நூற்றுக்கு நூறு சச்சின் !
கே.கணேசன்
உலகமே ஆர்வத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஓர் ஆசிய நாட்டு அணி இந்தக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்த வரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்ரிக்க அணிக்கு மிகவும் எளிதான இலக்குதான் என்றாலும், அதை எடுக்க விடாமல், தங்களது திறமையான பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கினால் தடுத்து விட்டனர் நியூஸிலாந்து அணியினர். அதே போல, நான்கு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியாவை, இந்தியா தனது சிறப்பான பேட்டிங் திறமையால் வெற்றி கண்டுள்ளது.
இந்த உலகப் கோப்பையில் எந்த அணி வெற்றிபெறும் என்கிற பதைபதைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எல்லோரது கவனமும் குவிந்திருப்பது நமது சச்சின் மீதுதான்!
கிரிக்கெட்டில் அவர் ஒரு சகாப்தம். அதுவும் சாதனைகளின் சகாப்தம் என்றே சொல்லலாம். உலகக் கோப்பைப் போட்டிகள் உட்பட, ஒரு தினப் போட்டிகளில் தனது தனித்த ஆட்டத் திறமையால் சாதனைகளுக்கு மேல் சாதனை புரிந்து வருகிறார் இந்த ஹீரோ. இவரது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டுவிட்டால் செஞ்சுரிகளில் செஞ்சுரி போட்ட சாதனையை அள்ளிக்கொள்வார். எனவே, எல்லோரது கவனமும் அவர் எடுக்கப் போகும் அந்த நூறாவது சதத்தை எதிர்பார்த்தே இருக்கிறது.
நாம் முந்தைய இதழ்களில் எழுதியிருந்தபடி சச்சினின் சாதனைகளை அவரேதான் முறியடிக்க முடியும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது குறிப்பிடத் தகுந்த சாதனையைச் செய்வதே சச்சினின் இயல்பு!

உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான நபர் நம் யுவராஜ் சிங். சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் அவர், இந்த உலகக் கோப்பையில் முதல் ஏழு ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி, நான்கு முறை ஆட்ட நாயகன் விருதினைப் பெற்று இருக்கிறார்.
ஒரு சதம், நான்கு அரை சதங்கள் என பேட்டிங்கில் கலக்கியதோடு இல்லாமல், 11 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்.

இந்திய அணி உலகக் கோப்பை கால் இறுதியில் நுழைய பெரிதும் இவரது ஆட்டமே உதவியது. நான்கு முறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியவை வீழ்த்தி, அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு முக்கியக் காரணம், யுவராஜ் சிங்கின் திறமையான ஆட்டம்தான். சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து யுவராஜ் சிறப்பாக ஆடி, 57 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த தொடர் நாயகன் விருதும் இவருக்கே கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பும் வலுப்பெற்று இருக் கிறது.
அட்டை, படங்கள்: சு.குமரேசன்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment