Monday, May 30, 2011

மாண்புமிகு முதல்வருக்கு...- டாக்டர். அனந்த நாகேஸ்வரன்

மாண்புமிகு முதல்வருக்கு...

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
முதலில் உங்களுடைய வெற்றிக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி உங்களது அபார தன்னம்பிக்கையின் அடையாளம். ஐந்து வருடங்களாக உங்கள் தொண்டர்களின் உற்சாகத்தைக் குறையாதபடிக்கு பார்த்துக் கொண்டது உங்கள் நிர்வாகத் திறமையையே எடுத்துக் காட்டுகிறது. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு உங்கள் நிர்வாகத்திறன் படித்தறிய வேண்டிய பாடம்.
நீங்கள் பதவி ஏற்றுக் கொண்ட விழாவிற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அழைத்தீர்கள், மகிழ்ச்சி. பொருளாதார வளர்ச்சி, லஞ்ச ஊழலற்ற, ஆனால் திறமையான நிர்வாகம், விவசாயத் துறையில் வளர்ச்சி, தண்ணீர் மற்றும் மின்சாரத் தேவைகளில் தன்னிறைவு என எல்லாவற்றிலும் குஜராத் மாநிலம் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலம் விவசாயத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆங்கிலப் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதுகின்றன. மழை நீர் சேமிப்பில் நீங்கள் காட்டிய உறுதி இன்று தமிழகத்தில் நீர்மட்டம் உயரக் காரணமாக இருக்கிறது. அதுபோல், விவசாயிகளுக்கு தடையில்லாத தண்ணீரும், மின்சாரமும் வழங்க அம்மாநிலம் மேற்கொண்ட திட்டங்களை நீங்கள் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தரமான, தடையில்லாத  மின்சாரத்திற்கும், தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு விவசாயிகளும் அதையே விரும்புவார்கள்.
குஜராத் மாநிலம் உள்பட எந்த மாநிலமும் செய்யாத ஒரு  முடிவை நீங்கள் எடுத்தால், அது இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக அமையும். தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகத் தேவைகளுக்காக நிலங்களைக் கொள்முதல் செய்வதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் மலிந்து கிடக்கின்றன. எந்த மாநிலமும் இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. இதனால், தொழில் வளர்ச்சி மந்தம் அடைவதோடு, உற்பத்திச் செலவு அதிகமாகிறது.   சென்னையைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசிக்கும் பொருளியல் நிபுணர் அர்விந்த் சுப்ரமணியன் சமீபத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இதுகுறித்து சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை மேலும் விரிவாக்கி அரசாங்க கொள்கையாகக் கடைபிடித்தால், இந்தியாவிற்கு தமிழகம் ஒரு முன்னுதாரணமாக  அமையும்.
எதிர்காலத்தில், இந்தியாவை அதிகமாக பாதிக்கப்போகும் இன்னொரு முக்கியமான பிரச்னை, நகரமயமாக்கல். வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி வசதிகள் இல்லாததால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அதிக மக்கள் குடிபெயர்கிறார்கள். 2040-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 50 சதவிகிதம்பேர் நகரங்களில் வசிப்பார்கள். இதனால், நகராட்சிகளின் பொறுப்பு இன்னும் அதிகமாகும். அதிக நிதி, அனுபவம் வாய்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் இருந்தால் மட்டுமே இப்பிரச்னையை சமாளிக்க முடியும். எனக்குத் தெரிந்த வரையில் எந்த மாநிலமும் இந்த பிரச்னையைத் தீர்க்க முனைப்போ, அவசரமோ காட்டவில்லை. நீங்கள் இந்த பிரச்னையை எடுத்துக் கொண்டு நல்லதொரு தீர்வு கண்டு, அதை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தில், நகர்ப்புறங்களின் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரத் தேவையான அதிகாரங்களை வழங்குவதற்குப் போதிய வழிவகைகள் உள்ளன. நகராட்சிகள் நேரடியாக, தனியார் துறையிலிருந்து திறமை வாய்ந்த, நேர்மையான அனுபவம் மிகுந்த நபர்களை, உரிய பதவியில் அமர்த்துவதற்கு இன்று இருக்கக்கூடிய தடைகளை நீக்கலாம். இதனால் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் அனைத்து நகரங்களும் முன்னேற்றம் காணும்.
கல்வித் துறையிலும் முக்கியமான மாற்றங்களை கொண்டுவர வேண்டும். ஜேம்ஸ் டூலே எழுதிய 'பியூட்டிபுல் ட்ரீ’ எனும் புத்தகத்தில் நம் பண்டைய இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செயல்பட்ட கல்விமுறை பற்றி சிறப்பாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். அந்நிலையை நீங்கள் மீட்டெடுக்க வேண்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை வானொலி மூலமோ அல்லது தொலைகாட்சி மூலமோ அரசாங்கத்தின் செயல்பாடுகளை அல்லது திட்டங்களின் வளர்ச்சியை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம். அமெரிக்காவில் 'டவுன்ஹால்’ கலந்துரையாடல் மிகவும் பிரபலமானது. இதன்மூலம், ஒரு அரசியல்வாதி மக்களின் தொண்டன் என்பதை எளிதில் உணர்த்த முடிகிறது. மேலும், பதவியில் இருப்பவர்கள் மக்களின் நாடியை நேரடியாக கண்டறியவும் முடிகிறது.
மேலும், பேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்ற இணையத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி மக்களுடன் உரையாடுவதன் மூலம் மக்களோடு நேரடியான தொடர்பு வைத்திருப்பதோடு, தமிழ் மொழி வாயிலான இணையத் தொடர்பை தமிழகம் முழுக்க பரப்பவும் உங்களால் உதவமுடியும்.
கடந்த சில ஆண்டுகளில் தென்னகம் நிர்வாகத்திலும், நேர்மையிலும், வளர்ச்சியிலும் மிகவும் பின்தங்கிவிட்டது. இந்நிலை மாற மற்ற மூன்று மாநிலங்களில் சரியான தலைமை இல்லை. ஆனால், தமிழகத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் ஆட்சியில் தென்னகத்தின் மிகச் சிறந்த மாநிலமாக, ஏன் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் பெயரெடுக்கும்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான, திறமையான ஆட்சியை வழங்குவதன்  மூலம் தேசத்தின் தலைமையே உங்கள் கைக்கு வந்து சேர வேண்டும் என்பதே என்னைப் போன்ற லட்சோப லட்சம் தமிழர்களின் எதிர்பார்ப்பு.
 இப்படிக்கு,
அனந்த நாகேஸ்வரன்.

டாக்டர். அனந்த நாகேஸ்வரன் குறித்து நாணயம் விகடன் வாசகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. பொருளாதார நிபுணரான இவர், உலகப் பொருளாதார நிலைமைகள் குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் பல கட்டுரைகளை எழுதியவர். மதுரைக்காரரான இவர், சிங்கப்பூரில் இருக்கும் ஜூலியஸ் பேயர் வங்கியில் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு மனம் திறந்த கடிதமொன்றை இங்கே எழுதியிருக்கிறார்...

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment