| 2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் | |||||
புதுடெல்லி, ஏப்.25,2011 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்பட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதேநேரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் டிவி பங்குதாரர்களில் முதன்மையானவருமான தயாளு அம்மாள் பெயர் இடம்பெறவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அதில், கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது, லஞ்சத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பான குற்றச்சாட்டை சார்ந்ததாகும். கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரின் பெயரும் இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர். சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சினியுக் நிறுவனத்தின் கரீம் மொரானி, குசேகான் ரியால்டியின் ராஜீவ் அகர்வால் மற்றும் பால்வாவின் சகோதரர் ஆசிஃப் ஆகியோரின் பெயர்களும் இன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணைக் குற்றப்பத்திரிகையிலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இடம்பெற்றுள்ளார். லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகியுள்ளது. கனிமொழிக்கு சம்மன்... மேலும் கனிமொழி, சரத் குமார், கரீம் முரானி ஆகியோர் மே 6-ம் தேதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஓ.பி.சையினி உத்தரவிட்டார். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கனிமொழி, சரத் குமார், கரீம் முரானி ஆகியோரை சிபிஐ இதுவரை கைது செய்யவில்லை. அதேவேளையில், ஆசிஃப் பால்வா மற்றும் அகர்வால் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்புடையச் செய்தி: 2ஜி குற்றப்பத்திரிகை.. இதயமற்று கேட்காதீர்: கருணாநிதி 2ஜி ஊழல்: ஆ.ராசா உள்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர கண்காணிப்பின் கீழ் கலைஞர் டிவி! | |||||
Wednesday, April 27, 2011
2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Labels:
2ஜி குற்றப்பத்திரிகை
Subscribe to:
Post Comments (Atom)
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்பட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
No comments:
Post a Comment