Wednesday, May 25, 2011

கோர்ட்டுக்குத் தேவையா கோடை விடுமுறை?

கோர்ட்டுக்குத் தேவையா கோடை விடுமுறை?

சுதந்திரத்துக்கு முன் நம் நாட்டின் நீதித் துறை யில் உள்ள பதவிகளை, ஆங்கிலேயர்களே பெரும்பாலும் வகித்தார்கள். கோடை வெப்பத்தை சமாளிக்க முடியாத அவர்கள், கோடை நாட்களில் நீதிமன்றத்துக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். அந்தக் காலத்தில் நீதிமன்றங்களில்... வழக்குகள் தேங்கிக்கிடப்பதும் இல்லை என்றதால், நிம்மதியாக ஓய்வை அனுபவித்தார்கள்.
ஆனால்... இன்று?
நம் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளில் இருந்து, பணியாளர்கள் வரை அனைவரும் இந்தியர்களே. நம் நாட்டின் பருவ கால மாற்றங்களை அறிந்து வளர்ந்தவர்கள். இது தவிர, நாட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. ஆண்டு முழுவதும் இரவும் பகலுமாக நீதிமன்றம் செயல்பட்டாலும், இந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இப்படி ஒரு சூழலில் நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை தேவைதானா?
விடுமுறை கால நீதிமன்றம் இயங்கினாலும், அது அவசர மனுக்களை மட்டும்தானே விசாரிக்கும். மேல் முறையீடு மனுக்களை விசாரிக்காது என்பதால், தேக்கம் அடையும் வழக்குகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கிறது. அரசின் அத்தனை துறைகளும் கோடை விடுமுறை இன்றி இயங்கும்போது, நீதிமன்றத்துக்கு மட்டும் விடுமுறை தேவையா?
கோடை விடுமுறை விவகாரத்தை நீதிமன்றம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும். ஏனெனில், தாமதமாக வழங்கப்படும் நீதியும் ஒரு வகையில் அநீதியே!
- கே.வெங்கடாசலபதி, செங்கல்பட்டு.
Source - Vikatan Magazine

Tuesday, May 24, 2011

வாழ்க வளமுடன்! - 5

வாழ்க வளமுடன்! - 5


'கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்குவதுபோல’ என்று நம்மூரில் அருமையாகச் சொல்வார்கள், ஒரு பழமொழி!
உடனே நாம், 'கண்களை எங்கே விற்பது? அதன் பிறகு எதற்காக ஓவியத்தை வாங்கவேண்டும்? அந்த ஓவியத்தை பார்க்கவோ ரசிக்கவோ முடியாதே!’ என்று நம் சிந்தனை களை ஓடவிட்டுத் தெளிவு பெற முடியும். கண்களை விற்று விட்டு ஓவியத்தை வாங்குவது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்பதை உணர முடியும்.

ஆனாலும் நாம், தொடர்ந்து கண்களை விற்றுத்தான் ஓவியம் வாங்கிக்கொண்டு இருக்கிறோம்; காதுகளை முழுவதுமாக அடைத்துவிட்டுத்தான் இசையைக் கேட்கிறோம்; இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டுதான், ஓடுவதற்கு முயற்சி செய்கிறோம்.
'என்ன இது?’ என்று குழம்புகிறீர்களா? 'ஒண்ணுமே புரியலியே சுவாமி!’ என அலுத்துக் கொள்கிறீர்களா?
புரியும்படி தெளிவாகவே சொல்கிறேன். மனிதர்களாகிய நாம் கிராமங்களை விட்டு நகரத்துக்கு வர ஆசைப்பட்டோம். அப்படி நகர்ந்து வரும்போது, நகரத்துக்கு அருகில் இருந்த காட்டை அழித்து நகரமாக்க முனைந்தோம். அதாவது, பசுமையான காட்டை அழித்து நாடாக்கினோம். மரங்களை வெட்டினோம்; சாலையாக்கினோம்; இடங்களை வளைத்தோம்; வீடுகள் கட்டினோம். அப்படி வீடு கட்டு வதற்காக, ஆற்று மணலைச் சுரண்டிச் சுரண்டி, நதிகளை வற்றச் செய்தோம். சைக்கிளில் இருந்து பைக் போன்ற வண்டிக்கு மாறினோம். பைக்கில் இருந்து, காருக்கு மாறினோம்.
இப்போது என்னாயிற்று? மரங்களை வெட்டியதால் மழையைக் காணோம். எப்போதேனும் தப்பித் தவறி மழை பெய்தாலும், அந்த மழை நீரை ஆற்றின் உள்பகுதி, அதாவது பூமியின் உள்பகுதி உள்வாங்கிக் கொள்கிறது. தெருவெங்கும் தார்ச்சாலைகள் வந்துவிட்டன. இதனால், வெப்பம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது. மரங்களும் தண்ணீரும் இல்லாததால், உடலில் புழுக்கமே மிஞ்சுகிறது. சைக்கிள் குறைந்து, பைக்குகளும் கார்களும் பெருகிவிட்ட நிலையில், காற்று மாசுபட்டு, அந்தப் புகைகளைச் சுவாசிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு! ஆக, நகரமயமாக்கம் என்பது நரகமயமாக்கம் என்பதாக ஆகிவிட்டது என்பதே உண்மை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?! ஆக, கண்களை விற்று ஓவியம் வாங்குகிற கதை இதுதான் என்பது இப்போதேனும் புரிகிறதா? இதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவஸ்தைப்படுவது எது தெரியுமா? நாம் விடுகிற மூச்சுதான்!
மூச்சு அதாவது சுவாசம் சரியாக இருந்தால்தான், நிறுத்தி நிதானமாகச் சிந்திக்கமுடியும். மூச்சில் உள்ள லயம் தப்பிப்போனால், எல்லாச் செயல்களிலும் அது எதிரொலிக்கும். காரியத்தில் ஈடுபாடு குறையும்; செயல்களில் ஏகப்பட்ட வேகத் தடைகள் குறுக்கிடும். சீராகச் சிந்திக்கமுடி யாமல், புத்தியானது கிழக்குத் திசையில் பயணித்து சட்டென்று மேற்குக்கு மாறி, திடீரென வடக்கு முகமாக நகர்ந்து, இறுதியில் தெற்கில் போய் முட்டிக்கொண்டு நிற்கும். ஆக, மூச்சு சீராக இருந்தால், வாழ்க்கையும் சீராகப் பயணிக்கும்.
இன்னொன்று...
ஒரு கையால் ஆணியையும், இன்னொரு கையால் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு, சுவரில் கடவுளின் திருவுருவப் படத்தையோ, பொக்கை வாய் தெரியச் சிரிக்கும் குழந்தை யின் புகைப்படத்தையோ மாட்டுவதற்கு முனையும் வேளையில், யாரேனும் ஏதேனும் கேட்டால், 'கை வேலையா இருக்கேன்ல’ என எரிந்து விழுவோமல்லவா?.
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து அக்கடா என்று அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில்... 'ஏங்க, சட்னி அரைக்க பொட்டுக்கடலை இல்லீங்க. கொஞ்சம் வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று மனைவி கேட்டதும், ''ஏன்டீ... காலு ரெண்டையும் வெட்டிப் போட்டுடலாம் போல வலிக்குது. ஆபீஸ் போயிட்டு வந்து உட்கார்ந்த கையோட, இரக்கமே இல்லாம கடைக்கு விரட்டறியே?’ எனக் கத்திவிடுவோம்தானே?
இப்படித்தான், சென்னையில் இருந்து நெல்லைக்கு பஸ்ஸில் சென்று இறங்கினால், முதுகுத் தண்டெல்லாம் பயங்கர வலி என்கிறோம். இரண்டு நாட்களாக, கிட்டத் தட்ட இரவு- பகலாக, கம்ப்யூட்டரில் வேலை செய்ததால், கண்களில் எரிச்சல் என்று கண்களைக் கசக்குகிறோம். துண்டைத் தண்ணீரில் நனைத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கிறோம்.
கை-கால்களில் உள்ள விரல்களைச் சொடுக்கெடுத்துக் கொள்கிறோம். கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆட்டி, ரிலாக்ஸ் செய்து கொள்கிறோம். கழுத்துக்கு கவசம் போல் அணிந்து வலியில் இருந்து விடுதலை பெற முயற்சிக்கிறோம். முழங்கால் பகுதிகளில் விளையாட்டு வீரர்கள்போல், சாக்ஸ் அணிந்து நிவாரணம் தேடுகிறோம்.
கதவிடுக்கில் விரல் லேசாக நசுங்கினால் துடித்துப் போகிறோம். பெயின் கில்லர் கிரீமைத் தடவி, வெந்நீரில் விரலைக் குளிக்க வைத்து, அதை சின்ன டவலால் ஒற்றியெடுத்து... என ஒவ்வொரு உறுப்புக்கும் எத்தனை விதமான முயற்சிகள்... மெனக்கெடல்கள்... பாதுகாப்பு ஏற்பாடுகள்! ஆனால், மூச்சு பற்றி மட்டுமே நாம் சிந்திப்பதே இல்லை.
''ஏங்க... அங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க?'' என்று மனைவி கேட்டால், ''நேத்திக்கி பஸ் ஸ்டாப்புக்கு வரதுக்கும் பஸ் கிளம்பறதுக்கும் சரியா இருந்துச்சு. தடதடவென ஓடி வந்து, பத்துப் பன்னண்டு அடி தூரம் வரை பஸ் பின்னாடியே போய் ஜம்ப் பண்ணி ஏறிட்டேன். அதுல, 'ஹார்ட் பீட்’ அதிகமாயிருச்சும்மா. அதான், இன்னிலேருந்து ஒரு பத்து நிமிஷம், மூச்சுப் பயிற்சி செய்யலாம்னு முடிவு பண்ணி, பயிற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்’ என்று எவரேனும் சொல்கிறார்களா, என்ன?
மூச்சு என்பதை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. 'அதுபாட்டுக்கு அது இயங்கிட்டிருக்கு’ என்பதாலேயே மூச்சினை எடுப்பார் கைப்பிள்ளை என்பதாகவே நினைத்துக் கொள்கிறோம். இதனால், சுவாசத்தில் உள்ள பிரச்னைகளையும் சுவாசப் பாதைகளில் திடீரென்று முளைத்திருக்கிற ஸ்பீடு பிரேக்கர்களையும் கண்டறிவதுமில்லை; அங்கே ஏதேனும் பிரச்னையா என்று கண்டுகொள்வதுமில்லை.
மூச்சு இருக்கிற வரைக்கும் உயிர் இருக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மூச்சு சீராக இயங்கினால்தான், நம்மால் நிம்மதியாகவே வாழ முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.
'என் மூச்சு இருக்கிற வரைக்கும், உன்னை நான் மறக்கவே மாட்டேன்’ என்கிற இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். எவரேனும் உதவி செய்திருந்தால், அவர்களைப் பார்த்து நெக்குருகி இப்படிப் பேசியிருப்பார்கள். ஆனால், காலப்போக்கில், சொன்ன வார்த்தையை மீறி அல்லது மறந்து, மூச்சிருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவார்கள் என்பது வேறு விஷயம்!
ஆகவே, நம்மிடம் அன்பும் கனிவுமாக இருப்பவரை, மூச்சிருக்கிற வரைக்கும் மறக்காமல் இருக்க முயற்சி செய்வோம். முக்கியமாக, நம் மூச்சை மறக்காமல் கவனிப்பது ரொம்பவே அவசியம் என்பதையும் உணர்வோம்!
அது சரி, மூச்சைக் கவனிப்பது எப்படி? அதற்கு ஏதேனும் பயிற்சிகள் உண்டா?
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
 ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!
'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம். செல்போன் வந்துவிட்ட பிறகு. அர்த்தமற்ற ஸ்வீட்டான பேச்சுகளுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது!
'கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக் கிறது’ என்கிறது ஒரு தியரி.
நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்... இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமை களை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும்.
'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் ஜோடிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்... அந்த உறவை விவாகரத்தின் மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.
காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அகஸ்மாத் தாகப் பட்டுக் கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.
துரதிருஷ்டவசமாக நம்மூரில் இந்தத் 'தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.
காலம் காலமாக பெண்களை அடுப் படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்னை.
அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழி லில் இருந்துவிட்டு, படம் இயக்கும் ஆசையுடன் இப்போது கோடம்பாக் கத்தில் செட்டிலாகியிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்... ''தமிழ் சினிமாவின் ஹீரோக்களைப் பாருங்கள்... அவர் களுக்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது போன்ற வற்றைப் பற்றிப் பெரிய பிரச்னை இருக் கிறது. அந்தக் கால எம்.ஜி.ஆரிடம் இருந்து இப்போதைய சிம்பு வரை பெண்களுக்கு அட்வைஸ் செய்வதையே காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். அல்லது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய ஹீரோவோ 'தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவேன். மரியாதையா காதலிச் சுடு’ என்று பெண்ணை மிரட்டுகிறான். மற்றொருவன் 'அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சா விட்டுட்டுப் போயிட்டே இருப்பீங்கடி...’ என்று பிதற்றுகிறான். இதில் உச்சகட்டமாக காதலிக்கவில்லை என்பதற் காக கதாநாயகியின் மீது கோர்ட்டில் வழக்கே போட்டு விடுகிறான் மற்றொரு ஹீரோ.
பெண் என்பவள் ஒரு சக மனுஷி, அவளிடம் நிதானமாக, அன்பாகப் பேச முடியும், விவாதிக்க முடியும் என்று ஏன் இவர்களுக்குத் தோணுவதில்லை?’' என்று அந்த இயக்குநர் கேட்டபோது, அதிலிருக்கும் நியாயத்தை உணர முடிந்தது.
நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது.
பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்னை.
தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய் தவர். 'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டு வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக் கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்த மிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்... உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்!
                  - நெருக்கம் வளரும்...
ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 (May2010)

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

கருவாகும்போதே...உருவாகும் அறிவு !
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
வளர்மதியும் மதிவதனியும் அக்கா - தங்கை. இருவருக்கும் ஒரே நாளில் திருமணம்; இரண்டு வார இடைவெளியில் பிரசவம். இருவருக் கும் பெண் குழந்தை. இருவரின் குழந்தைகளும் தங்களின் அம்மம்மா வீட்டில் ஆறு மாதம் வரை வளர்ந்தன. அப்போது அந்த இரு குழந்தைகளுக்கும் அங்கு ஒரே மாதிரியான அன்பான கவனிப்பு. ஆறு மாதம் கழித்து அவரவர் புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இப்போது இருவரின் குழந்தைகளும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள். ஒப்பீட்டளவில் தன் குழந்தையை நினைத்து மதிவதனிக்கு ஏக வருத்தம். 'வளர்மதியின் குழந்தை உடுமலைப் பேட்டை 'சைனிக்’ ஸ்கூலில் படிக்கிறாள். அதனால் அவளுக்கு நீச்சல், குதிரையேற்றம் என பல கலைகள் கைக்குள் கட்டுபட்டு இருக்கின்றன. ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவளாக இருக்கிறாள். இங்கிலீஷ், மேத்ஸ், சயின்ஸ் என எல்லா பாடங்களிலும் கில்லாடியாக இருக்கிறாள். ஆனால், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் நம் குழந்தை அவளைப் போல் அல்லாது ஆவரேஜ் மாணவியாகத்தானே இருக்கிறாள்...’ என்பதுதான் மொத்த வருத்தமும்.
மதிவதனி மட்டும் அல்ல, பெரும்பாலான அம்மாக்கள் தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தோடு அடுத்த குழந்தையின் புத்திசாலித் தனத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் குழப்பிக் கொள்வதை முக்கியமாக கடைப்பிடிக்கிறார்கள்.
புத்திசாலித்தனத்துக்கு என்று தனி ஜீன்கள் எதுவும் உண்டா? உடம்பில் இருக்கும் பல கோடி ஜீன்களில் ஏதோ சில ஜீன்கள் அதற்குக் காரணமாகின்றன. ஆனால், அந்த ஜீன்கள் ஒட்டுமொத்த அறிவின் கூர்மையையும் தீர்மானிப்பது இல்லை. பின்..?
குழந்தை கருவில் வளரும்போதே, அதன் புத்திசாலித்தனத்தை தீர்மானிக் கும் சூழல்கள் பல. குழந்தை வயிற்றில் இருக்கும்போது உங்கள் மனநிலை சந்தோஷமானதாகவும் உற்சாகமான தாகவும் பாஸிட்டிவான சிந்தனையு டனும் இருப்பது மிக முக்கியம். இது குழந்தையின் புத்திக்கூர்மையைத் தீர்மானிக்கும் காரணங்களில் மிக முக்கியமானது. வீட்டில் மாமியாருடன், நாத்தனா ருடன் சண்டை போட்டுவிட்டு, நாள் முழுவதும் அதை மனதில் தேக்கி வைத்து, சரியான சத்துள்ள உணவைச் சாப்பிடாமல் புலம்பிக் கொண்டிருந்தால்... கண்டிப்பாக அது குழந்தைக்கு பாதிப்பை உண்டு பண்ணும்.
வளர்மதியின் குழந்தை இப்போது நல்ல பள்ளியில் படிப்பது மட்டுமல்ல... கர்ப்பக் காலத்தில் இருந்தே அவர் உடல், மனதளவில் தன்னையும் தன் சிசுவையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட விதமும்தான் அவர் குழந்தையின் புத்திக் கூர்மைக்குக் காரணம்.
டாக்டரின் அறிவுரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவது... 'குழந்தை, வயித்துல நல்லா இருக்கானு ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடுவோம்...’ என்று அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சுகள் கருவைத் தொடுவது போன்றவற்றைத் தவிர்ப்பதில் உங்கள் குழந்தையின் புத்திக்கூர்மைக்கான கூறுகள் அடங்கியிருக்கின்றன அன்புள்ள அம்மாக்களே!
கர்ப்பக் காலத்தில், 'தண்ணியால தொற்றுநோய்’, 'சாப்பாட்டால தொற்றுநோய்’ என்று எந்த 'இன்ஃபெக்ஷனு’ம் அண்டாமல் உங்களை காத்துக் கொள்வது முக்கியம். 'பாத்ரூம்ல தெரியாம வழுக்கி விழுந்துட்டேன்...’ என்று கருவில் குழந்தையை சுமந்துகொண்டு காயங்கள் உண்டாக்கிக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.
கர்ப்பிணி மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சிகரெட்டை ஊது ஊது என்று ஊதினால், அதுவும் குழந்தையின் புத்திசாலித் தனத்தைக் கிள்ளி எறியும். நாகரிகத்தின் பெயரால், 'கொஞ்சம் பீர் குடித்துப் பார்க்கிறேன்’, 'வைன் அடிக்கிறேன்’ என்று கர்ப்பிணிகள் ஆல்கஹாலை அண்டினால், அது பேராபத்து!
குறிப்பாக, கரு உருவான 3-5 மாதங்களில் இந்த மாதிரியான ஆபத்துகளில் இருந்தெல்லாம் குழந்தையைக் காப்பது, அதன் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். ஏனென்றால், 3-5 மாதங்களில்தான் குழந்தையின் மூளை உருவாவதற்கான ஆயிரம் ஆயிரமான செல்கள் உருவாகின்றன. அந்த செல்களை இணைக்கும் லட்சக்கணக்கான நரம்பிழைகளும் உருவாகின்றன. அதனால்தான் 'எண் சாண் உடம்புக்கு... சிரசே பிரதானம்' என்கிறோம். எனவே, அந்தக் காலகட்டத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருந்து சிசுவின் ஆரோக்கியத்தைப் பேணுவதுதான் நீங்கள் குழந்தைக்குத் தரும் பெரும் சொத்து!
சரி, எச்சரிக்கையோடு இருந்து அழகான குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டீர்கள். அது மட்டுமே போதுமா... அந்தக் குழந்தை பண்பான குழந்தையாக பரிமளிக்க..?
- வளர்ப்போம்...
 Source - Vikatan Magazine

தமிழக பேரவையின் சபாநாயகர் ஆகிறார் டி.ஜெயக்குமார்!

தமிழக பேரவையின் சபாநாயகர் ஆகிறார் டி.ஜெயக்குமார்!
சென்னை, மே 23,2011
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக டி.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை - ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுக சார்பில் ப.தனபால் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ராசிபுரம் (தனி) தொகுதியில் இருந்து ப.தன்பால் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதிமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், இருவரின் வெற்றியும் உறுதி.