Friday, April 8, 2011

தொடரும் மதுரை ஜல்லிக்கட்டு

முட்டல்... மோதல்... மிரட்டல்!
'கொடுத்தே தீருவோம்!’ என்று முறைப்பாக அரசியல் கட்சிகள் காத்திருக்க, 'தடுத்தே தீருவோம்!’ என்று விறைப்பாக நிற்கிறது தேர்தல் கமிஷன்.  மதுரையில் என்னதான் நடக்கிறது?
பந்தாடப்பட்ட அதிகாரிகள்!
'தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும்’ என்று நினைத்தே முதலில் கலெக்டர், எஸ்.பி., கமிஷனர், டி.ஐ.ஜி. ஆகியோரை மாற்றியது தேர்தல் கமிஷன். இப்போதோ, தி.மு.க. ஆதரவு நிலை எடுக்கும் அதிகாரிகள் வரிசை நீள்கிறது. 'அழகிரி மீது வழக்குப் போடச் சொல்லி நிர்பந்திக்கிறார்’ என்று புகார் சொன்ன கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி சுகுமாறன், உடனடியாக கரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்​டார். பின்னணி தெரிய வர... இப்போது அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டது தேர்தல் கமிஷன்.
'மதுரை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் குமாரவேலு, தி.மு.க. பகுதிச் செயலாளர்போல் செயல்படுகிறார். பணப் பட்டுவாடாவுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பது முதல், தேர்தல் அதிகாரிகள் ரெய்டுக்கு போகும் முன்பே, கட்சிக்காரர்களை உஷார்படுத்துகிறார்’ என்று அ.தி.மு.க., சி.பி.எம். வேட்பாளர்கள் புகார் கொடுக்க... குமாரவேலு சென்னைக்கு மாற்றப்பட்டார். மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத்தேர்தல், திருமங்கலம் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என தொ​டர்ந்து சர்ச்சையில் சிக்கி, தேர்தலுக்குப் பிறகு மதுரைக்கே வந்தவர் இவர்.
மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி, கூடல்நகர் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனும் மாற்றப்பட்டு இருக்கிறார்.
அடுத்தது இவர்கள்தான்!
அழகிரி நிகழ்ச்சியை வீடியோ எடுத்த தன்னை தி.மு.க-வினர் தாக்கியதாக மேலூர் தாசில்தார் காளிமுத்து புகார் கொடுக்க... அழகிரி, துணை மேயர் மன்னர், ஒன்றியச் செயலாளர் ரகுபதி உள்ளிட்டவர்கள் முன் ஜாமீன் பெற்றார்கள். இப்போது தாசில்தார் அந்தர் பல்டி அடித்துவிட்டார். 'கோயிலுக்​குள் செருப்போடு சென்ற தங்களை வெளியே போகச் சொன்னார்கள். மற்றபடி யாரும் அடிக்க வரவில்லை. கலெக்டர் சகாயமும் போலீஸாரும் சொல்லித்தான் அப்படி ஒரு புகார் கொடுத்தேன்’ என்று ஆளும் கட்சி சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்தார் காளிமுத்து. இவருக்கும் ஆர்.டி.ஓ-வான சுகுமாறனின் கதி சீக்கிரமே வரலாம்!
போலீஸ் உதவி ஆணையர் ஜெயஸ்ரீயும் பணப் பட்டுவாடாவுக்கு உறுதுணையாக இருப்பதாக சி.பி.எம். வேட்பாளர் புகார் கொடுத்து இருக்கிறார். அநேகமாக அம்மணியும் ஆஃப் செய்யப்படலாம். கணேசபுரம் தி.மு.க. பிரமுகர் சசிகுமார் தேர்தலுக்காக வைத்திருந்த 10,300-ஐ தே.மு.தி.க-வினர் பறித்துச் செல்ல, உடனே அவர்கள் தன் வீட்டில் கொள்ளை அடித்ததாகப் புகார் செய்தார் சசிகுமார். அதை வழக்காகப் பதிவு செய்த போலீஸ் அதிகாரியை, தேர்தல் கமிஷன் விசாரிக்கத் தொடங்கிவிட்டது!
மற்றொரு சர்ச்சை நாயகனான மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா, அழகிரிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு ஆரம்பத்திலேயே பெயர் குறிப்பிட்டுப் புகார் கொடுத்துவிட்டார். இதற்கிடையே, தேர்தல் கமிஷன் வீடியோகிராஃபர்கள் எடுத்த சில முக்கியமான தேர்தல் விதி மீறல் காட்சிகளை, அதிகாரிகளின் பார்வைக்கு வரவிடாமல் செய்துவிட்டதாக வந்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது!
வெடிகுண்டு வீச்சு!
ஜெய்ஹிந்த்புரத்தில் தி.மு.க-வினர் பணம் கொடுக்க முயன்றதைத் தடுத்ததால்... தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையே கடும் மோதல். ஆத்திரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக, தி.மு.க. கவுன்சிலர் கண்ணன் உள்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, வைத்தியநாதபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரனைத் தாக்கியதாக தி.மு.க. வட்டச் செயலாளர் சண்முகம் மீது வழக்குப் பதிவானது.
அலங்காநல்லூரில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தபோது, ஒரு குரூப் அவர் வாகனத்தின் மீது கற்களை வீசியது. இதில், போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவி கைது செய்யப்பட்டார்.
ஓட்டுக்கு வெறும் 200-தானா?
'திருமங்கலம் இடைத் தேர்தலின்போது எங்களால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது திருப்தியாகப் பணி செய்கிறோம். டோல் ஃப்ரீ நம்பரில் வரும் அனைத்துப் புகார்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கிறோம். சரியோ, தவறோ எந்தப் புகாரையும் நிராகரிப்பது இல்லை. இடையிடையே கலெக்டரே, டோல் ஃப்ரீ நம்பருக்கு கால் பண்ணி செக் பண்ணுவதால், ஊழியர்கள் உஷாராக இருக்கிறார்கள். மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் ஐந்து டி.வி-க்கள் மூலம் செய்திகள், பிரசாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்கிறோம். மதுரை தி.மு.க. புள்ளி ஒருவரின் லோக்கல் டி.வி-யில், 'சேனல் எம்பளம்’ இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படுவதாகப் புகார் வந்தது. அதையும் பதிவு செய்து இருக்கிறோம். இது வரையில் 280 வழக்குகள் பதிவு செய்து இருக்கிறோம்!'' என்கிறார்கள் தேர்தல் பணியாளர்கள்!
இவர்கள் பெருமைப்பட்டுக்கொண்டாலும்கூட, மதுரையில் பரவலாகப் பணப் பட்டுவாடா நடந்து​கொண்​டேதான் இருக்கிறது. மதுரையில் இது வரை அனைவருக்குமே வெறும் 200 கொடுத்து இருக்கிறார்களாம்.
ஓட்டுக்கு 200 தானா... என்ன கொடுமை சார்?
- கே.கே.மகேஷ், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

(Source from Vikatan Magazine)

No comments:

Post a Comment