மிரட்டும் நில மோசடி அஸ்திரம்...
திகிலில் தி.மு.க. புள்ளிகள்!
மாநிலம் முழுவதும் தி.மு.க. புள்ளிகளின் தலைகள், 'நில மோசடி’ புகாரில் உருள ஆரம்பித்து உள்ளன. சில இடங்களில் கைதும் நடந்து இருக்கிறது. இந்த அதிரடிக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது
கோவையில்தான். கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர், மாவட்ட பஞ்சாயத்துத் துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கும் ஆனந்தன், 'க்ரீன் ஹோம் லேண்ட்ஸ்கேப் பிரைவேட் லிட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிறார். இவர் மீது ஸ்ரீசர்மா என்பவர், கோவை சிட்டி கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ''ஆனந்தனின் ரியல் எஸ்டேட் கம்பெனி சார்பில், தாளியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலிக்க நாயக்கன் பாளையத்தில் 'வெஸ்டர்ன் வேல்ஸ்’ என்ற பெயரில் லே-அவுட் போட்டாங்க. முன் பணமா இத்தனை வருஷமா ஆனந்தன்கிட்ட, 'என் பணத்தைக் கொடுங்க’னு கேட்டுப் பாத்துட்டேன். ரெண்டு மூணு தடவை அந்த ஆபீஸ்ல போயி உண்ணாவிரதம்கூட உட்கார்ந்தேன். மிரட்டல்தான் கிடைச்சது. எனவே, ஆனந்தனிடம் நான் இழந்த பணத்தை மீட்டுக் கொடுங்கள்!'' என்று சொல்லி இருந்தார் ஸ்ரீசர்மா.

கோவையைத் தொடர்ந்து, திருச்சியில் அடுத்த அதிரடி. திருச்சியில் மாஜி அமைச்சர் கே.என்.நேருவால்
கட்டப்பட்டு இருக்கும் கலைஞர் அறிவாலயத்துக்காக தனி நபர் ஒருவரின் இடத்தை முறைகேடாகப் பறித்து உள்ளனர் என்பது குற்றச்சாட்டு. ஏற்கெனவே, மரியம் பிச்சை மரண சர்ச்சையில் தப்பிய நேரு, இதில் நிச்சயம் சிக்குவார் என்று மலைக்கோட்டை அ.தி.மு.க-வினர், காவல் துறையின் அடுத்த கட்ட ஆக்ஷனை எதிர்ப்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்!அடுத்து, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் கோட்டத் தலைவரான அறிவுடை நம்பியை உள்ளே தள்ளியது போலீஸ். செந்தண்ணீர்புரம் ஏரியாவைச் சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு, உறையூரில் இருக்கிறது. இதை வாடகைக்கு எடுத்த அறிவுடை நம்பி, வாடகை கொடுக்காமல் இருப்பதோடு, வீட்டை அபகரிக்கும் முயற்சியிலும்
இறங்கினாராம். 'வீட்டை காலி செய்யச் சொன்னால், கமலாவைக் காலி செய்துவிடுவேன்’ என்று அவர் மிரட்டல் விடுத்ததாகப் புகார். இதேபோல், உறையூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரும், கோட்டத் தலைவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.தி.மு.க-வினர் மீது நில அபகரிப்புப் புகார்கள் குவிவதை அடுத்து, 'வாராவாரம் திங்கட் கிழமைகளில் என்னிடம் நேரடியாக வந்து இந்த புகார்களைக் கொடுக்கலாம்’ என்று அறிவித்து இருக்கிறார், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து. கூடவே, யார் யார் மீது புகார் வந்திருக்கிறது என்பதை ரகசியமாகப் பாதுகாத்து, அவர்கள் முன் ஜாமீன் வாங்கிவிடாமல் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று தன் ஜூனியர்களுக்கும் ஸ்பெஷல் ஆர்டர் போட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கோவை, திருச்சியில் இப்படி என்றால், இந்த 'நில மோசடி ஆக்ஷன் ஜுரம்’, அடுத்து சேலத்தையும் ஆட்டிவைக்கிறது. அதிலும், தி.மு.க-வின் பவர் பாயின்ட்டான வீரபாண்டியாரின் மகன் மீதே புகார் பாய்ந்ததுதான் ஹை லைட். சேலத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், வீரபாண்டியாரின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜா மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆட்சியிலேயே ஒரு புகார் கொடுத்து இருந்தார்.
'என் அப்பா ஜெயக்குமார் பேரில் ஜாகீர் அம்மாபாளையத்தில் 10 ஏக்கர் நிலம் பல்வேறு சர்வே எண்களில் உள்ளன. நாங்கள் 37 ஆண்டுகளாக அந்த இடத்தை அனுபவித்த நிலையில், அதில் 4.41 ஏக்கர் நிலத்துக்கு மாணிக்கம் மகன் சரவணன் என்பவர் போலியாக ஒரு பட்டா தயார் செய்து, அந்த நிலத்தை சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த தங்கவேலு என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார். நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக 2007 மே 13-ல் சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், தங்கவேல், அந்த நிலத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவுக்கு விற்பனை செய்துவிட... நிலத்தை வாங்கிய முன்னாள் எம்.எல்.ஏ ராஜா, நிலத்தைச் சுற்றி வேலி அமைத்துவிட்டார். பறிபோன எங்கள் நிலத்தை மீட்டுத் தாருங்கள்!’ என்பதுதான் அந்த புகாரின் சாராம்சம்.
அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தபடியால், முத்துக்குமாரின் புகார் புஸ்வாணம் ஆகியது. இப்போது அந்த பழைய புகாருக்குப் புத்துயிர் கொடுத்த போலீஸார், ராஜா மீது எஃப்.ஐ.ஆர். போட்டு இருக்கின்றனர். ராஜா எந்த நொடியிலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக புகார் கொடுத்தவரே திடீர் என ஜகா வாங்கினார்.
புகார் கொடுத்த முத்துக்குமார், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் ராஜாவின் வழக்கறிஞர் மூர்த்தியுடன் டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு வந்து, 'நாங்கள் காம்ப்ரமைஸ் ஆகிக்கொள்கிறோம். என் புகார் மீது நடவடிக்கை வேண்டாம்’ என்று சொல்லிச் சென்றார். ஆனால் இதில், 'முத்துக்குமார் குடும்பம் ராஜாவால் மிரட்டப்பட்டு இருக்கிறது’ என்கிற ரீதியில் இப்போது விசாரணையைத் திருப்பி இருக்கிறது போலீஸ். அநேகமாக, மிரட்டல் புகாருடன் சேர்த்து ராஜா வளைக்கப்படலாம் என்கிறார்கள். ராஜாவுக்கு முன்பாக அவரது அப்பா வீரபாண்டியாரையும் வேறு சில நில அபகரிப்பு வழக்குகளில் இழுத்துவிட்டுக் கைது செய்ய, சேலம் போலீஸ் வேலை பார்ப்பதாகவும் பேசப்படுகிறது.
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள போலீஸ் விங், 'எந்தெந்த மாஜிக்கள் எங்கெங்கே சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள்? அதில் என்னென்ன வில்லங்கம்? எப்படி உசுப்பிவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுவுடன் வெளியே வருவார்கள்?’ என்று ஆராய்ந்து வருகிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் படு காஸ்ட்லியான அளவில் நடந்த நில பத்திரப் பதிவுகள் குறித்து மாநிலம் முழுவதும் குடைந்து எடுத்து விசாரித்து வருகிறது இந்தப் படை. அழகிரி, ஸ்டாலின், பொன்முடி, துரைமுருகன் ஆகிய நான்கு பேரின் ஜாதகங்களைத்தான் மிக உன்னிப்பாக அலசுகிறார்கள் இவர்கள். அதிலும் பொன்முடி மீதுதான் உடனடி குறியாம். 'மிரட்டி நிலத்தைப் பிடுங்கினார்’ என்ற வழக்கில் அவர் சிக்கியே தீருவார் என்கின்றனர், சில காக்கிகள்!
இந்த நிலையில், கோவை ஆனந்தன் புகாரை விசாரித்து வரும் கோவை நீதிமன்றம், 'நில மோசடி தொடர்பாக கோர்ட்டில் சிவில் வழக்கு நடைபெற்று வந்தாலும், ஆக்கிரமிப்பாளரை கிரிமினல் நடவடிக்கை மூலம் கைது செய்யலாம்’ என்று அதிரடியாக வழங்கியுள்ள உத்தரவு, தமிழக அரசை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டுசென்று உள்ளது. இதன் மூலம் நில அபகரிப்பு விவகாரத்தில் உருட்டப்படும் முக்கியப் புள்ளிகளை வெகு லகுவாகக் கைது செய்ய முடியும்.
''இதற்கெல்லாம் தி.மு.க-வின் ரியாக்ஷன், பதில் நடவடிக்கை என்ன?'' என்று சில தி.மு.க. அரசியல் புள்ளிகளிடம் கேட்டபோது, உள்ளூர பயம் இருந்தாலும்கூட அதைக் காட்டிக்கொள்ளாமல், ''தான் ஆட்சிக்கு வந்ததும், ஆகாதவர்கள் மீது கஞ்சா வழக்கு போடுவது ஜெயலலிதா ஸ்டைல். இப்போது அந்தப் பழிவாங்கும் ஸ்டைலுக்கு நில மோசடி என்று புது கலர் கொடுத்து இருக்கிறார். சட்டப்படி இதை எதிர்கொள்வோம். சிறுதாவூர் நில விவகாரத்தில் குற்றத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கு எங்கள் மீது வழக்குப் போட என்ன யோக்கியதை? இவரது ஆக்ஷன்களைக் கண்டு, எங்களுக்குத் துளியும் அச்சம் இல்லை. 'நாங்கள் சந்திக்காத வழக்கா... விசாரணைகளா? உன்னால் முடிந்த வரை வழக்குகளைப் போட்டுப் பார்’ என்று எங்கள் தளபதி சொன்ன வார்த்தைகள்தான் எங்களுக்கு டானிக்!'' என்கிறார்கள்.
- ஆர்.லோகநாதன், எஸ்.ஷக்தி, வீ.கே.ரமேஷ்
படங்கள்: 'பிரீத்தி’ கார்த்திக்,
க.தனசேகரன், தி.விஜய்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment