Tuesday, April 5, 2011

வாழ்க வளமுடன்! - 1

வாழ்க வளமுடன்! - 1


ந்த உலகின் மிகப் பெரிய அவஸ்தை, காத்திருத்தல்தான்! உலகத்து மனிதர்கள் அனைவருமே எவருக்காகவோ எதற்காகவோ எப்போதும் காத்திருக்கத்தான் செய்கின்றனர். உரிய நபர் வராவிட்டாலோ, அல்லது உரிய செயல், உரிய தருணத்தில் நிகழாமல் தள்ளிப்போனாலோ பேரவஸ்தைக்கு ஆளாகிறோம்; மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறோம்.
காத்திருப்பது கொடுமை; காக்க வைப்பது தர்மசங்கடம். பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவம் வாங்குவதில் துவங்கி, அந்தக் குழந்தை வளர்ந்து மேற்படிப்புக்கோ அல்லது இதுவரையிலான கடன்களை அடைப்பதற்கோ அல்லது வீடு வாங்குவதற்கோ வங்கிக் கடனுக்காக, எவரேனும் ஒருவரைச் சிபாரிசு பிடித்து, அந்த நபருக்காக வங்கியின் வாசலில் கால் கடுக்கக் காத்திருந் தவர்கள் நம்மில் அநேகம் பேர் இருக்கலாம்.

'காலம் தவறாமை’ என்பது மிகமிக முக்கியம். ''பாங்க் வாசல்ல இருக்கிற பெட்டிக் கடைல, நாளைக்குக் காலைல பத்தமணிக்கு  நில்லுங்க, வந்துடறேன். கண்டிப்பா லோன் கிடைச்சிரும்’ என்று சொல்வது, ஒரு வாக்குறுதிதான். ஆனால் பலர், கொடுத்த வாக்குறுதியை மறந்தே விடுகிறார்கள். பத்து மணிக்குத்தான் குளித்துச் சாப்பிட்டு ரெடியாவார்கள்; பத்தே காலுக்கு வீட்டிலிருந்து கிளம்புவார்கள். பத்தரைக்கு நான்கு சிக்னல்களைக் கடந்திருப்பார்கள்; பத்தே முக்காலுக்கு மீதமுள்ள மூன்று சிக்னல் களைக் கடந்து, வழியில் இரண்டு மூன்று நிமிடங்கள் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போக, அதை உதைத்துச் சரிசெய்து... பாங்க் வாசல் பெட்டிக் கடைக்கு வரும்போது மணி 11. அந்த ஒரு மணி நேரம் வெயிலில், புழுதியில், வாகன இரைச்சலில், கால் மாற்றி மாற்றி நின்று தவித்தவர்களின் முகங்களைப் பார்த்திருக்கிறீர் களா? இந்த உலகின் மிஸ்டர் பரிதாபம் அவர்களும், அவர்களின் கால்களும்தான்!  
ஆடுதசை இறுகிக் கொள்ளும்; முழங்கால்கள் கழன்று கொள்ளும்; பாதங்களில் வலு குறைந்து, வலி அதிகரித்திருக்கும்; விரல்களும் நரம்புகளும் துவண்டே போயிருக்கும். ஆக, புத்தி முழுக்க கால்களின் வலியே நிறைந்து இம்சிக்கும். அந்த சிபாரிசு மனிதர், ஒரு மணி நேரம் கழித்தாகிலும் வந்தாரே என்று சந்தோஷம் கொள்ளாமல், அவர் மீது எரிச்சல்பட வைக்கும். 'என்ன பிறவிடா இவன்! என் தலையெழுத்து, இவன் தயவையெல்லாம் எதிர்பார்த்துக் கால் கடுக்க நிக்கவேண்டியிருக்கு!’ என எவருக்கும் தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு, அவருக்குப் பின்னே பூனை போல் பதுங்கிச் செல்வார், மிஸ்டர் பரிதாபம். வேறென்ன செய்வது? அலைக்கழிப்புகளையும் அவமானங்களையும் கடந்து, வலிகளையும் வேதனைகளையும் சகித்துக் கொண்டு, ஏக்கங் களையும் எதிர்பார்ப்புகளையும் சேகரித்தபடி வாழ்வதுதானே வாழ்க்கை?! இந்தச் சோதனை களிலும் சோகங்களிலும், நம்முடன், நமக்குப் பக்கபலமாகத் திகழ்கிற ஒப்பற்ற நண்பன், நம்முடைய கால்கள். ஆனால், நண்பனையும், அவனது பொறுமையையும் உணர்வதே இல்லை; அவனுக்குச் சின்னதாக நன்றியும் சொல்வதில்லை.
ரயில்வே ஸ்டேஷனில் உறவுக்காரரை அழைப் பதற்காக, அந்த நீண்ட நெடிய படிகளில் ஏறி இறங்கி, பிளாட்பார மேடையில் உள்ள இருக்கை களில் சிதறிக் கிடக்கும் வெற்றிலை எச்சில் கறைகளை முறைத்துப் பார்த்துவிட்டு, அங்கும் இங்கும் நடந்தபடி இருக்கும்போதுதான்... 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு...’ என்று ஆரம்பித்து, ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வரும் என்பதை அறிவிப்பார்கள். அந்த ஒருமணி நேரமும், உங்களுக்கு உறுதுணையாக இருப்பவை, கால்கள்தான்!
கைக்குழந்தையுடன் கணவர், அந்த வளா கத்தில் உள்ள செடி- கொடிகளையும், பறந்து கிளையில் வந்து அமர்ந்து விட்டுச் செல்கிற காக்கா- குருவிகளையும், பட்டாம் பூச்சிகளையும் அங்கும் இங்குமாக ஓடி, குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்க, உள்ளே வகுப்பறையில் அவரின் மனைவி, பரீட்சை எழுதிக்கொண்டி ருப்பாள். அது பத்தாம் வகுப்புத் தேர்வாகவும் இருக்கலாம்; ஐ.ஏ.எஸ். தேர்வாகவும் இருக்கலாம். குழந்தையோடு கணவன் கால் கடுக்க வெயிலில் காத்திருக்கும் வேதனையையும், பொருளாதாரச் சிக்கல் தீர்ந்து, குடும்பம் நிமிரவேண்டும் எனும் கனவையும் மனதுள் சுமந்தபடி, புத்தியில் தேக்கி வைத்திருந்த பாடங்களையெல்லாம் எழுத்தில் கொண்டு வரும் வெறியுடன் தேர்வு எழுதுவாள், அவள். மனைவிக்கும், தனது கால்களுக்கும் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம், அந்தக் கணவர். காத்திருத்தல் கொடுமையானது என்பது பொய்த்து, காத்திருப்பதும் காக்க வைப்பதும் சுகம் என்பது நிரூபணமாகும் தருணம் அது.
காலம் பொன் போன்றது என்பது, கால்களுக் கும் பொருந்தும். கால்களை உரிய தருணத்தில் கவனியுங்கள். பாதங்களைப் பராமரிப்பதில்தான் நம் ஒட்டுமொத்த வெற்றியும் ஒளிந்திருக்கிறது!
உலகில் மருத்துவமனைகள் இல்லாத ஊரே இல்லை. நோயாளியாக, அவர்களின் உறவினர் களாக, பார்வையாளர்களாக, மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்வாக... என எவரேனும் எதற்காகவேனும் மருத்துவமனைகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். தாய், தந்தை அல்லது யாரேனும் உறவை மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு, வராந்தாவின் நாற்காலியில் காத்திருப்பார்கள், அவர்களின் உறவினர்கள். மூன்றாவது மாடியில் இருந்து அழைப்பு வர... விறுவிறுவென ஓடி, மருந்துச்சீட்டை எடுத்துக் கொண்டு, தரைத் தளத்துக்கு வந்து, பார்மஸியில் மருந்துகளை வாங்கிக் கொண்டு, மீண்டும் மூன்றாவது மாடிக்கு ஓடி, கொடுத்து விட்டு, வரவேற்பு அறையின் நாற்காலியைப்
பார்த்தால், அங்கே வேறு எவரோ உட்கார்ந் திருப்பார்கள். அயர்ச்சியுடன் மீண்டும் நீள் நடை. அவர்களின் கால்களில் மட்டுமல்ல; முகத்திலும் அந்தச் சோர்வு பிரதிபலிக்கும். கவலையும் பயமும் குடிகொண்டிருக்கும். உள்ளே இடையறாது பிரார்த்தனை ஓடிக்கொண்டிருக்கும். அடுத்து, மருந்துகளை வாங்குவதற்காக அவர்களின் கால்கள் அடுத்த ஓட்டத்துக்குத் தயாராக இருக்கும்.  மருத்துவமனைகளில் லிஃப்ட் வசதி இருக்கும்தான். ஆனால், அதைப் பயன்படுத்த மாட்டார்கள் அவர்கள். பயன்படுத்தத் தோன்றாது. காரணம், லிஃப்ட் எப்போதுமே நிரம்பி வழியும். தவிர, லிஃப்டைவிட கால்களே கைகொடுக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
'பாவம்ப்பா புள்ள... நாலு நாளா ஆஸ்பத் திரியே கதியா, மாடிக்கும் மெடிக்கல் ஷாப்புக்குமா ஓடிக்கிட்டே இருந்துச்சு’ என்பார்கள் உறவுக்காரர்கள். இது  நன்றியின் வெளிப்பாடு. 'அப்பா நல்லாயிட்டாரு! இன்னிக்கி சாயந்திரமே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்’ என்று டாக்டர் சொல்ல, கைகுவிப்போம். இதுவும் நன்றியைச் சொல்வதுதான். ஆனால், மாடிக்கும் தரைத்தளத்துக்குமாகப் பறந்து பறந்து வேலை செய்த நம் கால்களுக்கு நன்றி சொல்லி யிருப்போமா? மாட்டோம்தானே? இனியாவது சொல்லுவோம். 'கால்களே... காலம் உள்ள வரை உங்கள் உதவியை மறக்க மாட்டேன்’ என்று மனதாரச் சொல்லுவோம் நம் நன்றியை!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா



Source - Vikatan Magazine 

நூற்றுக்கு நூறு சச்சின் !

நூற்றுக்கு நூறு சச்சின் !


 கே.கணேசன்
உலகமே ஆர்வத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஓர் ஆசிய நாட்டு அணி இந்தக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்த வரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்ரிக்க அணிக்கு மிகவும் எளிதான இலக்குதான் என்றாலும், அதை எடுக்க விடாமல், தங்களது திறமையான பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கினால் தடுத்து விட்டனர் நியூஸிலாந்து அணியினர். அதே போல, நான்கு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியாவை, இந்தியா தனது  சிறப்பான பேட்டிங் திறமையால் வெற்றி கண்டுள்ளது.


இந்தப் போட்டிகளின் ஆரம்பத்தில் பல்வேறு குழப்பங்களில் இருந்த பாகிஸ்தான் அணி, அதில் இருந்து மீண்டு, அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், சாஹித் அப்ரிடி. இவருக்குத்தான்  இந்தப் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி, சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினப் பெறும் வாய்ப்புள்ளது. நமது  ஜாகீர் கானுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது இந்தப் போட்டியின் சிறப்புகளில் ஒன்று.
இந்த உலகப் கோப்பையில் எந்த அணி வெற்றிபெறும் என்கிற பதைபதைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எல்லோரது கவனமும் குவிந்திருப்பது நமது சச்சின் மீதுதான்!
கிரிக்கெட்டில் அவர் ஒரு சகாப்தம். அதுவும் சாதனைகளின் சகாப்தம் என்றே சொல்லலாம். உலகக் கோப்பைப் போட்டிகள் உட்பட, ஒரு தினப் போட்டிகளில் தனது தனித்த ஆட்டத் திறமையால் சாதனைகளுக்கு மேல் சாதனை புரிந்து வருகிறார் இந்த ஹீரோ. இவரது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டுவிட்டால் செஞ்சுரிகளில் செஞ்சுரி போட்ட சாதனையை அள்ளிக்கொள்வார். எனவே, எல்லோரது கவனமும் அவர் எடுக்கப் போகும் அந்த நூறாவது சதத்தை எதிர்பார்த்தே இருக்கிறது.
நாம் முந்தைய இதழ்களில் எழுதியிருந்தபடி சச்சினின் சாதனைகளை அவரேதான் முறியடிக்க முடியும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது குறிப்பிடத் தகுந்த சாதனையைச் செய்வதே சச்சினின் இயல்பு!
ஒரு தினப் போட்டிகளில் 18,000 ரன்களுக்கு மேல் அடித்தது, நூறாவது சதத்தினை பூர்த்தி செய்ய இருப்பது, 153 அரை சதங்களை அடித்து நொறுக்கியது, 452 ஒரு தினப் போட்டிகளில் ஆடியுள்ளது, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான 200 ரன்களை அடித்து, அவுட் ஆகாமல் இருந்தது...  அதிக உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றது, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தது என சாதனைகளுக்கு மேல் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் சச்சின்.
உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான நபர் நம் யுவராஜ் சிங். சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் அவர், இந்த உலகக் கோப்பையில் முதல் ஏழு ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி, நான்கு முறை ஆட்ட நாயகன் விருதினைப் பெற்று இருக்கிறார்.
ஒரு சதம், நான்கு அரை சதங்கள் என பேட்டிங்கில் கலக்கியதோடு இல்லாமல், 11 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்.
அதுவும் தவிர, இந்த உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, அரை சதமும் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
இந்திய அணி உலகக் கோப்பை கால் இறுதியில் நுழைய பெரிதும் இவரது ஆட்டமே உதவியது. நான்கு முறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியவை வீழ்த்தி, அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு முக்கியக் காரணம், யுவராஜ் சிங்கின் திறமையான ஆட்டம்தான். சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து யுவராஜ் சிறப்பாக ஆடி, 57 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த தொடர் நாயகன் விருதும் இவருக்கே கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பும் வலுப்பெற்று இருக் கிறது.
அட்டை, படங்கள்: சு.குமரேசன்
 Source - Vikatan Magazine

Monday, April 4, 2011

விமானிகளிலும் போலிகளா?

விமானிகளிலும் போலிகளா?


இப்போது டூ வீலர் ஓட்ட உரிமம் வாங்கு​வதற்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால், லட்சங்களை லஞ்சமாக அள்ளிக் கொடுத்து விமானிகளாகப் பலர் உரிமம் பெற்று இருக்கிறார்கள் என்ற செய்தியால் பெரும் அதிர்ச்சி!
ஒரு விமானி 200 மணி நேரம் விமானம் ஓட்டி நிரூபித்தால்தான் உரிமம் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வு கடினமானது. இதில் பல முறை தோல்வி கண்டவர்கள்தான், பணம் கொடுத்து குறுக்கு வழியில் உரிமம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் 10 மணி நேரம் மட்டுமே விமானத்தை ஓட்டியவர் எல்லாம், உரிமம் வாங்கி இருக்கிறார் என்பது எத்தனை பெரிய மோசடி?
நம் நாட்டில் 40 விமானப் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தான் பயிற்சி நிலையத்தில்தான் இந்த மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 விமானிகள் போலி உரிமம் பெற்றதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானபோதே, விமானி மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது. மழை, மேகமூட்டம், புயல், ஓடுபாதை நீளம் போன்றவற்றில் விமானிகளுக்குத் தெளிவான அறிதல் வேண்டும். இதற்காகத்தான் 200 மணி நேரம் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரம் மட்டுமே ஓட்டியவர்கள் கத்துக்குட்டி விமானியாகத்தான் கருதப்படுவார்.
இவர் கையில் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள விமானத்​தையும், விலை மதிக்க முடியாத பயணிகளின் உயிர்களையும் ஒப்​படைப்பது எத்தனை பெரிய பயங்கரம். விமானப் பயணம் என்பது ஒரு நாட்டின் மரியாதை சம்பந்தப்பட்டது. இதில் போலிகள் நுழைய அனுமதித்த கொடியவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
- தா.ஆறுமுகம், அம்பூர்பேட்டை.

Source - Vikatan Magazine

உங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல்

உங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல்

வயிற்றெரிச்சல் படாதீங்க!
தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள்
 
வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம்பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்! 
'ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார். 'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!
அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி  அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தீர்மானம் கொண்டுவரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. 1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.
'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?
''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?
- எம்.பரக்கத் அலி
தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.
நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.

Source - Vikatan Magazine

வேட்பாளரை அடித்தாரா விஜயகாந்த்?

வேட்பாளரை அடித்தாரா விஜயகாந்த்?

தகதகக்கும் தர்மபுரி!
டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்! 
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்!
பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு.
ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை. அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார்.
பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார்.
விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார்.
ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.
உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு!
நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக.
விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.
தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை!
- எஸ்.ராஜாசெல்லம்

Source - Vikatan Magazine