Friday, April 8, 2011

தேவை ஆறு மாத இடைவெளி!

தேவை ஆறு மாத இடைவெளி!


'தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளைப் பதவியில் இருந்து விலக்கிவைத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தித் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று பேரறிஞர் அண்ணா ஒரு காலத்தில் தெரிவித்த கருத்தை, செயல்படுத்தும் தருணம் வந்துவிட்டது.
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரம், அமைச்சர்கள் என்ற தகுதியுடன் தேர்தலை சந்திப்பது, ஒரு பயில்வான் நோஞ்சானுடன் மல்யுத்தம் செய்வதற்கு ஒப்பானதாகும்.  மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது ஆட்சிக் காலங்களில் துறை சார்ந்த நிர்வாகத்துக்கும், கட்சிக்காரர்களுக்கும் இடைவெளி இருந்தது. ஆனால், இப்போது உள்ளாட்சி முதல் செயலகம் வரை, அனைத்துத் துறைகளிலும் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகரித்து உள்ளது.
ஐந்து ஆண்டு காலம் ஆளும் கட்சியினரின் விருப்பத்துக்கேற்பச் செயல்பட்டுக்கொண்டு இருந்த அதிகாரிகளையும், அலுவலர்களையும், காவல் துறையினரையும், திடீரென்று ஒரு நாள், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. நீங்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டீர்கள். பாரபட்சம் இல்லாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. நேற்று வரை ஆளும் கட்சிக்கு நெருக்கமாகச் செயல்பட்டு வந்த அதிகாரிகளின் செயல்பாடு உடனே மாறிவிடுமா என்ன?
எனவேதான், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்,  ஆட்சியில் இருந்து விலக்கிவைத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பின்னர் தேர்தலை நடத்துவதே சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்கும். வரும் காலத்தில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இதனைக் கவனத்தில் கொள்ளுமா?
- கே.வேலுச்சாமி, தாராபுரம்.

(Source - Vikatan Magazine)

No comments:

Post a Comment