Wednesday, April 27, 2011

2ஜி குற்றப்பத்திரிகை: திமுக நாளை முக்கிய முடிவு


2ஜி குற்றப்பத்திரிகை: திமுக நாளை முக்கிய முடிவு
சென்னை, ஏப்.26,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்காக திமுகஉயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடக்கிறது.
இது குறித்து திமுகபொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சாற்றப்பெற்ற ஒரு குற்றச்சாட்டின் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியும் அதில் இணைக்கப்பட்டு-அந்த நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் 200 கோடி ரூபாயும், கடனை வழங்கிய நிறுவனத்துக்கு வட்டியுடன் திரும்பச்செலுத்தி, அதற்கான வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உட்பட அனைத்தையும் ஆதாரமாகத்தரப்பட்டது.
இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர - எவ்விதமான ஒளிவு மறைவோ மற்றும் சதியோ இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிரூபிக்கப்பட்டது. இதன் பிறகும் - வாங்கிய கடன் தொகையைக்கூட நேர்மையான முறையில் திருப்பிச்செலுத்தியுள்ள நிலையில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் - தலைவர் கலைஞர் அவர்களின் மகள் கனிமொழி ஒரு பங்குதாரர் - அதைப்போல சரத்குமார், ஒரு நிர்வாக பங்குதாரர் என்ற முறையில் இருவருமே விசாரிக்கப்பட்டு - கலைஞரின் துணைவியார் தயாளு அம்மையாரையும் விசாரித்து இவற்றை பூதாகரமாக விளம்பரப்படுத்தினர்.
இறுதியில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் என்ற செய்தியையும் பெரியதோர் விளம்பரமாக்கி - கனிமொழிக்கும், நிர்வாகப் பங்குதாரர் சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கழகம் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் 27-4-2011 (நாளை - புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் அந்தக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறியுள்ளார்.
சாட்சிப் பட்டியலில் தயாளு அம்மாள்...
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் குற்றப்பத்திர்கையில், கலைஞர் டிவியின் பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனரான சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதேநேரத்தில், முதல்வர் கருணாநிதியின் மனைவியும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான தயாளு அம்மாளின் பெயர் சாட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், கலைஞர் டி.வி.யின் பொது மேலாளர்(நிதி) ஜி.ராஜேந்திரன், இயக்குநர் பி.அமிர்தம் ஆகியோரின் பெயர்களும் சாட்சிகளின் வரிசையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தயாளு அம்மாள் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறாததது குறித்து விளக்கம் அளிக்கும் சிபிஐ, கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை என்பதால், அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறது.
மேலும், கலைஞர் டி.வி.யின் செயல்பாடுகளில் கனிமொழி தீவிரமாகப் பங்கேற்றதும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் அவருக்கு இருந்த தொடர்பும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
குறிப்பாக, நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல், கலைஞர் டி.வி.யின் விவகாரங்கள் தொடர்பாக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துடன் பேசியது ஆகியவை காரணமாகவே கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது, லஞ்சத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பான குற்றச்சாட்டை சார்ந்ததாகும்.
திமுக உறவில் மாற்றமில்லை: காங்.
இதனிடையே, சிபிஐ குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும் திமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் வராது என்றும், எப்போதும் போல கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், 2ஜி முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணைக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
விசாரணையின் எந்த காலக்கட்டத்திலும் மத்திய அரசின் தலையீடு இருந்தது கிடையாது. சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்ற அவர், அரசியலில் யதார்த்த நிலைதான் கூட்டணியை நிர்ணயிக்கிறது. குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், அக் கட்சியுடனான உறவில் பாதிப்பில்லை. எனவே திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார்.
தொடர்புடையச் செய்தி: 2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்



No comments:

Post a Comment