Tuesday, April 5, 2011

வாழ்க வளமுடன்! - 1

வாழ்க வளமுடன்! - 1


ந்த உலகின் மிகப் பெரிய அவஸ்தை, காத்திருத்தல்தான்! உலகத்து மனிதர்கள் அனைவருமே எவருக்காகவோ எதற்காகவோ எப்போதும் காத்திருக்கத்தான் செய்கின்றனர். உரிய நபர் வராவிட்டாலோ, அல்லது உரிய செயல், உரிய தருணத்தில் நிகழாமல் தள்ளிப்போனாலோ பேரவஸ்தைக்கு ஆளாகிறோம்; மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறோம்.
காத்திருப்பது கொடுமை; காக்க வைப்பது தர்மசங்கடம். பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவம் வாங்குவதில் துவங்கி, அந்தக் குழந்தை வளர்ந்து மேற்படிப்புக்கோ அல்லது இதுவரையிலான கடன்களை அடைப்பதற்கோ அல்லது வீடு வாங்குவதற்கோ வங்கிக் கடனுக்காக, எவரேனும் ஒருவரைச் சிபாரிசு பிடித்து, அந்த நபருக்காக வங்கியின் வாசலில் கால் கடுக்கக் காத்திருந் தவர்கள் நம்மில் அநேகம் பேர் இருக்கலாம்.

'காலம் தவறாமை’ என்பது மிகமிக முக்கியம். ''பாங்க் வாசல்ல இருக்கிற பெட்டிக் கடைல, நாளைக்குக் காலைல பத்தமணிக்கு  நில்லுங்க, வந்துடறேன். கண்டிப்பா லோன் கிடைச்சிரும்’ என்று சொல்வது, ஒரு வாக்குறுதிதான். ஆனால் பலர், கொடுத்த வாக்குறுதியை மறந்தே விடுகிறார்கள். பத்து மணிக்குத்தான் குளித்துச் சாப்பிட்டு ரெடியாவார்கள்; பத்தே காலுக்கு வீட்டிலிருந்து கிளம்புவார்கள். பத்தரைக்கு நான்கு சிக்னல்களைக் கடந்திருப்பார்கள்; பத்தே முக்காலுக்கு மீதமுள்ள மூன்று சிக்னல் களைக் கடந்து, வழியில் இரண்டு மூன்று நிமிடங்கள் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போக, அதை உதைத்துச் சரிசெய்து... பாங்க் வாசல் பெட்டிக் கடைக்கு வரும்போது மணி 11. அந்த ஒரு மணி நேரம் வெயிலில், புழுதியில், வாகன இரைச்சலில், கால் மாற்றி மாற்றி நின்று தவித்தவர்களின் முகங்களைப் பார்த்திருக்கிறீர் களா? இந்த உலகின் மிஸ்டர் பரிதாபம் அவர்களும், அவர்களின் கால்களும்தான்!  
ஆடுதசை இறுகிக் கொள்ளும்; முழங்கால்கள் கழன்று கொள்ளும்; பாதங்களில் வலு குறைந்து, வலி அதிகரித்திருக்கும்; விரல்களும் நரம்புகளும் துவண்டே போயிருக்கும். ஆக, புத்தி முழுக்க கால்களின் வலியே நிறைந்து இம்சிக்கும். அந்த சிபாரிசு மனிதர், ஒரு மணி நேரம் கழித்தாகிலும் வந்தாரே என்று சந்தோஷம் கொள்ளாமல், அவர் மீது எரிச்சல்பட வைக்கும். 'என்ன பிறவிடா இவன்! என் தலையெழுத்து, இவன் தயவையெல்லாம் எதிர்பார்த்துக் கால் கடுக்க நிக்கவேண்டியிருக்கு!’ என எவருக்கும் தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு, அவருக்குப் பின்னே பூனை போல் பதுங்கிச் செல்வார், மிஸ்டர் பரிதாபம். வேறென்ன செய்வது? அலைக்கழிப்புகளையும் அவமானங்களையும் கடந்து, வலிகளையும் வேதனைகளையும் சகித்துக் கொண்டு, ஏக்கங் களையும் எதிர்பார்ப்புகளையும் சேகரித்தபடி வாழ்வதுதானே வாழ்க்கை?! இந்தச் சோதனை களிலும் சோகங்களிலும், நம்முடன், நமக்குப் பக்கபலமாகத் திகழ்கிற ஒப்பற்ற நண்பன், நம்முடைய கால்கள். ஆனால், நண்பனையும், அவனது பொறுமையையும் உணர்வதே இல்லை; அவனுக்குச் சின்னதாக நன்றியும் சொல்வதில்லை.
ரயில்வே ஸ்டேஷனில் உறவுக்காரரை அழைப் பதற்காக, அந்த நீண்ட நெடிய படிகளில் ஏறி இறங்கி, பிளாட்பார மேடையில் உள்ள இருக்கை களில் சிதறிக் கிடக்கும் வெற்றிலை எச்சில் கறைகளை முறைத்துப் பார்த்துவிட்டு, அங்கும் இங்கும் நடந்தபடி இருக்கும்போதுதான்... 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு...’ என்று ஆரம்பித்து, ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வரும் என்பதை அறிவிப்பார்கள். அந்த ஒருமணி நேரமும், உங்களுக்கு உறுதுணையாக இருப்பவை, கால்கள்தான்!
கைக்குழந்தையுடன் கணவர், அந்த வளா கத்தில் உள்ள செடி- கொடிகளையும், பறந்து கிளையில் வந்து அமர்ந்து விட்டுச் செல்கிற காக்கா- குருவிகளையும், பட்டாம் பூச்சிகளையும் அங்கும் இங்குமாக ஓடி, குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்க, உள்ளே வகுப்பறையில் அவரின் மனைவி, பரீட்சை எழுதிக்கொண்டி ருப்பாள். அது பத்தாம் வகுப்புத் தேர்வாகவும் இருக்கலாம்; ஐ.ஏ.எஸ். தேர்வாகவும் இருக்கலாம். குழந்தையோடு கணவன் கால் கடுக்க வெயிலில் காத்திருக்கும் வேதனையையும், பொருளாதாரச் சிக்கல் தீர்ந்து, குடும்பம் நிமிரவேண்டும் எனும் கனவையும் மனதுள் சுமந்தபடி, புத்தியில் தேக்கி வைத்திருந்த பாடங்களையெல்லாம் எழுத்தில் கொண்டு வரும் வெறியுடன் தேர்வு எழுதுவாள், அவள். மனைவிக்கும், தனது கால்களுக்கும் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம், அந்தக் கணவர். காத்திருத்தல் கொடுமையானது என்பது பொய்த்து, காத்திருப்பதும் காக்க வைப்பதும் சுகம் என்பது நிரூபணமாகும் தருணம் அது.
காலம் பொன் போன்றது என்பது, கால்களுக் கும் பொருந்தும். கால்களை உரிய தருணத்தில் கவனியுங்கள். பாதங்களைப் பராமரிப்பதில்தான் நம் ஒட்டுமொத்த வெற்றியும் ஒளிந்திருக்கிறது!
உலகில் மருத்துவமனைகள் இல்லாத ஊரே இல்லை. நோயாளியாக, அவர்களின் உறவினர் களாக, பார்வையாளர்களாக, மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்வாக... என எவரேனும் எதற்காகவேனும் மருத்துவமனைகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். தாய், தந்தை அல்லது யாரேனும் உறவை மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு, வராந்தாவின் நாற்காலியில் காத்திருப்பார்கள், அவர்களின் உறவினர்கள். மூன்றாவது மாடியில் இருந்து அழைப்பு வர... விறுவிறுவென ஓடி, மருந்துச்சீட்டை எடுத்துக் கொண்டு, தரைத் தளத்துக்கு வந்து, பார்மஸியில் மருந்துகளை வாங்கிக் கொண்டு, மீண்டும் மூன்றாவது மாடிக்கு ஓடி, கொடுத்து விட்டு, வரவேற்பு அறையின் நாற்காலியைப்
பார்த்தால், அங்கே வேறு எவரோ உட்கார்ந் திருப்பார்கள். அயர்ச்சியுடன் மீண்டும் நீள் நடை. அவர்களின் கால்களில் மட்டுமல்ல; முகத்திலும் அந்தச் சோர்வு பிரதிபலிக்கும். கவலையும் பயமும் குடிகொண்டிருக்கும். உள்ளே இடையறாது பிரார்த்தனை ஓடிக்கொண்டிருக்கும். அடுத்து, மருந்துகளை வாங்குவதற்காக அவர்களின் கால்கள் அடுத்த ஓட்டத்துக்குத் தயாராக இருக்கும்.  மருத்துவமனைகளில் லிஃப்ட் வசதி இருக்கும்தான். ஆனால், அதைப் பயன்படுத்த மாட்டார்கள் அவர்கள். பயன்படுத்தத் தோன்றாது. காரணம், லிஃப்ட் எப்போதுமே நிரம்பி வழியும். தவிர, லிஃப்டைவிட கால்களே கைகொடுக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
'பாவம்ப்பா புள்ள... நாலு நாளா ஆஸ்பத் திரியே கதியா, மாடிக்கும் மெடிக்கல் ஷாப்புக்குமா ஓடிக்கிட்டே இருந்துச்சு’ என்பார்கள் உறவுக்காரர்கள். இது  நன்றியின் வெளிப்பாடு. 'அப்பா நல்லாயிட்டாரு! இன்னிக்கி சாயந்திரமே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்’ என்று டாக்டர் சொல்ல, கைகுவிப்போம். இதுவும் நன்றியைச் சொல்வதுதான். ஆனால், மாடிக்கும் தரைத்தளத்துக்குமாகப் பறந்து பறந்து வேலை செய்த நம் கால்களுக்கு நன்றி சொல்லி யிருப்போமா? மாட்டோம்தானே? இனியாவது சொல்லுவோம். 'கால்களே... காலம் உள்ள வரை உங்கள் உதவியை மறக்க மாட்டேன்’ என்று மனதாரச் சொல்லுவோம் நம் நன்றியை!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா



Source - Vikatan Magazine 

No comments:

Post a Comment