| நான் எழுதிய பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: கருணாநிதி |
சென்னை, மே 27,2011 தாம் தொகுத்து எழுதிய பாடல் இடம்பெற்றது தான் தமிழக அரசின் முடிவுக்கு காரணம் என்றால், அதனை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டேனும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் நன்மைகளையும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முந்தைய அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் விவரித்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலேயே அமல்படுத்த கோரி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச்சட்டம் 2010 இயற்றப்பட்டு சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. 2011-2012 கல்வியாண்டில் சமச்சீர் கல்விமுறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிக் கல்வி முறையில் மாநில கல்வித் திட்டம், மெட்ரிக் கல்விமுறை, ஆங்கிலோ இந்தியக் கல்விமுறை மற்றும் கீழ்த்திசை கல்வி முறை என நான்கு வகை கல்வித் திட்டங்கள் 2009-2010 ஆம் கல்வி ஆண்டு வரை பின்பற்றப்பட்டன. இவற்றுள் பாடமுறை, பாட புத்தகங்கள், தேர்வுமுறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஒவ்வொன்றும் தனித்தனியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றில் இருந்த சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி மாநிலம் முழுவதும் ஒரே சீரான சமச்சீர் கல்வி முறையினை நடைமுறைப்படுத்த அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவை அனைத்தையும் ஆய்வு செய்து மற்றும் ஒன்றுபடுத்தி ஆய்வு செய்ய குழு அமைக்க அரசால் திட்டமிடப்பட்டது. இதன்படி பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் ஒரு குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. மேற்கொண்ட குழு தனது ஆய்வறிக்கையை அரசின் பரிசீலனைக்காக சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க எம்.பி.விஜயகுமார் (ஓய்வு) ஒருநபர் குழுவாக தமிழக அரசாணையின் 222/ பள்ளிக் கல்வித்துறை நாள் 3.9.2007-ன்படி அமைக்கப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் ஆய்வறிக்கையை ஒருநபர் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்ந்து பரிசீலிக்க, பிற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத் திட்டங்கள், தேர்வுமுறைகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அதிகாரிகளை கொண்ட கல்வியாளர்கள் குழு அரசாணை எண்.212 பள்ளிக் கல்வி துறை நாள் 30.10.2008-ன்படி அமைக்கப்பட்டது. அரசால் அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் குழு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அரசுக்கு வழங்கியது. சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு 2010-ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டமும் (தமிழ்நாடு சட்டம் 8/2010) அதன் கீழ் விதிகளும் 1.2.2010 அன்று தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டன. முதற்கட்டமாக 2010-2011 ஆம் கல்வியாண்டில், 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல், கழகத்தால் முதலாம் வகுப்புக்குத் தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும், 6-ம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணைக்கு இடைக்கால தடை வழங்ககோரி புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது. எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் - அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்பதற்காக தான் எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித்தனமாக அதனை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து அந்த குழுக்களை கொண்டு வெளி மாநிலங்களுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்யச் செய்து அதன்பிறகுதான் படிப்படியாக சமச்சீர் கல்விமுறை நடைமுறைக்கு கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு அது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை எல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக தயாரித்து அதன்பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பது சரியான நடைமுறைதானா என்பதை அரசினர் எண்ணிப்பார்க்க வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்கிட உருவாக்கப்பட்ட திட்டமாகும். மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம் ஓ.எஸ்.எல்.சி. போன்ற பாடத்திட்டங்களியிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் போட்டியிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை இருந்ததை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் தி.மு.கழக அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இந்த அரசின் அறிவிப்புக்கான காரணம் என்றால் அதை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலே அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடுவதற்காக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் பாடலில் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் என்ற வரியை நீக்கி விட்டுத்தான் - தமிழக அரசின் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழகத்திலே அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்தேன். அந்தப் பாடல் தற்போது சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களிலே இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தையே எதிர்த்திட முனையுமா? மேலும் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல் அந்த புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது. அந்த பாடலில் தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலக்கேசி, கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல் இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம், என்றால் அந்த பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்துவிட்டு அல்லது அந்த பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Source - Vikatan Magazine |
Friday, May 27, 2011
நான் எழுதிய பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: கருணாநிதி
Subscribe to:
Post Comments (Atom)
தாம் தொகுத்து எழுதிய பாடல் இடம்பெற்றது தான் தமிழக அரசின் முடிவுக்கு காரணம் என்றால், அதனை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டேனும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment