Friday, April 8, 2011

அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

மதுரைக்குப் போகாதீங்க!
'ஏப்ரல் 13-ம் தேதி என்ன நடக்குமோ?’ என அச்சத்தில்


இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். காரணம், மாநிலத்தின் பல இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்தான்! 
முதல் சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் நடந்தது. சீலேப்பள்ளி என்ற ஊரில், கோயில் சுவரில் தி.மு.க-வின் தேர்தல் விளம்பரம் வரையப்​பட்டது. குருபரப்பள்ளி வருவாய் ஆய்வாளர் பூவிதன் தலைமையிலான வருவாய்த் துறை ஊழியர்கள் அந்த விளம்பரத்தை அழித்தனர். அதை எதிர்த்த சீலேப்பள்ளி ஊராட்சித் துணைத் தலைவர் சிவக்குமார், சந்தோஷ், ரஜனீஷ், கார்த்திக் ஆகியோர் பூவிதனைத் தாக்கினர். அவருடைய பைக்கையும், செல்போனையும் பறித்துக்கொண்டனர். திடீர் தாக்குதலால் அதிர்ச்சியான ஊழியர்கள், வேறு ஒருவரின் செல்போன் மூலம் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி, அங்கு இருந்து தப்பித்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பூவிதன் சேர்க்கப்பட்டார். தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
தாக்குதலைக் கண்டித்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை ஊழியர்கள் பெருமளவில் ஒன்றுகூடி எதிர்ப்பைக் காட்டினர்.
அடுத்த சம்பவம், மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் சாமி கோயிலில் நடந்தது. அந்தப் பகுதி பிரமுகர்களைக் கூட்டி அழகிரி உள்பட்ட தி.மு.க-வினர் பேசிக்கொண்டு இருந்தனர். 'ஐந்து பேருக்கு மேல் கூடினால், கண்காணிக்க வேண்டும்’ என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தனியார் வீடியோகிராஃபர் கண்ணன் அதைப் படம் பிடித்தார். உடனே அழகிரி, துணை மேயர் மன்னன், மேலூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுபதி, உள்ளூர் தி.மு.க. பிரமுகர் திருஞானம் ஆகியோர் அவரைக் கண்டித்து உள்ளனர். பயந்துபோன கண்ணன், வட்டாட்சியர் காளிமுத்துவிடம் வீடியோ கேமராவை ஒப்படைத்தார். அழகிரி அவரைத் திட்ட, கூட வந்தவர்கள் காளிமுத்துவை அடித்துள்ளனர். பிறகு, காளிமுத்து அளித்த புகாரை வாங்கிக்கொண்டு வழக்கைப் பதிவு செய்தது கீழவளவு போலீஸ். அதில், 'தேர்தல் ஆணையத்தின் வீடியோகிராஃபரைப் படம் எடுக்கவிடாமல் அழகிரி தடுத்ததாகவும், மன்னனும், ரகுபதியும் வட்டாட்சியரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வட்டாட்சியரைத் திருஞானம் தாக்கினார்’ என்றும் சொல்லப்பட்டது. பிறகு, இதே விவகாரத்தில் புகார் கூறிய அதிகாரிகள், முன்பு தாங்கள் சொன்னதையே மாற்றிப் பேசி பல்டி அடித்தனர்.
மூன்றாவது தாக்குதல், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தது. முதல் இரண்டு சம்பவங்களில் குற்றச்சாட்டு தி.மு.க-வினர் மீது வந்தது என்றால், இதில் சம்பந்தப்பட்டது  காங்கிரஸ் கட்சி. பள்ளிப்பட்டுத் தொகுதியில் உள்ள மடவலம் என்ற ஊரில் கடந்த 3-ம் தேதி, காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு அங்கு பிரியாணி வழங்கப்பட்டது. தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை துணை வட்டாட்சியர் அரிபாபு, ஒளிப்பதிவாளருடன் அங்கு விரைந்தார். அவர்கள் பிரியாணி வழங்கியதைப் படம் பிடிக்க, சாப்பிட்டுக்கொண்டு இருந்த கும்பல் அரிபாபுவைக் கடுமையாகத் தாக்கியது. கேமராவையும், அதிகாரிகளின் காரையும் அந்தக் கும்பல் நொறுக்கியது. 'உயிர் பிழைத்தால் போதும்!’ என தப்பித்த அதிகாரிகள் குழு, ஆர்.கே. பேட்டை போலீஸில் புகார் செய்தது.
வாக்குப் பதிவு நாள் நெருங்க நெருங்க, தேர்தல் பணியில் உள்ளவர்களை அரசியல் கட்சியினர்

தொடர்ந்து தாக்குவதால், ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 'இதை இப்படியே விட்டுவிடக் கூடாது’ என போர்க் கொடி தூக்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். 'தாக்குதல்கள் தொடருமானால், ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் வலுவான போராட்டம் நடத்தப்படும்’ என்றும் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசனை சந்தித்தோம். ''இதுபோன்ற தாக்குதல்களால், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தாக்குதல்பற்றி புகார் கொடுத்த அதிகாரியே, பிறகு மாற்றிப் பேசும் அளவுக்கு மிரட்டப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால், இப்படி மாற்றிப் பேசியதில் பின்னணி இருக்கிறது என்பது உறுதி. பல மாவட்டங்களில், 'குறிப்பாக மதுரையில் பெண் ஊழியர்களைத் தேர்தல் பணிக்குப் போக வேண்டாம்’ என அவரவர் குடும்பத்தினர் சொல்லிவிட்டனர். 'அரசின் உத்தரவுப்படி நடப்பதா? வீட்டார் சொல்படி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதா?’ என பெண் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். திருமங்கலம் இடைத்தேர்தலிலும் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஊழியர்களை, நேரடியாகவும் மறைமுகமாகவும் தொந்தரவு செய்தனர். ஊழியர்கள் தாங்களாகவே வெளி மாவட்டத்துக்கு இடமாற்றல் வாங்கிச் செல்லும் அளவுக்கு அவர்களுக்குத் தொல்லைகள் தரப்பட்டன.
பீகார் தேர்தலில் இதுபோல நடந்தபோது, ராணுவம் முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டது. எனவே, தேர்தல் நேர்மையாக நடக்கவும், அரசு ஊழியர்கள் அச்சம் இன்றிப் பணியாற்றவும் பாதுகாப்பு வழங்க வேண்டும்!'' என்றார்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம், ஊழியர் சங்கத்தினர் புகார் அளித் துள்ளனர். 'நேர்மையான ஊழியர்களுக்கு ஆணையம் பாதுகாப்பு வழங்கும்’ என உறுதி சொல்கிறார் பிரவீண்குமார்.
உறுதி கொடுத்ததைக் காப்பாற்றட்டும்!
- இரா.தமிழ்க்கனல்

Source - Vikatan Magazine

1 comment:

  1. சிறைக்கு அனுப்பப்பட்ட தி.மு.க-வினர தற்போது வெளியில் வந்து மேலும் அட்டூழியம் செய்து வருகின்றனர்

    ReplyDelete