கொடுத்தல், மனித நேயம் போன்ற டெக்னிக்கல் திறமைகளோடு விளையாட வேண்டிய சுவாரஸ்யமான விளையாட்டு!'' என்றேன்.
''ஐ வில் ட்ரை!'' என்று விடைபெற்றான் நவீன். அவனுக்குப் பதில் சொல்லிவிட்டேனே தவிர, அவன் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. உண்மையிலேயே திருமண உறவு என்பது சூதாட்டம்தானா?!
- நெருக்கம் வளரும்...