Wednesday, July 13, 2011

தில்சன் வழக்கில் அடுத்த திருப்பம்

தில்சன் வழக்கில் அடுத்த திருப்பம்

தடயத்தை மறைத்த மூன்று அதிகாரிகள் எங்கே?
''தில்சனை சுட்ட ராமராஜைப் பிடித்தது சரி. ஆனால், கொலை நடந்த இடத்தில் ரத்தத்தைக் கழுவி, துப்பாக்கி குண்டு பாய்ந்த சுவரைச் சுரண்டி தடயங்களை மறைத்த யூனிஃபார்ம் அணிந்த மூன்று ராணுவ அதிகாரிகளை ஏன் போலீஸ் பிடிக்கவில்லை?'' என்று சென்னை இந்திரா நகர்வாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்!
''தடயங்களை மறைத்தது மட்டும் இல்லாமல், கொலையாளி யார் என்பதையும் போலீஸுக்குச் சொல்லாமல் மறைத்த அந்த மூன்று ராணுவ அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்த்தே தீரவேண்டும்!'' என்று உரக்கவே குரல் கொடுக்கிறார்கள்.
சென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் குடியிருப்புக்குள் சுவர் ஏறிக் குதித்து வாதாங்கொட்டை பொறுக்கச் சென்ற சிறுவன் தில்சன், கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டான். 'தில்சனை சுட்டது கர்னல் அஜய்சிங்’ என்கிற கோணத்தில்தான் போலீஸின் ஆரம்ப விசாரணை சென்றது. இதைக் கடந்த ஜூ.வி. இதழில், பதிவு செய்து இருந்தோம். இதற்கிடையில், க்ரைம் விவகாரங்களைக் கையாளுவதில் கில்லாடி என்று பெயர் வாங்கிய சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி-யான சேகர் தலைமையிலான டீம், ஜூலை 10-ம் தேதி அன்று ரிட்டயர்டு கர்னல் ராமராஜை இந்த விவகாரத்தில் கைது செய்தது!
'சர்வீஸில் இருக்கும் இளம் அதிகாரி அஜய் சிங்கைக் காப்பாற்றும் வகையில் ரிட்டயர்டு அதிகாரி ராமராஜ் மீது பழியைப் போட்டுவிட்டார்களோ?' என்கிற ரீதியில் சேகரை சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டார்கள்.
''பத்திரிகையாளர்கள் சிலர் எங்களுக்கு இணையாக விசாரணை நடத்தி செய்திகளைப் பரபரப்பாக எழுதினீர்கள். நாங்களும் கடைசி நிமிடம் வரை பொறுமையாகச் செயல்பட்டு துப்புத் துலக்கினோம். சந்தர்ப்ப சாட்சியங்கள், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவம் ஆற்றில் இருந்து எடுத்ததுபோன்ற ஆதாரங்களை எல்லாம் சேகரித்த பிறகுதான், ராமராஜ்தான் இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தோம்!'' என்றார்.
அஜய் சிங் என்ற ட்ராக், ராமராஜை நோக்கி மாறிச் சென்றது எப்படி?
''அஜய் சிங், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தது வாஸ்தவம். அந்த வழியாக அப்போது காரில் சென்ற அவர், சிறுவர்கள் சுவர் ஏறுவதைக் கவனித்து காரை நிறுத்தி, திட்டி இருக்கிறார். அதைக் கேட்ட சிறுவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். அஜய் சிங்கின் கார் சென்ற பிறகு, பார்த்துவிட்டு, மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். தில்சன் சுவர் ஏறி உள்ளே குதித்து இருக்கிறான். அப்போதுதான், திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு உள்ளது. உடனே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்திருக்கிறான் தில்சன். இந்தப் பதற்றத்தில், அஜய் சிங்தான் தில்சனை சுட்டு இருப்பார் என்று நினைத்துவிட்டார்கள்.
எங்கள் விசாரணையின்போதுதான் அஜய் சிங் சொன்ன தகவல்களை கிராஸ்செக் செய்து, அவர் சுடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி கொண்டோம். 'அப்படி என்றால், யார் சுட்டது?’ என்கிற அடுத்த ட்ராக்குக்குச் சென்றோம். 'மரத்தடியில் நின்ற தில்சனை ரிட்டயர்டு கர்னல் ராமராஜ், அவரது வீட்டு பால்கனியில் இருந்தபடியே துப்பாக்கியால் சுட்டு இருப்பாரோ?’ என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழுந்து, அவரை விசாரித்தோம்.
ராமராஜிடம் ஏதாவது துப்பாக்கி இருக்கிறதா என்று அதன் பிறகு நாங்கள் விசாரித்தபோது, சரிவர பதில் இல்லை. அதன் பிறகு துருவித் துருவி விசாரித்தபோது, 'போரில் இந்திய ராணுவம் கைப்பற்றிய துப்பாக்கிகளை ராணுவத்தினருக்கு ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில், ராமராஜும் ஒரு துப்பாக்கியை வாங்கியதோடு, அதற்கு லைசென்ஸும் வைத்திருக்கிறார்...’ என்பதைத் தெரிந்துகொண்டோம். இந்தத் துப்பாக்கி பற்றி முறைப்படி அவரது மேலிடத்துக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால், சைசென்ஸ் புதுப்பிக்க லோக்கல் போலீஸுக்கு ராமராஜ் விண்ணப்பித்து இருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். இதுபோன்ற பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்த பிறகுதான், ராமராஜனுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரிக்க முடிந்தது. அவரால் தப்பிக்க முடியவில்லை. தில்சனை சுட்ட துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் எடுத்துப்போய் கூவம் ஆற்றில் எறிந்துவிட்டதையும் ஒப்புக்கொண்டார். தீ அணைப்புத் துறையினர் உதவியுடன் அதை மீட்டோம்!'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
- ஆர்.பி.  படம்: சொ.பாலசுப்ரமணியம்

No comments:

Post a Comment