Wednesday, July 6, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1


உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1

'பொத்தி' வளர்ப்பதில் பிரயோஜனம் இல்லை !
குழந்தை மனநல மருத்துவர்ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
'எம்பொண்ணு ஷாலினிக்கு 9 வயசாகுது டாக்டர். ஆனா... யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டேன்றா, வெளிமனுஷங்க யார் வீட்டுக்கு வந்தாலும்... ரூம்ல போய் ஒதுங்கறா...’
- இப்படி ஒரு கம்ப்ளைன்ட்டுடன் சமீபத்தில் ஓர் அம்மா என்னிடம் வந்தார்.
''உங்க குழந்தையை... சொந்தக்காரங்க வீட்டு விஷேசம், கோயில், பார்க்னு கூட்டிட்டுப் போவீங்களா..?'’ என்று கேட்டேன்.
சில நிமிடங்கள் மௌனமாக என்னைப் பார்த்தவர், ''இல்ல டாக்டர்... கொழந்தையை எங்கயும் வெளியவே போக விட மாட்டாங்க என் மாமியார். பொம்பளப் புள்ளைனு வீட்டுக்குள்ளயே பொத்திப் பொத்தி வெச்சுப்பாங்க'’ என்று பதில் தந்தார்.
இந்தப் பதிலில்தான் அவர் மகளின் பிரச்னைக்கான பதிலும் இருந்தது. ஒரு குழந்தையை, 'சொகுசாக வளர்க்கிறேன்... பொத்திப் பொத்தி வளர்க்கிறேன்’ என்று அக்கம் பக்கம், உறவினர்கள், பார்க், கோயில் என பொது இடங்களில் பழக அனுமதிக்காமல் இருந்தால், அதுவே அக்குழந்தையின் 'சமூக நடத்தை’யைச் சுருக்கிவிடும்.
அடுத்தவர்களுடன் எப்படி பேச வேண்டும், தன் வயதுக்கேற்ற ஒரு பிரச்னை வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும், என்ன மாதிரியான நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற 'உலக பொதுக் கல்வி’யை குழந்தைக்குக் கற்றுத் தரும் பள்ளி... சுற்றுப்புறமும், சமூகமும்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே!
இந்த உலக பொதுக்கல்வியை ஒரே நாளில் திடீரென கற்றுக் கொண்டுவிட முடியாது. அது ஒரு தொடர் கல்வி. உங்கள் குழந்தையை பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அழைத்துச் செல்கிறீர்கள். அப்போது, சாக்லேட் சாப்பிட்டு விட்டு பேப்பரை அங்கயே போடுகிறது குழந்தை. 'அம்மு, பேப்பரை அங்க போடக் கூடாது, குப்பைத் தொட்டியில போட்டுட்டு வாடா செல்லம்’ என்று சொல்லித் தருகிறீர்கள் அல்லவா? அந்த நிகழ்விலிருந்து 'பொது ஒழுங்கு’ என்றால் என்ன என்பதைக் குழந்தை கற்றுக்கொள்கிறது.
'பார்க்'கில் உங்கள் தோழியைப் பார்த்து கையசைத்து, சிரித்து, 'எப்படி இருக்கிறே வெண்ணிலா... அம்மா, அப்பாவெல்லாம் நல்லா இருக்காங்களா?’ என்று நலம் விசாரித்து, 'இது என் பொண்ணு விநோதினி’ என்று உங்கள் குழந்தையை அறிமுகப்படுத்திகிறீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் தோழியும் மீண்டும் அங்கு சந்திக்கும்போது உங்கள் குழந்தையும் உங்கள் தோழியைப் பார்த்துச் சிரிக்கிறது என்றால்... உங்கள் குழந்தை 'மற்றவர்களிடம் எப்படி அணுகுவது’ என்ற பாலபாடத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறது என்று அர்த்தம்.
அம்மா, அப்பா, தன் வீடு - இவற்றைத் தாண்டி வெளியுலகில் குழந்தை உலவவும் பழகவும் ஆரம்பிக்கும் கணத்தில்தான்... அதன் மனவளர்ச்சிக்கு ஏற்ப உலகத்தை புரிந்து கொள்கிறது. அப்போதுதான் குழந்தை 'நான்’ என்ற உணர்விலிருந்து, 'நாம்’ என்ற உணர்வையும், சமூக வாழ்வியல் மதிப்பீடுகளையும் கற்றுக் கொள்கிறது. இவைதான் ஒரு குழந்தையை 'உயர்ந்த மனிதன்’... 'சுயநலம் மிகுந்த மனிதன்’ என்றெல்லாம் தீர்மானிக்கின்றன.
ஆக, பள்ளிப் பாடங்களைவிட, சமூக நடத்தையில்தான் ஒரு குழந்தை தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. அழகு, பண்பு, ஒழுக்கம் இவையெல்லாம் உள்ளவளாக... உள்ளவனாக குழந்தை தன்னை மாற்றிக் கொள்ள அனுமதியுங்கள் பெற்றோர்களே!
ஸ்கூலில் இருந்து வந்தவுடன், டிரெஸ்ஸை கழட்டுவதற்குக்கூட உங்களைக் கூப்பிடுகிறாளா உங்கள் 12 வயது மகள்? ஏன் இப்படி?
- வளர்ப்போம்...
படம்: ச.இரா.ஸ்ரீதர்

Source   - Vikatan Magazine

No comments:

Post a Comment