Tuesday, June 21, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1 - Jun

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
 மாற வேண்டியது பிள்ளைகள் அல்ல !
சூப்பர் மார்க்கெட்டில் கண்ட காட்சி இது... நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, அப்பா மற்றும் அவர் களின் பையன் நின்றிருக்க, கையடக்க வீடியோ கேம் ஒன்றை எடுத்துக்காட்டிய படி, ''கேபிள் இல்லாமல், ரிமோட்டிலேயே விளையாடலாம்; 25,000 கேம்ஸ் இருக்கு; ரீ-சார்ஜபிள் பேட்டரி கொண்டது’' என்று கடைக்காரர் சொல்லிக் கொண்டே செல்கிறார். அச்சிறுவனின் கண்களில் ஆசை விரிந்துகொண்டே போகிறது.
''என்ன விலைங்க?'’ என்று கேட்ட அப்பாவுக்கு, ''3,000 ரூபாய் சார்'’ என்று திரும்பி வந்த பதில் கடுமையான ஷாக் தருகிறது! அவ்வளவு பணம் கையில் இல்லாததால், ''கிருஷ்... இந்த கேம் வேணாம்... வேற ஏதாவது வாங்கிக் கோப்பா'’ என்று அன்பாகச் சொல்கிறார். ''எனக்கு அந்த கேம்தான் வேணும்ப்பா...’' என்று சிணுங்கலுடன் அவனுடைய அழுகை ஆரம்பமாகிறது. எந்தச் சமா தானங்களும் எடுபடாமல், அழுகையும் அடமும் அதிகமாகிறது. சுற்றியிருப் பவர்கள் வேடிக்கை பார்ப்பது அவமானமாகத் தோன்றவே, 3,000 ரூபாயைக் கொடுத்து வாங்கிக் கொண்டு, அவசரம் அவசரமாக நகர்கிறார்கள்.
'இந்தக் கால பசங்களுக்கு நினைச்சது அந்த நிமிஷமே நடந்துடணும். ரொம்ப அழுத்தமான குழந்தைங்க...’ என்ற விமர்சனம்தான் பலருக்கும் உடனடியாக மனதில் தோன்றும். ஆனால், இந்த விஷயத்தில் தவறு என்பது... முழுக்க முழுக்க அந்த பெற்றோர் மீதுதான். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருக்கும். ஒரு குழந்தை, 'இந்த பொம்மை எனக்கு வேணாம்’ என்று சொன்னால்... அதை எடுத்து விளையாட அடுத்த குழந்தை ரெடியாக இருக்கும்.
இப்போது, அம்மாதிரியான சூழ்நிலை இல்லை என்பதும்... 'நான் எல்லாம் சின்னக் குழந்தையில எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? எங்கம்மா தீபாவளிக்கு மட்டும்தான் டிரெஸ் வாங்கித் தருவாங்க. அதுவும் எங்க அண்ணன், தம்பி எல்லாருக்கும் ஒரே மாதிரி டிரவுசர், சட்டைதான். என் புள்ள அப்படிக் கஷ்டப்படக் கூடாது. அவனை நான் மகாராஜா மாதிரி வளர்ப்பேன்’ என்கிற பெற்றோர்களின் உணர்வுப் பூர்வமான மனநிலையும்தான் பல பிரச்னைகளை உற்பத்தி செய்கின்றன. குழந்தை என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவதால், இப்படியே பழகிப்போன குழந்தை, சமயங்களில் சூழ்நிலை சாதகமாக இல்லாமல் போகும்போது, அதை உணராமல் அடம்பிடித்து... நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்கிறது. இது, குழந்தைப் பருவத்தோடு நில்லாமல், வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கும் என்பதுதான் சோகம். ஒரு கட்டத்தில் அழுது சாதிக்க முடியாமல் போனால்... அது பெற்றோர்கள் மீது வெறுப்பாக மாறும் அபாயமும் உண்டு. எனவே, பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்வதுதான் உத்தமம்!
எப்படி?
'அம்மா எனக்கு இந்த தீபாவளிக்கு ஷெர்வானி டிரெஸ் வேணும்; ஸ்போர்ட்ஸ் ஷூ வேணும்’ என்று குழந்தை தன் ஆசை பட்டியலை சமர்ப்பிக்கும்போது, 'செல்லம்... இந்த வருஷம் தீபாவளிக்கு இவ்வளவு பணம்தான் இருக்கு. உனக்கு, அப்பாவுக்கு, அம்மாவுக்கு டிரெஸ் வாங்கணும்... உங்க பாட்டி - தாத்தாவுக்கு நீ டிரெஸ் எடுத்துக் கொடுக்கணும்... பட்டாசு, பலகாரச் செலவு வேற இருக்கு?’ என்கிற 'உண்மை’களை புரிய வைப்பதிலும், அதை அவன் சரியாகப் புரிந்து கொள்வதிலும்தான் இருக்கிறது ஒரு குழந்தையின் 'அனுசரித்து’ச் செல்லும் குணம்! சில விஷயங்களையும் ஆசைகளையும் தள்ளிப்போடும் குணத்தையும் குழந்தைக்குள் வார்த்தெடுப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது! பெற்றோர்தான் தங்கள் குழந்தைக்கு முதல் முன்மாதிரியாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்.
இரண்டாவது... நடத்தை. குழந்தைகள் கையில் காசு கொடுத்துப் பழக்குவது. 8 வயது குழந்தையிடம் 10 ரூபாயைக் கொடுத்து, 'ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கோ ராஜா’ என்பது அக்கறை அல்ல; பல ஆபத்துகளின் ஆரம்பப் புள்ளி!
அதுவே கையில் காசு கொடுத்து 'ஸ்கூல் சேவிங் ஸ்கீம்ல கட்டு’ என்று சொல்வது சிறு வயதில் இருந்து சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். அப்படிப் பழகும் குழந்தைகள், பின்னாளில் 10 ரூபாய் வருமானத்திலும் 5 ரூபாயை சேமிக்கப் பழகும். பணத்தின் மதிப்பு தெரியாமலேயே வளரும் குழந்தை, தன் வாலிப வயதில் வாழ்க்கையை சிக்கலுக்குள் தள்ளிக் கொள்ளும். அதற்கு நாமே ஒரு காரணமாக இருக்கலாமா? யோசியுங்கள்.
உங்கள் குழந்தை நல்லவனாக... வல்லவனாக வளருவதும், அவன் பொல்லாதவனாக தடம் மாறுவதும் இதில்தான் இருக்கிறது!
- வளர்ப்போம்...


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment