ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9
திருமணம் என்றொரு சூதாட்டம்?
ஒவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த் சமீபத்தில் ஓர் இளைஞனைச் சந்தித்தேன். பெயர் நவீன். 24 வயது. சாஃப்ட்வேர் இன்ஜீனியர். நல்ல சம்பளம். வசதியான குடும்பம்.
குழம்பிய மனதோடு இருந்தவன், ''உடனே திருமணம் செய்துகொள் என்று என் பெற்றோர் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்'' என்றான்.
''சரியான வயதுதானே உனக்கு... கோ அஹெட்'' என்றேன்.

திருமணத்தைப் பற்றி எத்தனையோ பழமொழிகளும், மேற்கோள்களும் இருக்
கின்றன. 'அது, லைசென்ஸ் கொடுக்கப்
பட்ட விபச்சாரம்’ என்கிற லெவலுக்கு விமர்சனம் செய்தார் பெர்னார்ட்ஷா. தந்தை பெரியாரோ, திருமணம் என்பதையே ஒரு 'அமைப்பு’ என உருவகப்படுத்தி கிழி கிழி என்று கிழித்தார். 'ஒவ்வொரு திருமணமும் படுக்கையில் முடிவுக்கு வந்து விடுகிறது.’, 'திருமணம் என்பது ஒரு சீட்டாட்டம். உங்கள் கையில் நல்ல கார்டு கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்’ என பல பொன்மொழிகளும் இருக்கின்றன.
நவீன் குழப்பத்தில் இருந்தாலும், அதுவே ஒரு தெளிவினால் ஏற்பட்டதுதான். ''சார்... ஒரு பெண்ணும் நானும் தீவிரமாகக் காதலித்தோம். ஆனால், கடவுள் நம்பிக்கை, சடங்குகள், சினிமா, பொழுதுபோக்குகள், புத்தகம் என்று எல்லாவற்றிலுமே தனக்கு என்ன ஆர்வமோ... அவற்றை என் மீது அவள் திணிக்க ஆரம்பித்தாள். 'விஜய் படத்துக்குப் போக வேண்டாம், சிவன் கோயிலுக்குப் போகக் கூடாது, கிரிக்கெட் பார்க்கக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைக்க ஆரம்பித்தாள்.
'இவளைக் கல்யாணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் அடிமைதான்' என்று உணர்ந்தபோது, 'ஸாரி... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நண்பர்களாகப் பிரிவோம்’ என்றேன். 'நோ பிராப்ளம்’ என்று பைபை சொல்லி விட்டாள்.''
நவீனை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.... அவன் தொடர்ந்தான். ''கொஞ்ச நாளில் அவள் என்னிடம் மறுபடி வருவாள் என்று உள்மனம் எதிர்பார்த்தது போலவே அவள் வந்தாள், தன் திருமண அழைப்பிதழோடு. நவீனப் பெண்களைப் பற்றிய என் நம்பிக்கைகளே ஆட்டம் கண்டன'' என்றான்.
''சரிப்படாது என்று எப்போது நீ சொல்லி விட்டாயோ, அப்போதே அவள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை அவள் பெற்றுவிட்டாளே...'' என்றேன்.
''கரெக்ட்தான். கொஞ்ச நாளிலேயே நானும் சரியாகிவிட்டேன்.''
''சரி, அடுத்து?''
''இப்போது என் அப்பா, அம்மாவுக்குப் பேரன், பேத்தி வேண்டுமாம். ஒரு பெண்ணை பார்த்து விட்டார்கள். அவளிடம் பேசிப் பார்க்குமாறும் சொன்னார்கள். அவர்களுக்காக போய் பார்த்தேன். கணவனே கண்கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இருந்தாள். கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசவே கூச்சப்பட்டாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது தவிர வேறு எதிலுமே நாட்டம் இல்லை. 'ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவீர்களா, கெட்ட பழக்கம் கிடையாதுதானே?’ என்றெல்லாம் தயங்கித் தயங்கிக் கேட்டாள். இவள் சரிப்பட மாட்டாள் என்று மனதில் பட்டுவிட்டது.''
''ஏன் அப்படி தோன்றியது?''
''எனக்கு பல்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. சேட்டன் பகத் புத்தகம் படிப்பேன். கிரிக்கெட், ஃபுட்பால் என்று விளையாட்டுகள் டெக்னிக்கலாகத் தெரியும். இலக்கியப் புத்தகங்களை தேடித் தேடி வாங்குவேன். அந்தக் காலத்து எடித் பியாஃபிலிருந்து இப்போது வந்திருக்கும் செலீனா கோம்ஸ் வரை இசை கேட்பேன். வார இறுதியில் பிராந்தியும் பருகுவேன். ஆபீஸுக்கு லீவு போட்டு அன்னா ஹஜாரே ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஈரானிய சினிமா, உலக சினிமா டி.வி.டி-க்கள் என்றால் உயிர்..''
''ஓகே... அதற்கும் உன் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?''
''இவற்றில் என் வாழ்க்கைத் துணைக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால்தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பாவைக் காட்டிலும் அம்மா பல மடங்கு கிரேட் பர்சனாலிட்டி. ஆனால், அப்பாவுக்காக நிறைய தன்னை மாற்றிக் கொண்டார். அம்பையின் ஒரு கதையில் வருவதுபோல், அவரே அப்பா போல் மாறிவிட்டார். என்னுடைய உயிர் நண்பன் ஆனந்த், தவறாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, கடைசியில் தற்கொலையில் உயிர்விட்டான். எனக்கும் அப்படி ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது'' என்றான்.
''பெண்கள் எல்லோரும் மோசமும் இல்லை... ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. உண்மையில் காதல் என்பது திருமணத்துக்கு அப்புறம்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலுவாக மாறுகிறது. நவீன பெண்ணோ, பழமையான பெண்ணோ... எல்லோரும் மனிதர்கள்தான். முழுக்க முழுக்க உனக்குப் பிடித்தால்தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்காதே. ஈரானியப் படங்களில் கணவன் - மனைவி உறவும், காதலும், குடும்பப் பிடிமானமும் எத்தனை அழகாகச் சொல்லப்படுகிறது? சாக்ரடீஸுக்குக் கொடுமைக்கார மனைவி கிடைத்ததும், காரல் மார்க்ஸுக்கு ஜென்னி கிடைத்ததும் யாரும் திட்டமிட்டதல்ல. ஓரளவுக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய். அவளுக்காக விட்டுக்கொடு. உனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். பயம் என்கிற கண்ணாடியோடு இந்த உறவை நீ பார்த்தால், எதுவுமே தெளிவாகத் தெரியாது'' என்றேன்.
நவீன், சற்றுத் தெளிவானவன்போல் தெரிந்தாலும், ''அப்படியென்றால்... திருமணம் என்பது ஒரு சூதாட்டம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?'' என்றான் சிரித்தபடி.
''சூதாட்டம்தான். ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அது. காதல், புரிதல், விட்டுக்கொடுத்தல், மனித நேயம் போன்ற டெக்னிக்கல் திறமைகளோடு விளையாட வேண்டிய சுவாரஸ்யமான விளையாட்டு!'' என்றேன்.
''ஐ வில் ட்ரை!'' என்று விடைபெற்றான் நவீன். அவனுக்குப் பதில் சொல்லிவிட்டேனே தவிர, அவன் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. உண்மையிலேயே திருமண உறவு என்பது சூதாட்டம்தானா?!
- நெருக்கம் வளரும்...
No comments:
Post a Comment