Thursday, June 2, 2011

இழி பிறப்பா இந்தியன்..?

இழி பிறப்பா இந்தியன்..?

தொடரும் இன வேற்றுமை வன்முறைகள்!
ந்தியர் என்ற ஒரே காரணத்தால், அமெரிக்காவில் இன்னும் ஓர் அடி விழுந்திருக்கிறது நமக்கு!
கிருத்திகா... 18 வயதுப் பெண். இந்தியத் தூதரக அதிகாரியின் மகள். குயின்ஸ் ஜான் ப்ரவுனி உயர் நிலைப் பள்ளியில் படித்தார். கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று அவருக்கு ஆரம்பித்தது பிரச்னை!
நியூயார்க் நகர அரசாங்கத்தால் திடீரெனக் கைது செய்யப்பட்டார். 'அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆபாசமான மின்னஞ்சல்கள் அனுப்பியதால் கைது!’ என்று காரணம் சொன்னார்கள். தனது தரப்பு வாதங்களை அவர் முன்வைப்பதற்கு முன்பே, அவருக்கு அடுத்தடுத்து நடந்தேறிய கொடுமைகள், அனைத்து இந்தியர்களையும் நிலை குலையவைப்பவை!
பள்ளியில் கிருத்திகா மேல் புகார் வந்ததை அடுத்து, விசாரணைகூட செய்யாமல் அவர் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டி, தீவிரவாதியைப்போல இழுத்துச் சென்று இருக்கிறார்கள். நியூயார்க் நகரக் காவல் நிலையத்தில் 24 மணி நேரம் சிறை வைத்து, எய்ட்ஸ் நோயாளிகளுடனும் பாலியல் தொழிலாளர்களுடனும் அவரைக் கட்டாயமாகத் தங்கச் செய்தனர். வீட்டுக்குத் தொலைபேசியில் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்​பட்டது.
மேலும், அந்தச் சிறையில் ஒரே ஒரு கழிவறை. அதை மற்ற கைதிகள் ஆக்கிரமித்துக்கொள்ள... கிருத்திகாவுக்கு சிறுநீர் கழிக்கக்கூட இடம் இல்லை. தனது நிலையைக் காவலர்களிடம் சொன்னபோதும், அவர்கள் ஏற்றுக்கொள்ள​வில்லை.
இத்தனை சித்ர​வதைகளையும் அனுபவித்த கிருத்திகா, தவறு எதையும் செய்யவில்லை என்பதுதான் அதிர்ச்சி!
ஆபாச மின்னஞ்சல் என்பது, யாரோ ஒரு சீன மாணவன் செய்த தவறு! ''அந்தச் சீன மாணவன் பற்றி பள்ளிக்கும் தெரியும். ஆனால், என்ன காரணத்தாலோ அவனைக் கைது செய்யாமல், எந்த ஒரு ஆதாரமும் இன்றி என்னை ஏன் கைது செய்தார்கள்?'' என்பதுதான் கிருத்திகாவின் வேதனைக் கேள்வி. கிருத்திகா, இதை ஒரு வழக்காகவே தொடர்ந்திருக்கிறார் நியூயார்க் நீதிமன்றத்தில்!
மன்ஹாட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் திபாஷிஷ் பிஸ்வாஸின் மகள்தான் கிருத்திகா. 1961-ல் வியன்னா தூதரக உறவுகள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட சர்வதேசச் சட்ட உடன்படிக்கையின் கீழ், இந்தியத் தூதர் மற்றும் அவர் குடும்பத்தினர் அயல் நாட்டுக் காவலர்களால் சிறைபிடிக்கப்படாமல் இருப்பதற்கான தகுதி உண்டு. அதுபற்றி காவல் துறையினரிடம் கிருத்திகா சொன்னபோது, 'அந்த விதி, தூதரகத்தில் பணியாற்றுபவருக்குத்தானே தவிர, குடும்ப உறுப்பினர்களுக்குப் பொருந்தாது’ என்றனராம்.
மேலும், கிருத்திகா கைது செய்யப்பட்டதை, அவரது தந்தைக்கோ அல்லது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பிரபு தயாளுக்கோகூட தெரிவிக்கவில்லை. 'அயல்நாட்டினர் ஒருவரை 24 மணி நேரம் சிறையில் வைத்திருக்கக் கூடாது’ என்கிற அடிப்படையையும் நியூயார்க் நகர காவலர்கள் மீறி இருக்கிறார்கள். ''குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுடன் இருக்க வேண்டும் என்றும் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள்!'' என்கிறார் கிருத்திகா.
அடுத்த சில நாட்களில் கிருத்திகா, சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்களின் உதவியுடன் தான் குற்றம் அற்றவர் என்று தன் பள்ளிக்கு நிரூபிக்க... பள்ளி மற்றும் மாகாண சிறைப் பதிவேடுகளில் இருந்து அவர் மீதான அவதூறுகள் சட்டப்படி நீக்கப்பட்டன. ஆனாலும் அந்தப் பள்ளி, கிருத்திகாவை ஒரு மாதம் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
''குற்றவாளிகள்தானே சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் என்ன குற்றம் செய்தேன் அங்கு செல்ல?'' என்று கிருத்திகா எழுப்பிய கேள்விக்கும், பள்ளியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ஒரு மாதம் முடிந்த நிலையில், 'தன் மீது களங்கம் ஏற்படுத்தியதற்காக நியூயார்க் அரசு 1.5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கடந்த 25-ம் தேதி புதன்கிழமை அன்று நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் கிருத்திகா.
நடந்த விஷயங்கள் இப்படி இருக்க, ''1963 வியன்னா தூதரக விவகாரங்கள் கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, அமெரிக்க அதிகாரிகள் சொல்வது சரிதான். அமெரிக்காவாக இருந்ததால், ஒரே ஒரு நாளில் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுவே இந்தியச் சிறையில் ஓர் அமெரிக்கப் பெண்ணோ அல்லது ஓர் இந்தியப் பெண்ணோ அகப்பட்டு இருந்தால், அவளின் நிலை என்ன என்று யோசித்துப் பாருங்கள்!'' என்று எல்லாம் இணைய அரட்டைக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன!
அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரியின் மகளுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண பிரஜைக்கு இனி என்னவெல்லாம் நடக்குமோ. இந்த விவகாரத்தில் இன்னும் வாய் திறக்காத இந்திய அரசைப்பற்றி என்ன சொல்வது?!
- ந.வினோத்குமார்

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment