Thursday, May 19, 2011

ரஜினி?

ரஜினி?

கிளினிக்கல் ரிப்போர்ட்
'நிலவே முகம் காட்டு... எனைப் பார்த்து...’ என 'எஜமான்’ படத்​தில் சோகம் சொட்டும் ஒரு பாடலை, ரஜினி பாடுவார். இப்​போது அந்தச் சூழ்நிலையில்தான் அவரது அகில உலக ரசிகர்களும் உருகி வழிகிறார்கள். ரஜினி குறித்துப் பரவும் வதந்திகளால், ரசிகர்கள் மனம் உடைந்து​கிடக்கிறார்கள்.
உண்மையில் ரஜினி நிலை என்ன?
''கடந்த 13-ம் தேதி எல்லோரும் தேர்தல் முடிவை டி.வி-யில் ஆவலோடு பார்த்துக்​கொண்டு இருந்தபோது, ரஜினியும் தனது போயஸ் கார்டன் வீட்டில் சக நண்பர்களோடு கமென்ட் அடித்தபடி, தேர்தல் முடிவுகளைப் பார்த்​தார். இரவு 11 மணிக்கு லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சூழலில், மீடியாக்கள் படையெடுப்பு அந்த மருத்துவமனையை நெருக்க... 'ரஜினி வந்தார்... சிகிச்சை செய்தோம். அவர் திரும்பிப் போய்விட்டார். இப்போது இங்கு இல்லவே இல்லை!’ என்று திருப்பி அனுப்பினர். ஆனால்,  ராமச்சந்திராவில் 7-வது தளத்தில்  இருக்கும் டீலக்ஸ் அறையில்தான் இருக்கிறார் ரஜினி.
'ரஜினிக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல், வயிற்றில் கோளாறு’ என்று லதா ரஜினிகாந்த் திரும்பத் திரும்பச் சொன்னாலும்... உண்மை அது அல்ல. ''ரஜினிக்கு முதலில் நுரை​யீரல் தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பிறகு, ராமச்சந்தி​ராவில் ரஜினியின் உடல் முழுவதையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தார்கள். வயிற்று வலியால் அவதிப்பட்ட ரஜினியின் கல்லீரல் சோதிக்கப்பட்டது. ஒருவேளை, இது கொடூரமான வியாதிக்கான அறிகுறி​யாக  இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயாப்ஸி எடுத்து, கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சாம்பிள் அனுப்பி இருக்கிறார்கள். சிறுநீரகத்திலும் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கை, கால்கள் அடிக்கடி வீங்கிக்கொள்கிறது. இதனால்  அவஸ்தையில் தவிக்கிறார்.  நடக்க முடியாமல், வீல் சேர் மூலம்தான் செல்கிறார். இதய நிபுணர் டாக்டர் தணிகாசலம், ராமசாமி உடையார் மகன் வெங்கடாசலம், ரஜினியின் இளமைக் காலத்து நண்பர் ராஜ்பகதூர் ஆகியோர் அருகில் இருந்து கவனித்துக்கொள்கின்றனர்.
ரஜினிக்கு 61 வயது. 'ராணா’ படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என்று மூன்று வேடங்கள். அதற்காக பட பூஜைக்கு முன்பில் இருந்தே, எடையைக் குறைத்தார். அதனால், அடிக்கடி மயக்கம் ஏற்பட்டதாம். ஆனால், அதைக் குடும்ப உறுப்பினர்களிடம்கூட சொல்லாமல் மறைத்தார் ரஜினி. அவருக்கு சர்க்கரை வியாதியும் இருப்பது இப்போது தெரிய வந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துப் போயிருந்​தால், இவ்வளவு தூரம் பிரச்னை ஆகியிருக்காது!'' என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் புலம்புகிறார்கள். 
ரஜினி, தன் அண்ணன் சத்யநாராயண ராவைத் தன் தந்தை ஸ்தானத்தில்வைத்து வணங்குகிறவர். அவராலேயே ரஜினியைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு செய்தி உலவ... பெங்ளூருவில் இருக்கும் சத்யநாராயண ராவிடம் பேசினோம்.
''என் தம்பிக்கு உடம்புல எனர்ஜியே இல்லை. ரொம்ப இளைச்சுப்போயிட்டான். ராமச்சந்திரா ஆஸ்பத்தியில அவனுக்கு ட்ரீட்​மென்ட் எடுக்குற டாக்டருங்க, கொஞ்ச நாள் தங்கிட்டு, அப்புறமாப் போகலாம்னு சொல்லி இருக்காங்க... வேற ஒண்ணும் பெருசா பிரச்னை இல்லை...'' என்றார் உறுதியாக.
அவரிடம், ''நீங்கள் உங்கள் தம்பியைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டோம். ''நான் அவரைப் பார்க்க பெர்மிஷன் இல்​லேன்னு சொல்லிட்டாங்கப்பா...'' என்றார் வருத்த​மாக!
''உப்பு, சர்க்கரையை பிரிக்கும் செயல்​பாடு சரிவர நடைபெறவில்லை என்பதால் உடம்பில் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்கள் விரைவில் அமெரிக்காவில் இருந்து ரஜினிக்காக வர இருக்கிறார்கள்!'' என்கிறார்கள் மருத்துவமனை தரப்பில். எப்போதும் படுத்தே கிடக்கும் ரஜினி, கடந்த 16-ம் தேதி காலையில் மருத்துவ​மனை வளாகத்தில் வாக்கிங் கிளம்பி இருக்கிறார். அப்போது திடீரென்று மயக்கம் வரவே, கீழே விழுந்து விட்டார். உடனடியாக மருத்துவர்கள் பதறிப்போய் ரஜினியை சூழ்ந்துகொண்டு தீவிர சிகிச்சை அளித்தார்கள்.  அந்தக் காட்​சியை ஆஸ்பத்திரியில் பார்த்த ஒருசில ஊழியர்கள், 'ரஜினிக்கு ஆபத்து’ என்று தகவல் அனுப்ப, தமிழகம் முழுவதும் தவ​றான வதந்தி றெக்கைகட்டி பறந்தது.
''நான்கரை ஆண்டுகளுக்கு முன்​னால் ரஜினிக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது சிகரெட் போன்ற வஸ்துகளை தவிர்க்கச் சொன்னார்கள். ஆனால் டென்ஷன் காரணமாக அவரால் தவிர்க்க முடியவில்லை. இதுவே நோய் முற்றியதற்கு முழுக் காரணம். மூச்சுத்​திணறல் அதிகமாக இருப்பதால் வெளி​நாட்டுக்கு அழைத்துச் செல்வதிலும் சிரமம் இருக்கிறது!'' என்று சொல்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.
ஜெய​லலிதா பதவியேற்பு விழாவுக்கு வந்த நரேந்​திரமோடி, சந்திரபாபு நாயுடு இருவரும் அன்று மாலை 4 மணிக்கு, ரஜினியை நேரில் பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்கள். 
எம்.ஜி.ஆர். அமெரிக்கா, புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது தமிழ்​நாட்டில் பதற்றம் கிளம்பியது. அதனைத் தவிர்ப்பதற்காக வீடியோ ஷூட் செய்து, அந்தக் காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பினர். அதுபோலவே, ராமச்​சந்திரா மருத்துவமனையில் ரஜினி ஓய்வு எடுக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து சேனல்களுக்கு கொடுக்க இருக்கிறாராம், லதா ரஜினிகாந்த். 
இதற்கிடையில் 16-ம் தேதி ரஜினியோடு சேர்ந்து மதிய உணவு சாப்​பிட்டார், தனுஷ். இந்த தகவலை, தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்து ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்து இருக்கிறார், தனுஷ்.     
- எம்.குணா
படம்: சு.குமரேசன்

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment