ரொமான்ஸ் ரகசியங்கள்! - 7
கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !
அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
கணவன் - மனைவி, காதலன் - காதலி... இந்த உறவுகளின் இனிமையான தொடர்புக்கு அடிப்படையானது 'டிரான்ஸ்பரன்ஸி’ எனப்படும் வெளிப்படைத்தன்மை. இது கொஞ்சம் சிக்கலானது. தன்னுடைய ரகசியங்கள், அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டுமா? இதற்கு... 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்களையுமே சொல்லலாம்.ஓவியங்கள்: மணியம் செல்வன்
முன்பின் தெரியாத இரண்டு நபர்கள் நிரந்தர உறவு கொண்டு குடும்பம் என்கிற நீண்டகால அமைப்பை நிறுவுவதுதான் திருமணம் என்கிற பந்தம். கணவன் - மனைவி இருவருக்கும் திருமணத்துக்கு முன்பு வேறு காதல் இருந்திருக்கலாம். நெருங்கிய நட்பு இருந்திருக்கலாம். அவை எல்லாம் வெறும் கடந்த காலம்தான். அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்ட உயிரற்ற எலும்புக்கூடுகள்தான் என்றாகிவிட்ட நிலையில், 'உண்மைகளைச் சொல்கிறேன் பேர்வழி’ என்று அத்தனையையும் தன் துணையிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

மேல்நாடுகளில் இந்த விஷயம் சர்வ சாதாரணமானது. 'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகிறார்கள்’ என்பது அங்கே சகஜமான ஒன்று. ஆனால் நம் சமூகத்தில் 'பொஸஸிவ்னஸ்’ எனப்படும் உரிமை எண்ணம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அது பல நேரங்களில் ஆபத்தான வடிவங்களுக்கு மாறக்கூடியது.
ஒரு கேஸ் ஹிஸ்டரியை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். சென்னையைச் சேர்ந்த ஜோடி... லதா-சஷாங். இருவரும் நன்றாகப் படித்தவர்கள். இவர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. 'அரேஞ்டு 'கம்’ லவ் மேரேஜ்’ என்று சொல்லலாம். இணையதளத்தில் ஒரு திருமண நிலையத்தின் தளத்தில்தான் இருவரைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்கள் இவர்களின் பெற்றோர். நேரில் வந்து பெண் பார்த்து இரு தரப்பினருக்கும் பிடித்துவிட்டது. நிச்சயதார்த்தம் நடந்தது. சஷாங்குக்கு நார்வே நாட்டுக்கு வேலை நிமித்தம் செல்லக் கூடிய வாய்ப்பு விரைவில் வரக்கூடும் என்கிற நிலையில், அதை வைத்துத் திருமண தேதியை நிச்சயித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
குறைந்தது ஆறு மாதமாவது பிடிக்கும் என்கிற சூழலில்... இருவரும் காதலர்கள் போல் பழக ஆரம்பித்தார்கள். கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்தது. ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவுக்கு நெருங்கிப் பழகினார்கள். மணிக்கணக்காக செல்போனில் பேசினார்கள். ஊர் சுற்றினார்கள். சின்னச் சின்ன உடலின்பங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.ஒரு நாள் கடற்கரையில் சஷாங்கின் மடியில் சாய்ந்திருந்த லதா, ''சஷாங்... உனக்கு இதுக்கு முன்னாடி ஏதாவது காதல் அனுபவம் இருந்திருக்கா?'' என்று வில்லங்கமான கேள்வியைக் கேட்டாள். சஷாங் சிரித்தபடி, ''இல்லாமல் இருக்குமா?'' என்றான். லதாவும் சிரித்தபடி, ''என்ன அது சொல்லு?'' என்று கேட்டாள். ''விடு... அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்ப எதுக்கு அதெல்லாம்?'' என்று அவாய்ட் செய்த சஷாங்கை லதா விடவில்லை. சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சஷாங் அவன் 'ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்ல ஆரம்பித்தான்.
சஷாங்கின் அலுவலகத்திலேயே டிரெய்னியாக வந்து சேர்ந்தாள் அனுபமா கவுர். பஞ்சாபி பெண். சஷாங்கின் அழகும், படிப்பும், பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சஷாங்கும் அவள் அழகில் மயங்கிவிட்டான். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் காதல் நீடித்தது. விஷயம் இரண்டு வீட்டுக்கும் தெரிந்து ரணகளம் ஆனது. தமிழன், பஞ்சாபி என்கிற தேசிய வேற்றுமைப்பாடு விஸ்வரூபம் எடுத்தது.
இருவருக்கும் வேறு வழி தெரியவில்லை... பிரிவதைத் தவிர. உணர்ச்சிகரமாகப் பேசி, ஒரே ஒரு முத்தத்துடன் காதலை முறித்துக் கொண்டார்கள். அனுபமாவுக்கு இன்னொரு பஞ்சாபி இளைஞனுடன் திருமணமானது. இன்னும் அவள் சஷாங்கின் அலுவலகத்திலேயே மற்றொரு டிபார்ட்மென்டில்தான் வேலை செய்கிறாள். ஆனால், அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. எப்போதாவது சஷாங்கை சந்திப்பாள். ஆறுதல் சொல்லி, சந்தோஷமாக இருக்கும்படி கேட்டுக் கொள்வான்.
எல்லாவற்றையும் சஷாங் சொல்லி முடிக்க... லதா மௌனமாக இருந்தாள். அவளை உலுக்கி, ''ஏய், என்ன ஃபீல் பண்றியா? அதான் சொன்னேனே... அதெல்லாம் முடிஞ்சு போன கதைனு'' என்றவன், ''சரி... நான் எவ்வளவு ஃபிராங்கா என் காதலைப் பத்திச் சொன்னேன். உனக்கு ஏதாவது லவ் இருந்திருக்கா?'' என்றான். சற்று நேர அமைதிக்குப் பிறகு, ''இருந்திருக்கு'' என்றாள் மெதுவாக. அவள் மனதில் சஷாங்குக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு பொங்கியிருந்தது.
அவன் பெயர் நாகேந்தர். பெங்களூருவில் ஒரு கான்ஃப்ரன்ஸுக்காகச் சென்றிருந்தபோது சந்தித்த சென்னைப் பையன். பார்த்ததும் பிடித்துவிட்டது. ஒரு காபி ஷாப்புக்குச் சென்றவர்கள், அன்று மாலையே ஒரு திரைப்படத்துக்குப் போனார்கள். இருவரையும் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்து நாட்கள் நடந்த கான்ஃப்ரன்ஸில் ஏதோ ஐம்பது வருடப் பழக்கம் போல் ஓர் உறவு தென்பட்டது. ஊருக்குத் திரும்பும் தினத்தில் 'ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டார்கள். சென்னையிலும் அவர்களின் காதல் செழித்து வளர்ந்தது.
நாகேந்திரனுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டுகள் என்கிற உண்மை, லதாவுக்கு மெதுவாகத்தான் தெரிந்தது. சிலர் அவளிடம் நேரில் வந்து சண்டை போட்டது மட்டுமின்றி, அவனிடம் ஜாக்கிரதையாகப் பழகும்படி எச்சரித்தார்கள். நாகேந்திரனோ... தான் அப்படி இருந்தது உண்மைதான் என்றும், லதாவை எப்போது சந்தித்தானோ அப்போது முதல் உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டதாகவும், அவனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டான். ஆனால், லதா மன்னிக்கத் தயாராக இல்லை. பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொல்ல... அப்படி வந்தவன்தான் சஷாங்.
லதா சொல்லி முடித்ததும், சஷாங் தரப்பிலும் ஆழ்ந்த மவுனம். இதுவரை கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த காதல், திடீரென்று தடம் புரண்டது போல் ஓர் உணர்வு. இருவரும் கடற்கரையில் இருந்து எழுந்தார்கள். ஒரு சின்ன இடைவெளி விழுந்திருந்தது இருவரிடமும். ''அந்த அனுபமா தினமும் உங்களைப் பார்க்கிறாளா?'' என்றாள் லதா. ''இதே கேள்வியை நானும் கேட்கலாமா? அந்த நாகேந்தர் உன் கூட தினமும் பேசறானா? அவனைப் பார்த்தா உனக்குப் பாவமா இருக்கா?'' என்று திருப்பிக் கேட்டான் சஷாங்.
சாதாரண ஊடல் போல் ஆரம்பித்தது... சமாதானம் செய்ய யாரும் இல்லாததால் நாளுக்கு நாள் அதிகரித்தது. இருவரும் நவீன யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிப்படையான பேச்சை எதிர்கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள். லதா - சஷாங் உறவு விரைவில் முறிந்தது என்பது சோகமான விஷயம்.
கணவன், மனைவிக்கிடையே வெளிப்படைத்-தன்மையே இருக்கக்கூடாதா? எதில் இருக்கலாம்? எதில் இருக்கக்கூடாது? இது ரொமான்ஸ் ரகசியங்களிலேயே மிக முக்கியமானது!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine
Nice article Ramki... ~ Siva
ReplyDelete